தொடுவானம் 17. நான் ஒரு டாக்டர் ஆவேன்!

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

டாக்டர் ஜி. ஜான்சன்

படிப்பவை யாவும் காற்றோடு கலந்துவிடக் கூடாது. அவை மனதின் ஆழத்தில் பதிய வேண்டும். அப்படி பதியவைக்க நாட்குறிப்பு உதவியது.அதில் பதிவு செய்துவிட்டால் அதை வாழ் நாள் முழுதுமே மறக்க இயலாது.
அதோடு நான் ஓர் எழுத்தாளனாக, பேச்சாளனாக வர விரும்பியதால் இத்தகையக் குறிப்புகள் பின்னாட்களில் பயன்படும் என்றும் எண்ணினேன்.
அவற்றில் சில குறிப்புகள். இவையும் அல்லி நாவலில்தான் எழுதப்பட்டிருந்தன.

” இன்பத்திற்கு துணையாக யாராலும் முடியும்.- ஈ இரும்பாலும் முடியும். நம் உடம்பில் நல்ல உணவு கிடைக்க்ம்போது ஈயும் எறும்பும் நம்மைக் கேளாமலேயே வந்து மொய்க்கின்றன.
அதுபோல், இன்பம் உள்ளபோது, யார் வேண்டுமானாலும் வந்து மொய்த்துக்கொள்வார்கள். ஆகையால், இன்பத்துக்கு துணையாக வல்லவரைத் தேடுவதைவிட துன்பத்துக்கு துணையாக இருக்க வல்லவரைத் தேடு.உறவானாலும், நட்பானாலும், காதலானாலும் இப்படித்தான் தேட வேண்டும்.”
உண்மைதான்! காதலிலும் பெண்கள் ஈ எறும்பு போலத்தான் இருக்கின்றனர். சிலர் பணம், சிலர் அழகு, சிலர் கல்வி, சிலர் அந்தஸ்த்து முதலியவற்றை நாடி அலைகின்றனர்.
ஆனால், காதல் விவகாரம் தங்களுடைய பெற்றோருக்குத் தெரிந்துவிட்டாலோ, அல்லது சில சிக்கல்களை எதிர்கொண்டாலோ ஒன்றும் தெரியாதவர் போல் விலகிக்கொள்கின்றனர். இன்னும் சிலர் தேன் இருக்கும் வரைத் தங்கி, தேன் முடிந்த பின் புது மலர் நாடும் வண்டுகள் போல் மாறிச் சென்றுவிடுகின்றனர்.
தமிழர்கள் நிலை பற்றி அறிஞர் அண்ணா பேசுவதை தமிழ்முரசு நாளிதழ் செய்தியாக வெளியிடும்.அவற்றையும் நான் நாட்குறிப்பில்
குறித்துக் கொள்வேன் .சில வேளைகளில் அவற்றைப் படிக்கும் போது வருத்தமாக இருக்கும்.

” நான் டில்லி சென்றபோது அங்குள்ள சுடுகாட்டில் தமிழர்கள் குடியமைத்துக்கொண்டு வாழ்ந்து வரும் அவல நிலையைக் கண்டேன். அங்கு அவர்களுடைய தொழில் என்ன தெரியுமா?
அங்குள்ள மார்வாடிகளின் வீட்டில் எச்சில் பாத்திரங்கள் துலக்கியும்,தெருவில் போவோர் வருவோர்களது பூட்ஸ்களைத் துடைத்தும் வருவாய் பெற்று வாழ்வதுதான் அவர்களது தொழில். தமிழ் நாட்டில் மார்வாடிகள் யாரேனும் பாத்திரம் துலக்குகிறார்களா? பூட்ஸ் துடைக்கிறார்களா? பண்டையத் தமிழர்கள் வாளையும், வேலையும் துடைத்தார்கள் என்பதை இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. அதே தமிழர்கள் இன்று பாத்திரங்களையும் பூட்ஸ்களையும் துடைக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் புண்ணாகிறது. ”

தமிழ் இனத்தின் மீது இளைஞர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வெறியூட்டும் வரிகளன்றோ இவை!
அதனால்தானோ என்னவோ இவ்வரிகள் என்னுடைய நாட்குறிப்பில் இடம் பெற்றன.
அண்ணாவின் பேச்சும் எழுத்தும் அந்த இளம் வயதிலேயே என்னைக் காந்தம்போல் கவர்ந்தது!

” அறிவுக் கூர்மை எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? மந்த அறிவு உள்ளவர்களுக்கு நாடி நரம்புகள் நுண்ணுணர்வு இல்லாமல் அப்படியே மந்தமாக இருக்கும், ஆனால், கூர்மையான அறிவு என்றால் நுட்பமான உணர்வுடைய நாடி நரம்புகளும் அவைகளுக்கு ஏற்ற, பால் உணர்ச்சியும் இருக்கும். அப்படிப் பட்டவர்களுக்கு சிறிது நேரத்தில் உடல் பசி ஏற்படும்; மீண்டும் மீண்டும் வரும். ஆகையால் அவர்கள் வாழ்க்கையில் விழிப்பாக இருக்க வேண்டும். ”

” மற்ற நாடுகளில் இளமை முதல் ஆண்களும் பெண்களும் கலந்து பழகி நட்பு கொள்கின்றனர்.அந்த நண்பர்களுக்குள்ளேயே காதலர்கள் கிடைக்கிறார்கள். இந்த நாட்டில் ஆண்கள் பெண்களோடு பழகக் கூடாது, பழகினால் உடனே சந்தேகம், கெட்டச் சொல், எல்லாம். பழகாமல், பண்பு அறியாமல் இருந்தால் எப்படி வாழ்க்கைக்குத் துணையானவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்? ”

இத்தகைய கருத்துக்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. இவற்றை நான் நம்பினேன் – சாதாரணமாக அல்ல – எதிர்கால வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்குடனே!

ஞாயிறு முரசில் அப்போதெல்லாம் “சென்னைக் கடிதம் ” எனும் பகுதி மிகவும் சுவையானது. தமிழக அரசியல் நிலவரம் குறித்து அருமையாக விமர்சனம் வெளிவரும். தமிழ் நாட்டுத் தொடர்புடையவர்கள் அதை விரும்பிப் படிப்பார்கள்.அதில்கூட சுவையானவற்றை நான் நாட்குறிப்பில் குறித்துக்கொள்வேன்.
அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசியலில் புதிதாகப் புகுந்து இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை. 1962 ஆம் வருடப் பொதுத் தேர்தலில் தி. மு. க. காங்கிரசிடம் தோல்வியுற்று எதிர்க்கட்சியானது. தி. மு. க. வின் தேர்தல் அறிக்கையில், தேர்தலில் வெற்றி பெற்றால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவதாக வாக்குறுதி கூறியிருந்தனர்.
வெற்றி பெற்றுவிட்ட காங்கிரசார், தி. மு. க.வினரை கண்டபடி கிண்டல் செய்தனர். ரூபாய்க்கு மூன்று படி அரிசி எங்கே என்று கேட்டனர்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர் மு. கருணாநிதி நகைச்சுவையுடன் தந்த பதில் கண்டு பரவசம் கொண்டேன். இதை அவர் தமிழக சட்டமன்றத்தில் அப்போது கூறினார்!

” ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவார்கள். தி. மு. க. வெற்றி பெற்ற இடத்துக்குச் செல்லுங்கள் என்று காங்கிரசார் கூறி வருகிறார்கள். தேர்தல் அறிக்கையில் கூறுவதெல்லாம் அந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றால்தான் அமுல் நடத்த முடியும். நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் விலைவாசியைக் குறைப்போம். ஆட்சிப் பொறுப்பு எங்களிடம் வராத நேரத்தில், மூன்று படி அரிசி எங்கே என்று, திருமணம் செய்து கொண்ட கணவன், மற்றவனைப் பார்த்து பெண்ணுக்கு அட்டிகை போடு என்று கூறுவது எவ்வளவு கீழ்த்தரமானது, காமராசரே! ஆளுவது நீர் – அட்டிகை போடுவது நாங்களா? ”

என்னுடைய கல்வி தொடர்பாக சில புதுத் திட்டங்கள் தீட்டினேன்.
ஜூன் மாதம் முழுதும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி முதன்மையாகத் தேற வேண்டும் என்பதே அத் திட்டம். இது நடக்கக் கூடிய விஷயமா? ஏன் முடியாது? ஆறு வருடங்களாக ஆரம்பப் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெறவில்லையா? இப்போதும் அதே மூளைதானே உள்ளது?

சென்ற வருடம் முதன்மையாகத் தேறியவர்களுக்கு ஜூன் 8ஆம் தேதி பரிகள் வழங்கப்படும். அதில் தமிழ் மொழியில் எனக்கு முதல் பரிசு இருந்தது. உண்மையில் எனக்கு ஓர் அதிர்ஷ்டம் உள்ளது. பிரைமரி ஒன்றிலிருந்து நான்காம் படிவம் வரை படிப்புக்கு ஏதாவது ஒரு பரிசு தொடர்ந்து வாங்கியவன் நான்.
எனக்கு ஒரு குணம் உள்ளது. சில வேளைகளில் தப்பித் தவறி ஒருநாள் ஒன்ற படிக்காவிட்டால் மனம் அமைதி இழந்து போகும். எதோ பெரிய குற்றம் செய்துவிட்ட உணர்வு உண்டாகிவிடும். ஆனால் சில சமயங்களில் சோம்பலும் குடி கொண்டு விடுகிறது.
உதாரணமாக, நாள் ஒன்றுக்கு ஒரு குறளாவது மனப்பாடம் செய்யவேண்டுமென்று எத்தனைத் தடவைகள் திட்டமிட்டாலும் அதை அப்படியே கடைப்பிடிக்க .முடியவில்லை.இதுவரை 290 குறள்கள் மனப்பாடம் செய்துவிட்டேன்.
மே மாதம் 21 ஆம் தேதியன்று நான் மீண்டும் லதாவைச் சந்தித்தேன்.நாங்கள் எப்போதும் சந்திக்கும் இடம்தான். அன்று நாங்கள் ஒரு புதரினுள் அமர்ந்து புத்தகங்களைப் புரட்டிக்கொண்டே பேசிகொண்டிருந்தோம். புதரின் பின்புறம் சலசலப்பு கேட்டு திரும்பினோம்.அங்கு ஒரு முரட்டு தமிழ் இளைஞன் ஒளிந்து எங்களைக் கவனிப்பதைப் பார்த்தோம்.
லதாவுக்குப் பயம்! எனக்கும் திகில்! தனிமையில் இருக்கும் எங்களை அவன் ஏதாவது செய்து விட்டால்? பெண் இருக்கிறாள்! நகைகளும் அணிந்துள்ளாள்! அவன் கள்வனாக இருந்தால்? காமுகனாக மாறினால்?
நடுங்கினோம்! இருப்பினும் ஒருவித துணிவுடன், நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுடன் நான் புத்தகத்திலிருந்து படிப்பது போன்று உரக்கக் கூறினேன்.
” இக் காலத்தில் மனிதன் மனிதனாக வாழத் தெரியாது பண்பிழந்து அலைகிறான். ” என்று கூறிவிட்டுத் திரும்பினேன். அவன் அங்கு இல்லை!
உடனே நாங்கள் கிளம்பி விட்டோம். இனிமேல் இப்படி தனியாக இருவரும் வெகு தூரம் காட்டினுள் புகக் கூடாது என்று முடிவு செய்து கொண்டோம். அதுகூட இனிமேல் எங்கே? அப்பாதான் கூடிய விரைவில் திரும்பி விடுவாரே! அதன் பின்பு நாங்கள் எங்கே காட்டுக்குச் செல்லப் போகிறோம்?
ஒரு நாள் மாலையில் நான் மட்டும் தனியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனை வளாகத்தினுள் உலாவச் சென்றேன். அதன் நுழை வாயிலிலேயே சவக் கொட்டகை இருந்தது. நான் நுழைந்தபோது ஒரு நீண்ட வண்டியில் வெள்ளைத் துணியால் மூடப்பட்ட ஒரு பிரேதத்தை இரண்டு பெண்மணிகள் தள்ளிக்கொண்டு என்னைத் தாண்டிச் சென்றனர்.
அந்த காட்சி என் மனதில் அப்போது ஒருவிதமான மாற்றத்தை உண்டுபண்ணியது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையின் வார்டுகளைக் கடந்து சென்றபோது ஒருவித பக்தி உணர்வு தோன்றியது. நான் கோவிலினுள் சென்றுள்ளேன். அனால் அங்கு உணராத அச்ச உணர்வை அங்கு உணரலானேன்!
கடவுளுக்கு அடுத்தவன் மருத்துவன் அன்றோ? அதனால்தானோ அத்தகைய பக்தியும் அச்சமும்? நான் நன்றாகப் படித்தால் ஏன் நானும் ஒரு டாக்டராகக் கூடாது?
ஆம்! நான் நன்றாகப் படிப்பேன்! நிச்சயமாக நான் ஒரு டாக்டராவேன்!
அந்த சபதத்துடன் மருத்துவக் கல்லூரி வீதி வழியாக வெளியேறி பேருந்து ஏறினேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Comments

 1. Avatar
  puthiyamaadhavi says:

  மு. வ எழுதிய கள்ளோ காவியமோ, கரித்துண்டு,
  பார்த்தசாரதியில் நாவல்கள், காண்டேகரின் கிரவுஞ்சவதத்தில்
  தீலிபன் பேசுவது என்று நானும் அக்காலத்தில் நோட்டுப்புத்தகத்தில்
  குறிப்பெடுத்து வைத்திருந்தேன். அந்த நினைவுகள் வந்தது.
  நீங்கள் எழுதுவது சுயசரிதையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *