கூசிப் போய்த் தலை தாழ்த்தி உட்கார்ந்திருந்த தம் மகனைப் பார்க்கப் பார்க்க, சோமசேகரனுக்கு மனத்தை என்னவோ செய்தது. அவர் சற்றே மவுனமாக இருந்த பின் தொடர்ந்தார்: ‘ஆனா லூசியையும் அவனையும் நான் பார்த்ததை லூசி கவனிக்கல்லே.’
‘அப்பா! குறுக்கே பேசுறதுக்கு மன்னிச்சுக்குங்க.. நம்ம சொத்து-பத்து பத்தி விசாரிக்கிறது சகஜந்தான்னாலும், லூசி கிட்ட எதுக்கு – அவ எதுவும் கேக்காதப்பவே – அதைப் பத்தின தகவலை யெல்லாம் சொன்னீங்க? தெரிஞ்சுக்கலாமா?’
‘ஏன்னா, அவ கண்ணுல தெரிஞ்ச ஒண்ணு எனக்குப் பிடிக்கல்லே. இளவட்டங்கள் கண்களோட கவர்ச்சியைப் பாக்கறாங்களே ஒழிய, அதில தெரியற வேற விஷயங்களைக் கவனிக்க முயற்சி கூடப் பண்ணுறதில்லே. நான் உன்னைக் குத்தம் சொல்லல்லே, ரமேஷ். நானும் ஒரு காலத்து இளைஞன்தான். என்னையும் சேர்த்துத்தான் சொல்லிக்கிறேன். கண்கள் அகலமாவும் அழகாவும் இருக்கிறது வேற, அன்பாவும் நேர்மையாவும் இருக்கிறது வேறப்பா. சுழண்டுக்கிட்டே இருந்த அவ கண்கள்லே என்னால ஒரு பொல்லாத்தனத்தையும் நன்றிகெட்ட தனத்தையும்தாம்ப்பா, ரமேஷ், பார்க்க முடிஞ்சிச்சு. அதுக்குக் காரணம் என்னோட வயசா யிருக்கலாம். அனுபவமா யிருக்கலாம். ரமேஷ்! ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கப்பா. ஆணோ, பெண்ணோ, யாரா யிருந்தாலும், முதல்ல அவங்க கண்களைக் கவனி. ஜன்னல் வழியா ஒரு வீட்டுக்குள்ள பார்க்க முடியற மாதிரி, கண்கள் வழியா ஒருத்தரோட மனசுக்குள்ளே நம்மால பார்க்க முடியும். இனிமேலாவது இந்த உத்தியைப் பயன்படுத்தப் பாரு.. .. சரி, விடு. அவ உன்னோட பணங்காசு, சொத்துகள் பத்தித் தெரிஞ்சுக்கிட்டுத்தான் உன் மேல பிரியம் வெச்சிருக்காங்கிறது எடுத்த எடுப்பிலேயே என்னோட கணிப்பா யிருந்திச்சு. அதனாலதான் நம்ம சொத்து சுகங்கள் பத்தி அவ கிட்ட சொன்னேன். சொல்லிட்டு அவ முகத்தைக் கவனிச்சேன். முகத்துல எந்த மாறுதலையும் அவ காட்டிக்காம இருந்தாலும், அவ கண்ணுல ஒரு அவமானமும், ‘இந்த மனுஷனுக்கு ஏதோ புரிஞ்சுடிச்சு போல இருக்கே’ன்ற லேசான அதிர்ச்சியும் துல்லியமாத் தெரிஞ்சிச்சு.’
‘அப்பா! நான் உங்களை ஒண்ணு கேக்கலாமாப்பா? ‘நானே கேட்டேனில்லே, ‘லூசியை உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு? ‘உனக்குப் பிடிச்சிருக்கணும்கிறதுதான் முக்கியம்’னு சொல்லிட்டு பட்டுக்காம நழுவிட்டீங்களேப்பா! உங்க உண்மையான அபிப்பிராயத்தை வெளிப்படையாச் சொல்லி என்னைத் தடுத்திருக்கலாமில்லே?’
அந்த இறுக்கமான நேரத்திலும் சோமசேகரன் சிரித்தார்: ‘ரமேஷ்! இப்ப இப்படிப் பேசறே. ஆனா, அப்ப நான் அப்படிச் சொல்லி யிருந்தா, என் பேச்சு எடுபட்டிருக்காதுப்பா. காதல்னாலே கட்டையைக் கையில எடுத்துக்கிற கும்பல்லதான் நானும் இருக்கேன்கிறதா நினைச்சு என்னை நீ வெறுத்திருப்பேப்பா! உண்டா, இல்லியா?’
அவர் கூறிய உண்மை கூரிய முள்ளாய்க் குத்த, அவனுக்கு நெஞ்சு வலித்தது.
‘தங்களோட காதல் வேகத்துக்கு அணை கட்டுற எந்த அப்பா அம்மாவையும் பிள்ளைகளுக்குப் பிடிக்காதுப்பா!’
இந்த அவரது கூற்றையும் ஒப்புக்கொள்ளுவது தவிர வேறு வழியற்ற நிலையில் அவன் இப்போதும் மவுனமாக இருந்தான்.
‘அவளோட லெட்டர்ஸை யெல்லாம் பத்திரமா வெச்சிரு.’
‘எதுக்குப்பா? கிழிச்சுப் போட்டுடலாம்னு தோணுது.’
‘அப்படி ஏதும் பண்ணிடாதே, ரமேஷ். ஒரு பையிலே போட்டு கோத்ரெஜ் அலமாரி லாக்கர்ல வெச்சுப் பூட்டிடு. அதையெல்லாம் கிழிக்கிறதா வெச்சிருக்கிறதான்றதை யெல்லாம் பத்தி அப்புறமாப் பேசித் தீர்மானிக்கலாம். அப்புறம், முக்கியமான இன்னொண்ணு. காலம்கிறது எப்பேர்ப்பட்ட மனப் புண்ணையும் ஆத்திடக் கூடிய டாக்டர். நான் சொன்னபடி தியானம் பண்ணு. உன்னோட துன்பமெல்லாம் தூள் தூளாயிடும். லூசிகிட்டேருந்து தப்பிக்க முடிஞ்சதுக்கு நீ சந்தோஷந்தான் படணும், ரமேஷ்!.. .. கொஞ்ச நாள் கழிச்சு ஒரு நல்ல பொண்ணாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்க. நீயே தேடிக்கிட்டாலும் சரிதான். ஆனா அவ கிட்ட உன்னோட பழைய கதையை யெல்லாம் உளறாதே. என்ன? ஆல் த பெஸ்ட்!’
‘அப்பாவின் காதல் கதை பத்தி அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்குமா?’ என்று அவன் யோசித்தான்.
‘என்ன, ரமேஷ், யோசிக்கிறே? உங்க அம்மாவுக்கு என்னோட பழைய கதை தெரியுமான்னுதானே? அதை ஏன் கேக்கறே? அந்தப் பைத்தியக்காரத்தனத்தையும் பண்ணித் தொலைச்சேன். எங்களோட •பர்ஸ்ட் நைட்லேயே! உங்கம்மா ஆவேசமா, என்னோட சுண்டு விரல் கூடத் தன் மேல படக்கூடாதுன்னுட்டா. ஏழு வருஷம் போல என்னைத் தள்ளி வெச்சுட்டாப்பா. அப்புறம் அவளுக்கே குழந்தை ஆசை வந்திருக்கணும். என்னோட பொறுமையும் அவளை நான் பலாத்காரம் பண்ணாததும் அவ என்னை மன்னிச்சுட்டு ஏத்துக்கிட்டதுக்குக் காரணம்’
‘ஏழு வருஷமா!’
‘ஆமா. ஆனா, அதுக்கு அப்புறம் நாங்க நடத்தின – இன்னும் நடத்திக்கிட்டு இருக்கிற – சந்தோஷமான வாழ்க்கை லட்சத்துல ஒரு தம்பதிக்குத்தாம்ப்பா வாய்க்கும்!’ – அவர் மறுபடியும் சிரித்தார். மனச்சுமை கணிசமான அளவு குறைந்துவிட்ட உணர்வுடன் ரமேஷ் எழுந்துகொண்டான்.
.. .. மேலும் ஒரு மாதம் கழித்து ராஜரத்தினம் லூசியைப் பற்றிய இன்னும் சில விவரங்களைத் தெரிவித்து மும்பையிலிருந்து கடிதம் எழுதினார். லூசிக்கும் அந்தப் பணக்காரத் தொழிலதிபருக்குமிடையே இருந்த உறவு முறிந்துவிட்டதாய் அந்தக் கடிதம் தெரிவித்தது. லூசியின் நிழலான நடவடிக்கைகள் அந்த மனிதருக்குத் தெரியவந்ததுதான் அதற்குக் காரணம் என்றும் அதில் கண்டிருந்தது. அதற்குப் பிறகு லூசியைப் பற்றிய எந்தத் தகவலும் கொஞ்ச நாள்கள் வரையில் வரவில்லை. ரமேஷ் இதற்கிடையே பெருமளவுக்கு மனம் தேறி யிருந்தான். இதற்குள் ரமேஷ் மனுச்செய்திருந்த வேறொரு கம்பெனியில் அவனுக்குப் பெரிய வேலை கிடைத்தது. அந்தப் பணியில் சேர்ந்த பிறகுதான் தனது அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக இருந்த நிர்மலாவின் அறிமுகமும் பழக்கமும் அவனுக்கு ஏற்பட்டன. நிர்மலாவின அழகைவிடவும், அவன் கவனிக்க நேர்ந்த அவளுடைய நற்பண்புகள் அவனை அதிகமாய்க் கவர்ந்தன. வேலையில் அவள் காட்டிய நேர்மை, விரைவு, நேர்ந்தவறாமை, எத்தனை வேலைகள் கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் அவள் அவற்றைச் செய்தது போன்ற தன்மைகள் ஒரு நல்ல பெண்ணிடம்தான் இருக்க முடியும் என்பதால், அவளை மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. லூசியின் மீது தான் கொண்ட உணர்ச்சிகளுக்கும் நிர்மலாவின் மீது கொண்டவற்றுக்குமிடையே அவன் ஒரு வேறுபாட்டையும் உணர்ந்தான். லூசியின் மேல் தனக்கு ஏற்பட்டது வெறும் கவர்ச்சி என்பது இப்போதுதான் அவனுக்குத் தெளிவாயிற்று. அவள் தானே முயன்று அவன் மீது தன்னைச் சாமர்த்தியமாய்த் திணித்தவள். அழகும் கவர்ச்சியும் சாகசமும் நிறைந்த அவளை இளைஞனான தன்னால் தவிர்க்க முடியாது போனதுடன் தான் அவளிடம் மயங்கிவிட்டதும் இப்போது அவனுக்குப் புரிந்தன. தனது அறிவுக்கு எந்த வேலையும் கொடுக்காமல், வெள்ளம் தடையின்றிப் பள்ளத்திலே சென்று வீழ்வதற்கு ஒப்பாகத் தான் நடந்துகொண்டுவிட்டதும் இப்போதுதான் அவனுக்கு விளங்கிற்று. வெறும் மோகத்தின் வேகத்துக்கும், காதலின் ஆழத்துக்குமிடையே இருக்கக்கூடிய வேறுபாட்டைக் கண்டுகொள்ளும் பக்குவமும் அப்போது அவனிடம் இல்லை. இப்போது அவ்வாறு இல்லை யாதலால், தனக்கு நிர்மலாவின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டில் ஓர் அமைதியும், ஒரு தூய்மையும் இருந்ததை அவனால் உணர முடிந்தது.
வாய்ப்பான ஒரு கணத்தில் அவன் தனது காதலை அவளுக்குச் சொன்னபோது, வெட்கத்துடன் சிரித்து அவள் அதை ஏற்றுக்கொண்டாள். தனக்கு அம்மா-அப்பா இல்லை என்றும் தற்போது பெண்கள் விடுதி ஒன்றில் தான் இருப்பதாகவும் அவள் அவனிடம் எடுத்த எடுப்பில் தெரிவித்தாள். நிர்மலாவைச் சோமசேகரனுக்கும் சாரதாவுக்கும் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அப்பா-அம்மா இல்லாத பெண்ணானதால் தங்கள் செலவிலேயே திருமணத்தை நடத்திவிட இருவரும் முடிவு செய்தபோது ரமேஷ் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே போனான்.
வர இருந்த தை மாதம் திருமணத்தை நடத்திவிட முடிவு செய்தார்கள். திருமணத்துக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருந்த சமயத்தில்தான் அவன் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திராத அந்த அதிர்ச்சி அவனது மனம்கொள்ளா மகிழ்ச்சியில் குறுக்கிட்டது.
.. .. .. என்ன திடீர்ச் சாகசம் செய்து அவளைத் தாக்கிக் கைத்துப்பாக்கியை அவளிடமிருந்து பறிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த அர்ஜுனைப் பார்த்துச் சகுந்தலா சிரித்தாள்: ‘மறுபடியும் சொல்றேன். உன் ஷர்ட் ஸ்லீவ் காத்துல அசைஞ்சாக்கூட நான் துப்பாக்கி விசையை அழுத்திடுவேன். நெனப்பு வச்சுக்க. எனக்கோ என் மகள் ஷைலஜாவுக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டா அது உன்னோட வேலையாத்தான் இருக்கும்னு போலீஸ் கமிஷனருக்கு எழுதிட்டேன். அவர் கிட்ட என்னோட சீல்ட் கவர் இருக்கு. ஷைலஜாவுடைய புருஷனுக்கும் சொல்லி வெச்சுட்டேன். அதனால ஏதாச்சும் தில்லுமுல்லு பண்ணி என்னை ஏமாத்திடலாம்னு கனவு கூடக் காணாதே. உயிர் பெரிசுன்னா, இங்கேருந்து உடனே ஓடு!’
சகுந்தலாவின் அழுத்தந்திருத்தாமான பேச்சு அளித்த அதிர்ச்சியிலும் அச்சத்திலும் அர்ஜுன் அவள் சொன்னபடியே செய்தான். அவள் அவனுக்குப் பின்னாலேயே நிறைய இடைவெளி விட்டு நடந்து – திரைபடங்களில் வருவது போல் ஒட்டி உரசினாற்போல் பின்பற்றிக் காலால் உதைபட்டு எகிறி விழும் அபாயம் தவிர்த்து – அவன் வெளியேறியதும் கதவைச் சாத்தித் தாழிட்டுக்கொண்டு உள்ளே வந்தாள். துப்பாக்கியைப் பத்திரப்படுத்திவிட்டுக் கூடத்துக்கு வந்து கருணாகரனின் படத்துக்கு முன்னால் வந்து நின்றாள். ‘சபாஷ், சகுந்தலா!’ என்று பாராட்டுவது போல் அந்த முகத்தில் ஒரு புன்னகை தெரிந்ததாய் அவளுக்குத் தோன்றியது. விநாயக்ராமிடம் தான் வெற்றுத் தாளில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்ததால் ஏற்பட்ட அவமானங்களை அவன் உயிரோடு இருந்திருப்பின் தெரிந்து கொண் டிருந்திருப்பான். அவனது வீட்டில் தனக்கு நேர்ந்த கற்பின் இழப்பை வேண்டுமானால் அவனது நிம்மதி கருதி அவன் மறைத்திருந்திருக்கக் கூடும். ஆனால், அந்த வெற்றுத்தாள் ஒப்பந்த வாசகத்தின் விளைவுகளை அவளால் மறைத்த்¢ருக்க முடியாது.
கருணாகரனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின், நீலகண்டன் அவள் வீட்டுக்கு வந்தார்: ‘சகுந்தலா! உன்னை வேற இடத்துக்கு மாத்தியாச்சு. உனக்கு இனிமே அங்கே தான் வேலை,’ என்றார்.
‘ஏன், சர்? நான் பழைய இடத்துலேயே இருந்துட்டுப் போறேனே? என் வீட்டுக்குப் பக்கம்.’
‘அதுவும் வீட்டுக்குப் பக்கத்துலதாம்மா. அதே ஓட்டல்தான். ஆனா, ட்யூட்டிதான் வேற!’ என்று அவர் சொன்னதில் விஷமம் வழிந்தது. அவளுக்கு உள்ளுக்குள் திடுக்கீடாக இருந்தது.
‘என்ன சொல்றீங்க?’
‘சொல்றேன். நீ ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு வந்து கொஞ்ச நாள்தானே ஆறது? அதனால உனக்கு இன்னும் விஷயம் தெரியல்லே. புதுசா வேலைக்கு வர்றவங்களுக்கு உடனே தெரியும்படியா அது நடக்கிறதும் இல்லே.’
‘என்ன சொல்றீங்க?’
‘சொல்றேன். நீ ஓட்டல்ல ரிசப்ஷனிஸ்ட் வேலையில சேர்ந்ததுலேருந்து மாடிப்பக்கம் போகவே இல்லேல்ல?’
‘இல்லே!’
‘நம்ம ஓட்டல் ரெண்டு பகுதியாப் பிரிஞ்சிருக்கு. மாடிப் பகுதியில ஒரு தடுப்பு இருக்கு. அதைத் தாண்டி ரெண்டாவது பகுதிக்குப் போக ஓட்டல்ல மெம்பர்ஸாச் சேர்றவங்களுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு.’
‘.. .. ..?’
‘என்ன, அப்படிப் பேயடிச்ச மாதிரி முழிக்கிறே? அந்த மறைப்பில காபரே டான்ஸ், மஸாஜிங் இதெல்லாம் உண்டு. விருப்பப்பட்டவங்க (கண் சிமிட்டி) ‘மத்ததுகளுக்கும்’ உடன்படலாம். ஒண்ணும் அடிபிடி கட்டாயம் இல்லே!’
‘எனக்கு இந்த ரிசப்ஷனிஸ்ட் வேலையே போதும், சர்!’
நீலகண்டன் தம் வெற்றிலைக்காவிப் பற்கள் தெரியச் சிரித்தார். மனிதக் குரங்கின் இளிப்பை ஞாபகப் படுத்தினார். காதுவரை ஓடிய அந்த இளிப்பின் அசிங்கம் இன்றளவும் சகுந்தலாவுக்கு ஞாபகம் இருந்தது. அந்த இளிப்பின் உட்பொருள் அவளுக்குப் புரிந்துவிட்டது. அப்படி ஒரு சகதியில் வீழ்வதை விட, உயிரை மாய்த்துக்கொண்டு விடுவதே மேல் என்கிற ரோசம் வந்தாலும், ஷைலஜா அதற்குத் தடையாக இருந்தாள்!
‘அதெப்படிம்மா? காண்ட்ராக்ட்ல கையெழுத்துப் போட்டிருக்கியே?’
‘வெத்துத் தாள்லேன்னா, சர், கையெழுத்து வாங்கிக்கிட்டீங்க?’
‘நீ கோர்ட்டுக்கே போனாலும் இந்த வாதமெல்லாம் எடுபடாதும்மா. தவிர நீ ஒண்ணும் படிக்காத பட்டிக்காடு இல்லியே? உன்னை ஏமாத்திக் கையெழுத்து வாங்கினாங்கன்னெல்லாம் சொல்ல முடியாது. இன்னைக்கு ஓட்டலுக்கு வா. வந்து, உனக்குத் தேவைன்னா, காண்ட்ராக்டோட ஜெராக்ஸ் காப்பி ஒண்ணு வாங்கி வச்சுக்கோ. அப்புறம் உன்னிஷ்டம். நீ அதை வாங்கிக்கிறியோ, இல்லியோ, விநாயக்ராமுக்கு அதைப்பத்தி அநாவசியம்!’
‘காண்ட்ராக்ட்ல என்ன சர் எழுதிக்கிட்டீங்க?’
‘அப்படிக் கேளு. ‘மூணு மாசத்துக்குள்ளே காபரே டான்ஸ் கத்துண்டு ஓட்டல்லே ஆட்றதுக்கு நீ தாயார்’னு ஒத்துண்டதா அதிலே இருக்கு. ஏற்கெனவே சொன்னபடி, பதினஞ்சு வருஷ காண்ட்ராக்ட்.. உனக்கு டான்ஸ் கத்துக் குடுக்க ஓட்டலே ஏற்பாடு பண்ணும்.’
சகுந்தலாவின் விழிகள் நிறைந்து போயின: ‘இது நியாயமா, சர்? ‘நம்ம மகளுக்கு நாளைக்கு இப்படி ஒரு கதி வந்துட்டா?’ன்னு நினைச்சே பாக்க மாட்டீங்களா, சர்?’
நீலகண்டன் மறுபடியும் சிரித்தார்: ‘ எனக்குக் கொழந்தையே பொறக்காதுன்னுட்டார்மா, டாக்டர்! அதனால அப்படியெல்லாம் நினைச்சுப் பாக்க வேண்டிய அவசியமே இல்லேம்மா எனக்கு.’
‘மனச்சாட்சி கூடவா இல்லே?’
‘மனச்சாட்சி, மண்ணாங்கட்டின்னெல்லாம் பேத்திண்டு கிடந்தா வாழ முடியாதும்மா.’
‘அப்படியாவது வாழ்ந்தாகணுமா, சர்?’
நீலகண்டன் இரைச்சலாய்ச் சிரித்தார்: ‘இப்ப உன்னையே எடுத்துக்கோ. உன்னையும் நான் அப்படி ஒரு கேள்வியைக் கேக்கலாமோல்லியோ? நீ கூட அப்படி ஒரு முடிவைப் பண்ணிட்டு கண்ணியமாச் சாகலாமே? ஆனா, சாக மாட்டியே! சாக முடியாதே! ஏன்னா, கைக்குழந்தை இருக்கு! இல்லியா?’
சகுந்தலாவுக்கு வாய் அடைத்துப் போயிற்று.
‘என்னது! பேச்சு மூச்சைக் காணோம்? கொழந்தைக்காக வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் உனக்கு இருக்கிற மாதிரி ஓரொருத்தருக்கு ஓரொரு மாதிரியான நிர்ப்பந்தம்! எது ஒசத்தியான நிர்ப்பந்தம், எது தாழ்த்தியான நிர்ப்பந்தம்னு யாரு சொல்றது? இதுக்கெல்லாம் அளவுகோல் இருக்கா என்ன?’
‘சரி. ஆனா, இதுக்கெல்லாம் அளவுகோல் இருக்கோ இல்லையோ, எது சரி, எது தப்புங்கிறதுக்கு எந்தக் காலத்துக்கும், எந்த நிலைமைக்கும் பொருந்தக் கூடிய நியாயங்கள் இருக்கே? ஆனா, அதை யெல்லாம் பத்தின உறுத்தலே இல்லாம, பணமும் பொண்ணுமே குறின்னு அலையற உங்களை மாதிரி ஆபாச மிருகங்களுக்கு அதெல்லாம் எங்கே புரியப் போகுது?’
‘வார்த்தையை அளந்து பேசு. ஆயிரக் கணக்கில கடன் வாங்கி யிருக்கே. ஞாபகம் இருக்கட்டும். நீ இப்ப பேசினதை யெல்லாம் நான் விநாயக்ராம் கிட்ட சொல்லப் போறதில்லே. நீ அவரோட அட்ஜஸ்ட் பண்ணிண்டா இந்த முழுத் தொகையையுமே போனாப் போறதுன்னு விட்டுடுவார். தாராள மனசு அவருக்கு. என்ன! நீயும் கொஞ்சம் தாராளமா நடந்துக்கணும். எத்தனையோ தர்ம காரியங்களுக்கெல்லாம் ஆயிரக் கணக்கில அள்ளி விட்ற மனுஷன் அவர்.’
‘திரை மறைவில பண்ற அதர்மங்களால வர்ற பாவங்களை இது மாதிரி தர்மம் பண்ணிக் கழிக்க முடியாது! கடவுளோட கணக்கே வேற. பாவத்துக்குக் கட்டாயம் தண்டனை கிடைச்சே தீரும். பாவக் கணக்கு வேற, புண்ணியக் கணக்கு வேற!’
‘நிறுத்து உன் வேதாந்த உபன்னியாசத்தை! விநாயக்ராம் கிட்ட இப்படி யெல்லாம் வேதாந்தம் பேசினா, நடக்கிறதே வேறயா இருக்கும். அப்புறம், இல்லாத பொல்லாத கொடுமை யெல்லாம் உனக்கு நடக்கும். உன்னோட நன்மைக்காகத்தான் சொல்றேன். புத்திசாலியா நடந்துக்கோ. அப்ப நான் வறேன். நாளைக்கே வந்து சேரு. என்ன?’
‘இவன் ஒரு கூலிக்காரன். இவனை நொந்து என்ன பயன்?’ என்று அவள் உணர்ந்தாள்: ‘சர்! ஒரு நிமிஷம். காபரே டான்ஸ்னா¡, அ..அ..அதை எப்படி இந்த ஓட்டல்ல பண்ணுவாங்க?’
‘அதாம்மா. முதல்ல முழு உடையிலே மேடையிலே வந்து நின்னுண்டு ஆடணும். ஆடிண்டே ஒவ்வொரு துணியா உருவிப் போடணும்.’
‘அய்யோ! ந்யூடா நிக்க வேண்டி வருமா?’ – நீலனண்டன் சிரித்தார்.
-தொடரும்
- மருத்துவக் கட்டுரை கருப்பைக் கழுத்து புற்றுநோய் ( CERVICAL CANCER )
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-19 ஸ்ரீ கிருஷ்ண தூது-இறுதிப் பகுதி.
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 59 ஆதாமின் பிள்ளைகள் – 3
- ”ஆனைச்சாத்தன்”
- கட்டுரை வழங்க. கால நீட்டிப்பு – “துறைதோறும் கம்பன்’ சர்வதேசக் கருத்தரங்கம்
- நீங்காத நினைவுகள் – 31
- வளரும் அறிவியல் – மின் இதழ்
- ஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்
- ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4
- தினம் என் பயணங்கள் – 2
- திண்ணையின் இலக்கியத் தடம்- 19
- சூரியனைச் சுற்றிவரும் குள்ளக் கோள் செரிஸில் [Ceres] நீர் இருப்பது கண்டுபிடிப்பு
- மருமகளின் மர்மம் – 13
- புகழ் பெற்ற ஏழைகள் – 44
- நரிக்குறவர்களின் நாட்டுப்புறப்பாடல்கள்
- ஸ்ரீதரன் கதைகள்
- தாயகம் கடந்த தமிழ்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 17