காதல் கண்மணிக்குக் கல்யாணம்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்து பூட்டில் சாவியை நுழைக்கச் சிரமப் பட்டு துளாவிக் கொண்டிருந்த போது, அரவம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளி விளக்கைப் போட்டார்கள். அந்த வீட்டுப் பெண் வெளியே வந்து ”உங்களுக்கு ரெஜிஸ்டர் தபால் வந்துருக்காம்; நாளைக்கு போஸ்ட் ஆபீஸுல போயி வாங்கிக்கனுமாம்…” என்று அரையும் குறையுமாகவும் அவசரமாயும் சொல்லி முடித்ததும் உள்ளே போய் கதவைப் பூட்டி, வெளி விளக்கையும் அணைத்து விட்டாள்.

இது நடந்தது இப்போதல்ல; தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ….

அப்போதெல்லாம் தகவல் தொடர்புக்கு கடிதத்தை விட்டால் வேறு வழியில்லை. பதிவுத் தபால்களும் டெலிகிராம்களும் வெகு அபூர்வமாகவே அனுப்பப்படும். அதுவும் யாராவது ஒருத்தருக்கு டெலிகிராம் வந்திருக்கிறது என்று தெரிந்ததுமே அந்த சூழலே பதட்டமாகி விடும். டெலிபோன் என்பதெல்லாம் வெகு அபூர்வம்; மிகச் சில வீடுகளிலும் அலுவலகங்களிலுமே உபயோகிக்கப் பட்டது.

பதிவுத் தபாலை எங்கிருந்து யார் அனுப்பியிருப்பார்கள் என்ற கேள்வி மண்டையைப் குடைந்து கொண்டிருந்ததால் இரவெல்லாம் என்னால் சரியாக தூங்கவே முடியவில்லை. காலையில் விடிந்ததும் முதல் வேலையாக தபால் நிலையம் போய் எங்கள் பகுதி தபால்காரர் வருவதற்காகக் காத்திருந்து, தபாலைப் பரபரப்பாய் வாங்கி பிரித்துப் பார்த்தால், செல்வன் அவருடைய கல்யாணப் பத்திரிக்கையை அனுப்பியிருந்தார்.

செல்வனுடன் கடிதத் தொடர்பு நின்று சிலகாலமாகி யிருந்தது. என்னுடைய இப்போதைய முகவரி அவருக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சர்யமாக இருந்தது. ஷீலாவைத்தான் கல்யாணம் செய்து கொள்வாராக இருக்கும் என்பதால் பத்திரிக்கையைப் பார்க்க ஆர்வம் காட்ட வில்லை. உள்ளே ஒரு சிறு கடிதமும் வைத்திருந்தார்.

பத்திரிக்கையை நேரில் வந்து தர முடியாததற்காக வருத்தம் தெரிவித்திருந்தார். அதிகாலை திருப்பதியில் வைத்துக் கல்யாணம் என்றும் அன்று இரவே கோயம்புத்தூரில் ரிசப்ஷன் என்றும் எழுதி, கண்டிப்பாகக் கல்யாணம் ரிசப்ஸன் இரண்டிற்கும் வந்து கலந்து கொள்ளும் படியும் எழுதியிருந்தார்.

மேலும் நீ தான் மாப்பிள்ளைத் தோழனாக இருக்க வேண்டுமென்றும் எந்த சாக்குப் போக்கும் சொல்லி வராமல் இருந்து விடக் கூடாது; பத்திரிக்கையே கிடைக்கவில்லை என்று பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளவும் கூடாது என்பதற்காகத் தான் பதிவுத் தபாலில் பத்திரிக்கையை அனுப்புவதாகவும் என்னுடைய தற்போதைய முகவரியை நாச்சிமுத்துவிடமிருந்து வாங்கியதாகவும் எழுதியிருந்தார்.

நிதானமாகப் பத்திரிக்கையைப் படிக்கத் தொடங்கிய போது அதில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மணப்பெண்ணிற்கான இடத்தில் ஷீலாவின் பெயருக்குப் பதிலாக வால்பாறையைச் சேர்ந்த ரங்கநாயகி என்ற வேறொரு பெண்ணின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. எனக்கு தலை சுற்றத் தொடங்கியது. இது எப்படி சாத்தியம்? கடைசியில் செல்வன் – ஷீலா காதலும் முறிந்து போய் விட்டதா! இதை என்னால் ஜீரணிக்கவே முடிய வில்லை.

எத்தனை தடைகளைத் தாண்டி வளர்ந்த காதல் அது? நானே பொள்ளாச்சிக்குப் போய் ஷீலாவின் அண்ணனுடன் நேரிலேயே பேசியிருந்தேனே! அவன் கூட வேறு வழியில்லாமல் அரை மனதாய் செல்வன் – ஷீலா காதலை அங்கீகரித்து, ஷீலாவின் தங்கையின் கல்யாணம் முடியும் வரைக் காத்திருக்கச் சொன்னானே!

அதற்குள் என்ன நடந்திருக்கும்? திருமனத்திற்கு இன்னும் ஐந்து நாட்கள் இருந்தன. இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டுமென்று தோன்றியது. ஆனால் எப்படி என்று தான் புரியவில்லை. ஒருவேளை ஷீலாவிற்கு வேறு யாருடனாவது ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டதா? அதனால் தான் வேறு வழியில்லாமல் செல்வன் வேறு பெண்ணை மணந்து கொள்ளப் போகிறாரா?

இருவருமே அத்தணை சுலபமாக தங்களின் காதலை விட்டுக் கொடுக்க சம்மதிக்க மாட்டார்களே! எனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. செல்வனை நேரில் போய்ப் பார்த்து இதுபற்றிப் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது. உடனே கோயம்பத்தூருக்கு பஸ் ஏறிவிட்டேன். சென்னையிலிருந்து சுமார் 12 மணி நேரப் பயணம்; அதற்குள் எனக்குத் தலை வெடிக்காமல் இருக்க வேண்டும்!

கோயம்பத்தூர் பூ.சா.கோ. பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பதற்கு இடம் கிடைத்து அங்கு போய்ச் சேர்ந்து விட்டு, ஹாஸ்டலில் இடம் கேட்டுப் போன போது இடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அவ்வளவு தூரத்திலிருந்து படிக்க வந்து விட்டு ஹாஸ்டலில் இடம் இல்லையென்றால் எப்படி அதை எதிர் கொள்வதென்று எனக்குப் புரியவில்லை. வார்டனைப் பார்த்து முறையிடலாம் என்று அவர் அறை வாசலில் போய்க் காத்திருந்தேன்.

அப்போது தான் என்னுடன் மேலும் மூன்று பேருக்கு ஹாஸ்டலில் அறை மறுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. ஆறு மணிக்கு மேல் எங்களை மொத்தமாய் அழைத்த வார்டன், முதல் வருஷ மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் சுத்தமாய் அறை எதுவும் காலி இல்லை யென்றும் ஏற்கெனவே அங்கு அறைக்கு நான்கு பேர் ஐந்து பேர் என்று போட்டிருப்பதால் இனியும் அங்கு யாரையும் போட முடியாது என்றும் தீர்மானமாய்ச் சொல்லவும் நான் வாய் விட்டே கதறி அழுது விட்டேன். மற்ற பையன்களின் பெற்றோர்களும் வந்து வார்டனைக் கெஞ்சினார்கள்.

அவர் கொஞ்சம் யோசித்தவர், ஒரே ஒரு வழிதான் இருக்கிறது; ஆனால் அதை பிரின்சிபால் – அவர் தான் தலைமை வார்டன் – ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லையே என்று சொல்லி விட்டு உடனே பிரின்ஸிபாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிரின்ஸிபால் அரைமனதாய் சம்மதித்து விட்டார் போலிருக்கிறது.

அப்புறம் எங்களிடம் ஆடிட்டோரியத்தை ஒட்டி ஒரு ஒப்பனை அறை இருப்பதாகவும், வேண்டுமானால் அங்கு நாங்கள் நால்வருமே தங்கிக் கொள்ளலாம் என்றும் ஆனால் அங்கு ஒரே ஒரு கழிவறை மட்டுமே இருப்பதாகவும் மற்றபடி குளிப்பதற்கு சாப்பிடுவதற்கெல்லாம் முதல் வருஷ மாணவர்களின் விடுதிக்குத் தான் போய் வரவேண்டுமென்றும் அது கொஞ்சம் தூரம் என்றும் சொன்னார். வேறு வழியில்லை யாதலால் நாங்கள் நால்வருமே உடனே சம்மதித்தோம்.

ஆடிட்டோரிய ஒப்பனை அறையில் தங்கிக் கொண்டதில் நிறைய அசௌகரியங்கள் இருந்தன. ஆனால் அவற்றை யெல்லாம் மீறி ஒரே ஒரு நல்ல விஷயமும் இருந்தது. நாங்கள் முதல் வருஷ மாணவர்களிடமிருந்து ஒதுங்கி யிருந்ததால் எங்களின் சீனியர் மாணவர்களால் ராக்கிங் தொந்தரவுகள் கொஞ்சமும் இல்லாம லிருந்தது.

மற்ற மாணவர்கள் எல்லாம் வகுப்பறையில் வந்து தினசரி ராக்கிங் தொந்தரவுகள் பற்றி அழுது புலம்பும் போது எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

நாங்கள் சீனியர் மாணவர்களின் விடுதிக் கட்டிடங்களைத் தாண்டித்தான் முதல் வருஷ மாணவர்களின் விடுதிக் கட்டிடங்களுக்குச் செல்ல வேண்டி யிருந்தது. ஒருநாள் இரவு உணவை முடித்து விட்டு நாங்கள் வந்து கொண்டிருந்த போது சீனியர் மாணவர்கள் சிலர் எங்களை மடக்கினார்கள்.

”நீங்கள் எல்லாம் ஒண்ணாங் கிளாஸாடா…?” என்றார்கள். முதல் வருஷமா என்று கேட்பதற்கு அப்படித்தான் கேட்பார்கள் என்பதை நாங்கள் எங்களின் நண்பர்களின் மூலம் ஏற்கெனவே அறிந்திருந்ததால் ஆம் என்றோம். அவர்கள் ஆறேழு பேர் இருந்தார்கள். எங்களை மாடியில் அவர்களின் அறைக்கு அழைத்துப் போனார்கள்.

எங்களை வரிசையாக வெறுந்தரையில் முட்டி போடச் சொன்னார்கள். அப்புறம் ”டெக் ஓத்…சொல்லுங்கடா” என்றார்கள். அது சுலோகம் மாதிரி ஆங்கிலமும் தமிழும் கலந்த அசிங்கமான வார்த்தைகளின் தொகுப்பு என்பதை மட்டும் அரையும் குறையுமாக அறிந்திருந்தோம். அமைதியாக அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

அப்புறம் அவர்களே வாயும் காதும் கூசுகிற வார்த்தைகளைச் சொல்ல நாங்களும் திருப்பிச் சொன்னோம்.

”படிப்பைத் தவிர உங்களுக்கெல்லாம் வேற எதுலயெல்லாம் இண்ட்ரெஸ்ட்ன்னு சொல்லுங்கடா…” என்றான் சீனியர்களில் ஒருவன்.    நாங்கள் எதுவும் புரியாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம். “உதாரணத்துக்கு உங்கள்ல யாருக்காவது நீச்சல் தெரியுமாடா…” என்றான் அவனே.

நான் பேசாமல் இருந்திருக்கலாம். அதிகப் பிரசங்கித் தனமாக எனக்குத் தெரியும் என்பதைத் தெரிவிப்பதற்காக கையைத் தூக்கினேன். உடனே இன்னொரு சீனியர் “ஓ உனக்கு நீஞ்ச எல்லாம் தெரியுமா?” என்றபடி ”எங்கே இங்கே நீந்திக் காட்டு…” என்று வெறுந் தரையைக் காட்டினான்.

”தரையில எப்படிங்க முடியும்; தண்ணியில தான் நீந்த முடியும்… “என்றேன். “ஸார், தண்ணியில தான் நீந்துவாராம்…”என்று எளக்காரமாய் அவன் சகசீனியர் மாணவரைப் பார்க்க அவன் ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து, எனக்கு முன்னால் வைத்து ”எங்கே இதில நீந்திக் காட்டு…”என்றான்.

நான் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருக்கவும், தண்ணீரைத் தரையிலே கொட்டி ”நீந்துடா…” என்று அதட்டினான். நான் அந்தத் தண்ணீர் சிதறிய தரையின் மீது படுத்து கைகளையும் கால்களையும் நீந்துவது மாதிரி அசைத்தேன். சட்டை யெல்லாம் அழுக்கானது. எல்லோரும் சிரித்தார்கள்.

”நீங்க எதுக்குடா சிரிக்கிறீங்க; அவனுக்காவது நீந்தத் தெரியுது… உங்க யாருக்கும் வேற எதுலயும் ஆர்வமே இல்லையாடா ? ஸ்போர்ட்ஸ்ல கூட யாருக்கும் ஆர்வம் இல்லையாடா…?” என்றான் முதலாமவன்.

தெரிந்த விளையாட்டைச் சொன்னால், இப்போதே விளையாடச் சொல்வார்களோ என்று பயந்து போய் எல்லோரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

“சொல்லுங்கடா….?” என்றான் இன்னொருவன் இறுதியில் கெட்ட வார்த்தை சேர்த்து.

என்னுடன் வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஹாக்கி, ஃபுட்பால், கிரிக்கெட் என்று ஆளுக்கொரு விளையாட்டைச் சொல்லவும், என்னைப் பார்த்து “உனக்கு நீச்சல் தவிர வேறெதுவும் தெரியாதாடா…?” என்றான்.

நான் கொஞ்சம் தயங்கியபடி, “கவிதை எழுதுவேன்…” என்று சொன்னேன். “செல்வன் உங்க ஆளு…” என்றான் அவன் இதுவரை எங்களை அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனிடம்.

செல்வன் என்னை நோக்கி, “இங்க வாங்க…” என்றார். நான் எழுந்து அவருக்கருகில் போனேன். ”எங்க, ஏதாவது ஒரு கவிதை சொல்லுங்க பார்க்கலாம்… “என்றார்.

நான் உடனே “எதைப் பற்றி கவிதை சொல்லனும்…” என்றேன்.

செல்வனுக்கருகில் நின்று கொண்டிருந்த இன்னொருவன் “ஓ… தலைப்புக் கொடுத்தாத் தான் கவிதை சொல்லுவியோ, அந்த அளவுக்குப் பெரிய ஆசுகவியாடா நீ…” என்றான்.

அப்புறம் பெண்ணின் அந்தரங்க உறுப்பின் பெயரைக் கொச்சையாகச் சொல்லி, “எங்கே அதைப் பற்றி ஒரு கவிதை சொல்லு பார்க்கலாம்…” என்றான். செல்வன் அவனிடம் ”சும்மாருய்யா…”என்று கடிந்து கொண்டார். நான் அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு சில நிமிஷங்களிலேயே சின்னதாய் ஒரு கவிதை சொன்னேன்.

பெண்மையின் அடையாளமே! பேரன்பின் கொடையாளியே!

உடம்பின் ஒரு வழி நீ – மட்டுமல்ல; உலக மாந்தர் யாவரும்

வெளியேறும் வழியும் நீதான் – ஆயினும்

                   உனக்குத் தான் எத்தனை வ(ழி)லிகள்…!”என்று சொன்னதாய் ஞாபகம். அங்கிருந்த அத்தனை பேரும் ஆரவாரமாய்க் கை தட்டினார்கள். ”ஓ சூப்பர்ல…” என்று சிலாகித்த செல்வன் அவர்களிடமிருந்து என்னை விடுவித்து தன்னுடைய அறைக்கு அழைத்துப் போனார். இப்படித் தான் செல்வனுக்கும் எனக்குமான பரிச்சயம் தொடங்கியது.

அதற்கப்புறம் சீனியர்களிடமிருந்து எனக்கு ராக்கிங் தொந்தரவு என்பதே சுத்தமாய் இல்லை. செல்வனின் அறையில் சர்வ சாதாரணமாகப் புழங்கத் தொடங்கினேன். அவரின் அறைவாசிகளும் எனக்கு நண்பர்களானார்கள். செல்வன் அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் ஒரு நோட்புக்கில் தொகுத்து வைத்திருந்தார். எல்லாமே காதல் கவிதைகள்! அந்த கவிதை நோட்டை ஒருநாள் என்னிடம் கொடுத்துப் படித்துப் பார்க்கச் சொன்னார்.

கவிதைகளைப் படித்து விட்டு “சுய அனுபவத்தின் சுவடுகளைச் சுமந்த கவிதைகள்”என்ற தலைப்பில் என் வாசக அனுபவங்களை சிறு கட்டுரையாக எழுதித் தரவும் நெகிழ்ந்து போய் விட்டார். இந்தக் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடப் போவதாகவும் அப்போது இந்தக் கட்டுரையை முன்னுரையாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் சொன்னார். ஆனால் அவர் சந்தித்த பதிப்பாளர்கள் எல்லாம் அவரின் செலவிலேயே தான் புத்தகம் போட முடியும் என்று சொல்லி விட்டதால், அதில் ஆர்வம் காட்டவில்லை. அந்தப் புத்தகமும் வெளி வரவே இல்லை.

கவிதைப் போட்டிகளுக்கு கல்லூரி சார்பில் என்னையும் அழைத்துப் போனார். அவரின் கவிதைகளுக்கு பரிசு கிடைக்காவிட்டாலும் எனக்கு பரிசு கிடைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒருமுறை சென்னை கல்லூரி ஒன்றில் கல்லூரிகளுக்கிடையிலான கவிதைப் போட்டியில் எங்கள் இருவரின் கவிதைகளுக்குக் குழுப் பரிசும், என்னுடைய கவிதைக்கு தனிப்பட்ட மூன்றாம் பரிசும் அறிவிக்கப் பட்டது.

ஆனால் பரிசளிப்பு விழாவின் போது மூன்றாம் பரிசை வேறொரு சென்னைக் கல்லூரிக்குக் கொடுத்து விட்டார்கள். அவர்களின் கல்லூரிக்கு கவிதைக்கு ஏதாவது பரிசு கொடுக்க வில்லையென்றால் பெரிதாய் கலாட்டாப் பண்ணி விழாவைத் தொடர்ந்து நடத்த முடியாமல் பண்ணி விடுவதாய்ப் பயமுறுத்தவும் எனக்கு அறிவித்த பரிசை அந்தக் கல்லூரிக்குக் கொடுத்து விட்டார்கள்.

இதை அறிந்ததும் செல்வன் கல்லூரியின் விழாக் குழுவினர்களுடன் சண்டைக்குப் போய் விட்டார். நான் தான் போகட்டும் விடுங்கள் என்று சமாதானப் படுத்தி அவரை அழைத்து வந்தேன்.

ஒரு செமஸ்டர் விடுமுறையில் என்னை அவருடைய சொந்த ஊருக்கு அழைத்துப் போயிருந்தார். கரூருக்குப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம். எளிமையான ஏழ்மையான விவசாயக் குடும்பம். அவரின் அண்ணன் மெயின் ரோட்டில் சின்னதாய் ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அவர்களின் குடும்பம் ரொம்பவும் உள்ளே, குத்தகைக்கான விவசாய நிலத்தில் குடிசை போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவரின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என்று மொத்தக் குடும்பமும் என்னைப் பிரியமாய்ப் பார்த்துக் கொண்டது.

ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் செல்வன் தன்னுடைய காதலைப் பற்றிச் சொன்னார். சோலையார் டேமில் அவரின் குடும்பம் தங்கியிருந்த போது அங்கு தான் ஷீலாவைச் சந்தித்திருக்கிறார். செல்வனுடன் படித்த ஒரு நண்பனின் தங்கை. சாதாரணப் பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறி விட்டது. அந்தத் தருணத்தை அப்படியே காதலும் கவிதையும் கலந்து வருணித்தது இப்போதும் நெஞ்சிற்குள் அலையடிக்கிறது. ஷீலாவின் குடும்பம் தற்போது பொள்ளாச்சி யில் வசிப்பதாகவும், ஷீலா அங்குள்ள கல்லூரி ஒன்றில் மாஸ்டர் டிகிரி படித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.                                ஷீலாவிடமிருந்து வரும் கடிதங்களைக் கூட நான் படித்துப் பார்க்க அனுமதித்தார். அவர் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்த போது அப்படி அவளிடமிருந்து அவசரமாய் வந்திருந்த ஒரு கடிதத்தைக் காட்டினார். அதில் ஒரு குறிப்பிட்ட நாளில் செல்வனை அவளுடைய கல்லூரியில் வந்து சந்தித்தே ஆக வேண்டுமென்றும் அது முடியாத பட்சத்தில் நாம் வாழ்க்கையில் சந்திக்கவே முடியாமல் போனாலும் போகலாம் என்றும் எழுதியிருந்தாள். அந்தக் கடித வரிகளுக்குள் இழையோடிய பதட்டத்தையும் அவசரத்தையும் என்னாலும் வாசிக்க முடிந்தது.

ஆனால் அன்றைய தினத்தில் செல்வனுக்கு செமஸ்டர் பரீட்சை இருந்தது. செல்வன் தனக்கு ஷீலாவைப் போய்ப் பார்ப்பதே முக்கியம் என்று சொல்லி அன்றைக்கு அவளைப் போய்ப் பார்ப்பதற்குக் கிளம்ப இருந்தார். நான் தான் அவரைத் தடுத்து நிறுத்தி, “நீங்கள் போய் பரீட்சை எழுதுங்கள்; வேண்டுமானால் நான் போய் ஷீலாவைப் பார்த்து செய்தியை அறிந்து கொண்டு முடிந்தால் அவளைச் சமாதானப் படுத்தி விட்டு வருகிறேன்” என்றேன்.                                             பொள்ளாச்சியில் இறங்கி ஷீலாவின் கல்லூரியைக் கண்டு பிடிப்பதில் ஒரு பிரச்னையும் இருக்கவில்லை. ஆனால் அன்றைக்குத் திடீரென்று ஏற்பட்ட ஏதோ உள்ளூர்ப் பிரச்னையின் பொருட்டு கல்லூரிக்கு விடுமுறை விட்டிருந்தார்கள் என்பதை அங்கு போனபின்பு தான் அறிய முடிந்தது. சிலர் கல்லூரிக்குள் போய் வந்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் வாட்ச்மேன் என்னை உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை. வெளியாட்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாதென்பது பிரின்சிபாலின் கண்டிப்பான உத்தரவு என்று அவர் சொல்லிவிட்டார்.

எனக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கல்லூரிக்கு வெளியிலிருந்த தூங்குமூஞ்சி மரமொன்றின் நிழலில் நின்றபடி யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கென்னவோ ஷீலா கல்லூரிக்கு உள்ளே தான் இருப்பதாக உள்ளுணர்வு சொன்னது. அதனால் காத்திருக்கத் தொடங்கினேன்.

இராமனின் சார்பில் சீதையைச் சந்திக்க வந்த அனுமனாக என்னைப் பாவித்துக் கொண்டேன். நான் இராமனின் தூதுவனென்று அடையாளப் படுத்திக் கொள்ள கணையாழி எதுவுமில்லை. அவசரமாய்க் கிளம்பி வந்ததில் செல்வனிடமிருந்து ஒரு கடிதம் கூட வாங்கி வரவில்லை. ஷீலாவைப் புகைப்படத்தில் கூட இதற்கு முன்பு நான் பார்த்திருக்கவில்லை.ஆனாலும் அவளை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கை.

கொஞ்ச நேரம் கழிந்ததும் தூரத்தில் ஆறேழு பெண்கள் பேசிச் சிரித்தபடி கும்பலாக வந்து கொண்டி ருந்ததை பார்க்க முடிந்தது. எனக்கெனவோ அதில் ஷீலாவும் இருக்கிறாள் என்று தோன்றியது. அவர்கள் ஹேட்டைத் திறந்து கொண்டு வந்ததும், அதில் கண்களும் கூந்தலும் அலைபாய, ஒல்லியாய் வெடவெடன்று உயரமாயிருந்த புது நிறப் பெண்ணிடம் போய் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “நீங்கள் ஷீலா தானே…!” என்றேன்.

அவள் ஆச்சர்யம் பொங்க என்னைப் பார்த்து ஆமென்று தலையசைத்து, அந்த பெண்களிடமிருந்து விலகி வந்து என்னிடம் மெதுவாக என் பெயரைச் சொல்லி, அது தானே நிங்கள் என்று உறுதிப் படுத்திக் கொண்டு “செல்வன் அனுப்பினாரா?”என்றாள். அவள் கேட்டதிலிருந்து செல்வன் என்னைப் பற்றி ஷீலாவுடன் ஏற்கெனவே பேசியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நாங்கள் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம். முதல் கேள்வியே, “எப்படி நான் தான் ஷீலா என்று அத்தனை சரியாக கண்டுபிடித்தீர்கள்….” என்று ஆச்சர்யமாய்க் கேட்டாள்.

”அதுவொன்றும் பெரிய விஷயமில்லை; செல்வனின் கவிதைகளை வாசித்திருந்தால் ஆயிரம் பெண்களுக்கு மத்தியிலிருந்தும் ஷீலாவைத் வெகு சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம்; நட்சத்திரங்களுக்கு மத்தியிலிருந்து நிலவைக் கண்டு பிடிப்பதைப் போல ”என்றேன்.      சந்தோஷமாய்ச் சிரித்தாள்.

செல்வனுக்குப் பரீட்சை என்றும் அதனால் தான் என்னை அனுப்பி வைத்தார் என்றும் சொன்னேன்.

”எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தொடங்கி விட்டது. இன்றைக்குக் கூட ஒருத்தரின் குடும்பம் என்னைப் பார்க்க வரப் போகிறார்கள்… எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை; இன்றைக்கு ஒருநாள் இதைச் சமாளிக்கலாம். ஆனால் தொடர்ந்து இந்த மாதிரியான சூழலைத் தவிர்க்க முடியுமா என்று தெரியவில்லை. கண்டிப்பாக செல்வனும் நானும் காதலிக்கிற விஷயத்தை வீட்டில் சொல்லிவிட நேரலாம்….

இதனால் கோபங் கொள்ளும் என்னுடைய அண்ணன் அவரைத் தொடர்பு கொண்டு ஏதாவது விபரீதங்கள் நிகழலாம்; அதைச் சொல்லி செல்வனை எச்சரிக்கவே அவரை வரச் சொன்னேன். ஆனால் செல்வனிடம் சொல்லுங்கள், என்ன நேர்ந்தாலும் அவருக்கு மட்டுமே மனைவியாவேன்; அது முடியாத பட்சத்தில் மண்ணோடு மண்ணாகினாலும் ஆவேனே தவிர இன்னொருவனை எக்காரணம் கொண்டும் மணந்து கொள்ள ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன்.

அதனால் அவரைத் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள்; அதே சமயத்தில் சீக்கிரம் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்… ” என்றவள் தீர்மானமாகச் சொன்னாள்.

“ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் எங்களின் வீட்டாரின் சம்மதமில்லாமல் செல்வனைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். எங்களின் வீட்டாருடன் சண்டை போட்டோ சத்யாக்கிரகம் பண்ணியோ அவரை மணந்து கொள்வதற்கு சம்மதம் பெறுவேன்; அதுவரை அவர் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்….” அவளின் உறுதியும் பிடிவாதமும் என்னை மலைக்கச் செய்தது. முதல் முறையாக எனக்கும் ஷீலா மாதிரியான ஒரு காதலி கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று தோன்றியது.

செல்வன் பரீட்சையெல்லாம் முடித்துவிட்டு பொள்ளாச்சிக்குக் கிளம்பிப் போனார். ஷீலா வீட்டில் இவருடைய காதலைச் சொல்ல, ஏற்கெனவே அதைக் ஷீலாவின் மூலம் அறிந்திருந்த அவளின் குடும்பமே இவரைத் தெருவில் போட்டு புரட்டிப் புரட்டி அடித்து அனுப்பியிருந்தது.

ஷீலாவால் அழுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் வேறு யாருடனும் தன்னைக் கல்யாணம் செய்வித்து அனுப்புவதை அவள் கடைசிவரை ஒத்துக் கொள்ளவே இல்லை. மணந்தால் செல்வன்; அது முடியாத பட்சத்தில் மரணிப்பேன்; அல்லது கிறிஸ்துவ மதத்தைத் தழுவி ’நன் (nun)’ ஆகப் போய் விடுவேன் என்றும் சொல்லி விட்டாள்.

அவர்களும் கொஞ்ச நாள் விட்டுப் பிடிக்கலாம் என்று இரண்டு வருஷங்களுக்கு ஷீலாவின் கல்யாண ஏற்பாடுகளைத் தள்ளி வைத்திருந்தார்கள். ஆனால் அப்புறமும் அவளின் பிடிவாதமும் முரண்டும் கொஞ்சமும் தளர வில்லை என்றதும் இறங்கி வந்தார்கள். சமாதானம் பேசுவதற்கு செல்வனை வரச் சொல்லி தகவல் அனுப்பியிருந்தார்கள்.

அப்போது செல்வனும் நானும் சென்னையில் தான் பணியிலிருந்தோம். அதனால் பொள்ளாச்சிக்குப் செல்வனுடன் நானும் போயிருந்தேன். சாதிமாறி ஷீலாவிற்கு கல்யாணம் செய்வித்தால் அவளின் தங்கைக்கும் அண்ணனுக்கும் அப்புறம் திருமணம் முடிக்க முடியாமலே போய் விடும் என்றார்கள்.

செல்வனும் ஷீலாவும் ஒரே குரலில் சொன்னார்கள். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருக்கிறோம்; முதலில் அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்வித்து அனுப்பி விடுங்கள் என்றார்கள். அது நடை முறையில் சாத்தியமில்லை என்றும் அக்காள் இருக்கும் போது தங்கைக்கு ஒரு போதும் கல்யாணம் செய்து அனுப்ப முடியாது என்றும் அது உறவினர்கள் மத்தியில் நிறைய கேள்விகளை உருவாக்கும் என்றும் சொல்லி என்னை செல்வனிடம் எடுத்துச் சொல்லச் சொன்னார்கள். காதலுக்குத் தூது போனவனையே காதலைத் துறக்கச் சொல்லவும் தூதனுப்பினார்கள்.

அவர்களின் கல்யாணத்தை மறுதலிக்க இத்தனை காரணங்களை அடுக்குகிறீர்களே, அவர்களைக் கல்யாணம் செய்வித்து அனுப்ப ஒரே ஒரு காரணம் கூடக் கிடைக்கவில்லையா உங்களுக்கு என்றேன் நான். வேறு வழியில்லாமல் ஷீலாவின் அண்ணனுக்கும் தங்கைக்கும் கல்யாணம் ஆவது வரை அவர்கள் காத்திருக்க வேண்டுமென்றும் அதுவரை வெளியில் எங்கும் சேர்ந்து செல்லக் கூடாது என்றும் சொல்ல, நாங்கள் சென்னைக்குத் திரும்பி வந்து விட்டோம்.

சென்னைக்குத் திரும்பிய சில நாட்களிலேயே செல்வன் எங்கள் கம்பெனியின் மாதச் சம்பள வேலையை உதறி விட்டு சொந்தமாய் கட்டிடம் கட்டித் தரும் வேலைகளை எடுத்துச் செய்யத் தொடங்கினார். அதன் நீட்சியாக கோயம்புத்தூரில் நிறைய புது வேலைகள் வரவும் சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்குப் போய் விட்டார்.

என்னையும் பிஸினெஸ் பார்ட்னராகச் சேர்ந்து கொள்ளும்படி அழைத்தார். எனக்கு பிஸினெஸ் ஒத்து வராது என்பதாலும் பார்ட்னர்ஷிப் என்பது ஒரு கட்டத்தில் நட்பை முறித்துப் போட்டு விடும் என்கிற நிதர்சனம் புரிந்ததாலும், எதற்காகவும் நட்பை இழக்க விரும்பாததாலும் அவரின் அழைப்பை மறுத்து சென்னையிலேயே மாதச் சம்பளக்காரனாகவே தொடர்ந்தேன். கொஞ்ச நாள் இருவருக்கும் கடிதத் தொடர்பு இருந்தது.

அப்புறம் அது கொஞ்சங் கொஞ்சமாய்ச் சுருங்கி ஒரு கட்டத்தில் இல்லாமலே போய் விட்டது. இதோ இப்போது செல்வனின் அதிர்ச்சியூட்டும் திருமணப் பத்திரிக்கை! அதிகாலை நான் கோயம்புத்தூரில் போய் இறங்கினேன். அப்போது செல்வன் நல்ல தூக்கத்திலிருந்தார். அவர் என்னைக் கொஞ்சமும் எதிர் பார்த்திருக்கவில்லை என்பது அவரின் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

தூக்கக் கலக்கம் கலையாமலே “வாங்க வாங்க… கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னாடியே வந்துட்டீங்களே! ரொம்பச் சந்தோஷம்; அதும் நல்லது தான்; நிறைய வேலை கெடக்கு….” என்று வரவேற்றார்.

”ஷீலாவுக்கு என்னாச்சு செல்வன்…?” என்றேன் பதட்டம் குறையாமல். “ஏன் அவளுக்கென்ன? பொள்ளாச்சியில நல்லாத் தானே இருக்குறா…..! விடிஞ்சதும் வேணுமின்னாப் போய் பார்த்துட்டு வரலாம்….”என்றார்.

“அதுக்கில்ல செல்வன்; ஏன் அவங்கள விட்டுட்டு வேற பொண்ணக் கல்யாணம் பண்றீங்க; அவங்க வீட்ல கடைசி வரைக்கும் சம்மதிக்கவே இல்லையா?”

”என்னாச்சு உங்களுக்கு ? விடிஞ்சும் விடியாத பொழுதுல வந்து என்னென்னவோ உளறிக் கிட்டிருக்கீங்க?”செல்வனின் முகத்தில் இலேசாய்க் கோபம் எட்டிப் பார்த்தது.

நான் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துக் காட்டி “பாருங்க செல்வன் வால்பாறையைச் சேர்ந்த ரங்கநாயகியை அல்லவா மணப்பெண்ணாகப் போட்டிருக்கிறது….”என்றேன். தூக்கங் கலைந்த செல்வன் விடாமல் சிரித்தார். ”சரியாப் போச்சு; இதுக்காகவா இவ்வளவு தூரம் பதட்டமா கிளம்பி வந்துருக்கிறீங்க…ஷீலாங்குறது வீட்லயும் வெளியிலயும் கூப்புடுற செல்லப் பேரு; சர்ட்டிபிகேட் படியும் சாஸ்திரப்படியும் அவள் நிஜப்பேரு ரங்கநாயகி…. அவங்களோட பூர்வீகம் வால்பாறை….” என்றார். அசடு வழிவதைத் தவிர வேறு வார்த்தைகளில்லை என்னிடம்.

  • முற்றும்
Series Navigation
author

சோ சுப்புராஜ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *