ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-9

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

வையவன்

காட்சி-9

இடம்: ஒரு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம்.

பாத்திரங்கள்: ஆனந்தராவ், ஆனந்தலட்சுமி, ரங்கையர்.

(சூழ்நிலை: ஆட்டோவிலிருந்து ரங்கையர், ஆனந்தராவ், ஆனந்தலட்சுமி மூவரும் இறங்குகின்றனர். ஆட்டோ டிரைவர் ஆனந்தலட்சுமியின் பெட்டி படுக்கையை எடுத்து கீழே வைக்கிறார்)

ஆனந்தராவ்: ரங்கா அந்த போர்ட்டரை கூப்பிடு.

ரங்கையர்: போர்ட்டர் எதுக்குண்ணா? பெட்டியை நான் எடுத்துக்கறேன். படுக்கை சின்னதாத்தானே இருக்கு. மன்னி எடுத்துக்கறா!

ஆனந்தராவ்: இதிலே வந்து நீ சிக்கனம் பார்ப்பே! (கை தட்டிக் கூப்பிடுகிறார்) போர்ட்டர்… போர்ட்டர்… இங்கே வா! இந்த சாமானை எடு! வெஸ்ட் கோஸ்ட் நிக்கறது எங்கே? அந்த பிளாட்பாரத்துக்குக் கொண்டு போ.

ரங்கையர்: நான் பெட்டி படுக்கையோட மின்னாடி போறேண்ணா, நீங்களும் மன்னியும் நிதானமா வாங்கோ!

ஆனந்தராவ்: டயம் ஆய்ட்டதோ!

ரங்கையர்: டயம் இருக்கு… நாலே முக்காலுக்குத்தான் ட்ரெய்ன். நான் போறேன்.

ஆனந்தராவ்: சரி!

ஆனந்தலட்சுமி: (ரங்கையர் அகன்றபின்) ரங்கையன் அப்படியே இருக்கான். பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி காட்டின மரியாதை! இன்னும் மன்னி மன்னிங்கறான்.

ஆனந்தராவ்: ம்…ம்…!

ஆனந்தலட்சுமி: என்ன யோசனை பண்றேள்?

ஆனந்தராவ்: எவ்வளவு சொல்லியும் நீ கேக்கலியே? கங்காபாய்ட்டே சொன்னேன். நாளைக்கு வந்து ஒன்னைப் பார்க்கறேன். பேசிக் கூட்டிண்டு வந்துடறேன்னா. காலையிலே தர்மபுரிக்குப் போனா… ஒரு கிரகப் பிரவேசம். இன்னிக்கு மத்தியானம் வருவா… நீ திடும்னு கௌம்பறேன்னுட்டே.

ஆனந்தலட்சுமி: அக்காட்டே சொன்னேளா? ஏன் சொன்னேள்?

ஆனந்தராவ்: சொன்னதுலே என்ன தப்பு?

ஆனந்தலட்சுமி: மொத மொதல்லே நேக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுப் போச்சுண்ணு அக்காட்டே சொல்லிட்டேண்ணு சொன்னது நெனவிருக்கா?

ஆனந்தராவ்: ம்ம்… இருக்கு.

ஆனந்தலட்சுமி: அப்ப அவ ஒண்ணுமே பேசலே மௌனமா இருந்துட்டா… அவளுக்கும் ஒங்களுக்கும் மத்தியிலே ஒரு கதவு சாத்திண்ட மாதிரி ஒரு வித்தியாசம், ஒரு நிசப்தம் தெரிஞ்சதுன்னேளே.

ஆனந்தராவ்: இதையெல்லாம் அப்படி மறக்காம, ஒன்னால எப்படி நெனப்பு வச்சிண்டிருக்க முடியறது?

ஆனந்தலட்சுமி: பொம்மனாட்டியாப் பொறந்தவா இதையெல்லாம் மறக்க மாட்டா… ம்ஹ்ம், அப்படி ஒரு பின்னம் விழுந்த மனசோடதான் அக்கா எங்கிட்டே வந்து ஒன்னை மடிப்பிச்சை கேட்கறேன்னு வந்து நின்னா.

ஆனந்தராவ்: அது மட்டுமில்லை. ஒங்க மாமனார் வீட்டிலே நீ விதவை யானப்பறம் சொத்து தராம ஏமாத்திட்டாங்களே… அதுக்கு நீ நோட்டீஸ் கொடுத்ததும் தடியும் கம்புமா ஆட்கள் என்னைத் தாக்க வரவே, அவ பயந்துட்டா!

ஆனந்தலட்சுமி: அது நடந்து ரெண்டு வருஷம். கேஸ் நடந்த கோர்ட் தீர்ப்பு என் பக்கம் ஆனப்பறம் தானே, அக்கா என்கிட்டே வந்து அப்படி நின்னா… ரெண்டு வருஷம் கச்சேரித் தெருவிலே தனி வீடு வச்சு குடித்தனம் பண்ணப்பறம்தானே!

ஆனந்தராவ்: வாஸ்தவம்… ஆனா கேஸ் தீர்ப்பிற்கு அப்புறம், எல்லாத்துக்கும் நான்தான் காரணம்… என்னைத் தொலைக்காம விடறதில்லேண்ணும் கொலை பண்ணிடப் போறோம்னும் அவங்க சொல்லிட்டு அலைஞ்சாங்க. ஹோட்டல் கட்டிடச் சொந்தக்காரர் கிட்டே சொல்லி எடத்தைக் காலி பண்ண ஏற்பாடு பண்ணினாங்க! அதெல்லாம் அவளுக்கு பயம்.

ஆனந்தலட்சுமி: எவ்வளவோ நடந்து போச்சு! அக்கா அப்படிச் சொன்னதும்தான் நான் எதைப் பறிச்சுண்டேன்னு புரிஞ்சது. ஆச்சு கௌம்பியாச்சு… இப்ப நான் வந்த விஷயத்தைச் சொல்லி, நீங்க அவ மனசிலே பாரம் ஏத்தியிருக்க வேண்டாம்.

ஆனந்தராவ்: இதுல பாரம் என்ன இருக்கு? முப்பத்தி அஞ்சு பவுன் நகைகளை நீ வாய் பேசாம கழட்டிக் கொடுத்தேங்கற விஷயம் அவளுக்கும் தெரியும். அவளுக்கு அவளோட பாரம்.

ஆனந்தலட்சுமி: இதையெல்லாம் அக்காட்டே எதுக்குச் சொன்னேள்?

ஆனந்தராவ்: ஒனக்குத் தர வேண்டியவன், வாங்கிண்டேனே சொல்லணு மோல்லியோ (மடியிலிருந்து ஒரு பிளாஸ்டிக் கவரை எடுக்கிறார்) இந்தா?

ஆனந்தலட்சுமி: என்னது அது?

ஆனந்தராவ்: அந்த நகைகள்! பத்திரமா மீட்டு பாங்க் லாக்கர்லே போட்டு வச்சிருந்தேன்.

ஆனந்தலட்சுமி: இதை என்னத்துக்கு இப்ப எங்கிட்ட தர்றேள்?

ஆனந்தராவ்: ஒன்னிது தானே! ஒங்கிட்டே தராம யார் கிட்டே தரட்டும்?

ஆனந்தலட்சுமி: அப்போ நம்மோடதுண்ணு எதுவும் இல்லே?

ஆனந்தராவ்: (உணர்ச்சி வசப்பட்டு) லட்சுமி.

ஆனந்தலட்சுமி: ஏதோ பாக்கி தீர்த்து ஹத்து கழிக்கறாப்லன்னா இருக்கு!

ஆனந்தராவ்: லட்சுமி! இந்த ஹோட்டல் ஒன்னோடது! நான்… நான்கூட ஒன்னோடவன்தான்!

ஆனந்தலட்சுமி: அப்போ இது எதுக்கு? நான் பிராயச்சித்தத்துக்குக் காசிக்குப் போறேன்! யார் யார் பொழப்பிலயோ நொழைஞ்ச பாவத்தைக் கரைச்சுடணும்ணு கங்கா தேவி மடிக்குப் போறேன். இது நேக்கு ஒரு சொமை.

ஆனந்தராவ்: வாங்கிக்க மாட்டியா?

ஆனந்தலட்சுமி: ஒங்க மனசைத் தொட்டுப் பாருங்கோ! நேக்கு பிராப்தமில்லே… கேவலம் என் நகைகளுக்குக் கூட ஒங்களோட இருக்கிற பிராப்தம் கெடையாதா.

ஆனந்தராவ்: கிருஷ்ண கிருஷ்ண…

ஆனந்தலட்சுமி: என் மருமாள் கழுத்திலே போடுங்கோ! நடுவில் வந்தவ நகை வேணாம்னா அக்காவுக்குத் தோணினா ரங்கையன் பொண்ணு ஜம்னா கழுத்திலே போடுங்கோ… அது காதையும் மூக்கையும் மட்டும் மறைச் சுண்டிருக்கு. கழுத்திலே ஒண்ணுமில்லே. ஆ… ஆங் (ஏதோ நினைவு வந்தவளாக) சொல்ல மறந்துட்டேன். ரங்கையன் எங்கே நிக்கறான்?

ஆனந்தராவ்: தூரத்திலே இருக்கான் கூப்பிடவா?

ஆனந்தலட்சுமி: வேணாம் வேணாம்! அவனுக்குக் காது கேக்கப்படாதுண்ணு தான் விசாரிச்சேன்!

ஆனந்தராவ்: என்ன விஷயம்?

ஆனந்தலட்சுமி: ஜம்னாக்கு ரங்கையன் எப்போ கல்யாணம் பண்ணப் போறான்?

ஆனந்தராவ்: பெரிய பையன் வியாபாரக் கப்பல்லே சீமையைச் சுத்திண்டிருக்கான். அடுத்த லீவிலே வருவான் வரச்சே பண்ணிடுவான்.

ஆனந்தலட்சுமி: எவ்வளவு நாளாகும்?

ஆனந்தராவ்: நாலஞ்சு மாசமாகும் ஏன்?

ஆனந்தலட்சுமி: அவ்வளவு நாள் தள்ளப்படாது! அந்தப் பெண் யாரோ எதிர்த்தாத்துப் பையன் ஒருத்தன் கிட்டே சிநேகமா இருக்கா! அந்தப் பையன் பார்வையும் மொகமும் சரியில்லே… ஃப்ராடு நடந்துடப்படாது! நீங்க ஜாடை மாடை சொல்லுங்கோ.

ஆனந்தராவ்: ஜம்னாவா அப்படி?

ஆனந்தலட்சுமி: அவளே தான். (ரயில் வருகைக்கு மணி அடிக்கும் ஒலி)

ரங்கையர்: (தூரத்திலிருந்து) அண்ணா… அண்ணா… மணி அடிச்சுடுத்து!

ஆனந்தராவ்: தோ வர்றோம். லட்சுமி மறுபடியும் எப்படி பார்க்கறது?

ஆனந்தலட்சுமி: ரொணம் இருந்தா எப்பவாவது…

ஆனந்தராவ்: கிருஷ்ண கிருஷ்ண.

(திரை)

[தொடரும்]

Series Navigation
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *