ஒரு புதிய மனிதனின் கதை

This entry is part 1 of 27 in the series 21 செப்டம்பர் 2014

teacher-man

 

 

விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலில் ஓராசிரியர் பள்ளியொன்றைப்பற்றிய சித்தரிப்பு இடம்பெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமாக மொத்தத்தில் எழுபது எண்பது பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். பயிற்சியில்லாத ஆசிரியர்கள் ஒன்றிரண்டு மாதங்கள் வருவதும் பிறகு நின்றுவிடுவதுமாக இருந்ததால் அந்தப் பள்ளி செயல்படாத பள்ளியாகவே இருக்கிறது. அந்தச் சூழலில் சுகவனம் என்னும் இளைஞர் பயிற்சி பெற்ற ஆசிரியராக அந்தப் பள்ளிக்கு வருகிறார். மாணவமாணவிகளுக்கு பேச்சில் இருக்கிற ஆர்வம் படிப்பதிலோ எழுதுவதிலோ இல்லை. வகுப்பறை எப்போதும் சத்தமாகவே இருக்கிறது. அவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது தெரியாமல் தொடக்கத்தில் திணறும் சுகவனம், இக்கட்டான ஒரு தருணத்தில் தானாகவே ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார். அமைதி, அமைதி, அமைதியாக இருந்தால் ஒரு கதை சொல்வேன் என்றதும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டதுபோல வகுப்பே அமைதியாகிவிடுகிறது. பிள்ளைகளை அமைதிப்படுத்தும் சூட்சுமத்தை அறிந்துகொண்டதும் ஒவ்வொரு பாடத்தையும் அதன் மையக்கருவைக் கொண்டு ஒரு கதையாக மாற்றிவிடுகிறார் சுகவனம். ராஜாராணி கதையையோ, காக்கைகுருவி கதையையோ சொல்வதுபோலத் தொடங்கி, பாடத்தின் கதையை அத்துடன் இணைத்துச் சொல்கிறார். பிள்ளைகள் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். அதையொட்டியே கேள்விபதில்களை வடிவமைத்துக்கொள்கிறார். அவர் நினைத்த கற்பித்தல்முறை வெற்றியடைகிறது. பள்ளியின் சுற்றுச்சுவரோரம் செல்கிற ஊர்க்காரர்கள்கூட ஜன்னலோரமும் வாசலிலும் வந்து நின்று ஆசிரியரின் கதையைக் கேட்க நிற்கிற அளவுக்கு அந்த முறை பிரபலமாகிறது. நாவலில் இப்பகுதியைப் படித்ததும் நான் அடைந்த உற்சாகம் அளவற்றது. ஒரு புதிய வழிமுறை எப்போதும் இப்படித்தான் கண்டடையப்படுகிறது. ஆசிரியர்களாகப் பணியாற்றும் பலரிடம் நான் இந்த முறையைப் பகிர்ந்துகொண்டதோடு, “நீங்கள் இப்படியெல்லாம் செய்வதுண்டா?” என்று கேட்டிருக்கிறேன். ஒன்றிரண்டு பேரைத் தவிர, மற்றவர்களுக்கு இதில் அக்கறையில்லை என்பது ஒரு வேதனையான புதிர். “எங்க சார், இருக்கிற வேலையை பாக்கறதா, இதுங்களுக்கு கத சொல்லிட்டு உக்கார்ந்திருக்கிறதா? இங்க எக்கச்சக்கமா ஹோம்வொர்க் குடுக்கிற டீச்சர்தான் நல்ல டீச்சர். பெத்தவங்களும் அதத்தான் விரும்பறாங்க, ஆபிசர்ங்களும் அதத்தான் விரும்பறாங்க” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

சுகவனம்போலவே கதைகளாலேயே பாடங்களை மனத்தில் பதிய வைத்த ஆசிரியர் எங்கள் பள்ளியைச் சேர்ந்த ராமசாமி மற்றும் ராதாகிருஷ்ணன். அவர்களை ஒருபோதும் மறக்கமுடியாது. அவர்களைபோன்ற ஆசிரியர்கள் ஒருசிலராவது எங்கேனும் இருக்கக்கூடும். அவர்களெல்லாம் தம் அனுபவங்களை எழுதிவைத்திருந்தால் மிகச்சிறந்த அனுபவ ஆவணங்களாக மாறியிருக்கும். நான் படித்தவரையில் வார்த்தை என்னும் இதழில் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற பி.ச.குப்புசாமி அவர்கள் எழுதிய கட்டுரைகள் மிகச்சிறந்த ஆவணமாக்கும்.

இப்படி பழைய நினைவுகள் பொங்கி வருவதற்குக் காரணம், நேற்று இரவு மாடசாமி எழுதிய ‘ஆசிரிய மனிதர் – ஒரு வாசிப்பு அனுபவம்’ என்னும் நூலாகும். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிராங்க் மக்கோர்ட் என்னும் ஆசிரியர் அமெரிக்கப்பள்ளியில் பணிபுரிந்த தன் அனுபவங்களைத் தொகுத்து நூலாக எழுதினார். ’டீச்சர் மேன்’ என்னும் அந்த நூல் உலக அளவில் மிகமுக்கியமான ஒரு புத்தகம். ஆசிரியர்களுக்கான ஒரு கையேடு என்றே சொல்லலாம். அந்தப் புத்தகத்தை வாசிக்க நேர்ந்த மாடசாமி, தன் வாசிப்பு அனுபவங்களை ஒரு சிறிய நூலாகவே எழுதிவிட்டார். மக்கோர்ட் நூல்வழியாக அவர் பெற்ற உத்வேகத்தைப் புரிந்துகொள்வதோடு, மூலநூலைத் தேடிப் படிக்கத் தூண்டும்வகையிலும் அவருடைய வாசிப்பனுபவம் உள்ளது. அவர் எடுத்துக்காட்டாக பகிர்ந்திருக்கும் மக்கோர்டின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் அவரை மிகமிக நெருக்கமாக உணரவைக்கின்றன.

மக்கோர்ட் முதன்முதலாக வேறொரு நூலைத்தான் எழுதினார். அதன் பெயர் ஆஞ்சலாவின் சாம்பல். அந்த நூலை எழுதும்போது அவருடைய வயது 66. ஆஞ்சலா அவருடைய தாயாரின் பெயர். கசப்பான வாழ்வை சுமக்கமுடியாமல் சுமந்தவர். ஆஞ்சலாவின் விரலிடுக்கில் புகைந்த சிகரெட் சாம்பல்தான் தலைப்பு. தன் குடும்ப வரலாற்றையே சிறுசிறு அத்தியாயங்களாக எதையும் மறைக்காமல் அவர் எழுதினார். குடிகாரத் தந்தைபற்றி, அவர் குடும்பத்தை கைவிட்டு ஓடியதுபற்றி, இரு தம்பிகளும் ஒரு தங்கையும் பசியாலும் நோயாலும் மடிந்துபோனதைப்பற்றி, இரு பிள்ளைகளை வைத்துக்கொண்டு தன் தாய் பட்ட பாடுகள்பற்றி, சிறுவயதில் திருடிச் சாப்பிட்ட அவமதிப்பான வாழ்க்கையைப்பற்றி என எல்லாவற்றையும் எழுதினார். சிலநூறு பிரதிகளே விற்கும் என அவர் நினைத்த அந்தப் புத்தகம் சில மாதங்களிலேயே லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. வெளிப்படையான பேச்சும் எழுத்தும் அவருக்கு பரவலான அங்கீகாரத்தையும் வாசக உலகத்தையும் அளித்தன. அந்த நூலுக்குப் புலிட்சர் பரிசும் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் தம் 75 வயதில் தம் வகுப்பறை அனுபவங்களைத் தொகுத்து ‘டீச்சர் மேன்’ நூலை எழுதிமுடித்தார். நியுயார்க் நகரில் உள்ள பள்ளியொன்றில் 1958 ஆம் ஆண்டில் அவர் தம் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். அது ஒரு தொழிற்பள்ளி. பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்கள்தாம் அங்கே மாணவர்களாக இருந்தார்கள்.

1950 களில் நியுயார்க்கில் மாணவர்கள் கும்பல்கும்பலாகப் பிரிந்து தெருவீதிகளில் சண்டையிட்டு ரத்தம் சிந்துவது வழக்கமாக இருந்தது. தொழிற்பள்ளிகளில் சொல்லிக்கொடுக்க வரும் ஆசிரியர்கள் அவமதிக்கப்படுவதற்குக் கணக்கே இல்லை. அதைப்பற்றி திரைப்படங்கள் கூட வந்துள்ளன. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் அடிபடுவது, தினமும் நடைபெறக்கூடிய சங்கதியாக இருந்தது. திருப்பி அடிக்கமுடியாது. வேலையை இழக்கநேரிடும். கூச்சலிடக்கூடிய, சண்டையிடக்கூடிய, அடிபணிய மறுக்கிற விடலைகளின் வகுப்பில்தான் மக்கோர்ட் முதன்முதலாக ஆசிரியராக நுழைந்தார். முதல்நாளில் அவருக்குக் கிடைத்த அனுபவம் விசித்திரமானது. வகுப்பறைக்குள் அவர் நுழையும்போது யாருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை. பேட்டி என்கிற மாணவன் மதிய உணவுக்கு தன் வீட்டிலிருந்து கொண்டுவந்த சாண்ட்விச்சை அதைச் சுற்றிய தாளோடு முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் ஆண்டி என்கிற மாணவன்மீது வீசுகிறான். அது கரும்பலகைக்குமுன்னால் விழுகிறது. இந்தச் சண்டையைப் பார்த்து சகமாணவர்களிடம் உற்சாகம் பீறிடுகிறது. எல்லோரும் கூச்சலிட்டு, இரு தரப்புகளையும் ஊக்கப்படுத்துகிறார்கள். வகுப்பில் நுழைந்த மக்கோர்ட் திகைத்து, அமைதி அமைதி என்று பலமுறை அறிவிக்கிறார். ஆனால் அது யார் காதிலும் விழவில்லை. உலகெங்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் சாப்பிட எதுவுமின்றி பட்டினி கிடக்கும்போது, இந்த வகுப்பறைக்குள் சாண்ட்விச்சை தூக்கி வீசும் விளையாட்டு நடக்கிறதே என்ற வேதனை படர்கிறது. மெதுவாக குனிந்து கீழே விழுந்து கிடந்த சாண்ட்விச்சை எடுத்து நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட்டுவிடுகிறார். பிறகு எழுந்து கரும்பலகையில் ‘நான் சாண்ட்விச்சைச் சாப்பிட்டுவிட்டேன்’ என்று எழுதுகிறார். வகுப்பறையில் உட்கார்ந்திருந்த 34 மாணவமாணவிகளின் கண்களில் நம்பமுடியாத வியப்பு படர்கிறது. சாண்ட்விச் சுற்றிய தாளை பந்துபோல சுருட்டி வகுப்பின் ஓரத்தில் இருந்த குப்பைக்கூடையில் விழுமாறு போடுகிறார். அந்தத் தருணத்தில் எதிர்பாராதவிதமாக அவ்வகுப்பைக் கடந்துபோகும் பள்ளி முதல்வர் அவரை அழைத்து வகுப்பறைக்குள் சாண்ட்விச் சாப்பிடுவது நல்ல பழக்கமல்ல என்று கண்டிக்கிறார். மக்கோர்ட் நடந்ததைச் சொல்ல நினைத்தும் சொல்லாமல் அமைதியாக திரும்பிவிடுகிறார். வகுப்பிலிருந்த பிள்ளைகள் எல்லோரும் முதல்வர் என்ன சொன்னார் என்று கேட்கிறார்கள். முதல்வர் கேட்டதையும் தான் சொன்ன பதிலையும் மறைக்காமல் பகிர்ந்துகொள்கிறார் மக்கோர்ட். அக்கணத்தில் மாணவர்களுக்கும் அவருக்கும் இடையே சட்டென ஓர் ஒட்டுதல் பிறந்துவிடுகிறது. இப்படி தொடங்கிய ஒட்டுதலை ஆரம்பமாகக் கொண்டு, அவர்களை படிப்பில் ஆர்வமுள்ள நல்ல மாணவர்களாக படிப்படியாக மாற்றிய விதத்தையே நூலாக விரிவாக எழுதினார். ‘பரிசோதனைகள் மூலமாகவும் தோல்விகள் மூலமாகவும்தான் நான் மனிதனாக இருப்பதற்கும் ஆசிரியராக இருப்பதற்கும் கற்றுக்கொண்டேன்’ என்று குறிப்பிடும் மக்கோர்ட் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களிடம் இடைவிடாமல் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிறார். இந்த உலகத்தில் உள்ள எதைப்பற்றி வேண்டுமானாலும் மாணவர்களிடம் உரையாடலாம் என்பது அவர் நிலைபாடு. ஒரு வகுப்பில் ஆர்வமுள்ள மாணவர்களும் ஆர்வமற்ற மாணவர்களும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தே இருப்பார்கள். ஆர்வமற்ற மாணவர்களே ஆசிரியர்களின் சவால். அவர்களை தம் பேச்சால் வசப்படுத்தி ஆர்வம் நிறைந்தவர்களாக மாற்றும் வழிகளைப்பற்றி ஆசிரியர் தொடர்ந்து சிந்தித்து கண்டறியவேண்டும் என்கிறார்.

ஒருமுறை பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் ஒரு தாய் மக்கோர்டைப் பார்த்து “நீங்கள் ஒரு மோசடிப் பேர்வழி” என்று குற்றம் சுமத்துகிறார். “வகுப்பில் பாடங்களைவிட அதிகமாக கதைகளையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதுவும் அயர்லாந்துக் கதைகள். ஆசிரியரின் சொந்தக் கதையெல்லாம் வகுப்பில் எதற்கு? கதைகளெல்லாம் வேண்டாம். நீங்கள் பாடம் சொல்லிக்கொடுங்கள். போதும். கதைகளைச் சொல்ல வீட்டிலே தொலைக்காட்சி இருக்கிறது. புத்தகம் இருக்கிறது. உங்கள் வேலை ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பதுதான். அதை ஒழுங்காகச் செய்யுங்கள்” என்று இழிவாகப் பேசிவிட்டுப் போகிறார். மனத்துக்குள் குழம்புகிறார் மக்கோர்ட். பிள்ளைகள் தன்னைத் தந்திரமாக ஏமாற்றி, தன்னை ஒரு கதைசொல்லியாக மாற்றிவிட்டார்களோ என எண்ணுகிறார். எப்படியாயினும் இனி வகுப்பை ஒழுங்காக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுக்கொள்கிறார். அன்று இலக்கண வகுப்பு. ஜான் கடைக்குப் போனான் என்று கரும்பலகையில் எழுதிவிட்டு, இந்த வாக்கியத்தில் உள்ள எழுவாயைக் கண்டுபிடிக்கச் சொல்கிறார். அக்கணமே மாணவர்கள் சலிப்படைவதை அவர் உணர்ந்துகொள்கிறார். எழுவாய் கண்டுபிடிக்கும் வாக்கியத்தில் ’ஜான் ஏன் கடைக்குப் போனான்?’ என்றொரு கேள்வியை எழுதி இணைக்கிறார். இலக்கணவகுப்பில் இப்படியெல்லாம் நடப்பதில்லையே என்று மாணவர்கள் திகைக்கிறார்கள். ஒரு மாணவன் கையை உயர்த்துகிறான். சொல் என்று சொல்கிறார் மக்கோர்ட். அவன் ‘ஜான் ஆங்கில இலக்கணப்புத்தகம் வாங்க கடைக்குப் போனான்’ என்று சொல்கிறான். உடனே மக்கோர்ட் ‘ஜான் ஏன் ஆங்கில இலக்கணப்புத்தகம் வாங்க கடைக்குப் போனான்?’ என்று மற்றொரு கேள்வியை இணைக்கிறார். ‘ஏனென்றால் ஜான் இலக்கணப் புத்தகம் வாங்கி நன்கு படித்து வகுப்பில் ஆசிரியர் மக்கோர்டின் நன்மதிப்பைப் பெற விரும்பினான்’ என்று பதில் வருகிறது. இலக்கணம் மெல்லமெல்ல உரையாடலாக மாறிவிடுகிறது. ‘ஜான் ஏன் மக்கோர்டின் நன்மதிப்பைப் பெறவேண்டும்?’ என்று இன்னொரு கேள்வியை இணைக்கிறார் மக்கோர்ட். ஒரு மாணவன் எழுந்து ‘ஏனென்றால் ஜானுக்கு ரோஸ் என்றொரு காதலி இருக்கிறாள்.. அவளுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். அவளைப்போலவே ஆங்கிலம் கற்க ஜான் விரும்பி புத்தகம் வாங்கினான். அவன் நன்றாகப் படித்து தேர்ச்சி பெற்று ரோஸியை திருமணம் செய்துகொள்வான். தனக்குப் பிறக்கும் குழந்தைக்கு மக்கோர்ட் என்று பெயர் சூட்டுவான்’ என்று பதில் சொல்கிறான். இப்படியே அந்த வகுப்பு நேரம் முழுதும் உரையாடல் நீண்டுகொண்டே செல்கிறது. புதிய புதிய சொற்கள். புதிய புதிய பிரயோகங்கள். எல்லாம் வெள்ளமெனப் பாய்கிறது. மொழியின் பெரும்பரப்பில் இருந்து புதுப்புதுச் செய்திகளைக் கொண்டுவந்து தருவதுதான் மொழி ஆசிரியரின் முக்கியமான வேலை என்று கருதுகிறார் மக்கோர்ட். கைதட்டலோடு வகுப்பு முடிகிறது. இலக்கணம் என்பதை மறந்து மாணவர்கள் இலக்கணம் கற்கிறார்கள்.

இன்னொரு எடுத்துக்காட்டு. தாமதமாக வரும் அல்லது விடுப்பெடுக்கும் மாணவமாணவிகள் தம் பெற்றோர்களிடமிருந்து வருத்தக்கடிதம் கொண்டுவர வேண்டும் என்பது அப்பள்ளியின் விதி. அவற்றில் ஒன்று கூட உண்மையான பெற்றோரால் எழுதப்பட்டதில்லை என்பதை மக்கோர்ட் புரிந்துகொள்கிறார். ஆனால் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று அவருக்குப் புரியவில்லை. ஒருநாள் அவருக்கு எதிர்பாராதவிதமாக ஒரு யோசனை உதிக்கிறது. மாணவர்கள் எழுதிய வருத்தக்கடிதங்களின் நகல்களை எடுத்துவந்து மாணவர்களிடம் மாற்றிமாற்றிக் கொடுத்து படிக்கச் சொல்கிறார். ஒருவித ரகசியப் புன்னகையோடு அவர்கள் அவற்றைப் படிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவர் மாணவர்களை நோக்கி, “ஒரு கற்பனை. இப்போது நீங்கள் மாணவர்கள் அல்லர். பெற்றோர்கள். உங்கள் பிள்ளைகள் ஏதோ ஒரு பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்கு விடுப்பு வேண்டும். அவர்களை மனத்தில் நினைத்து ஆளுக்கொரு வருத்தக்கடிதம் எழுதுங்கள்” என்று சொல்கிறார். அவர்கள் மறைமுகமாகச் செய்ததையே ஒரு எழுத்துப்பயிற்சியாகக் கொடுக்கிறார். மாணவர்கள் உற்சாகத்தோடு எழுதிக் குவிக்கிறார்கள். மெல்லமெல்ல மக்கோர்ட் அந்தப் பயிற்சியை விரிவாக்குகிறார். ஆதாம் அல்லது ஏவாள் கடவுளிடம் மன்னிப்புக் கேட்டு வருத்தக்கடிதம் எழுதுவதுபோல எழுதுங்கள் என்று தூண்டுகிறார். ஒருகணம் கூட யோசிக்காமல் மாணவர்கள் எழுதத் தொடங்கி முடிக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் இப்படி பயிற்சிகள் தொடர்கின்றன. ஏசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் எழுதும் வருத்தக்கடிதம், யூத இனப்படுகொலை புரிந்த இட்லர் எழுதும் வருத்தக்கடிதம், கொள்ளையடித்து கொடைவள்ளலாகத் திகழ்ந்த அமெரிக்கக் கிரிமினல் அல்கபோன் எழுதும் வருத்தக்கடிதம் என நாள்தோறும் அப்பயிற்சி வளர்ந்துகொண்டே போகிறது. ஒருநாள் மாணவர்கள் மும்முரமாக எழுதிக்கொண்டிருக்கும்போது வாசலில் நிழலாடுகிறது. பள்ளிமுதல்வரும் கல்வித்துறை அதிகாரியும் வகுப்பறைக்குள் நுழைகிறார்கள். உள்ளே நிற்கும் மக்கோர்டை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. வகுப்பில் மாணவர்கள் எழுதிக்கொண்டிருக்கும் தாளை வாங்கிப் படித்துப் பார்க்கிறார்கள். அவர்கள் இமைகளும் முகங்களும் சுருங்குகின்றன. போகும்போது மக்கோர்டை அலுவலகத்தில் வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டுச் செல்கிறார் அதிகாரி. அச்சத்தோடு நடுங்கிக்கொண்டே செல்லும் மக்கோர்டை அதிகாரி இருக்கையிலிருந்து எழுந்துவந்து பாராட்டுகிறார். “நீங்கள் கொடுக்கும் பயிற்சி புதுமையாக இருக்கிறது. மாணவர்களின் மொழித்திறமை கல்லூரிமாணவர்களின் திறமையளவுக்கு உள்ளது. இப்படித்தான் இறங்கிவந்து சொல்லித்தரவேண்டும். உங்கள் கோப்பில் ஒரு பாராட்டுக்கடிதம் வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு முதுகில் தட்டிக்கொடுக்கிறார்.

இப்படி ஏராளமான அனுபவங்கள். ஒவ்வொன்றும் சுவையான பதிவுகள். ஓர் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து சத்தம் போடுவதால் அல்லது திட்டுவதால் அவர்களை நிரந்தரமாக இழக்க நேரிடும். சலனமற்று மெளனமாக அவர்கள் வகுப்பறையில் உட்கார்ந்திருப்பது ஆசிரியரைத் திருப்பியடிபதற்குச் சமமாகும். வகுப்பறையே அத்துடன் முடிந்துபோகும் என்பது மக்கோர்டின் வாக்கு. தனித்து விலகி மெளனமாக இருப்பதைவிட சேர்ந்துகூடி முரண்பட்டு விவாதிப்பது நல்லது என்பது அவருடைய நிலைபாடு. ஒவ்வொரு வருடமும் முடியும்போது அந்த வகுப்பறையில் நிச்சயம் ஒருவனாவது ஏதோ சிலவற்றைக் கற்றுக்கொள்கிறான். அந்த ஒருவன் நான்தான் என்று நினைக்கும் மனப்பாங்கு மக்கோர்டிடம் இருந்தது. “இன்றைக்கு பாடம் மிகவும் நன்றாக இருந்தது என எந்த மாணவனும் வெளிப்படையாகச் சொல்லமாட்டான். கூச்சம் அவர்களைத் தடுக்கும். ஆனால் வகுப்பு முடிந்து வெளியேறும்போது அங்கீகரிக்கும் பார்வையோடு அவர்கள் ஆசிரியரைப் பார்த்தபடி செல்வார்கள். அந்தப் பார்வை மிகவும் இதமானது. ஒரு நல்ல ஆசிரியருக்கு ஊக்கம் தரக்கூடிய ஊற்றுக்கண் அது” என்று மக்கோர்ட் எழுதியிருக்கும் குறிப்பு மிகவும் முக்கியமானது.

மக்கோர்ட் எனக்கு எங்கள் பள்ளியாசிரியர்களை நினைவூட்டுவதுபோல, இந்த நூலைப் படிப்பவர்களுக்கு அவரவர்களுடைய ஆசிரியர்களைப்பற்றிய நினைவுகளை எழுப்பக்கூடும். அப்படி பழைய நினைவுகளில் தோய்வதுகூட ஒருவகை இன்பம். எழுபது பக்க நூலில் மக்கோர்டின் புத்தகத்தை வாசித்துத் தான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட மாடசாமியின் சொற்கள், நம்மை மக்கோர்டைநோக்கிச் செலுத்தும் சக்திகொண்டவையாக உள்ளன.

 

(ஆசிரிய மனிதன் – ஒரு வாசிப்பு அனுபவம். ச.மாடசாமி. அறிவியல் வெளியீடு. 245, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை – 86. விலை. ரூ.60 )

Series Navigationவாக்குமூலம்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
author

பாவண்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    arun narayanan says:

    Very interesting article. But will it be feasible in today’s world? Even in the U.S.A. they tend to think that they are the best and their methods are the best and do not even appreciate that there can be an alternative method for anything and everything.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *