நீர் மேகம் !
சமீபத்தில் மறைந்துபோன தமிழ் திரைப்பட உதவி இயக்குநர் வைரக்கண்ணு எழுதிய நூல் !
பெரும் கனவுகளோடு கோடம்பாக்கம் வந்த அந்த இளம் உதவி இயக்குநரின் நூலை இரண்டு நாட்களுக்கு முன்னால் படிக்கநேர்ந்தது. நூலின் நுழைவாயிலில் நூலாசிரியனின் மரணத்தைப்பற்றி விரிவாகபேசப்பட்ட இரண்டு அணிந்துரைகள் என் கவனத்தை பெரிதும் ஈர்த்தன.
ஒன்று திரைப்பட நடிகர் நாசருடையது.
இன்னொன்று இரண்டு நாட்களுக்குமுன் சென்னையில் நிகழ்ந்த ஒரு இலக்கிய விழாவில் இலக்கியவீதி இனியவன் வழங்கிய அன்னம் விருது பெற்ற படைப்பாளி யூமா வாசுகியுடையது.
இரண்டுமே தனித்தனி தலைப்புடன் வாசிப்புக்குத்தேவையான ருசிக்கு குறைவின்றி இருந்தது.
திரு நாசரை ஒரு திறன்மிக்க திரைப்பட குணச்சித்ர நடிகராக நான் அறிந்திருந்தேன். அவருக்கு இலக்கியம் சார்ந்த குழுக்களுடன் பெற்றிருந்த தொடர்பையும் பேசக்கேட்டிருக்கிறேன். ஒரு பண்டிகை நாளில் ஊடகம் ஒன்றின் பேட்டியொன்று சுற்றுச்சூழல் சார்ந்த சமூகஅக்கரையும் அவருக்கு நிரம்ப உண்டென்பதை உணர்த்திற்று.
இந்தப்புத்தகத்தில் அவர் எழுதியிருந்த அணிந்துரையில் அவருக்கிருந்த மொழியின் நடை அவர் மீது நான் பெற்றிருந்த மதிப்பீடு மேலும் உயரக்காரணமாயிற்று.அவருடைய எழுத்தின் வீச்சு அவரிடம் இருந்த எழுத்துத்திறனையும் இந்த சமூகத்தின்மேல் அவருக்கிருந்த அக்கரையையும் பரைசாற்றிற்று.
சிகிரெட்டும் குடியும் மனிதவாழ்வுக்கு எத்தனை தீங்கானவை என்று பேசும் அந்த அணிந்துரையின் ஒருபகுதியை உங்கள் பார்வைக்கு அப்படியே தருகிறேன்.
சுழியின் விசை எதிர்த்து வாழ்ந்த கலைஞன்
. . . . . ஒவ்வொரு காட்சி ஆரம்பிக்கும் முன்பும் ( இயக்குநர் ) பரதனும் , வைரக்கண்ணுவும் ( உதவி இயக்குநர் ) தனியாக குசுகுசுவென்று பேசிக்கொள்வதுண்டு.அதுவும் பரதன்தான் பேசுவார். வைரக்கண்ணு இறுகிய முகத்தோடு ஆமாம் இல்லை என்ற பாவனையில் தலையை மட்டும் ஆட்டுவார்.. மதிய உணவு இடைவேளையின்போதும் தனியாகத்தான் உட்கார்ந்து சாப்பிடுவார்.
. . . .சாப்பிட்டு முடித்தவுடன் பக்பக்கென்று தொடர்ச்சியாய் இரண்டு சிகிரெட்டுகளை ஊதித்தள்ளுவார்.
எனக்கு சிகிரெட்டும் ஆகாது. சிகிரெட்டை சுவாசிப்பவர்களையும் பிடிக்காது.. வைரக்கண்ணுவையும் பிடிக்காது . . . . . .
. . . . மனிதர்கள் நொடியில் எடுக்கும் சில அற்ப முடிவுகள்தான் சிலநேரங்களில் அற்புதமான வாழ்வை அமைக்கின்றன. பல வேளைகளில் மோசமான சகதியில் தள்ளிவிடுகின்றன. வீராச்சாமியைப்போல…
அவன் மட்டும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்திருந்தால்அவன் வைத்த புள்ளியைச்சுற்றி சமூகம் என்னழகாக கோலம் வரைந்து …
என்று திரு நாசரின் அணிந்துரை நூலாசிரியன் வைரக்கண்ணுவைப்பற்றி விரிகிறது.
என்னைப்பொருத்தவரை திரு நாசர் ஒரு திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதராக நற்குணங்களுடன் நிமிர்ந்து நிற்கிறார்.
இரண்டாவதாக இடம்பெற்ற இன்னொரு அணிந்துரை திரு யூமா வாசுகியுடையது. சமீபகாலங்களில்தான் என் வாசிப்பறிவு தொழில் நுட்பம் சார்ந்த நூல்களிலிருந்து மொழிசார்ந்த நூல்கள்பால் மாறியதால்தானோ என்னவோ எனக்கு எழுத்தாளர் யூமா வாசுகியை தெரிந்திருக்கவில்லை.அவர் நூல் எதனையும் வாசிக்க நேர்ந்ததில்லை.
கடந்த 24 ஜனவரி 2014 ல் சென்னை தி. நகர் கிருஷ்ண கான சபாவில் நிகழ்ந்த ஒரு தொடர் விழாவில் இனியவனிடமிருந்து அவர் அன்னம் விருது பெற்ற தருணத்தில்தான் அவர் ஒர் ஆண் என்பதைக்கூட அறிந்தேன்.
மிகமிக எளிமையான மனிதர். ஒர் சாதாரண அரசு ஊழியரை நினைவூட்டும் வடிவம்.பொதுவாக எழுத்தாளர்களுக்கு அவர்கள் சார்ந்த பதிப்பகத்தாருடன் ஏற்படுகிற சிக்கல்களை அழகாக பேசினார். படிக்கத்தகுந்த நூல்களையும் குழந்தைகள் ரசிக்கத்தகுந்த புத்தகங்களை எழுதியவர் திரு யூமா என்று சொன்னார்கள். அவர் இந்த நூலுக்காக தந்த அணிந்துரையின் ஒரு பகுதியை அப்படியே தருகிறேன்.
மரணத்தின் தரிசனம்
மருதா பதிப்பகம் வெளியிட்ட அஜயன் பாலாவின் சிறுகதைத்தொகுப்பான மயில்வாகனன் மற்றும் கதைகள் நூலுக்கு L L A வில் வழமை சாராக்கூட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பார்வையாளனாக நானும் கலந்துகொண்டேன்..கூட்டம் முடியும்போது ஒன்பதுமணியிருக்கும்.பெரும்பாலோர் விடைபெறவும் நாங்கள் சிலபேர் ஒதுங்கி நின்றோம். இயல்புப்படி குடித்துவிட்டுக்கொஞ்சம் சந்தோஷமாக இருக்கலாமே என்று தோன்றிவிட்டது.விழாநாயகனான அஜயன் பாலா அதர்க்குரிய ஏற்பாடுகளில் இறங்கினார். மதுபானவகைகளை வாங்கிக்கொண்டு நண்பர் ராஜகோபால் தங்கியிருந்த மேன்ஷனின் மொட்டைமாடிக்குச்சென்றோம்.மொட்டைமாடியின் விசாலமான பரப்பு அரையிருளாயிருந்த்து. மது அருந்தும்போது அதனோடுசேர்ந்து மனதிற்கு உவப்பாய் இருக்கிற இடமாயிருந்தது. பத்துப்பதினோருபேர் இருந்திருப்போம் நாங்கள்.இசைவான அழகான மனநிலையிலிருந்தோம்.அருந்துதலைத்தொடங்கினோம்.நேரம் எங்கள்மீது பூவுதிர்த்துக்கடந்தது.
ஆயிற்று. குன்றுகளின் உச்சியிலிருந்து தோகைவிரிக்கும் மயில்களைப்போல வசீகரபோதை கூடிவந்தது.அந்த மயில்களே அலகால் உந்தி உந்தி எங்கள் மூடிகளைத் திறந்துவிட்டன.பாட்டு கிளம்பியது.ஒருவர்பாட மற்றவர் தொடர்ந்தார். மிகப்பழைய பாடல்கள். விருந்து களைகட்டிக் கம்பீரமாய் நிகழ்ந்தது. மகிழ்ந்து பாடி ஆனந்திக்காதவர் ஒருவரும் இல்லை அந்தக்குழுவில் . நீரில் மூழ்கும்போது மேலே ஏறிவந்த கனிந்த அன்பை முத்தங்களாக பகிர்ந்து கொண்டனர் ஒருவருக்கொருவர்.அந்த எங்கள் சமூகத்திற்கு மேலும் தேவைப்பட்டது திரவமெனும் திரவியம் . வாங்கிவந்தார்கள்.உபசரித்துக்கொண்டார்கள் ..உற்சாகத்தின் நுனியை கண்டுபிடித்துவிட்ட மாத்திரத்தில் பரவசமாய் சரசரவென்று முழுவதையும் பிடித்து இழுத்துக் கொண்டாடினார்கள்.
மீண்டும் குறுக்கிடுவதர்க்கு பொருத்துக்கொள்ளவும்.
மதுவுக்குகிருக்கும் மகாவலிமையை ஆராதிக்கும் அவர் வரிகளைத்தொடர்ந்து வைரக்கண்ணுவின் இறுதி நேரங்களை பேசுகிறது அந்த அணிந்துரை.
எப்போதோ தவிற்க இயலாத சந்தர்ப்பங்களில் இந்த ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய இந்த குடிச்சுவை இன்றைய இளைஞர்களின் வாழ்வையும் வளர்ச்சியையும் எப்படியெல்லாம்சீரழிக்கிறது
கேடு தருகின்ற குடியின் நேரலை எழுத்துக்கள் இந்த அணிந்துரையில் இத்தனை போதையோடு எழுதத்தான் வேண்டுமா . குடிப்பழக்கத்தில் திளைத்திருந்தவர்கள்கூட அதை தங்கள் புனைவுகளில் ஒப்பனையோடு எழுதியிருக்கலாம்.ஆனால் ஒருபோதும் சுயதரிசனத்தில் மகிழ்ந்து எழுதியதில்லை.
ஒரு நவீனபடைப்பாளி இந்த சமூகத்துக்கு சொல்லும் கருத்து இதுதானா.
நான் தவறென்று கருதும் இந்த நிகழ்வு இன்றைய தலைமுறைக்கு எளிதாக இருக்கக் கூடும். பாலியல் சார்ந்த வக்கிரங்களைகூட அவர் ஒரு நுட்பமான கவி என்று கொண்டாடுகிறவர்களும் உண்டு. என் குழந்தைக்கு தமிழே வராது என்று பெருமையோடு விளிக்கின்ற பெற்றோர்களை இன்று பெற்றிருக்கிறோம்.
இத்தனைக்கும் இங்கே பேசப்படும் நூல் தலித்துகளில் வாழ்க்கையை சீரழிக்கும் குடிப்பழக்கத்தைதானே இடித்துப்பேசுகிறது. இந்த நூலைப்பொருத்தவரை நூலாசிரியன் உரக்கப்பேசுவது குடிப்பழக்கத்தின் கேடுகளைத்தான்.வாசகனை எச்சரிக்கும் நீர்மேகம் அவன் ஆழ்ந்த இதயத்தில் இருந்து வந்ததாகவே நம்பலாம்
அவன்மட்டும் குடிப்பழக்கத்துக்கு ஆளாகாமலிருந்தால் … என்று குடிப்பழக்கத்தாலேயே மடிந்துபோன நூலாசிரியனை நாசர் பேசுவது இதைத்தானே போதிக்கிறது.
ஆனால் நிகழ்ந்த எதார்த்தம் என்ன.
இலக்கியமே வாழ்க்கையாக கொண்டவர்ளையும் இலக்கியம்வேறு வாழ்க்கைவேறு என்று வாழ்ந்தவர்களையும் பார்த்திருக்கிறேன்.இலக்கியத்தை தங்கள் கொண்ட கருத்துகளுக்காகவும் ஏற்ற கொள்கைகளுக்காகவும் பயன்படுத்திக்கொண்டவர்கள் ஐம்பதுகளில் திராவிட இயக்கத்தினர்.
இலக்கியம் வாசிப்பவர்களுக்குத்தான் தனக்கல்ல என்று இஷ்டம்போல் வாழ்ந்தவர்கள் இரண்டாமவர். இன்றைய இலக்கியவாதிகள் தாம் பேசும் வார்த்தைகள் தமக்கல்ல என்றும் விற்பதர்க்கும் விருதுகளைப்பெருவதர்க்கும் மட்டுமே என்று கருதுகிறவர்கள்.
இன்னொருவர் எழுதிக்கொடுக்கும் உரையாடலைப்பேசி திரையில் நடிக்கும் ஒருநடிகருக்கு இருக்கும் சமூக அக்கரை கர்வத்தோடு பேசப்படும் ஒரு படைப்பாளிக்கு இருக்கவேண்டாமா .
சற்று யோசித்துப்பாருங்கள் யூமா .
.
- மருமகளின் மர்மம் – 14
- பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்
- ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ நாவல்
- தொடுவானம் – 1
- நவீன எழுத்தாளனின் சமூகஅக்கரை
- ஒரு நிஷ்காம கர்மி
- புகழ் பெற்ற ஏழைகள் – 44
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – 20 குரு க்ஷேத்திரம். பீஷ்மரின் வீழ்ச்சி
- மருத்துவக் கட்டுரை உணவுக்குழாய் புற்றுநோய்
- நீங்காத நினைவுகள் 32
- புன்னகை எனும் பூ மொட்டு
- திண்ணையின் இலக்கியத் தடம் -20
- தினம் என் பயணங்கள் – 3
- பெண்களின் விஸ்வரூபம் – வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..
- ”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]
- ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படி
- காலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
- ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”
- சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சீதாயணம் நாடகப் படக்கதை – 18
- பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி