தொடுவானம் 31. பொங்கலோ பொங்கல் !

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

pongal-celebration

         கறவைப் பசுக்களுக்கு பசும்புல் தந்தால் நிறைய பால் சுரக்கும்.
         பாட்டிதான் பால் கறப்பார். சில நாட்களில் அம்மாவும் கறப்பதுண்டு. வேறு ஆட்கள் கறக்க முயன்றால் காலால் உதைத்துவிடும். தயிரைக் கடைந்து வெண்ணெய்  எடுக்கும் பொறுப்பும் பாட்டியுடையதுதான். அப்படி எடுக்கும் போது என்னை வெண்ணெய் உருண்டைகளை உண்ணச் சொல்வார். வெண்ணெய் உருக்கி நெய் எடுப்பார். நெய் மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.அதோடு முருங்கைக் கீரையைச் சேர்த்து உருக்கினால் அதன் மணமும் சுவையும் தனி!
          உணவுக்குப்  பஞ்சம் இல்லாத  காலம் அது. ஒரு வருடத்திற்குத்  தேவையான நெல் பத்தாயத்திலும்,  மண் பானைகளிலும் நிறைந்திருக்கும் .கொஞ்சங் கொஞ்சமாக தேவைக்கு ஏற்ப வெளியில் எடுக்கப்படும்.
          பெரிய மண் பானைகளில் இரவு முழுதும் நெல்லை நீரில் ஊற வைத்து காலையில் வைக்கோல் இராட்டி விறகு பயன்படுத்தி செங்கற்களால் தயாரிக்கப்பட்ட அடுப்புகளில் நெல்லை அவிப்பார்கள். பின்பு சுடச்சுட அந்த நெல்லை வாசலில் கொட்டி வெயிலில் காய வைப்பார்கள்.
           மாலையில் அவற்றை சாக்குகளில் கட்டி, கட்டை வண்டியில் ஏற்றி நெல்  அரைக்கும் மில்லுக்கு கொண்டு செல்வார்கள். அப்போதெல்லாம் நான் வண்டியில் நெல் மூட்டைகளின் மேல் ஏறி அமர்ந்துகொண்டு சவாரி செய்வேன். மெய்யாத்தூர் எனும் பக்கத்து ஊரில்  மில் இருந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரம்தான். அதனால் வசதி குறைந்தவர்கள் நெல் மூட்டையை  தலையில் சுமந்துகொண்டு நடந்தே சென்றுவிடுவார்கள்.
          அந்த சிறு வயதில் நெல் அரைக்கும் இயந்திரம் ஓடுவதைப் பார்க்க ஆசையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அது  நீண்ட வார்களில் பெரும் இரைச்சலுடன் இயங்கும் இயந்திரம். நெல்லை ஒருபெரிய புனல் வழியாகக் கொட்டுவார்கள். வெளியாகும் அரிசியையும் தவிட்டையும் தனித்தனி சாக்குகளில் கட்டித் தருவார்கள். அப்போது அரிசியும் தவிடும் சூடாக இருக்கும்.
          மீண்டும் மாட்டு வண்டியில் அவற்றை ஏற்றிக்கொண்டு வீடு திரும்புவோம்.
          ” சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் ” என்றார் வள்ளுவர்.
          இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகளாக எர்களையும் காளைகளையும் நம்பிதான் தமிழ் மக்கள்  விவசாயம் செய்துள்ளனர். நன் சிறுவனாக இருந்தபோதும் அதே நிலைதான். சமீப காலத்தில்தான் ” டிராக்ட்டர் ” இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
          விவசாயம் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. அதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை பருவ மழையும் போதுமான நீரும். வாய்க்கால்களில் நீர் பாய்ச்சல் இல்லையேல் நாற்றாங்காலில் விதை விடுவதிலிருந்து, நாற்று நடுவது முதல் பாதிக்கும்.
          நன்கு விளைந்து கதிர்கள் வெளி வந்த பின்பு அவற்றைக் கொய்து தின்ன கூட்டங் கூட்டமாய்  குருவிகள் படையெடுக்கும். அது போன்றே வயல் வரப்புகளில் வாழும் எலிகளின் தொல்லையும் அதிகமாகும். இவற்றிலிருந்து நெல்மணிகளைப் பாதுகாப்பது சிரமம்.
          எல்லாம் சரியாக இருந்தாலும், திடீரென்று பெரு மழை பெய்துவிட்டால் அனைத்தும் நாசம்! கதிர்கள் நீரில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் வீணாகிவிடும்.
          அறுவடை  காலத்தில் வேலை செய்ய போதுமான ஆட்கள் கிடைக்காமலும் பாதிப்பு உண்டாகும். குறைந்த ஆட்களை வைத்து அறுவடை செய்தால் கூலி அதிகமாகும். சில சமயங்களில் கிடைத்த நெல் அனைத்தும் கூலிக்கே சரியாகிவிடும் அவலமும் உள்ளது – விளைச்சல் சரியில்லை எனில்.
          இத்தகைய சிரமமானச்  சூழலில்தான் தமிழ் நாட்டில் தொடர்ந்து விவசாயம் நடைபெற்று வருகிறது!
          வயல்களில் நாற்றுகள் நட்டு முடிந்தபின்பு கண்களுக்கு எட்டிய தூரம் முழுதும் பச்சைப் பசேலென்று அவை காற்றில் அசைந்தாடும் அழகு கண்கொள்ளாக் காட்சியாகும். பின்பு அவை வளர்ந்து பூத்து கதிர்கள் விட்டு நெல் மணிகள் முற்றியதும் பச்சை நிறம் மாறி தங்க நிறமாகும். பருவம் எய்திய பெண் நாணத்தால் தலை சாய்ந்தது போன்று கதிர்கள் காட்சி தரும்.
          தை மாதத்தில்தான் அறுவடை தொடங்கும். நல்ல மகசூல் எனில் அனைவருக்கும் கொண்டாட்டம்தான். நிலச் சொந்தக்காரர்களுக்கு மூட்டை மூட்டையாக நெல். கூலி வேலை செய்பவர்களுக்கு கை நிறைய பணம்.
          தை முதல் நாளில் பொங்கல் விழா விமரிசையாகக் கொண்டாடப்படும். பொங்கல் தமிழர்களின் பாரம்பரிய விழா. இதை உழவர்களின் விழாவாக பன்னெடுங் காலமாக தமிழர்கள்  கொண்டாடி மகிழ்கிறார்கள்.
         வீடுகள் தோறும் கூரைகள் பிரிக்கப்பட்டு புதுக் கீற்றுகளும் வைக்கோலும் போடுவார்கள். சுவர்களில் சுண்ணாம்பு  பூசுவார்கள்.
        வீட்டு வாசல்களில் மாவு கோலங்கள் போட்டு பரங்கிப் பூக்கள் வைப்பார்கள்.தூண்களில் கரும்புகள் கட்டுவார்கள்.
        பொங்கல் தினத்தன்று காலையிலேயே ஆற்றில் குளித்துவிட்டு புத்தாடைகள் உடுத்திக் கொள்வார்கள். பெண்கள் புது மண் பானையில், புது அரிசியுடன் வெல்லம், பால், நெய் சேர்த்து புது அடுப்பில் பொங்கல் வைப்பார்கள்.. அது பொங்கி வழியும் பொது அனைவரும், ” பொங்கலோ பொங்கல்! ” என்று கோஷமிட்டு மகிழ்வார்கள்.
          பொங்கல் சமயத்தில் மாடுகளுக்கும் கொண்டாட்டம்தான். விவசாயிகளுக்கு உற்ற தோழர்களாக மாடுகள் வருட முழுதும் உழைத்துள்ளதால் அவற்றுக்குச் சிறப்புச் செய்யும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். அவற்றின் கொம்புகளுக்கு சாயம் பூசுவார்கள். காலையிலேயே அவற்றை வாய்க்காலில் குளிப்பாட்டி, தக்கைகளால் செய்யப்பட்ட வண்ண வண்ண மாலைகள் ( நெட்டி மாலை ) சூட்டி, அழகு படுத்துவார்கள். அதை அறிந்து கொண்டவை போன்று அவை குதூகலத்தில் தலைகளை ஆட்டி மகிழும்.
          அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளைப் பூட்டிய கட்டை வண்டிகளில் ஊர்ச் சிறுவர்கள் ஏறிக்கொண்டு, ” பொங்கலோ பொங்கல்! ” என்று உரக்கக் கத்திக்கொண்டு ஊர் எல்லை வரை சவாரி செய்து மகிழ்வார்கள்.
          ” உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம் ” என்ற பாடலுக்கொப்ப நல்ல விளைச்சலுக்கு நன்றி கூறி மகிழும் திருவிழாவாகப் பொங்கல் கொண்டாப்படுகின்றது.
          ” தைப் பிறந்தால் வழி பிறக்கும் ” என்று தமிழர்கள் நம்பி பொங்கல் திருநாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //வயல்களில் நாற்றுகள் நட்டு முடிந்தபின்பு கண்களுக்கு எட்டிய தூரம் முழுதும் பச்சைப் பசேலென்று அவை காற்றில் அசைந்தாடும் அழகு கண்கொள்ளாக் காட்சியாகும். பின்பு அவை வளர்ந்து பூத்து கதிர்கள் விட்டு நெல் மணிகள் முற்றியதும் பச்சை நிறம் மாறி தங்க நிறமாகும். பருவம் எய்திய பெண் நாணத்தால் தலை சாய்ந்தது போன்று கதிர்கள் காட்சி தரும்.//

    வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா?-தலை
    வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா-இது
    வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா?-என்
    மனைக்கு வரக் காத்திருக்கும் நீ என் சொத்தம்மா!

    நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக-அது
    நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்து கொத்தாக
    பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக்கட்டாக-அடுச்சு
    பதறு நீக்கி குவிச்சு வைப்போம் முட்டு முட்டாக!

    ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!
    என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே!….

    பாடலாசிரியர்: கவிஞர். மருதகாசி.
    படம்: பிள்ளைக் கனி அமுது -1958.
    இசை: K.V.மகாதேவன்.
    பாடியவர்: T.M.சௌந்தரராஜன்

  2. Avatar
    I I M Ganapathi Raman says:

    வயல்களில் நாற்றுகள் நட்டு முடிந்தபின்பு கண்களுக்கு எட்டிய தூரம் முழுதும் பச்சைப் பசேலென்று அவை காற்றில் அசைந்தாடும் அழகு கண்கொள்ளாக் காட்சியாகும். பின்பு அவை வளர்ந்து பூத்து கதிர்கள் விட்டு நெல் மணிகள் முற்றியதும் பச்சை நிறம் மாறி தங்க நிறமாகும். பருவம் எய்திய பெண் நாணத்தால் தலை சாய்ந்தது போன்று கதிர்கள் காட்சி தரும்.

    1. Avatar
      I I M Ganapathi Raman says:

      நான் இதைத்தொடர்ந்து எழுதிய வரிகள் விடுபட்டுவிட்டன. மேலே எடுத்துக்காட்டியது மருத்துவரின் கட்டுரையிலிருந்து.

      தொடர்ந்த வரிகள்:

      இந்த வர்ணனை எனக்கு இப்பாடலைத்தான் நினைவுபடுத்துகிறது”

      “//காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங்காலுந்தானே மிச்சம்…
      கையுங்காலுந்தானே மிச்சம்//

      திரைப்படம்: நாடோடி மன்னன்
      பாடியவர். டி.எம்.எஸ்
      இசை: சுப்பையா நாயுடு
      பாடலாசிரியர்: விவசாயக்கூலியாகவும் ரிகஷாக்காரனாகவும் பலவேலைகளைச்செய்து வாழ்க்கையில் உழைப்பாளிகளைப்பற்றி நேரடியாகத்தெரிந்துகொண்டு தன் பாடலகளில் சொன்ன பொதுவுடைமைக்கவிஞர் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் அவர்கள்.

  3. Avatar
    Dr.G.Johnson says:

    அன்பு நண்பர் திரு. ஷாலி அவர்களே தொடுவானம் படித்துவிட்டு மறக்கமுடியாத மருதகாசியின் பாடல் வரிகளை நினைவு கூறியதற்கு நன்றி. உழவுத் தொழிலின் சிறப்பைக் கூறும் அந்தப் பாடலை டி. எம் . சவுந்தரராஜன் அவர்களின் குரலில் கேட்பது அன்றும், இன்றும் இனி என்றும் இனிமையானதே! வயல் வெளிகளில் நாற்று நட்டு முடிந்து அவை வளரும்போது ஒருவிதமான் பசுமையான மணத்துடன் சில்லென காற்று வீசும். அறுவடை முடிந்தபின் காலைப் பணியில் நனைந்துள்ள அறுபட்ட கதிர்கள்கூட ஒருவிதமான மணம் வீசும். இரண்டுமே மறக்கமுடியாத கிராமத்து மண் வாசனைகள்! … அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *