புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு

author
0 minutes, 5 seconds Read
This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

CM Meet Infitt members 2 @ Puducherry 26.06.2014

புதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாடு

புதுவை முதல்வர் ந . ரங்கசாமி தொடங்கி வைக்கின்றார்!

 

புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் 2014, செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் கணினி வல்லுநர்கள் பேராளர்களாக வருகைதர உள்ளனர். உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு உலகின் பல பாகங்களிலும் அரசுடனும் பல்கலைக்கழகத்துடனும் இணைந்து தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு புதுவை அரசின் ஆதரவுடன் புதுவைப் பல்கலைக்கழகத்தில்  இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டின் தொடக்க விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்கின்றார். சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பிரான்சு, சுவிசர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்க்கணினி வல்லுநர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்த மாநாட்டில் கட்டுரை படிக்கின்றனர். சிறப்பு அமர்வுகளில் கணினி வல்லுநர்கள் கணினி, இணையம், கையடக்கக் கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு குறித்து சிறப்புச் சொற்பொழிவுகள் செய்ய உள்ளனர்.

 

தமிழ் இணைய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவில் கணினி வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்கம் நடைபெறும். இரண்டாவது பிரிவில் பொது மக்களுக்குப் பயன்படும் மென்பொருள்கள் (சாப்டுவேர்கள்), இணையம், கணினி குறித்த நூல்கள், கல்விநிறுவனங்கள், வேலைவாய்ப்பு நிறுவனங்கள்  கலந்துகொள்ளும் கண்காட்சி அரங்கு இடம்பெறும். மூன்றாவது பிரிவில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கணினி, இணையம், கையடக்கக் கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு குறித்த செயல்முறை விளக்கம் தரும் தன்னார்வத் தொண்டர்கள் நிறைந்த மக்கள் அரங்கம் இருக்கும்.

 

தமிழ் இணைய மாநாடு இதுவரை தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் பன்னிரண்டு முறை நடந்துள்ளது. புதுச்சேரியில் இப்பொழுதுதான் முதல்முறையாக நடைபெறுகின்றது. இந்த மாநாட்டை நடத்துவதில் புதுவை அரசு பெரும்பங்கு வகிக்கின்றது. புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்கு முன்வந்துள்ளார். புதுவையைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள் பலவும் தமிழ், கணினி ஆர்வலர்கள் பலரும் இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்ய உள்ளனர்.

 

உலகத் தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டுப் பொதுமக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் போட்டிகள் நடைபெற உள்ளன. சிறந்த வலைப்பூ (BLOG) உருவாக்கும் போட்டி, தமிழ்த்தட்டச்சுப் போட்டி, தமிழ் இணையத்திற்குப் பங்களிப்பு செய்தோர்களை ஊக்குவிக்கும் போட்டிகள் நடைபெற உள்ளன.

 

வலைப்பூ உருவாக்கும் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர், உத்தமம் அமைப்புக்கு மின்னஞ்சல் வழியாக எந்தப் பெயரில் வலைப்பூ(பிளாக்) உருவாக்க உள்ளோம் என்பதை சூலை 1 முதல் ஆகஸ்டு 31 க்குள் தெரிவிக்க வேண்டும். தமிழ் மொழி, இனம், நாடு, மக்களின் பண்பாடு, பழக்க வழக்கம், தொழில்கள், மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை, கலைகள் சார்ந்த பொருண்மைகளில் உள்ளடக்கம் கொண்ட வலைப்பூக்களை உருவாக்க வேண்டும். குறைந்த அளவு பத்து பதிவுகள் ஒவ்வொரு வலைப்பூவிலும் இடம்பெறவேண்டும். வலைப்பூ உருவாக்கம் குறித்த விதிமுறைகள் உத்தமம் இணையதளத்தில்( infitt.org) வெளியிடப்படும். சிறந்த வலைப்பூ உருவாக்கும் போட்டிகள் மூன்று நிலைகளில் நடைபெறும். பொதுமக்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் மூன்று பரிசுகளும், பள்ளி மாணவர்களுக்கான பிரிவில்(10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ளலாம்) மூன்று பரிசுகளும் வழங்கப்படும்.  பரிசு பெறாத மற்ற சிறந்த வலைப்பூ உருவாக்கும் வலைப்பதிவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

 

பொதுமக்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்குப் புதுச்சேரி முதலமைச்சர் ந. ரங்கசாமி விருதும், பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் பரிசாக வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் என வழங்கப்படும்.

 

கல்லூரி நிலையிலான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்குக் கணிஞர் ஆண்டோபீட்டர் நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் முதல் பரிசும் வழங்கப்படும். இரண்டாம் மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.

 

பள்ளி மாணவர்களுக்கான வலைப்பூ உருவாக்கும் போட்டியில் சிறந்த வலைப்பூ உருவாக்கி முதல்பரிசு பெறுவோருக்குச் சிங்கப்பூர் ந. கோவிந்தசாமி நினைவு விருதும், பத்தாயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும். இரண்டு, மூன்றாம் பரிசுகள் முறையே ஐந்தாயிரம், மூன்றாயிரம் ரூபாய் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.

 

கணினி, இணையம் பயன்பாட்டுக்கு வந்த  பிறகு இவற்றின் வழியாகத் தமிழுக்குத் தொண்டாற்றிவரும் சிறந்த செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வல்லுநர் குழு ஒன்று ஐந்து செயற்பாட்டாளர்களை உலக அளவில் தேர்வு செய்து அவர்களின் பெயரை மாநாட்டுக் குழுவிற்கு வழங்கும். அதன் அடிப்படையில் ஐந்துபேர் புதுவைத் தமிழ் இணைய மாநாட்டுக்கு அழைக்கப்பெற்று சிறப்பிக்கப்படுவார்கள். தமிழ் இணையச் செயற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி இதுவாகும், ஆண்டுதோறும் தக்கவர்களை அடையாளம் கண்டு உத்தமம் அமைப்பு தொடர்ந்து இதுபோல் பாராட்டும்.

 

உத்தமம் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படிக்க விரும்புவோரும், பேராளராகக் கலந்துகொண்டு பங்குபெற விரும்புவோரும் உத்தமம்(www.infitt.org) இணையதளத்தில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்துகொண்டு பங்கேற்கலாம். இதற்கான கடைசி தேதி 2014, ஜூலை 15 ஆகும். மாநாடு குறித்த மேலும் விவரங்களை உத்தமம் அமைப்பின் இணையதளத்தில் சென்று பார்வையிட்டுத் தெரிந்துகொள்ளலாம். புதுச்சேரியில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்று முதலமைச்சர் வலியுறுத்தினார்.

 

உலகத் தமிழ் இணைய மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பில் உத்தமம் அமைப்பின் தலைவர் வாசு ரெங்கநாதன்(பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா), உத்தமம் அமைப்பின் முன்னாள் செயல் இயக்குநர் சிங்கப்பூர் மணியம், உதமம் மலேசியக் கிளையின் தலைவர் இளந்தமிழ், உலகத் தமிழ் இணைய மாநாட்டின் புதுச்சேரிப் பொறுப்பாளர் முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *