டாக்டர் ஜி. ஜான்சன்
வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், நடக்கும் நிகழ்வுகளையும், எப்போதுமே நல்ல அனுபவமாகவே பார்ப்பவன் நான்.
அவற்றை அவ்வப்போது நாட்குறிப்பில் பதிவு செய்துவந்தேன். இந்தப் பழக்கத்தை பதிநான்கு வயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். நான் முழுக்க முழுக்க ஆங்கிலப் பள்ளியில் பயின்றவன். தமிழை நான் விரும்பி தமிழ் வகுப்பிலும் நூலகத்திலும் கற்றுக்கொண்டேன்.
அப்போது உயர்நிலைப் பள்ளி மாணவன். டாக்டர் மு. வ. வின் அல்லி நாவலில் அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பற்றி கூறியுள்ளார். நாம் முகத்தை அழகு பார்க்க கண்ணாடி உதவுவதுபோல் அகத்தை அழகு பார்க்க நாட்குறிப்பு உதவும் என்று அப்போது படித்தத்தின் விளைவே அந்த பழக்கத்தைக் கைக்கொண்டேன். அப்போது இளமைப் பருவம். அப்பாவுக்கு மட்டுமே தெரியாமல் அவற்றை ஒளித்து வைக்க நேரிட்டது. அதுபோல் இப்போதும் ஒளித்து வைத்து பெரும் இக்கட்டில் மாட்டிக்கொண்டதால் இப்போதெல்லாம் அவ்வளவு விரிவாக எழுதுவது இல்லை.
என் இள வயது நிகழ்வுகளை நான் இப்போது திரும்பிப் பார்க்க என்னுடைய ஐம்பது வருட பழமை கொண்ட அந்த நாட்குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.
அவற்றைக் கோர்வையாக சுவைபட வாசகர்களுக்குத் தருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
” தென்றலைத் தீண்டிய தில்லை! தீயைத் தாண்டியுள்ளேன்! ”
என்ற கலைஞரின் பராசக்தி வசனம்போல் என்னுடைய இளமைப் பருவத்தில் நான் அடைந்த அனுபவங்கள் அனைத்துமே சோக வரலாறுதான்! அவற்றை இன்றும் பெரும் பொக்கிஷமாகவே கருதுகிறேன்.
. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
1. மீண்டும் சந்திப்போம்
” ஏர் இந்தியா போயிங் விமானம் மெட்ராஸ் புறப்பட தயாராக உள்ளது. பயணிகள் குடிநுழைவு, சுங்கப் பரிசோதனை முடித்துக்கொண்டு பிரயாணத்துக்கு தயாராகும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ”
அது 1964 ஆம் வருடத்தின் இறுதி. அன்றைய சிங்கப்பூரின் பாயலேபார் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலில்தான் அவ்வாறு ஒலிபெருக்கி ஒலித்தது.
எங்கள் வட்டாரத்திலேயே நான்தான் முதல் விமானப் பயணம் மேற்கொள்ளப்போகிறேன். அப்போதெல்லாம் விமானத்தில் பயணம் செய்வதை யாரும் எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள்.
நாங்கள் வாழ்ந்த பகுதியில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பெரும்பாலோர் நகர சபையில் துப்புரவு செய்யும் கூலித் தொழிலாளர்கள்/
வீதிகள் கூட்டுதல், சாக்கடைகள் சுத்தம் செய்தல், கழிவறைகளைக் கழுவுதல், சாலைகளில் தார் போடுதல் போன்ற சாதாரண வேலைகளில்தான் பலர் இருந்தனர்.
ஆங்கிலேயர்களின் காலனித்துவக் காலத்தில் ஹென்டர்சன் மலையில் அடியிலிருந்து உச்சிவரை வீடுகளை வரிசை வரிசையாகக் கட்டித் தந்திருந்தனர். ஒரு வரிசையில் பத்து குடும்பங்கள் இருந்தன. ஒரு அறை கொண்ட வீடுகள்தான். பொதுவான சமையல் அறை ஒரு கோடியில் அமைந்திருக்கும். பொதுவான கழிவறையும் குளியல் அறையும் தனியாக கொஞ்சம் தள்ளி அமைந்திருக்கும்.
குடியிருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழ் நாட்டிலிருந்து தனியாக வந்தவர்கள். அவர்களின் மனைவி பிள்ளைகள், பெற்றோர் எல்லாம் தமிழ் நாட்டில்தான்.
இங்கே தற்காலிகமாகத் தங்கி சிக்கனமாக வாழ்ந்து ஊருக்கு பணம் அனுப்புவதிலேயே கண்ணுங்கருத்துமாய் இருந்தனர்.
ஒரு சிலரே இங்கே முதல் திருமணமோ அல்லது மறுமணமோ செய்துகொண்டனர். வெகு சிலரே ஊரிலிருந்து மனைவியை வரவழைத்துக் கொண்டனர்.
நான் விமானப் பயணம் மேற்கொள்வதால் என்னைப் பெரிய பணக்காரன் என்று எண்ணிவிட வேண்டாம். அப்போது எனக்கு வயது பதினேழுதான்!
நான் அந்த வட்டாரத்து தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்தவன். நல்ல மாணவன் சிங்கப்பூரிலேயே சிறந்த பள்ளியான ராபிள்ஸ் உயநிலைப்பள்ளி மாணவன். ஓட்டப் பந்தயங்களில் சிறந்து விளங்கியவன். ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் தமிழ் மீது தணியாத ஆர்வம் கொண்டவன். தேசிய நூலகத்தில் தமிழ் நாவல்கள் இரவல் வாங்கி தமிழ் அறிவை சொந்தமாக வளர்த்துக்கொண்டவன். சிங்கப்பூர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளம் வயது உறுப்பினன். சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தமிழ் உட்பட அனைத்து பாடங்களிலும் சிறப்புடன் தேர்ச்சியுற்றவன். அந்த இளம் வயதிலேயே தமிழ் முரசு, தமிழ் நேசன் ஞாயிறு மலர்களில் கதைகள் கட்டுரைகள் எழுதும் இளம் எழுத்தாளன். தமிழர் திருநாளில் நாடகம் எழுதி கதாநாயகனாகவும் நடித்தவன்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட என்னை அப்பகுதி மக்கள் ” வாத்தியார் மகன் ” என்றே அழைத்தனர்.
என் தந்தை தமிழ் ஆசிரியர். பகுத்தறிவு சிந்தை மிக்க சில சமூகத் தலைவர்களின் முயற்சியால் நன்கொடைகள் மூலமாக உருவாக்கப்பட்டது பாரதிதாசன் தமிழ்ப்பள்ளி. மரப்பலகைகளாலும் அத்தாப்புக் கூரையாலும் கட்டப்பட்ட பள்ளி அது.
நகரசபைத் தொழிலாளர்கள் நிறைந்திருந்த அங்கே தமிழ்ப் பள்ளி ஆசிரியரின் மகன் என்ற சிறப்பு எனக்கு தரப்பட்டது.
மாணவர்களில் சிறந்த எடுத்துக்காட்டாகவே நான் விளங்கினேன். அலேக்சாண்டிரா எஸ்ட்டேட் ஆங்கில துவக்கப் பள்ளியில் தொடர்ந்து ஆறாம் வகுப்பு வரையில் நானே முதல் மாணவனாகத் திகழ்ந்தேன். பள்ளிப் பருவத்திலேயே திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு சிந்தை மிக்க நூல்கள் நிறைய படித்தேன். அந்த வயதிலேயே சிறந்த இலட்சியம் கொண்டவனாகச் செயல்பட்டேன். அதற்குக் காரணம் நான் போற்றிய தலைவர் அறிஞர் அண்ணா!
விமானம் ஏறும் நேரம் நெருங்கிவிட்டது. என் மனத்திலோ பெரும் பூகம்பம்! அப்போது நான் ‘ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ‘ பத்திரிகையில் மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்தேன். பாராளுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். சிங்கப்பூர் தொலைக்காட்சியிலும் என்னைத் தேர்வுக்கு வரச் சொல்லி இருந்தனர்.
இந்த வாய்ப்புகள் அனைத்தையும் தூக்கி எறியச் செய்துவிட்டு என்னைத் தமிழகம் அனுப்புகிறார் என் தந்தை! அவர் என்னை நாடு கடத்துகிறார் என்றே சொல்லவேண்டும்!
கப்பலில் என்னை அனுப்பினால் நான் கிள்ளான் துறைமுகத்திலோ பினாங்கிலோ இறங்கி ஓடி விடுவேனாம். அதனால் கப்பல் பிரயாணத்திற்கு எடுத்த பிரயாணச் சீட்டை கடைசி நேரத்த்தில் மாற்றி என்னை ” ஏர் இந்தியா ” விமானத்தில் அனுப்புகிறார் அப்பா.
நான் ஊரிலிருந்து வந்து சரியாகப் பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஒரு முறை கூட திரும்பவில்லை. அங்கு சிதம்பரத்தில் என் தாத்தா, பாட்டி, அம்மா, இரு தங்கைகள் உள்ளனர். என் ஒரே அண்ணன் சென்னையில் கல்லூரியில் பயில்கின்றார். அண்ணி திருச்சியில் ஆசிரியை. இவர்களயெல்லாம் போய்ப் பார்க்க வேண்டுமாம். இல்லையேல் அவர்களை மறந்து போவேனாம்.
அதோடு நான் ஒரு டாக்டர் ஆக வேண்டும் என்பது அவருடைய இலட்சியமாம்! அதற்கு அங்குதான் செல்லவேண்டுமாம்!
நான் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் நன்றாகத்தான் தெரிச்சி பெற்றிருந்தேன். நான் இங்கேயே எச்.எஸ்.சி. முடித்து மருத்துவம் பயில்வதாகக் கூறினேன். அவர் மறுத்துவிட்டார். இங்கிருந்தால் நான் பத்திரிகைத் தொழிலிலேயே இருந்து விடுவேனாம். மருத்துவம் பயில மாட்டேனாம். ஊரிலுள்ளோரை மறந்து விட்டு இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுவேனாம்!
பதட்டமும், குழப்பமும், வேதனையும் நிறைந்த நிலையில் வேண்டா வெறுப்பாக நான் சம்மதித்தேன்.
என்னை வழியனுப்ப கந்தசாமி மாமா, செல்லப்பெருமாள் மாமா, சிதம்பரம் சித்தப்பா ஆகியோருடன் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் ஜெயப்பிரகாசம், கோவிந்தசாமி, பன்னீர்செல்வம், சார்லஸ் ஆகியோர் வந்திருந்தனர்.
ஒலிபெருக்கியில் கடைசி அழைப்பு ஒலித்தது. நெஞ்சு படபடத்தது! உடல் லேசாக நடுங்கியது! சொல்ல முடியாத துயர் தொண்டையை அடைத்தது!
எல்லாரும் கை குலுக்கி என்னை வழியனுப்பினர்.
” நன்றாகப் படித்து டாக்டராகத் திரும்பி வா.” என்றான் ஜெயப்பிரகாசம் மாலை நேரங்களில் என்னோடு அதிகம் கழித்தவன் . நான் நாடகத்தில் நடித்த கதாநாயகன் பாத்திரத்தில் அவன் தொடர்ந்து நடிக்க சம்மதித்திருந்தான்.
நான் பயணிகள் புறப்படும் நுழைவாயினுள் நுழைந்தபோது ஒலிபெருக்கியில் அது ஒலித்தது. என்னைத் தகவல் பிரிவுக்கு உடன் வரச் சொல்லி அறிவிக்கப்பட்டது. ஏனக்கு வியப்பையும் குழப்பத்தையும் அது உண்டு பண்ணியது. பதறியபடி அங்கு விரைந்தேன்!
எனக்கு தொலைபேசி அழைப்பு காத்திருந்தது!
” ஹலோ ” என்றேன்.
” ஹலோ! நான்தான் பேசுகிறேன். பத்திரமாகச் சென்று வாருங்கள். உயிருள்ளவரை உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களைப் பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன் என்று தெரியலை. கட்டாயம் ஒரு டாக்டராகத் திரும்புங்கள். அங்கு சென்றதும் என்னை மறந்து விடாதீர்கள். ” அந்தக் குரலில் சோகம் இழையோடியது.
அது என் லதாவின் குரல்! பத்து வருடங்கள் என்னோடு ஒன்றாக வளர்ந்து ஆளானவள்.!
” சரி லதா! நன்றி. இப்படி உன்னோடு கடைசியாகப் பேசுவேன் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை. கவலைப் படாதே.! உண்மையான நம் காதலை உலகில் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது. எத்தனை ஆண்டுகளானாலும் உனக்காக நானும் காத்திருப்பேன். என் இதயத்தை இங்கு விட்டுச் செல்கிறேன்! கவலை வேண்டாம்! நாம் மீண்டும் சந்திப்போம்! ”
” அத்தான்! ”
” அன்பே! ”
( தொடுவானம் தொடரும் )
- மருமகளின் மர்மம் – 14
- பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்
- ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ நாவல்
- தொடுவானம் – 1
- நவீன எழுத்தாளனின் சமூகஅக்கரை
- ஒரு நிஷ்காம கர்மி
- புகழ் பெற்ற ஏழைகள் – 44
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – 20 குரு க்ஷேத்திரம். பீஷ்மரின் வீழ்ச்சி
- மருத்துவக் கட்டுரை உணவுக்குழாய் புற்றுநோய்
- நீங்காத நினைவுகள் 32
- புன்னகை எனும் பூ மொட்டு
- திண்ணையின் இலக்கியத் தடம் -20
- தினம் என் பயணங்கள் – 3
- பெண்களின் விஸ்வரூபம் – வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..
- ”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]
- ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படி
- காலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
- ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”
- சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சீதாயணம் நாடகப் படக்கதை – 18
- பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி