திரை ஓசை வாயை மூடி பேசவும்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

சிறகு இரவிச்சந்திரன்

மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மானின் தமிழ் திரைப் பிரவேசமாக அமைந்துள்ள படம். கா.சொ.எ. வெற்றிக்குப் பின், பாலாஜி மோகன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இயக்கிய ‘ வாயை மூடி பேசவும்’ அதிக கீறல்கள் இல்லாமல் தப்பித்திருப்பதற்கு பாராட்டுக்கள்.
மலையாளப்படங்களின் பரிச்சயம் இல்லாத தமிழ் ரசிகனுக்கு, துல்கரின் நீள் சதுர முகமும், கோணல் சிரிப்பும் கொஞ்சம் அசுவாரஸ்யமாகப் படலாம். ஆனால் அட்சர சுத்தமாக ( மலையாள வாடை இல்லாமல் ) அவர் தமிழ் பேசுவது நிச்சயம் பேசப்படும். அதிக அலட்டல் இல்லாமல் ( ஓவர் ஆக்டிங்) அவர் நடித்திருப்பது தமிழ் திரைக்குக் கொஞ்சம் புதுசு. வரவேற்பு பெறுவது ரசிகர்களின் கைகளில்.
ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் ( அவர், வீடுகளுக்குச் சென்று பசைக் குப்பிகளை விற்கும், விற்பனை பிராதிநிதி ) துல்கர் ஒன்றிச் செய்திருக்கிறார். போகும் வீடுகளில், அவர் அந்தக் குடும்பத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து, தன் விற்பனையையும் சாமர்த்தியமாக முடிப்பது புன்னகை பக்கங்கள்.
நிச்சயிக்கப்பட்ட காதலனுடன் கல்யாணம் நெருங்கி வரும் வேளையில், தன் உணர்ச்சிகளை வாய்விட்டுச் சொல்லாமல், உள்ளேயே அழுத்தித் தவிக்கும் பெண் பாத்திரத்தில் நஸ்ரியா நஸீம் ஜொலிக்கிறார். அதிலும் கண்ணாடிக்குள்ளிருந்து விரியும் அவரது கண்கள், ஆயிரம் வார்த்தைகள் பேசுகின்றன. சபாஷ்!
‘ரோஜா’ புகழ் மது இதில் அம்மா வேடத்தில் அசத்துகிறார். இரண்டாவது மனைவியாக அடங்கிப் போகும் எழுத்தாளர் பாத்திரத்தில் அவரது அமெரிக்கையான பாவங்கள், ஒரு நல்ல நடிகை மீண்டும் தமிழ் திரையுலகிற்குக் கிடைத்ததைப் பறை சாற்றுகின்றன. மீண்டும் வல வர வாழ்த்துக்கள்.
ஆச்சர்யம் பாலாஜி மோகனின் திரைக்கதை. பேசியே ரீல்களை சாப்பிடும் தமிழ் நடிகர்கள் மத்தியில், இடைவேளைக்குப் பிறகு, வசனமே இல்லாமல் படத்தை நகர்த்தும் தைரியம் அவருக்கு இருக்கிறது. பலே!
புதிய இசையமைப்பாளர் சீயான் ரோல்டன் அசத்துகிறார். பெயர்தான் வெள்ளைக்கார துரைபோல இருக்கிறதே தவிர, பாடல்கள் எல்லாம் அக்மார்க் தமிழ் மணம். பின்னணி இசையிலும் சோடையில்லை. “வாயை மூடி பேசவும் “ என்கிற அறிமுக கோரஸ் பாடலில் ஆரம்பித்து, ஊசியிலைக் காடுகளின் பின்னணியில் ஒலிக்கும் “ கட்டிக்கிட மனசு “ என்கிற காதல் மெல்லிசையில் வேகமெடுத்து, “ உடைகிறேன் இதயத்தின் விரிசலில் “ என்கிற சோகப்பாடலில் சம்மணமிட்டு அமரும் சீயானின் இசை அற்புதம்.
அரவிந்த் ( துல்கர் சல்மான் ) அனாதை. விற்பனை பிரதிநிதியாக இருக்கும் அவன் வாழ்வது பனிமலையில். வசீகரப் பேச்சு ஒன்றே அவனது மூலதனம். பண்பலை நிறுவனத்தில், நிரந்தர ஊழியனாக மாறி, பேச வேண்டும் என்பது அவனது லட்சியம். இன்னொரு பக்கம் அஞ்சனா ( நஸ்ரியா ) அம்மா இறந்தவுடன், அப்பா ( அபிஷேக்) கல்யாணம் செய்து கொண்ட வித்யா ( மதுபாலா ) மீது அவளுக்கு அதிக பாசமில்லை. அவர்களுக்குப் பிறந்த தம்பியின் மீதும் ஒட்டுதல் இல்லை. தான் காதலித்து, கல்யாணம் செய்து கொள்ளப்போகும், காதலன் விதிக்கும் தடைகளைத் தூக்கி எறிய, அவளிடம் தைரியம் இல்லை. உள்ளேயே புழுங்கிக் கொண்டிருக்கிறாள். அஞ்சனா, அரவிந்தை சந்திப்பதும், அவனது இயல்பான நல்ல குணங்களால் ஈர்க்கப்பட்டு அவன் மேல் காதலாவதும் முக்கால் படம்.
பனிமலையை ஒரு வினோத ஊமைக்காய்ச்சல் தாக்க, அரசு உத்திரவின்படி, பேச்சு மூலம் பரவும் அந்த நோய்க்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, அந்த ஊரில் யாரும் பெசக்கூடாது என்று ஒரு தடை. தடையின் போது, கதை மாந்தர்கள் செய்யும் சைகைச் சேஷ்டைகள், காமெடி களேபரத்தை ஏற்படுத்த, கடைசியில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு எல்லாம் சுபமாக முடிவதே க்ளைமேக்ஸ்.
ஊமைக் காய்ச்சல் மற்ற ஊர்களுக்குப் பரவாமல் தடுக்க, ஊரிலுள்ள அத்தனை பேரும் வெளியேற முடியாதபடி அரசு தடை விதிப்பதும், அதனால் அங்கு மாட்டிக் கொண்ட சுகாதார அமைச்சர் சுந்தரலிங்கம் ( பாண்டியராஜன் ), நியூகிளீயர் ஸ்டார் பூமேஷ் (ஜான் விஜய்), அமைச்சரின் உதவியாளர் (காளி), பூமேஷ் ரசிகர் மன்றத் தலைவர் (ரமேஷ் திலக்), குடிகாரர்கள் சங்கத் தலைவர் மட்டை ரவி ( ரோபோ சங்கர்) என எல்லோரும் காமெடியில் பட்டையைக் கிளப்புகிறார்கள். பின்பாதியில் வசனமே இல்லாமல் அவர்கள் செய்யும் ரகளை அட்டகாசம்.
வாயை மூடிக் கொண்டிராமல், இந்தப்படத்தைப் பாராட்டி நாலு பேர் பேசினால், இயக்குனர் பாலாஜி மோகன் பிழைத்துக் கொள்வார். வாழ்த்துக்கள்.
0
திரை ஓசை : கிச்சுகிச்சு
ரசிகன் குமுறல் : ஊறுகாய் மாதிரி, ஒரே ஒரு டூயட் போட்டு, நஸ்ரியாவை அம்சமா ஆடவிட்டிருக்கிறது ஆண்டவனுக்கே அடுக்காது பங்காளி!
0

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *