தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு

This entry is part 1 of 25 in the series 5 அக்டோபர் 2014
cobra 
         
         குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அன்பு தெரியாமல் வளர்ந்துவிட்டேன். அது கிராமமாக இருந்ததால் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லை என்று கருதுகிறேன். அங்கு அப்பாவுடன் வளர்ந்த பிள்ளைகள் என்னைவிட எந்த  விதத்திலும் சொகுசாக இருந்ததாகத் தெரியவில்லை. விவசாய வேலை காலங்களில் பெரும்பாலான பெற்றோர் நாள் முழுதும் வயல் வெளியில்தான் கழித்தனர். இருட்டிய பின்புதான் வீடு திரும்புவார்கள். அதுவரை சிறு பிள்ளைகள் பள்ளி செல்வதும் தெருவில் விளையாடுவதுமாக இருப்பார்கள்.
          என்னுடன் விளையாடும் பால்பிள்ளையும், சிவலிங்கமும், அரசனும் மிகவும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இராஜகிளியும் கருணாகரமும் நான் தூண்டில் போடும்போது உடன் வருவார்கள்.
          நான் மட்டும் வீட்டில் வளர்ந்ததால் தாத்தாவுக்கு செல்லப் பிள்ளையாக வளர்ந்தேன். காலையில் எழுந்ததும் தாத்தா என்னை தேநீர்க் கடைக்கு கூட்டிச் செல்வார். வீட்டில் பால் கறந்து காப்பி அல்லது தேநீர் போடுமுன் நாங்கள் இருவரும் கருக்கலில் ஆற்றின்  அருகில் இருந்த தேநீர் கடைக்குச் சென்று விடுவோம். வீட்டு எதிரே உள்ள வேப்ப மரத்தில் குச்சிகள் ஒடித்து மென்றவாறு சென்று ஆற்றில் வாய் கொப்பளிப்போம். இது எங்களின்  அன்றாட வழக்கமாகும்.
           தாத்தா எப்போதும் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார். இரவில் அங்குதான் கயிறு கட்டிலில் படுத்து உறங்குவார்.
          நான் அம்மாவுடன் நடு அறையில் படுத்து தூங்குவேன். அப்போதெல்லாம் இரவில் சீக்கிரமாக ஊர்  அடங்கிவிடும். தெரு விளக்குகள் இல்லாத காலமாதலால் நிலாவெளிச்சம் இல்லாவிட்டால் கும்மிருட்டாகும். அதை வைத்து நிறைய பேய்க்  கதைகள சொல்வார்கள். இரவில் அதைக் கேட்க பயமாக இருக்கும். அம்மா கூட எனக்கு இரவில் கதை சொல்லிதான் தூங்க வைப்பார். அவற்றில் ” தூங்க மூஞ்சி ” கதை இன்றும் அப்படியே நினைவில் உள்ளது. அது ஒரு வேடிக்கையான நகைச்சுவைத் தொடர்கதை. நான் கதை கேட்டபடி தூங்கிவிட்டால் அடுத்த நாள் இரவில் கதை தொடரும்.
          அனால் இரவின் இருட்டும், பேய்க் கதைகளையும்விட என்னை அதிகம் பயமுறுத்தியவை பாம்புகள்தான். பூரான்களும் தேள்களும் அதிகம் பார்க்கலாம் என்றாலும் அவற்றை எப்படியாவது அடித்துவிடலாம். அனால் பாம்புகள் அப்படி அல்ல. அவற்றை எவ்வளவுதான் சுற்றி வளைத்தாலும் நம்மை ஏமாற்றி விட்டு ஓடி மறைந்து விடும். பிறகு கண்டு பிடிப்பது  சிரமம். தேடுவதும் ஆபத்தானது. அதிலும் வைக்கோல் போரினுள் நுழைந்துவிட்டால் எங்கு ஒளிந்திருக்கும் என்பது தெரியாது.
         சில சமயங்களில் பாம்பாட்டி வருவான். அவன் நிறைய பாம்புகளை கூடையில் வைத்து தலையில் சுமந்து வருவான். எங்கள் தோட்டத்தில் கூட மகுடி ஊதி பாம்புகள் பிடித்துள்ளான். அப்போது மூங்கில் புதரிலிருந்தும் வீட்டுச் சுவர் பொந்திலிருந்தும் பாம்புகள் வெளியேறும். அதைப் பார்த்தபின்பு வெளியில் செல்லவும் பயமாக இருக்கும். வீட்டுச் சுவரில் எலிகள் பொந்துகள் இருந்ததால் அவற்றில் பாம்புகள்  இருக்கும் என்ற பயமும் உண்டாகிவிட்டது. கிராமத்தில் இருண்ட இரவுகளை வீட்டிலும் வெளியிலும் பாம்பு பயத்துடன்தான் நாங்கள் கழித்துள்ளோம்.
           அப்படியே தப்பித் தவறி பாம்பு கடித்துவிட்டால்.உயிர் போவதை யாராலும் தடுக்க முடியாது நான்கு கிலோ மீட்டரில் உள்ள குமராட்சியில் அவ்வளவு மருத்துவ வசதி இல்லை. அங்கு சென்றாலும் சாவுக்குதான் காத்திருக்க வேண்டும். பத்து கிலோமீட்டரில் உள்ள சிதம்பரம் போகும் வழியிலேயே உயிர் போய்விடும்! கிராமப் புறங்களில் பாம்புக் கடியால் உயிர் இழந்தவர்கள் ஏராளம்!
          வயல் வெளியில் வரப்புகளில் நடந்து செல்லும்போதும் பாம்பு கடித்து பலர் இறந்துள்ளனர். ஒரு முறை தாத்தா வரப்பில் பார்த்த ஒரு பெரிய நல்ல பாம்பை கழியால் அடித்துக்  கொன்று அதை வீட்டுக்குக்  கொண்டு வந்தார். அதைப் பார்க்கவே பயமாக இருந்தது. அன்று அவரைக் கடித்திருந்தால் தாத்தா அன்றே இறந்திருப்பார். இருட்டிய பிறகு வயலிலிருந்து வரப்பு வழியாகத் திரும்புபவர்களுக்கு இந்த ஆபத்து எப்போதும் உள்ளது. அதுபோன்றே இரவில் வயலுக்கு நீர் பாய்ச்சச்  செல்வோர், காவலுக்குச் செல்வோர் இருட்டில் நடந்து செல்வோர் அனைவருமே இந்த ஆபத்தை எதிர்நோக்கவே வேண்டியிருந்தது.
          வெளியில் மட்டுமே இந்த பாம்பு தொல்லை என்பதில்லை. மண் வீடுகளில் நெல் சேகரித்து வைத்திருப்பதால் எலிகள் அவற்றைத் தேடி வருவதோடு வீட்டுச் சுவர்களில் பொந்துகள் துளைத்து வாழும். எலிகளைப் பிடிக்க பாம்புகள் வருவது இயல்பானது. அந்த பொந்துகளில் பாம்புகள் தஞ்சம் புகுந்தால் அவ்வளவுதான். பாம்புகளுடன்தான் வீட்டில் வாழ்ந்தாக வேண்டும்.
          எங்கள் வீட்டிலும் நல்லப் பாம்பின் நடமாட்டம் இருந்துள்ளது. வீட்டின் ஒரு அறையில்தான் பெரிய பத்தாயம் வைத்திருந்தோம். அது போதாதென்று சுவர் ஓரத்தில் அடுக்கு அடுக்காக மண் பானைகள் வைத்திருப்பார் அம்மா.  அவற்றில் அரிசி , பாசிப்பயிர், உளுந்து, பருப்பு  புளி, மிளகாய், உப்பு, கருவாடு முதல் சமையலுக்கான அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக வைத்திருப்பார். வீட்டில் இருக்கும் நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்து அந்த பானைகளை தூக்குவதும் வைப்பதுமாகவே இருப்பார். அப்போது பானைகள் ஒன்றோடொன்று மோதும்போதும் உரசும்போதும்  உருட்டும் ஓசை எழும். அந்த பானைகளுக்குள்தான் பணமும் வைத்து சேகரிப்பார் என்பதும் உண்மைதான்! அதனால் பணம் பத்திரமாக உள்ளதா என்பதை அன்றன்று நிச்சயப்படுத்திக் கொள்வார்.
            அந்த பொக்கிஷ அறை எப்போதும் இருட்டாகவே இருப்பதால் எனக்கு அதனுள் நுழையவே பயமாக இருக்கும். அந்த அறைக்குள் நிச்சயம் பாம்பின் நடமாட்டம் உள்ளது என்று நான் பயந்திருந்தேன். அம்மாகூட அப்படித்தான் என்னிடம் சொல்லி எச்சரித்துள்ளார். காரணம் அவர் அந்த பாம்பை பார்த்துள்ளார். அதனால் நான் அந்த அறைக்குள் நுழையவே மாட்டேன்.
          ஆனால் வீட்டில் வாழ்ந்த அந்த நல்ல பாம்பு கொஞ்சமும் நன்றி இல்லாமல் அம்மாவையே கடித்து விட்டதாம்!  நான் ஒரு வயது குழந்தை என்பதால் என்னைக்  கடிக்காமல் விட்டு விட்டதாம் எங்கள் வீட்டு  நல்ல பாம்பு.
          வழக்கம்போல் நடு அறையில் தரையில் ஒரு வயது குழந்தையான என்னை பக்கத்தில் படுக்க வைத்துள்ளார் அம்மா.விடியல் காலையில் அவர் எழ காலை அசைத்தபோது பாம்பின் மேல் பட்டுவிட்டது. கோபத்தில் அது பட் டென்று அம்மா காலில் போட்டுவிட்டது ( கடித்து விட்டது ) வலியால் காலை உதறிய அம்மா பாம்பு தப்பி ஓடுவதை உணர்ந்தார்.
         இரவில் அந்த பாம்பு அறைக்குள் புகுந்து ஆராய்ந்துவிட்டு எங்களுடன்தான் படுத்திருந்துள்ளது. நல்ல பாம்பு என்பதால் எங்களை குறிப்பாக குழந்தையான என்னை காவல் காத்திருக்கலாம்.
         அம்மாவின் கூக்குரலில் ஊர் கூடிவிட்டது. பாம்பு கடித்தது நிச்சயமாகி விட்டது. வாயில் நுரை தள்ளியது. நினைவை இழந்து கொண்டிருந்தார் நாட்டு வைத்தியர் வந்து பார்த்துவிட்டு விஷம் தலையில் ஏறிவிட்டது, இனி பிழைப்பது சிரமம் என்று சொல்லி விட்டார். அம்மா சாகப் போகிறார் என்று பெண்கள் ஒப்பாரி வைக்கத் துவங்கி விட்டனர்.  உடன் வண்டி கட்டி சிதம்பரம் கொண்டு செல்லும் வரை உயிர் இருக்காது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். கைவிடப்பட்ட நிலை!
          அப்போது அண்ணனுக்கு வயது எட்டு. அவர் தாத்தாவுடன் திண்ணையில் படுத்திருந்தார். அம்மாவின் நிலை உணர்ந்து கதறி அழுதவர் திடீரென்று அந்த இருட்டு அறைக்குள் ஓடினார். பானைகளை ஒவ்வொன்றாக இறக்கி வைத்து ஒரு பானையில் அம்மா வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு செட்டியார் கடைக்கு ஓடினார். அங்கு கையில் வைத்திருந்த அவ்வளவு பணத்தையும் செட்டியாரிடம்  தந்து மெழுகுவர்த்திகள் வாங்கிக் கொண்டார். நேராக அற்புதநாதர் ஆலயத்துக்கு ஓடினார். அப்போதுதான் உபதேசியார் ஆலயக் கதவைத திறந்துள்ளார். உள்ளே ஓடிய அண்ணன் பீடத்தண்டை அத்தனை மெழுகுவர்த்திகளையும் கொளுத்தி வைத்து விட்டு முழங்காலில் நின்று வெகு நேரம் அம்மாவுக்காக ஜெபம் செய்துள்ளார்!
          அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்ததாம்!
          வீட்டில் மயங்கி கிடந்த அம்மா கண் விழித்து எழுந்து விட்டாராம்!
          அற்புதநாதர் அம்மாவை அற்புதமாக காப்பாற்றிவிட்டார்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *