தினம் என் பயணங்கள் -18 பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத் தேர்வு

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி​

 

 

பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள் வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்து விடுவது உண்டு. இந்த பயணம் கல்வி உயர்வுக்கான பயணம். 19.05.2014முதற்கொண்டு 23.05.2014 வரையிலான தமிழ் இலக்கியம் (B.LIT) பட்ட படிப்பிற்கான முதலாமாண்டுத்​ தேர்வு.  இதற்கு முன்பே பி.சி. ஏ [B.C.A -Bachelor of Computer Application] ​பட்ட படிப்பிற்காக விண்ணப்பித்துப் பணம் கட்டியும் என்னால், அழைத்து செல்ல ஆள் இல்லாததாலும், பிராக்டிகல் வகுப்பில் கலந்து கொள்ள இயலா காரணத்தினாலும் தேர்வு எழுத முடியாமல் போனது.

 

வேலை செய்து கொண்டே படிப்பதும், சிரமமாகத்தான் இருந்தது. அக்காலக் கட்டச் சூழ்நிலையில் இரவு 12 மணிவரை வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பங்களைத்தட்டச்சு செய்து அதன் பிறகு வந்து புத்தகத்தை எடுத்து வைத்துப் படிப்பது என்பது மனதிற்குச் சாத்தியமானதாக தோன்றினாலும் உடல் ஒத்துழைப்பு தரவில்லை.

 

இந்த தேர்வு எக்காரணங்களினாலும் எழுதாமல் போய்விடக் கூடாது என்பதில் முன்கவன உணர்வோடு இருந்தேன். ஐந்து நாட்கள் விடுப்பு அளிக்க மறுத்த துணை வட்டாட்சியரிடம் ஊதியமற்ற விடுப்புதானே, அனுமதி தாங்க சார் என்று வாதிட்டுத்தான் விடுப்பு பெற வேண்டியதாக இருந்தது.

 

உடன் வருவதற்கு எங்கள் குடும்ப நண்பரும் எனக்குத் தூர உறவு வகையில் இளைய சகோதருமான விஜய் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அடுத்து வாகன ஏற்பாடு,என்னால் பேருந்தில் ஏற முடிவதில்லை. எனவே கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக ஆட்டோவையே பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மிகவும் பழக்கமான ஆட்டோ ஓட்டும் நண்பர்கள் வெளிநாடு சென்று விட, புதியவர்கள் பலர் எங்கள் பயணங்களுக்குத் துணை வருவ தில்லை. பணம் குறித்த விடயங்களில் தகராறு வராத போதிலும். பயணச் சமயங்களில் கூடுதல் நேரம் காத்திருக்க நேர்ந்து விட்டால் முறுமுறுக்க துவங்குவது எனக்கு சங்கடத்தை உண்டு பண்ணும் ஆகையால் ஆட்டோ ஓட்டுனர்களைத் தேர்ந்தெடுப் பதில் மிகவும் கவனமும் இருந்து கொள்வேன்.

 

அந்த வகையில் யோசித்துதான் தேவன் என்பவரின் ஆட்டோவைப் பயணத்திற்கு அமர்த்தினேன். சமீப கால என் பயணங்கள் பலவற்றில் எனக்கு உறுதுணையாக இருந்து மனதில் சகோதர இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார் அவர்.

19.05.2014 அன்று காலை ஏழு மணிக்கே செங்கத்தில் இருந்து புறப்பாடு ஆயிற்று. விஜய் முறையாறு வந்து இறங்கி விடுவதாகச் சொல்ல, பயண வழியில் ஏதும் சுவராசியமான சம்பவங்கள் நிகழாமல் மரம் செடிக்கொடி

​ ​

களோடு பேசியபடி கடந்து கொண்டிருக்க, “என்னக்கா படிச்சதை எல்லாம் ரிவைஸ் பண்ணி பார்க்கிறாயா,” என்று வினவினான் தேவன்.

 

படித்தது நினைவில் வர மறுத்தது. ஒரு விதப் பதட்டமும், பயமும் சங்கடத்தை உண்டு பண்ணிக்கொண்டிருக்க என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். எந்த தேர்விற்கும் நான் இப்படி பயந்ததில்லை. இது இனம் புரியாத பயம்.

 

முறையாறில் விஜயை ஏற்றிக்கொண்டு எங்கள் பயணம் தொடர்ந்தது. வழி நெடுகிலும் பொட்டல் காடுகள்தான். முன்பிருந்த மரங்களையும் வெட்டிச் சாலையை அகலப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

 

சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் தான் தேர்வு. நாங்கள் பள்ளி வாசலில் ஆட்டோவில் தாமதிக்க விஜய் எனக்கான தேர்வு அறையை பார்த்துக்கொண்டு வருவதாக கூறிச் சென்றான்.

 

விஜய் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் தேர்வு என்றதினால் நான் தேர்வு கால அட்டவணையைப் பார்க்க வில்லை. அப்பொழுது தான் தேர்வு கால அட்டவணையை எடுத்துப் பார்க்க தேர்வு மாலை 2 மணியிலிருந்து 5 மணி வரையிலும் என்பதை அறிந்தேன்.

 

விஜய்க்கு தகவல் கூறி வரும்படி அழைக்க, அடுத்த 5 மணி நேரங்கள் எங்கிருந்து காலத்தை கடத்துவது என்ற கேள்வி எழுந்தது. விஜய் தன் நண்பனின் அறை இருப்பதாகவும் ஒரு 10 படிகள் தான் இருக்கும் அங்கு போய் தாமதிக்கலாம் என்று கூற, இந்த வேதனை விளையாட்டிற்கு நான் வரவில்லை. படிகள் என்னால் ஏறமுடியாது என்று சொல்லிவிட்டேன்.

 

படிகள் ஏறுவதுதான் இலக்கு எனும் போதில் படிகள் ஏறுவது என்பது அத்தனை சிரமமான காரியம் இல்லை எனும் போதிலும். நான் சற்று தடுமனான பெண்மணியாய் இருப்பதினால், உடல் அசைவுகளைக் காட்சி பொருளாக்க விருப்பமின்மையும், பெண்ணிற்கே உரித்தான நாணமுமே இதற்கு காரணம். பல வேளைகளில் பாலினம் கடந்து அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டியதான அவசியத்தை நான் உணர்ந்த போதிலும், சில நேரங்களில் பாலுணர்வு அற்றவளாக நான் சக மனிதர்களோடு பழகிய போதிலும், முற்றிலும் ஆன பாலுணர்வு சாராதவளாய் இருக்காமல் போவது பெண்மையின் இயல்பாய் இருக்க கூடும் என்று எண்ணுகிறேன்.

 

முதலில் ஏதேனும் ஒரு ஓட்டலுக்கு போய்ப் சாப்பிடுவது என்று முடிவானது. என்னால் ஓட்டலுக்கு வர முடியாது, நீங்கள் போய் சாப்பிடுங்கள் நான் ஆட்டோவிலேயே காத்திருக்கிறேன் என்று கூறினேன்.

 

இருவருக்கும் கோபம் உச்சந் தலையில் நடனமிட, இட்லியும் பூரியும் வாங்கிக்கொண்டு ஏதேனும் மரத்தடியில் உண்டு கொள்வது என்று முடிவானது. (பாசக்கார பய புள்ளைங்க என்ன விட்டுட்டு சாப்பிட மாட்டாங்களாம்)

 

அடுத்து மர நிழல் தேடும் படலம். இந்த படலத்தில் தான் வாழ்க்கையின் முரண்களை அதன் எளிமையையும் காணும்படி நேர்ந்தது. ஆர்.டி.ஓ குடியிருப்புக்கு அருகாமைக்கல் மண்டபம். அதன் அருகில் புளிய மர நிழல். சுற்றுபுறம் தூய்மையாக இருந்ததினாலும், கல்மண்டபத்திற்கு அருகில் கட்டப்பட்டிருந்த சிறிய கட்டடத்தில் வசித்த பாட்டி அன்போடு வாங்க வாங்க என்று வரவேற்பு நல்கியதினாலும் அங்கு உணவருந்துவது என்று முடிவாயிற்று.

 

பாட்டி வள வளவென்று பேசிக்கொண்டே இருந்தாள் பொக்கை வாய் புன்னகை மாறாமல்.

 

அங்கே இன்னுமொரு பாட்டியும் இருந்தாள். மரத்தடிக் கட்டாந் தரையில் பாய் விரித்து மேலாடை இல்லாமல் பாவடை மட்டும் அணிந்து படுத்திருந்தாள். முகத்தில் வரி ஓவியங்கள் அழுத்தமாக வரையப்பட்டிருந்தன. ஜாக்கெட் அணியாத ஒட்டிய முலைகள் எந்த முரண் காட்சியையும் உருவாக்க வில்லை. நரைத்துக் கலைந்த தலைமுடி. புன்னகையோடு பேசிக்

​ ​

கொண்டிருந்த பாட்டியை விட என் கவனம் நொந்து படுத்திருந்தவளின் மீதே கிடந்தது.

 

விஜய்தான் விசாரித்தான் அந்த பாட்டி உறவினரா என்று.

இல்ல, அவ யாரோ இங்க தான் பிச்சை எடுத்துப் பொறுக்கினு இருந்தா, எங்கயோ போய் விழுந்து இடுப்பை ஒடிச்சுகினு வந்துட்டா, என் பொண்ணு கையில கால்ல விழற அதான் 400 ரூபாய் வாடகைக்கு விட்டிருக்கா என் பொண்ணு என்று கூறினாள் பாட்டி.

 

ஒரு கட்டாந் தரையும், கோணிப் பைகளினால் வேய்ந்த சிறு குடிசையும் 400 ரூபாய் வாடகைக்கு சக மனுஷிக்கு விடப் படுகிறது. அதுவும் அந்த புன்னகைப் பாட்டியின் பேச்சில் அத்தனை அன்பும் இருக்கவில்லை. அந்த இடத்தில் நோயாளிப் பாட்டியான அவள் எத்தனை முரண் பேச்சுகளை சந்திக்க வேண்டி இருந்தது என்பதை நான் கண்கூடாகவே பார்க்க நேர்ந்தது.

உடன் வந்த விஜயு,ம் தேவனும் அது எதார்த்தம், வாழ்க்கையின் இயல்பு. அந்த புன்னகைப் பாட்டி நன்றாக இருக்கிறாள், அவள் வேலையை அவளே செய்து கொள்கிறாள். ஆனால் இவள் நோய்வாய்ப் பட்டிருக்கிறாள். ஒரு சலிப்பு வரத்தான் செய்யும் என்று கூறினார்கள்.

 

எந்த உறவும் உடன்படிக்கையும் இல்லாத நேரத்தில் அந்த கிழவியை உடன் இருக்க அனுமதிப்பதே பெரிய விடயம் என்று கூறினான் விஜய்.

 

அந்த பாட்டி கோல் ஊன்றி நடந்தாள். அந்த புளிய மரத் தடியையே சிறுநீர் கழிக்கும் இடமாகப் பயன்படுத்தினாள். ஒற்றைக் கோலை தரையில் ஊன்றி எத்தி எத்தி நடந்து பாவடையை தூக்கிப்பிடித்து நின்றபடி அவள் சிறுநீர் கழித்தது அவளின் இயலாமையை எடுத்து இயம்ப எனக்கு வேதனை அளித்தது.

 

ஒருத்தி இயலாமையை எப்படி விளக்குவது? அல்லது விளங்கச் செய்வது. இயலாமையை அனுபவித்து உணர்ந்தால் தவிர பார்த்து உணரவோ, கேட்டு அறியவோ முடியாது.

 

இயலாமையின் நாட்களைத்தான் அந்த பாட்டியும் கழித்துக் கொண்டிருக்கிறாள். ஏச்சுகளும் பேச்சுகளும், உடன் உறவுகளோ பிள்ளைகளோ இல்லாத நிலையில் அவள் மனநிலை எப்படி இருக்கும்.?

 

சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு வெயில் வரத் துவங்கியது. அவ்விடத்தை விட்டு நிழலிற்காக வேறு இடம் போக எத்தனித்தோம். எதிர்புறத்தில் அரசினர் கலைக் கல்லூரி அதன் உள் நுழைய முன்புறக் கட்டடங்களில் மாணவர்கள் குழுமி யிருந்தார்கள். கல்லூரியின் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கு எந்த இடத்திலும் நிழல் இல்லை.

 

அங்கிருந்து இன்னும் பின்புறம் செல்ல ஒரு பார்க் இருந்தது. மரங்களால் சூழப்பட்டிருக்க சிமெண்ட் பென்ச் புல்தரை என்று குளிர் நிழல் தரும் சூழல். சுற்றிலும் இயற்கை காட்சிகள் சூழ கண்களை ஆச்சர்யத்தில் விரிய செய்தது. அதன் அருகாமையில் மாணவர் விடுதியாய் இருக்க வேண்டும்.

 

அந்த பார்க்கில் மூவர் இருந்தார்கள். அந்த மூவரில் ஒருவன் மிகவும் கருத்தாக படித்துக் கொண்டிருந்தான். மற்ற இருவர் கருத்தாக பீர் பாட்டிலை கையில் வைத்தபடி ரசித்து குடித்தபடி பேசிக் கொண்டிருந்தார்கள். விஜய் ஒரு சிமெண்ட் பெஞ்சில் தஞ்சம் புகுந்துவிட, தேவன் புல்தரையில் படுத்துவிட நான் தூரத்தில் இருந்த மலையையும் அந்த மலையை காணும் போது இடையில் தோன்றிய வெப்ப அலைகளினால் ஏற்பட்ட கானல் போன்ற நீர் திவலைகளையும் ஆழ்ந்து காணுவதில் காணாமல் போய்கொண்டிருந்தேன்.

 

வீடு உறவுகள் இல்லாத அந்த பாட்டி மனதை நெரித்தாள். மணி 12 ஆக அவ்விடம் விட்டுப் புறப்பட்டு மீண்டும் அந்த பாட்டி இருந்த இடத்திற்கே வந்தோம் அந்த புன்னகைப் பாட்டி எங்கோ போய்விட்டிருக்க மற்றவளிடம் 20 ரூபாயை அன்புடன் கொடுத்து விட்டுத் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றோம்.

 

சண்முகா தொழிற்சாலை மாணவர்களினால் நிரம்பி வழிந்தது. விஜய் தேர்வுக்கான அறையை கண்டுபிடித்துக் கொண்டு வந்தான்.  மூன்றாவது மாடியில் 15 ஆவது அறை. எப்படி இடம் ?

 

தேர்வு பெரும்பாலும் மாடியிலேயே நடப்பதால் முன்கூட்டியே பிளாஸ்டிக்  சேர் ஒன்றைக் கொண்டு வந்திருந்தோம். சேரில் நான் அமர்ந்து கொள்ள இருவருமாகஎன்னைத் தூக்கிச் செல்வது என்பது பேச்சு.

 

அப்பொழுது தான் அவளை பார்த்தேன். வெள்ளை நிற சர்ட்டும் நீல நிறப் பாவடையையும் அணிந்திருந்தாள். மிக ஒல்லியாக, பின்புறம் கூன் போட்டிருப்பதால் ஓணான் முதுகு போன்ற முதுகை உடையவளாக அவள் இருந்தாள். கால்கள் சூம்பிப் போய்க் குச்சி குச்சியாய் நீண்டிருந்தது. அவளை அழைத்து வந்தவரிடம் சாயந்திரம் வருவாயா மாமா என்று வினவினாள். போன் செய் பாக்கிறேன் என்றார் அவர். போன் செய் வருகிறேன் என்று சொல்லாதது மனதை நெருடியது.

 

என்னைப்போல் தேர்வு எழுத வந்த ஒரு மாற்றுத் திறனாளி !

 

அவள் அவளின் பேகை முதுகில் மாட்டிக்கொண்டு கைகளை தரையில் அழுத்தமாக ஊன்றி சர சரவென நகர்ந்த விதம் ஒரு உடும்பின் நகர்ச்சி ஓட்டத்தை முன்நிறுத்தி தோற்றம் ஓணானை நினைவுப்படுத்தியது.

 

பாரு அது எப்படி போகுது நீயும் அப்படி போ என்றான் விஜய்

நான் முகம் வாடினேன்.

 

அக்கா குண்டா இருக்காங்கண்ணா அவங்களால போக முடியாது நீ உட்காருக்கா நாங்க தூக்கிட்டு போறோம் என்றான் தேவன்.

 

பிளாஸ்டிக் சேர் என்பதால் என்னை அமர வைத்து தூக்கிச் செல்வது சிரமமாகதான் இருந்தது அவர்களுக்கும். அவர்களின் கைகளில் பிளாஸ்டிக் சேரின் தடம் அழுத்தப்பதிந்தது.

 

அவர்களின் வலி உணரமுடிந்தது என்னால். நான் அறையில் சென்று என் இருப்பிடத்தில் அமர்ந்து எழுத்த் துவங்கும் வரை அவர்கள் அங்கேயே இருந்தார்கள். பின் ஹால் சூப்பர்வைசரிடம் என்னைக் குறித்து அவர்களின் திருப்திக்குச் சொன்ன பிறகு அவர்கள் அவ்விடம் விட்டு நகர்ந்தார்கள்.

 

தேர்வறையில் எண்ணிக்கையில் குறைவானவர்கள் நேர்மையாய் தேர்வு எழுதினார்கள். மற்றவர்கள் பிட் வைத்து பார்த்து எழுதினார்கள். சிலர் ஒரு முறை பிடிபட்ட அவமானத்தில் அடுத்து பிட்டை தொடவில்லை. பலர் பலமுறை பிடிபட்டும் பிட்டை விடவில்லை.

 

அந்த தேர்வு நடத்தும் அதிகாரி நல்ல உயரம், மாநிறம், அவர் நடந்த தோரணையும் கணீர் குரலும், மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்ற வைத்தது எனக்கு.

 

பிட் அடித்தவர்களை பிடித்து வைத்திருந்த பிட்களை கசக்கி பதில் தாளிலேயே வைத்து டேபிள் மேல் வைத்துவிட்டு சென்றார். ஒவ்வொருவரையும் பிடிக்கும் போதும் கருத்தாழமாய் ஏதோ ஒன்றை சொல்லிவிட மன உணர்வு உடையவர்களால் மீண்டும் பிட் அடிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது போகும்.

 

ஆனால் அப்படி இருந்தும் பிட் அடித்து திரும்ப திரும்ப மாட்டினார்கள்.

 

“என் மக்கள் அறிவில்லாமல் சங்காரமாகிறார்கள்,” என்ற வேத வசனம் தான் அன்று எனக்கு நினைவில் வந்தது.

 

தேர்வு முடித்த பிறகு திரும்பவும் சேரிலேயே அமர வைத்துக் கீழே கொண்டு வந்தார்கள் என்னை, தேவனும் விஜயும்.

 

நான் ஆட்டோவில் ஏறிக்கொண்டிருந்த போது அந்த தண்டாகார பெண்மணி வந்தாள் அவள் லம்பாடி இனத்தைச் சேர்ந்தவள்.

 

இந்த ஆட்டோ செங்கம் போகுதான்னு கேட்க, ஆட்டோவில் இடம் இருந்ததால் அவளையும் ஏற்றிக்கொண்டோம்.

 

மணி மாலை ஆறு இருக்கும். அதிகாலையில் நாங்கள் புறப்பட்டது.

 

“பசிக்கிறது பசிக்கிறது” என்றேன். ஒரு இடத்தில் நிறுத்தி பஜ்ஜி வாங்க , இதையா சாப்பிடுவ, ஜூஸ் வாங்கினா குடிக்கலாம் என்று அந்த பெண் கூற எரிச்சல் வந்தது. உங்களுக்கு எது வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன்.

 

ஒரு பஜ்ஜியும் தண்ணீரும் குடல் சேர்ந்ததில் வயிறு கொஞ்சம் அமைதி

​ ​

யானது. மாலை நேர வெயில் வானத்தில் பெண்ணின் வெட்கச் சிவப்பு போல செந்நிறம் பரவியிருந்தது. தூர வயலொன்றில் சிறுமி ஒருத்தி கைகளை விரித்தபடி நின்ற இடத்திலேயே சுழன்றாள் அவள் நீண்ட பா

​வா​

டை காற்றினால் அகல விரிந்து. மனம் கடந்த காலத்தை நோக்கி பயணிக்க நான் மழலையானேன். மெல்லத் தூரல் தரை சேர மழைத்துளிகள் முகத்தில் அடிக்கும்படி திரும்பி அமர்ந்து கொண்டேன்.

 

இந்த மழையின் மீது எனக்கு எப்போதும் நீங்கா காதல் தான். மிதமான வேகத்தில் முகத்தில் அடிக்கும் சாரல் கவலைகளை அழித்துச் செல்லும் ஆயுதம். இதென்ன குழந்தை போல என்றாள் அந்த பெண்.

 

நீங்க எதுவும் சொல்லாதீங்க அது அப்படித்தான் அதுக்கு மழை பிடிக்கும் என்றான் விஜய்.

 

எப்ப மழை வந்தாலும் அக்காவுக்கு சந்தோஷம் தான் என்றான் தேவன்.

 

மழை எனக்கு உற்ற சிநேகிதி, எத்தனையோ முறை என் கண்ணீர் தெரியாமல் மறைத்திருக்கிறாள். நான் சிறுநீர் கழிக்க இயலாமல் தடுமாறிய நாட்களில் சரியாய் வேகமாய் பொழிந்து நான் காலோடு சிறுநீர் போனதை இந்த மனிதர்களுக்குத் தெரியாமல் மறைத்திருக்கிறாள். அவளுக்கும் எனக்குமான இரகசியங்கள் அநேகம். அந்த மழையானவளுக்கு நான் “வானதி“ என்று கூட பெயர் வைத்திருக்கிறேன்.

 

நீண்ட தார் சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவிலும் மிக வேகமாய் எண்ணங்களும் கற்பனைகளும் எதிர்காலம் நோக்கி ஓட நான் அசதியில் கண்ணயர்ந்தேன்.

 

மீ்ண்டும் இரண்டாம் நாள் தேர்விற்கான பயணம் தொடரும்.

 

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *