சீன காதல் கதைகள் 4. வெண்ணிற நாக கன்னி

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

4. வெண்ணிற நாக கன்னி

ஹாங்சாவ் நகரின் அழகே அழகு. அந்த இயற்கை அழகிற்கு அழகு சேர்க்கும் வகையில் மேற்கு ஏரி மிகவும் அகன்ற பரப்பில் பரந்து விரிந்து காணப்பட்டது. அந்த ஏரியின் நடுவே அழகிய பாலம் ஒன்று, மக்களைக் கழிப்பில் ஆழ்த்தி வந்தது. அந்தப் பாலம் உடைந்த பாலம் என்;று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தது. கல்லறை சுத்தம் செய்யும் நாளன்று, ஏராளமான பயணிகள் அந்தப் பாலத்தின் மேலும், ஏரியின் நாலாபக்கங்களிலும் வசந்த கால அழகை ரசிக்கவும், படம் வரைந்து அழகினை சிறை படிக்கவும் முயன்று கொண்டிருந்தனர். அந்த இயற்கைக் காட்சி கொள்ளை கொள்ளாத மனங்களே இல்லை என்று சொல்லலாம்.

அப்போது அங்கே திடீரென்று அற்புத அழகு கொண்ட கன்னியர் இருவர் மேற்கு ஏரியின் நீருக்கு மத்தியிலிருந்து தோன்றினர். ஏன்? எப்படி அந்தப் பெண்கள் ஏரியின் மத்தியிலிருந்து அப்படி வெளியே வர முடிந்தது? அவர்கள் யார்? கடவுளா? தேவதைகளா?

அவர்கள் இருவரும் நாக கன்னிகள். பல வருட தவத்திற்குப் பிறகு பெற்ற அரிய சக்தியினால், வெண்ணிறமும்; பச்சை நிறமும் கொண்ட அவ்விரு நாக கன்னிகளும், அப்போது தான் மானுட உருக்கொண்டு ஏரிக்கு மத்தியிலிருந்து வெளியே வந்தனர்.
ஒருத்தி வெண்ணிறத்தில் அளவான உயரத்துடன், நேர்த்தியான கூந்தல் அலங்காரத்துடன், கையில் உடைக்கு ஏற்ற வண்ணத்தில், விசிறியை வீசிய வண்ணம் நடந்தாள். மற்றொருத்தி பச்சை நிறத்தில் சற்றே உயரம் குறைந்தவளாக, குறைந்த கூந்தல் அலங்காரங்களுடன், கையில் நீர் குடுவை ஒன்றை பற்றிக் கொண்டு, வெண்ணிற கன்னியின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வண்ணம், ஓட்டமும் நடையுமாக தொடந்தாள்.

அவர்கள் பேரழிகள் மட்டுமல்லாது அன்பானவர்களாகவும் தோன்றினார்கள். உதாரண குணமுடையவர்களாகவும் இருந்தனர். அது எப்படித் தெரிந்தது?

அவர்கள் மனிதர்களாக வெளியே பாலத்திற்கு வந்ததுமே, மக்களோடு மக்களாகக் கலந்தனர். நடந்து செல்லும் வழியில் பலருக்கும் அன்புள்ளம் கொண்டு உதவியபடிச் சென்றனர். அவர்களில் வெண்ணிற நாகக் கன்னி மிகவும் அமைதியான தோன்றம் கொண்டிருந்தாள். பச்சை நிற நாகக் கன்னி அதிகச் சுட்டித்தனம் கொண்டிருந்தாள். போவோர் வருபவர்களிடம் பேச்சுக் கொடுத்து சீண்டியவண்ணம் நடந்தாள். அமைதியானவள் பதுமையென நிதானமாக நடந்து கொண்டிருந்தாள். மனித வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்த இருவரும், மனிதர்களைப் போன்று பெயர்களையும் வைத்துக் கொண்டனர். உயரமான அமைதியானவளின் பெயர் பை சூ ஜென். குட்டையான சுட்டிகையானவளின் பெயர் சியாவ் சிங்.

அந்த மேற்கு ஏரியின் அழகிய கரைகளில் விளையாடுவதை அவர்கள் பெரிதும் விரும்பினர். ஆமாம்.. அவர்களுக்கு அங்கு என்ன வேலை? ஏன் ஹாங்சாவ் நகரத்திற்கு வர வேண்டும்? ஏரியில் ஏன் உயிர் வாழ வேண்டும்? ஏன் இப்போது மனித உருப்பெற்று நடமாட வேண்டும்?

வெண்ணிற நாகக் கன்னி பாம்பாக எமெய் மலையில் வசித்து வந்தாள். அப்போது ஃபா ஹாய் என்ற புத்தத் துறவி, அதைச் சிறை பிடித்தார். அச்சமயம் அங்கிருந்த இடையனொருவன் அதைக் கண்டான். பாம்பிற்கு பரிதாபப்பட்டு துறவியிடம் சென்றான்.

“ஐயா.. பாம்பைக் கண்டால் பாவமாக இருக்கிறது. தயவுசெய்து விட்டு விடுங்கள்!” என்று கெஞ்சினான்.

துறவி, “இது சாதாரண பாம்பு கிடையாது. அதனால் தான் பிடித்திருக்கிறேன்” என்றார்.

“அது எப்படி இருந்தாலும், நீங்கள் அதைப் பிடித்தது சரியல்ல. தாங்களோ துறவி. இதில் பாம்பை சிறைபிடிப்பது தவறல்லவா? இது உங்களுக்கு அழகா?”

“என்னிடம் எதுவும் பேச வேண்டாம். இந்தப் பாம்பை என்னால் விட முடியாது” என்றார் பிடிவாதமாக துறவி.

“பாம்பை விட்டு விடுங்கள். நீங்கள் எதைச் சொன்னாலும் நான் செய்கிறேன்” என்று வாக்குக் கொடுத்தான்.

“நீ இவ்வளவு சொல்வதால் நான் இந்தப் பாம்பை இப்போது விடுகிறேன். ஆனால் நான் அதை பிடிக்காமல் விடப் போவதில்லை” என்றார்.

துறவி பாம்பினை விட்டார். துறவியிடமிருந்து தப்பிய பாம்பு இனி எப்போதும் இந்த இடத்திற்கு வரக் கூடாது என்ற முடிவுடன், அந்த இடத்தை விட்டு வெகு வேகமாக சரசரவென்று விரைந்து சென்றது.

இடையனின் கருணையினால், வெண்ணிற நாகக் கன்னி விடுதலை பெற்று தன் வாழ்க்கையைத் தொடரச் சென்றது. இடையன் செய்த உதவி மட்டும் அதன் மனதை விட்டு அகலாமல் இருந்தது.
பல வருடங்கள் அந்த எமெய் மலையிலேயே வெளியே எங்கும் செல்லாமல் தன்னுடைய சக்திகளைக் கூட்டிக் கொள்ள பல வகையிலும் பயிற்சிகளை மேற்கொண்டது. பல ஆண்டு பயிற்சிகளுக்குப் பிறது, அந்த மலைக்குகைக்குள் மனித உருவம் பெறும் சக்தியினைப் பெற்றது. உடன் அது தேவதை ஆகும் தகுதி பெற்றது.

பாம்பின் குருவாக போதிசத்துவர் குவான் யின் இருந்தார். அவர் பாம்பிடம், “தேவதை ஆவதற்கு முன், உனக்கு உதவி செய்தவர்களுக்கு கைமாறு செய்வது நல்லது” என்றார்.

உடனே பாம்பிற்கு அந்த இடையனின் ஞாபகம் தான் வந்தது. அவனில்லாமல் தான் இந்த தேவதை அந்தஸ்தைப் பெற்றிருக்க முடியாது என்று உறுதியாக நம்பியது.
உடனே குருவிடம், “என்னை துறவியிடமிருந்து பாதுகாத்த இடையனுக்குத் தான் கைமாறு செய்ய வேண்டும். ஆனால் அவன் எங்கே எப்படி இருக்கிறான் என்று தெரியாதே” என்று கேட்டது.

“அந்த இடையனை சந்திக்க வேண்டுமென்றால் நீ ஹாங்சாவ் நகருக்குச் செல். அங்கு அந்த இடையனைப் பார்த்த மாத்திரத்தில் உன்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியும்” என்றார்.

உடனே இடையனைக் காணப் புறப்பட்டது பெண்ணாக மாறிய பாம்பு.

அதன் காரணமாகத் தான் வெண்ணிற நாகக் கன்னி ஹாங்சாவ் மேற்கு ஏரிக்கு வந்து, அங்கு வாழ்ந்து கொண்டிருந்த பச்சை நாகக் கன்னியைச் சந்தித்தாள்.

அவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் இடையனைத் தேடிச் சென்றனர். அவர்களால் எளிதில் கண்டு பிடிக்க முடியவில்லை. அது பை சூ சென்னிற்கு ஏமாற்றத்தைத் தந்தது.

“என்ன இது.. இடையன் கண்ணிலே அகப்படவேயில்லையே?” என்றாள் பை சூ சென் ஏமாற்றத்துடன்.

“கவலைப்படாதே.. குரு அவன் இங்கு தான் இருப்பதாகச் சொன்னார். அதனால் அவன் நிச்சயம் நம் கண்களுக்கு அகப்படாமல் போக மாட்டான். அது வரை இந்த இயற்கையை ரசி..” என்றாள் சியாவ் சிங்.

இருந்தாலும் தன் சக்தியைக் கொண்டு தேடிய வண்ணம் இருந்தாள்.

மிகவும் சோர்வுற்று பை சூ சென், “எனக்கு நடந்து நடந்து மிகவும் களைப்பாக இருக்கிறது. வா.. சிறிது நேரம் அந்தக் கூடத்தில் உட்காரலாம்” என்று சொல்லிக் கொண்டே மேற்கு ஏரியின் உடைந்த பாலத்திற்கு அருகே, கரையிலிருந்த ஒரு கூடத்தை நோக்கிச் சென்றாள். உள்ளே சென்று அமர்ந்தனர்.

அப்போது அந்த உடைந்த பாலத்திற்கு அருகே ஒரு அழகிய வாலிபன் நின்றிருப்பதைக் கண்டாள் சியாவ் சிங். உடனே பை சூ சென்னிடம், “அங்கே பார்.. அந்த வாலிபன் எவ்வளவு அழகாக இருக்கிறான்?” என்று காட்டினாள்.

அவனைக் கண்டதும் பை சூ சென்னிற்கு ஏதோ ஒரு புரியாத உணர்வு. தன்னுடைய சக்தியைக் கொண்டு அவனை யாரென்று அறிய முயன்றாள்.

அவள் இத்தனை நாள்கள் எண்ணிக் கொண்டிருந்த மனிதன் அவன் தான் என்பதை அறிந்தாள். உடனே அவளது மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. பச்சைக் கன்னியிடம் தான் வந்த காரணம் நிறைவேறியதைக் குறித்துச் சொன்னாள்.

அதன் பிறகு, இருவரும் அந்த வாலிபனை நோட்டம் விடத் தொடங்கினர். அவன் அவ்விடத்தை விட்டு அகன்றதும், அவனைப் பின் தொடர்ந்தனர். அவன் “சுத்த அலை வாயி”லுக்குச் செல்லும் வரை சென்றனர்.

அப்போது திடீரென்று மழை பொத்துக் கொண்டு பெய்தது.

அவர்கள் மேலும் வேகமாகச் சொறிந்தது. அவர்கள் மழையில் நனையாமல் ஒதுங்க முயன்று ஓடிய போது, எதிர்பாராத விதமாக அவர்கள் பின் ஒரு கை குடையோடு தோன்றி நனையாமல் தடுத்தது. தங்கள் மேல் மழை நீர் விழாததைக் கண்டு என்ன நடக்கிறதென்று பார்க்கத் திரும்பிய போது, அவர்கள் இத்தனை நேரம் தொடர்ந்த வாலிபனே அவர்களுக்கருகே உதவி செய்யும் நோக்கோடு, குடையுடன் நின்றிருப்பதைக் கண்டு இருவரும் ஆச்சரியப்பட்டனர்.

அதுவே வாலிபனுக்கும் வெண்ணிறக் கன்னிக்கும் முதல் சந்திப்பும் ஆனது. முதல் சந்திப்பிலேயே இருவரும் ஒருவரை ஒருவர் மனம் பறிகொடுத்து நின்றனர்.

சிலை போன்று நின்ற இருவரையும் தன் நிலைக்குக் கொண்டு வர, பச்சைக் கன்னி சியாவ் சிங், அந்த வாலிபனிடம், “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டாள்.

“என் பெயர் சூ சின். நான் இந்த உடைந்த பாலத்திற்கு அருகே வசிக்கிறேன்” என்றான்.

பின் பை சூ சென்னும் சியாவ் சிங்கும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். நாக கன்னிகள் என்பதை மட்டும் வெளியிடவில்லை.

சியாவ் சிங்கின் உதவியோடு, அன்று முதல் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள ஆரம்பித்தனர். பிறகு இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

வெண்ணிற நாக கன்னி மலைகளிலே வாழ்ந்து வந்ததால், அங்கு கிடைக்கும் மூலிகைகைளப் பற்றி நன்கு அறிந்திருந்தாள். அதனால், தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த அந்தத் திறனை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்து, விரைவில் அவர்கள் ஒரு மருந்துக் கடையைத் திறந்தனர். அதுவே இன்றும் பிரபலமாக இருக்கும் இணக்கம் காக்கும் சாலை.

அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

நிறைய நோயாளிகளைக் குணப்படுத்தினர். பெயர் தெரியாத, ஊகித்து உணர முடியாத பல வகை நோய்களையும் குணப்படுத்தினர். ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வைத்தியம் செய்தனர். அதனால் அவர்களது தொழில் மிகச் சிறப்பான முன்னேற்றம் கண்டது.

நாள்கள் செல்லச் செல்ல, அவர்கள் மேல் அதிக நம்பிக்கை கொண்டு அதிகமான மக்கள் சிகிச்சை பெற வந்த வண்ணம் இருந்தனர். ஊரில் உள்ளவர் பை சூ சென்னை மரியாதையுடன் “திருமதி வெள்ளை” என்று அழைக்க ஆரம்பித்தனர்.

அவர்களின் சுகமான வாழ்வும், வைத்தியத்தினால் பெறும் மதிப்பும் மரியாதையும் ஒருவரது பொறாமையை வளர்த்தது.

அவர் தான் புத்தத் துறவி ஃபா ஹாய். அவருக்கு எப்போதுமே பை சூ சென்னை கண்டாலே பிடிக்காது போனது. அதனால் அவளை சந்திக்கும் போதெல்லாம் எதிர்த்த வண்ணமே இருப்பார். புத்தர் பெயரையும் போதுசத்துவர் குவான் யின் பெயரையும் சொல்லி அவளை வெறுப்பேற்றுவார்.

துறவி ஃபா ஹாய் ஜென்ஜியாங் மாகாணத்தில் இருந்த ஜின் ஷான் மலையிருந்த ஜின் ஷான் புத்த ஆலயத்தில் வாழ்ந்து வந்தார்.

திருமதி வெள்ளையின் மிகச் சரியான வைத்தியத்தின் காரணமாக, புத்தரை வணங்க ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்ததும் அவரது கோபத்திற்கு காரணமாக இருந்தது.

ஒரு நாள் அவர் இணக்கம் காக்கும் சாலைக்கு வந்து திருமதி வெள்ளை தரும் வைத்திய முறையை நேரில் கண்டார். அங்கு நடப்பதைக் கண்டதும், அவருக்கு மேலும் அதிகக் கோபம் வந்தது. மிகவும் கூர்ந்து ஆராய்ந்த பின்னர் தான், அவருக்கு திருமதி வெள்ளை ஒரு மானிடப் பெண்ணே அல்ல என்பது புரிந்தது. அவளே வெள்ளை நாகக் கன்னி என்பதையும் அறிந்தார்.

ஃபா ஹாய்க்கு மந்திரச் சக்திகள் இருந்தன. ஆனால் இளகிய மனம் இருக்கவில்லை. ஏழை எளியவர்க்கு உதவும் நோக்கமும் இருக்கவில்லை. திருமதி வெள்ளையின் உண்மை தெரிந்த நேரத்திலிருந்து, இணக்கம் காக்கும் சாலையின் பெயரைக் கெடுக்கவும், தம்பதியினரைப் பிரிக்கவும் தினம் தினம் பல விதமான முயற்சிகள் மேற்கொண்டார்.

ஒரு நாள் சூ சின்னைச் சந்தித்து, ஜின் ஷான் ஆலயத்திற்கு இரகசியமாக வருமாறு கூறினார். அங்கு வந்த அவனிடம், “உன்னுடைய மனைவி ஒரு நாக அரக்கி. நீ அவளை உடனே பிரியாவிட்டால், அவள் உன்னை விழுங்கி விடுவாள்” என்று எச்சரித்தார்.

ஆனால் அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த சூ சின், “என் மனைவி அன்பும் பண்பும் நிறைந்தவள். அவள் என்னை மிகவும் நேசிக்கிறாள். அவள் நாக கன்னியாவே இருந்தாலும், அவள் எனக்கு எந்த ஊறும் விளைவிக்க மாட்டாள் என்பது நிச்சயம். அதுவும் இல்லாமல் அவள் இப்போது கருவுற்றிருக்கிறாள். அவளை நான் ஒரு போதும் பிரிய மாட்டேன்” என்றான் உறுதியுடன்.

துறவி ஃபா ஹாய், அவன் தன்னை நம்பவில்லை என்பதை உணர்ந்ததும், மேலும் கோபமடைந்தார். அவனை அப்போதே அந்த ஆலயத்திற்குள்ளேயே சிறை வைத்தார்.
அன்றிரவு திருமதி வெள்ளை இணக்கம் காக்கும் சாலையில் சூ சின்னின் வருகைக்காக காத்திருந்தாள்.

சூ சின் இல்லத்திற்கு திரும்பவில்லை.

மறுநாள் வந்தது. அன்றும் அவன் வரவில்லை.

இப்படியே பல நாள்கள் சென்றன.

கணவனைக் காணாமல் மனம் வருந்தி அவனைக் கண்டுபிடிக்க பல வழியில் முயன்று தோற்றாள் திருமதி வெள்ளை. துறவியின் மந்திரச் சக்தியின் முன் அவளது சக்தியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சியாவ் சிங்காலும் உதவி செய்ய முடியவில்லை.

இறுதியில் ஒரு நாள், சூ சின் ஆலயத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் விசயம் திருமதி வெள்ளைக்குத் தெரிய வந்தது.

உடனே திருமதி வெள்ளையும் சியாவ் சிங்கும் ஆலயத்திற்கு ஓடிச் சென்றனர்.

சூ சின்னை விடுவிக்குமாறு துறவியிடம் வேண்டி நின்றனர்.

ஆனால் துறவியோ மிகுந்த கோபத்துடன், “நாக அரக்கியே.. நீ இந்த பூவுலகத்தை விட்டு ஓடிவிடு. இல்லாவிட்டால் நான் உன்னை தண்டிக்காமல் விட மாட்டேன்” என்றார்.

திருமதி வெள்ளையை கீழ்தரமாகப் பேசி அவளை புண்படுத்தினார்.

சூ சின்னை அந்த ஆலயத்திலிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்ல, துறவியின் சக்தி தன்னை விட அதிகமானது என்று தெரிந்திருந்த போதும், அவளுக்குத் தன் சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை.

அவள் தன் தலையிலிருந்த தங்கக் கம்பியை எடுத்து, மந்திரம் சொல்ல ஆரம்பித்தாள்.

மின்னல் வேகத்தில், ஜின் ஷான் ஆலயத்தை வெள்ளம் சூழ்ந்தது. மாபெரும் அலைகள் ஜின் ஷான் மலையின் மேல் வந்து மோதின. புத்தத் துறவி தன்னுடைய நீண்ட அங்கியை எடுத்து, ஜின் ஷான் ஆலயக் கதவினருகே ஒரு உயர்ந்த கரையை ஏற்படுத்தினார். வெள்ளம் ஒவ்வொரு அடி கூடும் போதும், கரையும் ஓரடி உயர்ந்து ஆலயத்தைக் காத்தது.

திருமதி வெள்ளை கர்பிணியாக இருந்ததால், அம்முறை, துறவி ஃபா ஹாய்யை வெற்றி கொள்ள முடியாமல் போனது. சியாவ் சிங்காலும் எதும் செய்ய முடியவில்லை.

இறுதியில், திருமதி வெள்ளையை தனது சக்தியைக் கொண்டு, ஒரு மந்திரப் பாத்திரத்தில் அடைத்தார். அன்று முதல், அவள் வெய்பெங் பகோடாவில் சிறை வைக்கப்பட்டாள்.

தம்பதியினர் இருவரும் பிரிந்தனர்.

ஆனால் சியாவ் சிங் அவர்களை அவ்வாறு இருக்க ஒப்பவில்லை. ஜின் ஷான் மலையிலிருந்து தப்பியோடி, மலைகள் அடர்ந்த இடத்திற்குச் சென்று, பல வருடங்கள் பயிற்சி பெற்று சிறந்த மந்திரச்சக்தியைப் பெற்றாள்.

மிகுந்த சக்தியுடன் திரும்பிய சியாவ் சிங், துறவி ஃபா ஹாயை எதிர்த்துப் போராடி வென்றாள்.

அவள் அப்போது துறவியை ஒரு நண்டின் வயிற்றில் தங்குமாறு வற்புறுத்திச் சிறை வைத்தாள்.

அதற்குப் பிறகு சூ சின்னையும் திருமதி வெள்ளையையும் அவளது மகனான சூ மெங்சியாவ்வையும் சிறையிலிருந்து விடுவித்தாள். அதன் பின், அனைவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தனர்.

Series Navigation
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *