பிரசாதம்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

பாவண்ணன்

இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் பெயரைத் தாங்கி அந்தத் தொடக்கப்பள்ளி இயங்கிக்கொண்டிருந்தது. ஏழைப் பிள்ளைகளுக்கு கட்டணம் இல்லாத பள்ளிக்கூடம். நாலரைக்கு கடைசி மணி அடித்ததும் பிள்ளைகள் எல்லோரும் கன்றுக்குட்டிகள்போல வாசலை நோக்கி ஓடினார்கள். விதவிதமான உயரங்களில் விதவிதமான ஓசைகளை எழுப்பியபடி அவர்கள் ஓடியது விசித்திரமாக இருந்தது. குதிரை, யானை, பூனை, கோழி, ஆடு என எல்லாவிதமான விலங்குகளின் சத்தங்களும் அப்போது கேட்டது. ஆனால் ஐந்தாவது வகுப்பு பி செக்ஷன் வீரமுத்து மட்டும் ஓடவில்லை. சத்தம் போடவும் இல்லை. கடைசி மாணவன் ஓடி வெளியேறுகிறவரைக்கும் வகுப்பு வாசலில் நின்று வேடிக்கை பார்த்தான்.
அவன் ரோஜா அணியின் தலைவன். அவனுக்கென்று சில பொறுப்புகளை ஆரோக்கியம் ஐயா கொடுத்திருந்தார். கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளையெல்லாம் முதலில் துடைக்கவேண்டும். பிறகு ஈரத்துணியால் துப்புரவாக சுத்தம் செய்யவேண்டும். உலர்ந்த பிறகு இடதுபக்க மூலையில் அடுத்த நாள் தேதியை எழுதிவைக்கவேண்டும். கலைந்துபோன பெஞ்சுகளை சரியாக இழுத்துவிட்டு, தரையில் சிந்திக்கிடக்கும் துண்டுத்தாள்களை ஒன்றுவிடாமல் அகற்றி சுத்தமாக்கவேண்டும். அதற்குப் பிறகுதான் அவன் வகுப்பைவிட்டு வெளியே செல்லமுடியும்.
வேலைகளைக் கண்டு அவன் ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை. வீரமுத்துவை வகுப்புப் பிள்ளைகள் யாரும் வீரமுத்து என்று பெயர்சொல்லி அழைத்ததே இல்லை. கம்பளிப்பூச்சி என்றுதான் அழைத்தார்கள். அதுதான் அவனுக்கு வருத்தத்தைத் தந்தது. நான்காவது வகுப்பில் இருந்தபோது ஒரு சமயம் துணிதுவைக்கும் வேலையில் அம்மாவுக்கு உதவியாக கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்துவந்து கொடுத்தான். ஒருமுறை குடத்தைத் தூக்கிக்கொண்டு வரும்போது கால் இடறிவிட்டது. குடம் உடைந்துபோனது. விழுந்ததில் கீழே இருந்த ஒரு கல்லில் முகம் இடித்து கண்ணுக்குக் கீழே நீளமாக தோல் கிழிந்துவிட்டது. ரத்தம் ஒழுக ஒழுக சாமிக்கண்ணு வைத்தியரிடம் அழைத்துச் சென்றாள் அம்மா. அவர் கட்டுப்போட்டு மருந்து கொடுத்தார். ஒரு மாதத்தில் காயம் ஆறினாலும் தழும்பு விழுந்துவிட்டது. கணக்குப் பாடத்துக்கு வந்த தெய்வசிகாமணி ஐயா அவனைப் பார்த்துவிட்டு “என்னடா, கண்ணுக்குக் கீழ கம்பளிப்பூச்சி ஓடுது?” என்று கேட்டார். அன்றுமுதல் பிள்ளைகளும் அவனை கம்பளிப்பூச்சியாக்கிவிட்டார்கள். அப்படி கூப்பிடவேண்டாம் என்று அவர்களிடம் பல முறை மன்றாடிப் பார்த்துவிட்டான். அவன் கோரிக்கையை அவர்கள் கடைசிவரைக்கும் மதிக்கவே இல்லை.
அவன் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் ஒரு குளமும் புளியந்தோப்பும் இருந்தன. ஏதோ ஒரு திசையில் தோப்புக்குள் புகுந்து நடந்தான். அவன் கண்கள் தரையில் விழுந்து மண்ணில் புதைந்துகிடக்கும் புளியம்பழங்களைத் தேடின. இரண்டு பக்கங்களிலும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே நடந்தான். நாலைந்து பழங்கள் கிடைத்துவிட்டன. கால்சட்டைப் பையில் போட்டுக்கொண்டு வேறொரு திசைவழியாக தோப்பிலிருந்து வெளியே வந்தான். போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும் மதிலோரமாகவே நடந்துவந்து, வாகனங்கள் இல்லாத சமயத்தில் சாலையைக் கடந்து மறுபக்கத்துக்குப் போனான்.
பாதை பிரியும் இடத்தில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய துணிக்கடை. விதவிதமான சட்டைகளை கயிறுகட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். அவற்றை வேடிக்கை பார்த்தபடி நடந்த வீரமுத்து தன்னிச்சையாக தன் சட்டையைக் குனிந்து தொட்டுப் பார்த்துக்கொண்டான். போன பொங்கலுக்கு அவன் அம்மா வாங்கிக் கொடுத்த சட்டை அது. ஆடி மாதத் திருவிழா சமயத்தில் இன்னொரு சட்டை வாங்கித் தருவதாகச் சொல்லிவைத்திருந்தாள். வேறு ஏதோ செலவு வந்துவிட்டதால் வாங்கமுடியவில்லை என்று கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டாள். அவன் கால்சட்டையில் இடுப்புப் பட்டன் அறுந்து பத்துநாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தற்காலிகமாக இரண்டு ஊக்குகளால் குத்தி இணைத்திருந்தாள் அவன் அம்மா. தோளைவிட்டு நழுவும் புத்தகப்பையை சரியாக வைத்தபடி நடந்துகொண்டே இருந்தான்.
ஒரு புளியம்பழத்தின் ஓட்டை உடைத்து நாக்கில் வைத்துச் சுவைத்தான். பழம் கரைந்து கசந்திருந்த நாவின்மீது குழையத் தொடங்கிய கணத்தில் தனது பசியை மிகவும் தீவிரமாக உணர்ந்தான். எச்சில் ஊறியபடியே இருந்தது. ஏழெட்டு காட்டு விறகுகள் இணைந்து எரியும் அடுப்புப்போல அவன் வயிற்றில் பசித்தீ எரிந்தது. கவனத்தை ஏதாவது ஒரு பக்கம் திருப்பி பசியை அடக்கிவிடலாம் என்ற அவன் எண்ணத்தை அதிக நேரத்துக்கு செயல்படுத்த முடியவில்லை. பசியின் நெருப்பு அனல் தொண்டைக்குழிவரைக்கும் வீசுவதுபோல இருந்தது.
ரெட்டியார் வீட்டுத் திண்ணையில் பத்துப்பதினைந்து பேர் உட்கார்ந்துகொண்டு கிராமபோனில் பாட்டு கேட்டார்கள். ’காற்றினிலே வரும் கீதம்’ பாட்டு மிதந்து வந்தது. தமிழ் ஐயா அடிக்கடி அந்தப் பாட்டை முணுமுணுப்பதை அவன் ஏற்கனவே கேட்டிருந்ததால் ஒருகணம் ஆச்சரியம் தாங்கமுடியாதவனாக அப்படியே நின்றுவிட்டான். ஒரு முள்ளால் கீறப்படும் இசைத்தட்டிலிருந்து பாட்டு வரும் விசித்திரத்தை அவனால் நம்பவே முடியவில்லை. அந்தப் பாட்டைத் தொடர்ந்து ’காயாத கானகத்தே’ பாட்டு. ஒரே சொல்லை வெவ்வேறு விதமாகப் பாடி ராகம் இழுப்பதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. அதற்குப் பிறகு ’சிந்தை அறிந்து வாடி’ பாட்டு ஆரம்பித்தது. பசியை மறந்த அவன் மனம் ஒரு பறவைபோல மேகமே இல்லாத வானத்தில் பறந்து மிதந்தது. வெகுநேரம் கழித்துத்தான் திண்ணையிலிருந்த ஒருவர் அவனைப் பார்த்து “என்னடா? என்னடா? “ என்று கேட்டு அதட்டுவதை அவன் உணர்ந்தான். அவசரமாக தலையை ஆட்டினான். அவர் மிகவும் அதிகாரத்தோடு “எதுக்குடா நிக்கற இங்க? என்ன வேணும்?” என்று மிரட்டினார். அவன் மறுபடியும் தலையை ஆட்டியபடி “ஒன்னுமில்ல, ஒன்னுமில்ல, சும்மாதான்” என்று புன்னகைக்க முயற்சி செய்தான். “வேடிக்கை பாக்கறதுக்கு இங்க என்ன அவுத்துப்போட்டுட்டா ஆடறாங்க? மொளச்சி மூணு எல உடல. அதுக்குள்ள ஒனக்கு பாட்டு கேக்குதா? ஒடுடா” என்றபடி விரட்டினார். விரட்டியவரை திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே வீரமுத்து நடந்தான்.
பாட்டின் மயக்கத்தாலோ, வசையின் வேதனையாலோ வழக்கமான பாதையை விட்டு விலகி வெகுதொலைவு நடந்துவிட்டதை தாமதமாகத்தான் அவன் உணர்ந்தான். கிட்டத்தட்ட சத்திரத்துக்கு அருகில் வந்துவிட்டான். கிணற்றிலிருந்து இரண்டு பெண்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு போனார்கள். மீண்டும் திரும்பி நடக்கத்தான் வேண்டுமா என்று கேள்வி எழுந்தது. பிறகு பக்கத்தில் பிரியும் வேறொரு பாதைவழியாகச் சென்று நறையூருக்குப் போகும் பாதையில் சேர்ந்துவிடலாம் என்று தோன்றியது. அருகில் இருந்த விடுதியிலிருந்து பருப்புவடையின் மணம் காற்றில் மிதந்து வந்தது. அந்த மணம் பெருகப்பெருக அவன் கண்களில் நீர் கட்டித் தளும்பத் தொடங்கியது. விடுதியிலிருந்து வெளியே வந்த வேலைக்காரன் தன் கூடையிலிருந்த எச்சில் இலைகளையெல்லாம் அருகில் இருந்த சந்தில் போட்டுவிட்டுச் சென்றான். மகிழமரத்துக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பைத்தியக்காரன் எழுந்து சென்று அந்த இலைகளைக் கிளறி கிடைத்ததை வாரிவாரித் தின்றான். எங்கிருந்தோ மூன்று நாய்கள் ஓடிவந்து அவனுக்குப் போட்டியாக இலைகளில் வாயை வைத்தன.
ஏதோ ஒரு விசை அந்த இலைகளைநோக்கி அவனையும் செலுத்துவதுபோலத் தோன்றியது. அதை உணர்ந்ததும் அவன் உடல் நடுங்கியது. யாராவது கவனிக்கும் முன்பாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடவேண்டும் என்பதுபோல விலகி வேகமாக நடக்கத் தொடங்கினான். அந்த நடை கடைவரிசைகளைக் கடந்து வேலிபோட்ட தென்னந்தோப்பின் பக்கமாகத் திரும்பி திரெளபதை. அம்மன் கோயில் வாசலுக்கு வந்துதான் நின்றது. மூச்சு வாங்கியது. மதிலோரமாக உட்கார்ந்திருந்த ஒரு மைனா ஒரு புழுவை இழுத்துத் தின்பதை விழுங்கியது. அதையே வெகுநேரம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான் வீரமுத்து. அடுத்த புழுவுக்காகத் தேடிப் பார்த்துவிட்டு, அந்த மைனா அங்கிருந்து பறந்துபோய் அரசமரத்தின் கிளையில் உட்கார்ந்துகொண்டது.
மரத்தடியில் ஒரு செக்குமேடை இருப்பதை அப்போதுதான் வீரமுத்து பார்த்தான். வட்டமாகச் சுற்றிச்சுற்றி வரும் மாடுகளைப் பார்க்க விசித்திரமாக இருந்தது. நடக்கும்போதே அந்த மாடுகளின் வாயருகில் ஒரு பிடி புல்லை நீட்டினார் ஒருவர். வாயைத் திறந்து அதைப் பெற்றுக்கொண்டன மாடுகள். வாய்க்குள் செல்லமுடியாத புல்நுனிகள் அறுபட்ட பச்சை நூல்களைப்போல வாயின் இருபுறங்களிலும் தொங்கின. செக்கு மையத்தில் இரண்டு ஆண்களும் எண்ணெய் ஓடும் வட்டக் கால்வாயைச் சுற்றி இரண்டு பெண்களும் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். செக்கு போடும் சத்தம் வயதான ஒருவர் ராகமிழுப்பதுபோல இருந்தது.
செக்குவட்டத்துக்குப் பின்னால் இருந்த நீளமான திண்ணையில் ஆறேழு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் சுதேசமித்திரன் பத்திரிகையை விரித்துவைத்துக்கொண்டு வார்த்தைகளை நிறுத்திநிறுத்திப் படித்தார். மற்றவர்கள் வெற்றிலை மென்றபடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
திண்ணைக்கு எதிரில் ஒரு நாற்காலியில் செட்டியார் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஏழெட்டு எண்ணெய்க்குடங்கள் இருந்தன. மெலிந்த உடல். வேட்டிமட்டும் கட்டியிருந்தார். சட்டை இல்லை. துண்டு நாற்காலியில் தொங்கியது. அவ்வப்போது அதை எடுத்துத் துடைத்துக்கொண்டார். கருகருவென நீளமாக வளர்ந்திருந்த முடியைச் சுருட்டி குடுமியாகக் கட்டியிருந்தார்.
ஒரு பெரியவர் வந்து எண்ணெய் வாங்கிக்கொண்டு போனதைத் தொடர்ந்து ஒரு பையன் அவர் முன்னால் போய் நின்றதைப் பார்த்தான் வீரமுத்து. தனக்கு அருகிலிருந்த தொட்டிக்குள் குனிந்து எதையோ எடுத்து அவனிடம் கொடுத்தார் அவர். ஒரு தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் சந்தோஷத்தோடு அவன் அதை வாங்கினான். ஒருகணம் கண்விரியப் பார்த்துவிட்டு, பிறகு அப்படியே வாய்க்குள் போட்டுக்கொண்டு போனான். தேன்மெழுகுபோன்ற அதன் நிறம். அவனுக்கு உடனே புரிந்துவிட்டது. மல்லாட்டைப் புண்ணாக்கு. அக்கணமே அவன் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. அந்தப் பக்கமாகச் சென்ற சிறுவர்களும் சிறுமிகளும் அவர் கடையின் முன்னால் நின்று சர்வசாதாரணமாக கையை நீட்டினார்கள். நீட்டினவர்களுக்கெல்லாம் செட்டியார் புண்ணாக்குத் துணுக்குகளைக் கொடுத்தார். பார்க்கப்பார்க்க வீரமுத்துவின் மனத்துக்குள் பெரும்போராட்டமே நடைபெற்றது. பசியின் தீ தொண்டையிலிருந்து நழுவி உடல்முழுதும் பரவுவதுபோல இருந்தது. போ போ என்று அவன் அடிநெஞ்சிலிருந்து ஒரு கட்டளை எழுந்து அவனைத் தள்ளியது. அரைக்கணத்தில் அவன் நெஞ்சில் ஏராளமான சித்திரங்கள் எழுந்து மறைந்தன. ”யாருடா நீ? இது என்ன மடமா? சத்திரமா?” என்று அதட்டுவதுபோல. “போ போ, மொதல்ல எடத்த காலிபண்ணு” என்று கழுத்தைப்பிடித்து தள்ளுவதுபோல. முதுகோடு இருக்கிற புத்தகப்பையைப் பிடுங்கி வைத்துக்கொண்டு “போ, போய் ஒங்கம்மாவ கூட்டிகினு வந்து வாங்கிகினும் போ” என்று விரட்டுவதுபோல. தொண்டையில் பெருகிவந்த எச்சிலை கூட்டி விழுங்கினான்.
வெகுநேரத்துக்குப் பிறகுதான் செட்டியார் தன்னை சைகை காட்டி அழைப்பதை அவன் உணர்ந்தான். சட்டென ஒருகணம் அவன் உடல் நடுங்கியது. அவர் பக்கம் திரும்புவதைத் தவிர்த்து, மாடுகளையும் செடிகளையும் மரத்தையும் பார்த்தபடியே அந்த இடத்தைக் கடந்துவிடவேண்டும் என்று நினைத்து தெருவில் இறங்கினான். அவன் கால்கள் அவன் நினைத்ததற்கு மாறாக செட்டியாரின்முன்னால் கொண்டுசென்று நிறுத்தியதை அவனால் நம்பவே முடியவில்லை.
”என்னடா பாக்கற? என்ன வேணும்?” செட்டியார் கேட்டு முடிப்பதற்குள் அவன் அவசரமாக தலையை அசைத்து “ஒன்னுமில்ல, ஒன்னுமில்ல” என்று சொல்லிமுடித்தான்.
“எந்த ஊருடா?”
”நறையூரு.”
“படிக்கிறியா?”
“ம்” வீரமுத்து தலையசைத்தான்.
செட்டியார் தொட்டியிலிருந்து ஒரு பிடி புண்ணாக்கை எடுத்து அவனிடம் நீட்டினார். ஒரு கணம் தயங்கி அவன் அவர் கண்களைப் பார்த்தான். “புடி” என்றார் அவர். மறுப்பின் அடையாளமாக தலையை அசைத்தபடியே அவன் கை அதைப் பெற்றுக்கொண்டது. எண்ணெய் மணம் வீசும் அந்தத் தூள்களை அப்படியே வாய்க்குள் கவிழ்த்துக்கொண்டான். மென்று முடித்தபோது மல்லாட்டையின் மணம் வீசியது. வழவழவென்று தொண்டையில் இறங்கி சட்டென்று குடலில் விழுந்தது. அரைக்கணம் தணிந்த பசியின் தீ மீண்டும் சுவாலைவிட்டு எரிந்தது. அவன் உடல் நடுங்கியது. உதட்டின்மீதும் பல்லிடுக்கிலும் ஒட்டிக்கொண்டிருந்த துணுக்குகளை நாக்கால் துழாவியெடுத்து உமிழ்நீரில் நன்றாக நனையவிட்டு விழுங்கினான். அடுத்து, அவனை அறியாமலேயே கைவிரல்களுக்கிடையே ஒட்டியிருந்த துணுக்குகளை உருட்டி வாய்க்குள் செலுத்தினான்.
செட்டியார் தொட்டியிலிருந்து இன்னொரு பிடியை எடுத்து, பேசாமல் அவனிடம் நீட்டினார். மறுப்பு எதுவும் சொல்லாமல் அதையும் வாங்கி வாய்க்குள் போட்டு மென்றான் வீரமுத்து. அதன் சுவை அவன் ரத்தம் முழுதும் அணு அணுவாகப் பரவுவதுபோல இருந்தது. செட்டியார் இன்னொரு பிடியை எடுத்துக் கொடுத்தார். அதையும் அவன் வாங்கி கைக்குள் வைத்துக்கொண்டு அசைபோட்டுத் தின்றான். தன் கண்கள் தளும்புவதை அவனால் உணரமுடிந்தது. அப்படியே குனிந்து ஒருகணம் தோள்பட்டையில் அழுத்தித் துடைத்துக்கொண்டான்.
வீட்டுக்குள்ளிருந்து ஒரு சிறுமி வந்து செட்டியாருக்கு அருகில் நிற்பதை அவன் பார்த்தான். செட்டியார் அவனைப் பார்ப்பதைப் புரிந்துகொண்டு அவளும் அவனைப் பார்த்தாள். செட்டியாரின் சின்னவயதுத் தோற்றத்தில் அவள் இருந்தாள். அவள் நெற்றியில் புருவத்துக்கு மேல் வட்டமாக ஒரு கரிய தழும்பு இருப்பதைப் பார்த்தான். செட்டியாரைப் பிடித்து இழுத்து குனியவைத்து, அவர் காதோடு அவள் எதையோ சொன்னாள். செட்டியார் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகையோடு அவள் தலையை வருடிக் கொடுத்தார். செட்டியார் இன்னொரு பிடி புண்ணாக்கை அவனிடம் நீட்டினார். அவன் சட்டென்று பின்வாங்கி, புன்னகையோடு அவன் “வேணாம் போதும்” என்றான். “இருக்கட்டும் புடிடா” என்று சிரித்தார் செட்டியார். ”போதும் போதும்” என்று சொல்லிக்கொண்டே உதடுகளை நக்கியபடி வீரமுத்துவும் சிரித்தான். நிம்மதியாக மூச்சு வாங்கியபடி திரும்பி நறையூர்ப் பாதையில் நடந்தான். அந்த நிம்மதியில் அவன் மனம் உருகி கண்ணீர் தளும்பியது.
தன் கையிலிருந்து எண்ணெய் மணம் வீசுவதுபோல உணர்ந்தான் வீரமுத்து. கால் சட்டையில் அழுத்தி அழுத்தித் தேய்த்த பிறகு, மீண்டும் முகர்ந்து பார்த்தான். அப்போதும் அந்த மணம் இருந்தது. அவனுக்கு அந்த மணம் பிடித்திருந்தது. வீடுவரைக்கும் அந்த மணத்தை முகர்ந்துமுகர்ந்து பார்த்தபடியே சென்றான். வீட்டை அடைந்தபோது அம்மா கூடையிலிருந்து புல்லை எடுத்து உதறி ஆட்டுக்குப் போட்டுக்கொண்டிருந்தாள். வீரமுத்து திண்ணையிலேயே புத்தகப்பையைக் கழற்றிவைத்துவிட்டு அம்மாவுக்கு அருகில் சென்றான்.
“அம்மா, என் கையில என்ன வாசன வருது சொல்லு?” தன் வலது கையை அம்மாவின் முகத்துக்கு முன்னால் நீட்டினான்.
“என்னடா வாசன? எங்கனாச்சிம் கறிக்கொழம்பு ஊத்தி சாட்டு வந்தியா?” என்றபடி அம்மா சிரித்தாள்.
“ஐயோ, சிரிக்காதம்மா. நல்லா மோந்துபார்த்து சொல்லும்மா.”
அவள் மறுபடியும் முகர்ந்துபார்த்துவிட்டு ஒருகணம் யோசித்தாள். “எனக்கு என்னமோ புல்லு வாசனதான்டா வருது” என்று மறுபடியும் சிரித்தாள்.
“நல்லா மூச்ச இழுத்து மோந்து பாரும்மா. எண்ணெ வாசன வரலை?” அம்மாவின் தோளோடு சாய்ந்துகொண்டே சொன்னான். அவள் மறுபடியும் அவன் கையை வாங்கி முகர்ந்து பார்த்துவிட்டு “ஆமாம், எண்ணெ வாசன வருது? உன் கைக்கு அது எப்படி வந்திச்சி?” என்று கேட்டாள்.
அவன் எல்லா விவரங்களையும் சொன்னான். அவன் எதிர்பார்த்த எந்த வார்த்தையையும் அம்மா சொல்லவில்லை. மாறாக, இடிந்துபோய் அப்படியே மெளனமாக தரையில் உட்கார்ந்துவிட்டாள். வீரமுத்து பயந்துவிட்டான். “அம்மா, அம்மா” என்று அவள் தோள்களை உலுக்கினான். “வீரமுத்து, அப்பிடிலாம் ஒருத்தவங்ககிட்ட போயி கை நீட்டக்கூடாதுடா. நாளபின்ன யாராச்சிம் ஒரு சொல்லு சொல்லிட்டா நம்மால தாங்கமுடியாதுடா தம்பி” அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்தபோது வீரமுத்துவுக்கு சங்கடமாக இருந்தது. அவன் அவசரமாக “நீ நெனைக்கறமாதிரிலாம் நான் கை நீட்டலைம்மா. அவராதான் என்ன கூப்ட்டு குடுத்தாரு. வர போற எல்லா புள்ளைங்களுமே வாங்கிவாங்கி சாப்ட்டாங்கம்மா” என்று சொன்னான். அவன் அம்மா ஒருதரம் நிமிர்ந்து பார்த்தாள். பிறகு “உண்மையாவா?” என்று கேட்டாள். “ஆமாம்மா, உண்மையாதாம்மா” என்று அழுத்தி அழுத்திச் சொன்னான் வீரமுத்து. அதற்குப் பிறகுதான் அவள் அமைதி பெற்றாள்.
அன்று இரவு சாப்பாட்டுக்கு சுடச்சுட கஞ்சி காய்ச்சி வைத்தாள். தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலை சட்டினி அரைத்தாள். விளக்கு வெளிச்சத்தில் இரண்டு பேரும் சாப்பிடுவதற்கு உட்கார்ந்தார்கள். ”கவுண்டரு இன்னைக்காச்சிம் காசி குடுப்பாரு, பருப்போ கிருப்போ வாங்கியாந்து கொழம்புவைக்கலாம்ன்னு நெனச்சண்டா வீரமுத்து. இன்னிக்கு என்னமோ வெள்ளிக்கிழமையாம். கணக்குப் புள்ளையே அப்பறமா வாங்கிக்கம்மான்னு சொல்லிட்டான். நான் என்ன செய்யமுடியும் சொல்லு?” என்றபடி அம்மா கஞ்சியை எடுத்து தட்டில் ஊற்றினாள். ”பரவாயில்லைம்மா” என்றபடி கஞ்சியைக் குடித்தான் அவன்.
மறுநாள் காலை பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பும்போதே செக்கு பக்கமாக போகவோ வரவோ கூடாது என்று மனத்தை உறுதிப்படுத்திக்கொண்டுதான் கிளம்பினான். வழக்கம்போல தண்ணீர் குடித்து பசியைத் தாங்கிக்கொண்டான். ஒரு வாரம் கடந்துவிட்டது. அவன் அந்தப் பக்கமே திரும்பவில்லை. ஆனால் மனத்துக்குள் பல நூறுமுறை அந்தச் செக்கடிக்கு அருகில் சென்று புண்ணாக்கு வாங்கிச் சாப்பிட்டுவிட்டான். அந்த எண்ணத்தை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒருநாள் சாயங்காலம் கரும்பலகையைத் துடைத்துவிட்டு கை கழுவிக்கொண்டு தண்ணீரை ஏந்தி குடிப்பதற்காகக் குனிந்தான். உதடுகள் தண்ணீரைத் தொட்டுக்கொண்டிருந்தாலும் நாக்கை நனைக்கமுடியவில்லை. நாக்கில் பரவியிருந்த கசப்பு ஒரு சொட்டு தண்ணீரைக்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டென வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாந்தி வந்தது. கசப்பும் எரிச்சலுமாக பொங்கிப் பீறிட்டு வந்தது. மூக்கிலிருந்து தண்ணீர் வடிந்தது. முதுகெல்லாம் ஒரே வலி. தன் உடலே எடையிழந்து ஒரு காகிதத்தைப்போல மாறிவிட்டதாகத் தோன்றியது.
முகத்தைத் தேய்த்து கழுவிக்கொண்டு எழுந்து மெதுவாக பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே வந்தான். வெயில் தணிந்து காற்று வீசியது. பாதையின் ஓரமாகவே நடந்தான். அவன் பார்வையில் எதுவும் படவில்லை. அவன் காதுகள் எதையும் கேட்கவில்லை. கால்கள் தாமாக நடந்து செக்கடியில் வந்து நின்றது. செட்டியார் வேறு யாருக்கோ எண்ணெயை அளந்து ஊற்றுவதில் மும்முரமாக இருந்தார். கைகளைத் துடைக்க துண்டுக்காகத் திரும்பியபோதுதான் வீரமுத்துவைக் கவனித்தார். குனிந்து தொட்டியிலிருந்து ஒரு பிடி புண்ணாக்கை அள்ளி அவனிடம் கொடுத்தார். அவன் அங்கேயே நின்று அதைச் சாப்பிட்டான். அப்போது அவன் அருகில் வேறு இரண்டு சிறுவர்கள் வந்து நின்றார்கள். செட்டியார் அவர்களுக்கு ஆளுக்கொரு பிடி புண்ணாக்கை எடுத்துக் கொடுத்தார். அப்போது அவனுக்கும் இன்னொரு பிடி புண்ணாக்கு கிடைத்தது. ஒரு துணுக்கைக்கூட வீணாக்காமல் அதைச் சாப்பிட்டு முடித்தபோதுதான் தன் உடல்நடுக்கம் நின்றதை அவன் உணர்ந்தான். எதிரில் நடைபெறும் விஷயங்களை அவன் கண்கள் அப்போதுதான் உள்வாங்கத் தொடங்கின.
வீட்டை நெருங்கியபோதுதான் அம்மாவின் அழுத முகம் நினைவுக்கு வந்தது. அம்மாவை ஏமாற்றிவிட்ட உணர்வோடுதான் ஒவ்வொரு வேலையையும் செய்தான். அவள் கண்களைப் பார்க்கும்போதெல்லாம் அந்த உணர்வு அதிகரிக்கத் தொடங்கியது. ”இந்தப் படிப்பும் வேணாம், பள்ளிக்கூடமும் வேணாம்மா, நானும் உன்கூட கழனிவேலைங்களுக்கு வரேன்மா” என்று நெஞ்சுக்குள் பல முறை சொல்லிப் பார்த்துவிட்டான். நிம்மதியாக மூச்சுகூட விடமுடியவில்லை. “அது செக்கடி இல்லம்மா, அது ஒரு கோயில். கோயில்ல பிரசாதமா சுண்டல் குடுத்தா வாங்கித் தின்னமாட்டமா? அதுமாதிரி நெனச்சிதான் அந்த புண்ணாக்க வாங்கிக்கறேன். அவ்ளோதாம்மா. அது தப்பில்லைம்மா” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அதற்குப் பிறகுதான் அவன் மனம் ஆறுதல் கொண்டது.
எவ்விதமான சலனமும் இல்லாமல் அடுத்தநாள் மாலை செக்கடிக்குச் சென்று புண்ணாக்கை வாங்கிக்கொண்டு போனான். ஒருநாள் அந்தப் புண்ணாக்குடன் புளியம்பழத்தையும் உரித்துவைத்துக்கொண்டு சாப்பிட்டுப் பார்த்தான். அது ஒரு கலவையான சுவையாக இருந்தது. அதற்குப் பிறகு கைக்குக் கிடைக்கிற கொடுக்காப்புளி, நாவல்பழம், கொய்யா என எல்லாவற்றோடும் கலந்து சாப்பிடத் தொடங்கினான். ஒரு புதுவகையான தின்பண்டத்தைக் கண்டுபிடித்துவிட்டதைப்போல பெருமையாக இருந்தது.
இரண்டுபிடி புண்ணாக்கும் இரவுக்கஞ்சியும் அவனுக்குப் போதுமானதாக இருந்தது. விடியப்போகிற ஒரு முழுநாளுக்குத் தேவையான சக்தியை அவை அவனுக்குக் கொடுத்தன. விடுப்புநாட்களில்மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் உருவாகும். அதை ஒவ்வொரு நாளும் தன் புதுப்புதுக்கனவுகளால் சமாளிக்கப் பழகினான். அவன் கனவில் ஒரு பெரிய விருந்து நடைபெறும். சோறு, குழம்பு, பொறியல், கறி, ரசம் எல்லாம் பெரியபெரிய அண்டாக்களில் வைக்கப்பட்டிருக்கும். கறிக்குழம்பின் மணத்தால் அந்த வட்டாரத்துகே நாக்கில் எச்சில் ஊறும். யாரும் எதற்காகவும் காத்திருக்கவில்லை. பசியுள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அங்கே வந்து தாராளமாகச் சாப்பிடலாம். ஒரு தடையுமில்லை. தட்டு எடுத்துக்கொண்டு விருப்பமான அளவுக்கு அள்ளியெடுத்து போட்டுக்கொள்ளலாம். சாப்பிட வருகிறவர்கள் எல்லோரையும் அவன் வாசலில் நின்று “வாங்க, வாங்க” என்று வரவேற்று விருந்து மேடைக்கு அனுப்பிக்கொண்டே இருந்தான்.
முழு ஆண்டுத் தேர்வின் இறுதிநாள் அன்று அவனுக்கு வருத்தமாக இருந்தது. அன்று மாலை பிரார்த்தனை நேரத்தில் கோவிந்தையர் ஐயா பேசினார். தேர்வு எழுதிய பிள்ளைகள் எல்லோருக்கும் வாழ்த்து சொன்னார். பிறகு, கூடுதலாக, மெட்ராஸில் விடுதியிலேயே தங்கிப் படிக்கும் வசதியுடைய ஒரு பெரிய பள்ளிக்கூடத்தைப்பற்றிய செய்தியைச் சொன்னார். அங்கே சென்று மேல்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பள்ளிநிர்வாகம் சார்பில் எல்லா உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பெரிய விடுப்பில் அம்மாவோடு வீரமுத்துவும் வேலைக்குச் சென்றான். எருக்கிடங்கிலிருந்து கூடையில் எருவைச் சுமந்துவந்து கழனியில் கொட்டும் வேலையை அவன் செய்தான். தினமும் அதுதான் அவனுடைய வேலை. வாரத்துக்கு அரைமரக்கால் நெல் கூடுதல்கூலியாக அவர்கள் குடும்பத்துக்குக் கிடைத்தது. நெல் கிடைக்கும் அன்று அதை உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி பிரித்தெடுப்பது பெரிய பாடாக இருக்கும். அப்போதெல்லாம் அவன் களைப்பில் தூங்கிவிடுவான். கஞ்சியெல்லாம் காய்ச்சி முடித்தபிறகு சாப்பிடுவதற்காக அம்மா அவனை எழுப்பி உட்காரவைப்பாள். அம்மா பேசுவது எதுவுமே அவன் காதில் விழாது. பசிமயக்கத்தில் தூங்கித்தூங்கி விழுவான். “வீரமுத்து, வீரமுத்து, வாயத் தெறடா. என் செல்லமில்ல, ஆ ஆ காட்டு” என்று அவனிடம் கெஞ்சுவாள். அவனால் கண்களைத் திறக்கவே முடியாது. ஒரு பெரிய பாறையை வைத்து மூடியதுபோல அவனுக்குப் பாரமாக இருக்கும். அம்மா அவனைத் தோளோடு சாய்த்துக்கொண்டு, ரெண்டு வாய் ஊட்டிவிடுவாள். தன்னிச்சையாக விழுங்கிய கஞ்சி வயிற்றுக்குள் சென்று இறங்கியதும் அவன் ரத்த ஓட்டம் சுறுசுறுப்படைந்துவிடும். கண்ணைத் திறந்து அம்மாவின் கையில் இருக்கும் தட்டை வாங்கி வேகவேகமாக எல்லாக் கஞ்சியையும் கண்ணைமூடி கண்ணைத் திறப்பதற்குள் குடித்துமுடித்துவிடுவான். அம்மா அவன் முதுகில் செல்லமாக தட்டிக்கொடுப்பாள்.
வைக்கோலை உதறி உலர்த்துவதற்காக வைக்கோல்போருக்கு அருகில் சென்ற அம்மாவை ஒருநாள் அங்கே மறைவாகப் படுத்திருந்த ஒரு நாகப்பாம்பு தீண்டிவிட்டது. ”வீரமுத்து” என்று அவன் பெயரைச் சொல்லி அலறியபடி அவள் விழுந்துவிட்டாள். உடனே ஆட்கள் ஒரு கயிற்றுக்கட்டிலில் அவளைக் கிடத்தி வைத்தியர் வீட்டுக்கு தூக்கிச் சென்றார்கள். வைத்தியத்துக்கு தேவைப்படும் மூலிகைக்காக வைத்தியர் சிறுவந்தாடு பக்கம் சென்றிருப்பதாக அவர் வீட்டில் சொன்னார்கள். அவர் வரும்வரைக்கும் காத்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. வீரமுத்து வீரமுத்து என்று அவள் பிதற்றிக்கொண்டே இருந்தாள். நேரம் கடக்கக்கடக்க அவள் குரல் மங்கிக்கொண்டே வந்தது. வீரமுத்து அப்போது ஆண் ஆட்களோடு தென்னந்தோப்புக்கு மட்டை பொறுக்கச் சென்றிருந்தான். ஓர் ஆள் ஓட்டமாக ஓடி அவன் தகவலைச் சொன்னபோது அதிர்ச்சியில் அவனுக்கு ஒருகணம் எதுவுமே புரியவில்லை. பிறகு அம்மா என்று அலறி அழுதுகொண்டே ஓடினான்.
ஒடிந்துவிழுந்த கிளைபோல அம்மா கிடந்தாள். கடைவாய் வழியாக நுரை வழிந்தது. கழுத்து ஒருபக்கமாக வெட்டிவெட்டி இழுத்தது. அவள் கண்கள் அவன்மீது நிலைகுத்தியிருந்தன. ஒரு கிழவி அவள் கையை எடுத்து வீரமுத்துவின் தலைமீது வைத்தாள். வதங்கிக் கருத்து சுருங்கிய வாழைத்தண்டுபோல இருந்தது அம்மாவின் கை. நடுங்கிய அவள் கை மெதுவாக இறங்கி இறங்கி அவன் கன்னத்தைத் தொட்டது. அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. அவனுக்கு எதுவும் பேசவே தோன்றவில்லை. அம்மா அம்மா என்றுமட்டும் இடைவிடாமல் சொன்னபடி இருந்தான். அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டான். அவள் எலும்புவிரல்களைத் தொட்டுத் தடவும்போது, தரையில் உலர்ந்துகிடக்கும் பல்குச்சிகள்போல இருந்தன. அவனைப் பார்த்தபடியே அவள் உயிர் பிரிந்தது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து அவளை அடக்கம் செய்ய உதவி செய்தார்கள்.
இரண்டுமூன்று நாட்கள் கழித்து கவுண்டர் ஆள் ஒருவன் வந்து அவனை அழைத்துக்கொண்டு சென்றான். அம்மாவின் அகால மரணத்தைப்பற்றி சிறிதுநேரம் பேசினார். பிறகு ”தென்னந்தோப்புல அப்பப்ப காய் உரிப்பாங்க. தண்ணி பாச்சுவாங்க. மாணிக்கம்தான் செய்வான். அவன் கூட ஒத்தாசைக்கு இருந்துடறியா?” என்று கேட்டார். அவன் கண்களில் நீர் திரண்டது. அடக்கியபடியே ‘சரிங்க ஐயா” என்றான். “அப்பிடியே மாடுங்கள மேய்க்கறது, கட்டறதயும் பாத்துக்க? என்றார். அவன் அதற்கும் “சரிங்க ஐயா” என்றான். ”உச்சி வேளையில தோப்புக்கே கூழு வந்துரும் பார்த்துக்கோ. எவ்ளோ வேணுமோ, வாங்கிக் குடி தெரியுதா?” என்று தன்மையாகச் சொன்னார். பிறகு “வேல செய்றவனுக்கு ஒடம்புல தெம்புதான்டா முக்கியம். இப்பிடி தட்டனா தாரவாந்துடறாப்புல இருந்தா மாடுகூட ஒன்ன தள்ளிட்டு போயிடும்” என்று சிரித்தார். அப்போது அவர் குடிப்பதற்கு இளநீர் கொண்டுவந்த கருப்புசாமி, “அவன படிக்கவச்சி பெரிய ஆளாக்கணும்ன்னு நெனச்சிகிட்டிருந்தா அவன் அம்மாகாரி. அவன்கிட்ட போயி அந்த வேல இந்த வேலைன்னு சொன்னா……..” என்று இழுத்தான். “இவன்லாம் படிச்சி என்னடா கிழிக்க போறான்? அங்க இங்க அலஞ்சிட்டு, கடசியா இங்கதான மாடு மேய்க்க வரணும். அத இப்பலிருந்தே செய்யச்சொன்னா கசக்குதா?” என்று சொன்னபடியே இளநீரை வாங்கிக்கொண்டார். பிறகு, “நீ எதுக்குடா ஐயனார் செலயாட்டம் வாய தெறக்காம நிக்கற? படிக்க போறியா, மாடு மேய்க்கறியா?” என்று கறாரான குரலில் கேட்டார். அவன் கைகளைக் கட்டிக்கொண்டு, “பெரிய லீவு முடிஞ்சி பள்ளிக்குடம் தெறக்கறவரைக்கும் மாடு மேய்க்கறேன் சாமி” என்று சொன்னான். அந்தப் பதிலைக் கேட்டதும் ஆத்திரத்தில் கவுண்டர் அவனை அடித்துத் துவட்டிவிடுவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அதற்கு மாறாக, சில கணங்கள் அவனை முறைத்துப் பார்த்தார். பிறகு, “குடிக்கற கூழுக்கு அதயாவது ஒழுங்கா செய், போ” என்று அனுப்பிவைத்தார்.
விடுப்பு முடிந்து பள்ளிக்கூடம் திறந்ததும் அவன் பதற்றத்தோடு சென்றான். பள்ளிக்கூடத்துக்குள் கால்வைத்தபோது, தொலைந்துபோன ஒரு பொருள் கைக்குக் கிடைத்ததுபோல இருந்தது. பிரார்த்தனை முடிந்ததும், தேர்வுகளில் தேறி அடுத்த வகுப்புக்குப் போகும் மாணவர்களின் பெயர்களைப் படித்தார்கள். தகுதி பெற்றவனாக அவன் பெயர் படிக்கப்பட்டபோது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. அவனுக்கு உடனே அம்மாவின் நினைவு வந்து துக்கமாகவும் இருந்தது. முடிப்பதற்கு முன்பாக, கோவிந்தையர் ஐயா பட்டணத்தில் இயங்கக்கூடிய பள்ளிக்கூடம் பற்றிச் சொல்லி, அங்கே சேர விரும்புகிறவர்களை பள்ளி நிர்வாகமே அழைத்துச் சென்று சேர்க்கும் என்று சொல்லி முடித்தார். விடுப்பு தொடங்குவதற்கு முன்னாலும் கோவிந்தையர் ஐயா அதைச் சொன்னதை அப்போதுதான் அவன் நினைத்துக்கொண்டான். இத்தனை நாட்களாக அதைப்பற்றிய ஞாபகமே வராதது குறித்து அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கோவிந்தையர் ஐயாவை அவருடைய அறையில் சந்தித்து தன் அம்மா இறந்துபோன செய்தியை மெதுவாகச் சொன்னான் வீரமுத்து. பிறகு பட்டணத்துப் பள்ளிக்குச் செல்ல தனக்கு விருப்பமிருப்பதாகவும் சொன்னான். அவன் கதையைக் கேட்டு ஐயர் மனம் கலங்கியது. “இங்க பாருடா வீரமுத்து, சின்ன வயசு காலத்துல வரக்கூடிய கஷ்டங்கள் நமக்கு நல்லது செய்யத்தான் வருதுன்னு நெனச்சிக்கோடா. ஒரு கல்லை உளியால அடிச்சி அடிச்சி செதுக்கி, சிற்பத்தை உருவாக்கறாப்புல, இந்த கஷ்டங்கள்தான் ஒன்ன உறுதியுள்ள ஆளா ஆக்கும். தெரியுதா?” என்று சொல்லி அவனைத் தட்டிக்கொடுத்தார். “நீ நல்லா பெரிய ஆளா வருவ. எனக்கு நம்பிக்கை இருக்குது. போடா போ” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அந்த வாரம் முடிவதற்குள் பட்டணத்துப்பள்ளியில் சேர பத்து பிள்ளைகள் பேர் கொடுத்திருந்தார்கள். கடைசி நேரத்தில் ஒரு பையன் திடீரென்று வந்து தனது பெயரை நீக்கும்படி கேட்டுக்கொண்டான். ஆகவே ஒன்பது பேரைமட்டும் அழைத்துக்கொண்டு அவரும் பட்டணத்துக்கு வந்தார். ஒரு பரிசோதனைக்காக, பள்ளி நிர்வாகம் எல்லாப் பிள்ளைகளையும் ஒரு தேர்வை எழுதவைத்தது. விடைத்தாள்களைத் திருத்தி எடுத்துக்கொண்டு வந்த ஆசிரியர் எல்லோரும் தேர்வு பெற்றுவிட்ட செய்தியைச் சொல்லிவிட்டு விடுதியில் சேர்ந்துகொள்ளுமாறு சொன்னார். சந்தோஷத்தில் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். அதற்குள் ”இதுல யாரு வீரமுத்து?” என்று கேட்டார் அந்த ஆசிரியர். வீரமுத்து கைகளைக் கட்டிக்கொண்டு எழுந்து ”நான்தான் சார்” என்றான். ஆசிரியர் அவனைப் பார்த்து ஒருகணம் புன்னகைத்தார். பிறகு, “சரி சரி போங்க” என்று அனுப்பிவைத்தார். எல்லா நடைமுறைகளையும் செய்து முடித்துவிட்டு ”வரட்டுமாடா பசங்களா” என்றபடி கோவிந்தையர் ஐயா கிளம்பினார். சட்டென்று பிள்ளைகளின் கண்கள் தளும்பிவிட்டன. “நல்லா படிங்கடா. அது ஒன்னுதான் நம்ம வாழ்க்கையையே மாத்தும். நீங்க பெரிய ஆளா வளர்ந்து ஜார்ஜ் ஸ்கூலுக்கும் பெரும சேக்கணும், இந்த ஆல்காட் ஸ்கூலுக்கும் பெரும சேக்கணும்” என்று தட்டிக்கொடுத்துவிட்டு புறப்பட்டுப் போனார்.
வீரமுத்து அந்த வார்த்தைகளை தன் அம்மாவின் கட்டளையாக எடுத்துக்கொண்டான். கடிகாரத்தின் ஓசையைப்போல அந்தக் குரல் அவன் நெஞ்சில் எப்போதும் ஒலித்தபடியே இருந்தது. அவனுடைய உழைப்புக்கான பரிசாக ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அவனுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைத்தன. பள்ளியிறுதி, எஃப்.ஏ., எல்.எம்.பி என எல்லாக் கட்டங்களிலும் அவன் வெற்றிகள் தொடர்ந்தன. தில்லியில் ஓர் ஆராய்ச்சிக்கழகத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. வேலை செய்துகொண்டே ஆராய்ச்சிப்பணிகளிலும் ஈடுபட்டான். பல ஆண்டுகள் இடைவிடாத உழைப்புக்குப் பிறகு அவனுக்குப் பட்டம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சான்பிரான்ஸிஸ்கோ பல்கலைக்கழகத்தில் உயர்நிலை ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் சென்று சேர்ந்தான்.

***
வானில் படியும் மாசுகளை கட்டுப்படுத்துவது குறித்தும் மாசுகளுக்கும் ஆரோக்கியக்குறைவுக்கும் உள்ள தொடர்புகுறித்தும் தில்லியில் நிகழ்ந்த அனைத்துலகக் கருத்தரங்கத்துக்கு உலகின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அறிஞர்கள் வந்து பங்கேற்றுக்கொண்டார்கள். சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து வந்து கலந்துகொண்ட முனைவர் வீரமுத்து அவர்களின் உரை பார்வையாளர்களாலும் ஊடகங்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. மாலை நேரம் தேநீர் இடைவேளையிலும் இரவு வேளையில் விடுதியிலும் தொலைக்காட்சிக்காரர்களும் பத்திரிகைக்காரர்களும் அவரைத் தொடர்ந்துவந்து பல கேள்விகள் கேட்டார்கள். எல்லோருக்கும் சிரித்த முகத்தோடு பதில் சொன்னார் அவர். விடுதி வளாகத்துக்கே பதிவு வாகனத்தை வரவழைத்த ஒரு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அவரிடம் சிறப்பு நேர்காணல் ஒன்றை எடுத்துப் பதிவுசெய்துகொண்டது. எழுபது வயதைக் கடந்தவர் என அவர் தோற்றத்தை வைத்துச் சொல்லிவிடமுடியாதபடி சுறுசுறுப்பாக இருந்தார்.
மூன்று நாள் நடைபெற்ற கருத்தரங்கத்தை முடித்துக்கொண்டு தன்னுடைய கல்லூரிக்கால நண்பர் சின்ஹாவைப் பார்ப்பதற்காக வழக்கம்போல ஜெய்ப்பூருக்குச் சென்றார். ஜெய்ப்பூரில் நகரச் சூழலிலிருந்து ஒதுங்கியிருந்தது சின்ஹாவின் வீடு. காலை நடை, தோட்ட உலாவல், மாலை நடை என இருவரும் பேசிப்பேசி பொழுதைப் போக்கினார்கள். நான்குநாட்கள் ஓடியதே தெரியவில்லை. நான்காவது நாள் இரவு கூடத்தில் அமர்ந்து இருவரும் தொலைக்காட்சி பார்த்தபடியே பால் அருந்தினார்கள். சின்ஹா ரிமோட்டை அழுத்தி சேனலை மாற்றிக்கொண்டே இருந்தார். சட்டென ஒரு சேனலில் ஒரு தமிழ்ப்பாட்டு கேட்டது. காற்றினிலே வரும் கீதம் என்ற வரி கேட்டு முடியும் முன்பாக சின்ஹா சேனலை மாற்றினார். வீரமுத்துவின் மனம் அந்த வரியை சிறிது தாமதமாகத்தான் உள்வாங்கியது. உரையாடலை நிறுத்திவிட்டு சட்டென்று அவர் தொலைக்காட்சித்திரையைப் பார்த்தார். சின்ஹாவிடம் மீண்டும் தமிழ்ச்சேனலை வைக்கச் சொல்லி எஞ்சிய பாடல்வரிகளை மெளனமாகக் கேட்டார். பல ஆண்டுகளுக்கு முன்னால் கிராமபோன் தட்டிலிருந்து கேட்ட அதே பாடல். அன்று பெற்ற பரவசத்தை தன் மனம் மீண்டும் உணர்வதை அவரால் நம்பவே முடியவில்லை. பழைய நினைவுகள் படம்படமாக அவர் நெஞ்சில் விரிந்து மறைந்தன. புண்ணாக்குத் துணுக்குகளை புன்சிரிப்போடு அள்ளித் தந்த குடுமிவைத்த செட்டியாரின் முகம் மிதந்துவந்தது. அன்று இரவு வெகுநேரம் அவர் தூங்கவில்லை. தன் இளமை நினைவுகளையெல்லாம் சின்ஹாவிடம் சொல்லிப் பகிர்ந்துகொண்டார்.
“பட்டம் பெற்ற பிறகு நீங்கள் உங்கள் ஊருக்குப் போகவே இல்லையா?” என்று கேட்டார் சின்ஹா. ”போகவேண்டும் என்று நினைப்பதுண்டு சின்ஹா. ஆனால் கருத்தரங்கப் பயணங்களிலேயே எல்லா நாட்களும் கழிந்துபோய்விடும். பிறகு, சான்பிரான்ஸிஸ்கோவுக்கே திரும்பிவிடுவேன்” என்று அடங்கிய குரலில் பதில்சொன்னார் வீரமுத்து. எந்தப் பதிலும் சொல்லாமல் சின்ஹா வீரமுத்துவையே பார்த்தார். வீரமுத்து தயங்கித்தயங்கி “அம்மா இல்லாத ஊரில் யார் முன்னால் போய் நிற்பது சின்ஹா?” என்று சொல்லிவிட்டு ஒருகணம் பேச்சை நிறுத்தினார். பிறகு “அப்படி நினைத்துநினைத்தே இந்தியாவில் இருக்கும்வரை அங்கே போகவே இல்லை” என்றார். இப்படி ஒரு திருப்தியில்லாத பதிலைச் சொல்வதை முன்னிட்டு அவர் மனம் ஒருகணம் குற்ற உணர்வில் அமிழ்ந்தது.
“உங்கள் பழைய பள்ளிக்கூடங்களை நீங்கள் ஒருமுறையாவது சென்று பார்த்து வந்திருக்கலாம்” என்றார் சின்ஹா. வீரமுத்து ஒருகணம் சின்ஹாவை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மெளனமாக தலையை அசைத்துக்கொண்டார். ”உண்மைதான் சின்ஹா, ஆல்காட் ஸ்கூலைப் பார்த்திருக்கலாம். ஜார்ஜ் ஸ்கூலையும் பார்த்திருக்கலாம். கோவிந்தையர் ஐயாவைப் பார்த்திருக்கலாம். செட்டியாரைப் பார்த்திருக்கலாம். என்னமோ, அப்படி தோன்றாமலேயே போய்விட்டது. இப்போது நினைத்தால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது சின்ஹா. அவர்களெல்லாம் இப்போது இருக்கிறார்களோ இல்லையோ” என்று அடங்கிய குரலில் சொன்னார். பிறகு இரண்டுமூன்று தரம் நாக்கு சப்புக்கொட்டினார். ஜன்னல்வரைக்கும் எழுந்து நடந்துசென்று வித்தியாசமான வடிவமைப்பில் சுடர்விட்டெரியும் சுற்றுச்சுவர் விளக்கையே பார்த்தபடி சிறிதுநேரம் நின்றார். திரும்பி வந்து, “நாளைக்கே போகிறேன் சின்ஹா. போய் எல்லோரையும் பார்த்துவருகிறேன்” என்று சொன்னபடி நாற்காலியில் உட்கார்ந்தார். ”நல்ல முடிவு வீரமுத்து. உங்கள் பயணம் சந்தோஷமானதாக அமைவதற்கு வாழ்த்துகள்” என்று சிரித்தார் சின்ஹா. மறுகணமே, “அப்படியென்றால், சான்பிரான்ஸிஸ்கோ பயணம்?” என்று சந்தேகத்தோடு கேட்டார். “அதுக்கென்ன, தள்ளிவைத்துவிடலாம்” என்றார் வீரமுத்து.
உறங்குவதற்குச் செல்லும்முன்பாக இணையம் வழியாக சான்பிரான்ஸிஸ்கோ பயணத்தேதியை நான்குநாட்கள் ஒத்திப்போட்டுவிட்டு, ஜெய்ப்பூரிலிருந்து நேராக சென்னைக்குச் செல்ல ஒரு பயணச்சீட்டு பதிவு செய்தார் வீரமுத்து. பக்கத்திலேயே நின்றிருந்த சின்ஹா அவர் தோளில் தட்டிக்கொடுத்தார். அப்படியே உரையாடல் திடீரென தத்துவம், ஆன்மிகம் என திசைதிரும்பி வெகுநேரம் எங்கெங்கோ அலைந்தது. நள்ளிரவுக்குப் பிறகுதான் சின்ஹா “குட்நைட் “ சொல்லிவிட்டு தூங்குவதற்குச் சென்றார்.
விடிந்ததும் சின்ஹா தன் காரிலேயே வீரமுத்துவை விமானநிலையம் வரைக்கும் அழைத்துச்சென்று வழியனுப்பிவைத்தார். இரண்டரைமணிநேரப் பயணம் முழுக்க தன் இளமைநினைவுகளில் மூழ்கியிருந்தார் வீரமுத்து. பள்ளி, குளம், தோப்பு, வாய்க்கால், கடை, கோயில், செக்கு, செட்டியார் கடை எல்லாம் அப்படிஅப்படியே இருக்குமா என யோசித்தார். எதெல்லாம் இருக்கும், எதெல்லாம் இருக்காது என ஒரு பட்டிமன்றமே அவர் நெஞ்சில் நிகழ்ந்தது. நினைவுகளின் சுவாரசியத்தில் சென்னை வந்ததே தெரியவில்லை.
விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்ததும், ஒருகணம் சென்னை நகரின் பிரும்மாண்டமான தோற்றத்தைப் பார்த்து நம்பமுடியாமல் அதிர்ச்சியில் நின்றுவிட்டார். கூகுள்வழியாக ஆல்காட் பள்ளியின் முகவரியைத் தேடியெடுத்து டாக்ஸியில் சென்று இறங்கினார். ஆசிரியர்கள் அவரை அன்போடு வரவேற்று உபசரித்துப் பேசியது அவரை மிகவும் சந்தோஷப்படுத்தியது. அவர் தான் படித்த பழைய வகுப்புக்குச் சென்று சில கணங்கள் பார்த்துவிட்டுத் திரும்பினார். தலைமையாசிரியர் வகுப்பில் தொடர்ச்சியாக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களின் வரிசையில் தன் காலத்துத் தலைமை ஆசிரியரின் படத்தைச் சுட்டிக்காட்டி அவரைப்பற்றிய தன் நினைவுகளை அங்கிருந்தவர்களிடம் உத்வேகம் பொங்கப் பகிர்ந்துகொண்டார் வீரமுத்து. புறப்படுவதற்கு முன்னால் ஒரு பெரிய தொகைக்கு காசோலையை எழுதி ஆசிரியரின் மேசையில் வைக்கப்பட்டிருந்த உண்டியலுக்குள் போட்டுவிட்டு விடைபெற்றுக்கொண்டார் வீரமுத்து.
வேறொரு டாக்ஸி பிடித்து வளவனூருக்குப் போகும்படி சொன்னார். பின்னிருக்கையில் சாய்ந்தபடி பக்கவாட்டில் வேடிக்கை பார்த்தார். சாலைக்காட்சிகள் எதுவுமே அவர் மனத்தில் பதியவில்லை. அவரால் எதையுமே யோசிக்கமுடியவில்லை. கைநிறைய புண்ணாக்குத் துணுக்குகளை வாங்கி, ஒருதுண்டுகூட விடாமல் வேகமாகத் தின்றதை மட்டும் மீண்டும்மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்தபடி தூங்கிவிட்டார்.
வளவனூரை அடைந்து வண்டி நின்றபிறகுதான் அவர் கண்விழித்தார். வண்டியை விட்டிறங்கி, அது எந்த இடம் என்று தன் நினைவுகளைக் கொண்டு கண்டடைய முதலில் முயற்சி செய்து தோற்றார். பள்ளிக்கூடத்தை முதலில் கண்டுபிடித்துவிட்டால் மற்றவற்றை கண்டறிவது எளிதாக இருக்கும் என்று நினைத்தார். அதனால் அருகில் இருந்த ஒரு பழக்கடையில் பள்ளிக்கூடம் பற்றிக் கேட்டார். கடைக்காரப்பையன் “ஜார்ஜ் ஸ்கூலா, ஜார்ஜ் ஸ்கூலா?” என்று சொன்னதையே மீண்டும்மீண்டும் சொல்லிக் கேட்டான். “சுவை ஸ்கூல்னு ஒன்னு இருக்குது. ஆர்.எல்.பி.ஸ்கூல்னு ஒன்னு இருக்குது. நீங்க சொல்ற பேர்ல எந்த ஸ்கூலும் இல்லயே” என்று இழுத்தான். அதற்குள் பக்கத்தில் வெற்றிலைக்கடையிலிருந்து எழுந்துவந்த ஒரு பெரியவர் ஒரு திசையில் கையைக் காட்டி “அங்கதான் இருக்குது போங்க” என்றார். “மணி அஞ்சுக்கு மேல ஆயிடுச்சிங்களே. ஸ்கூல்ல யாரும் இருக்கமாட்டாங்க” என்றும் சொன்னார். “தாத்தா, அது கோவிந்தையர் ஸ்கூல். தப்பா சொல்லாத” என்று அதட்டினான் கடைக்காரப்பையன். “டேய், ரெண்டும் ஒன்னுதான்டா. மொதல்ல ஜார்ஜ் ஸ்கூல்னு சொன்னாங்க. அப்பறமா கோவிந்தையர் ஸ்கூல்னு மாத்திட்டாங்க. நீ சின்ன பையன். ஒனக்கென்ன தெரியும்?” என்ற பெரியவர் “நீங்க போங்க சார், அதுதான். பையன் தெரியாம சொல்றான்” என்று அனுப்பிவைத்தார்.
அவர் சொன்ன அடையாளத்தின்படி சென்ற டாக்ஸி கதவு மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடத்தின்முன் நின்றது. வீரமுத்து இறங்கி அந்தக் கதவுக்கம்பிகளைப் பிடித்துப் பார்த்தார். சந்தேகமே இல்லை. அதே பள்ளிக்கூடம்தான். பள்ளிக்கூட அமைப்பு மாறியிருந்தது. ஆனால் அருகில் இருந்த கோயில் அமைப்பு மாற்றமில்லாமல் காணப்பட்டது. தோப்பு இருந்த இடமே இல்லை. சுற்றியும் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டிருப்பதையும் வாகனங்களில் மக்கள் வேகவேகமாகப் பறப்பதையும் ஆச்சரியமாகப் பார்த்தார்.
தன்னால் அந்த ஊரில் இனிமேல் நடந்து சுற்றிவிட முடியும் என்று நம்பினார் வீரமுத்து. மறுகணமே வாகனத்தை பின்னாலேயே வரச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார். காற்றினிலே வரும் கீதம் அவர் நெஞ்சில் ஒலித்தபடி இருந்தது.
நாலைந்துமுறை குறுக்கும் நெடுக்குமாக நடந்தபிறகும் அவரால் திரெளபதை அம்மன் கோவிலைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு அம்மாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு நடந்தார். கோவிலின் தோற்றத்தை மறைத்தபடி ஊர் வளர்ந்திருப்பதுதான் தன் குழப்பத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் என அவர் நினைத்தார். கோவில் வாசலையும் அரசமரத்தையும் கண்டுபிடித்த அவர் கண்கள் செக்கடியைத் தேடின. செக்கு இல்லை. ஒரு ஓம்சக்தி கோவில் இருந்தது.
“செக்கடி எங்க இருக்குது?” கோவிலிலிருந்து கைப்பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வந்த ஒரு இளந்தம்பதியிடம் சென்று கேட்டார் வீரமுத்து. ”செக்கா? அப்பிடின்னா?” என்றபடி அவர்கள் விலகிப் போய்விட்டார்கள். அடுத்து வந்த இன்னொரு பெரியவரிடம் கேட்டார். அவரும் ”தெரியாதுங்க. நான் ஊருக்கு புதுசு” என்று கைவிரித்துவிட்டுச் சென்றார். வீரமுத்துவுக்கு உதவியாக டாக்ஸி டிரைவரும் அக்கம்பக்கத்தவர்களிடம் விசாரித்தான்.
மிதிவண்டியில் வந்த ஒரு பெரியவர் வீரமுத்துவைப் பார்த்துவிட்டு, “செக்கடிபத்தி எதுக்கு கேக்கறிங்க? யாரு நீங்க? இந்த ஊரா?” என்று விசாரித்தார். தோளில் துண்டுமட்டும் போட்டிருந்தார்.
“ம். ஒரு காலத்துல இந்த ஊரு” என்ற வீரமுத்து சிரித்தபடி குலுக்குவதற்காக கையை நீட்டினார். அவர் உடனே சைக்கிளைவிட்டு இறங்கி “ஒரு காலத்துல இங்க செக்கு இருந்திச்சி” என்று ஆரம்பித்து பழைய விவரங்களையெல்லாம் சொன்னார்.
“அந்த செட்டியார் குடும்பம்?”
“அவுங்க எல்லாம் ஆளுக்கொரு பக்கமா போய்ட்டாங்க….. ஆம்பளைப்பசங்க எதுவும் உருப்படலை…… பொம்பளப் புள்ளைங்க கல்யாணம் கட்டிகினு திண்டிவனம், பிச்சேரினு போயிட்டாங்க…..” யோசித்து யோசித்து ஒவ்வொரு விவரமாகச் சொன்னார். அதைக் கேட்கவே கஷ்டமாக இருந்தது. கடைசியாக சந்தேகத்தோடு, “நீங்க என்ன செட்டியாருக்கு சொந்தமா?” என்று கேட்டார். வீரமுத்து அவசரமாக மறுத்து தலையைசைத்தார். “இப்ப யாராச்சிம் இருந்தா பாக்கலாமேன்னுதான் கேட்டேன்” என்றார்.
அந்தப் பெரியவர் நாக்கு சப்புக்கொட்டியபடி சொன்னார். “செட்டியார் ரொம்ப நல்ல மனுஷன். நானும் சின்ன வயசுல பார்த்திருக்கேன். எங்கப்பா அவர பத்தி கதகதயா சொல்லுவாரு. அடிப்படையில அவருக்கு செக்கு வியாபாரமே இல்லை. துணி வியாபாரம்தான். சொக்கலிங்கம்னு இன்னொரு செட்டியாரு இருந்தாரு. அவருதான் செக்கு வச்சிருந்தாரு. முருகன் கோயில் பக்கத்துல. ரெண்டு பேரும் கூட்டுக்காரங்க. அவரு கடையில இவரு, இவரு கடையில அவருன்னு உக்காந்து பேசுவாங்களாம். அப்பலாம் ஒரு மரக்கால் மல்லாட்டைக்கு செக்குகூலி நாலு பணம் குடுக்கணும். அது கொஞ்சம் அதிக தொகை. எண்ணெ ஆட வரவங்கள்ளாரும் கொறைச்சிக்க சொல்லி கேப்பாங்களாம். இவரு முடியாதுன்னு மொறைப்பாராம். இது ஒரு பழக்கம். பேச்சோட பேச்சா ஒருநாள் நம்ம செட்டியாரே அவுர்கிட்ட “இவ்ளோ பேரு கேட்டுக்கறாங்களோ, கொஞ்சம் கொறச்சா என்ன?ன்னு கேட்டுட்டாராம். சட்டுனு அவருக்கு கோவம் வந்துடிச்சி. ’அவ்ளோ அக்கற உள்ள ஆளா இருந்தா, சொந்தமா ஒரு செக்கு போட்டு பணமே இல்லாம சும்மாவே ஆட்டிகுடு. யாரு வேணாம்னு சொன்னாங்க’ன்னு ஒரு வார்த்த சொல்லிட்டாரு. அடிபட்டமாதிரி ஆயிடுச்சி செட்டியாருக்கு. வந்த வேகத்துல பத்து நாள் அலயா அலஞ்சி கோயில் வாசல்ல செக்கு போட்டுட்டாரு. ரொம்ப காலத்துக்கு செட்டியாரு ஒரு மரக்காலுக்கு ரெண்டு பணம்னு கூலிதான் வாங்கனாரு. இந்த காலத்துல அப்பிடிலாம் ஒரு மனுஷன பாக்கமுடியாது. அவ்ளோ நல்ல மனுஷனுக்கு புள்ளைங்க சரியா அமையலை. அதான் பெரிய கொறை” பெரியவர் மூச்சு வாங்கினார்.
“அவரு வழியில யாருமே இல்லயா?” ஆர்வத்தோடு அவர் முகத்தைப் பார்த்தார் வீரமுத்து. அவர் சிறிதுநேரம் மரத்தைப் பார்த்தபடி மோவாயைச் சொரிந்தார். “அந்த செட்டியார் வழினுதான் நெனைக்கறேன்” என்று சந்தேகத்தோடு தொடங்கினார். ”எங்க எங்கயோ போய் வந்ததால எனக்கும் சரியா தெரியலை. ஒரே ஒரு கெழவிமட்டும் இந்த ஊருல இருக்குது. அதுக்கு புள்ளைங்களும் இல்ல. புருஷனும் இல்லை. எல்லாரும் போயி சேந்துட்டாங்க. ஸ்கூல் வாசல்ல தனியா கமர்கட்டு வித்து பொழைக்குது. அத ஓணும்னா விசாரிச்சி பாருங்க” என்றார். பிறகு வீட்டை அடையாளம் காட்டுவதற்காக, வீரமுத்துவோடு ஒரு பையனையும் அனுப்பினார்.
அவர் சொன்ன இடத்தில் அந்த அம்மா இல்லை. அங்கிருந்து இடம் மாறி பிள்ளையார் கோயில் பக்கமாகச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அந்த இடத்திலும் அவர் இல்லை. வாடகை தராத நிலையில் விரட்டிவிட்டதாகவும், இளங்காடு போகிற வழியில் ஏதோ ஒரு குடிசையில் இருப்பதாகவும் அந்த வீட்டுக்குச் சொந்தக்கார அம்மா சொன்னாள். வெகுநேரம் தேடி அலைந்தபிறகுதான் அந்தக் குடிசையைக் கண்டுபிடிக்க முடிந்தது.
குடிசை வாசலில் இரண்டு கால்களையும் நீட்டி உட்கார்ந்துகொண்டிருந்தாள் ஒரு கிழவி. வெளுத்துப்போன தலைமுடி. கிழிந்து அழுக்கான புடவை. தோல்சுருங்கி வற்றிவிட்ட உடல்.
“ஆயா, ஒன்ன தேடி யாரோ வந்திருக்காங்க”
”இந்த வயசுல யாருடா என்ன தேடப் போறாங்க? வந்தா எமன்தான் வரணும்” சொல்லிக்கொண்டே கண்களைச் சுருக்கிப் பார்த்தாள் கிழவி. வீரமுத்துவை உச்சியிலிருந்து பாதம்வரைக்கும் பார்த்தாள். ஆள் விவரம் சரியாகப் புரியவில்லை. ”எந்த ஊருக்காரங்க நீங்க? பார்த்தா வெள்ளயும் சொள்ளயுமா சினிமாப்படம் புடிக்கறவங்களாட்டமா இருக்கிங்க. ஊருமாறி இங்க வந்துட்டிங்களா?” என்றபடி கிழவி உற்று உற்றுப் பார்த்தாள். அவள் பேச்சை ரசித்தபடி அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்த வீரமுத்து, எதிர்பாராத ஒரு கணத்தில் கசங்கிப்போன காகிதம்போல மாறிவிட்ட அவள் முகத்தில் புருவத்துக்கு மேல் இருந்த கரிய வட்டத்தழும்பைக் கவனித்துவிட்டார். அத்தருணத்தில் தன் உடலில் திடீரென புதுரத்தம் பொங்கிப் பாய்வதுபோல அவர் மனம் உணர்ந்தது. இளமையில் செட்டியாரின் மடியில் ஏறி உட்கார்ந்திருந்த சிறுமியின் முகம் அழுத்தமான ஒரு சித்திரமாக அவர் நெஞ்சில் பதிந்திருந்தது. அவர் ஆழ்மனம் அந்தச் சிறுமியே இந்தக் கிழவி என்று நூற்றுக்குநூறு சதம் நம்பியது. அவள் வாழும் சூழல் அவர் நெஞ்சை அசைத்தது. அவரால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவள் இன்னும் வீரமுத்துவின் முகத்தையே பார்த்தபடி இருந்தாள். அவர் கண்களுக்குக் கீழே கோடு இழுத்ததுபோல இருந்த தழும்பை அவள் மீண்டும்மீண்டும் பார்ப்பதுபோல அவருக்குத் தோன்றியது.
“அம்மா, நீங்க செட்டியார் ஊடுதான?” வீரமுத்து ஆர்வத்தை அடக்கமுடியாமல் கேட்டார். “எந்த செட்டியார் ஊடு?” என்று கேட்டாள் கிழவி.
“செக்கடி செட்டியார்மா…..”
அவள் உதட்டைப் பிதுக்கினாள்.
“திரோபதையம்மன் கோயில் முன்னால செக்கு போட்டிருந்தாரு” புரியும்படி அழுத்தமாகச் சொன்னார் வீரமுத்து.
இல்லை என்பதற்கு அடையாளமாக அவள் தலையை அசைத்தாள். தொங்கிப் போன அவள் காதுகளும் அசைந்தன.
“சின்ன பசங்களுக்கெல்லாம் புடிபுடியா புண்ணாக்கு குடுப்பாரே, அவரு”
அவள் அவர் கண்களையே பார்த்தாள்.
“நெடுநெடுனு நல்லா உயரமா இருப்பாருமா. நீளமா குடுமிலாம் வச்சிருப்பாரு.”
கால்மணிநேரத்துக்கும் மேல், அவர் பல பழைய சம்பவங்களையெல்லாம் நினைவூட்டி விவரங்களைத் தெரிந்துகொள்ள செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. வருத்தமும் ஏமாற்றமும் கவிய அவளிடம் விடைபெற்றுக்கொண்டு வண்டிக்குத் திரும்பினார். ஜார்ஜ் ஸ்கூலையும் பார்க்கமுடியவில்லை, செட்டியார் விவரமும் தெரியவில்லை, என்ற நிலையில் நறையூருக்குப் போய்ப் யாரைப் பார்ப்பது என அலுப்போடு அந்தத் திட்டத்தைத் தவிர்த்துவிட்டார். பெருமூச்சு வாங்க சில கணங்கள் அப்படியே நின்றார். பிறகு அமைதியாக தன்னையே கவனித்துக்கொண்டிருக்கும் அந்த ஆயாவையே பார்த்தபடி நடந்துசென்று வாகனத்தில் ஏறி உட்கார்ந்து சென்னைக்குச் செல்லும்படி சொன்னார் வீரமுத்து.

Series Navigation
author

பாவண்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    Ram says:

    பின் நாற்பதுகள் முன் ஐம்பதுளில் எங்கள் ஊர் ஒரு பள்ளி எட்டாவது வரை தான் பக்கத்தில் ஒரு செக்கு அங்கு நல்லெண்ணெய் தான் ஆட்டப்படும் கடலெண்ணெய் என்பதெல்லாம் தெரியாது ” சோக்கு ‘ என்று அவனை கூப்பிடுவோம் பள்ளி மாணவர் எப்போதாவது போனானால் எள்ளுபுண்ணாக்கு எண்ணையோடு சேர்த்தது கொடுப்பான் செக்கு மாடுபோல் அதை ஒட்டிக்கொண்டு சுற்றிவருவான் அவன் ஞாபகம் வந்தது ஒரே ஒரு நாள் இதழ் சுதேசமித்திரன் தினம் இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ் ( தற்போதைய ராமேஸ்வரம் விரைவு வண்டி ) காலை எட்டு மணிக்கு வரும் ஜப்பான் மீது அணு குண்டு வீச்சு பிறகு ஒருநாள் காந்தி சுடப்பாட்ட செய்தி நினைவுக்கு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *