ஸிந்துஜா
கோகர்ணேசன் ஒரு வழியாகப் பஸ்ஸிலிருந்து பிதுங்கி வழிந்து வெளியே வந்து விழுந்தார். அவர் ஏறின பஸ் ஸ்டாப்பிலேயே பஸ் நிறைய ஜனம் இருந்தது. ஏதோ கல்யாணக் கூட்டம். பிச்சியும், மல்லியுமாக ஒரு கதம்ப
வாசனை சுற்றி நிறைந்திருந்தது.உட்கார இடமில்லையே என்று சுற்றிப் பார்த்த கண்கள் கவலையுடன் தெரிவித்தாலும்,உள்ளே வந்து நிற்கவாவது இடம் கிடைத்ததே என்று ஒரு மூலையில் இருந்து நன்றிக் குரல் முனகிற்று. பதினைந்து நிமிஷமும் அவர் கம்பியைப் பிடித்து நின்றவாறே பஸ் பிரயாணத்தை முடிக்க வேண்டியதாய் இருந்தது.
அவர் பாக்டரியை நோக்கி நடக்கஆரம்பித்தார்.வெய்யில் கருணை இன்றி அடித்தது.ரொம்ப நேரம் நின்று கொண்டே வந்ததால் இப்போது நடக்கும் போது கால்கள் கெஞ்சின. அவர் இடது கையில் இருந்த கைப்பையை வலது கைக்கு மாற்றிக் கொண்டு நடந்தார். கைப்பையில், கமலாம்பா கட்டிக் கொடுத்த தயிர் சாதம் இருந்தது, இந்த வெய்யிலுக்கு அந்த அமிர்தத்துக்கு ஈடு இண இல்லை. கமலாம்பா அவருடைய அத்தையின் ஒரே பெண்.ஒரு சந்தர்ப்பத்தில்nஅவர் கமலாம்பாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் திட்டம் இருந்தது.
ஆனால் அவரது அம்மா , தான் ஏற்கெனவே கணவன் வீட்டுக் குடும்பத்தில் பட்ட கஷ்டங்கள் தன் பிள்ளையின் வாழ்க்கையிலும் தொடர வேண்டாம் என்று தீர்மானமாகத் தடுத்து விட்டாள் . அதற்குப் பிறகு தன் சொந்தத்திலிருந்து மிக நல்ல பெண் என்று தாராவை அவருக்குப் பண்ணி வைத்து விட்டாள். பின்னாளில் கமலாம்பாவை மதுரையில் கொடுத்திருந்தார்கள் .
மதுரைக்குப் பக்கத்தில் இருந்த பரவையில் ஒரு நூற்பாலையின் கணக்குகளைத் தணிக்கை செய்யும் பொருட்டு அவர் மதுரைக்கு வந்திருந்தார். அவர் சிறிய, பெரிய தொழில்களுக்கு கடன் உதவி அளிக்கும் மாநில தொழில் முன்னேற்ற மற்றும் முதலீட்டுக் கழகத்தில் அதிகாரியாக பங்களூரில் இருந்த தலைமை அலுவலகத்தில் இருந்தார்.
ஒரு வருஷமாக அவர் தணிக்கைப் பிரிவில் இருக்கிறார். அதனால் எப்போதும் டூரில் இருக்க வேண்டி இருந்தது. மாதத்தில் பெரும்பாலும் வீட்டுக்கு வெளியேதான் வேலை அவரது மனைவிக்கும் ஒரே பெண்ணுக்கும் அவருடைய இந்த வாழ்க்கை முறை பழகி விட்டது .அவருக்குத்தான் கட்டோடு இது பிடிக்கவில்லை . சம்பளமும்,பிரயாணப் படியும் என்று பணம் ஏராளமாக வருகிறது தான். ஆனால் சந்தோஷத்தை இதற்குக் கப்பமாகக் கட்ட வேண்டியிருக்கிறது.
கமலாம்பாவும் இன்று காலையில் இதையேதான் வேறு வார்த்தைகளில் சொன்னாள். “என்ன அம்மாஞ்சி , , போன தடவைக்கு இப்போ இப்படி இளைச்சு போயிருக்கேள்? ரொம்ப வேலை அலைச்சல் போல இருக்கே? இன்னும் எவ்வளவு நாள் இப்பிடி மண்ணாடிண்டு அலையணும்?” என்று காப்பி டம்ளரை டவராவில் வைத்து அவரிடம் கொடுத்தபடி கேட்டாள்.
” என்ன பண்ணறது ? அலையணும்னு இருக்கற பிராரப்தம் இருக்கச்சே , அலைஞ்சுதானே ஆகணும். நீ எப்படி இருக்கே ? ” என்று அவளைப் பார்த்தார்.
கமலாம்பாளை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவருக்கு ஏற்படும் ஆச்சரியம் இப்போதும் ஏற்பட்டது. எப்படி ‘ கிச் ‘ சென்று உடம்பை வைத்துக் கொண்டு இருக்கிறாள் ? யார் அவளைப் பார்த்தால் நாற்பது வயதுக்காரிஎன்று சொல்லத் துணிவார்கள் ? ஏதோ இப்போதுதான் முப்பது வயதுக்குள் நுழையப் போகிற மாதிரி அப்படி ஒரு கட்டும், செறிவும், முகக் களையும் எதிராளியைப் போட்டுப் பிரமிக்க அடிக்க வைக்கும் தோற்றம் .
கோகர்ணேசன் அவள் கொடுத்த காப்பியை ஆற்றி வாயில் விட்டுக் கொண்டார். டிகாஷன் திக்காக இருந்தது. சுவைத்துக் குடித்தார். இந்த மாதிரி சௌகர்யங்களுக்காகத்தான் அவர்எந்த ஊருக்கு வேலையாகச் சென்றாலும் ஹோட்டல்களைத் தேடிச் செல்லுவதில்லை. அவருடைய பதவிக்கு அவர் ஹோட்டல்களில் தங்கலாம் . அல்லது பதிலாகத் தினமும் கம்பனி தரும் தங்கும் படியைப் பெற்றுக் கொள்ளலாம் . இரண்டாம் வகுப்பில் ரயிலில் பிரயாணம் செய்தாலும், முதல் வகுப்பு அல்லது , ஏ.சி. கார் செலவைக் கம்பனியிடமிருந்துபெற்றுக் கொள்ளலாம். விசிட்டுக்குப் போகும் இடங்களுக்கு .வாடகைக்கு காரை எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அல்லது ஆட்டோவிலோ , பஸ்ஸிலோ போய்விட்டுவந்து கூட கார் செலவை கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.
அவர் செல்லும் இடங்களில் நெருங்கிய சொந்தமோ, தூரத்து சொந்தமோ, இருந்தால்.. அவர்கள் வீட்டுக்குப் போய்த் தங்கிக் கொள்வார். அதில்தான அவருக்கு நிம்மதி. ஒரு வேளையோ, ஒரு நாளோ, ஒரு வாரமோ அவர்கள் அவரை உபசரிக்க வேண்டும்தான். அப்படிப் பெயர் வந்து விட்டது. ஆனால் இதுவரை யாரும் முகச் சுழிப்பு காட்டியதில்லை.
அவருக்குப் பின்னால் நின்று கொண்டு எப்படி காசு மிச்சம் பிடிக்கிறான் பாரு என்ற பேசியதில்லை. ‘அவருக்கு மனிதர்கள் வேண்டும், ரொம்பவும் ஒட்டிக் கொள்கிற சுபாவம் அவருக்கு ‘ என்றுதான் குதூகலித்துக் கொண்டாடிக் கொண்டு அவருடன் இழைந்து இருக்கிறார்கள். சமயம் அறிந்து உதவிகள் செய்பவர் என்றுஅவருக்கு ஒரு பெயர் இருந்ததும் இந்தக் கொண்டாடுதலுக்கு ஒரு சிறிய காரணமாக இருக்கக் கூடும்.
கோகர்ணேசன் தானாகவே பேச்சைத் தொடர்ந்தார் . ” ஜயாவுக்கு ஒரு இடமும் திகைஞ்ச பாடில்லே. அவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணிட்டு ஆண்டவன் கிட்டே இனிமே என்னையும் என் பெண்டாட்டியையும் பார்த்துக்கறது உன் பொறுப்புன்னு கொடுத்தா ஆச்சு. ஆனால் அவன் இன்னும் என்னென்ன நினைச்சிண்டு இருக்கானோ ? எல்லாம் அவன் கண்ணை திறந்து பாக்கறதிலேன்னா இருக்கு! ” என்று கொஞ்சம் அலுப்பாகப் பதில் சொன்னபடி தம்ளரையும் டவராவையும் அவளிடம் தந்தார்.
கமலாம்பா அவர் சொல்வதை ஒப்புக் கொள்ளாதவள் போலச் சிரித்தாள். “நீங்க பேசறதைப் பாத்தா ஏதோ நாளைக்கே ரிடையர் ஆகிடப் போற மாதிரின்னா இருக்கு. இன்னும் பத்து பதினஞ்சு வருஷம் இருக்கு அம்மாஞ்சி , அதுக்கெல்லாம் . ஊர் ஊரா அலைஞ்சு அலைஞ்சு முகம் கையெல்லாம் கறுப்பு ஏறிடுத்து. அதுக்காக உங்களுக்கு வயசாச்சுன்னு சொல்லிட முடியுமா.? நீங்க இப்படி பேசறதைக் கேட்டா அக்கா உங்களை சும்மா விடமாட்டா ! ” என்றாள்
கமலாம்பா சொல்வது சரிதான்.அவர் மனைவி தாராவுக்கு தனக்கு வயதாகி விட்டது என்கிற நினைப்பே பிடிக்காது. அவள் வெளியே கிளம்பும் போது சில வருடங்களை வீட்டில் உதறி விட்டு வருவதில் குறியாயிருப்பாள். கமலாம்பாவின் பரிவான பேச்சு அவரைத் தொட்டது.
மறுபடியும் கமலாம்பா விட்ட இடத்திலிருந்து பேச்சைத் துவங்கினாள்.
“ஆமா. இந்த காலத்தில்தான் பொண்ணும பையனும் ஒத்தருக்கொருத்தர் பாக்கணும், பேசணும், பழகணும்னு நூத்தியஞ்சு கண்டிஷன்லாம் போடறாளே, அதை எல்லாம் மீறிண்டுன்னா கல்யாணம் நடக்க வேண்டியிருக்கு” என்று கமலாம்பா அலுத்துக் கொண்டாள். “நம்ப நாள்ல , பெரியவாதான் பாத்து பண்ணி வச்சா . நாம என்ன கொறஞ்சு போயிட்டோம் ? ”
அவள் தங்கள் வாழ்க்கையில் நடந்ததற்கு , இப்போது அவரைக் குற்றம் சாட்டுகிறாளோ என்று சந்தேகத்துடன் அவளைப் பார்த்தார். . ஆனால் அவள் முகம் அம்மாதிரி உணர்ச்சி எதையும் காண்பிக்கவில்லை.
கோகர்ணேசன் பதில் ஒன்றும் அளிக்கவில்லை. காலம் மாறிக் கொண்டே வருகிறது. கூடவே ஜனங்களும், அவர்களைச் சுற்றியுள்ள சமூகமும்தான். ஒரே தலைமுறைக்குள்ளேயே மதிப்புக்கள் மாறி வரும் போது வெவ்வேறு தலைமுறைகளுக்கு இடையே மாறுதல்கள் நிகழ்வது பற்றி அலட்டிக் கொள்வதில் அர்த்தமில்லை. அன்று நடந்தது எல்லாம் மட்டுமே சரி என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான். கமலாம்பா இதைப் புரிந்து கொள்வாளா என்பது சந்தேகம்…ஆனால் இந்த மாதிரி மூளை பகுந்து ஆராய்ந்தாலும், மனதின் ஒரு மூலை, கமலாம்பாவின் பேச்சில் ஒட்டிக் கொள்ள ஆர்வம் காட்டுகிறது என்று அவருக்குத் தோன்றிற்று,
இப்போது மில்லுக்கு நடந்து செல்லும் வழியில் அவருக்கு பெண்ணுடைய ஞாபகம் வந்தது. ஜயா இப்படி ஒரு கல்லைத் தூக்கிப் போடுவாள் என்று அவர் ஒரு பொழுதும் எண்ணியதில்லை. கமலாம்பாவிடம் பேசிய போது நெஞ்சைத் துளைத்துக் கொண்டு ஜயாவைப் பற்றிய நினைவுகள் அவரைத் தாக்கியவாறு இருந்தன. மனசில் நினைப்பது எதுவும் எதிராளிக்குத் தெரியாத வண்ணம் மனிதனுக்குக் கடவுள் வாழ்க்கையைப் படைத்துத் தந்திருப்பதில் ஒரு கலைஞனின் சூட்சுமம் ஒளிந்திருப்பதாக அவர் நினைத்தார். கடந்த நான்கு நாட்களாக இந்த பாரம் நெஞ்சை விட்டு நீங்காமல் வலியை ஏற்படுத்திக் கொண்டு நிற்கிறது. கண்ணுக்கு முன்னால் ஏதோ இரண்டு நிமிஷத்துக்கு முன்னால்தான் நடந்தது போலக் காட்சிகள்…
வியாழக் கிழமை ராத்திரி, அவர் மைசூரிலிருந்து தாராவிடம் பேசும் போது சனிக்கிழமை காலையில்தான் வேலைகள் முடியும் என்றும், அன்று மத்தியானமோ அல்லது சாயங்காலமோ பெங்களூருக்கு வந்து சேர முடியும் என்று சொல்லியிருந்தார். ஆனால் வெள்ளிக் கிழமை காலை அவர் மைசூர் ஆபிஸில் உட்கார்ந்திருக்கும் போது அவருடைய பாஸிடமிருந்து போன் வந்தது. திடீரென்று மறு வாரம் போர்ட் மீட்டிங் இருப்பதாகவும், அதில் ஆடிட் கமிட்டியின் ரிப்போர்ட்டை விவாதிக்க வேண்டியிருப்பதால் , சனிக் கிழமை அவசரமாக ஆடிட் ஸப் கமிட்டி கூடுவதாகவும், எனவே அவர் சனிக்கிழமை பெங்களூரில் இருக்க வேண்டும் என்றும் டைரக்டர் சொன்னார்.
அவர் அடித்துப் பிடித்துக் கொண்டு பெங்களூருக்குக் கிளம்பினார். மைசூரிலிருந்து ஒரு தனி டாக்ஸியைப் பிடித்துக் கொண்டார். தனது உதவியாளனுக்குப் போன் செய்து, நாலரை மணிக்கு ஆபீஸுக்கு வந்து விடுவதாகவும், சில குறிப்பிட்ட அலுவலர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை வீட்டுக்குக் கிளம்பிப் போகாமல் இருக்கச் சொல்லும்படியும் உத்தரவிட்டார். இரவு வேலைகள் முடிய பனிரெண்டு அல்லது ஒரு மணி ஆகலாம்.
அவர் பெங்களூருக்குள் வரும் போது நான்கு மணி ஆகிவிட்டது. மூன்று மணி நேரப் பிரயாணம் , இன்னும் பெங்களூர் மைசூர் விரைவுப் பாதை முடியாமல், பத்து வருஷமாக இழுத்தடித்துக் கொண்டு நிற்கிறது. அரசியல்காரனின் ஊழலும் ஜாதியும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஒன்றரை மணி நேரத்துக்குள்ளேயே இந்தப் பயணம் முடிந்திருக்கும் . ஜனநாயகத்தின் வெற்றி என்பது மக்கள் தேவையில்லாமல் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களின் அதிகரிப்பில் இருக்கிறது என்று எரிச்சலுடன் நினைத்தபடி டாக்ஸிகாரனிடம் வீட்டுக்குப் போகச் சொன்னார்.
வாசல் கதவு சார்த்தியிருந்தது . மனைவியும் பெண்ணும் வெளியே எங்காவது சுற்றப் போகாமல் இருந்தால் உள்ளே இருப்பார்கள் . அவர்களை ஆச்சரியப்படுத்தலாம் என்று அவர் கால்சட்டைப் பையிலிருந்த சாவியை எடுத்துக் கதவை திறந்து கொண்டு ஓசைப் படாமல் உள்ளே போனார் . ஹால் வெறிச்சென்று இருந்தது .
அவர் தன் கையில் இருந்த சூட் கேசை தனது அறையில் போட்டு விட்டு முகம் கழுவிக் கொண்டு அலுவலகம் செல்லலாம் என்று நினைத்து அறையை நோக்கிச் சென்றார். அப்போது சமையல் அறையிலிருந்து ஏதோ சத்தம் மெல்லியதாக வருவது போலிருந்தது. யார் அங்கே இருப்பது என்று ஆச்சரியத்துடன் அவர் மெல்ல காலடி வைத்து நெருங்கினார்.
அவர் பார்த்த காட்சியில் மூச்சடைப்பு ஏற்பட்டது. ஜயாவைக் கட்டிப் பிடித்தபடி ஒரு வாலிபன் அவருக்கு முதுகை காட்டிக் கொண்டு நின்றிருந்தான்.
ஜயாவின் கண்கள் மூடியிருந்தன. இருவரும் இவ்வுலகப் பிரக்ஞையிலிருந்து விடுபட்டவர்கள் போல் இருந்தனர்.
கோகர்ணேசன் பின்னகர்ந்து சுவற்றைப் பிடித்துக் கொண்டார். நெஞ்சில் பெரும் இரைச்சல் எழுந்து சுழல்வதாக அவர் உணர்ந்தார். உடம்பு உதறிற்று. அவரை அறியாமலே, அவர் உடல் பின்னகர்ந்து சென்றது. வாசல் . கதவுக்குப் பின்னே சென்று வாசலை அடைத்தார். அவரை எதிர் கொண்ட தெரு அவரைப் பற்றிக் கவலைப் படாது வழக்கம்போல் முழு மூச்சுடன்இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
நான் ஏன் என் பெண்ணை அந்த எவனோ ஒருவனிடமிருந்து, பிடுங்கித் தூக்கி எறியவில்லை? ஏன் அந்த முகம் தெரியாத என் அனுமதி இன்றி என் வீட்டுக்குள் நுழைந்து என் பெண்ணை ஆக்கிரமிக்க முயன்ற கயவனின் மீது பாய்ந்து நொறுக்காமல் விட்டேன் ? எனக்கு பௌருஷம் இல்லையா? ஒன்றுக்கும் உதவாத கபோதி ஆகி விட்டேனா?
அவர் நொந்து கொண்டே வாசலில் நின்றார். அவருடைய கேள்விகள் அவரைச் சுற்றி வந்து வேறு கேள்விகளை இறைத்து பதில் தர முயன்றன . ஜயாவின் அனுமதி இல்லாமல் அந்த இன்னொருத்தன் அவளைக் கட்டிப் பிடிக்க சாத்தியமுண்டா ? இருவரும் சேர்ந்து அவரைத் தம் செய்கையால் கட்டிப் போட்டதுதானே உண்மை ? இது எவ்வளவு காலம் நடக்கிறதோ ? இந்த தாரா முண்டை எங்கே ஊர் சுற்றப் போய் விட்டாள்? வயதுப் பெண்ணைத் தனியாக விட்டு விட்டு ?
கோகர்ணேசன் பொருமிக் கொண்டே நின்றார். சட்டென்று ஆபிஸ் வேலை நினைவுக்கு வந்தது . சற்றுத் தள்ளி ரோடு ஓரத்தில் அவர் வந்திருந்த டாக்ஸி நின்று கொண்டிருந்தது. அவர் பார்த்த போது டிரைவர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டான். வாசலில் நின்று கொண்டிருக்கும் அவரை எவ்வளவு நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறானோ ? அவருக்குக் கூச்சமும் கோபமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டன. வாசல் கதவருகே சென்று அங்கிருந்த இருந்த காலிங் பெல் சுவிட்ச்சை அமுக்கினார். உடனடியாக யாரும் வரவில்லை. சில நிமிஷங்கள் கழித்து கதவைத்திறந்து நின்றாள் அவரது பெண் . ஒன்றுமே அறியாத முகமும்,சீரான உடையும் அவர் பார்வையில் பட்டன.
” நாளைக்குத்தானே அப்பா நீங்க வரதா இருந்தேள் ?’ என்று ஆச்சரியம் தொனிக்கும் குரலில் அவள் கேட்டாள்.
அவர் அவளைத் தீர்க்கமாகப் பார்த்தார் . அவளும், இமைக்காமல் அவரை நோக்கினாள். ஒரு கணம் அவருக்குத் தான் பார்த்தது எல்லாம் தன் பிரமையோ என்று சந்தேகம் ஏற்பட்டது.
” காப்பி எடுத்துண்டு வரட்டா ? ‘ என்று அவள் உள்ளே போனாள்.
அவர் தன் அறைக்குச் சென்று முகம் கழுவிக் கொண்டு கைப்பையை எடுத்துக் கொண்டார். அவர் ஊரிலிருந்து பெட்டி எதுவும் கொண்டு வராமல் வந்து நிற்கிறாரே என்று ஜயாவுக்குக் கேட்கத் தோன்றவில்லையே என்று நினைத்தார். அவள் கவலை அவளைத் தின்று கொண்டிருக்கக் கூடும். வந்தவனை கொல்லைப் புற வழியாக அனுப்பி விட்டு அல்லவா அவள் வந்திருப்பாள் வாசல் கதவைத் திறக்க.
அவருக்கு அவளைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அவள் காப்பி கொண்டு வருவதற்காக காத்திராமல் அவர் வீட்டுக்கு வெளியே வந்து டாக்ஸியில் ஏறிக் கொண்டார்…
அன்றிலிருந்து இந்த நிமிஷம் வரை ஒவ்வொரு நாளும், பொழுதும் அவரை ரணப் படுத்திக் கொண்டிருக்கும் விஷயம் தான் நடந்து கொண்ட முறை
சரிதானா என்ற மனதைப் பிடுங்கும் கேள்விதான். பார்த்தும், கேட்டும், படித்தும் அவரது உணர்வில் ஊறியிருந்தது , இம்மாதிரி சூழ்நிலையில், எந்த ஒரு தகப்பனும் கோபத்தின் உச்சிக்குச் சென்று அதன் பிரதிபலிப்பைத் தன் பெண்ணின் மேல் மிகவும் கடுமையாகக் காண்பித்திருப்பான் . நான் ஏன் அந்த மாதிரி செய்யவில்லை ? பௌருஷம் இழந்தவனைப் போல் நடந்து கொண்டது ஏன் ? இவரால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் பெண்ணும் நினைத்துத்தான் துணிச்சலாக நடந்து கொண்டாளா ? என்ன ஒரு அழுத்தம் ! பட்டப் பகலில் , அதுவும் சொந்த வீட்டில், ஒரு அந்நியனை அழைத்து அவன் கூட இழைந்து …. அவரால் தொடர்ந்து எண்ணிப் பார்க்க முடியவில்லை.அவளைத் தான் வளர்த்த முறைதான் சரியில்லை என்று தன்னையே நொந்து கொண்டார்…. .
மில் வந்து விட்டது. அவரைப் பார்த்து வாசலில் நின்ற செக்யுரிட்டி சல்யுட் அடித்தான். கோகர்ணேசன் அவனுக்குப் பதில் வணக்கம் செலுத்தி விட்டு உள்ளே சென்றார் .
தாரா கண்ணாடி முன் நின்று ஒரு முறை தன்னைப் பார்த்துக் கொண்டாள் . எல்லாம் சரியாகத்தான் வந்திருக்கிறது என்ற திருப்தி மனதில் ஏற்பட்டது . கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது மணி பனிரெண்டரை என்று காண்பித்தது. ஒரு மணிக்குப் படத்தைப் போட்டு விடுவார்கள் . இன்னும் கொஞ்சம் முன்னாலேயே அவள் கிளம்பிப் போயிருப்பாள்.
அவளது சிநேகிதி ரங்கம்தான் கடைசி நிமிஷத்தில் காலை வாரி விட்டு விட்டாள். தலையைப் போட்டு அப்படி ஒரு வலி காலையிலிருந்து இருப்பதாகச் சொல்லி கொஞ்ச நேரத்துக்கு முன்பு போன் பண்ணினாள் . ரங்கம் வந்திருந்தால் இருவரும் அவளுடைய காரிலேயே போயிருக்கலாம் .
இப்போது வேறு வழியில்லை . ஆட்டோ பிடித்துத்தான் தியேட்டருக்குப் போக வேண்டும். இந்த மனிதரும் இவ்வளவு சம்பாதிக்கிறார். ஒரு காரை வாங்கிப் போடுங்கள் என்று அவள் எவ்வளவோ தடவை மன்றாடிப் பார்த்து விட்டாள். கேட்க மாட்டேன் என்று அப்படி ஒரு பிடிவாதம் . நான்தான் வருஷத்தில் முக்கால்வாசி நேரம் வெளியூரில் இருக்கிறேன் . நீயும் ஜயாவும் போக வர ஆட்டோவுக்கு செலவழிப்பது கார் வைத்துக் கொண்டு செய்யும் செலவில் பாதிதான் ஆகும் என்று கணக்குப் பார்க்கிறார் . பெரிய ஆடிட்ட்ட்டர்.!
தாரா எரிச்சலுடன் வீட்டை விட்டு வெளியே வந்தாள். ஜயா ஸ்பெஷல் வகுப்பு என்று காலையிலேயே கிளம்பிப் போய் விட்டாள். சாயந்திரம்தான்
வருவேன் என்று கூறி விட்டுப் போயிருந்தாள் . கோகர்ணேசன் எப்போது மதுரையிலிருந்து வருகிறார் என்று தெரிய வில்லை. அப்படியே அவள் இல்லாத போது வந்தால் கூட அவரிடம் வீட்டுச் சாவி இருக்கிறது . வீட்டில் தனியாக இருக்கப் பிடிக்காமல்தான் தாரா சினிமாவுக்குக் கிளம்பினாள்.
யஷ்வந்த்பூர் சர்கிள் அருகே ஆட்டோ ஈஸியாகக் கிடைக்கும் என்று தாரா நடந்தாள். படம் ஆரம்பிக்க ஐந்து நிமிஷம் முன்னால் போக முடியும், உடனடியாக ஆட்டோ கிடைத்து விட்டால் என்று நினைத்தபடி வேகமாக நடந்தாள். கண்ணில் பட்ட ஆட்டோக்கள் அவளது சைகைகளுக்கு மறுப்புத் தெரிவித்த வண்ணம் அவளைக் கடந்து சென்றன .நேரம் ஆகிக் கொண்டிருந்தது. சர்கிள் அருகே வழக்கமாகக் காணப் படும் ஆட்டோக்கள் இன்று கண்ணில் படவில்லை. கடவுளே , இன்று பார்த்து என்ன ஆகிவிட்டது இந்த ஆட்டோகாரர்களுக்கு என்று அவள் நொந்து கொண்டாள்.
” ஹை ஆண்ட்டி ! ” அவளுக்குப் பின்னால் கடவுளின் குரல் கேட்டது.
தாரா திரும்பிப் பார்த்தாள்.
சந்திரநாத் . ஜயாவின் பிரண்ட் . பக்கத்து வீட்டில் இருக்கிறான். ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு , இறங்கினான் .
” சந்திரா, நீ எங்கே இந்தப் பக்கம் ? ” என்று அவனைக் கேட்டுக் கொண்டே அவள் ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று கண்களைச் சுழற்றினாள்.
” இங்க ஒரு ஆடிட் . முடிச்சுட்டு ஆபீஸுக்கு போயிட்டு இருக்கேன் ” என்றான். அவன் ஸி . ஏ . படிக்கிறான் . ” ஆமா நீங்க இங்க நின்னுகிட்டு…. ”
“ஆட்டோ தேடிண்டு வந்தேன். சனியன் , இன்னிக்கின்னு பாத்து ஒண்ணுமே கிடைக்க மாட்டேங்கிறது ” என்றாள்.
” நீங்க எங்கே போகணும் ? ” என்று அவன் கேட்டான்.
” காவேரி தியேட்டருக்கு ” என்று புன்முறுவல் செய்தாள் தாரா.
” நான் உங்களை டிராப் செஞ்சிரட்டா ? ” என்று சந்திரநாத் கேட்டான். ” அதைத் தாண்டித்தான் நான் வசந்த நகர் போணும் . ”
தாரா அவனது ஸ்கூட்டரில் ஏறிக் கொண்டாள் .
” எத்தனை மணி ஷோ ஆண்ட்டி ? ” என்று வண்டியைச் செலுத்தியவாறு சந்திரா கேட்டான்.
“இன்னும் பதினைந்து நிமிஷத்திலயாவது அங்க இருக்கணும் ”
” அடேயப்பா , ஒரு கல்யாணத்தையே பண்ணி முடிச்சுடலாம் அதுக்குள்ளே ” என்று சிரித்தபடி வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினான். ” உங்களுக்கு கஷ்டமா இருந்தா, என் தோளை பிடிச்சுக்கங்க ஆண்ட்டி ” என்றான் .
தாரா அவன் தோளில் ஒரு கையையும் , ஸ்கூட்டரின் பின் இருக்கையை ஒட்டி இருந்த இரும்புப் பிடியின் மீது ஒரு கையையும் வைத்து இறுகப் பிடித்துக் கொண்டாள் . எதிர் காற்றில் அவன் உடம்பிலிருந்த லாவெண்டர் மணம் அவள் நாசியை ஒட்டிச் சென்றது . சாலை ரிப்பேர் என்று இந்தியன் இன்ஸ்டிட்யூட் அருகே குண்டும் குழியுமாகச் சென்ற ஒற்றையடிப்
பாதையில், ஸ்கூட்டர் குலுங்கிச் சென்றது . அவன் ஜாக்கிரதையாக வண்டியை மெதுவே ஓட்டிச் சென்ற போதும் , உடல்கள் மோதுவதைத் தவிர்க்க முடியவில்லை .
சந்திரா , சொன்னபடி அவள் எதிர்பார்த்த நேரத்துக்கும் முன்பே , தியேட்டரை அடைந்து விட்டான்.
தாரா, அவனுக்கு நன்றி தெரிவித்தபடி இறங்கிக் கொண்டாள் .
‘ நீயும் வரயா சினிமாவுக்கு ? ” என்று கூப்பிட்டாள் .
” இல்லே ஆண்ட்டி. ஆபீஸுக்கு போணும். இந்தப் படம் எப்போ முடியும் ? ” என்று கேட்டான்.
” மூணு மணிக்கு முடிஞ்சுடும் . எதுக்கு கேக்கறே ? ‘ என்று கேட்டாள் தாரா .
” இல்லே. அந்த நேரத்துக்கு எனக்கு வேலை முடிஞ்சிருச்சின்னா , உங்களுக்கு திரும்பிப் போக மறுபடியும் லிப்ட் குடுத்திடறேன் ” என்று சிரித்தான் .
” ரொம்ப தேங்க்ஸ். நான் வெய்ட் பண்ணறேன் ” என்றபடி உள்ளே சென்றாள். சந்திரா ரொம்ப நல்ல பையன் . உதவி செய்வதற்கு மனம் வேண்டுமே.
அதுவும் இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு அவர்கள் வண்டியின் பின்னால் கூட்டிக் கொண்டு போக கேர்ல் பிரண்ட்ஸ் தயாராக நின்று கொண்டிருக்கும் போது , சந்திரா ஒரு வித்தியாசமான பையன் தான் என்று நினைத்துக் கொண்டாள். சாதாரணமாகவே அவளுக்கு, அவள் வயதுக்காரப் பெண்களையும் ஆண்களையும் விட , இளைஞர்களும், யுவதிகளும் தான் நெருங்கிய சிநேகமாக இருக்கிறார்கள். அதைப் பற்றிப் பரவலாக ஒருவித குமைச்சல் அக்கம் பக்கத்தில் உண்டு என்பது அவளுக்கும் தெரியும் . ஆனால் அதைப் பற்றி சீரியஸாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை. அவள் தன் மனதுக்கு நியாயமாக இருப்பதைத்தான் விரும்பினாள் .
கோகர்ணேசன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது, மூன்றரை மணி சூரியன் மேகத்துக்குள் பதுங்கிக் கொண்டு, குளிர் ஊரை ஆட்டிப் படைக்க உதவி செய்து கொண்டிருந்தான். இரண்டு நாட்களாக மதுரையின் உஷ்ணக் கொதிப்பில் உருகி விட்டிருந்த உடம்புக்கு இந்த பெங்களூர் சீதோஷ்ணம் இதத்தைத் தருவதாக இருந்தது. கமலாம்பாவின் கணவன் சொன்ன மாதிரி, மதுரையின் சீதோஷ்ணம் மூன்று வகைப் பட்டது. ஹாட் , ஹாட்டர் ,ஹாட்டஸ்ட் …! அவன்தான் அவரை ஏர்போர்ட்டில் கொண்டு வந்து விட்டான். மத்தியானம் கிளம்பிய விமானத்தில் பயணிகளை விட விமான ஊழியர்கள்தாம் ஜாஸ்தி இருந்தனர்.
அவர் ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறிக் கொண்டார். அவரது சூட்கேசைத் தவிர கூடுதலாக கமலாம்பாள் கொடுத்த பையும் சேர்ந்து கொண்டிருந்தது. தாராவுக்கு ரொம்பப் பிடிக்கும் என்று மதுரை மல்லிகையை ஒரு பெரிய பந்தாக வாங்கிச் சுருட்டித் தந்திருந்தாள் .கட்டையும் மீறிக் கொண்டு மல்லிகை , மணம் வீசி மூக்கைத் துளைத்தது. குழந்தைகளுக்கென்று நாகைப்பட்டினம் கடையிலிருந்து அல்வாவும், காராச்சேவும் வாங்கி அந்தப் பையில் போட்டிருந்தாள் . கமலாம்பா மிகவும் நல்லவள் என்று நினைத்தார். காலமும் , அவரது அம்மாவும் சதி செய்யாது இருந்திருந்தால் கமலாம்பா அவர் சொத்தாக ஆகி இருக்க வேண்டியது . ‘ சீ, என்ன நினைப்பு இது ! ” என்றுஅவர் தன்னையே கடிந்து கொண்டார் .
டாக்ஸி ஹெப்பால் பாலத்தின் மீது ஏறிக் கொண்டிருக்கும் போது , அவர் கைபேசியை எடுத்து வீட்டுக்குப் போன் செய்தார் . மைசூரிலிருந்து வந்த அன்று எதிர்கொண்ட அதிர்ச்சியை மறுபடியும் சந்திக்கும் மனத்திடம் எனக்கு இல்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். இந்த அழைப்பு , முன்கூட்டியே , அவரது வரவை வீட்டில் இருக்கும் ஜனத்துக்கு தெரிவித்து விடும் . ஆனால் தொலைபேசிமணி அடித்துக் கொண்டே இருந்தது . யாரும் இல்லை போலிருக்கிறது. ஜயா காலேஜுக்குப் போயிருக்கக் கூடும். ஆனால் தாராவுக்கு என்ன ஆகி விட்டது ? வெளியே போயிருக்கிறாளோ ?
அவர் கைப்பேசியைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார் . டாக்ஸி மேக்ரி சர்க்கிளைத் தாண்டி , காயத்ரி விகார் அருகே வரும் போது நின்று விட்டது. டிரைவர் , கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தான் . முன் சக்கரத்துக்குப் பக்கத்தில் நின்று காலால் உதைத்துப் பார்த்தான். பிறகு உதட்டைப் பிதுக்கிக் கொண்டே அவர் உட்கார்ந்திருந்த கதவு அருகே வந்து ” ஸார் , டயர் பஞ்சராயிருச்சி “என்றான்.
” என்னப்பா இது பேஜார் ” என்றபடி கோகர்ணேசன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் .பிதுக்கி விடப்பட்ட பற்பசை டியுப் போல முன்
சக்கரம் உருமாறிக் கிடந்தது. சாலையின் இரு பக்கங்களிலும் வண்டிகள் விரைந்த வண்ணம் இருந்தன . டாக்ஸி டிரைவர் , அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தினான். அவரது லக்கேஜுகளை ஆட்டோவின் பின் புறஇடைவெளியில் கொண்டு வந்து வைத்தான் . அவர் அவனிடம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு ஆட்டோவுக்குள் ஏறி அமர்ந்து கொண்டார்.
ஆட்டோ காவேரி தியேட்டர் வளைவில் திரும்பி மெயின் ரோடு வழியாகச் சென்றது . பாஷ்யம் சர்க்கிள் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டு
இருந்ததால் ஆட்டோவும் நின்றது . கோகர்ணேசன் பார்வை முன்னும் பின்னுமாக தெருவை அளைந்தது . ‘ சட் ‘டென்று அவர் பார்வை ஓரிடத்தில் குத்திட்டு நின்றது .தாரா ஸ்கூட்டர் ஒன்றில் உட்கார்ந்து கொண்டு, ஓட்டுபவனின் தோளைப் பற்றிக் கொண்டிருந்தாள். கறுப்பு நிற ரவிக்கையும் , சந்தன நிற புடவையும் அணிந்திருந்தாள் . இறக்கிக் கட்டிய ஸாரி , ‘ வெளே ‘ரென்ற இடையை எடுத்துக் காட்டியது . கண்களில் கறுப்பு நிற கூலிங் கிளாசும், உதடுகளில் புன்னகையும் அணிந்து, வயதின் சில வருஷங்களை அப்புறப் படுத்தியிருந்தாள் . அவர் கூர்ந்து கவனித்தபோது, வண்டி ஓட்டுபவன் அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் பையன் என்று தெரிந்தது .
அவர் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, சிக்னலில் பச்சை விழ , அந்த ஸ்கூட்டர் உறுமிக் கொண்டு கிளம்பிற்று. புறப்பட்ட வேகத்தில் தாரா முன்னே சரிந்து , பிறகு பழைய நிலைக்கு வந்ததை அவர் கவனித்தார். தன் உடம்பில் ஒருவித படபடப்பு ஊறிச் சென்றதை உணர்ந்தார். இரு கைகளின் விரல்களும் அவரது உத்திரவு இல்லாமலே , ஒன்றை ஒன்று நெரிக்க முயலுவது போல ஆக்ரோஷமாக வளைந்து நெளிந்தன.
ஆட்டோ சாங்கி குளத்தைத் தாண்டிச் சென்றது. முன்னால் சென்ற ஸ்கூட்டர் இப்போது கண்ணில் படவில்லை. அது விரைவாகச் சென்று விட்டது என்று அவர் எண்ணினார். எங்கே போய் விட்டு வருகிறாள் இவள் ! அதுவும் ஒரு வாலிபனோடு ! அவள் உட்கார்ந்திருந்த விதத்தைப் பாரேன் ! ஒரு வயது வந்த பெண்ணின் தாயாகவா அவள் டிரஸ் பண்ணிக் கொள்கிறாள் ?.
மனக் கண்ணில் , மறுபடியும் அந்த வெள்ளைச் சதை மின்னிற்று .
அவருக்கு அப்போதே தாராவின் கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் போல் கோபம் உண்டாயிற்று . நான் ஊரில் இல்லாத போது , அம்மாவும் பெண்ணும் என் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்களா ?
ஆடோ ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கிக் குதித்து ஏறியது. அவர் நிலைகுலைந்து சாய்ந்து தடுமாறி பழைய நிலைக்கு வந்தார். முதுகில் அடிபட்டது போல் மிகுந்த வலி ஏற்பட்டது. எலும்பு கிலும்பு உடைந்து போய் விட்டது போல அப்படி ஒரு வலி . ஆட்டோக்காரனை ஒன்றும் சொல்ல முடியாது . நகரசபைக் கபோதிகள் ஒரு கட்டுக்கும் அடங்காமல் ஊரைப் பாழ் படுத்திக் கொண்டிருக்கிறார்கள், பள்ளம் தோண்டுவதும், நிரப்புவதும், பணம் சம்பாதிக்கப் பெரிய தொழிலாகி விட்டது இப்போதெல்லாம் .
ஆட்டோ அவரது வீட்டை அடைந்த போது , கதவைத் திறக்கத் தாரா முயன்று கொண்டிருந்ததைப் பார்த்தார். சப்தம் கேட்டு திரும்பிப் பார்த்த அவள் அவரைக் கண்டதும் புன்னகை செய்தாள் . அவர் ஆட்டோக்காரனுக்கு பணம் கொடுத்து விட்டு சாமான்களைத் தூக்கிக் கொண்டு அருகில் வரும் வரை கதவருகே நின்றிருந்தாள்.
” பிளைட் சரியான டயத்துக்கு வந்து விட்டதா ? ஏன் ஆட்டோல வந்தேள் ? ” என்று கேட்டபடி அவர் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள் .
அவர் டாக்ஸி வழியில் நின்றதைச் சொல்லியபடி அவளைப் பின் தொடர்ந்தார் .
” நீ எங்கே வெளியே போயிட்டு வரயா ? ” என்று அவள் முகத்தைப் பார்த்தபடி கேட்டார் .
” ஆமா . ரொம்ப போரடிச்சது .அதான் சினிமாக்கு போயிட்டு வந்தேன் ” என்றாள் தாரா.
” தனியாவா ? ”
” ரங்கம் வரேன்னு சொல்லிட்டு , கடேசில தலைவலின்னு நின்னுட்டா .அதனால தனியாதான் போக வேண்டியதா ஆயிடுத்து ” என்றபடி உடைகளை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தாள் .
‘என்ன கதை விடுகிறாள் ! ‘ என்று அவர் நினைக்க ஆரம்பிக்கும் போதே , தாராவின் குரல் மீண்டும் கேட்டது . ” இங்கேர்ந்து போகறச்சே , ஆட்டோவே
கிடைக்கலை . அப்பன்னு பார்த்து பக்கத்தாத்து சந்திரா வந்து ஸ்கூட்டர்ல கூட்டிண்டு போனான் . சினிமா முடிஞ்சதும் வந்து மறுபடியும் இங்க வந்து இறக்கி விட்டுட்டு போனான். இந்தக் காலத்திலே யார் இந்த மாதிரி உதவி பண்றேன்னு வரா ? ரொம்ப நல்ல பையன். ”
” என்னமா ரீல் விடறா ! நீ ஏண்டி அவன் மேல சாஞ்சிண்டு , இழஞ்சிண்டு வந்தே ? எனக்கு கண்ணும் அறிவும் அவிஞ்சு போச்சுன்னு எல்லாரும் தீர்மானிச்சிண்டு ஆடறேளா ? ” என்று பொருமிக் கொண்டே உள்ளே போனார்.
‘சினிமா போனாளாம் , அவன் லிப்ட் குடுத்தானாம், அவன் சினிமாக்கு வரலையோ ? போனவன் எதுக்கு வேலை எல்லாத்தையும் விட்டுட்டு , மறுபடியும் லிப்ட் குடுத்து கூட்டிண்டு வரணும் ? ‘ என்று மறுகிக் கொண்டே
பாத்ரூம் குழாயைத் திறந்து விட்டார். கீழே கொட்டிய தண்ணீரில் கால்களைக் கழுவினார். ‘ அப்படி உனக்கு இருந்ததுன்னா , நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை அவளைக் கேளேன் ! ‘ என்று உள்குரல் குதறிற்று கோகர்ணேசன் தண்ணீரைக் கையால் பிடித்து , முகத்தில் அடித்துக் கொண்டார் . ‘ வெட வெட ‘ வென்று குளிர் உடம்பில் பரவிற்று . ‘ ஆனா ஒரு வேளை அவள் சொன்னதெல்லாம் உண்மையா இருந்ததுன்னா ? ‘ என்று இன்னொரு குரல் கேட்டது .
அவர் கதவின் பின்புறம் தொங்கிக் கொண்டிருந்த துவாலையை எடுத்தார் முகத்தைத் துடைத்துக் கொள்ளலாம் என்று . அது
கை நழுவிக் கீழே விழுந்தது . அவர் அதை எடுப்பதற்காகக் குனிந்தார்.
பிராணன் போகிற மாதிரி ,அப்படி ஒரு வலி முதுகில் எழுந்தது. அவர் தாங்க முடியாமல் முனகியபடியே கை இயல்பாக பின்முதுகைத் தடவ முயன்றது .
திடுக்கிட்டார் . பின்முதுகில் எலும்பு இருக்க வேண்டிய இடத்தில் அது இருக்கவில்லை போலிருந்தது .
- திருப்பூர் அரிமா விருதுகள்
- Mahabharatha Epic Retold in 3069 rhyming couplets
- கவிதையும் நானும்
- விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி
- நடு
- அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்
- தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா
- மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்
- தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆசியாவின் முதற் சாதனையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- வாழ்க்கை ஒரு வானவில் – 22
- இரண்டாவது திருமணம்
- சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
- தந்தையானவள் – அத்தியாயம் -2
- ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது: இன்குலாப் நேர்காணல்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 23 முடிவுக் காட்சி
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-7
- கதை சொல்லி விருதுகள்
- ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது
- இலக்கியச் சோலை- நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94
- தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !
- ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்
- தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு