தினம் என் பயணங்கள் -23 என்னைப் போன்றவர்கள்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

சமீப காலத்தில் சிலர் வினா எழுப்பினார்கள், தினம் என் பயணங்கள் என்று ஏதோ எழுதுகிறாய். தலைப்பைப் பார்த்து பயணக் கட்டுரை என்று எண்ணி படிக்க வருபவர்கள் ஏமாறுவார்கள் என்று.

உண்மையில் பக்கத்துத் தெரு வரை சென்று வருவதைப் பயணம் என்று சொல்வதற் கில்லைதான். ஆனால் இது ஒரு மாற்றுத்திறனாளியைக் குறித்தது. ஓர் உயிரினத்தின் பெயரியல், சூழியல், சிறப்பியல்புகளைப் பற்றிப் படிப்பது போல, உயிரினத்தைப் பற்றி (மனித இனம்) மற்றோர் உயிரினம் படிக்கும். ஆனால் இங்கு உயிரினமே தன் சூழியல் சிறப்பியல்புகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருக்கிறது. சகித்துக் கொள்ள முடியாத குணங்களும் இதனிடத்தில் வெளிப்படலாம். அதுவும் சூழலால் உருவாக்கப்பட்டது என்றே கொள்ளுதல் வேண்டும்.

தாழ்வு மனப்பான்மை இல்லாத மாற்றுத்திறனாளிகள் இருக்கவே முடியாது. அதில் இருந்து மீண்டு வெளிவந்து விட்டதாக உணர்ந்தாலும் கூட ஏதோ ஒரு காலக் கட்டத்தில், தனக்குள் இருக்கும் அந்த மனப்பாங்கு வெளிபட்டே தீரும். வெளிப் படும் எண்ணங்களைச் சீர்தூக்கி தங்களை நடுநிலைப் பாங்கில் நிறுத்திக் கொள்வது அவரவர் சிந்தனை முறைகளிலேயே இருக்கிறது. எந்த உதவியும் தன் மனதில் இருந்தே கிடைக்கிறது. கை, கால், காது, கண், வாய் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு வெளி உலகத் தொடர்பு கொள்வதில் சில தொந்தரவுகள் இருக்கலாம். கால் ஊனமானவர்களுக்கு போக்குவரத்துப் பிரச்சனைகள் இருக்கலாம். அவர்களின் சிந்தனை சீராக இருந்து விட்டால் எந்த காலத்தையும் சமாளித்து வாழ்க்கையை இலகுவாக நடத்தலாம்.

என் பால்யம் விசித்திரமானது. எனக்குள் கனவு தேசங்களை உருவாக்கியது அது. மருத்துவம் என்னை குணமாக்கிவிடும் என்றெண்ணியிருந்தேன் அந்த கால கட்டத்தில், நான் வளரும் போது உடல் ரீதியான மாற்றங்களினூடே மனரீதியான மாற்றங்களையும் அடைந்தாலும், அது அத்தனை அறிவார்த்தமானதாக இருக்க வில்லை.

சூழல் என்னைப் பிறரைச் சார்ந்து வாழும்படி நிர்பந்தித்தது. அதனால் தான் என்னவோ இயல்பாய் கோபப்பட வேண்டிய இடங்களிலும் என்னால் கோபப்பட இயலாது போனது.

இயல்பாய் பெண்ணாகப் பிறந்தவளுக்கான ஆசைகளை ஒட்டியதாய் என் ஆசைகளும், நல்ல கணவர், ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள், உறவுகள் மெச்சும்படியான வாழ்க்கை, வேலை என்று வரும் போது காவல் துறையில் பணியாற்றவேண்டும் என்றொரு ஆவல், நாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு என்று அத்தனையும் நிறைவேறா கோட்பாடுகளை உடையது.

உனக்கு இதெல்லாம் நிறைவானதாக அமையப் போவதில்லை, உடல் நிலை இப்படி, உன் வாழ்க்கையை மாற்றுத் திசையில் செலுத்து என்று யாரும் எனக்கு பாடம் கற்பிக்க வில்லை.

அப்படிக் கற்பித்திருந்தால் அதை கற்றுக்கொள்ள இத்தனை ஆண்டுகள் ஆகியிருக் காதோ என்னவோ?

ஒரு மாற்றுத்திறனாளிக்கு இல்லற வாழ்க்கை அமையக் கூடாதா? அமைந்தால் மிக்க மகிழ்ச்சி, அதைப் பற்றி அல்ல சங்கதி. பெரும்பாலும் இல்லறமோ, கல்வியோ அமைவதில்லை என்பவர்களைக் குறித்துத்தான் என் கவலை.

மனதளவில் தூக்கிப் போட வேண்டிய எண்ணங்களைத் தூக்கிப் போட அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும் என்பது தான். ஒரு வேளை இதைப் படித்துக் கொண்டு இருக்கும் நீங்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால், கிடைக்காத ஒன்றை பற்றிக் கொண்டிருக்காமல் அதை விடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர உங்கள் சிந்தனையைப் பக்குவப் படுத்துங்கள் என்பதே என்னுடைய ஆலோசனையாக இருக்கும்.

சூழ்நிலைகளைக் காட்டிலும், அதைக் குறித்த சிந்தனைகளே நம்மை பெரிதும் பாதிப்படையச் செய்கிறது.

தன் நிலை உணர்ந்து அடுத்து என்ன என்று ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதே ஏற்றத்திற்கான வழி.

ஆனால் இயல்பில், நான் சந்தித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களுக்கான ஒரு துணை தேடல் இருப்பதை உணர்ந்தேன். பேச்சிலும் அது வெளிப்படச் செய்தது. அந்த குழுமத்தில் விதிவிலக்காய் ஒருத்தி மட்டுமே எனக்கு ஆண் துணை தேவை இல்லை. எப்படி நான் குழந்தைத்தனமாக இருக்கிறேனோ அப்படியே பெற்றோ ரோடு இருந்து மரித்துப் போவேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

அப்படி சொல்லிக் கொண்டிருந்தவளையும், பெற்றோருக்குப் பிறகு என்று வினா எழுப்பி கதி கலங்கச் செய்தது அந்த குழு.

குழு சிநேகிதிகள் தங்கள் அந்தரங்கம் பகிர்ந்த போது மனதை எதார்த்தம் நெருடியது (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) மஞ்சுளா ஒரு கை சூம்பியவள். இரண்டு கால்களும் போலியோவின் அரை பாதிப்பில். அவள் அக்காவின் கணவர் அக்காவை வாழாவெட்டி ஆக்கிவிடுவதாக பயமுறுத்தியே புணர்ந்ததாகக் கூறினாள். அவள் கர்ப்பமானதும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஒடியவன் தான்.

உனக்கெங்க போச்சு புத்தி என்று குழு ஒன்று சேர வினவ,

மாமா தானே எவன் கட்ட போறாங்கற நெனப்புதான் என்றாள் கண்கலங்கியபடி.

குழந்தை, அது போச்சு உலகத்தைப் பார்க்காமலே,

ப்ச் ஒலிகள் எங்கும் சூழ்ந்தது.

பிறகு சத்யாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கதை

போன் காதலர்களைப் பற்றி விலாவரியாக கூறினாலும், நிரந்தரமில்லா இந்த வாழ்க்கைக் கசப்பை அவள் முகக் குறிப்புகளால் வெளிப்படுத்தி விடுவாள்.

சித்ரா (பெயர்மாற்றப்பட்டுள்ளது)

சில காலம் உடல் தொழிலாளியாக இருந்தவள்.

இந்த விசித்திரங்களினூடே பார்வையற்ற தம்பதியரும் உண்டு. உங்க கதைக்கு நான் மேல் என்று சிலாகித்துக் கொண்டாள் அந்த வரலட்சுமி.

ஒரு தனி உயிரின் அந்தரங்கச் சுமைகளைத் தாங்கவோ வழிகாட்டவோ சமூகத்திற்கு நேரமில்லை. ஒரு புறம் மாற்றுத்திறனாளிகள் புகழ் உச்சியில் பயணித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கனவுகளின் மாயையில் சருகாகிக் கொண்டிருக்கவும் செய்கிறார்கள் தான்.

[தொடரும்]

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *