மருமகளின் மர்மம் – 19

This entry is part 2 of 24 in the series 9 மார்ச் 2014

சகுந்தலாவின் வீட்டு வாசலில் சோமசேகரனின் பைக் வந்து நின்ற போது சரியாக மணி ஐந்தே முக்கால். பைக் ஓசை கேட்டதுமே நிர்மலா ஓடி வந்து கதவைத் திறந்து, மலர்ச்சியுடன், “வாங்க, மாமா!” என்றாள்.

அவர் சிரித்துக்கொண்டே அவளுடன் உள்ளே சென்று அமர்ந்தார். சகுந்தலா அவருக்காகவே காத்துக்கொண்டிருந்தவள்  போல் ஒரு தட்டில் பாதாம் அல்வாவையும், இன்னொன்றில் வாழைக்காய் பஜ்ஜியையும்  கொண்டுவந்து வைத்தாள்.

“நீங்க சாப்பிட்டாச்சா?” என்று கேட்டபடி பாதாம் அல்வாவிலிருந்து கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைத்த சோமசேகரன், “பிரமாதம்!” என்று பாராட்டினார்.

“நாங்க நாலு மணிக்கே சாப்பிட்டாச்சு, மாமா.”

சாப்பிட்டு முடித்த பின் கழுவுதொட்டியில் கைகழுவிவிட்டுக் காப்பியைக் குடித்த பிறகு வாயைத் துடைத்துக்கொண்ட சோமசேகரன், “அப்ப, நான் நிர்மலாவைக் கூட்டிட்டுப் போகட்டுமாம்மா?” என்றார்.

“அய்யோ! இதென்ன கேள்விங்க? அவ இப்ப உங்க வீட்டுப் பொண்ணு!” என்று சிரித்த சகுந்தலா, “காலம் கனிஞ்சா உங்க குடும்பத்தோட நானும் நெருக்கமாப் பழகுறதுக்கு வாய்ப்புக் கிடைக்கும். இல்லியா?” என்றாள்.

“அதுக்கு என்னாலான முயற்சி எல்லாத்தையும் நான் பண்ணுவேன். அந்த நாளும் ரொம்ப தூரத்தில இல்லேன்னுதான் என் மனசுக்குத் தோணுது. பாப்போம். அப்ப நாங்க வரட்டுமா?”

சகுந்தலா கண்ணீருடன் அவரை நோக்கிக் கும்பிட்டாள். வாசல் வரை வந்து இருவரையும் வழியனுப்பி விட்டு, பைக் தன் பார்வையிலிருந்து மறைந்த வரையில் பார்த்துக்கொண்டிருந்த பின் கதவைச் சாத்திக்கொண்டு அவள் உள்ளே போனாள்..

மோட்டார் பைக்கில் வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, “உன்னோட சிநேகிதி ரொம்பவும் வற்புறுத்தினதுனால, அவ வீட்டில உன்னை விட்டுட்டு வந்ததா உன்னோட அத்தை கிட்ட சொல்லி யிருக்கேன். நீயும் அதை ஞாபகம் வெச்சுக்கணும்.”

“சரி, மாமா.”

“உன் சிநேகிதியோட பேரு, அவ யாரு, என்ன, கல்யாணம் ஆயிடிச்சா, இல்லியா, லொட்டு, லொசுக்குன்னு உங்க அத்தை ஆயிரத்தெட்டு கேள்விகள் கேப்பா. எல்லாத்துக்கும் இப்பவே பதில் ரெடி பண்ணி வச்சுக்க. “

“சரி, மாமா. அவ பேரு சகுந்தலான்னு எங்க அம்மா பேரையே சொல்லிட்றேன். கல்யாணம் ஆனவ. ஆனா புருஷன் செத்துப் போயிட்டாருன்னும் சொல்லிட்றேன். வேற மாதிரிப் பொய் சொன்னா ஞாபகம் வெச்சுக்கணும். அந்த அவஸ்தை யெல்லாம் எதுக்கு, மாமா?”

“நீ சொல்றதும் சரிதான்..அப்ப? அவங்க உன்னோட அம்மான்றதைத் தவிர மத்த விவரங்களை அப்படியே சொல்லப்போறே. அதானே?”

“ஆமா, மாமா. ஆனா அவங்க ஒரு காலத்துக் காபரே டான்சர்னு எப்படி மாமா, சொல்றது?”

“அம்மா, நிர்மலா! எனக்கு ஒரு யோசனை இப்ப திடீர்னு தோணிச்சு. அதும்படி செஞ்சு பாத்தா என்ன?”

“என்ன யோசனை, மாமா?”

“உன்னோட அந்த சிநேகிதியோட அம்மா ஒரு காபரே டான்சர்னு உங்க அத்தை கிட்ட சொன்னா என்ன? அந்த உண்மையை மறைசுட்டான்றதுக்காக, அந்தப் பொண்ணோட மாமனார், மாமியார், புருஷன் எல்லாருமாச் சேர்ந்துக்கிட்டு அவ நல்ல குடும்பப் பின்னணி இல்லாதவன்னு அவளைத் தள்ளி வெச்சிருக்காங்கன்னு உங்க அத்தை கிட்ட சொல்லிட்டு அவ என்ன மாதிரி ரீயாக்ட் பண்றான்னு பாக்கப் போறேன். ஏன்னா, அவ இது மாதிரி ஒரு விஷயத்துக்கு எப்படி எதிரொலிப்பான்னு என்னால சரியா அனுமானிக்க  முடியல்லே. வயசாக, வயசாக சிலர் நல்லபடியா மாறுவாங்க. சிலர் இன்னும் மோசமான குறுகின புத்திக்காரங்களா மாறுவாங்க. உங்க அத்தை எப்படிப்பட்ட மனுஷின்னு பாக்கலாம்.”

“பாத்து?”

“அப்ப அவளோட அபிப்பிராயம் இன்னதுன்னு ஓரளவுக்குத் தெரியவருமில்ல?  அந்தப் பொண்ணுக்கு ஆதரவான அபிப்பிராயத்தை உங்கத்தை வெளியிட்டா, சீக்கிரமே உன்னோட விஷயத்தைச் சொல்லி உங்க அம்மாவை நம்ம வீட்டுக்க்கே கூட்டிட்டு வந்து நம்ம கூட வெச்சுக்கலாமில்லே? அப்படி இல்லாட்டி, வாதாடிப் பாக்கலாம். கொஞ்ச நாள் கழிச்சாவது மாறுவா.”

நிர்மலாவிடமிருந்து பதில் இல்லை. அவர் சற்றே தலை திருப்பிப் பார்த்த போது அவள் தன் கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தது அவருக்குத் தெரிந்தது.

“அட, அசடே! உணர்ச்சிவசப் பட்றியா என்ன?”

“உங்களை மாதிரி ஒரு மாமனார் கிடைக்கிறதுக்கு நான் ரொம்பப் புண்ணியம் பண்ணி யிருக்கணும், மாமா.”

“சேச்சே! மாமனார்னு சொல்லி என்னைத் தள்ளி வெச்சுடாதேம்மா. இனி நீ என்னை அப்பன்னு கூப்பிடும்மா.”

நிர்மலாவின் உணர்ச்சிகள் மேலும் தீவிரம் கொள்ள, அவள் வாயே திறக்க முடியாதவளானாள்.

..  ..  .. “என்ன! மாமனாரும் மருமகளும் ஒரு வழியா வந்து சேந்தீங்களா?” என்றபடி சாரதா கதவைத் திறந்தாள்.

இருவரும் சிரித்துக்கொண்டே உள்ளே போனார்கள்.

“நிர்மலாவோட சிநேகிதி வீட்டிலயே டி•பன் காப்பி யெல்லாம் ஆயிடிச்சு. அதனால இப்ப எதுவும் வேண்டாம்.”

பிறகு, “ஸ்ஸ்ஸ்..  ..  .. அப்பாடா!” என்றவாறு சோமசேகரன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து காலணிகளைக் கழற்றினார்.

சற்றுப் பொறுத்து, “சாரதா! இவளோட சிநேகிதி கதையைக் கேட்டியானா நீ அப்படியே உருகிப் போயிடுவே,” என்றார்.

“சொல்லுங்க.”

“சகுந்தலான்னு பேரு. அந்த சகுந்தலாவுடைய அம்மா ஏதோ ஒரு ஓட்டல்ல டான்ஸ் ஆடிக்கிட்டு இருந்தாங்களாம்.. அவ ஒண்ணும் தானா விரும்பி அந்த டான்ஸ் தொழிலை ஏத்துக்கிட்டது கிடையாது. ஒரு இக்கட்டான சந்தர்ப்பம், தவிர்க்க முடியாத சூழ்நிலை!”

“அப்படி என்ன இக்கட்டாம்? என்ன தவிர்க்க முடியாத சூழ்நிலையாம்?”

“அது ஒரு சோகக் கதை. அந்தம்மா முதல்ல அந்த ஓட்டல்ல வெறும் ரிசப்ஷனிஸ்ட்டாத்தான் வேலைக்கு அமர்ந்திருக்குது. முத மாசச் சம்பளம் வாங்குறதுக்குள்ள அவ புருஷனோட கம்பெனியை ஏதோ தொழிலாளர் பிரச்னையினால மூடிட்டாங்களாம். அந்த அதிர்ச்சியில அவருக்கு மூளையில ஒரு கட்டி வந்திரிச்சு. ஆப்பரேஷனுக்கு அம்பதாயிரம் போல ஆகும்னிருக்காங்க. அந்தப் பொண்ணு கையில ஒரு நயா பைசா கூட கிடையாது. அது என்ன பண்ணும்? ஓட்டல் முதலாளி கிட்ட முன் பணமாக் கடன் கேட்டிருக்கு. ஒரு மாசச் சம்பளம் கூட இன்னும் வாங்காத ஒரு பொண்ணுக்கு எவன் அம்பதாயிரம் தருவான்? அவன் ஒரு பொறுக்கியாம். அதெல்லாம் அந்தப் பொண்ணுக்குத் தெரியாது. அவன் நீட்டின வெள்ளைத்தாள்ல கையெழுத்துப் போட்டுக் குடுத்திருக்கு..”

“ரிசப்ஷனிஸ்ட்னா படிச்ச பொண்ணாத்தானே இருந்திருக்கணும்? வெள்ளைத் தாள்ல கையெழுத்துப் போடுன்னா, போட்டுட்றதா?”

“ஊருக்குப் புதுசு. அப்பா, அம்மாவோட விருப்பத்துக்கு விரோதமா காதல் கல்யாணம் கட்டிக்கிட்ட பொண்ணு. வெள்ளைத் தாள்லதான் கையெழுத்துப் போடணும், அப்பதான் அம்பதாயிரம்னு முதலாளி சொன்னா, அது என்ன பண்ணும்? பாவம்! புருஷன்காரன் உசிருதான் பெரிசுன்னு போட்டிடிச்சு. ஆப்பரேஷன்ல புருஷன் போயிட்டான். வெள்ளைத்தாள்ல அவ பதினஞ்சு வருஷத்துக்கு அந்த ஓட்டல்ல காபரே டான்ஸ் ஆடணும்னு முதலாளி ஒப்பந்தம் எழுதிட்டான். ஓட்டல் நிர்வாகமே அவளுக்குக் காபரே கத்துக்க ஏற்பாடும் பண்ணியிருக்கு. கைக்குழந்தையோட தப்பி ஓடப் பாத்திருக்கு அந்தப் பொண்ணு. அவன் கையும் மெய்யுமாப் பிடிச்சு ஹவுஸ் அரெஸ்ட் மாத்¢ரி அவளை வெச்சுட்டான். சுருக்கமா, அவ வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு .. என்னன்னு சொல்றது.. ..   “

“புரியுது. மேல சொல்லுங்க.”

“ஆனா தன்னோட பொண்ணு மேல தன்னோட நிழல் கூடப் படக் கூடாதுன்ற வைராக்கியத்தோட அந்தம்மா தன் சிநேகிதி கிட்ட மகளை ஒப்படைச்சுட்டு மகளை விட்டுப் பிரிஞ்சு போயிடிச்சாம்.. அப்படியும்,   நிர்மலாவோட சிநேகிதி ஒரு காபரே ஆட்டக்காரியோட மகள்ன்றது அவளோட புருஷன் வீட்டுக் காரங்களுக்கு எப்படியோ தெரிஞ்சு போயிடிச்சாம். அதனால அந்தப் பொண்ணைத் துரத்தி யடிச்சுட்டாங்களாம்.”

“என்னங்க, அநியாயமா யிருக்கு! அவளோட அம்மா செஞ்ச தொழில் தப்பானதுன்னே ஒரு பேச்சுக்கு வச்சுக்கிட்டாலும், அதுக்கு அந்தப் பொண்ணு என்னங்க பண்ணுவா? அந்தப் பொண்ணே காபரே ஆட்டக்காரியா இருந்து, அதை மறைக்கவும் செஞ்சிருந்தா, ‘ஏன் மறைச்சே?’ ன்னு அவளைக் கேக்கலாம். அது ஒரு விதத்துல நியாயம். அது கூட, என்ன மாதிரி ஒரு சூழ்நிலையில அது அப்படி ஒரு தொழிலைப் பண்ணும்படி ஆச்சோ? தொலை தூரத்தில நின்னுக்கிட்டு யாரையும் விமர்சனம் பண்ணக்கூடாதுங்க. தப்பு!”

சோமசேகரனின் விழிகளும் நிர்மலாவின் விழிகளும் கணம் போல் பொருள் பொதியச் சந்தித்துப் பிரிந்தன.

“சாரதா! உனக்கு நல்ல, பக்குவப்பட்ட மனசு. பிறத்தியாருடைய உணர்ச்சிகளை, அவங்க இடத்துல உன்னை வெச்சுப் பாத்து, நல்லாவே புரிஞ்சுக்குறே! பெத்த மகளோட கல்யாணத்தைக்கூட அவளால பார்க்க முடியல்லே, அதிலே கலந்துக்க முடியல்லேன்னா, அது எப்பேர்ப்பட்ட கொடுமை!”

சாரதா புன்னகையுடன் சட்டென்று எழுந்தாள். தொலைக்காட்சிப் பெட்டியருகே போய் வி.சி.ஆரின் பொத்தானை இயக்கிவிட்டு, “அப்படி யெல்லாம் இல்லீங்க. கல்யாணத்துக்கு அவங்க வந்திருந்தாங்க!” என்று கூறிய பின் நகர்ந்து நின்றாள்.

சோமசேகரனும் நிர்மலாவும் திகைத்துப் போய்ப் பார்வைப் பரிமாற்றம் செய்துகொண்டார்கள்.

சாரதா ஏற்கெனெவே நிலைப்படுத்தி வைத்திருந்த ஒரு காட்சி அப்போது அதில் தெரிந்தது. சகுந்தலா தன் சேலை முக்காடு முழுவதும் அகல, கறுப்புக்கண்ணடியும் நழுவ, தன் கழுத்திலிருந்து சங்கிலியை எடுத்துக்கொண்டிருந்த காட்சி! சாரதா அதை அப்படியே விட்டுவிட்டு சோபாவுக்குத் திரும்பி வந்து உட்கார்ந்தாள். சோமசேகரன் திகைத்துப் போய் நிர்மலாவை நோக்கிய பின், அசடு தட்டிப் போய்ச் சாரதாவைப் பார்த்து விழித்தார்.

‘உ  உ  உ..  .. .. உனக்கு எப்படித் தெரிஞ்சிச்சு?”

“இன்னைக்கு மத்தியானம் ஒரு •போன் கால் வந்திச்சு. அர்ஜுன்னு பேரு சொன்னான். அவன் தான் எல்லாத்தையும் சொன்னான். ‘அந்தம்மா உங்க வீட்டுக் கல்யாணத்துக்குத் திருட்டுத்தனமா வந்து போச்சு’ ன்னு சொன்னான்..  முக்காடு போட்டு, கறுப்புக்கண்ணாடியும் போட்டுக்கிட்டு வந்திச்சுன்னும் நிர்மலாவுக்குக் கழுத்துச் சங்கிலியைக் கழட்டிக் குடுத்திச்சுன்னும் அவன் தான் சொன்னான். ‘எனக்குக் காதுல சரியா விழல்லே. நீ வீட்டுக்கு வந்தாத் தெளிவாப் பேசலாம். வாயேன்’ அப்படின்னேன். ‘உங்க வீட்டுக்காரர் இல்லாத நேரமாப் பாத்து வர்றேன்’ அப்படின்னான். ‘எங்க வீட்டுக்காரர் இல்லாத நேரம் பாத்து நீ வர முடியாதுப்பா. என்னோட மச்சினரு இந்த ஞாயித்துக்கிழமை வர்றாரு. அப்ப வந்தியானாத்தான் எனக்கு வசதியா யிருக்கும். எங்க வீட்டுக்காரரும் மச்சினரும் உன்னை அழுத்திப் பிடிச்சுப்பாங்க. அப்பதானே பழுக்கக் காய்ச்சின இரும்புக் கரண்டியால உன்னோட உடம்புல அஞ்சாறு இடத்துல என்னால சூடு இழுக்க முடியும்? நீயே சொல்லு. நான் பொம்பளை! தனியா அந்தக் காரியத்தைச் செய்ய முடியுமா?’ அப்படின்னேனா? ட்க்னு •போனை வெச்சுட்டான்..  ..  ..”

சோமசேகரன் பெருமையுடனும் வியப்புடனும் சாரதாவைப் பார்த்தபடி புன்சிரிப்புடன் அமர்ந்திருந்தார். ‘இன்னைக்கு ஒரு பரபரப்பான சமாசாரம் நடந்திச்சு’ என்று சாரதா சொன்னது அதைத்தான் என்று புரிந்துகொண்டார். நிர்மலாவோ, “அத்தை!” என்று கூவினாள். அந்த ஒற்றைச் சொல்லே அவளுள் பொங்கிய உணர்ச்சிகள் அனைத்தையும் வெளிப்படுத்தப் போதுமானதாக இருந்தது. அவள் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

“சந்தோஷமான நேரத்துல எதுக்கும்மா கண் கலங்குறே?” என்ற சாரதா கை நீட்டி அவள் கண்ணீரைத் துடைத்தாள். இதனால் அளவு கடந்த உணர்ச்சிகளுக்கு ஆட்பட்ட நிர்மலா திரும்பி அப்படியே சாரதாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். சாரதா நிர்மலாவின் முதுகை வருடினாள்.

சோமசேகரன் மிக விரைவாக எழுந்து  அலமாரியில் இருந்த காமிராவை எடுத்து மாமியாரும் மருமகளும் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை யொருவர் தழுவி அமர்ந்திருந்த அரிய காட்சியை –  எந்தக் குடும்பத்திலும் காணக் கிடைக்காத நம்ப முடியாத காட்சியை – நிழற்படம் பிடிக்க அதைப் புன்சிரிப்போடு இயக்கினார்!

(முடிந்தது)

Series Navigationதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவுபெரியவன் என்பவன்தினம் என் பயணங்கள் – 8திண்ணையின் இலக்கியத்தடம் – 25தொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றிசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​மருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )கவிதையில் இருண்மைவழக்குரை காதைமனத்துக்கினியான்ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லைவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3பிச்சை எடுத்ததுண்டா?‘காசிக்குத்தான்போனாலென்ன’வலிமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்எழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *