கொஞ்ச நாள்களுக்கு முன்னால் ஓர் இலக்கிய இதழின் ஆசிரியர் – சிறந்த சிந்தனையாளரும் ஆன்மிகவாதியும், என்னுடைய நண்பரும் ஆன ஓர் எழுத்தாளர் –இன்று எழுதப்படும் திரைப்படப் பாடல்கள் பற்றிய தமது ஆற்றாமையை என்னுடன் பகிர்ந்துகொண்டார். இன்றைத் திரைப்படப் பாடல்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஏன்? கொஞ்சமும் தெரியாது என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் நண்பர்கள் மூலமும், பத்திரிகைகளில் வரும் விமரிசனக் கட்டுரைகளிலிருந்தும் அவ்வப்போது சிலவற்றைத் தெரிந்து கொள்ளூவதுண்டு. அவ்வாறு கேள்விப்பட்ட ஒரு பாடல் –
“கல்யானந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்ல, ஓடிப் போயி கல்யாணதான் கட்டிக்கலாமா?” – இதை எழுதியவர் யாரென்பது தெரியாது.
இது பாடலின் தொடக்கம். மேற்கொண்டு வரும் சொற்களைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. அவை ஒருபுறமிருக்க, அவற்றை விடவும் இத்தொடக்கம் மிகுந்த ஆட்சேபணைக்கு உரியது என்பது அவரது கருத்தாகும். நமது பாரம்பரியத்துக்கும் கலாசாரத்துக்கும் உகந்ததாக இது இல்லை என்று அவர் கூறினார்.. நமது பாரம்பரியம், கலாசாரம் ஆகியவை பற்றிய தெளிவான விளக்கம் சொல்லுவாரில்லை. அப்படி ஏதேனும் இருந்தாலும் அது நடைமுறையில் நம் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகத் தெரியவும் இல்லை. எவ்வெவற்றை நம் பண்டைய கலாச்சாரம் என்று சிலர் இப்போது விளக்குகிறார்களோ அவை எல்லாம் அப்படி அப்படியே காலம் காலமாய்ப் பின்பற்றுப்பட்டு வந்துள்ளதாகவும் தெரியவில்லை.
உதாரணத்துக்கு ஒன்றை எடுத்துக்கொள்ளுவோம். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே நமது கலாச்சாரம்’ என்று எல்லாருமே பெருமையுடன் அறிவிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அப்படித்தான் இருந்து வருகிறதா! ஆன்றோர்களால் அறிவுறுத்தப்பட்டு வந்துள்ள நெறிமுறைகள் வேறு. கலாச்சாரம் வேறு அல்லவா! கலாச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கலைகள், பழக்க வழக்கங்கள், நடவடிக்கைகள் சார்ந்த வாழ்க்கை முறைதானே? அல்லது இந்த முடிவே தவறா? இவையன்றி வேறு எவையேனும் கலாச்சாரம் என்பதில் உள்ளனவா? (சகோதரர் ஷாலி அன்பு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன்.)
கலாச்சாரம் பற்றிய தெளிவான விளக்கம் ஒரு புறமிருக்க, இந்தப் பாடலின் தொடக்க வரிக்கு என்னுடைய நண்பர் ஆட்சேபித்தது சரியா தவறா என்று பார்ப்போம். எடுத்த எடுப்பில் நன்பரின் கருத்தோடு ஒத்துப்போகத்தான் தோன்றியது. எனினும், ஆழ்ந்து சிந்தித்த போது, அவ்வினாக்களில் தவறு ஏதும் இருப்பதாய்ப் படவில்லை.
திருமணம் என்பது மனித சமுதாயத்தின் உன்னத அமைப்பாகும். திருமணம் என்பது வெறும் உடல்கள் சார்ந்த விஷயமாக மட்டுமன்றி, இருமனங்கள் சார்ந்த (அல்லது சேர்ந்த) விஷயமும் கூட என்பதன் அடிப்படையிலேயே அந்த உயர்ந்த ஏற்பாட்டை மனிதன் உருவாக்கினான் என்பது நமக்குத் தெரியும். எனவே காதல் உணர்வால் ஒன்று சேரும் இருவர் அவ்வாறு தாங்கள் சேர்ந்து தம்பதியராகி விட்டதைச் சக மனிதர்களுக்கு அறிவிப்பதில் நிறைய நன்மைகள் உண்டு. (நன்மைகள்தான் உண்டு என்றே சொல்லிவிடலாம்.)
ஆனால், காதலர்கள் ஓடிப் போகத் தீர்மானிப்பது எதனால் என்பதை நாம் யோகிக்கத் தவறுகிறோம். இருதரப்புப் பெற்றோரின் சம்மதமும் காதலர்கள் திருமணம் செய்துகொள்ளக் கிடைக்காததால்தானே! சாதி , அந்தஸ்து ஆகிய இரண்டும்தான் பெரும்பாலும் பெற்றோர்கள் காதலுக்குக் குறுக்கே நிற்பதற்குக் காரணங்கள் ஆகின்றன. தன் மகனோ, அல்லது மகளோ தேர்ந்தெடுக்கும் நபர் சரியான நபராக இல்லாமற் போனால் மட்டுமே பெற்றோர் ஆட்சேபிக்கலாம். அப்படி ஆட்சேபித்தால், அது இயல்பே. நியாயமான கவலையின் விளைவும் கூட. ஆனால், அப்படி மட்டும்தான் நடக்கிறதா? இல்லை.
சாதியும் அந்தஸ்துமே காரணங்கள் ஆகின்றன. இதனால் அவசரம் அவசரமாய் அந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அவர்தம் பெற்றோர் வேறிடத்தில் திருமணத்தை முடிக்க ஏற்பாடு செய்துவிடுகிறார்கள். இதிலிருந்து தப்புவதற்குத்தான் காதலர்கள் ஓடிப்போகிறார்கள். (காதல் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளவர்கள் மட்டுமே இங்கே காதலர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.)
என்னுடைய நண்பர் குறிப்பிட்ட கலாச்சாரச் சிதைவு இதில் இல்லை. ஏனெனில் திருமணம் என்னும் அமைப்பின் உன்னதத்தை இக்காதலர்கள் புரிந்துகொண்டுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். திருமணம் என்கிற ஏற்பாட்டை அவர்கள் தவிர்க்க வில்லையே! ஆட்சேபிப்பவர் களுக்குத் தெரியாமல் கல்யாணத்தை நடத்திகொள்ளும் வசதியும் அவகாசமும் வாய்ப்பும் உள்ளவர்கள் முதலில் அதை முடித்துக்கொண்டு, அதன் பின்னர் ஓடிப் போகலாம் என்று நினைப்பதில் தவறில்லை!
திருமணத்தை உடனுக்குடனாய்த் திருட்டுத் தனமாகச் சிலர் முன்னிலையிலோ அல்லது பதிவு செய்தோ நடத்திக்கொள்ள அவகாசம் இல்லாதவர்கள் முதலில் ஓடிப்போய்ப் பின்னர் மணம் செய்துகொள்ள நினைக்கிறார்கள். இவர்களும் திருமணம் என்கிற அமைப்பை இழிவுபடுத்தவில்லை!
எனவே என்னுடைய நண்பர் குறிப்பிடும் கலாச்சாரச் சீரழிவு இதில் இருப்பதாய்த் தெரியவில்லை!
………
- கருகத் திருவுளமோ?
- ஒரு டிக்கெட்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 69 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – 1
- தினமும் என் பயணங்கள் – 11 எந்திரத்தனம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 52
- பிரான்ஸ் வள்ளுவர் கலைகூடம்.
- மருத்துவக் கட்டுரை – காச நோய்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 27
- நரகம் பக்கத்தில் – 1
- வாழ்ந்து காட்டிய வழிகாட்டி
- திரை விமர்சனம் விரட்டு
- நிகழ்வு பதிவு அன்னம் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன்
- சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி !
- பார்த்ததில்லை படித்ததுண்டு
- சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் (அறிவியல் கட்டுரை)
- பச்சைக்கிளிகள்
- தொடுவானம் 10. தினம் ஒரு குறள்
- ”செல்வப் பெண்டாட்டி”
- திண்ணையின் இலக்கியத் தடம் -29
- நெய்வேலி பாரதிக்குமார் கவிதைகள்
- நீங்காத நினைவுகள் 41
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-28 யாதவர்களின் முடிவு