ராவுத்தர் வீட்டில் சுப்பனுக்கும் செல்லிக்கும் தனிஉரிமை உண்டு. ராவுத்தர் அறையில் இருக்கும் சுருட்டுச்சாம்பல் டப்பாவைத் தட்டி சுத்தம் செய்வதுமுதல் ராவுத்தரின் வேட்டி சட்டைகளை வண்ணானுக்குப் போடுவதுவரை எல்லாமே செல்லிதான். ராவுத்தர் அறையில் இருக்கும் அந்த தாத்தா கடிகாரத்தை யாரும் அவ்வளவு எளிதாகத் தொட்டுவிடமுடியாது. அதற்கு வாரம் ஒரு முறை சாவி கொடுப்பது சுப்பன்தான். வடிவேலுவின் முதல் படத்தில் வடிவேலுவைப் பார்த்திருக்கிறீர்களா? அச்சுஅசலாய் அதுதான் சுப்பன். கரையில்லாத நாலுமுழக் காடாவேட்டி. இடுப்பில் கால்கவுளி வெற்றிலை, நிஜாம்லேடி புகையிலைப் பொட்டலம். சட்டை போட்டால் பூச்சி மேய்வதுபோல் இருக்கிறதாம். ஓர் ஈரிழை சிவப்புத்துண்டு தோளில் இல்லாவிட்டால் இடுப்பில். அவன் அக்காள் மகளாய்ப் பிறந்து மனைவியானவள்தான் செல்லி. பழம்பெரும் நடிகை டி.பி. முத்துலட்சிமியை தட்டி நீட்டி மெலிதாக்கினால் அதுதான் செல்லி. ராவுத்தர் வீட்டில் மூன்று பசுமாடுகள் கன்றுகளுடன். இரண்டு ஜோடி உழவுமாடுகள், ஒரு ஜோடி வண்டிமாடுகள். ராவுத்தரம்மாவுக்காக ஒரு பொட்டுவண்டி. எப்போதும் அந்த கொடுக்காப்புளி மரத்தடியிலேயே கிடக்கும். ஆகக்கூடி ஒன்பது மாடுகள் மூன்று கன்றுகள். வண்டிமாடுகள் ராவுத்தர் வீட்டிலேயே பிரசவமாகி வளர்ந்தவை. எள்ளுப்புண்ணாக்கு, கடலைப்புண்ணாக்கு, பருத்திக்கொட்டை அரரைக்கிலோவை இரவிலேயே ஊறவைத்து அடுத்தநாள் காலை வீட்டில் சேர்ந்த கழனித்தண்ணீருடன் பக்கத்துவீடுகளிலும் சேர்ந்த கழனித்தண்ணீரைக் கொண்டுவந்து சேர்த்து மரத்தொட்டிகளில் ஊற்றி ஊறவைத்த கடலைப்புண்ணாக்கையும் பருத்திக்கொட்டையையும் சேர்த்து ஒரு மரக்கால் தவிட்டை மேலே மிதக்கவிட்டு காளைமாடுகளுக்கு வைப்பான். எள்ளுப்புண்ணாக்கும் தவிடும் பசுமாடுகளுக்கு வைப்பான். நாக்கை வளைத்து நீட்டி தவிட்டை நக்கியபிறகு முழுமூஞ்சியையும் கண்களை மூடிக்கொண்டு தொட்டிக்குள் விட்டு அடியில் கிடக்கும் புண்ணாக்கையும் வளைத்து தின்றுவிட்டு முகத்தை வெளியாக்கி ‘ அட சுப்பா, நீ இன்னும் இங்குதான் நிக்கிறியா? என்று கேட்பதுபோலப் பார்க்கும். ராவுத்தர் வீடு ஒன்றரை ஏக்கர் தரை. அதில் 120 அடிக்கு நீண்டு கிடக்கும் ஒரு ஓட்டுத்தாழ்வாரம்தான் ராவுத்தர் வீடு. காலி இடத்தில் ஆறு கல்லுக்கால்களின் மேல் குன்றுபோல் நிற்கும் வைக்கோல்போர், ஒரு மாமரம், ஒரு கொய்யாமரம், மரமல்லிமரம், முருங்கை, காகிதப்பூ மரங்கள், மருதாணிமரம் உள்பக்கமாக ராவுத்தரம்மாவின் பயிர்க்குழியில் அவரை சுரை பாகற்காய், இன்னும் கத்தரி, தக்காளி, மிளகாய்ச் செடிகள், பத்து மூட்டை நெல் காயப்போடும் அளவுக்கு ஒரு சிமிண்டுக்களம், செம்பராங்கல்லில் கூட்டிய ஒரு நெல் அவிக்கும் அடுப்பு. ராவுத்தர் வீட்டின் சுற்றுச் சுவரைத் தாண்டினால் ராவுத்தர்குளம். அதைத்தாண்டி மந்தக்கொல்லை. அதையும் தாண்டினால் ராவுத்தரின் 15 ஏக்கர் நன்செய் நிலம். தண்ணீர் காட்டியதும் மாடுகளை ஓட்டிக்கொண்டு வயல்வெளிக்குச் சென்றுவிடுவான் சுப்பன். மாட்டுக்காரவேலன் ஸ்டைலில் தார்க்குச்சியை கழுத்துக்குப் பின்னால் குறுக்காக நீட்டிவைத்து அதன்மேல் இருகைகளையும் விரித்துக்கொள்வான். பாதாளபைரவி படத்தில் வரும் ‘அமைதி இல்லாதென் மனமே’ பாடலை உருகி உருகிப் பாடுவான். திரும்பத் திரும்பப் பாடுவான். கண்டசாலா என்று சொன்னாலே அவனுக்கு உடம்பு சிலிர்க்கும். ராவுத்தர் தன் மூத்தமகளை கும்பகோணத்தில் கட்டிக்கொடுத்திருக்கிறார். தன் மகளுக்கு வாங்கிய பசுமாட்டையும் கன்றுக்குட்டியையும் கால்நடையாகவே அறந்தாங்கியிலிருந்து கும்பகோணத்துக்கு ஓட்டிச் சென்றவன்தான் இந்தச் சுப்பன். பசுபதிகோயில் ரயில்வேகிராஸிங்கில் ரயில் வரும் சத்ததத்தில் மிரண்டு மாடும் கன்றும் அறுத்துக்கொண்டு ஓடியதையும் அதை பசுபதிகோயில் மக்கள் பிடித்துக்கொடுத்ததையும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரிச் சொல்வான். ஒரு தடவை சுப்பனிடம் கேட்டேன். ‘ஒனக்கின்னு ஏதாச்சும் ஆசையிருக்கா சுப்பா?’ சுப்பன் சொன்னான் ‘இருக்குய்யா. எப்படியாவது கண்டசாலாவை நேர்ல பாத்துரணும்’ அவன் ஆசை கடைசிவரை ஈடேறவே இல்லை. கண்டசாலாவின் மரணச்செய்தி வந்த தினத்தந்தி பேப்பரை எப்போதும் வெற்றிலை புகையிலையோடு வைத்திருப்பான். அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொள்வான். இப்பொழுதெல்லாம் அவன் பாதாளபைரவியை மறந்துவிட்டு தேவதாஸ் பாடல்களில் லயித்துவிட்டான். ‘துணிந்தபின் மனனே துயரம் கொள்ளாதே’ அப்படியே ஒரு மாத்திரை கூட மாறாமல் பாடுவான். 6 மணிக்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு வருவான். மாடுகளை கட்டுத்துறையில் கட்டிப்போட்டுவிட்டு வைக்கோல் போரில் ஏறி வைக்கோல் பிடுங்குவான். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. நம்மாலெல்லாம் ஒரு நூலைக்கூட உருவமுடியாது. அவ்வளவு இறுக்கமாக மேய்ந்திருப்பார்கள். இல்லாவிட்டால் மழைத்தண்ணீர் இறங்கி மொத்தப் போரும் மக்கிப்போகும். அவன் வயலிலிருந்து வரும்போதே குளத்தில் மேய்ந்து கரையேறி நிற்கும் வாத்துக்களையும் ஓட்டிவந்துவிடுவான். சரி. இப்போது செல்லிக்கு வருவோம். மாடுகளை சுப்பன் ஓட்டிக்கொண்டு சென்றதும் சாணி பொறுக்கி குப்பையில் சேர்த்துவிட்டு கட்டித்துறையை கழுவிவிடவேண்டும் வெள்ளைப் பலகைக்கல் போட்ட தளம் அது. மாட்டுக்கூடத்ததுக்கு பக்கத்தில்தான் கோழிக்கூடம். கோழிக்கூட்டைத் திறந்துவிட்டு வடித்தகஞ்சியில் தவிட்டைப்போட்டுப் பிசைந்து வைக்கவேண்டும். எல்லாருக்கும் உயிர் நெஞ்சுக்குழியில் என்றால் ராவுத்தரம்மாவுக்கு உயிர் இந்தக் கோழிகளிடம்தான். அடுத்து வீராட்டி எரித்து ராவுத்தருக்கு வேம்பாவில் வெந்நீர் போடவேண்டும். அலுமினியப்பானைகள் மண்பானைகள் தட்டுமுட்டுச் சாமான்கள் கிட்டத்தட்ட 50 உருப்படி கழுவக்கிடக்கும். வைக்கோலையும் விராட்டிச் சாம்பலையும் வைத்துத் தேய்த்து அத்தனையையும் கழுவி கவிழ்த்துவைக்க வேண்டும். பிறகு சேர்ந்த துணிகளை மூங்கில் கூடையில் அள்ளிக்கொண்டுபோய் ராவுத்தர் குளத்தில் துவைத்து வந்து குறுக்கும் நெடுக்குமாகக் கட்டியிருக்கும் தேங்காய்நார்க் கயிற்றில் காயப்போட்டு மடித்து அவரவர்கள் இடத்தில் கொண்டுசேர்க்கவேண்டும். மாதம் ஒரு முறையோ இரு முறையோ செம்பராங்கல் அடுப்பில் அண்டாவை ஏற்றி மூன்று மூட்டை நெல்லைக் கொட்டி அவித்தெடுத்து களத்தில் விரித்து காயப்போட்டு அரைச்சிப்பம் அரைச்சிப்பமாய்க்கட்டி சுப்பனை வைத்து வண்டி பூட்டி மில்லுக்குக் கொண்டு சென்று அரைத்து அரிசியையும் தவிட்டையும் வயித்தோடு அணைத்து தூக்கிவந்து வண்டியில் சேர்த்து வீடுகொண்டுவந்து சேர்க்கும் மொத்தவேலையும் செல்லி மட்டுமே செய்துவிடுவாள். அப்பளம் போடுவது, வடாம் பிழிவது, இடியப்பமாவு இடிப்பது அத்தனையும் செல்லிதான். மூன்று மரக்கால் பச்சரிசியை இரவு முழுக்க ஊறவைத்து அடுத்தநாள் வடிகட்டி, குவளைகுவளையாக மர உரலில் இட்டு உலக்கையால் கிளறிக்கிளறி இடித்து சலித்து கப்பி வேறு மாவு வேறாகப் பிரித்து அந்த மாவை இளம்வெயிலில் காயவைத்து இடியப்பமாவு செய்யவேண்டும். வேறு யாரையும் செல்லி சேர்த்துக்கொள்ளமாட்டாள். அவள் ஒருத்தியே செய்துவிடுவாள். ஒரு கோழி சுனங்கி நின்றாலும் போதும். உடனே பிடித்து மாட்டாஸ்பத்திரி கொண்டுபோய் ஊசிபோட்டுக்கொண்டு வந்துவிடுவாள். அவர்களுக்கென்று எந்தச் சொத்துமோ எந்தச் சேமிப்புமோ இல்லை. நெஞ்சைக் கிழித்துக்காட்டச் சொன்னால் அங்கே ராவுத்தரும் ராவுத்தரம்மாவும் மட்டும்தான் இருப்பார்கள் செல்லிக்கும் சுப்பனுக்கும். ராவுத்தர் மளிகைக் கடைக்குப் போய் என்னவேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். வாரத்துக்கு ராவுத்தர் ஆளுக்கு பத்துப்பத்து ரூபாய் கொடுத்துவிடுவார். அப்போதெல்லாம் இரண்டு பரோட்டா ஒரு டீ இருபத்தைந்து காசுதான்.
செல்லியும் சுப்பனும் சேரியைச் சேர்ந்தவர்கள்தான். அங்கிருந்து வந்து பலவேர் ராவுத்தர்மார் வீடுகளில் வேலை செய்கிறார்கள். அவர்களெல்லாம் கொல்லையைவிட்டுத் தாண்டமுடியாது. ராவுத்தர் வீட்டில் மட்டும்தான் அவர்களுக்கு இவ்வளவு உரிமை. செல்லிசுப்பன் கல்யாணத்தையே அவர்கள் நுழையவே முடியாத பொக்கடயார் கோயிலில் வைத்து நடத்திக்காட்டியவர்தான் ராவுத்தர். அது என்ன பொக்கடயார் கோவில். மன்னியுங்கள். யாருக்குமே அதற்கு அர்த்தம் தெரியவில்லை. கோயில் நிர்வாகி ராஜப்பாவிடம் பேசி ஒப்புக்கொள்ளவைத்துவிட்டார் ராவுத்தர். இப்போது அந்தச் சேரியே சுபகாரியங்களை இந்தக்கோயிலில்தான் செய்கிறது.
செல்லியும் சுப்பனும் பத்துப்பதினைந்து ஆண்டுகளாகத்தான் ராவுத்தர் வீட்டில் வேலை செய்கிறார்கள். அதற்குமுன் முத்துப்பேச்சிதான் இரண்டுபேர் வேலைகளையும் சேர்த்துப் பார்த்தாள். அந்த முத்துப்பேச்சியின் மகன்தான் சுப்பன். அவளின் மகள் வயிற்றுப் பேத்திதான் இந்தச் செல்லி. பாக்கியம்ராமசாமியின் சீத்தாப்பாட்டி முகம். ஒரு எலுமிச்சை அளவு கொண்டை. ஒழுகும் நல்லெண்ணெயில் விரல்களாலேயே நீவிக்கட்டிய முடி. இங்க் ஊதாவில் ஐந்தரைமுழக் காடாச்சேலை கணுக்காலுக்குக்கீழ் இறங்கியதே இல்லை. இடுப்புக்குமேலே மறைக்கவேண்டும் என்ற சுரணையே இல்லாத சுபாவம். கொஞ்சம் பார்வை மந்தம். காட்டிக்கொள்ளமாட்டாள். சமாளித்துவிடுவாள். களயம் நிறைய பழைய கஞ்சியும் உரித்த வெங்காயமும் சுட்ட கருவாடும் போதும். வேறு ஏதுவும் சாப்பிடமாட்டாள். எப்போதும்போல்தான் அன்றும் காலை வேலையை முடித்துவிட்டு கஞ்சி குடிக்க உட்கார்ந்தாள் முத்துப்பேச்சி. அப்படியே சாய்ந்தவள் எழுந்திருக்கவே இல்லை. ராவுத்தர் வந்து பார்த்தார். ‘அட! செத்துப்போச்சு!’ கஞ்சியைக் கவனித்தார். அதில் பல்லிவால் ஒன்று மிதந்தது. கஞ்சியைக் கீழே ஊற்றிப் பார்த்தபோது பாதியாய்க் கடித்து இழுத்த அரைப்பல்லி கிடந்தது. கருவாடு என்று அரைப்பல்லியை முத்துப்பேச்சி சாப்பிட்டிருக்க வேண்டும். கஞ்சி எடுக்கும்போதே பானை திறந்துதான் கிடந்தது. ராவுத்தரம்மா கவனித்திருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுதான் இவ்வளவு பெரிய விஷயமாக முடிந்திருக்கிறது. இதை ராவுத்தரும் ராவுத்தரம்மாவும் ரகசியமாகவே வைத்துக்கொண்டார்கள். முத்துப்பேச்சியின் காரியங்களையெல்லாம் முடித்துவிட்டு சுப்பனையும் செல்லியையும் வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டார் ராவுத்தர். ராவுத்தரம்மாவுக்கு இதை எப்போது நினைத்தாலும் தூக்கித்தூக்கிப் போடும். செல்லிக்கும் சுப்பனுக்கும் அதிக உரிமைதான். அதற்கான காரணங்கள் புனிதமானது. ராவுத்தரிடம் நேரிலேயே சிலபேர் கேட்டிருக்கிறார்கள். ‘அந்த சக்கிலிய ஜாதியை வீட்டுக்குள்ளே விடுறது அவ்வளவு நல்லதில்ல ராவுத்தரே’ என்று. ‘ஒரு வருடம் வளத்துட்டாலே நாயக்கூட நடுக்கூடத்துல விடுவிங்க. அவங்க நாப்பது வருஷமா ஒழச்ச குடும்பம்யா.’ என்பார். ராவுத்தருக்கு பட்டப்பெயர் ஒன் ஃபார்ட்டி ஃபோர். 144. ராவுத்தர் வீட்டை 144 வீடு என்றால்தான் பலருக்குத் தெரியும். கறாராகத்தான் பேசுவார். அதன் காரணங்கள் புனிதமானது. ராவுத்தரம்மாவுக்கு நெஞ்சுக்குழியில ஒரு ஏக்கம் இருந்தது. இந்தச் செல்லிக்கு பத்து வருஷமா பிள்ளை உண்டாகவில்லையே என்ற ஏக்கம்தான் அது. ராவுத்தரம்மா தன் ஆஸ்துமாவுக்காக மாதம் ஒருமுறை தஸ்தகீர் டாக்டரிடம் போவார். சுப்பன்தான் வண்டி ஓட்டிக்கொண்டு போவான். போகும்போதெல்லாம் செல்லியையும் அழைத்துப்போவார். தஸ்தகீர் டாக்டர் மனைவி ஆயிஷாவும் டாக்டர்தான். ஆயிஷாவிடம் சொல்லி செல்லியையும் பார்க்கச் சொல்வார். ‘இதச் சேரிப்புள்ளன்னு நெனக்காதீங்கம்மா. பொறந்ததிலேருந்து எங்க வீடலதாம்மா இருக்கு’. ராவுத்தரம்மா சொன்னார். ‘ஒங்க புள்ளமாதிரி வச்சுப்பாக்கிறிங்கம்மா. அது எனக்கும் தெரியும். வித்தியாசமா நெனச்சா நான் ஒரு டாக்டர்னு சொல்றதே கேவலம்மா’ என்றார் ஆயிஷா. ‘அப்படிச்சொல்லாதீங்கம்மா’ டாக்டரின் வாயை மூட கைகளை நீட்டினார் ராவுத்தரம்மா. கண்ணாடியைக் கழற்றிவிட்டு. ஓரத்தில் நின்ற கண்ணீரைச் சுண்டிவிட்டார் ஆயிஷா.
யாராவது நாகூர் போனால் ஒரு ரூபாய் கொடுத்து உண்டியலில் போடச்சொல்வார். பாத்திஹா ஓதிய சர்க்கரையை செல்லிக்கும் சுப்பனுக்கும் கொடுப்பார். வாராவாரம் வண்ணாங்குளத்து பள்ளிவாசல் தர்ஹாவில் ஜியாரத் செய்வார் அங்கு கூடும் பிள்ளைகளுக்கெல்லாம் ஆளுக்கு 10 காசு கொடுப்பார். பானை நிறைய காய்ச்சிய பசும்பாலைக்கொண்டுபோய் கரண்டியில் மொண்டு மொண்டு பிள்ளைகளுக்கு ஊட்டுவார். ஒருநாள் ராவுத்தரம்மாவிடம் கேட்டேன். ‘வாராவாரம் தவறாம வர்றீங்களே ஏதும் காரணம் இருகுமே?’ ராவுத்தரம்மா சொன்னார் ‘இந்தச் செல்லிக்கு ஒரு புள்ள பொறக்கணும். அதான்’
வீட்டின் அடுப்படி தாண்டி மாட்டுக்கூடம் தாண்டி, கோழிக்கூடம் தாண்டி, நெல்கூடம் தாண்டி இருக்கும் கடைசிக்கூடத்தை வேலை செய்து சுப்பனையும் செல்லியையும் தங்கவைத்தார். புதிதாகக் கோரைப்பாயும் தலையணையும் வாங்கிக் கொடுத்தார். ஒருநாள் தட்டுத்தட்டாக எருக்கம்பூவும் மருதாணிப்பூவும் சிறுபிள்ளைகள் வீட்டுக்குக் கொண்டுவருவதுபோல் கனவு கண்டார் ராவுத்தரம்மா. செல்லி கருவுற்றாள். இரவின் பின் நேரங்களில் ராவுத்தரம்மா பக்கத்துவீட்டுக்கார அம்மாக்களோடு நிலா வெளிச்சதத்தில் களத்தில் உட்கார்ந்து ஊர்க்கதை பேசுவார். ‘அமைதியில்லாதென் மனமே’ என்று சுப்பன் மெலிதாகப் பாடுவதை கதைபேசுவதை மறந்துவிட்டு கேட்பார்கள். ‘துணிந்தபின் மனமே’ என்று தொடர்வான். ‘உலகே மாயம்’ ஒரு இருமல்கூட விடாமல் பாடுவான். செல்லி பிள்ளை உண்டானதிலிருந்து ‘உலகே மாயம்’ பாடுவதில்லை.
எட்டு மாதங்கள் ஓடிவிட்டன. செல்லிக்கு நிறைமாதக்கர்ப்பிணிபோல் வயிறு தள்ளிவிட்டது. மாதாமாதம் ஆயிஷாதான் பார்த்துக்கொள்கிறார். எட்டாவது மாதம் அழைத்துச்சென்றுவிட்டு திரும்பும்போது ராவுத்தரம்மாவுக்கு முகமே சரியில்லை. செல்லியுடன் அவ்வளவு சுமுகமாய்ப் பேசவில்லை. வந்ததும் வராததுமாய் மூன்று மரக்கால் பச்சரிசியைக் கொடுத்து ஊறவைத்து இடிக்கச்சொல்லிவிட்டார். குவளை குவளையாக உரலில் விட்டு செல்லி இடித்தாள். வயிறு ஏறிஇறங்கியது. நெற்றியில் துளிர்த்த வியர்வை வழிந்து மூக்கு நினியில் நின்று தயங்கியது. கொசுறு வேலைகளைப் பார்க்க பக்கத்து வீட்டு ஜமீலா அவ்வப்போது வருவாள். செல்லியிடம் சொன்னாள். ‘நீ புள்ள உண்டானதுல ராவுத்தரம்மாவுக்கு பொறாமெ. ராவுத்தரம்மா சொல்றத இனிமேலும் கேக்காத. ஒனக்கு நல்லபடியா பொறக்கணும்னா இப்பவே இங்கேருந்து போயிரு. நா வேற வீடு பாக்கிறேன் ஒனக்கு’ பாவம் ஜமிலாவுக்குத் தெரியாது. ராவுத்தரம்மா விஷத்தைக் கொடுத்தாலும் குடித்துவிட்டு ‘இன்னும் கொஞ்சம் தாங்கம்மான்னு’ செல்லி கேட்பாள் என்று. துணிகளை மூங்கில் கூடையில் அள்ளிப்போட்டு துவைக்க அனுப்பிவிட்டார் ராவுத்தரம்மா. துவைத்த துணிகளைத் தூக்கிவர சுப்பனை மறக்காமல் அனுப்பிவிடுவார். ‘கனம் தூக்காதே’ ன்னு கறாரா சொல்லிவிடுவார். செல்லி துணிகளுக்கு சோப்புப் போட்டு இழுத்தாள்.வயிறு இழுபட்டது. துவைத்தாள். வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது. குளத்துக்கரையிலிருந்து ஜெமிலா ஓடிவந்தாள். ‘ராவுத்தரம்மா செல்லிக்கு வலி ஏறிடுச்சு கரையிலேயே படுத்துட்டா. துடிக்கிறா’ உடனே சுப்பன் வண்டியைப் பூட்டினான். அடுத்த அரைமணி நேரத்தில் ராவுத்தரம்மாவும் செல்லியும் ஆஸ்பத்திரியில் இருந்தார்கள். ‘இது புள்ளவலிதான்’ என்றார் ஆயிஷா. ராவுத்தரம்மாவை வெளியே உட்காரவைத்துவிட்டு கதவைச் சாத்திக்கொண்டார். அரைமணிநேரத்தில் ஒரு ஆண்குழந்தை ‘வதக்’ கென்று வெளியேறி ‘ங்ஙே’ என்று அழுதது. ராவுத்தரம்மாவை உள்ளே அழைத்தார். ‘ நான் எதிர்பார்க்கவேயில்லை. எட்டாவது மாதத்தில புள்ள குறுக்காக் கெடக்குதுன்னு சொன்னேனே. அல்லாஹ் லேசாக்கிட்டாம்மா. வெற ஏதும் செஞ்சீங்களா?’என்று கேட்டார் ‘வயித்துக்கு அசைவு குடுத்தா புள்ள திரும்பீரும்னு தெரியும். மாவு இடிக்கச்சொன்னேன். துணி தொவக்கச்சொன்னேன். எல்லாரும் சொன்னாங்க எனக்கு செல்லி புள்ள உண்டானதில பொறாமையாம். பத்துப்புள்ள பெத்த எனக்குப் பொறாமையாம்’ என்று சிரித்தார் ராவுத்தரம்மா. ‘நானே புள்ளத்தாச்சிங்களை வேலை செய்யச்சொல்ல பயப்படுவேன். ஏதாவது ஆயிட்டா மொத்தப் பழியும் என் தலையில்தான் விழும். நீங்க தைரியமா வேல செய்ய வச்சிட்டீங்கம்மா. நீங்க எதச்செஞ்சாலும் எனக்குத் தெரியும்மா. அதுக்கான காரணங்கள் புனிதமானதுன்னு. எவ்வளவு பெரிய ஞானத்தை மறச்சுக்கிட்டு ஒன்னுமே தெரிவாதவங்க மாதிரி இருக்கீங்க. கோழிக்குஞ்ச பொத்திக்கிட்டு கெடக்கிற கோழிமுட்ட மாதிரி’
இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ராவுத்தரம்மாவின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்து பிள்ளைக்கு ராமா என்று பெயர் வைத்தாள் செல்லி. எனக்கு சென்னையில் வேலை கிடைத்து சென்னைக்குச் சென்றுவிட்டேன். சென்னையில் ஒரு படக்கடையில் அழகான கண்ணாடிச் சட்டத்துடன் கண்டசாலா படம் ஒன்றைப் பார்த்தேன். பார்த்தவுடன் என்னையும் அறியாமல் ‘அமைதியில்லாதென் மனமே’ என்று முணுமுணுத்தேன். இதைப்பார்த்தால் சுப்பன் எவ்வளவு சந்தோஷப்படுவான். உடனே வாங்கிவிட்டேன். அந்தக் காதுமடல் முடிகள் கூட அப்படியே தனித்தனியாய் மின்னியது. அவ்வளவு தத்ரூபம். சுப்பன் எப்படியெல்லாம் சந்தோஷப்படுவான் என்று கற்பனை செய்துகொண்டு சிரித்துக்கொண்டேன்.
ஊர் வந்தேன். ஊர் வந்ததும்தான் தெரிந்தது. ‘சுப்பன் செத்துப்போயிட்டானாம்’ முழங்கால் பலமிழந்து தடுமாறினேன். சமாளித்துக்கொண்டேன். இப்போதுதான் பூவை உதிர்த்த ஒரு சுரைப்பிஞ்சை கொடியிலிருந்து கிள்ளி வீசியதுபோல் உணர்ந்தேன். படத்தை எடுத்துக்கொண்டு ராவுத்தரம்மா வீட்டுக்குப் போனேன். நாளாகிவிட்டது. ராவுத்தரம்மா அந்த சோகத்தையே மறந்திருந்தார். நான் அழுது அதை ஞாபகப்படுத்த விரும்பவில்லை. படத்தை ராவுத்தரம்மாவிடம் கொடுத்தேன். கண்டசாலா படம்மா. இவர எப்படியாவது பாக்கணும்னு ஆசப்பட்டான். காண்பிக்க முடியல. அவனுக்காகத்தான் இத வாங்கினேன்’ என்றேன் பேசிக்கொண்டிருக்கும்போதே செல்லி வந்தாள். ராமா பின்னாலேயே ஓடிவந்தான். அப்படியே ஒரு குட்டிச்சுப்பன். ஆனால் கருப்பல்ல. ‘சுப்பன் அடிக்கடி பாடுவானே. அந்தப் பாட்டெல்லாம் பாடியது இவருதான் செல்லி. இவரப்பாக்கத்தான் சுப்பன் ரொம்ப ஆசப்பட்டான். அவனுக்காகத்தான் வாங்கியாந்தேன். நீயே வச்சுக்க செல்லி’’ என்றேன். ‘கொரலாலேயே கொண்டுபோட்டது இவருதானா. அது எவ்வளவு சந்தோசப்படும். அது சாகும்போதுகூட ஒங்கள கேட்டுச்சய்யா’ என்றாள். ‘சுப்பனுக்கிட்ட கொடுக்கணும்னு ஆசயா…..’ முடிக்கமுடியாமல் குளறினேன். செல்லி வாங்கிக்கொண்டாள்.
சேரி வீட்டில் அந்தப் படத்தை மாட்டிவைத்தாள். ஒரு நாள் ராமா கேட்டான். ‘இது யாரும்மா?’ ‘இதுதாண்டா ஒங்க அப்பா’ என்றாள் செல்லி. ஏன் அப்படிச் சொன்னாள். சொல்லவேண்டும் என்று அவள் யோசிக்கவில்லை. ஒருவேளை ராமா ஒரு காலத்தில் இன்னொரு கண்டசாலாவாக வருவான் என்ற முன்னறிவிப்பா? இருக்கலாம். யார் கண்டது’ அவள் எதற்காகச் சொல்லியிருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். அவள் அப்படிச் சொன்னதற்கான காரணங்கள் புனிதமானவை.
யூசுப் ராவுத்தர் ரஜித்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 20
- செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’
- பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது
- கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது
- பாவண்ணன் கவிதைகள்
- ஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்
- கடற் குருகுகள்
- இப்போது
- கவிதைகள்- கு.அழகர்சாமி
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- பேரிரைச்சல்
- ஆனந்த் பவன் [நாடகம்] காட்சி-4
- மொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014 நாகரத்தினம் கிருஷ்ணா
- வாழ்க்கை ஒரு வானவில் – 19
- மனம்
- தெலுங்குச்சிறுகதைகள்—-ஓர் அறிமுகம்
- இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை
- தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – காணொளி (Video)
- குரல்
- பேசாமொழி 21வது இதழ் வெளியாகிவிட்டது…
- காரணங்கள் புனிதமானவை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 91
- பல்லடுக்குப் பிரபஞ்சங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி இருப்பதற்கு மூலாதரமான ஐந்து கோட்பாடுகள்
- தினம் என் பயணங்கள் -32 குடிபோதைக் கட்டுப்பாடு
- தொடுவானம் 32. மனதோடு கலந்த மண் வாசனை
- சிறுகதை பயிற்சி பட்டறை – 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு)