சிலர் தை மாதம் தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்றும் சித்திரைதான் புத்தாண்டு என்றும் கூறுவதுண்டு. இவர்கள் இனத்திற்கும் மதத்திற்கும் வேற்றுமை தெரியாதவர்கள்.
சித்திரை இந்து மதத்தினரின் புத்தாண்டு. ஆனால் எல்லா தமிழர்களும் இந்துக்கள் இல்லை. தமிழர்களில் இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்த்துவர், புத்த மதத்தினர், மதங்களை நம்பாத நாத்திகர்கள் கூட உள்ளனர். மதச் சடங்குகள் கொண்ட சித்திரைப் புத்தாண்டை எப்படி இந்துக்கள் அல்லாத தமிழர்கள் கொண்டாடுவர்? அதனால்தான் அனைத்து தமிழர்களும் தைத் திருநாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது சாலச் சிறந்ததாகும்.
மறைமலை அடிகளாரும், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழர்களிடையே பொங்கலைப் பிரசித்திப் படுத்தி, அதுவே தமிழ்ப் புத்தாண்டு என்று எவ்வளவோ பேசியும் எழுதியும் உள்ளனர். ஆனால் இன்றுவரை இது ஒரு சர்ச்சைக்குள்ளான பிரச்னையாக உள்ளது நமக்கு தலைகுனிவே!
பொங்கலின் போது எங்கள் ஊரில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சமூக நாடகம் அரங்கேற்றுவர். ( அது இன்று வரை தொடர்வது பாராட்டுதற்குரியதே! ) தெரு நடுவில் மேடை அமைத்து நாடகம் நடைபெறும். அதைக் கண்டு இரசிக்க ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வருவர்.
திரைப்பட அரங்குகள் சிதம்பரத்தில் இருந்தன. அங்கு படம் பார்த்துவிட்டு இரவில் ஊர் திரும்புவது சிரமம். அப்போது பேருந்து வசதி இல்லை.
நான் எட்டு வயது வரை திரைப்படம் பார்த்ததில்லை.நன் பார்த்ததெல்லாம் உள்ளூர் நாடகங்கள்தான்.
( நான் பார்த்த முதல் திரைப்படம் ஜெனோவா. அதை சிங்கப்பூர் டைமண்ட் தியேட்டரில் பார்த்தேன். அதன் கதை வசனத்தை கலைஞர்தான் எழுதியிருந்தார். அதில் நடித்தவர்களில் யார் எம்.,ஜி, ஆர்., யார் பி. எஸ்.வீரப்பா என்பது கூட அப்போது எனக்குத் தெரியாது.)
சிதம்பரம் சென்று வருவது பெரும் சிரமமாகும். பஸ் ஏற தவர்த்தாம்பட்டு என்ற ஊருக்கு சுமார் மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். அங்குதான் சிதம்பரம் செல்லும் பிரதான வீதி இருந்தது. அங்கிருந்து சிதம்பரம் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அங்கு பஸ் கிடைக்க இரண்டு மணி நேரம் கூட காத்திருக்க வேண்டும்.
காட்டுமன்னார் கோயிலிலிருந்து புறப்படும் பேருந்து , லால்பேட்டை,குமராட்சி வழியாக தவர்த்தாம்பட்டு வர ஒரு மணி நேரமாகும். இடையிடையில் பல சிற்றூர்களிலும் ஆட்கள் ஏறுவார்கள்.அதனால் பெரும்பாலும் எங்களுக்கு இடம் இருக்காது. யாராவது இறங்குபவர் இருந்தால்தான் நிற்கும். இல்லாவிடில் ஓட்டுநர் இல்லை என்று கையைக் காட்டிவிட்டு சென்று விடுவார்..பின்பு அடுத்த பேருந்துக்கு இன்னொரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்!
சுற்று வட்டாரத்தில் நிறைய கிராமங்கள் இருந்த போதிலும், போதுமான போக்குவரத்து சேவை இல்லாத காரணத்தால் இந்த பிரச்னை.சிலர் காலையில் வருபவர்கள் மதியம் வரை கூட காத்திருப்பதுண்டு. சிலர் வேறு வழியின்றி, நேரத்தை வீணாக்காமல் சிதம்பரம் நோக்கி நடக்கத் தொடக்கி விடுவார்கள். பேருந்து வரும்போது கை கட்டுவார்கள். நின்றால் ஏறிக்கொள்வார்கள்.இல்லையேல் நடையைத் தொடர்வார்கள்.
அவ்வாறு நடந்து சென்ற அனுபவம் எனக்கும் உள்ளது. அதிகாலையிலேயே கட்டுச்சோறு மூட்டையுடன் கிளம்பிவிடுவோம். அம்மா எலுமிச்சம் சாதம். புளியோதரை அல்லது தயிர் சாதம் செய்திருப்பார். தேங்காய் அல்லது வெங்காயச் சட்னி, அவித்த முட்டையும் கொண்டுவருவா ர். தொடர்ந்து நடந்துகொண்டே இருப்போம். நான் சிறுவனாக இருந்தபோது செல்லக்கண்ணு மாமாவின் தோள்களில் உட்கார்ந்து சவாரி செய்வேன்.பசி எடுக்கும் போது புளிய மரத்து நிழலில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அருகில் ஓடும் ஆற்றில் நீர் பருகுவோம். சிதம்பரம் வரை வீதியின் இரு மருங்கும் வரிசையாக காணப்படும் புளிய மரங்களின் நிழலில் நடந்து செல்வோம்.
பின்னாளில் தாத்தா கூண்டு வண்டி வாங்கிய பின்பு அதில் சிதம்பரம் சென்று வருவோம்.
கிராம மக்கள் அப்போது எதிர்கொண்ட வேறொரு முக்கிய பிரச்னை மின்சாரம் இல்லாதது. வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகள்தான் மின்னிக்கொண்டிருக்கும்.சில வீடுகளில் அது கூட இருக்காது. சின்ன தகரக் குடுவையில் மண்ணெண்ணெய் ஊற்றி அதில் திரி இட்டு கொளுத்திக்கொள்வர் . இல்லையேல் சின்ன பாட்டிலில் திரி இட்டு பயன்படுத்துவர். காற்று வீசினால் இவை உடன் அணைந்து போவதுண்டு. அதே வேளையில் தீ விபத்துகளும் உண்டாகும் அபாயமும் இருந்தது. கூரை வீடுகளும், வைக்கோல் போர்களும் தீ பரவ எளிதாக இருந்தன.எங்கள் ஊரிலும் தீ விபத்து நடந்துள்ளது. அப்போது ஊர் மக்கள் அனைவரும் குடங்களை எடுத்துக்கொண்டு குட்டைக்கு ஓடிச் சென்று தண்ணீர் கொண்டு வருவர். மூங்கில் ஏணிகளில் ஏறிக்கொண்டு குடங்குடமாக தண்ணீர் ஊற்றி தீயை அனைத்து விடுவார்கள். கிராமத்தில் ஒரு வீடு தீ பற்றினால் பக்கத்து வீடுகளுக்கு எளிதில் பரவிவிடும். கூரை வீடுகளில் இந்த பயம் எப்போதும் நிலவும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் நாங்கள் கண்டதில்லை. எங்கள் தெருக் கோடியில் ஒரு பெரிய குளம் உள்ளது. நாங்கள் குளித்ததும் குடித்ததும் அந்த குளத்து நீரில்தான். இதற்கு பெரிய வாய்க்காலிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் வரும். குளத்து நீரை கொதிக்க வைத்துதான் குடிப்போம். சிலர் நேராக குளத்தில் குனிந்து நீர் குடிப்பதும் உண்டு. பெண்கள் செப்புக் குடத்தை இடுப்பிலும் தலையிலும் ஏந்திச் செல்வர்.
சிலர் சற்று நடந்து சென்று ஊரின் முகப்பில் ஓடும் இராஜன் வாய்க்காலிலிருந்தும் நீர் கொண்டு வருவர். அது ஓடும் நீராக இருப்பதால் சுத்தமாக இருக்கும். நான்கூட அங்கு சென்று ஆற்று மதகிலிருந்து நீரில் குதித்து கும்மாளம் போடுவேன். அப்போது கால்களை மீன்கள் கடிக்கும்.
குட்டையிலும் ஆற்றிலும் பலர் தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள். சிறு வயதில் தூண்டில் போடுவதில் அலாதி பிரியம் கொண்டிருந்தேன். வீட்டு மூங்கில் கொத்திலிருந்து கழியை வெட்டிக்கொள்வேன். நரம்பும் முள்ளும் கடையில் கிடைக்கும். தோட்டத்து குப்பை மேட்டில் மண் புழுக்கள் கிடைக்கும். துணைக்கு பக்கத்து வீட்டு பால்பிள்ளையைக் கூட்டிக்கொள்வேன்.
தூண்டில் போடுவது அருமையான பொழுதுபோக்கு. சில நாட்களில் காலையில் கிளம்பினால் மாலையில் ஆற்றில் குளித்து விட்டுதான் திரும்புவோம். மீன்களை கோரையில் கோர்த்து எடுத்து வருவோம். பெரும்பாலும் கெண்டைகளும் கெளுத்திகளும்தான் கிடைக்கும். சில வேளைகளில் தவளை அல்லது நீர்ப் பாம்பு மாட்டிக் கொள்ளும்.அவற்றை தூண்டிலோடு சேர்த்து அடித்து கொன்று விடுவோம்.
கோரைகளின் நடுவில் தூண்டில் போட்டு தக்கையை ஆட்டிக்கொண்டிருந்தால் உளுவை அல்லது விரால் மீன்கூட சிக்கும். அவை கெண்டையவிடப் பெரியவை.
கெளுத்தி மீனை முள்ளிலிருந்து எடுக்கும் பொது கொட்டிவிட்டால் கடுமையாக வலிக்கும். அந்த இடத்தில் சுண்ணாம்பு தடவினால் வலி குறையும்.
மண் புழுக்களை முள்ளில் கோர்க்கும்போது அவை துடிக்கும். அதை பாதியிலேயே பிய்த்துவிடுவோம். அப்போது மீதமுள்ள அதன் வால் பகுதியும் துடிக்கும்.
மாலையில் மீன் குழம்புக்குத் தேவையான மசாலாவுடன் அம்மா காத்திருப்பார். தோட்டத்தில் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் சாம்பல் கொட்டி மீன்களைப் போட்டு தேய்த்து அவற்றை ஆய்ந்து வெட்டிய பின்பு மீன் குழம்பு மண் சட்டியில் கமகமக்கும். சோற்றில் அந்த ஆற்று மீன் குழம்பு ஊற்றி சாபிடுவது அவ்வளவு சுவையாக இருக்கும். அன்று பால்பிள்ளையும் என்னுடசாப்பிடுவான்.
வாடிக்கையாக மீன் விற்பவர்கள் சைக்கிளில் வருவார்கள். அவர்கள் விற்பது கடல் மீன்கள் .அவை அவ்வளவு சுவையாக இருப்பதில்லை.
சில நாட்களில் பால்பிள்ளையும் நானும் வயல் வரப்புகளில் நண்டுகள் பிடிப்போம்.ஒரு நீண்ட குச்சியில் சின்ன நத்தை ஓடுகளை சரமாகக் கட்டி அதை நண்டு வளையினுள் நுழைத்து ஆட்டினால் ஒருவித சலங்கை ஒலி எழும். அதைக் கேட்கும் நண்டு வெளியே வந்து அதைக் கெளவிக்கொள்ளும்.உடனே குச்சியை வெளியே இழுத்தால் நண்டு அகப்பட்டுவிடும். நண்டு குழம்பும் மிகவும் ருசியாக இருக்கும்.
கிராமத்து வீடுகளில் கட்டாயம் கோழிக் கூடுகள் இருக்கும். நாட்டுக் கோழிகளை வளர்ப்பார்கள்.விருந்தாளிகள் வந்தால் மட்டும் கோழிக்கறி சமைப்பார்கள். கோழி முட்டைகள் தினமும் கிடைக்கும்.
தீபாவளி பெருநாள் வந்தால் மட்டுமே ஆட்டுக்கறி கிடைக்கும். ஊரிலேயே ஆடு வெட்டி விற்பார்கள். அன்று எல்லார் வீட்டிலும் ஆட்டுக்கறி விருந்துதான்!
(தொடுவானம் தொடரும் )
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 20
- செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’
- பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது
- கொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது
- பாவண்ணன் கவிதைகள்
- ஒபாமாவின் வெளியுறவு கொள்கையின் தோல்விகள்
- கடற் குருகுகள்
- இப்போது
- கவிதைகள்- கு.அழகர்சாமி
- கற்றுக்குட்டிக் கவிதைகள்
- பேரிரைச்சல்
- ஆனந்த் பவன் [நாடகம்] காட்சி-4
- மொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014 நாகரத்தினம் கிருஷ்ணா
- வாழ்க்கை ஒரு வானவில் – 19
- மனம்
- தெலுங்குச்சிறுகதைகள்—-ஓர் அறிமுகம்
- இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை
- தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 – காணொளி (Video)
- குரல்
- பேசாமொழி 21வது இதழ் வெளியாகிவிட்டது…
- காரணங்கள் புனிதமானவை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 91
- பல்லடுக்குப் பிரபஞ்சங்கள் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி இருப்பதற்கு மூலாதரமான ஐந்து கோட்பாடுகள்
- தினம் என் பயணங்கள் -32 குடிபோதைக் கட்டுப்பாடு
- தொடுவானம் 32. மனதோடு கலந்த மண் வாசனை
- சிறுகதை பயிற்சி பட்டறை – 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு)