ரங்கம்மா டீச்சர் பிடிவாதமாக மருத்துவ சிகிச்சை வேண்டாம் என கூறி விட்டார். எனவே ரங்கம்மா டீச்சரின் ஆப்த நண்பரும் அந்த நட்பின் காரணமாக இரண்டு தலைமுறை உறவினர்களின் பாராமுகத்தை எதிர் கொள்ள காரணம் ஆனவருமான மகாலிங்கம் வீட்டில்தான் ரங்கம்மா டீச்சரின் கடைசி தருணங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. சுவாசத்தில் சில நாழிகை தெளிவு ஏற்படும்.அந்த நேரம் டீச்சர் முகத்தில் ஒரு தெளிவு ஏற்படும்.அந்த சமயம் ரங்கம்மா டீச்சரின் முகம் பிரகாசமாகும்.” இப்பல்லாம் நிறைய மேடைகச்சேரி கொடுக்கிறாளே புடவை விளம்பரத்துகேல்லாம் வராளே அவளும் நானும் ஒண்ணா பாடம் கத்துண்டோம்.ஒண்ணாத்தான் குருகிட்ட சபாஷ் வாங்குவோம். நான் எம் ஏ பிஹெச்டின்னு இருந்துட்டேன்.அவ இப்போ உச்சத்துக்கு போயிட்டா. “ பழைய ஞாபகங்கள் மேலெழ ஒற்றை இழுப்பாக இழுப்பார். அவர்கள் இருவரும் பாடிய பந்துவராளி பழைய ஞாபகப் பிசிறுகளுடன் வெளிவரும். சீவன் இல்லாத மூச்சுக் காற்று தடுமாறும்
“ வேணாம் டீச்சர் “ என அருகில் அமர்ந்து ராஜி டீச்சரின் தலையை தடவி கொடுப்பாள். இரண்டுநாட்களாக ராஜிக்கு பாட்டு டீச்சர் வீட்டில்தான் ஜாகை. அலுவலகத்திற்கு மட்டம் போட்டுவிட்டு குருவிற்கு சிஸ்ருஷை. இரண்டு நாள் சுவாசம் தடுமாறும். கொஞ்சம் தேவலை என்றதும் மீண்டும் பழைய கதை. மருத்துவமனை வாசம். வெண்டிலேஷனில் செயற்கை சுவாசம். சிகிச்சையின் ஹிம்சை தாளாமல் வலுக்கட்டாயமாக வீட்டிற்குக் கூட்டி போக சொல்லிவிட்டார்.
“ ரெண்டு நாளா உன் பேரைத்தான் விடாம சொல்லிண்டிருக்கா. “ என்று கூறிய மகாலிங்கத்தின் மனைவி சாவித்திரிதான் மூன்று வேளைக்கும் உணவு கொடுத்து மலச்சுத்தம் செய்து வருகிறாள்.
“ இப்பல்லாம் சீரியலில் ஒரு பொண்ணு நடிக்கிறதே மிருதங்கமோ நாதஸ்வரமோ ஒண்ணு அவ கூட சின்ன வயசில என்கிட்டே பாட்டு கத்துண்டா. நல்ல வாய்ஸ் கர்நாடக சங்கீதம் முழுசா கத்துண்டா நன்னா வருவேன்னேன். கேட்கலை. சினிமா சீரியல்னு சீரழிஞ்சுட்டா. .ஒவ்வொருத்தர் வாழ்க்கை ஒவ்வொருமாதிரி. அவங்க அவங்க வாழ்க்கை அவங்கவங்க கையிலா இருக்கு ? “ என்பார் ஓரோர் சமயம். திணறும் வார்த்தைகளில் ஒரு சிறிய சஞ்சாரத்தில் பார்வையின் அசைவில் தன் முழுவாழ்க்கையையும் படம் பிடித்துக் காட்டுவார்.
ரங்கம்மா டீச்சரை அருணாதான் அறிமுகம் செய்து வைத்தாள். அப்பா இறந்தபின்பு வந்த பென்ஷன் பிஎப் , கிராஜுட்டி,சேமிப்பு, எல்ஐசி பாலிசி பணம் அத்தனையும் போட்டு கனகாவை விஜயராகவனுக்கு மணம் முடித்து வைத்த நேரம். மூத்த பெண்ணிற்கு திருமணம் ஆகவில்லையா என்ற கேள்வி எழக்கூடாது என்ற பேச்சு வரக்கூடாது என்பதற்காக கேட்ட சீரைஎல்லாம் கொடுத்து நடத்திய திருமணம். இன்னமும் மாப்பிள்ளை விஜயராகவன் ஊரிலிருந்து வந்தால் கொஞ்சமும் மாப்பிள்ளை முறுக்கு தளராமல் வலுக்கட்டாயமாக மரியாதையை வாங்கிச் செல்கிறான். எல்லாவற்றையும் கனகாவிற்கே செய்துவிட்டால் மற்ற தங்கைகளின் திருமணத்தை எப்படி நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. பெண்ணின் திருமணம் வலியை ஏற்படுத்தாமல் தன் சுவடை மறைத்துக் கொள்வதில்லை என்பது புரிந்தது. மனம் சோர்ந்திருந்த தருணம் அது. உடன் வேலை பார்த்த அருணாதான் பாட்டு சொல்லிக் கொடுக்கும் ரங்கம்மா டீச்சரிடம் கூட்டிக் கொண்டு போனாள். ஏற்கனவே ராஜிக்கு கொஞ்சம் பாட்டு வரும் என்று அருணாவிற்கு தெரியும்.
“ எனக்கு இசை பற்றிய ஆழமான அறிவு எதுவுமில்லை . “ என்றாள் டீச்சரிடம்.
“ பாடினா திரும்பி பாடுவியோ? “ என்றாள் ரங்கம்மா டீச்சர்.
“ ம் “
மாயாமாளவ கௌளையில் பாடம் ஆரம்பமானது.
“ இவ்வளவு நல்ல குரலை வச்சிண்டு பாடமாட்டேன்னு சொன்னியே ? “
“ சமஸ்கிருதமும் தெலுங்கும் எனக்கு அந்நிய பாஷைகள் “
“ இசைக்கு மொழி அவசியமே இல்லை “
“ மாசம் என்னால இசைக்குன்னு அதிகமா செலவு பண்ண முடியாது. “
“ எட்டு கிளாசுக்கு வெறும் இருநூறு ரூபாதான்”
“ நான் மாசா மாசம் ரெகரிங்டெபாசிட்டில் பணம் சேமிச்சு தீபாவளிக்கு புதுத் துணி எடுக்கும் சாதாரண மிடில்கிளாஸ் குடும்பம். நான்கு பெண்களும் , ஒரு தாயாரும் கொண்ட தகப்பனில்லாத வீடு என்னுடையது. “ என்றாள்.
அவள் சொல்லி முடிக்கவில்லை, ரங்கம்மா டீச்சர் அவள் அருகில்வந்து ராஜியை அணைத்தபடி “ நாங்களும் ஐந்து பெண்களும் ஒரு அம்மாவும் கொண்ட வீட்டில் இருப்பவர்கள் “ என்றது இன்றளவும் நினைவில் இருக்கிறது. அவர்கள் இருவர் இடையில் இப்படி ஒரு இணக்கம் ஏற்பட இசைமட்டும் ஒரு காரணமாக இருக்க முடியாது.
“ நாங்க மொத்தம் அஞ்சு பொண்ணுங்க. மூத்தவதான் படிப்பு வேலை இல்லாம கல்யாணம் பண்ணிண்டு போயிட்டா. நான் எம்ஏ மியூசிக் முடிச்சிட்டு பாட்டு டீச்சரா போயிட்டேன். என் வருமானத்தில்தான் மொத்த குடும்பமும் ஓடித்து. ஒரு தங்கை எஸ்எஸ்எல்சி முடிச்சிட்டு எல்ஐசியில் வேலை பார்த்தா. ஒரு தங்கை டிகிரி முடிச்சுட்டு பாங்க்ல ஜோலிக்கு போனா. கடைசி தங்கை எம்ஏ பிஹெச்டி முடிச்சிட்டு காலேஜில் லெக்சுரர் ஆனா. அப்பா செத்த உடனே அத்திம்பேர்தான் கைப்புல் வாங்கிண்டு காரியமெல்லாம் செஞ்சார். மறுவருஷத்திலிருந்து அதுவும் இல்லை. ஹிரன்யமா பண்ணிடுங்கோன்னார். புத்திரன் இல்லைன்னா பெத்தவங்க செத்த்ததுக்கு அப்புறம் பித்ரு லோகத்தில் தலைகீழா தொங்கணுமாம். கருட புராணம் சொல்றது. அன்னிக்கு தீர்மானம் பண்ணினேன் கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுன்னு. அடுத்த தலைமுறையிலாவது இதெல்லாம் மாறும்னு நம்பினேன். இல்லைங்கறதுக்கு சாட்சியா நீ வந்து நிக்கற. அதான் உன்னை பார்த்ததும் எனக்குள்ளே நெக்கு விட்டுடுத்து. உனக்கு நான் இலவசமாவே சொல்லிக் கொடுக்கறேன்.”
இப்படிதான் அவர்களுடைய நட்பு ஆரம்பமானது. சங்கீதம் ஒருபக்கம் வளர்ந்ததோடு டீச்சரிடம் எது குறித்து வேண்டுமானாலும் பேசலாம் என்பதால் அந்த நட்பு புதிய பரிமாணங்களை அடைந்தது.
பெண்கள் குறித்த மிகத் தெளிவான சிந்தனைகள் ரங்கம்மா டீச்சரிடம் உண்டு.
“ ஸெக்ஸ் குறித்த . ஐ மீன்………….. பாலுணர்வு குறித்த விவாதம் பண்ணும்பொழுது பெண்களோட சோஷியல் ஆஸ்பெக்டையும் மனசில் வச்சிண்டுதான் இங்கே விவாதம் பண்ணனும். ஆனா அப்படி யாரும் விவாதம் பண்றதா தெரியலை. என்னை மாதிரி உன்னை மாதிரி செக்ஸ்னா வெறும் புத்தக அறிவோட இருக்கும் பெண்கள் குறித்து யோசிக்கிறவா எத்தனை பேர் இருக்கா?” என்பார்.
“ டீச்சரோட சகோதரிகளுக்கு தகவல் கொடுத்துட்டீங்களா? “ என்றாள் உதவிக்கு உடனிருந்த மகாலிங்கம் சாரிடம்.
“ சொல்லிட்டேன். நான் மகாலிங்கம் பேசறேன்னு சொன்ன உடனேயே எல்லாரும் மொபைலை கட் பண்ணிட்டாங்க. கடைசி தங்கை மட்டும்தான் பதில் பேசினாங்க. அதுவும் எப்படிபட்ட பதில்? டீச்சர் என் பராமரிப்பில் இருக்கும் வரையில் டீச்சர் செத்தே போனாக் கூட வந்து பாக்க மாட்டாங்களாம்.” என்றார் மகாலிங்கம்.
மனதில் காயப்பட்டுக் கிடக்கும் ரங்கம்மா டீச்சரின் மெல்லிய பாதங்களை ராஜி மெதுவாக அழுத்திக் கொடுத்தாள். அவளால் செய்ய முடிஞ்சுது அது மட்டும்தான்.
“ வா “ என டீச்சர் கண்ணால் ஜாடை காட்டினார். அவர் தலைமாட்டின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“ இவன் இந்த மகாலிங்கம் இருக்கானே இவன் என்னைவிட அஞ்சு வயசு சின்னவன். ஆரம்பத்தில் தன் பெண்ணை பாட்டு கிளாசில் கொண்டுவிட வருவான். A to Z இவனோட எதை வேணுமானாலும் விவாதிக்கலாம். விஷய ஞானம் உள்ளவன். பாட்டு,விவாதம், பரஸ்பர நட்புன்னு இருந்தோம். இந்த நட்பு என் வீட்டுல எல்லார் கண்களையும் உறுத்தியது.ரெண்டு மூணு தடவை இவனையும் என்னையும் வெளில சேர்ந்து பார்த்துட்டாங்க. பீச்சு பார்க்கு இப்படி ரெண்டு மூணு இடத்தில் சேர்ந்து பார்த்துட்டா. சின்னவயசுல தாலியறுத்தவ, என்னை மாதிரி முதிர்கன்னிகள் நாதியத்தவங்க இவங்கள்ளாம் தெரிஞ்சவங்க வீட்டில் சின்ன குழந்தைகளுக்கு பீ,மூத்திரம் துடைச்சு விட்டுண்டோ, வீட்டு வேலை செஞ்சுகொடுத்துண்டோ வயத்தை கழுவிக்கணும்னுதான் எதிர்பார்க்கிறாங்க. அவளுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கும். உப்பு புளி போட்டு சாப்பிடும் உணர்ச்சிமயமான உடம்பு இருக்கும்னு யோசிக்க மாட்டாங்க. எனக்கு பிடிக்கலை. தனியா வந்துட்டேன். என் நண்பனாய் உதவி செய்பவனா மகாலிங்கம் இருக்கான். இது தப்பா? “ என்றார்.
அறுபது வயதை நெருங்கும் ரங்கம்மா டீச்சருக்கு ஏன் இப்படி ஒரு சுய விமர்சனம்? சுய பரிசோதனை?
“ இந்த மகாலிங்கத்துக்கு வயசு அம்பத்தஞ்சை தாண்டப்போறது. மூத்த பையன் என்ஜினியரிங் முடிச்சிட்டு ஜெர்மனியில் வேலையா இருக்கான். மகாலிங்கம் பெண்டாட்டி சாவித்திரியோட கண்ணைப் பாரு. சின்னதாகூட விகல்பம் பாராட்டாத கண். எதிர்ப்பு காட்டறதுன்னா இவதானே முதல்ல எதிர்ப்பு காட்டியிருக்கணும். இல்லியே. “
ரங்கம்மா டீச்சரின் சுவாசம் மீண்டும் சீர்கெடத் தொடங்கியதும் ராஜேஸ்வரி பயந்துவிட்டாள். முதலுதவியாக மார்பை அழுத்தமாக பிசைந்துவிட்டாள். லேசாக சுவாசம் சீர்பட்டது.
“ அவ்வளோ சட்டுன்னு போயிடமாட்டேன். உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். அதை சொல்லாம என் உசிர் போகாது ராஜி “ என்றார் டீச்சர்.
“ என்ன விஷயம் டீச்சர்? “
“ ஜங்க்ஷன் பக்கத்திலிருந்து மீரான்னு ஒருத்தி பாட வருவா. பதினொரு மணி பாட்ச். பார்த்திருப்ப. சதா சிரிச்ச முகமா இருப்பா. திருவையாறு உற்சவத்துக்குக் கூட வந்திருக்கா. முப்பத்திரண்டு முப்பத்திமூனு வயசிருக்கும்.உன்னை விட சின்னவதான் . “
“ ஞாபகம் இல்லை டீச்சர். “
“ போகட்டும் பரவாயில்ல.”என்ற டீச்சர் தொடர்ந்தார்.
“அவளோட பொறந்தவா அஞ்சு பேராம். அப்பா சாதாரணமா மில்லில் கணக்கு எழுதற ஜோலிதான். அவளோட அண்ணன் எல்லாருக்கும் மூத்தவன் தலைஎடுத்துதான் குடும்பமே முன்னுக்கு வந்ததாம்.இருபது வயசில் டிப்ளமா படிப்பு முடிச்சிட்டு துபாயில் சம்பாதிக்க போனவன் மொத்த குடும்பத்தையும் தூக்கி நிறுத்தினப்பறம்தான் மூச்சே விட்டிருக்கானாம். ஆனா அதுக்குள்ள தலை நரச்சு நாற்பது வயசு ஆயிடுத்தாம். உன்னை மாதிரி அவனும் இன்னும் ஒன்டிகட்டைதானாம். தங்கைகளுக்கெல்லாம் அண்ணா இப்படி தனியா இருக்கானேன்னு குத்த உணர்ச்சி. அவனைப் போட்டு கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு பிடுங்கப் போக இப்போ அவன் சம்மதிச்சிருக்கானாம். 35,36 வயசில் பொண்ணு இருக்கானு அந்த மீரா என்கிட்டே வந்து நின்னா . எனக்கு உடனே உன் ஞாபகம் வந்தது”
சிலீர் என்றது ராஜேஸ்வரிக்கு. அமானுஷ்யம் என்பது இதுதானா?
“ அவன் பேரூ என்ன டீச்சர்?” என்றாள் . நெஞ்சக் கூடு தேவையில்லாமல் வேகமாக அடித்துக் கொண்டது.
“ சத்தியமூர்த்தியோ சத்யசீலனோ என்னவோ …..ஹாங்…… சத்யான்கிற பெயரில் வாரபத்திரிகையில் கதையெல்லாம் எழுதறவனாம். “
சட்டென்று ராஜேஸ்வரி முகத்தை திருப்பிக் கொண்டாள். கண்களில் நீர் துளிர்த்தது.
“ நவீனமாயிட்டோம் நவீனமாயிட்டோம்னு புஸ்தகங்களில் வேணா சொல்லிக்கலாம். பெண்கள் விஷயத்தில் நாம இன்னமும் ரெண்டாயிரம் வருஷம் பின்தங்கித்தான் இருக்கோம் எத்தனை நவீன இலக்கியங்கள் ஒரு விடலைப்பையனோட ப்ரீ மாரியேஜ் செக்ஸ் அனுபவங்களை அகங்காரத்தோடையும் திமிரோடையும் பதிவு பண்ணியிருக்கு? ஒரு நவீன பெண் எழுத்தாளரால அப்படி பதிவு பண்ண முடியுமா? விடுவாளா? அதைக் கூட ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து பார்க்காம ஆணின் கீழ்த்தரமான பார்வையில் பார்த்துட்டு வக்கிரமான்னா விமர்சனம் பண்ணுவா?” ரங்கம்மா டீச்சர் முடிக்காமல் இருமினாள்.
“ ஸ்ட்ரைன் பண்ணிக்காதிங்கோ டீச்சர் “
“ குருஜி நாளைக்கி பேசிக்கலாம் “ என்று மகாலிங்கமும் சொன்னார்.
ஒரு கையசைப்பில் ரங்கம்மா டீச்சர் தன் மறுப்பை தெரிவித்தார். அவர் ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் போலிருந்தது.
“ எல்லா சமபந்தமும் பெண்களுக்கு பந்தம் மூலம்தான் வறணம்ன்னு இங்கே மொதல்லயே பண்ணி வச்சுட்டா. இவனுக்கும் எனக்கும் வெறும் நட்பு ரீதியிலான உறவு மட்டும்தான்னு என்னாலயே நிரூபிக்க முடியலியே. அப்படியே நிரூபிச்சாலும் யார் ஏத்துக்கப் போறா? நிராகரிப்பும் புறக்கணிப்பும் பெண்களை மேலும் மேலும் அச்சப்படுத்துகின்றன. ஆண் என்ற கொடையாளியிடம் கையேந்தும் பிச்சைக்காரியாகவே பெண்கள் இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. என்னுடையது மாதிரியான வாழ்க்கை உனக்கு அமையல. உன் வேவ் லெங்க்துக்கு ஏற்றா மாதிரி ஒருத்தன் வந்தான்னா அவனை ஏற்றுக் கொள்வதில் தவறு கிடையாது. முற்றிலும் பெண்களை ஏற்றுக் கொள்ளும் ஆண்கள் உருவாகப் போவதில்லை என்றாலும் ஒரு வசதிக்காவது ஓரளவு ஒத்துப் போகும் ஆணுடன் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதில் தப்பு கிடையாது. நீயும் என்னை மாதிரி ஆயிடாதே“ என்ற ரங்கம்மா டீச்சரின் கண்களில் சின்ன கண்ணீர் துளி பூத்தது.
ராஜேஸ்வரி சம்மதம் என்று தலையாட்டினாள்.
ரங்கம்மா டீச்சர் ராஜேஸ்வரியின் கைகளை ஆதரவாக தடவிக் கொடுத்தார்.
“ ஷண்முகப்பிரியாவில் ஏதாவது பாட்டு பாடேன் “ என்றார் அவளிடம்.
“ அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே
அருமையுடன் பெற்று பெருமையுடன் வளர்த்த
தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
தாழ்வெல்லாம் வருமோ ஐயா?”
கேட்டுக் கொண்ட ரங்கம்மா டீச்சர் மெல்ல கண்களை மூடினார். மீளா நெடுந் தூக்கத்தில் கொண்டு விடும் பாடல் அது என்பது தெரியாமல் ராஜேஸ்வரி பாடிக் கொண்டிருந்தாள்.
- சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்
- முரண்களால் நிறைந்த வாழ்க்கை
- இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞான மேதை ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்
- திறவுகோல்
- கோணங்கிக்கு வாழ்த்துகள்
- கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
- தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு
- தந்தையானவள் அத்தியாயம்-3
- தினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்
- பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…
- தேவதாசியும் மகானும் (2)
- அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்
- குளத்தங்கரை வாகைமரம்
- முத்தொள்ளாயிரத்தில் மறம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95
- பாவண்ணன் கவிதைகள்
- சுத்த ஜாதகங்கள்
- அழியாச் சித்திரங்கள்
- வள்ளுவரின் வளர்ப்புகள்
- வெண்சங்கு ..!
- பாரதியின் காதலி ?
- காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலி
- வாழ்க்கை ஒரு வானவில் – 23
- பொன்வண்டுகள்
- ஆங்கில மகாபாரதம்