ஆனந்த் பவன் [நாடகம்] வையவன், சென்னை காட்சி : 3

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

 anand-3

இடம்: ஹோட்டலின் உட்புறம். சமையல் செய்யுமிடம்.

 

நேரம்: காலை மணி எட்டரை.

 

பாத்திரங்கள்: சரக்கு மாஸ்டர் சுப்பண்ணா குக் ராமையா, தோசை மாஸ்டர் சாரங்கன், ரங்கையர், ஆனந்தராவ்.

 

(சூழ்நிலை: சுப்பண்ணா இரண்டாவது ஈடாக மெதுவடை போட்டுக் கொண்டிருக்கிறார். கடபுடவென்று குழாயடியில் டபரா செட்டுக்களும் தட்டுகளும் சரியும் ஓசை. குழாய் பீச்சும் ஒலி. தோசைத் தண்டவாளத்தின் சீற்றம், வெங்காயம் அரியும் கண்ணப்பன், டக் டக்கென்று கத்தியை ஓட்டும் தாளலயம், எண்ணெயில் மெதுவடை முறுமுறுக்கும் ஒலி.)

 

 

சுப்பண்ணா: கண்ணப்பா, வெங்காயத்தை அப்புறமா அரிவே… புளிக்கரைசல் கொஞ்சம் கொண்டா, ராமையா சாம்பாரிலே இன்னிக்கு சாப்பிடறவா நாக்கு பட்டை தீட்டிடப் போவுது! (முகர்ந்து பார்க்கிறார்) ஓய் ராமையா… என்னது அது ஆனந்தபவன் சாம்பாரா… இல்லே மில்லி அடிக்கிறவாளுக்கு சாக்னா கடையிலே கொடுப்பாளே, அது மாதிரி காரக்கொழம்பா…

 

ராமையா: (கறுவிக் கொண்டே) என்னைக் குறை சொல்லலேன்னா ஒமக்கப் பொழுது போகாதே! (சாம்பாரை ஒரு கரண்டியில் மொண்டு ஆற்றிப் பார்க்கிறார்) அஸிஸ்டெண்ட் பிரகஸ்பதி ஐயாசாமியை, மொளகாப்பொடி போடு டான்னு, வாய் கொப்புளிச்சிண்டு வர, குழாயடிக்கப் போய்ட்டு திரும்பறதுக்குள்ளே பூந்து விளையாடிட்டான்!

 

சுப்பண்ணா: ஐயசாமி எங்கே?

 

ராமையா: தம் அடிக்க லெட்ரீனுக்குப் போயிருப்பான்! ரயில் இங்சின் மாதிரி பல்லைத் தொலக்கறதுக்கு மின்னாடி பத்த வச்சுக்கணும்.

 

சுப்பண்ணா: ஹத்தேரி கொடகல்னானாம்… பின்னே ஒம்மைப்போல, ஓல்டு மாடலா என்ன அவன்?  நீர்தான் பல் தொலக்காமே காபி சாப்பிடப்படாது. குளிக்காம டிபன் செய்யப்படாதுன்னு ஆசாரம் பார்ப்பீர்! அஸிஸ்டெண்ட் அப்டுடேட்… ரேடியோவிலே பாட்டு வச்சா, இவன் கூட சேர்ந்துன்னா ஜமாய்க்கறான்… தம் மாரோ தம்… மிட்ஜாயே கம்… போலோ ஷப்பஷாம்.

 

சாரங்கன்: பெரியண்ணா கேஷ்ல உட்கார்ந்தா கர்நாடக சங்கீதம் தான். எப்ப ராஜாமணி வரும்னு பார்த்துக்கிட்டிருந்து, இத்தனை மணிக்கு விவிதபாரதி வர்த்தக ஒலிபரண்ணு நின்னுடறான்.

 

சுப்பண்ணா: டேய் சாரங்கா, பிறத்தியான் விஷயம்னா காப்பியை ஆத்தறாப்பிலே நீ ஒரு ஆத்து ஆத்தாம விடமாட்டியே! உன் சங்கதி என்ன? டூட்டி ஆஃப் கெடைச்சதும் சினிமா தியேட்டர் வாசல்லயோ காஸட் கடை பெஞ்சிலயோ காலை ஆட்டிண்டு ஒக்காந்துருக்கே.

 

சாரங்கன்: (தோசைத் தண்டவாளத்தை கரண்டியால் இரண்டு தட்டு லொட் லொட்டென்று தட்டுகிறான்) தோசை ரெடீ.

 

சுப்பண்ணா: சாரங்கா! மிருதங்கம் வாசிக்கக் கத்துக்கோடா நன்னா முன்னுக்கு வருவேன். ஐயாசாமி பெரிய பாட்டுக் காரனாயிடுவான். நீ அவனுக்குப் பக்க வாத்தியமாயிடலாம்.

 

சாரங்கன்: நான் முன்னுக்கு வந்தா என்ன மாமா… பொண்ணா வச்சிருக்கீர்? என்னை மாப்பிள்ளை யாக்கிக்க…

 

சுப்பண்ணா: எனக்கு ஒரு பொண்ணிருந்தா ஒன்னை மாதிரி தோசை தேச்சிட்டு டண்டண்ணு மோளம் அடிக்கிற பயலுக்கா கொடுப்பேன்?

 

சாரங்கன்: கவர்னர் ஆத்து சமையற்காரனுக்குக் கொடுப்பேள்.

 

(ராமையா ஓஹோவென்று சிரிக்கிறார்)

 

சுப்பண்ணா: நீ கெட்டிக் காரண்டா சாரங்கா.

 

சாரங்கன்: என்ன மாமாஅந்த புது கண்டுபிடிப்பு!

 

சுப்பண்ணா: நம்ம ராமையாவை சிரிக்க வச்சுட்டியே போறாதோ!

 

சாரங்கன்: மாமா! ரங்கண்ணா பொண்ணு ஜம்னா தேடிண்டு வந்ததாமே!

 

சுப்பண்ணா: மெள்ள அல்வா கிண்டறான் பாரும்… ஒன்னையாடா தேடிட்டு வந்தா?

 

சாரங்கன்: அபச்சாரம்! அபச்சாரம்! என்ன மாமா அது? ரங்கண்ணாவைத் தேடிட்டு வந்தான்னேன்.

 

சுப்பண்ணா: என்ன விஷயம்?

 

சாரங்கன்: யாரோ வந்திருக்கான்னு சொன்னதா கேள்வி!

 

சுப்பண்ணா: ரங்கண்ணா வந்துட்டாரோ?

 

சாரங்கன்: இல்லே மாமா.

 

சுப்பண்ணா: ரங்கண்ணாவைத் தேடி வந்தது ஆம்பளையா பொம்பளையா?

 

சாரங்கன்: பொம்பளைதான் மாமா.

 

சுப்பண்ணா: அதானே பார்த்தேன்… பொம்பளைன்னா தானே, ஒனக்கு இன்ட்ரஸ்டே வரும்! பேரு சொன்னாளா?

 

சாரங்கன்: மாதவன் சொன்னான். என்னமோ பேரு… என்னமோ லட்சுமிண்ணா

 

சுப்பண்ணா: வரலட்சுமி, சீதாலட்சுமி, தனலட்சுமி?

 

சாரங்கன்: ஆனந்த லட்சுமின்னா!

 

சுப்பண்ணா: (சட்டென்று முகம் மாறுகிறது) ஆனந்த லட்சுமியா… இருக்காதுடா இருக்க முடியாது!

 

சாரங்கன்: என்ன மாமா சட்டுன்னு சீரியஸ் ஆயிட்டேள்? ஒம்ம மாதிரியே தான் ரங்கண்ணாவும் மொகம் மாறிட்டாராம். மாதவன் சொன்னான். யார் அந்த ஆனந்த லட்சுமி?

 

சுப்பண்ணா: பெரியண்ணா அப்ப கேஷிலே ஒக்கார்ந்திருந்தாரோ?

 

சாரங்கன்: இல்லியே ராஜாமணி அம்பி தான் உட்கார்ந்திருந்தது.

 

சுப்பண்ணா: ரங்கண்ணா போனவர் இன்னம் ரிடர்ன் ஆகல்லியே?

 

சாரங்கன்: இல்லே, இதுவரைக்கும் காணோம் என்ன மாமா, பெரிஸ்ஸா சஸ்பென்ஸ் டெவலப் பண்றேள், யாரந்த ஆனந்த லட்சுமி?

 

சுப்பண்ணா: அவதான் இந்த ஹோட்டல் சொந்தக்காரிடா.

 

சாரங்கன்: அப்போ பெரியண்ணா?

 

சுப்பண்ணா: அவர் வெறும்ன புரொப்ரைடர்! சொந்தக்காரி இப்போ நீ வார்த்துண்டிருக்கிறியே தோசைத் தண்டவாளம், இந்த கரண்டி, டேபிள் சேர், சப்ஜாடா அவளோடது. கம்ப்ளீட்டா.

 

சாரங்கன்: புரியறாப்ல சொல்லுங்கோ மாமா.

 

சுப்பண்ணா: அதோ ரங்கண்ணா வர்றார் பாரு! அப்றமாத் தெரிஞ்சுப்பே.

 

ஆனந்தராவ்: சுப்பு!

 

சுப்பண்ணா: என்னண்ணா?

 

ஆனந்தராவ்: அந்த கோவிந்தன் பய கேஷ்ல கைய வச்சத மாதவன் பார்த்து, பெரியண்ணா கிட்டே சொல்லிட்ருக்கான். மடப்பய கோவிந்தன், தகரப் பெட்டியையும் கிழிஞ்ச லெதர்பேக் கையும் தூக்கிண்டு, நம்ம யார் மொகத்திலும் முழிக்க அவமானப்பட்டுண்டு பஸ் ஸ்டாண்ட்ல நின்னுண்டிருந்தான் செய்யறப்ப செஞ்சுட்டான் இப்ப குமுங்கிச் சாகறான், அவன் திருந்தறதுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பமேண்ணு கையோட அழச்சுண்டு வந்துட்டேன். எலேய் கோவிந்து (ஒரு விசும்பல் ஒலி)மூட்டையை வச்சுட்டு டேபிளுக்குப் போடா! இப்ப ரோஷம் வந்து என்ன பண்றது? லாட்ரி டிக்கெட்டா வாங்கறச்சே புத்தி வரணும். தம்படி சேத்து வைக்க வக்கில்லே. தடிமாடு மாதிரி வயசாச்சு. ஊர் ஊரா ஓட்டல் மாத்திண்டு திரிஞ்சா என்னத்தை உருப்படுவே?  எவன் ஒன்னை நம்பி பொண்ணு தருவான்?

 

சுப்பண்ணா: உள்ளே போடா.

 

ஆனந்தராவ்: யாரும் அவனை கோட்டா பண்ணாம பாத்துக்கணும்.

 

சுப்பண்ணா: ஆகட்டும்ணா.

 

ஆனந்தராவ்: ரங்கண்ணா வெள்ல போயிருக்காரா சுப்பண்ணா?

 

சுப்பண்ணா: நீங்க போனதுக்கு பிந்தி போய்ட்டார். ஜம்னா ஆரோ வந்திருக்கறதா கூட்டிண்டு போனா!

 

ஆனந்தராவ்: இப்படி பிஸியான நேரத்ல வெளியே போ மாட்டாரே… யார் வந்ததாம்?

 

சுப்பண்ணா: (உண்மையை மறைத்து) தெரியலேண்ணா.

 

ஆனந்தராவ்: (யோசிப்பது போல்) ம்ம்… ம்ம்… சாதாரணமா ஜம்னா இப்படி வரக்கூடியவ இல்லே…

 

சுப்பண்ணா: அதோ ரங்கண்ணா வர்றாரே!

 

ஆனந்தராவ்: என்ன ரங்கா… யார் வந்தது?

 

ரங்கையர்: கொஞ்சம் இப்படி வர்றேளான்னா…

 

ஆனந்தராவ்: என்னியா சொல்றே… தோ… வர்றனே!

 

(இருவரும் தனியே நகர்வதைப் பார்த்து சுப்பண்ணா, சாரங்கனிடம் கண்சிமிட்டுகிறார்)

 

ஆனந்தராவ்: (தனியே வந்த பின்) என்னது ரங்கா?

 

ரங்கையர்: அண்ணா எங்காத்துக்கு ஆனந்த லட்சுமி வந்திருக்கா!

 

ஆனந்தராவ்: (முகம் மாறுகிறது) ஆனந்த லட்சுமியா… இத்தனை வருஷம் கழிச்சா என்னதுக்கு வந்திருக்கா?

 

ரங்கையர்: பயப்படாதேங்கோ! அவ காசிக்குப் போய்ண்டிருக்கா. வர்ற வழியலே ஒங்களைப் பார்க்கணும்னு தோணியிருக்கு. நேரா ஹோட்டலுக்கோ ஒங்காத்துக்கோ வந்தா சரியில்லேண்ணு எங்காத்துக்கு வந்திருக்கா.

 

ஆனந்தராவ்: (பதற்றத்தோடு) எப்படியிருக்கா? சௌக்கியமா இருக்காளோ?

 

ரங்கையர்: பதறாதேங்கோ! நன்னா க்ஷேமமா இருக்கா நாலு மணிக்கு நீங்க

வருவேள்னு சொல்லியிருக்கேன். அப்ப போனாப் போறும்.

 

(திரை)

 

[தொடரும்]

Series Navigation
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *