முதன்முறையாகச் சகுந்தலாவை இரக்கத்துடன் நோக்கிய நீலகண்டன், ‘சேச்சே! ந்யூடால்லாம் நிக்க வேணாம்மா. ஆனா முக்கால் நிர்வாணமா நிக்க வேண்டி வரும்னு வச்சுக்கோயேன். கடைசியில் ரெண்டே ரெண்டு ஒட்டுத் துணி மட்டுந்தான் உடம்பிலே இருக்கும். புரியுதில்லே? ஆனா நீ அதை எடுக்க வேண்டி வராது. அந்த நேரத்துல கரெக்டா பவர்கட் வந்த மாதிரி விளக்குகளையெல்லாம் அணைச்சுடுவாங்க. நீயும் உள்ளே ஓடிடணும். அப்புறம் இன்னொண்ணு. சொல்ல விட்டுப் போயிடுத்து. நீ கைக்கொழந்தைக்காரியா யிருக்கிறதுனால, ஓட்டல்லேயே பெர்மனெண்ட்டா உனக்கு ஒரு ரூம் போடச் சொல்லிட்டாரு விநாயக்ராம். உன் கொழந்தையோட பராமரிப்புச் செலவு முழுக்க அவரே ஏத்துக்கப் போறார். படிப்பு உள்பட. சகுந்தலா! இன்னொண்ணு சொல்லட்டுமா?’
‘சொல்லித் தொலையுங்க.’
‘நீ பயங்கரமான அழகி. அதை முதலா வெச்சு நீ எவ்வளவோ பணம் பண்ணலாம். சாதிக்கலாம். இதுக்கு மேல நான் சொல்ல மாட்டேன். முதலாளியோட மட்டுமாவது நீ அட்ஜஸ்ட் பண்ணிண்டியானா, ராணி மாதிரி வாழலாம். அதனால உனக்கு ஒரு லாபமும் உண்டு. கண்டவனும் உன்னைத் தொட மாட்டான் – நீயே விரும்பினாலொழிய.’
‘என்னது!’
‘இப்ப உதாரணமா ஒரு மந்திரியோ போலீஸ் ஆ•பீசரோ உன்னோட பொழுதைக் கழிக்க விரும்பினாங்கன்னு வெச்சுக்கோ. அப்படி ஆசைப் பட்ற ஆளு எந்த அளவுக்குச் செல்வாக்கு உள்ளவர்ங்கிறதைப் பொறுத்து விநாயக்ராம் உன்னை அவர்கிட்ட. அனுப்புவாரு. ஏன்னா பெரிய மனுஷாளைப் பகைச்சுக்க முடியாதில்லியா?. ..’
‘போதும். நிறுத்துங்க. அவங்கல்லாம் மனுஷங்களா, இல்லாட்டிப்போனா வெறி பிடிச்ச நாய்ங்களா?’
‘என்கிட்ட கத்தி ஒரு புண்ணியமும் இல்லேம்மா. நான் வெறும் வேலைக்காரன். முதலாளி கிட்டவும் நீ இப்படியெல்லாம் வாயில வந்ததைப் பேசக்கூடாது. பேசினா, அப்புறம் தினமும் உனக்கு மயக்க ஊசி போடுவாங்க. நீ மயங்கிக் கிடக்கிறப்ப, கண்ட நாயும் உன்னைத் தொடும். அதனால நல்லா யோசிச்சு எதிலே உனக்குப் பிடிக்காத விஷயங்கள் கம்மியா யிருக்கோ, அதைத் தேர்ந்தெடுத்துக்கோ. புரிஞ்சுதா? .. .. நாளைக்கு எட்டு மணிக்கெல்லாம் வந்துடு. என்ன?’
பிரமித்துப் போய் நின்றுகொண்டிருந்த அவளைப் பார்த்து இளித்த பின் நீலகண்டன் வெளியேறினர். சகுந்தலா ஒரு முடிவுக்கு வந்தாள். குழந்தையுடன் மிகச் சில அத்தியாவசியமான சாமன்களைத் தூக்கிக்கொண்டு அன்றிரவே ஓடிவிடத் தீர்மானித்தாள். ‘சென்னையை விட்டே ஓடி விட்டால், அப்புறம் அந்தக் காண்ட்ராக்டும் இன்னொன்றும் என்னை என்ன பண்ணும்?’ – இப்படி ஓர் எண்ணம் தோன்றியதற்குத் தன்னைத் தானே அவள் பாராட்டிக்கொண்டாள். ஆனால் அனுபவமும், நரியின் தந்திரமும், புன்மையும் படைத்த விநாயக்ராம் தன்னைத் தோற்கடிப்பான் என்று அந்தக் கணத்தில் அவளுக்குத் தோன்றவே இல்லை.
அன்றிரவு அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு பெட்டியுடன் வெளிப்பட்ட போது, ‘ஆட்டோ வேணுமாம்மா?’ என்றவாறு சர்ரென்று அவளருகே ஒருவன் தனது ஆட்டோவை நிறுத்தினான். அதில் போவது பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணிய சகுந்தலா, ஏறிக்கொண்டு, ‘எக்மோர் போங்க!’ என்றாள். ஆட்டோ கிளம்பும் முன் எங்கிருந்தோ முளைத்த ஒருவன், ‘நமசிவாயம்! கொஞ்சம் நிறுத்துப்பா! நானும் ஏறிக்கிறேன். கால்ல அடி பட்டிருக்குது. பாந்தியன் ரோடு போகணும்,’ என்றான்.
‘வண்டியில லேடீஸ் இருக்கிறதால், நீ எம்பக்கத்துலயே அட்ஜஸ்ட் பண்ணிக் குந்திக்க.’ – அவன் உட்கார்ந்ததும் ஆட்டோ கிளம்பிற்று. அது ஓர் இருட்டான சந்தில் ஓடியபோது, இடையில் ஏறிய ஆள் சகுந்தலாவின் பக்கம் திரும்பி ஏதோ ஒரு துணியை அவள் முகத்தின் மீது போட்டு மூட, அவள் மயக்கமானாள்.
.. .. .. கண் விழித்த போது அவள் தான் ஒரு பெரிய அறையில் ஒரு கட்டிலில் படுத்திருந்ததைக் கண்டாள். குழந்தை பக்கத்திலேயே ஒரு தொங்கு தொட்டிலில் கிடத்தப்பட்டிருந்தது. ‘நான் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவிலேயே ஏறி என்னிடமே வந்து சேர்ந்த் என் கண்மணியே! இனி என்னிடமிருந்து தப்ப முயலாதே!’ எனும் ஆங்கில வாசகம் அடங்கிய ஒரு தாள் அவளருகே இருந்தது. சகுந்தலா அழுது புரண்டாள். அது போல் அவள் அழுததே இல்லை. இனித் தப்ப வழியே இல்லை எனும் நிலையில் அசிங்க வாழ்க்கையில் தன் மனத்தையும் உடம்பையும் மரத்துப் போகச் செய்துகொள்ளும் தவிர்க்க முடியாத முடிவுக்குத் துரத்தப்பட்டாள்.
பிடிவாதம் பிடித்து மறுப்பதால் தான் விழக்கூடிய சாக்கடை அதிக ஆழமும் துர்நாற்றமும் உடையதா யிருக்கு மென்பதால், விநாயக்ராமின் ஆசைநாயகியாகவும் காபரே ஆட்டக்காரியாகவும் இருக்க ஒப்புக்கொண்டாள். ‘மனித மலத்தின் துர்நாற்றத்தைவிடவும் மாட்டுச் சாணி பரவாயில்லைதானே!’ என்று உதாரணம் வேறு சொல்லிக்கொண்டாள்!
காபரே ஆட்டக்காரியாகவும் விநாயக்ராமின் ஆசை நாயகியாகவும் அவள் ஆகிப்போனது இப்படித்தான். சில பெரிய மனிதர்களின் ஆசையைத் தட்ட முடியாமல், அவளது எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், அவளுக்கு மயக்க ஊசி போட்டு அவர்களுக்கு அவளை விநாயக்ராம் அவ்வப்போது இரையாக்கியதும் உண்டுதான். ஆன்மாவைக் கொன்று, ‘நானும் வாழ்கிறேன்’ என்கிற ரீதியில் பொறித்தனமாக அவள் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையில் அவளது ஒரே ஆறுதல் ஷைலஜாதான். தன் அம்மாவைக்காட்டிலும் தான் அதிக அழகுள்ளவளாய்த் திகழப் போவதற்கான அறிகுறிகளை ஷைலஜா மிகச் சிறிய வயதிலேயே காட்டத் தொடங்கிவிட்டாள். குழந்தையைக் கவனித்துக்கொள்ள ஒரு தனி ஆயாவை விநாயக்ராம் அமர்த்தினான்.
வேறு வழியற்ற நிலையில் ஓட்டலில் மகளுடன் இருக்கத் தொடங்கிய சகுந்தலா கொஞ்ச நாள் வரை வெளியே எங்கும் போகவில்லை. அப்படி அவள் வெளியே போக வேண்டுமானால், குழந்தையை ஓட்டலிலேயே விட்டுவிட்டுப் போகவேண்டும் என்பது விநாயக்ராமின் நிபந்தனை. உரிய வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஷைலஜா பள்ளியிலிருந்து திரும்பும் வரையில் சகுந்தலா வெளியே செல்லக் கூடாது என்பதும் நிபந்தனை. கடுமையான கட்டுக்காவல் இருந்தது.
காபரே நடனங்கள் போன்ற கேளிக்கைகள் இல்லாத ஒட்டல் பகுதிகளுக்கு அவள் அவ்வப்போது சென்று பார்ப்பதுண்டு. அப்படி ஒரு சமயம் பத்து வயது ஷைலஜாவுடன் அவள் போனபோதுதான், ஓர் அறையின் வாசலில் நின்றிருந்த அந்தப் பெண்மணியை அவள் பார்த்தாள்.
“நீ.. .. ..நீ மேரிதானே?’
‘ஆமா. நீங்க? சகுந்தலா இல்லே?’
‘ஆமா. என்ன ஆச்சரியம்! நீ இங்க எங்க வந்தே, மேரி?’
‘எங்க தூரத்துச் சொந்தக்காரர் ஒருத்தர் இங்கே தங்கி இருக்காரு. பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். இவ உன்னோட மகளா?’
‘ஆமா.’
‘உன்னோட சாயல் தெரியுது. ஆனா உன்னைவிட ரொம்ப அழகா யிருக்கா. பெரியவள் ஆனதும் உன்னை அள்ளிச் சாப்பிட்டுடுவா.’
‘அதான் எனக்கு ரொம்பவும் கவலையா யிருக்கு இப்பவே. ‘
‘படிக்கிறாளா?’
‘ஆமா.’
‘எந்த ஸ்கூல்ல படிக்கிறேம்மா? பேரென்ன?’
‘ஷைலஜா, ஆண்ட்டி. ஹோலி ஏஞ்சல்ஸ்ல •பி•ப்த் படிக்கிறேன். எப்பவும் •பர்ஸ்ட் ரேங்க், ஆண்ட்டி.’
‘வெரி குட். ஸ்வீட் கேர்ள்.’
‘நீ என்ன பண்ணிட்டிருக்கே, மேரி?’
‘ஒரு ஸ்கூல் நடத்திக்கிட்டு இருக்கேன், சகுந்தலா. ப்ளஸ் டூ வரைக்கும் இருக்கு. காலேஜாக்கூட விரிவாக்கணும். ஆசை இருக்கு.’
‘கலியாணம் பண்ணிக்கலையா?’
‘அதுக்கு நிறைய பேரு இருக்காங்க. காலேஜ் நடத்துறதுக்குக் கொஞ்சப்பேருதானே இருக்காங்க?’
‘சரியான பதில். உன்னோட ஸ்கூல் பேரென்ன, மேரி? அதுல இவளைச் சேர்த்துடலாம்னு.’
‘எனக்கு அதிலே ரொம்பவே சந்தோஷம், சகுந்தலா. நானே கேக்கலாமான்னு நினைச்சேன்.’
‘ஹாஸ்டல் வசதி இருக்கா?’
‘இருக்கு. ஆனா எதுக்கு ஹாஸ்டலைப் பத்திக் கேக்கறே?’
‘அதுக்கு நான் பெரிய கதையே சொல்லணும், மேரி. இப்ப உனக்கு நேரம் இருக்குமா?’
‘இப்ப நான் •ப்ரீதான். அந்தாளு வெளியே போயிருக்காரு. வர்றதுக்கு நேரமாகும்..’
அப்போது தங்களைக் கடந்து சென்ற ஓட்டல் பணியாள் ஒருவரைக் கூப்பிட்டு, ‘காலி ரூம் ஏதாச்சும் இருந்தா திறந்து விடுப்பா கொஞ்ச நேரத்துக்கு,’ என்றாள் சகுந்தலா. சாவி வாங்கி வருவதாய்க் கூறி அவர் உடனே ஓடினார்.
‘நீ இந்த ஓட்டல்லே வேலை செய்யறியா, சகுந்தலா?’
‘ஆமா.’
.. .. .. மூவரும் அந்தக் காலி அறைக்குள் நுழைந்தார்கள்.
‘ஷைலஜா! மார்கரெட் ஆண்ட்டி, தெய்வசிகாமணி அங்க்கிள் ரெண்டு பேரையும் பத்திச் சொல்லி யிருக்கேனில்ல? இந்த மேரி ஆண்ட்டி அவங்களுக்குச் சொந்தம். சரி. நீ ரிசப்ஷனுக்குப் போய் உக்காந்து புக் படிச்சுக்கிட்டு இரு. கொஞ்ச நேரத்துல நான் அங்க வர்றேன். ஓடு.’
ஷைலஜா ஓடிப் போனாள். அவள் போன பிறகு கதவைச் சாத்திய சகுந்தலா இலைமறைகாயாகத் தான் நடத்திக்கொண்டிருந்த அவல வாழ்க்கை பற்றி மேரிக்குச் சொன்னாள். அதற்குப் பழக்கப்பட்டுத் தான் மரத்தும் போய்விட்டது பற்றிச் சொல்லி விரக்தியாய்ச் சகுந்தலா சிரித்த போது, மேரியின் கண்கள் கலங்கி யிருந்தன. அவள் சகுந்தலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
‘என்னால கொஞ்சங்கூட நம்பவே முடியல்லே, சகுந்தலா. நீயா காபரே டான்ஸ் ஆட்றே?’
‘ஆமா, மேரி. நானேதான். தூங்குறப்ப கூட மேலாக்கு விலகாத நாந்தான் இப்ப முக்கால் நிர்வாணத்தில ஆம்பளைங்க முன்னாடி ஆடிக்கிட்டு இருக்கேன். எனக்கு எல்லாமே மரத்துப் போயிடிச்சு, மேரி. இப்ப உன்னோட பேசிக்கிட்டிருக்கிறது சகுந்தலா இல்லே. அவளோட சிலை! உயிர், உணர்ச்சி, ஆத்மா எதுவுமே இல்லாத எலும்புக்கூடுன்னு வச்சுக்கயேன். ராத்திரிகள்லே நான் காபரே டான்ஸ் ஆட்றது இது வரைக்கும் ஷைலஜாவுக்குத் தெரியாம ஓட்டல்ல நைட் ட்யூட்டின்னு சொல்லி எப்படியோ சமாளிச்சு மறைச்சுட்டு வந்திருக்கேன். இனிமே அது சாத்தியம்னு எனக்குத் தோணல்லே. இப்ப ரெண்டுங்கெட்டான் வயசு. கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பிற்பாடு நானே எல்லாத்தையும் அவ கிட்ட சொல்லிடாம்னுதான் இருக்கேன். அவ என்னை அனுதாபத்தோட புரிஞ்சுப்பாளோ, இல்லாட்டி வெறுப்பாளோ! அதை இப்ப என்னால ஊகிக முடியல்லே. எது எப்படி இருந்தாலும் உரிய நேரத்துல, உண்மையைச் சொல்லி பாரத்தை இறக்கிட்டா, அதுக்குப் பெறகு கடவுள் விட்ட வழி! .. .. இப்ப உன்னைப் பாத்ததும் எனக்கு ஒரு திடீர் யோசனை.’
‘சொல்லு, சகுந்தலா.’
‘ஷைலஜாவை உன் ஸ்கூல்லயே சேர்த்துடலாமான்னு.’
‘அதான் ஏற்கெனவே சொன்னியே?’
‘வெறுமனே சேர்க்கிறது மட்டுமில்லே, மேரி. இன்னும் சில விஷயங்களும் இருக்கு. ஷைலஜவை இந்தச் சூழ்நிலையிலேர்ந்து கம்ப்ளீட்டா விலக்கிடணும்னு இருக்கு எனக்கு. இங்கே வந்து போற ஆம்பளைங்க கண்ணுலே இவ படவே கூடாது – அந்த விநாயக்ராம் உள்பட.’
‘ஜீஸஸ்!’
‘ஆமா, மேரி. அந்தாளு ஷைலஜாவைப் பார்க்கிற பார்வையே சரி யில்லே. அதான் எனக்கு ரொம்ப பயமா யிருக்கு. நீ மனசு வெச்சா உன்னால எனக்கு உதவ முடியும்.’
‘நான் என்ன செய்யணும், சொல்லு.’
‘நீ உன்கிட்ட அவளை நிரந்தரமா வெச்சுக்கணும். அவ இந்தப் பக்கமே வரக்கூடாது.’
‘ஜீஸஸ்! அவளோட நல்லதுக்காக அவளை நீ அடியோட விட்டுப் பிரிஞ்சுடணும்னா நினைக்கிறே?’
‘ஆமா.’
‘அது சாத்தியமா? குழந்தை ஏங்கிப் போயிடுவா.’
‘ஏங்கித்தான் போவா. ஆனா ஷைலஜா ரொம்பவே கெட்டிக்காரி. அனுசரணை உள்ளவ. அம்மா சொன்னா அது சரியாத்தான் இருக்கும்னு புரிஞ்சுப்பா, மேரி. அதனால, அவ வயசுக்கு எந்த அளவுக்குச் சொல்லணுமோ அந்த அளவுக்கு மட்டும் சொல்லிப் புரிய வெச்சுட்டு உன்னோட அனுப்பறேன்.’
‘அப்பப்ப நீ வந்து அவளைப் பாத்துட்டுப் போவேதானே?’
‘அதைப் பத்தி இப்ப எதுவும் சொல்ல முடியாது, மேரி. ஷைலஜா ரொம்ப அழகா யிருக்கிறதால அவளையும் காபரே ஆட வைக்கிற எண்ணம் அந்த ராஸ்கல்லுக்கு இருக்கு. அதனால அவ எந்த ஸ்கூல்ல படிக்கப் போறான்ற விஷயம்கூட யாருக்கும் தெரியக்கூடாது. நான் அங்கே வரத் தொடங்கினா, என்னை வேவு பார்த்துக் கண்டு பிடிச்சுடுவாங்க. அந்த ஆளுக்கு நிறைய அடியாள்கள் இருக்காங்க, மேரி. அதனாலதான்.’
‘சரி. ஆனா அதுக்குச் சில பூர்வாங்க வேலைகள் இருக்கு. அப்ளிகேஷன் •பார்ம் அது இதுன்னு. நல்ல வேளையா ஆன்யுவல் எக்ஸாம்ஸ் முடிஞ்ச நேரமா இருக்கு. ஒண்ணு பண்றேன். ஹோலி ஏஞ்சல்ஸ் ஹெட்மிஸ்ட்ரெஸ் எனக்குப் பழக்கம்தான். நீ இப்பவே ஒரு அப்ளிகேஷன் எழுதிக்குடு. அதை நானே எடுட்துட்டுப் போய் டி.ஸி. வாங்கிடறேன். வாங்கின பெறகு இங்க வந்து உன்னைச் சந்திக்கிறேன்.’
‘நீ இங்க வர்றதும் ஆபத்துதான். ரிசப்ஷனிஸ்ட் இன்னைக்கு உன்னைப் பாத்திருக்கா. நீ யாரைப் பார்க்க வந்தி§யோ அவங்க அட்ரெஸ் ஓட்டல்ல இருக்கும். அவர் கிட்ட விசாரிச்சு நீ யாருன்னு கண்டு பிடிச்சுடுவாங்க.’
‘உன் மூளை முன் ஜாக்கிரதையோட யோசிக்குது.’
‘நான் பழகுற மனுஷங்க அப்படி, மேரி. நரிங்க. டி.ஸி. கிடைச்சதும் •போன் பண்ணு. சகுந்தலா, ரூம் நம்பர் 45 ன்னு கேளு. நான் லைன்ல வந்ததும், ‘என் மகளுக்குக் கல்யாணம் இத்தனாம் தேதியன்னிக்கு. அவசியம் வந்துடு. அப்புறம் பத்திரிகை அனுப்பறேன்’னு மட்டும் சொல்லு. தேதியை மட்டும் தெளிவாச் சொல்லு. இவங்களை ஏமாத்திட்டு எப்படியாவது நேரே உன் ஸ்கூலுக்கு அந்தத் தேதியிலே வந்துட்றேன். அம்பதாயிரத்துக்குச் செக் தர்றேன். இல்லேல்லே. பணமே தர்றேன்..அப்புறம், செக் மூலமா உன்னைக் கண்டுபிடிச்சுடுவாங்க.’
‘அவ்வளவு பணம் எதுக்கு, சகுந்தலா?’
‘என்னால அடிக்கடி வந்து குடுக்க முடியாதில்ல? அதுக்குத்தான். ஷைலஜா உனக்குச் சுமை யாயிடக்கூடதில்லே? அதுக்கும்தான்.’
‘அதைப் பத்தி என்ன? ஷைலஜாதான் நல்லாப் படிக்கிறவளாச்சே? ஸ்காலர்ஷிப் குடுத்துட்றேன். பிரச்னையே இல்லே.’
‘தேங்க்ஸ், மேரி. இதுக்கு இடையிலே நான் ஷைலஜாவுக்குக் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துச் சொல்லி எல்லாத்தையும் முடிஞ்ச அளவுக்குப் புரிய வைக்கிறேன். மேரி! கடவுள்தான் உன்னை இங்கே அனுப்பி வெச்சிருக்காரு. ஷைலஜா அதிருஷ்டக்காரி. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல்லே.’ – சகுந்தலா கண்களைத் துடைத்துக்கொண்டாள். மேரி ஆதரவாய் அவள் தோளில் தட்டினாள்.
.. .. ..படபடக்கும் நெஞ்சுடன் சகுந்தலா அந்த நாளுக்குக் காத்திருக்கலானாள்.
– தொடரும்
- மருமகளின் மர்மம் – 14
- பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்
- ‘ஒப்பனைகள் கலைவதற்கே’ நாவல்
- தொடுவானம் – 1
- நவீன எழுத்தாளனின் சமூகஅக்கரை
- ஒரு நிஷ்காம கர்மி
- புகழ் பெற்ற ஏழைகள் – 44
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் – 20 குரு க்ஷேத்திரம். பீஷ்மரின் வீழ்ச்சி
- மருத்துவக் கட்டுரை உணவுக்குழாய் புற்றுநோய்
- நீங்காத நினைவுகள் 32
- புன்னகை எனும் பூ மொட்டு
- திண்ணையின் இலக்கியத் தடம் -20
- தினம் என் பயணங்கள் – 3
- பெண்களின் விஸ்வரூபம் – வனஜா டேவிட்டின் சிறுகதைகளை முன் வைத்து..
- ”மகத்தான கனவு” [’முகில்’ எழுதிய “செங்கிஸ்கான்” நூலை முன்வைத்து]
- ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படி
- காலச்சுவடு பதிப்பக மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
- ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”
- சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சீதாயணம் நாடகப் படக்கதை – 18
- பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி