ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-7

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

Picture -8

 

 

இடம்: ரங்கையர் வீடு.

 

நேரம்: மாலை ஆறரை மணி.

 

பாத்திரங்கள்: ஜமுனா, ஆனந்த லட்சுமி, மோகன்.

 

சூழ்நிலை: (ஜமுனா பரப்பி வைத்திருக்கும் ஒரு வாழை இலையில் ஒரு தேங்காய்த் துருவியால் தேங்காய் மூடி ஒன்றைத் துருவி கொண்டிருக்கிறாள். லேஸ் லேஸாக தேங்காய்த் துருவல் உதிர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சின்னக் கூடத்தின் ஓரமாக காலை மடக்கியவாறு உட்கார்ந்து ஆனந்த லட்சுமி வெங்கடேச புராணம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறாள்)

 

 

ஜமுனா: என்ன புஸ்தகம் படிச்சிண்டிருக்கேள் மாமி?

 

ஆனந்தலட்சுமி: வெங்கடேச புராணம். நீ வாசிச்சிருக்கியோ…

 

ஜமுனா: சின்ன வயசிலே வாசிச்சது.

 

ஆனந்தலட்சுமி: எதுக்கு அந்த தேங்காயைத் துருவறே?

 

ஜமுனா: இந்தத் தேங்காமூடி ரெண்டு நாளா கெடக்கறது… அழுகி வீணாய்டப் போறதேண்ணு துருவறேன்.

 

ஆனந்தலட்சுமி: இப்படி என்னமோ சாக்கு சொல்லிண்டே விதத்தாலே ஒரு பட்சணம், வேளைக்கு ஒண்ணு பண்ணிடறே! நேக்கு வயறு கொள்ள முடியல்லே.

 

ஜமுனா: ஒண்ணும் பண்ணிடலே மாமீ, நீங்க தான் பிரமாதப்படுத்தறேள்!

 

ஆனந்தலட்சுமி: (பெருமூச்செறிகிறாள்) ஊம்ம் எனக்கு ஒரு பிள்ளை இல்லாதது, ஒன்னைப் பார்க்கறச்சே தான் ரொம்ப ஆதங்கமா வர்றது.

 

ஜமுனா: பொண்ணுக்குன்னா ஆதங்கப்படணும்?

 

ஆனந்தலட்சுமி: பொண்ணு புக்ககம் போய்டுவா! மருமகள் வீட்டோட இருப்பா.

 

ஜமுனா: (நாணத்துடன் தலை கவிழ்கிறாள்) இப்ப வேணும்னா யாரையாவது தத்து எடுத்துக்கறது!

 

ஆனந்தலட்சுமி: உன் மாதிரி பெண்டாட்டி கெடைப்பாள்னா… நூறு பேர் ஸ்வீகாரம் வர ரெடியாருப்பான். ஒனக்கு சமமா ஒருத்தனை பொறுக்கறது ஸ்ரமம்.

 

(வெளியே லேசாகச் சாத்தியிருக்கும் கதவை யாரோ ஒற்றை விரலால் தட்டும் ஒலி) யார் ஜம்னா? யாரோ கதவைத் தட்டறாப்ல இருக்கே.

 

ஜமுனா: நீங்க உட்காருங்கோ மாமீ.  புஸ்தகம் படிக்கக் கூட முடியாம வெளிச்சம், மங்கிட்டது நான் யார்னு பார்த்துட்டு லைட்டைப் போட்டுட்டு வர்றேன்.

 

(கதவை அதிகம் திறக்காமல் வெளியே வருகிறாள். எதிரே தெரு வாசலில் யாரோ ஒருவன் சைக்கிளிலிருந்து, ஒரு பையைக் கழற்றிக் கொண்டிருப்பது தெரிகிறது. மோகன் தான். ஆனந்த லட்சுமி அந்த சிறு இடைவெளி வழியே இருவரையும் பார்க்கிறாள்)

 

ஜமுனா: வாங்கிண்டு வந்தாச்சா?

 

மோகன்: ம்ம்ம்

 

ஜமுனா: (கிசுகிசு குரலில்) கதவை எதற்குத் தட்டணும். சந்தேகத்துக்கு இடம் வக்யறாப்பில.

 

மோகன்: (பையைக் கொடுக்கும் சாக்கில் அவள் கையைப் பிடிக்கிறான்)

 

ஜமுனா: ஸ்ஸ்ஸ் (பின்னால்ஆனந்தலட்சுமி என்று ஒற்றை விரலால் சைகை காட்டுகிறாள்)

 

மோகன்: [சத்தமாக] மைதா அரைகிலோ, ஏவலக்காய் ஒரு ரூவா. சரியா இருக்கா பார்த்துக்கோங்கோ.

 

ஜமுனா: பார்த்துக்கிட்டேங்கோ…[மெதுவாச் சீறி]  ங்கோவாம்…ங்கோ ரொம்ப தாங்ஸ்…

 

மோகன்: வெறும் தாங்க்ஸ் மட்டும்தானா?

 

ஜமுனா: சில்லறை ஏதாவது வேணும்னா மீந்திருக்குமே அதை வச்சுக்… கோங்க சார்!

 

மோகன்: நீ மட்டும் வச்சுக்… கோங்க சார் சொல்லலாமா?  என் பேர் மோகன்.

 

ஜமுனா: (அழகு காட்டிப் போகிறாள்)  வவ்வவ்வே

 

மோகன்: தாங்க்ஸ் நீ அழகுதான் ! நான் வர்ரேன்.

 

(ஜமுனா லைட்டைப் போட்டு விட்டு உள்ளே வருகிறாள்)

 

ஆனந்தலட்சுமி: யார் ஜமுனா அந்த பிள்ளையாண்டான்?

 

ஜமுனா:  எதிராத்திலே குடியிருக்கார். எப்பாவது சாமான் வாங்கி வருவார் எனக்கு.

 

ஆனந்தலட்சுமி: என்ன வேலை செய்யறான்?

 

ஜமுனா: மெடிகல் ரெப்ரஸென்டேடிவ்.

 

ஆனந்தலட்சுமி:   அவன் பிரம்மச்சாரியா?

 

ஜமுனா: தெரியலே. கல்யாணமாகாதவர்னு தான்னு நெனைக்கறேன்… அப்பாட்ட வந்து வேதங்கள் ஆசார அனுஷ்டானங்கள் பத்திப் பேசிண்டிருப்பார். இருட்னப்புறம் கடை கண்ணிக்குப் போக எனக்கு பிடிக்கறதில்லே… அவரா வந்து ஏதாவது வாங்கிண்டு வரணுமான்னு கேட்பார். கொடுப்பேன். மரியாதையோட வாங்கிண்டு வருவார்.

 

ஆனந்தலட்சுமி: பையன் முழி சரியில்லே! நீ ஜாக்கிரதையா இருடீ கொழந்தே, நீ கல்மிஷம் இல்லாமப் பழகினாலும் ஒலகம் அப்படியே இருந்துடாது.

 

ஜமுனா: நான் என்ன பச்சைக் குழந்தையா மாமீ ?  நேக்குத் தெரியாதா… ஒரு லிமிட் வச்சிருக்கேன். கொஞ்சம் தாண்டினா பெரம்பால அடிச்சாப்பால ஒரு வார்த்தை விட்டா போலும்…

 

ஆனந்த லட்சுமி: ம்ம்! ரங்கையர் பெரிய ஆசார சீலர் – மஹா வித்வான். எங்க சித்தி அவரை வாய் ஓயாம சிலாகிப்பா… அவர் வைதீகம், ஞானம், அனுஷ்டானம் இதுக் கெல்லாம் எப்பேர்க் கொத்த மதிப்பு உண்டு தெரியுமோ?

 

ஜமுனா: சொல்லுங்க மாமீ!

 

ஆனந்தலட்சுமி: இப்படி ரெண்டே ரெண்டு வேளை மட்டும் ஆசார சுத்தியா ஸ்நானம் பண்ணி பூஜையானப்பறம் ஆகாரம் எடுத்துக்கறது. விடிகாலமே எழுந்து கெணத்து ஜலம் எறிச்சப்பறம் சித்த நாழி வேத அத்யயனம் பண்றது. ஏதோ பூமியிலே பொறந்துட்ட தோஷத்துக்கு ஒரு கர்மாவைப் பண்றாப்ல சப்ளையரா இருக்கறது… செய்ற காரியத்தில மனசை லயிக்க விடாம ஈசுவரார்ப்பணமா கார்யம் பண்றது! இதெல்லாம் சாமான்யம்னு நெனக்கறியா?

 

ஜமுனா: நேக்கென்ன தெரியும் ?… சின்னப் பொண்ணு!

 

ஆனந்தலட்சுமி: எல்லாம் ஒரு தபஸ் மாதிரி. என்னமோ ஓட்டமும் ஆட்டமுமா லோகம் பறந்துண்டிருக்கு. ஒன் தோப்பனார் அவாள்ள ஒருத்தர்ணு நெனச்சுடாதே… இதெல்லாம் ஒரு தபஸ் மாதிரி… புறநானூறில் சொல்லியிருக்கே  ‘உண்டாலம்ம இவ்வுலகம்ணு’; இவாள்ளாம் இருக்கற தாலதான் லோகம் இத்தனைப் பாவ மூட்டையோட சுத்திண்டிருக்கு. நல்லார் ஒருவர்  உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழைன்னு சொல்லியிருக்கே, இவர் மாதிரி மனுஷாளுக்குச் சொன்னது அது.

 

ஜமுனா: மழையே இந்த வருஷம் பெய்யலியே மாமீ….

 

ஆனந்தலட்சுமி: சுட்டித்தனமாப் பேசறே! பொய்யாம போயிடாது பாரு! ஆனா மனுஷா மாறிப் போயிட்டா !  ஆமா இப்ப எதுக்கு மைதா மாவு?

 

ஜமுனா: ஆய்ட்டதோன்னா அதுக்குதான்!

 

ஆனந்தலட்சுமி: தேங்காய் ஏன் துருவறேன்னா அழுகிடும் கறே! மைதா எதுக்குன்னா ஆய்ட்டதுங்கறே…

 

ஜமுனா: நேக்கு பால் போளி சாப்பிடணும்ணு ஆசை வந்துடுத்து மாமீ.

 

ஆனந்தலட்சுமி: பொய் சொல்றே! பால் போளி எனக்குப் பிடிக்கும்ணு ரங்கையர் சொல்லியிருக்கார். (கண்ணாடியைக் கழற்றி ததும்பிய நீரைத் துடைத்துக் கொள்கிறாள்)

 

ஜமுனா: என்ன மாமீ கண்ல ஜலம்!

 

ஆனந்தலட்சுமி: பலகார பட்சணம் சாப்பிட வர்லடீ கொழந்தே! பாழும் மனசில பந்தம் விடல்லே. கடைசித் தடவையா எல்லாரையும் பார்க்கத் தோணிடுத்து! ரெண்டு நாள் ஓடிடுத்து.

 

ஜமுனா: சந்தோஷம் மாமீ, இன்னும் ஒரு மாசம் இருங்கோ.

 

ஆனந்தலட்சுமி: இந்தக் கட்டையால நாலு பேருக்கு உபகாரம் நடக்க உத்தரவு இருந்தது. நடந்தது. ரங்கையர் மாதிரி ஆசாரசீலர் ஆத்திலே தங்க யோக்யதை இல்லே! சீக்கிர சீக்கிரமா க்ஷேத்திராடனம் பண்ணி பாவ மூட்டையைப் பளு எறக்கி, பகவான் அனுப்பற சீட்டு எப்ப வரும்ணு காத்திருக்கணும்; இப்பவே ஜாஸ்தி!

 

 

(திரை)

 

 

[தொடரும்]

Series Navigation
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *