சோஷலிஸ தமிழகம்

9
0 minutes, 0 seconds Read
This entry is part 18 of 19 in the series 6 ஜூலை 2014

1989ல் பெர்லின் சுவர் வீழ்ந்து சோஷலிசம் உலகெங்கும் சரிந்து வீழ்ந்தது. 90களில் உலகமயம், தனியார்மயம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. சர்வாதிகார அரசுகள் பல உலகெங்கும் வீழ்ந்தன. தொழில்நுட்ப புரட்சி உலகை ஆட்டி படைத்தது. இதன் தாக்கம் எப்படி இருந்தது எனில் எகிப்தில் புரட்சி நடக்கையில் எகிப்திய அரசு முதல்வேலையாக பேஸ்புக்கையும், ட்விட்டரையும் தடை செய்யும் அளவுக்கு சென்றது. சோஷியல் மீடியாவை ஆற்றலுடன் பயன்படுத்தி அமெரிக்காவில் ஒபாமாவும், இந்தியாவில் நரேந்திர மோடியும் ஆட்சிக்கு வந்தார்கள்.

இப்படி உலகை குலுக்கிய இத்தகைய ட்ரெண்டுகள் அனைத்தும் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தபட்டன. தமிழகத்தை ஆளும் திராவிட கட்சிகளே நம் சேஞ்ச் ஏஜெண்டுகள். இவர்கள் மூலமாகவே நாம் உலகை தரிசித்து வந்துள்ளோம். வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுவது. உலகை குலுக்கிய இந்த டிரென்டுகளை, அரசுகளை, நாடுகளை மாற்றிய இந்த டிரெண்டுகளை ஆளும் திராவிட கட்சிகள் அனாசயமாக எப்படி சமாளித்தன, உள்வாங்கின என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

சோஷலிசமும், தேசியமாக்கலும் தோற்றன எனும் செய்தி தமிழக மக்களை எட்டியதா என்பதே கேள்விக்குரியது. தமிழக அரசு பேருந்து, சிமெண்டு, ஓட்டல் என இருக்கும் கம்பனிகளை தனியார் மயமாக்காதது மட்டுமல்ல புதிதாக உணவகம், மதுக்கடைகள், மருந்துகடைகள், பாட்டில் குடிநீர் வணிகம், கேபிள் டிவி என மேலும் பல துறைகளில் புகுந்து வணிகம் செய்து வருகிறது. மக்களும் இதை எல்லாம் வரவேற்பதாக தான் தெரிகிறது. ஆக சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி உலகுக்கு கற்றுகொடுத்த மிகப்பெரும் பாடம் தமிழ்நாட்டுக்கு சொல்லிகொடுக்கபடவில்லை. இதற்கு ஒரு காரணமாக தமிழகத்தில் கட்சிகள் பலவகையானவையாக இருந்தாலும் பொருளாதார கொள்கை என வருகையில் அவற்றுக்கு இடையே எந்த பெரிய அளவிலான முரண்பாடுகளும் இல்லை. திமுக, அதிமுக, மதிமுக, மூன்றும் இனையும் புள்ளியாக சோஷலிசத்தையும், பெரிய வலுவான அரசின் மேல் உள்ள நம்பிக்கை என்பதையும் சொல்லலாம். தேமுதிகவின் பொருளாதார கொள்கை என்ன என்பது யாருக்கும் தெரியாது.

Eliteshop_0312_01இதனால் திமுக, அதிமுக மாறி, மாறி ஆட்சிக்கு வந்திருந்தாலும் மதுக்கடைகள் அரசுமயம் ஆனது, பன்னாட்டு கம்பனிகள் சில்லறைவணிகத்தில் நுழைய எதிர்ப்பு, இலவசங்கள், கவர்ச்சி திட்டங்கள் முதலிய சோஷலிச மாடல் திட்டங்கள் மாறாமல் தொடர்கின்றன. சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களை குபேரர்களாக்கிய தாராளமயமாக்கல் இங்கே மேல்மட்டத்துடன் தடுத்து நிறுத்தபட்டது. செல்வாக்கும், பணமும் உள்ளவர்கள் மேலே உயர்ந்தார்கள். திறமை உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினார்கள். அடித்தட்டு வர்க்கம் தாராளமயமாக்கலின் நன்மைகளை அனுபவிக்காமல் அதன் தீமைகளை மட்டும் அனுபவித்தது. உதாரணமாக பன்னாட்டு கம்பனிகள் தடையற்ற மின்சாரம் எனும் உறுதிமொழியின் பேரில் இங்கே அழைத்து வரபட்டன. அவர்கள் செய்த முதலீட்டில் கிடைத்த வரிப்பணம் எல்லாம் இலவச திட்டங்களுக்கும், கவர்ச்சி திட்டங்களுக்கும் செலவாகின. மின்சாரம் முதலிய அடிப்படை கட்டமைப்புகளில் முதலீடுகள் செய்யபடவில்லை. விளைவாக நாளுக்கு 10 முதல் 12 மணிநேரம் மின்வெட்டு. இது அடித்தட்டுமக்களை தான் முதலில் பாதிக்கிறது.
 
தாராளமயமாக்கலின் மிகபெரும் நன்மை வேலைவாய்ப்பு. ஆனால் தாராளமயமாக்கல் குடிபெயர்வையும் சாத்தியமாக்கியது. ஏராளமான அளவில் வடமாநில தொழிலாளர் தமிழகத்துக்கு குடிபெயர்ந்தனர். ஆக அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அரசின் செலவுகள் அதிகரித்ததாலும் தாராளமயமாக்கலின் விளைவாக பணபுழக்கம் அதிகரித்ததாலும் விலைவாசி, பணவீக்கம் ஆகியவை அதிகரித்தன. ரியல் எஸ்டேட் விலை உயர்ந்தது. இன்று எத்தனை சம்பாதித்தாலும் நகர்புறங்களில் இடம் வாங்கி வீடுகட்டுவது இயலாத காரியமாக மாறிவிட்டது.

ammawater_1ஆக சோஷலிசமும், தாராளமயமும்  தமிழகத்தில் ஒரே சமயத்தில் எவ்வித முரண்பாடும் இன்றி பின்பற்றபடுகின்றன. இந்த இருமுறைகளின் நன்மைகளும் மேல்தட்டு மக்களுக்கும், இதன் தீமைகள் முழுக்க அடித்தட்டு மக்களுக்கும் சென்று சேர்ந்தன. ஆனால் வயிற்றுபசிக்கு உணவிருக்கும்வரை மக்கள் புரட்சியில் இறங்க மாட்டார்கள் எனும் மாபெரும் உண்மையை உணர்ந்த நம் ஆட்சியாளர்கள் 1 ரூபாய் அரிசி, 10 ரூபாய் குடிநீர், உணவகங்கள் மூலம் மக்கள் புரட்சியில் இறங்குவதற்கான காரணங்களை அகற்றிவிட்டார்கள். ஆனாலும் மக்கள் விடாமல் கடந்த 30 ஆண்டுகளாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஆளும்கட்சியை தேர்தலில் கவிழ்த்து தம் எதிர்ப்புணர்வை காட்டிகொண்டுதான் இருக்கிறார்கள்.

மக்களின் குரலை முறையாக பதிவு செய்திருக்க வேண்டிய ஊடகங்கள் முழுக்க ஆளும்கட்சிகள் கைவசம் ஆகின. தமிழக அரசியல்கட்சிகள் போட்டிபோட்டுகொண்டு டிவி சானல் துவக்கின. பத்திரிக்கைகளை விலைக்கு வாங்கின. வாங்கமுடியாத பத்திரிக்கைகளுக்கு வேறுவித பொருளாதார ஆதாயங்களை உருவாக்கின. உதாரணமாக தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பத்திரிக்கை தமிழக அரசியல் கட்சி ஒன்றின் தொலைகாட்சியில் தொலைகாட்சிதொடர் தயாரிக்கிறது. இதனால் அதன் நடுநிலைமை பாதிக்கபடும் என கருத இடம் இல்லை. ஆனால்  நமக்கு பொருளாதார இழப்பு ஏற்படுத்தகூடிய சக்தி வாய்ந்த ஒருவரை எதிர்க்கையில் நாம் கவனமாக இருப்போம் அல்லவா?

மேலே சொன்னவை எல்லாம் தமிழகத்துக்கு மட்டும் பொருந்த கூடியவை அல்ல. ஒரு விதத்தில் இது இந்தியமாநிலங்கள் அனைத்தின் கதையும் கூட. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுகொள்வதில் நாம் என்றுமே வீக் ஆனவரகள் தான்!

 

 

Series Navigationதொடுவானம்     23. அப்பாவுடன் வாழ போலீஸ் பாதுகாப்பு.வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம்       10
author

செல்வன்

Similar Posts

9 Comments

  1. Avatar
    சின்னக்கருப்பன் says:

    மிகச் சிறப்பான கட்டுரை. டாஸ்மாக் மூலமாக உடல் நலிவு உற்ற ஒருவர் தமிழக அரசின் மீது வழக்கு தொடுக்க முடியுமா? அம்மா இட்லி சாப்பிட்டு நோய்வாய்ப்பட்ட ஒருவர் தமிழக அரசின் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர முடியுமா? பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன.

  2. Avatar
    Prakash says:

    திராவிடக்கட்சிகள்தான் தமிழக மக்களை பன்னாட்டு மயமாக்கலிலிருந்து தனிப்படுத்தியதாக்கூறும் ஆசிரியா், முடிவில் இந்நிலை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று முடிக்கின்றார். அப்படியென்றால் திராவிட கட்சிகளுக்கும், உலகமயமாக்களுக்கும், தனியார் மயமாக்கலுக்கும் என்ன சம்பந்தம்? தனியார் மயமாக்கலையும் உலகமயமாக்கலையும் ஏன் ஒன்றுபடுத்துகின்றார் ? இலவசமாகத் தருவதால் சோஷியலிசமா ? எனக்கென்னவோ இலவசமாகத்தருவது மக்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தையாகத் தோன்றுகிறதே தவிர சோஷியலிசமாகப் படவில்லை. திராவிடக்கட்சிகளின் மீதான ஆசிரியரின் காழ்ப்புணர்ச்சி புரிபட்டாலும், அனைத்திற்கும் அக்கட்சிகளே காரணமா ? கட்சிகள் காரணமென்று சொல்வதைவிட, ஒரு சமுதாயக் குறைபாடாகவே எனக்குத் தோன்றுகிறது. கட்சிகள் எங்கிருந்து வருகின்றன ? கட்சி நடத்துபவர்கள் இதே சமுதாயத்திலிருந்துதானே செல்கின்றனர் ? இத்தனை ஆண்டு காலம் இக்கட்சிகள் ஆண்டதால்தான் பிரச்சினையா ? ஆங்கிலத்தில் சொல்வதென்றால், lack of civic sense தான் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமாக எனக்குப் படுகின்றது, ஒரு சமுதாயமாகவே நம்மிடையே இந்த civic sense குறைவாக உள்ளதாகப் படுகிறது. 30 வருடங்களாக ஆளும் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறதென்றால், ஏமாறுபவர்கள் மீதே குறை உள்ளது. ஏன் அந்த கட்சிக்குள் நாம் புகுந்து மாற்றமேற்படுத்தவில்லை ?

  3. Avatar
    செல்வன் says:

    நன்றி சின்னகருப்பன். டாஸ்மாக் கடையை பொறுத்தவரை வேடிக்கை என்னவெனில் தமிழக அரசு விற்பனையாளர் மட்டுமே. வழக்கு தொடர்ந்தால் உற்பத்தியாளர் மல்லையா போன்றோர் மேல் தான் தொடுக்க முடியும். அதிலும் “குடி குடியை கெடுக்கும்” என சொல்லி தான் விற்கிறோம் என சொல்லி தப்பும் வாய்ப்பு நிறைய உள்ளது

  4. Avatar
    செல்வன் says:

    பிரகாஷ்…இலவசமாக கொடுப்பது மட்டும் சோஷலிசம் அல்ல. அரசு தனியார் செய்யும் வணிகத்தை, குறிப்பாக சிறுவணிகர்கள் செய்யும் தொழில்கள் அனைத்தையும் செய்வதே சோஷலிசம். மருந்துகடை, உணவகம், உப்பு, குடிநீர், பால், ஓட்டல் என நிறைய உதாரணங்கள் கொடுத்துள்ளேன். அரசு தொழில்துறையில் இறங்கி வணிகம் செய்தால் அது சோஷலிசத்தில் தான் முடியும். ஒரு ரூபாய் இட்டிலியுடன் போட்டியிட எந்த சிறுஓட்டல் அதிபரால் முடியும்?

    திராவிட கட்சிகள் என்பது திமுக, அதிமுக இரண்டின் பொதுபெயர். அவற்றை வேறு எந்த பெயரில் அழைக்க முடியும்?

  5. Avatar
    Prakash Devaraju says:

    உணர்ச்சி ரீதியில் பார்த்தால் செல்வன் அவர்கள் கூறுவது ஞாயமாகத் தோன்றினாலும், கூர்ந்து நோக்கினால் சிறு முதலாளிகளுக்குச் சார்பாக அவர் காட்டும் சில சான்றுகள் சமுதாயத்தையும் சிறுமுதலாளிகளையும் வலுவாக பாதிக்க வல்லவை என்பதை அவர் அறிந்துதான் பேசுகிறாரா என்னும் சந்தேகம் எழுகிறது.
    முதலில் சிறு முதலாளிகள் பாதுகாப்பிற்கு வருவோம். சிறு முதலாளிகள் பாதுகாக்கப்பட வேண்டியது ஏன் ? இன்றைய சிறு முதலீடுகளே நாளை பெரிய நிறுவனங்களாக, முக்கியமாக நவீனமான நிறுவனங்களாக உருவெடுக்கும் – உதாரணம் Infosys. சிறு முதலாளிகள் முன்னிறுத்தப்பட்டால், நாட்டில் நலிவடைந்தவர்கள் மீட்கப்பட்டு விடுவார்களா ? சிறு முதலாளிகளுக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் மக்களுக்கும் என்ன சம்பந்தம் ? சிறு முதலாளிகள் பாதுகாக்கப்படுவதற்கும், சமுதாயத்தின் கீழ்மட்ட மக்கள் உயர்விற்கும் மிகுந்த இடைவெளி உள்ளது. சிறு நிறுவனங்கள் பெரிய விருட்சமாக மலர்ந்து வேலை வாய்ப்பை பெருக்கி நாட்டின் மொத்த உற்பத்தியைப் பெருக்கினால் தான் கீழ்மட்ட மக்களை கவனிக்கும் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த முடியும். அதுவும் சோஷியலிசம்தான். அத்தகைய சோஷியலிசத்தை விட்டுவிட்டு TASMAC ஐ தனியார் மயமாக்கினால் யார் பயனடைவர் ? சில முதலாளிகளே தவிர வறுமையில் வாடும் மக்கள் அல்ல! உண்மையில் TASMAC ஐ அரசு நடத்தினால் இலவசமாவது கிடைக்கும். சில முதலாளிகள் நடத்தினால் அது கூட கிடைக்காது!
    சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை திராவிடக் கட்சிகள் அனுமதிக்காததால், சோஷியலிசத்தை நோக்கிக் கொண்டு செல்வதாக்க் கூறுகின்றார். சில்லரை வியாபாரத்தில் WALMART போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்தால் உள்நாட்டில் எந்தவொரு சிறு முதலாளியும் கடை நடத்த முடியாது. இது அமெரிக்காவில் நிருபனமான உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் வரிப்பணத்தை மின்சார உற்பத்தி போன்ற infrastructure மேம்படுத்தும் பணிகளில் செலவழிப்பது வேண்டுமானால் சோஷியலிசம் நோக்கி செல்வதாகக் கொள்ளலாம். அதில் தவறென்று ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை. அவ்வாறு சோஷியலிசம் நோக்கிச் செல்லாமல், மக்களுக்கு இலவசக் கண்ணாடி மாட்டி மடையர்களாக்குவது திராவிடக் கட்சிகளின் பெருந்தவறுதான். உண்மையில் சோஷியலிசத்தைவிட்டு விலகி ஒரு விதமான நாடக அரசியல்தான் பிரச்சினையே தவிர சிறிது சோஷியலிச கலப்பு தவறேயில்லை. எந்த ஒரு நாடும் வெறும் முதலாளித்துவத்தையோ, சோஷியலிசத்தையோ, சர்வாதிகாரத்தையோ தனிப்பெரும்பான்மை கொள்கையாகக் கொண்டால் முன்னேற்றப்பாதையை அடைய இயலாது. அமெரிக்கா முதலாளித்துவத்தை முன்னிறுத்தினாலும், அமெரிக்க அரசாங்க பள்ளிகளில் உயர் பள்ளி வரை கல்வி இலவசம் – இது சோஷியலிச கலப்பு. சீனாவின் மேற்பாங்கான கொள்கை communism என்றாலும், முழுமையான communism அங்கு இருப்பதாகத் தெரியவில்லை – ஒரு வகையான கூட்டு முதலாளித்துவ கலப்பு போல் தோன்றுகிறது. எல்லா நாட்டு இராணுவங்களும் சர்வாதிகார முறையையே கையாள்கின்றன. வெறும் சோஷியலிசம் ஒன்றையே எல்லாத் துறைகளிலும் பின்பற்றுவது வேண்டுமானால் வீழ்ச்சியை நோக்கி நடத்தலாம். சோஷியலிசத்தை நோக்கிச் செல்வது பிரச்சினையில்லை. எனவே பிரச்சினை ஆரம்பிப்பது விகிதாச்சாரத்தில்தான். கம்யூனிச நாடென்று பறைசாற்றிக் கொண்டு சீனா முன்னேறவில்லையா ? வெறும் இட்லியும் தண்ணீரும்தானே மலிவாகக் கொடுக்கின்றனர். Arun ice cream தரவில்லையே! முதலாளிகள் என்ற பெயரில் கல்வியை அநியாய விலைக்கு விற்கும் தனியார் பள்ளிகள் பற்றி நாம் அறியாததா? அங்கேயும் முதலாளிகளைப் பாதுகாக்க அரசு இலவச பாடசாலைகளை முடிவிடலாமா ?
    தண்ணீரை இலவசமாக் கொடுக்கட்டும். ஏன் Grinder, Mixie, Refrigerator எது வேண்டுமானாலும் கொடுக்கட்டும். TASMAC யார் வேண்டுமானாலும் நடத்தட்டும். சிறு நிறுவனமோ பெரு நிறுவனமோ யார் வேண்டமானாலும் நடத்தட்டும். யார் நிறுவனத்தை நடத்துகிறார் என்பது பிரச்சினையில்லை. வரி ஒழுங்காக வசூலிக்கப்படுகின்றதா என்பதுதான் பிரச்சினை. பன்னாட்டு நிறுவனங்களை அநுமதித்து அவைகளிடமும் ஒரு கட்டிங் வாங்கிக்கொண்டு வரியை வசூலிக்கவில்லையென்றால் யார் வந்துதான் என்ன பயன் ? ஆனால் ஒன்று மட்டும் நடந்தால் நாடு உறுப்படும் – வரிப்பனத்தை சரியாக வசூலித்து, அனைத்துத் தரப்பினர்க்கும் அடிப்படை வசதிகளுடன் கல்வியும் சென்றடைய ஏற்பாடு செய்தாலே போதும். இலவசமாகத் தரவேண்டியதில்லை. இன்னொன்றும் சொல்ல வேண்டியுள்ளது. கல்வியென்றால் வெறும் மதிப்பெண் பெரும் கல்வியல்ல. வாழ்க்கைக்கு பயன்படும் விதமான கல்வி. வெறும் Software engineering அல்ல. அவரவர் சக்திக்கேற்ப, ஈடுபாட்டிற்கேற்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த கல்வி. ஜெர்மனி மற்றும் டச் நாடுகள் தருவது போன்ற கல்வி. அதை மட்டும் மலிவாகக் கொடுங்கள் நாடு தன்னாலே மெருகேறும். இதை இந்தியாவின் எந்தக்கட்சியும் செய்ததாகத் தெரியவில்லை. ஞாயம் பேசும் நீங்களும் நானும் செய்வதாகவும் தெரியவில்லை. காமராஜர் மட்டும் ஏதோ விதிவிலக்காய் தோன்றிவிட்டார். இன்னொரு காமராஜருக்காக காத்திருக்கலாமா? அல்லது நாமே நமக்குள்ளிருக்கும் சின்னஞ்சிறிய காமராஜரை எழுப்பலாமா?

  6. Avatar
    வில்லவன் கோதை says:

    திமுக இந்த தேர்தலில் தோல்வியுற்றபோது திராவிட

    இயக்கமே

    வீழ்ச்சி பெற்றதாக பேசினார்கள்.திமுக திக வைத்தவிற

    வேறுதிராவிட இயக்கம் தமிழகத்தில் இல்லை.திரு செல்வன்

    புரிந்து கொள்ளவேண்டும்.

  7. Avatar
    செல்வன் says:

    பிரகாஷ் தேவராஜ்..டாஸ்மாக் தனியார்மயம் என்பதை விட தென்னை, பனைமர விவசாயிகளை கள் இறக்கி விற்க அனுமதித்தால் இப்போது மல்லையாவுக்கும், உடையாருக்கும் செல்லும் ஒட்டுமொத்த தமிழக மது வணிகமும் மக்கள் கைவசம் சென்று சேரும். சோஷலிசம் எனும் பெயரில் பல்லாயிரம் ஆண்டுகளாக கள் இறக்கி விற்ற சிறு விவசாயிகளின் தொழில் முற்று, முழுதாக அரசுமயமாக்கல் எனும் பெயரில் ஓரிரு பணமுதலைகள் கையில் அரசு மூலமாக சென்று சேர்ந்தது. பாரின் சரக்கு விற்கதடை இல்லை, உள்ளூர் சரக்கு விற்க தடை எனும் கேவலம் உலகில் வேறு எந்த நாட்டிலாவது நடக்குமா? ஒன்று முழுமையாக மதுவை தடை செய்து மதுவிலக்கை அமுல்படுத்துங்கள். அல்லது தென்னைமர, பனைமர விவசாயிகளை கள் இறக்கி விற்க அனுமதியுங்கள். இப்படி மக்கள் பணத்தை தனியார் முதலாளிகளுக்கு கொடுக்காதீர்கள்.

    அடுத்து இந்திய அரசு முன்பே சில்லறை வணிகத்தை குறைந்தபட்சம் இந்திய பெருமுதலாளிகளுக்காவது திறந்துவிட்டிருக்க வேண்டும். ரிலையன்ஸ் அங்காடிகள் வந்தால் இந்திய சிறுவணிகர்கள் பாதிக்கபடுவார்கள் என்றார்கள். அது நடக்கவில்லையே? சில்லறைதுறையில் இன்று அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ஏராளமான முதலீடுகள் தேவை. உணவுபொருள் ஏராளமாக வீணாகிறது. அவை பதப்படுத்தபட்டு, பாதுகாக்கபட்டு விற்கப்படவேண்டும். விவசாயிகள் இடைதரர்களிடம் ஏமாறுவது நிற்கவேண்டும். அங்காடி தெரு மாதிரி படங்களை எடுத்து சில்லறை விற்பனை கடைகளில் அவதியுறும் தொழிலாளர் நலன் பற்றி வேதனைபடுகிறோம். பெரும் நிறுவனங்களில் பணியாற்றினால் அவர்கள் நிலை அப்படி இருக்காது. இத்தகைய சீர்திருத்தங்களை முன்பே செய்து இருந்தால் இந்திய ரிடெயில் நிறுவனங்கள் உலக சந்தையில் பெரும் செல்வாக்குடன் வளர்ந்து இருக்கும். அதை செய்ய தவறிவிடோம்.

    அரசு ஏர் இந்தியா, அசோகா ஓட்டல் மாதிரி கம்பனிகளை விற்றுவிட்டு கல்வி, அடிப்படை கட்டமைப்புகளில் கவனம் செலுத்தலாம். பள்ளிகள் நட்த்த வேண்டிய அரசு சாராயகடை நடத்தி கொண்டிருப்பதால் சாராயகடை நடத்த வேண்டியவர்கள் கான்வென்ட் பள்ளி நடத்தி கொண்டிருக்கிறார்கள். அரசு நிறுவனங்களை விற்றால் கிடைக்கும் பணத்தில் அரசு பள்ளிகள் தரத்தை நிறைய மேம்படுத்தலாம். அதை செய்வதே இன்றைய தேதியில் காமராஜர் ஆட்சிக்கு சமம்

  8. Avatar
    Ravi says:

    தமிழகத்தின் நிலை…

    பஞ்ச தந்திர குரங்கு கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
    குரங்குக்கு ஏற்கனவே பைத்தியம் , கள்ளும் குடிச்சியிருக்கும், தேளும் கடிச்சியிருக்கு, கிணறுக்குள்ளே விழுந்து இருக்கிறது , பசியேடு வேறு இருக்கு…..
    விளைவு வீபரிதமா தான் இருக்கும்…
    பாவம் ஜனங்க பாடு தான் தீண்டாட்டம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *