[கடந்த பிப்ரவரி மாதம் (16) விருத்தாசலத்தில் நடைபெற்ற திரு வே.சபாநாயகத்தின் 80வது அகவை விழாவை முன்னிட்டு வெளிவந்த மலருக்கு எழுதிய கட்டுரை. கவிஞர் பழமலய் முன்னின்று நடத்திய விழாவில் திரு.வே.சா.வின் நண்பர்களும், மாணாக்கர்களும், எழுத்தாளர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர்]
“கணினி பயன்பாட்டிலொன்று வணக்கத்திற்குரிய திரு வே.சபாநாயகம் அவர்களை எனக்குத் தெரியவந்தது. இக்கட்டுரையை எழுதும் தருணம் வரை அவரை பார்த்ததில்லை ஆனால் பருவப் பெண்கள்(அந்தநாள்) வீட்டில் கதவை அடைத்துக்கொண்டு தொடர்கதை வாசித்த ஆர்வத்துடன் அவரது எழுத்துக்களை நிறைய வாசித்திருக்கிறேன். அவ்வெழுத்துகள் விதைகளாக என்னுள் விழுந்து முளைத்து வரித்துக்கொண்ட வடிவத்தை அவரை நேரில் காண்கிற நாளில் உறுதிபடும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது. “யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்; யார்க்கும் அன்பனாய், யார்க்குமினியனாய்’ வாழ்ந்திடவேண்டி பாரதிகேட்ட வரத்தை இவரும் கேட்டிருக்கவேண்டும் என்ற மெலிதான ஊகமும் என்னிடத்தில் உண்டு. கட்டுரைதானே என எழுத உட்கார்ந்தால், மனிதர் வாமணன் போல பிரம்மாண்டமாக நிற்கிறார், அவரை அளப்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பது விளங்கிற்று. கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், நாவல், ஓவியம், விமர்சனம், பயணக் கட்டுரையென கலை இலக்கியத்தின் அத்தனை முகங்களோடும் அவருக்கு பரிச்சயம் இருக்கிறது, ஆற்றலுடன் அவற்றைக் கையாளவும் தெரிந்திருக்கிறார். எளிமையாய், இயல்பாய், பாசாங்கையும் தளுக்கையும் தவிர்த்து அவர் படைப்புகள் தென்திசைக் காற்றாய் நம்மைத் தாலாட்டும், அதிகாலை ஆண்டாள் பாசுரம்போல இதமாய் நெஞ்சில் பரவும். நிழல்போல அவரைத் தொடரும் பெருமைகளை அவரே அறிவாரா என்கிற கேள்விகூட எனக்குண்டு. ஒவ்வொருமுறையும் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் அவரை நான் சந்தித்க வேண்டும் என நினைப்பேன். இரண்டுகிழமைகளுக்கு மேல் பெரும்பாலும் இந்தியாவில் தங்குவதில்லை, குறுகிய காலமும், சொந்த பிரச்சினகளும் பல நல்ல படைப்பாளிகளைத் தேடிச்சென்று சந்திக்கிற வாய்ப்பினை எனக்கு நல்குவதில்லை. எழுத்தூடாக மெல்லமெல்ல நெஞ்சுக்குள் செதுக்கி வைத்திருக்கிற சிற்பம், சம்பந்தப்பட்டவரை நேரில் காண்கிறபோது உடைந்து சிதறிவிடும் அபாயமும் இருக்கிறது. அபூர்வமாக ஒரு சிலரே அதில் தப்பி எனது கற்பனை வடிவை நேர் செய்திருக்கிறார்கள். தவிர தல்ல எழுத்துகளின் இருப்பும் வெளிச்சமும் வெகு எளிதாகக் கவனத்தை பெறுபவை, இரு உள்ளங்களின் இணைப்பிற்கு அதுபோதும், சம்பிரதாய உரையாடல்களும் சந்திப்புகளும் அவசியமற்றவை என நினைப்பவன் நான் (திரு. வே.ச. என்னை மன்னிப்பாராக).
பள்ளி பருவத்திலேயே, இட்டுக்கட்டுவதில் அவர் தேர்ந்தவராம் தனது ‘நான் ஏன் எழுதுகிறேன்’ கட்டுரையில் தெரிவிக்கிறார். ஐந்தாம் வகுப்பு படிக்கிறபோது சிதம்பர கும்மியை’ ஒட்டி நவராத்திரியை முன்னிட்டு, சகதோழர் தோழியருக்காக உள்ளூர் கோவிலைவைத்து ‘நாலுபுரத்திலே ஒரு கோபுரமாம் அதன் நடுவிலும் ஒரு கோபுரமாம் என்று பாடல் எழுதியதும், எட்டாம் வகுப்பு படிக்க்கிறபோது நாடக நடிகரான உள்ளூர் நண்பருக்காக திரைப்பாடல் மெட்டில் கோடைகாலத்தை மையமாகக்கொண்டு நகைச்சுவையாக ஒரு பாடலை எழுதியதும் கவனத்திற்கொள்ளவேண்டியவை:
“எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
வெண்ணையா உருகுதே
என்னைக்குத்தான் கோடைகாலம்
போகுமிண்னு தோணுதே!
தண்ணித் தண்ணி யிண்ணு
தவியாத் தவிக்குதே
தாகத்துக்கு ஐஸ் போட்ட
ஆரஞ்சுண்ணு கேக்குதே!’
என்று எழுதிக் கொடுத்தேன்.”
இப்பாடலை அவர் நண்பர் மேடையில் பாடியபோது பயங்கர கைத்தட்டல் கிடைத்ததென்கிறார். எனக்கும், பிறந்து வளர்ந்ததெல்லாம் தென்னாற்காடு மாவட்டம் என்பதால் இதுபோன்ற பாடல்களுக்கு எத்தகைய வரவேற்பிருக்கும் என்பதையும் அறிவேன். ஆனால் இங்கே அது முக்கியமல்ல தமிழில் பன்முகப்பட்ட படைப்பாளியாக பின்னாளில் அவர் அறியப்பட இதுபோன்ற தொடக்கங்களுக்கு பங்கிருக்க முடியுமா? என்ற வினா முக்கியம். பிற துறைகள் எப்படியோ, கலை இலக்கியத்தை பொருத்தவரை ஒருசிலர் குருதியில் அதற்கான ‘உயிரி’ பிறப்பிலேயே இருக்கிறது என நம்புகிற பலரில் நானும் ஒருவன். அதனை ஓர் தற்செயல் நிகழ்வாக காணவில்லை, இயல்பாக அவருக்குள் இருந்த அந்த ஊற்று கசிந்திருப்பதைத்தான் சம்பவம் தெரிவிக்கிறது.. இக்கசிவு உடன் படித்த ஒர் இருபது மாணவர்களில் நான்கைந்துபேர்களுக்கு மட்டுமே ஏன் நிகழ்ந்தது என்ற கேள்வியை முன்வைத்தால் நமக்குப் பதில் கிடைக்கலாம். ஆனால் அந்த நான்கைந்துபேரில் பின்னாளில் வே.சபாநாயகர் போன்று இரண்டொருவர் மட்டுமே எழுத்தையோ, ஓவியத்தையோ அல்லது இதுபோன்ற வேறு ஒன்றிலோ இறுதிவரை நாட்டத்துடன் செயல்படுகிறார்கள். அந்த நாட்டத்தை, அவர்களின் அந்த ஓயா ஆர்வத்தை நீரூற்றி உரமிட்டு வளர்க்க அதிட்டவசமாக சில நன்மக்கள் அமைந்துவிடுகிறார்கள்.
அப்படியொருவர் நமது வே.சபாநாயகத்திற்கும் கிடைத்திருக்கிறார், பெயர் சாம்பசிவ ரெட்டியார். அவரை திரு வே.ச. உணர்ச்சிப்பெருக்குடன் நினைவுகூர்கிறார். பத்தாம் வகுப்புவரை உரைநடையில் ஆர்வம் இல்லாதிருந்த நம்து வே.சபாநாயகத்திற்கு பள்ளியிற் புதிதாய்ச்சேர்ந்த தமிழாசிரியர் வருகை அத்தகைய ஆர்வத்தைத் தருகிறது. பள்ளியில் வெளிவந்த ‘கலைப்பயிர்’ என்ற கையெழுத்துபிரதிக்கு, கதையொன்று எழுதச்சொல்லி ஆசிரியர் கேட்கிறார். தனது திண்ணைபள்ளி அனுபவத்தையும் அதன் ஆசிரியரையும் கருவாகக் கொண்டு ‘திண்ணை வாத்தியார்’ என்ற கதையொன்றை எழுதி ஆசிரியரிடம்கொடுக்க அதனை ‘கலைப்பயிர்’ இதழில் பிரசுரித்ததோடு, சாம்பசிவ ரெட்டியார் வே.சபாநாயகத்தை, அந்நாளில் நாடறிந்த எழுத்தாளர்களில் ஒருவரான நாரண துரைக்கண்ணனின் ‘ஆனந்த போதினி’க்கு கதையொன்றை அனுப்பிவைக்குமாறு தூண்ட, மாணவர் வே.ச.வும் அனுப்பிவைத்த கதை பிரசுரிக்கப்பட, பள்ளிபருவத்திலேயே புனைகதை எழுத்தாளர் தகுதியை எட்டுகிறார். தமிழில் இன்று பரவலாக அறியப்பட வே.ச.வின் பிறவி ஞானம், ஆர்வம் இவை இரண்டையும் தவிர்த்து, அவரை வெளி உலகு கண்டுகொள்ள காரணமாக இருந்த திருவாளர்கள் சாம்பசிவ ரெட்டியாரையும், நாரண துரைக்கண்ணனையும் வே.ச. போலவே நாமும் மறக்கமுடியாது. ஏனெனில் இது வெ.ச.விற்கு விளைந்த நன்மைமட்டுமல்ல, ‘வே.சபாநாயகம் என்ற படைப்பாளியை அளித்து தமிழுக்கும் அவர்கள் நன்மை செய்திருக்கிறார்கள்.
“என் முதல் கதை பிரசுரமாகாதிருந்தால் நான் தொடர்ந்து எழுதியிருக்க மாட்டேன். ஆரம்ப காலத்தில் நாரணதுரைக்கண்ணன் அவர்களும், எஸ்.எஸ்.மாரிசாமி அவர்களும் என் எழுத்தை அங்கீகரித்து அவர்களது ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன், இமையம், பேரிகை ஆகியவற்றில் தொடர்ந்து பிரசுரித்ததால் நம்பிக்கை வளர்ந்து பின்னர் வணிக இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதினேன்.” இது வே. சபாநாயகம் “நான் ஏன் எழுதுகிறேன்” என்ற கட்டுரையில் தரும் வாக்கு மூலம்.
வே.ச.வும் எழுத்தாளர் சந்திப்பும்.
திரு. வே.ச. அவர்களின் ‘ எனது இலக்கிய அனுபவங்கள், தமிழ் படைப்புலகம் ஆவணப்படுத்தவேண்டியவை. தமிழ்புனைகதை உலகில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்கள் அத்தனைபேருடனும் சந்திப்பை நிகழ்ந்திருக்கிறது. அச்சந்திப்பு மகிழ்ச்சியும், சிலிர்ப்பும், கசப்பும், கோபமும் என்கிற பன்முகப்பட்ட கதம்ப அனுபவங்களை அவருக்குத் தந்திருக்கின்றன. இயலுமெனில் இன்னும் விரிவாக அவற்றை எழுதவேண்டும். கடந்த காலத்தில் தமிழில் செயல்பட்ட அனைவரையும் விரும்பியோ எதிர்பாராமலோ உரையாடுகிற வாய்ப்ப்பினை அவருள் காலம்காலமாய் கனிந்துகொண்டிருக்கும் இலக்கியத் தீகங்கு ஏற்படுத்தி தருகிறது. கி.வ.ஜ,, அகிலன், மௌனி, வாசன், சி.மணி, ஜெயகாந்தன், அசோக மித்திரன் என ஒரு பெரிய பட்டியல் அது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள். நமக்கும் அன்னார்பற்றிய முழுமையான சித்திரம் கிடைத்துவிடுகிறது. சம்பவங்கள் ஊடாக வே.சபாநாயகமும் எத்தகைய மனிதர் என்பதைத் தெளிவாய் புரிந்துகொள்கிறோம். சி.மணியிடம் ‘புதுக் கவிதை புரியவில்லை’எனத் தெரிவிக்கிற துணிச்சலாகட்டும்; அகிலன் சினிமா உலகில் நுழைந்தபோது, “திரை உலகத்தை மின்னுகிற உலகம் என்று எச்சரித்த நீங்களே அந்த மின்னுகிற உலகில் நுழையலாமா?” என்கிற வாஞ்சைகலந்த கண்டிப்பாகட்டும், சேமிப்பையெல்லாம், நிதிநிறுவனமொன்றில் இழந்து தவித்த தி.சு.சதாசிவத்திற்காக கலங்கும் மனமாகட்டும்; திராவிட பாரம்பரியத்தில் வந்த சுரதாவின் ஊத்தை குணத்தைப்பற்றிய நியாயமான பொருமலாகட்டும்; சிதம்பரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நேரத்தில் மௌனியின் ஞாபகம் வர போன இடத்தில், உளநோய்க்கு ஆளாகியிருந்த அவர் மகனைப்பற்றிய உண்மை அறியாமலேயே எதார்த்தமாக விசாரித்து, மௌனியிடம் கிடைத்த விச்ராந்தியான பதிலால் உடைந்து போவதாகட்டும்; பாரதியையொத்து ஜெயகாந்தனுக்குள்ளிருந்த வினோத மனிதனின் தாண்டவத்தை தள்ளியிருந்து இரசிப்பதாகட்டும் வே.சபாநாயகம் ஓர் பாசாங்கற்ற மனிதர் என்பதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள். கணையாழி இதழ் வே.சபாநாயகத்திற்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. எத்தனை பெரிய உழைப்பை நல்கியிருக்கிறார். தமிழருக்குண்டான குணத்தின்படி அரை காயப்படுத்தியபோதிலும், போகிறபோக்கில் வெகு சாதாரணமாக தமது மனக்குறையை பதிவுசெய்கிறபோது வே.ச. மீண்டும் மலைபோல உயர்ந்து நிற்கிறார்.
வே.ச. என்ற விமர்சகர்
தமிழில் நடுநிலையான விமர்சகர்கள் குறைவு. குலம் கோத்திரம் பார்த்து எழுதுகிற விமர்சகர்கள், பதிப்பகங்களுக்காக எழுதுகிறவர்கள், எழுத்தாளர்களின் நச்சரிப்பு தாளாமல் மதிப்புரை எழுதுகிறவர்கள், குழுமனப்பான்மையுடன் விமர்சிப்பவர்கள், தங்கள் இருப்பைக் காப்பாற்றிகொள்ள பிறரை நிராகரிக்க விமர்சிப்பவர்கள் என்றெல்லாம் நமது விமர்சகர்களை வகைப்படுத்தலாம். நியாயமான விமர்சகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எக்குழுவிலும் தங்களை இருத்திக்கொள்ளாதவர்கள் அவர்களை அறிந்திருக்கிறார்கள். அத்தகைய நடுநிலையான விமர்சகர்களில் நமது வே.சபாநாயகமும் ஒருவர். யுகமாயினியின் இதழ் ஆசிரியர் சித்தன் எனது ‘மாத்தாஹரி’ நாவலுக்கு வே.ச.விடம் மதிப்புரை கேட்க இருக்கிறேன் என்றார். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்கனவே சபாநாயகத்தின் விமர்சனங்களைப்பற்றியும், எக்குழுவும் வேண்டாமென்று ஒதுங்கியிருக்கிற இலக்கிய நண்பர்களிடத்தில் அவருக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் கேள்விப்பட்டிருந்ததாலும் சித்தன் எனக்காக செய்தது உயர்ந்தகாரியம். அம்மதிப்புரை அச்சாகி யுகமாயினி இதழ் எனது கைக்குக் கிடைக்கும்வரை சித்தனிடமோ, மதிப்புரை எழுத முன்வந்த திரு.வே.சபாநாயகத்திடமோ தொடர்புகொள்ளவில்லை. விமர்சனம் வந்தபோது எனது மகிழ்ச்சிக்கு அளவில்லை. திரு வே.ச. நூலை வாஞ்சையோடு பாராட்டியிருந்தார். இன்றைக்கு ஓரளவிற்கு நான் நன்கு அறியப்பட்டிருப்பதற்கு திரு.வே.சபாநாயகம்போன்றவர்களின் நடுநிலையான பாரபட்சமற்ற விமர்சகர்களே காரணம் என்பதை நன்றியோடு இவ்விடத்தில் நினைவுகூர்கிறேன்.
அண்மையில் புதுச்சேரி நண்பர் ஒருவர், திரு வே.சபாநாயகத்திடம் எங்கள் இதழுக்குக் கட்டுரையொன்று கேட்க இருக்கிறேன், என பேச்சிடையே ஆர்வத்துடன் தொலைபேசியில் தெரிவித்தபோது: “முடிவாகச் சொல்வதானால், என் எழுத்துக்குப் பத்திரிகைகளில் இடம் கிடைப்பதாலும் என்னைச் சுற்றி நிகழ்பவை என்னைப் பாதித்து எழுதத் தூண்டுவதாலுமே எழுதுகிறேன்” என வே.ச. கூறியது நினைவுக்கு வந்தது. பலரின் உண்மையான இத்தேடல்தான், அவரைத் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறதென்பதென் அனுமானம். ஓர் அசுர உரைப்பாளி, இன்றுவரையிலும் எங்கேயேனும் ஏதேனும் ஓயாமல் எழுதிக்கொண்டிருக்கிறார், அது தொடரவேண்டும் என்பதுதான் என்னைப்போன்றவர்களின் பிரார்த்தனை. ‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்’ வாழ பெரியாழ்வார் மொழியில் வாழ்த்தி வனங்குகிறேன்.
———————————————————————
- கருகத் திருவுளமோ?
- ஒரு டிக்கெட்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 69 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – 1
- தினமும் என் பயணங்கள் – 11 எந்திரத்தனம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 52
- பிரான்ஸ் வள்ளுவர் கலைகூடம்.
- மருத்துவக் கட்டுரை – காச நோய்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 27
- நரகம் பக்கத்தில் – 1
- வாழ்ந்து காட்டிய வழிகாட்டி
- திரை விமர்சனம் விரட்டு
- நிகழ்வு பதிவு அன்னம் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன்
- சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி !
- பார்த்ததில்லை படித்ததுண்டு
- சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் (அறிவியல் கட்டுரை)
- பச்சைக்கிளிகள்
- தொடுவானம் 10. தினம் ஒரு குறள்
- ”செல்வப் பெண்டாட்டி”
- திண்ணையின் இலக்கியத் தடம் -29
- நெய்வேலி பாரதிக்குமார் கவிதைகள்
- நீங்காத நினைவுகள் 41
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-28 யாதவர்களின் முடிவு