தினம் என் பயணங்கள் -9

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

மனம் விசித்திரமானது, அதனைத்​ தேடி வந்து தா​ங்கி​த்​ தாபரிக்கும் எண்ணங்கள் பொறுத்து அதன் தொடர் இயக்கமானது நிகழ்கிறது. அந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது, எங்கே போகப் போகிறது. மனம் தனக்குள்ளே எண்ணங்களை தோற்றுவித்து தோற்றுவித்து பின் அழித்துக் கொள்கிறதா? மனம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதற்கு உருவமும், நிறமும், மணமும் இருக்கிறதா? தொடர்க் ​கேள்விகளின் அடுக்கடுக்கான பயணத்தோடே இன்றைய என் பயணமும் தொடர்கிறது.

 

“இந்த பிளாஸ்டிக் டப்பாவை மாத்திட்டுவா, இப்படியா ஏமாத்துவாங்க, எங்களை ஏமாத்தினா பரவாயில்ல, உன்னையுமா?” வினாவோடே நான் நேற்று (04.02.2014) வாங்கிய பிளாஸ்டிக் டப்பாவை என் சைக்கிள் கூடையில் போட்டாள்.

ஏமாற்றுவதாக எண்ணியிருப்பார்களா என்று தெரியவில்லை. நட்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கமாக இருந்திருக்கும். கவனிக்காமல் விட்டு விட்டாலோ! திரும்ப எப்படி​ப்​ போவது என்று தயங்கினாலோ அது அவர்கள் நட்டபடாமல் இருக்க உதவுமே! (இப்படிப்​பட்ட தயக்கங்கள் அநேக முறை எனக்கு ஏற்படுவது உண்டு.)

 

இளம் வெயிலின் நிறம் ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஒரு இளம் பெண் தன் கணவனின் கரத்தைப் பற்றியபடி அவனை அ​ணை​த்தவாறு நடந்து கொண்டிருந்தாள். அத்தனை பெருமிதமும் மகிழ்ச்சியும் அந்த முகத்தில்! அவனுக்கும் தான். இது இப்படியே நீடிக்க வேண்டும் என்று இயல்பாகவே ஒரு எண்ணம் வந்து கடந்தது மனதில்.

 

கௌரி வேக வேகமாய் நடந்து கொண்டிருந்தவள், நான் அவளை கடந்த போது, “என்னப்பா இப்ப தான் ஆபிஸ் போறீங்களா?” என்று வினாவோடு சைக்கிளின் கூடையைப் பற்றியபடி எனக்கு இணையாக நடந்தாள். அவளும் ஒரு மாற்றுத் திறனாளி. முதுகு கூன் போட்டிருந்தது. நன்றாக நடந்தாள். கைகளும் நன்றாக இருந்தன.

 

“உங்கள் கணவர் எப்படி இருக்கிறார்” என்றேன். “கணவரா?” என்று புருவம் உயர்த்தியவளை ஸாரி தவறுதலாகக் கேட்டுவிட்டேன் என்று கூறி அதை விட்டு விட முனைந்தேன்.

 

“வீட்ல அந்த பேச்சு வந்ததுபா நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் அவளாக.

 

ஆனால் அன்றொரு நாள் தன் கணவனைப் பற்றியும் அவன் உபசரணைகள் பற்றியும் பொதுவில் அவள் சொன்ன கதைகள் நினைவுக்கு வரப் புன்னகைத்துக் கொண்டேன். தாலி போன்ற சரடு செயின் தான் அணிந்திருந்தாள் அவள். அதை அவளின் பாதுகாப்பாக நினைத்திருக்கலாம். அந்த கதையும் அவள் பாதுகாப்புக் கருதி சொல்லப்பட்டதாக இருக்கலாம். நானும் இதுபோல ஜாக்கிரதை உணர்வோடு சில கதைகளை கட்டவிழ்ப்பது உண்டு. உள்ளதை உள்ளபடிச் சொன்னால் துணை யின்றி வாழும் பெண்ணிற்குச் சமுதாயத்தில் மதிப்பில்லை. அவள் மாற்றுத் திறனாளியாக மட்டும் இருந்தால் தான் என்ன?

 

விடைபெற்று இருவரும் அவரவர் அலுவலகத் திசைநோக்கி கடக்க! வந்து விழுந்த வணக்கங் களுக்கு நான் தகுதியானவள்தானா என்ற வினாவும் எழுந்தது. இந்த வணக்கங்கள் அவரவரின் தேவைக்காக வந்து விழுவது. ஒரு வேளை அந்த தேவை குறித்த நேரத்தில் பூர்த்தி செய்ய இயலாத போது கூனிக் குறுகி நிற்க வேண்டியிருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

 

அனுபவம் நல்ல பாடம். மக்கள் தங்கள் சுயத்தை மட்டுமே கருத்தில் கொண்டிருப்பவர்கள். நான் மற்றவர் பற்றி நோக்குமிடத்து என்னைக் குறித்து யாரும் கவலைப்படாத போது ஏன் என்றொரு கேள்வி வந்துவிடுகிறது மனதில், ஏன் நான் கொஞ்சம் சுயநலமாக இருக்கக் கூடாது?

 

எங்கே தவறு செய்கிறேன்! நேரத்தை விரயமாக்குகிறேன், அன்போடு அறிவு பலமும் வேண்டும், சமயோசிதமும் புத்திசாலித்தனமும் வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். அதிகாரிகளுக்கு அடிமை அல்லவே!  உள் நுழைந்த போதே, என்ன லேட் என்றவரிடம் ஆன்லைன் அப்ளிகேஷன் பிரிண்ட் எடுத்து வந்தேன் என்று சொல்லியபடி என் இடத்தில் போய் அமர்ந்தேன்.

ஒருவன் வந்தான்.  அவன் குடித்திருந்தான் போலும்.

“என் ஐடி கார்ட் எங்க மேடம் ?” என்றான்.

ஹலோகிராம் வரல அதனால லேமினேட் பண்ண முடியல, வந்ததும் லேமினேஷன் போட்டுத் தருவாங்கன்னு சொன்னேன்.

“எத்தனை நாள் டீ வாங்கிக் குடிச்சிருப்ப என் கையால ?” என்றான் அவன்.

அது என்னைக் காயப்படுத்தியது,

“நீ போட்டிருக்க மாட்ட,” என்றான்.

 

“ஐடி கார்ட் நம்பர் தாங்க,” என்று கேட்டு வாங்கி செக் செய்து பார்த்த போது, ஏற்கனவே தட்டச்சு செய்து அனுப்பியிருப்பது தெரிய, “போயிடுச்சு, ஆர்டிஓ கையெழுத்துக் கூட ஆயிடுச்சு, வந்துரும்ன்னு,” சொன்னேன்.

 

“இல்ல நீ இப்பதான் போட்ட,” என்றான்.

 

“குடித்துவிட்டால் எதுவும் பேசலாமா? போ வெளியே,” என்று கத்த தோன்றியது. தேர்தல் நேரம் இது பெரிய கலவரமாகலாம்.

 

“என் கையால டீ வாங்கி குடிச்சே,” என்றான்.

 

எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. டீ வாங்கப் பணம் கொடுத்து அனுப்பினேன். எத்தனை முறை டீ கடைக்காரருக்கு போன் செய்து எடுக்காத பட்சத்தில், “பிரதர் எனக்கு ஒரு டீ வாங்கி வாங்களேன்…  நீங்களும் ஒரு டீ குடிச்சுடுங்க,” என்றபடி கொடுக்கப்பட்ட 20 ரூபாயின் தொடு உணர்வு என் கைகளில்.

 

“உன் கிட்ட ஓசி வாங்கிக் குடிச்சேனா ?” என்றேன். சத்தத்தை அதிகப்படுத்தாமல், பல்லிடுக்கில். டீ குடிக்கும் ஆவலை தடுத்துப் போட்டது இன்றைய நிகழ்வு.

 

இந்த இடம் பணம் புழங்கக் கூடியது. என் தன்மானத்தை அடிக்கடி காயப்​படுத்துகிறது. இந்த வேலையைத் தூக்கி யெறிந்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் முதல் முறையாக என்னுள் எழுந்தது. இந்த வாக்காளர் அடையாள அட்டையைத் தயாரிக்கும் பணியை நான் மனநிறைவோடு செய்தேன். இந்த பணியில் அநேகருக்கு உதவும் வாய்ப்பிருந்தது எனக்கு. ஆனால் உடனுக்குடன் செய்து தர இயலாத நிலை.

தினமும் கையில் புழங்கும் பணம் அரசாங்கத்தினுடையது என்னும் போதும், மக்கள் பார்வையில் நான் வாங்குவதாகவே தோன்றுவதை மாற்ற இயலவில்லை. லஞ்சம் வாங்குவதும், லஞ்சம் கொடுப்பதும் தவறு என்று விளப்பரப்படுத்தியபடி லஞ்சம் வாங்கும் மேல் அதிகாரிகளை யாரும் கண்டு கொள்வதில்லை. இலகுவில் கைக்கெட்டும் தூரத்தில் நான்… அவர்கள் மனதில் பட்ட ஏதோ ஒன்றை வசைப்பாடிச் செல்லலாம் அப்படியே!

அவனே தான் இன்றும் வந்திருந்தான் (18.03.2014) குடிக்காமல்.  அதே பதிலைச் சொன்னேன், ஏன் எதற்கு என்ற கேள்வி எழுப்பாமல் கடந்து போய் விட்டான். அவனுக்கு முகமில்லை என்னோடு பேச!

யாரிடமும் எந்த உதவியும் வாங்காமல் வாழப் பழக வேண்டும். ஏதோ ஒரு தருணத்தில் அவர்கள் சொல்லிக் காண்பித்துவிட்டால் அப்போது சுட்டுச் செல்லும் தன்மான உணர்வில் இருந்து தப்பிக்க இயல வில்லை என்னால்.

ஆன்லைன் அப்ளிக்கேஷனை டைப் செய்து முடித்த போதுதான் மேல் அதிகாரி வந்து நின்றார் அருகில், என்ன என்பது போல் பார்த்தேன்! எப்படியோ வேலை செய்யாம ஏமாத்திட்ட என்று சொன்னவருக்கு! இல்லை ஸார் 5 வருடங்களுக்குப் பிறகு விழித்துக்கொண்டேன். என் வேலை யின் எல்லையை உணர்ந்திருக்கிறேன் என்றேன்.

“உனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை நாளைக்கு தந்துர்ரேன் மா,” என்றார்.

நன்றி! அப்படி இருந்தாலும், இனி இரவில் வேலை செய்யப் போவதில்லை ஸார், எனக்கு வேறு பணிகள் இருக்கின்றன என்ற போது, அவர் புன்னகைத்தார். அந்த புன்னகை எதைச் சொல்கிறது என்று யோசித்த படி சாலையில் கலந்தேன்.

கருவாட்டின் மனம் நாசியை இம்சித்தது. காற்றில் அத்தனை தூசியை கலந்து விட்ட முகமறியா உருவமில்லா அந்த விசையைத் திட்டிக்கொண்டேன்.​ ​

கருவாடும் மலர்களும் அருகருகில். கருவாடு வித்தவளே மலர்களைத் தொடுத்துக் கொண்டிருந்தாள். ஏனோ மலரின் மணம் நுகர முடியாமல் போயிருந்தது அங்கு.   துர்நாற்றம் நறுமணத்தை ​ஏனோ ​விழுங்கி விடுகிறது !

கர்ப்பிணி மனைவிக்குப் பூச் சூடிக்கிகொண்டிருந்த கணவனை மெச்சிக் கொண்டேன். இப்படியே இருக்கட்டும் ஆயுசுக்கும் என்று தோன்றியது. மனைவி கர்பிணியைாய் இருக்கும் போது ஆணுக்கு எத்தனை பெருமிதம். மெல்ல தரை கவிழ இறங்கும் இருளைப் பார்த்தபடியே கடந்து போகிறேன் என் இருப்பிடத்திற்கு.

 

[தொடரும்]

 

++++++++++++++++++++++++

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *