இதுவரை நாம் பார்த்தப் பெண்களில் முதலாமவள் காரைக்கால் அம்மையார்.
கணவன் தொட்ட உடலே வெறுத்து பூதவடிவம் கொண்டாள் இறைவனுக்காக.
அடுத்தவள் ஆண்டாள், கண்ணனே என் காதலன் என்று நாயகன் நாயகி பாவத்தின் உச்சத்தில் சென்று அவனுடன் ஐக்கியமானாள்.
மூன்றாவது சொன்ன அக்காமகாதேவி திருமண ஆசையுடன் நெருங்கியவனை
உதறிவிட்டு உதறிய அந்த ஆடையை எடுக்காமல் சமூகவெளிக்குள் வந்துவிடுகிறாள். அடுத்தவள் லல்லேஸ்வரிக்குத் திருமணம் ஆகிறது.
ஒத்துப் போகவில்லை. வெளியில் வருகிறாள். இங்கே எவனும் ஆண்மகன் இல்லை என்ற ஆவேசத்துடன். இத்தனை பேரின் வாழ்க்கையின் சாரங்கள் அனைத்தையும் நாம் ஒன்றாக சேர்த்து ஒரு பெண்ணின் உருவில் பார்க்க வேண்டும் என்றால் அவள் தான் மீரா என்ற மீராபாய். ஆண்டாளைப் போல இவளுக்கும் கிரிதர கோபலனே காதலன், இவள் ஏற்றுக்கொண்ட இவள் மணாளன். பெற்றோரின் வற்புறுத்தலால் நடக்கும் திருமணமும் இவள் கோபனிடம் கொண்ட காதலை மாற்ற முடியாமல் திணறுகிறது.
மற்ற எல்லா பெண்களையும் விட இவளுக்கே கட்டுப்பாடுகள் அதிகம். காரணம் இவள் அரசகுடும்பத்துப் பெண். ரஜபுதன அரசி. ரஜபுத்திர குடும்பங்களில் இன்றைய ராஜஸ்தான் பெண்களின் வாழ்க்கையிலும் தொடர்ந்து வரும் குலதேவி வழிபாடு மிக முக்கியமானது. அதாவது திருமணத்திற்கு முன் வரை ஒரு பெண் அவள் தந்தை வீட்டு குல தேவி வழிபாட்டை மேற்கொள்வதும் திருமணம் ஆனபின் தன் கணவன் வீட்டு குலதேவி வழிபாட்டை மேற்கொள்வதும் அவர்கள் வழக்கம்.
அதை உடைக்கிறாள் மீரா. கோபலனை மட்டுமே கும்பிட்ட அவளுக்கு வேறு எந்த உருவ வழிபாடுகளும் ஒத்துவரவில்லை. இன்றும் ஒரு பெண் கோவிலுக்கு கூட தனியாக வருவதை அனுமதிக்காத சமூகப் பின்னணியில் தான் மீராவை நாம் நிறுத்திப் பார்க்கவேண்டும். கணவன் போஜராஜன் போரில் இறந்தப் பின் அரச வம்ச வழக்கப்படி மீரா உடன்கட்டை ஏறி இருக்க வேண்டும். ஆனால் மீராவோ தன் கோபலனுடன் உரையாடிக் கொண்டும் சாதுக்களுடன் பாடிக்கொண்டும் இருக்கிறாள் அரண்மனையில்.
அரண்மனையின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கிறது மீராவின் தேடல். தன்னை விஷம் கொடுத்தும் கொலை செய்யத் தயங்காத தன் கொழுந்தன் ராணாவுக்கு மீரா சொல்கிறாள்:
ராணா..
உன் விசித்திரமான விநோதமான உலகம்
எனக்கு விருப்பமில்லை.
அங்கே குப்பைகள் நிறைந்திருக்கிறது.
இருக்கும் எவரும் புனிதமானவராய் இல்லை,.
இனி, அணியப்போவதில்லை
எந்த நகைகளையும் நான்.
கண்ணுக்கு மையிடேன்
கார்கூந்தல் முடியேன்
மங்கலப் பெண்களின்
அலங்காரங்கள் களைந்தேன்.
மலைகளை ஏந்திய கிரிதர கோபலன்
என் தலைவன்.
இனி, தேவையில்லை
எனக்கு எந்த மணமகனும்.
என்று சொல்லும் போது இதுவரை சமூகத்தில் நிலவிய பதிவிரதா தர்மம், இச்சமூகம் பெண்ணுக்கு விதித்திருந்த பவித்திரம் , அனைத்தும் கேள்விக்குள்ளாகிறது. நிர்வாணத்திற்கு காரணம் சொல்லவந்த அக்காமகாதேவியும் லல்லேஸ்வரியும் தாங்கள் வரித்துக்கொண்ட ஆண்டவனை மட்டுமே ஆணாக பாவித்த அதே மனநிலையை மீராவும் வெளிப்படுத்துகிறார்.
பிருந்தாவனத்தில் வைஷ்ணவர்களின் தலைவராக ஜீவா கொசைன் என்பவர் இருந்தார். மீரா அவரைப் பார்க்க விரும்பினார். ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. தன்னுடைய இடத்திற்கு எந்த ஒரு பெண்ணையும் அனுமதிப்பதில்லை என்று மீராவிற்கு அவர் பதிலளித்தார். கோபத்தில் மீரா, “பிருந்தாவனத்தில் இருக்கும் அனைவரும் பெண்களே. கிரிதரனான கோபாலன் மட்டுமே புண்ணிய புருஷன். அவனைத் தவிற, இன்னொரு கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் இருப்பது எனக்கு இன்றுதான் தெரியும் என்று” பதிலளித்தார். ஜீவா கொசைன் தன் செய்கைக்காக வெட்கப்பட்டார். மீரா ஒரு சிறந்த பக்தை என்பதைப் புரிந்து கொண்டார். தானே மீரா இருக்கும் இடத்திற்குச் சென்று, அவருக்கு மரியாதை செய்தார்.
உலக ஜீவராசிகள் எல்லாம் ஆத்மா என்றும் பரமாத்மா அவன் ஒருவன் தான்,
அவன் தான் கிருஷ்ணன் என்று மீராவின் தேடலை இரண்டே வரிகளில்
அடக்கிவிட முடியும்.
இப்போது சில கேள்விகள் எழுகின்றன.
இந்தப் பெண்கள் இவ்வளவு தடைகளைக் கடந்து சமூகவெளிக்கு வர என்ன காரணம்?
ஜீவாத்மா பரமாத்மாவை கண்டடையும் தேடலுக்கான பாதை சந்நியாசமா, அதாவது எல்லாம் துறந்து கடந்து தான் வந்தாக வேண்டுமா?
இந்தக் கேள்விக்கான பதில் உபநிஷத்திலேயே சொல்லப்பட்டு விடுகிறது.
மைத்ரேயிக்கும் அவள் கணவர் யாக்ஞ்வால்கியருக்கும் நடக்கும் உரையாடல் பகுதியில் இதற்கான விடை வருகிறது. பிரம்மஞானத்தை வாழ்க்கையின் எந்த நிலையிலும் பெறலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
கார்க்கி – பிரம்மசாரினியாக இருந்த நிலையில் கண்டடைந்தாள்
சோட்டால – கிரஹஸ்த – குடும்ப நிலையில் பெற்றாள்
மைத்ரேயி – வனப்பிரஸ்த வாழ்நிலையில் கண்டடைந்தாள்
சுலபயோகினிக்கு சந்நியாசினி வாழ்க்கையில் அந்த வெற்றி கிட்டியது.
Gargi got it in the BRAHMACHARYA stage.
Choodaala attained it while a GRIHASTHA.
Maitreyi attained it while in the VANAPRASTHA stage of life.
Sulabhayogini won it while a SANYASINI.
அப்படியானால் இவர்கள் ஏன் சமூகவெளிக்குள் எல்லாம் துறந்து வர வேண்டும். எல்லா உரிமைகளும் கொண்ட பெண், அவளுக்கான
அடிப்படை உரிமைகளையும் மறுக்கும் சமூகத்தில் வாழ நிர்பந்திக்ப்படுகிறாள்.
அச்சூழலில் அவளின் தேடல் அதீதமாகி அவளை இயக்கும் அதீத சக்தியாக மாற்றம் பெறும் போது இச்சமூகம் தன் கட்டுப்பாடுகளை
இழக்கிறது. அல்லது தளர்த்திக் கொள்கிறது.
மீராவின் இசைப்பாடல்களுக்கென்று உலகமெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள்.
ஒரு பெண் பதிவிரதாவாகவும் பக்தையாகவும் இரண்டுமாகவும் இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
ஆண் பெண் உறவில் பெண் சமூகத்தின் கட்டமைப்பை பாதுகாப்பவள்.
சமூக கட்டமைப்பை விலக்கி வைக்கிறது, துறக்கிறது சந்நியாசம்.
ஒரு பெண் இரண்டுமாக இருப்பது சாத்தியமில்லை. இரண்டும் பெண்ணைப் பொறுத்தவரையில் இரு துருவ நிலைப்பாடுகள்.
இப்பெண்கள் தங்கள் மொழியில் தங்கள் உணர்வுகளை புனைந்து வடிகால் தேடிக்கொண்ட கற்பிதங்கள்,ஒரு கட்டத்துக்கு மேல் பயன் தராதபோது-உடலின் எழுச்சிகள்,அவற்றையும் மீறி அவர்களை அலைக்கழிக்கின்றன. அதுவே காதல் ததும்பும் காமம் கலந்த நாயகன் நாயகி பாவத்தின் உச்சத்தில் அவர்கள் பேசிய பெண்மொழி.
,
”கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கைதன்னைக்கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில் எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே”
என்று ஆண்டாள் வெளிப்படுத்தும் உணர்வு அவள் எரிக்கும் உடல்மொழியின் வெளிப்பாடு.
.உடலின் தேவைக்காக ஆணைச்சார்ந்தாக வேண்டியிருக்கிறதே என்ற வெறுப்பும்,அது கிடைக்காதபோது விளையும் சினமும் தீவிர வெளிப்பாடுகளுடன் வெளிப்படும் இவர்களின் மொழிகளில் ஆன்மிகம் இன்னொரு வகையில் இவர்களை ஆற்றுப்படுத்துகிறது.
அவனே என் மணவாளன்
அவன் ஒருவன் மட்டுமே ஆண்.
மற்றவர்கள் எல்லாம் பெண்கள் என்றும் விலங்குகள் என்றும்
உணரும் போது ஆற்றமைக்கு ஆறுதல் கிடைக்கிறது.
ஆண்டாளுக்கும், காரைக்காலம்மைக்கும் நேர்ந்த இந்த அவலத்தை’மனோதத்துவ விபத்து ‘ என்று குறிப்பிடுவார்,நாவலாசிரியர் இந்திரா பார்த்த சாரதி.
ஆண்டாள் யாரின் மகள்? பெரியாழ்வார் பெற்றெடுத்த மகளா?
தத்து எடுத்த மகளா? துளசிச் செடி அடியில் கண்டெடுக்கப்பட்டவளா?
என்று ஆண்டாளின் பிறப்பு குறித்து சந்தேகங்களை எழுப்பிய
ஆண் மைய சமூகம் அவள் பாடல்கள் குறித்தும் சந்தேகப்பட்டது..
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக ஆண்டாளை ஏற்க -அவள்பெண் என்ற காரணத்தால் பக்திமரபு முதலில் தயக்கம் காட்டியது.அவளை ஒரு கவியாக அங்கீகரிக்கத்தடை போட்ட இலக்கிய மரபுகள்,அவள் பாடல்களைப்பெரியாழ்வார்தான் (அவள் பெயரில்)பாடினார் என்று கூறவும் தயங்கவில்லை”ஆண்டாளின் அகத் துறைப்பாடல்கள்,வேறெந்த ஆண் புலவரின் அகத்துறைப்பாடல்களை விடவும் துணிவும், தெளிவும் உடையவை.இதனாலேயே,ராஜாஜி,பெரியாழ்வாரே நாயகியாகத்தம்மைப்பாவித்துப்பாடிய பாடல்கள் இவை என்று கருத்துரைத்தாரோ” என்பார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.
பெண் அடியார்களின் போக்குகள்,மாற்றுக்கலாசார வெளிப்பாடுகளுக்கு வழியமைத்துக்கொடுத்துவிடுமோ என்ற அச்சத்தால் ஆணாதிக்க சமுதாயம் அதனோடு ஒரு சமரசத்தைச்செய்து கொண்டு,அதன் எதிர்ப்புப் போக்கை பலமிழக்கச்செய்தது என்று ஏ.கே.ராமானுஜன் முன்வைத்திருக்கும் கருத்து முக்கியமானது. இச்சமரசத்தின் விளைவாகவே,திருப்பாவைக்கும்,’வாரணமாயிரம்’ என்ற ஒரு பாடலுக்கும் மட்டுமே முதன்மை தரப்பட்டது என்றும்,ஆண்டாளின் பிற பாடல்கள்,”பால் ரீதியான வெளிப்படையான படிமங்கள் காரணமாகக்கோயில்களிலும்,ஏனைய பொது இடங்களிலும் …..ஓதப்படாமல்,பக்தி இலக்கிய மரபில் அதிகம் வெளிக்காட்டப்படாமல் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு விட்டன”என்றும் ஈழ எழுத்தாளர்,செல்வி திருச்சந்திரனும் குறிப்பிட்டுள்ளார்.
ஔவையைமூதாட்டியாகவும்,காரைக்காலம்மையாரைப் பேயாகவும் மாற்றிய சமூக அமைப்பு,ஆண்டாளின் ஆளுமையினையும்,அவளது பாடல்கள் எற்படுத்திய அதிர்வுகளையும் இயல்பான போக்கில் எதிர்கொள்ளவும்,அங்கீகரிக்கவும் இயலாமல் தவித்தது; பிறகு அவளையும் பெரிய பிராட்டியாகக் கோயிலில் நிற்க வைத்து வழிபாடு செய்யத்தொடங்கிவிட்டது.
திருமணமாகாதவள், கன்னிப்பெண், சூடிக்கொடுத்த சுடர் கொடியானதை காலப்போக்கில் ஏற்றுக்கொண்ட இந்திய சமூகம் உடல்வெளியைக் கடந்த பயணத்தில் அக்காமகாதேவி, லல்லா, மீரா உட்பட அனைவரையும் அவர்களின் பக்தியை மெச்சி ஏற்றுக்கொண்டாலும் ஒரு பெண்ணாக அவர்களின் உடல்வெளி கடந்த பாதையை விதிவிலக்காக மட்டுமே இன்றுவரை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
- நான் ஏன் இஸ்ரேலை விமர்சிப்பதில்லை?
- மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்
- “சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்
- முடிவை நோக்கி !
- நெருப்புக் குளியல்
- இயற்கையின் மடியில்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 17
- நல்லவர்களைக் கொல்லாது நஞ்சு
- ஆனந்த பவன் (நாடகம்) காட்சி-1
- நிழல்
- சீதை, அமுதா, நஞ்சா, தீயா?
- தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014
- வாழ்க்கை ஒரு வானவில் 16
- தொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி
- நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?
- பாவண்ணன் கவிதைகள்
- வண்ணவண்ண முகங்கள் விட்டல்ராவின் நாவல் ‘காலவெளி’
- எலிக்கடி
- உம்பர் கோமான்
- பால்கார வாத்தியாரு
- வேல்அன்பன்
- தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை
- உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 88
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
- இலக்கியச்சோலை கூத்தப்பாக்கம், கடலூர் – 24-08-2014 ஞாயிறுமாலை6 மணி