செண்பகத்திற்கு அநதப் பெண்கள் பேசியது எதுவும் அவ்வளவாகப் புரியவில்லை. பட்டணத்திலிருந்து வந்திருந்தார்கள். காலேசில் படிக்கிறார்களாம்; ஏதோ ஆராய்ச்சி என்றும் அதற்கான புள்ளி விபர சேகரிப்பு என்றும் என்னன்னவோ புரியாத வார்த்தைகள் எல்லாம் பேசினார்கள். பாதிவழியில் படிப்பை நிறுத்தும் பெண்கள் பற்றி விவரங்கள் சேகரிப்பதாகவும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்கள் படிப்பை நிறுத்துகிற சூழல் பற்றியும் அறிந்து கொள்ள ஆசைப் படுவதாகவும் அதற்காக அவளைப் பற்றியும் அவளின் அக்கா கனகவல்லி பற்றியும் சொல்லச் சொன்னார்கள்.
செண்பகத்திற்கு அவளின் அக்கா பற்றி நினைப்பதற்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம். அவளுக்கு கண்கள் பொங்கி விட்டது. அவளின் அக்கா பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் இவளுக்கு ஆசையாய்ப் பிடித்து வந்து தந்த பொன்வண்டின் ஞாபகமும் தவிர்க்கவே முடியாமல் நெஞ்சுக் குழிக்குள் திரண்டு விடும்.
அப்போது செண்பகம் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுடன் படிக்கும் முனுசாமி ஒரு பொன்வண்டைக் கொண்டு வந்து காட்டி, சேக்காளிகளுக்கு மத்தியில் பெரிய வஸ்தாது மாதிரி தலையை நிமிர்த்திக் கொண்டு அலைந்த போது தான் இவளுக்கும் ஒரு பொன்வண்டை வளர்க்க வேண்டுமென்று ஆசை வந்த்து.
காட்டுக்கு வேலைக்குப் போகும் அம்மாவிடம் தனக்கொரு பொன்வண்டு பிடித்து வந்து தரும்படி அவள் முறையிடத் தொடங்கினாள். ஆனால் அத்தனை சுலபமாய் அவளுக்கு பொன்வண்டு கிடைத்து விடவில்லை. அவளின் அம்மா சாக்குபோக்குச் சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள்.
“கூலி வேலைக்கு போறவ நான், காட்டுக்காரி சொல்ற வேலையச் செய்வனா, உனக்கு செடிக்கு செடி உக்காந்து பொன்வண்டு தேடுவனா…?” என்று சிடுசிடுத்தாள்.
இவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் சமயங்களில் “இப்பல்லாம் பொன்வண்டுக எங்கடி அலையுதுக…. ஓடைக்கரை மரங்கள எல்லாம் ரோடு போடுறேன்னு சொல்லி வெட்டிட்டானுங்க….. சர்புர்ன்னு பஸ்களும் கார்களும் லாரிகளும் போய்க்கிட்டு இருக்குற இரைச்சல்ள பொன்வண்டுக எப்படி கண்ணுல ஆப்புடும்…?” என்று சமாதானமாய்ப் பேசினாள்.
காட்டுவேலைக்குப் போகிற அம்மாவால் பிடித்து வர முடியாத பொன் வண்டை தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போகிற அவளின் அக்கா பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
”நீ எப்புடிக்கா இதைப் போயி புடிச்ச….” என்று செண்பகம் ஆச்சர்யம் காட்ட, “நான் தேடிப் போயெல்லாம் புடிக்கலடி; இன்னைக்கி இராத்திரி வேலை முடிஞ்சு வீட்டுக்குத் திரும்பி வர்றப்ப, இது வழிதவறி எங்க பஸ்ஸுக்குள்ள வந்துருச்சு; பொட்டியாருக்கு வெளியில போக வழி தெரியல; ஆளாளுக்கு சூ சூன்னு வெரட்டவும் மெரண்டு போயி உள்ளயே சுத்தி சுத்தி வந்துச்சு; ஒரு சமயம் என் சீட்டுக்கு எதுத்தாப்புல உக்காந்துருந்த கற்பகத்தோட தலையில உக்காந்துச்சு; அப்பத்தான் உன் நெனப்பும் வந்துச்சு; நீ தான் அம்மாட்ட கொஞ்ச நாளா பொன்வண்டு கேட்டு தொந்தரவு பண்ணிக்கிட்டுருக்கீயில்ல….. சரின்னு லபக்குன்னு புடிச்சு தூக்குவாளிக்குள்ள போட்டுக் கொண்டு வந்தேன்….” என்றாள்.
நல்ல பெரிய பொன்வண்டு. அப்படி ஓர் அழகாய் இருந்தது. பச்சைவைரம் மாதிரி கனத்த இறக்கைகள்; அதன் மீது விண்மீன்களைத் தூவிவிட்டது மாதிரி வெளிச்சம் சிந்தும் புள்ளிகள்; கனத்த இறக்கைகளுக்குள் கண்ணாடித் தாள் மாதிரி மெல்லிய உள் சிறகுகள். பார்க்கப் பார்க்க அவளுக்கு அலுக்கவே இல்லை. அது வந்த தினத்திலிருந்து செண்பகத்தின் வாழ்க்கை முறையே மாறிப் போனது.
நாளெல்லாம் பொன்வண்டோடேயே பொழுதைக் கழித்தாள். கோலிக்குண்டு, கிளீத்தட்டு, கண்ணாமூச்சி, கிட்டிப்புள், தொட்டு விளையாடுவது, மெல்லப் போய்க் கிள்ளிவா… என்று எந்த விளையாட்டுக்கும் போவதில்லை. எப்போதும் பாவாடை மடிக்குள்ளேயே அதைப் பத்திரப் படுத்தி எங்கு போனாலும் அதையும் சுமந்து கொண்டு அலைந்தாள். பள்ளிக்குக் போகும் போதும் புத்தகப் பைக்கட்டுக்குள் போட்டு கூடவே எடுத்துக் கொண்டு போனாள்.
அக்கா அவள் வேலை செய்யும் இடத்திலிருந்து கொண்டு வந்து கொடுத்திருந்த அழகும் வேலைப்பாடுகளும் நிறைந்த விசாலமான தீப்பெட்டிக்குள் பொன்வண்டை போட்டு வைத்திருந்தாள். மல்லாக்கப் படுத்துக் கொண்டு தன் மேல் பொன்வண்டைப் போட்டு அது மெல்லிய கால்களால் நடந்து போவதை கூச்சமும் சிலிர்ப்புமாய் ரசித்தாள்.
மாலைப் பொழுதுகளில் காடு கரைகளில் அலைந்து, பிஞ்சுக் கருவேல இலைகளாகப் பறித்துக் கொண்டு வந்து தீப்பெட்டியை நிறைத்தாள். அவளின் கைகளில் எல்லாம் முட்கள் கீறிய தடங்கள் இரத்தக் கோடுகளாய் நிறைய இருப்பதைப் பார்த்து அவளின் அம்மா கூட “ஏண்டி இப்படி பிசாசு மாதிரி காணாத்தக் கண்டுக்கிட்டது மாதிரி அலையுற?” என்று சத்தம் போட்டிருக்கிறாள். தீப்பெட்டிக்குள் இவள் நிறைத்த இரை குறையாத நேரங்களில் இவளும் சரியாய் சாப்பிடாமல் பட்டினி கிடந்தாள்.
எல்லோருக்கும் பொன்வண்டை பெருமையாக்க் காட்டினாள். ஆனால் தொட்டுப் பார்க்க மட்டும் யாரையும் அனுமதிப்பதில்லை. அதையும் மீறி அவள் அசந்திருந்த நேரமாய்ப் பார்த்து பொன்வண்டை தொட்டு விட்டு ஓடிய அமுதாவைத் துரத்திப் போய் ஆழமாய் வலிக்க கிள்ளி விட்டு வந்தாள். அமுதாவின் அம்மா அழுத கோலத்தோடு அவளையும் இழுத்துக் கொண்டு இவளின் அம்மாவிடம் சண்டைக்கு வந்து விட்டாள். அன்றைக்கு செண்பகத்திற்கு செமத்தையாய் அடி கிடைத்தது. இவள் சொல்கிற எதையும் அவள் கேட்பதாகவே இல்லை. அப்புறம் அமுதாவிடம் காய் விட்டு கொஞ்ச நாள் பேசாமலிருந்தாள்.
அவளின் பொன்வண்டு முட்டைகள் இட்ட போது அவளுக்கு தலைகால் புரியவில்லை. ஊரையே கூவி அழைத்துக் குதூகலித்தாள். கனகவல்லி அக்கா இதைப் பிடித்து வரும் போதே அது வயிற்றில் முட்டைகளுடன் தான் வந்திருக்கும் போல. அதுதான் அவளிடம் வந்த கொஞ்ச நாளிலேயே முட்டைகள் இட்டுவிட்டது.
அதன் முட்டைகள் தான் எத்தனை அழகு! அதலைக்காய் விதைகள் மாதிரி அவள் விரும்பிச் சாப்பிடும் பல்லி மிட்டாய்கள் மாதிரி குட்டி குட்டியாய் இருந்தன. அமுதாவும் முட்டைகளைப் பார்ப்பதற்காக இவளிடம் வலிய வந்து பேசினாள். போனால் போகட்டுமென்று பெருந்தன்மையாக இவளும் பழம் விட்டுக் கொண்டாள். புதிய குஞ்சுகள் வந்ததும் அவற்றைப் போட்டு வளர்ப்பதற்கு வேண்டுமென்று தெருத்தெருவாய் அமுதாவுடன் அலைந்து வெற்றுத் தீப்பெட்டிகள் சேகரித்தாள்.
”குஞ்சு பொரிச்சதும் எனக்கொரு குஞ்சு குடுடி; நாங்களும் வளர்க்கிறோம்…..” என்று கேட்டவர்களுக்கெல்லாம் “ஆகட்டும் பார்க்கலாம்….” என்று கெத்தாய்ச் சொல்லி இன்னும் கம்பீரமாய் நடை போட்டாள். முட்டைகளின் மீது சுண்ணாம்பு தடவி வெயிலில் வைத்தால் வெடித்து குஞ்சு வருமென்று அவளின் தோழிகள் சொன்னதை அவள் நம்பவில்லை.
அப்படி எல்லாம் செய்வதற்கு அவள் தயாரில்லை. முட்டை தானாகவே உடைந்து குஞ்சு வரும் போது வரட்டுமென்று காத்திருந்தாள். ஆனால் குஞ்சு பொறிப்பதற்கு முன்பாகவே அந்த துயர சம்பவம் நேர்ந்து விட்டது.
அன்றைக்கு தீபாவளி. செண்பகத்தின் அம்மா அவளை இழுத்து இலேசாய் சுடவைத்த எண்ணையை உடம்பெல்லாம் பூசிவிட்டுக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டில் வெடித்த வெடியின் ஒரு சிறு பொறி அவள் பொன்வண்டைப் போட்டு வைத்திருந்த தீப்பெட்டியின் பக்கச் சுவரில் விழுந்ததில் தீப்பிடித்து தீப்பெட்டியோடு சேர்ந்து அவளின் பொன்வண்டும் கருகிப் போனது.
நல்லவேளையாக அக்காள் அதைப் பார்த்து உட்னே எரிந்து கொண்டிருந்த தீப்பெட்டியின் மீது சாக்கைப் போட்டுத் தீயை அணைத்தாள். அல்லது தீ பரவி அவர்களின் குடிசையையும் எரித்திருக்கும். அவளால் அதைத் தாங்கவே முடியவில்லை. அன்றைக்கு முழுவதும் அழுது கொண்டே இருந்தாள். புத்தாடை அணியவில்லை; பட்டாசு வெடிக்கவில்லை. அவளின் வயதொத்த பிள்ளைகளுடன் விளையாடவும் போகவில்லை.
”ஏண்டி நல்ல நாளும் அதுவுமா இப்படி பேயடிச்சது மாதிரி உக்காந்து அழுதுக்கிட்டுக் கெடக்கவ; உங்க அப்பன் செத்ததையே தாங்கிக்கிட்டு தாண்டி வந்துட்டோம்…. இதெல்லாம் பெரிய சாவா என்ன? அந்த பொன்வண்டு சனியன தூக்கிக் கடாசிட்டு எழும்பிப் போயி பிள்ளைகளோட விளையாடுடி…..” என்று அம்மா சத்தம் போட்டாள்.
அவள் சொல்வது சரிதான். இரண்டு வருஷங்களுக்கு முன்பு அவளின் அய்யா இறந்த போது கூட அவள் இத்தனை துக்கமாய் உணர்ந்ததில்லை. அவள் சந்தித்த முதல் மரணம்; மரணத்தின் இழப்பு அந்த வயதில் அவளுக்கு உறைக்கவில்லை. அம்மாவும் அக்காளும் தெருவில் புரண்டு புரண்டு அழுவதைப் பார்த்து அவளும் கொஞ்சம் அழுதாள். அவ்வளவுதான்.
அய்யாவின் மரணம் வீட்டில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. பசியும் பட்டினியும் ஏற்கெனவே கொஞ்சம் பழகியது தான் என்றாலும் அய்யா செத்த பின்பு அது ரொம்பவும் உக்கிரமாய் குடும்பத்தைப் புரட்டி எடுத்த்து. தினப்படி ஒருவேளை கஞ்சி கிடைப்பதற்கே அம்மா பெரிய பிரயத்தனங்கள் எல்லாம் செய்ய வேண்டி இருந்த்து.
அவர்களின் கிராமத்திற்கு வந்த முதல் பஸ், சாத்தூர் தீப்பெட்டி ஆபிஸிலிருந்து தான் வந்தது. அப்போது செண்பகத்தின் அய்யா இறந்து போய் கொஞ்ச நாட்களாகி இருந்த்து ஏஜெண்டுகள் வீடுவீடாய் அலைந்து தீப்பெட்டி ஆபிஸ் வேலைக்கு ஆள் பிடித்தார்கள்.. கனகவல்லி அக்காள் அப்போது ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள்.
வீட்டிற்கு வந்த ஏஜெண்ட் அம்மாவிடம் பலவிதமாய் நைச்சியமாய் ஆசைகாட்டிப் பேசி முன்பணமும் குடுத்து அக்காவை தீப்பெட்டி ஆபிஸிற்கு அனுப்ப சம்மதிக்க வைத்து விட்டார். கனகவல்லி அக்கா பள்ளிக்குப் போவதை நிறுத்தி விட்டு தீப்பெட்டி ஆபிஸுக்கு வேலைக்குப் போகத் தொடங்கினாள். இதைக் கேள்விப்பட்டு பள்ளியிலிருந்து தலைமை ஆசிரியர் வீட்டிற்கு வந்து விட்டார்.
”நல்லாப் படிக்கிற பொண்ணும்மா; இப்படி பள்ளிக் கூடத்துக்கு அனுப்பாம தீப்பெட்டி ஆபீஸுக்கு அனுப்புறீங்களே….!” என்று ஆதங்கப் பட்டார்.
” எனக்கு மட்டும் ஆசையா வாத்தியாரே! அவளோட அய்யா அவள படிக்க வைக்க பெரிய கனவுகள் எல்லாம் கண்டுக்கிட்டிருந்தார்; ஆனா இப்படி பாதி வழியில செத்துப் போயிட்டாரே! நான் என்னத்த செய்றது? நான் ஒருத்தி காட்டு வேலை செஞ்சு கொண்டு வர்ற கூலியில மூணு பேர் சாப்பிட முடியலயே….. அதான் வேற வழியில்லாம இவள தீப்பெட்டி ஆபிஸுக்கு அனுப்புறேன்…..” என்றாள் அழுது கொண்டே.
”இன்னம் ஒரு ரெண்டு வருஷம் பல்லக் கடிச்சிக்கிட்டு அவளப் படிக்க வச்சிட்டீங்கன்னா, அவள் பத்தாம் வகுப்புப் பரீட்சைய எழுதி முடிச்சிடுவா……அப்புறம் அவள் ஏதாவது வேலைக்குப் போய் உங்க குடும்பத்தை காப்பாத்த முடியும்மா…..” என்றார்.
”ஆனா ரெண்டு வருஷம் உயிரோட இருக்கணுமே வாத்தியாரய்யா…. இப்பத்தான் ஏதோ வயிறார சாப்புடுறோம்……” என்று அவள் கையெடுத்துக் கும்பிடவும் வாத்தியாருக்கும் எதுவும் பேசத் தோன்றாமல் விடைபெற்றுப் போய் விட்டார்.
கனகவல்லி தீப்பெட்டி ஆபிஸுக்கு வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்து வீட்டில் பசியும் பட்டினியும் பறந்து போனது. ஆனால் செண்பகம் அக்காளுடன் பேசிச் சிரிப்பது விளையாடுவதெல்லாம் அரிதாகிப் போனது. வார விடுமுறை நாட்களிலும் அவள் சோர்ந்து போய் உற்சாகமில்லாமல் தான் இருப்பாள். அக்காவிற்கு சீக்கிரம் வயசாகி பெரிய மனுஷி ஆகி விட்ட்தைப் போல ஒரு தோற்றம் சீக்கிரமே அவள் மீது படிந்து விட்டது.
பெரும்பாலும் செண்பகம் தூங்கிக் கொண்டிருக்கும் போதெ கம்பெனி பஸ் வந்து அக்காளை அள்ளிக் கொண்டு போய்விடும். அவ்வளவு அதிகாலையில் கம்பெனி பஸ்ஸின் அலறல் சத்தம் ஊரையே கிழிக்கும். தூக்கம் கெட்ட பெரிசுகள் எல்லாம் மனசுக்குள் பஸ் டிரைவரை திட்டியபடி புரண்டு படுப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் கனகவல்லியை அவளின் அம்மா அடித்துத் தான் எழுப்புவாள்; தினப்படி அவள், தான் வேலைக்குப் போக மாட்டெனென்று முரண்டு பிடித்துக் கொண்டு அம்மா திணிக்கும் தூக்குவாளியை ஏனோ தானோ வென்று பிடித்துக் கொண்டு தூக்கக் கலக்கம் கலையாமலே தான் கிளம்பிப் போவாள். பொழுது நன்றாக இருட்டிய பிறகு தான் அவள் வீடு திரும்புவாள். வந்ததும் சாப்பிட்டுத் தூங்கி விடுவாள்.
ஒரே ஒருமுறை செண்பகம் கனகவல்லியின் தீப்பெட்டி ஆபிஸிற்குப் போயிருக்கிறாள். வெள்ளை ஓடு வேய்ந்த கட்டிடம்; வெக்கையும் கரி மருந்து வாசனையுமாய் இருந்தது. பல வயதிலும் பெரும்பாலும் பெண்பிள்ளைகள் அங்கங்கு உட்கார்ந்து குச்சி அடுக்கிக் கொண்டும் தீப்பெட்டியின் உள்பெட்டியை பசையில் தோய்த்து உருவாக்கிக் கொண்டும் இருந்தார்கள். கனகவல்லி இவளை இன்னொரு அறைக்குக் கூட்டிக் கொண்டு போனபோது அங்கு ஆண்கள் வேர்வையில் குளித்தபடி அடுக்கிய தீக்குச்சிகளை கரிமருந்துக்குள் முக்கி எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.
கனகவல்லி அங்கு மும்முரமாய் வேலை செய்து கொண்டிருந்த ஒருவனை அழைத்து, “இவ என் தங்கச்சி செண்பகம்…..” என்று அறிமுகப் படுத்தி வைத்தாள். அவன் ”அப்படியா….” என்று கேட்டுக் கொண்டான். அப்புறம் “உன் தங்கச்சியையும் வேலைக்கு கூட்டிட்டு வந்துடுறது தான?” என்றான். அக்கா உடனேயே, “அதெல்லாம் வேண்டாம்; நான் அவளைப் பெருசா காலேசுக்கெல்லாம் அனுப்பிப் படிக்க வைக்கப் போறேன்…..” என்று சொல்லவும் செண்பகத்திற்கு பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்த்து.
மத்தியானச் சாப்பாட்டின் போது அவன் முறுக்கு தேன்மிட்டாய் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து செண்பகத்திடம் கொடுத்து சாப்பிடச் சொன்னான். அவள் வேண்டாமென்று மறுத்தபோது, அக்கா ”பரவாயில்ல வாங்கிக்க; நமக்கு உறுத்தானவரு தான்…..” என்றாள். அப்புறம் அவனிடம் குசுகுசுவென்று பேசத் தொடங்கி விட்டாள். அப்போது அக்காள் சந்தோஷமாக இருப்பது போலிருந்தது.
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அக்காவை அங்கங்கு தொட்டான். அக்காளும் அதை அனுமதித்தாள்; அவ்வப்போது அவனுடைய கைகளை சிரித்தபடி செல்லமாய் தட்டி விட்டாள். அவன் அக்காவிடம் விளையாடிய படியே செண்பகத்தையும் ஓரப் பார்வையில் திருட்டுத் தனமாய் பார்த்தான். அவனுடைய பார்வைக்கு ஏதோ அசிங்கமான அர்த்தம் இருப்பதாய் செண்பகத்தின் உள் மனசு சொன்னது.
சாயங்காலம் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது செண்பகம் அக்காளிடம் “யாருக்கா அந்தா ஆளு…அவன் பார்வையே சரியா இல்ல…” என்று விசாரித்த போது “அப்படி எல்லாம் சொல்லக் கூடாது; அவர் பேரு ராசேந்திரன்; ரொம்ப நல்ல மாதிரி; உனக்கு மாமா மாதிரி….. அவரைத் தான் நான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்…” என்றாள்.
“அய்யோ… இது அம்மாவுக்குத் தெரியுமா?” என்று இவள் பதறிய போது இவள் வாயில் கைகளை வைத்து, ”அம்மாட்ட இப்பவே நீ எதுவும் உளறி வச்சுடாத; நேரம் வரும் போது நானே சொல்லிக்கிறேன்…: என்றாள். செண்பகத்திற்கு ஏனோ அவனைப் கண்டாலே பிடிக்கவில்லை. அவன் கண்டிப்பாக அக்காவை ஏமாற்றி விடுவான் என்று அவளின் உள்ளுணர்வு சொன்னது. அதனால் அவனுடன் அக்கா நெருங்கிப் பழகுவது பற்றி அம்மாவிடம் சொல்லிவிட்டாள் செண்பகம். அம்மா அக்காளிடம் விசாரித்த போது இருவருக்கும் பெரிய சண்டையானது.
”வேண்டாண்டி; விட்டுடிடீ; மோசம் பண்ணீட்டு எனக்கென்னன்னு போயிடுவான்கடி…. அப்புறம் நாம தான் கெடந்து சீரழியனும்; ஏன்னு தட்டிக் கேட்க கூட நமக்கு நாதி இல்லடி….” அழுகுற தொனியில் கெஞ்சினாள் அம்மா.
ஆனால் கனகவல்லி அக்காள் அம்மா சொல்கிற எதையும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அவள் பாட்டுக்கு ராசேந்திரனுடன் சகவாஸத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள் என்பதை அவளுடன் வேலைக்குப் போகும் அவள் சோட்டுப் பிள்ளைகளின் மூலம் தெரிந்து கொண்டார்கள். ஒருநாள் தீப்பெட்டி ஆபிஸுக்கு வேலைக்குப் போன அக்காள் வீடு திரும்பவில்லை. அம்மா பதறிப் போய் மறுநாள் செண்பகத்தையும் கூட்டிக் கொண்டு போய் தீப்பெட்டி ஆபிஸில் விசாரித்த போது அக்கா ராசேந்திரனோடு ஓடிப் போய்விட்ட விஷயம் வெட்ட வெளிச்சமானது.
இரண்டு நாட்களுக்கு அம்மா அழுது அரற்றிக் கொண்டு அலைந்தாள். அப்புறம் அக்காள் எங்காவது போய் கல்யாணம் காட்சின்னு பண்ணிக் கொண்டு சுகமாக வாழ்ந்தால் போதுமென்று மனசைத் தேற்றிக் கொண்டாள். ஆனால் அது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை. பத்து நாட்களுக்கப்புறம் அக்காள் முற்றிலும் கலைந்து போய் அரை ஆளாய்த் திரும்பி வந்தாள்.
அப்போதும் அவளைக் கட்டிக் கொண்டு அம்மா தான் அழுதாள். ஊரே திரண்டு வந்து அக்காளைத் திட்டித் தீர்த்தது. ஆனால் அக்காள் அசைந்தே கொடுக்க வில்லை. யாருக்கும் எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாய் வெறித்தபடி இருந்தாள். அக்காளும் அவனும் மதுரையில் ஏதோ ஒரு லாட்ஜில் இத்தனை நாட்களும் இருந்திருக்கிறார்கள். அவன் வீட்டுக்காரர்கள் எப்படியோ துப்புத் துலக்கி லாட்ஜுக்கு வந்து அவனை அழைக்கவும், பூம்பூம் மாடு மாதிரி அவனும் அவர்களூக்குப் பின்னால் போய் விட்டானாம்- இவளைப் பற்றிய எந்த அக்கறையுமில்லாமல்.
அக்காள் அழாமல் அழுத்தமாக இருந்தாலும் அம்மாவுக்கு அவளைப் பார்க்க ரொம்பவும் பயமாக இருந்தது. ஏதாவது பண்ணினாலும் பண்ணிக் கொள்வாளோ என்று அவளைக் கண்காணித்தபடி இருந்தாள். அவள் எங்கு போனாலும் அவளுடனேயே போகச் சொல்லி செண்பகத்தை விரட்டினாள். செண்பகமும் அக்கா ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போனாலும் இவளுக்கு வரவில்லை என்றாலும் அவளுடனேயே போய்க் கொண்டிருந்தாள்.
ஊரில் இவர்கள் மேல் அக்கறையுள்ள சிலர் அம்மாவிடம் போலீஸில் ராசேந்திரனின் குடும்பத்தின் பேரில் புகார் கொடுக்கும் படி அறிவுரை சொன்னார்கள். இன்னும் சிலரோ “அய்யய்யோ, போலீஸுக்குப் போனீங்கன்னா, அவனுங்க காசு யாரு அதிகமா தர்றாங்களோ அவங்களுக்குச் சாதகமாத்தான் கேசப் பதிவானுங்க…. ஏழை பாழைங்களுக்கு அவன்க கிட்டருந்து நியாயமெல்லாம் கெடைக்காது; வீணா கோர்ட்டு, கேசுன்னு அலைஞ்சு அசிங்கப் பட்டுத்தான் திரும்பனும்….” என்று பயமுறுத்தினார்கள்.
’ராசேந்திரனின் ஊரைப்பற்றி தனக்கு நன்றாகத் தெரியுமென்றும் அது நியாய தர்மத்திற்குக் கட்டுப் பட்ட ஊர் என்றும் நேரடியாக அந்த கிராமத்துக்குப் போய் அங்கிருக்கும் ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டால், கண்டிப்பாக அவர்களின் பிரச்னைக்கு நல்லதோர் முடிவு கிடைக்குமென்றும்’ முனியாண்டி மாமா சொன்னார். அதுதான் சரியென்று அம்மாவும் செண்பகத்தையும் கனகவல்லியையும் கைக்கொருத்தியாய்ப் பிடித்துக் கொண்டு ராசேந்திரனின் ஊருக்குக் கிளம்பிப் போனாள்.
அப்படிப் போனது வீண் போகவில்லை என்று தான் தோன்றியது. விசாரித்தவர்கள் எல்லோருமே ஆறுதலாகவே பேசினார்கள். ரொம்பவும் கட்டுப்பாடான ஊராகத் தான் தெரிந்தது. அந்த ஊர்த் தலைவர் பெண்கள் ஏமாற்றப் படுவதைச் சகித்துக் கொள்ளவே மாட்டார் என்றும் போன வருஷம் கூட தங்கள் பண்ணையில் வேலை பார்த்த ஒரு பெண்ணை பெருந்தனக்காரரின் பையன் மோசம் செய்த விவகாரம் பஞ்சாயத்துக்கு வரவும், வலுக்கட்டாயமாக பெருந்தனக்காரரின் பையனுக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்ததாகவும் அவர்கள் இப்போது சந்தோஷமாக வாழ்வதாகவும் சொன்னார்கள். அம்மா ரொம்பவும் நம்பிக்கையாய் பஞ்சாயத்தாரை அணுகி தன் வழக்கைச் சொன்னாள்.
பஞ்சாயத்து கூடி இருந்த்து. அம்மாவை மையத்திற்கு வரச்சொல்லி “உன் பிராது என்னன்னு சொல்லும்மா…. எல்லாரும் கேட்கட்டும்…..” என்றார் ஊர்த்தலைவர். அம்மா விவரமாய் சொல்லத் தொடங்கி அழுகையுனூடே “ராசரத்தினத்தேவரோட பையன் என் பொண்ணு கனகவல்லியக் கூட்டிக்கிட்டுப் போயி பத்துநாள் அவளோட சந்தோஷமா இருந்துட்டு, இப்ப அவள ஏத்துக்க மாட்டேன்குறார்; இந்த பஞ்சாயத்தார் எங்களுக்கொரு வழி சொல்லனும்…..” என்று சொல்லி சபையில் விழுந்து வணங்கினாள்.
ராசரத்தினத்தேவரும் அவருடைய பையனும் முதலில் அம்மா சொன்னதை மறுத்துப் பார்த்தார்கள். “பொய் சொல்லாதலே….. எனக்கு எல்லாம் தெரியும்ங்குறத மொதல்ல நீ தெரிஞ்சுக்கோ; நானும் இங்க வர்றதுக்கு முன்னால நம்மூர்லருந்து தீப்பெட்டி ஆபிஸுக்கு வேலைக்குப் போற பல பேருகிட்ட விசாரிச்சுட்டுத் தான் வந்தேன்லே….” என்று கடுமை காட்டவும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.
“நம்ம கலாச்சாரம் தெரியாத காவாளிப் பயல்களா ஆயிட்டீகளடா….” என்று கண்டித்து விட்டு தீர்ப்புச் சொல்வதற்கு ஆயத்தமானார். அதற்கு முன் அம்மாவிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டார். அது தீர்ப்பின் திசைவழியையே தலைகீழாய் மாற்றி விட்ட்து.
”நீங்க என்ன ஆளுக தாயி…..”
”நாங்க பறையங்க சாமி…..” என்றாள் அம்மா. ஊர்த் தலைவரின் முகம் விழுந்து விட்ட்து.
”சாதி என்ன்ன்னு மொதல்லயெ நீ சொல்லியிருக்க வேண்டாம்….” என்று சீறியவர், “நானும் கேட்டுருக்கலாம்; இப்பல்லாம் பார்த்ததும் மனுஷங்களோட சாதியக் கண்டுபிடிக்கத் தான் முடியல; இவளப் பார்த்தா பறச்சியாட்டமா இருக்கு! அம்மாவும் பொண்ணும் தளதளன்னு தேவரோ, நாயக்கரோ, கவுண்டரோ மாதிரியில்ல இருக்காளுங்க; அதான் தப்புக் கணக்குப் போட்டுட்டேன்…..” என்று பொதுவாய் சபையில் சொன்னார். அப்புறம் அம்மாவிடம் “பறச்சியா பொறந்துட்டு இதயெல்லாம் பெரிய விஷயமா பஞ்சாயத்து வரைக்கும் கொண்டு வந்துருக்கியே, உனக்கு வெக்கமா இல்ல….” என்று கடிந்து கொண்டு தீர்ப்பை சொன்னார்.
”ராசரத்தினத்தேவர் ஒரு கவுளி வெத்தலையும் பாக்கும் வாங்கி இந்த பஞ்சாயத்துக்குக் குடுத்துரனும்; அப்புறம் பாதிக்கப் பட்டவங்களுக்கு எரநூறு ரூபாய தெண்டத் தொகையா செலுத்திடனும்; அவ்வளவு தான்…. சபை கலையலாம்…..” என்று சொல்லி எழுந்து கொண்டார்.
அம்மாவிற்கு ஆற்றாமையில் பொங்கிப் பொங்கி அழுகை வந்து அப்படியே மடிந்து உட்கார்ந்து ஈரக்குலை நடுங்க குமுறி அழுதாள். ஏனென்று கேட்கவோ, ஆறுதல் சொல்லவோ ஒரு சுடு குஞ்சு கூட அங்கில்லை. அப்புறம் அக்காளைப் போட்டு வெலம் தீருமட்டும் அடித்து நொறுக்கினாள். எல்லோரும் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டார்கள்.
அக்கா கொஞ்ச நாட்களுக்கு வெறுமனே வீட்டிலிருந்தாள். அப்புறம் சாத்தூரிலேயே வேறொரு தீப்பெட்டி ஆபிஸுக்கு வேலைக்குப் போகத் தொடங்கினாள். அந்த வருஷம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் இருந்தபோது கனகவல்லி அக்காவை கரிக்கட்டையாய் வீட்டுக்குக் கொண்டு வந்து கிடத்தினார்கள். அம்மா அழக்கூட்த் தோன்றாமல் அக்காளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தவர்களில் இவளும் ஒருத்தி என்று பின்னால் தெரிந்தது. தீப்பெட்டி ஆபீஸிற்கு வேலைக்குப் போன கனகவல்லி பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் எப்படி பலியானாள்? அந்தக் கேள்விக்கான பதில் செத்துப் போவதற்கு முன் கனகவல்லி போலீஸுக்குக் கொடுத்த மரண வாக்குமூலத்தில் இருந்தது.
ராசேந்திரன் தான் அந்த பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்திருக்கிறான். அவன் கனகவல்லியின் புதிய தீப்பெட்டி ஆபிஸுக்கும் போய், “உன்னை என்னால் இன்னும் மறக்கவே முடியல; நாம மறுபடி பழைய மாதிரியே பழகலாம்; உன்னை என்னோட ஆசை நாயகியா வச்சுக்கிறேன்னு….” தொந்தரவு பண்ணியிருக்கிறான்.
முதலில் அவனிடமிருந்து விலகிப் போன கனகவல்லி அப்புறம் அவன் சொன்ன ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாள். சம்பவ தினத்தன்னைக்கு தீப்பெட்டி ஆபீஸில் வேலை முடிஞ்சு அவனை அவனுடைய பட்டாசு தொழிற்சாலையில் போய் சந்தித்திருக்கிறாள் கனகவல்லி.
அப்போது ராசேந்திரன் பட்டாசுகள் பண்டல் பண்டலாக அடுக்கப்பட்டிருக்கும் சேமிப்புக் கிடங்கில் இருந்திருக்கிறான். அங்கும் வேலை முடிந்து எல்லோரும் கிளம்பிப் போய் விட்டிருக்க அவன் மட்டும் தான் தனித்து இருந்திருக்கிறான். அதை எதிர்பார்த்துத் தான் இவளும் போயிருக்கிறாள்.
கனகவல்லி அவனைப் பார்க்கக் கிளம்பும் போதே அவளின் சேலையில் அங்கங்கே திட்டுத்திட்டாய் கரிமருந்தை இழுகிக் கொண்டும் முந்தானையில் தீக்குச்சிகளை முடிந்து கொண்டும் போயிருக்கிறாள். தனிமையான தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சேமிப்புக் கிடங்கின் கதவைத் தாளிட்டு விட்டு கனகவல்லியை ஆசையாய் கட்டி அணைத்திருக்கிறான் அவன்.
அதற்காகவே காத்திருந்த்து போல் இவளும் அவனை இறுக்கிக் கொண்டு, எனக்குக் கொஞ்சம் பட்டாசு வேண்டுமென்றிருக்கிறாள்; எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ… என்றபடி அவளை பட்டாசு பண்டல்களுக்குள் அணைத்தபடி அழைத்துப் போயிருக்கிறான். அங்கு போனதும் கனகவல்லி அவனைத் திமிற முடியாமல் அணைத்துக் கொண்டு ஒரு தீக்குச்சியை சேலையில் உரச, உடனே தீப்பற்றி பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின.
”எங்க அக்கா ஒன்பதாப்போட படிப்ப நிறுத்துனா; அவ சாகும் போது நான் ஏழாப்பு படிச்சுக் கிட்டிருந்தேன். அவள் செத்தப்புறம் வீட்டுக்கு வருமானம் வேணுமின்னுட்டு நானும் படிப்ப நிறுத்திட்டு தீப்பெட்டி ஆபிசுக்கு வேலைக்குப் போகத் தொடங்கினேன்…..” என்றாள் செண்பகம்.
அப்போது பத்து அல்லது அதிகபட்சம் பனிரெண்டு வயதிருக்கும் பெண்ணொருத்தி இவளிடம் வந்து, “யாரும்மா இவங்கள்ளாம்…..” என்றாள். “உங்க பொண்ணா…..” என்றாள் வந்தவர்களில் ஒருத்தி.
ஆமென்று தலையாட்டினாள் செண்பகம்.
“இந்தப் பொண்ணையாவது தொடர்ந்து படிக்க வைப்பீங்களா….?” என்று கேட்டாள் வந்தவர்களில் இன்னொருத்தி.
”இல்ல; அது போன வருஷத்தோடயே படிக்குறத நிறுத்தீருச்சு……”என்றாள் செண்பகம் சர்வ சாதாரணமாக. ”ஏன் என்னாச்சு?” அதிர்ச்சியுடன் கேட்டாள் ஒருத்தி.
”அதுகிட்டயே கேளுங்க்…..” என்றாள் செண்பகம்.
அவளை அருகில் அழைத்து, அவளின் தலையை அன்பாய்த் தடவியபடி, “ஏண்டா செல்லம் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்ற…..” என்று கேட்கவும், அவள் சொன்னதைக் கேட்டு வந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார்கள்.
”பள்ளிக்கூடம் ரொம்ப மோசம்; அஞ்சாப்பு வாத்தியார் தனியா கூட்டிட்டுப் போயி போட்டுருக்குற உடுப்பல்லாம கழட்டிட்டு அசிங்க அசிங்கமா அங்கங்க தொடுறார். (மார்பைக் காண்பித்து) வலிக்க வலிக்க இங்க எல்லாம் கடிக்கிறார்; அப்புறம் உச்சா போற எட்த்துல வெரல விட்டு………” அதற்கு மேல் சொல்ல முடியாமல் அந்த சிறு பெண் ஓ வென்று அழத்தொடங்கி விட்டாள்.
மு
- சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் தர்கா தொடர்புப் பாரம்பரியம்
- முரண்களால் நிறைந்த வாழ்க்கை
- இந்தியாவின் முதல் பௌதிக விஞ்ஞான மேதை ஸர் ஜகதிஷ் சந்திர போஸ்
- திறவுகோல்
- கோணங்கிக்கு வாழ்த்துகள்
- கனவுகள் அடர்ந்த காடு – விட்டல்ராவின் ‘தமிழ் சினிமாவின் பரிமாணங்கள்
- தொடுவானம் 36. எங்கள் வீட்டு நல்ல பாம்பு
- தந்தையானவள் அத்தியாயம்-3
- தினம் என் பயணங்கள் -36 இதயத் துடிப்பு அறக்கட்டளை நிறுவகம்
- பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…
- தேவதாசியும் மகானும் (2)
- அறம் வெல்லும் அஞ்சற்க – அகரமுதல்வனின் கவிதைத் தொகுப்பு. ஒரு வாசிப்பு அனுபவம்
- குளத்தங்கரை வாகைமரம்
- முத்தொள்ளாயிரத்தில் மறம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 95
- பாவண்ணன் கவிதைகள்
- சுத்த ஜாதகங்கள்
- அழியாச் சித்திரங்கள்
- வள்ளுவரின் வளர்ப்புகள்
- வெண்சங்கு ..!
- பாரதியின் காதலி ?
- காந்தியடிகள் – ஓர் ஓவிய அஞ்சலி
- வாழ்க்கை ஒரு வானவில் – 23
- பொன்வண்டுகள்
- ஆங்கில மகாபாரதம்