தந்தையானவள். அத்தியாயம் 5

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

பட்டுவாடா செய்யப்படவேண்டிய கருவூல பில்களை சரிபார்த்துவிட்டு ராஜேஸ்வரி கணினியில் பதிவு செய்யத் தொடங்கினாள். ராஜேஸ்வரியின் பணியின் நேர்த்தி குறித்து மேலதிகாரிகள் அவளை பாராட்டாமல் இருந்ததில்லை. கற்றுக் கொள்ளும் தொழிலை கவனமாகவும், திறமையுடன் கற்றுக் கொண்டால் பெண்கள் அவர்களது பால்நிலை காரணமாக இழிபடத்தேவையில்லை என்றுதான் அவளுடைய சீனியர் கிருஷ்ணமூர்த்திசார் சொல்லி கொடுத்தது. வார்த்தையை வளர்ப்பது அவளிடம் அறவே இல்லை என்பதால் அனாவசிய பேச்சிற்கு இடமில்லை. கடைநிலை ஊழியர்களிலிருந்து உயரதிகாரிகள் வரை அவள் வெறும் ராஜேஸ்வரி இல்லை. ராஜேஸ்வரி மேடம்.
தொலைபேசி மணி ஒலித்ததும் கவனம் கலைந்து ராஜேஸ்வரி நிமிர்ந்தாள்.
ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அவளுடைய தோழி விஜயலட்சுமி அழைப்பதாகக் கூறியிருந்தாள். சித்ராவின் அரசுப்பள்ளி வேலை நிமித்தமாக அமைச்சர் ஒருவரின் செயலர் மூலம் பரிந்துரைக்க ஏற்பாடு.பரிந்துரைக்க ஆகும் செலவு அதிகமாக இருந்தது. எப்படி பணம் புரட்டினாலும் ஒரு இருபத்தைந்தாயிரம் ரூபாய் துண்டு விழுந்தது. பல நிதிநிறுவனங்கள் அரசு மற்றும் கார்பரேட் ஊழியர்களுக்கு கொள்ளை வட்டியில் கடன் கொடுக்க முன்வந்திருக்கும் இந்த காலகட்டத்தில் அப்படி ஒரு நிதிநிறுவனத்தின் முகவரை சந்திக்க விஜயலட்சுமி ஏற்பாடு செய்திருந்தாள். அவள் தொலைபேசிக்காகத்தான் காத்திருந்தாள்.
அடுத்தமுறை தொலைபேசி அழைப்பு வந்ததும் பியூன் அழகேசன் எடுத்து “ ராஜேஸ்வரி மேடம் உங்களுக்கு போன் “ என்றான்.
விஜயலக்ஷ்மிதான் அழைத்தாள். உடனே அவளை கிளம்பி ஒரு குறிப்பிட்ட அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு வரச் சொன்னாள்.
ராஜேஸ்வரி தனது மேலதிகாரி முன்பு நின்றாள்.
“ எனக்கு ஒருமணி நேரம் அனுமதி வேண்டும் சார் “
“ உக்காரும்மா “
இல்லை சார் அர்ஜண்ட்டா போய் பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணணும். “
“ போலாம்மா. உக்காரு “
அமர்ந்தாள்.
“ அக்காவுக்கு கலியாணம் பண்ணி வைக்கிறேன்னு இருக்கும் சேமிப்பையெல்லாம் செலவு பண்ணிட்ட. உனக்கு என்ன மிச்சம் ? அன்னைக்கு உங்கம்மாவை கடைவீதியில் பார்த்தேன். ரொம்ப வருத்தப்படுறாங்க. கலியாணமே பண்ணிக்க மாட்டேன்னு சபதம் எடுத்திருக்கியா? ஒங்கப்பா சுந்தரமூர்த்தி இருந்திருந்தா ரொம்ப வருத்தப்படுவாம்மா “
“ அப்பா உயிரோட இருந்தா உங்ககூட நான் இப்படி உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்க மாட்டேன் சார் “
ஏன் தன்னுடைய நாக்கு இப்படி ஒரு கொடுக்காக மாறியது என்று அவளுக்குப் புரியவில்லை. முகத்தில் அடிப்பது மாதிரி பதில் கூறினாலும் மேலும் மேலும் தன் சொந்த விஷயங்களில் தலையிடும்மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதுபோல தோன்றியது.
“ அது என்னவோ வாஸ்தவம்தான் “ சொன்ன மேலதிகாரி அவள் பதிலின் தன்மையையும் அதன் முரணையும் நினைத்து சற்று மனம் வாடியதை முகத்தில் காட்டினார். இப்படி உண்மையிலேயே தன் மீது அக்கறை உள்ள மனிதர்களைக் கூட தான் கடுமையான பதில்கள்மூலம் வெட்டிவிட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்குக் கூட தான் ஒரு பெண் என்பதாலா?
“ இது எனக்கு கிடைச்ச வேலை இல்லை சார். என் குடும்பத்திற்கு கிடைச்ச வேலை. இதை நான் இன்னும் எத்தனை பேரிடம் சொல்லி விளங்கவைக்கனுமோ தெரியலை “ என்றாள் கொஞ்சம் சமாதானமாக.
“ புரியுதும்மா. என் பழைய சிநேகிதனின் பெண்ணாச்சே அப்படிங்கற ஆதங்கம். சரி போயிட்டு வா “
ராஜேஸ்வரி கிளம்பினாள்.
விஜயலட்சுமி அழைத்துக் கொண்டுபோன வங்கிக் கிளையின் வாசலிலேயே அந்த நிதிநிறுவன முகவர் நின்றுகொண்டிருந்தான்.
“ மேடம்” வங்கியில் அவர்கள் சேமிப்புகணக்கு துவங்குவதற்கான விண்ணப்பப் படிவங்களை பார்வையிட்ட பெண் ஊழியர் ராஜேஸ்வரியை அழைத்தாள். சுடிதார் துப்பட்டா கழுத்தில் வங்கியின் அடையாள அட்டை தொங்க புதுக்கருக்கு அழியாத மஞ்சள் கயிறு பளிச்சென்று தெரியும்படி நெற்றி வகிட்டின் நுனியில் குங்குமதீற்றுடன் காணப்பட்ட அந்தப்பெண் ஊழியர் எந்தவகை மோஸ்தர் என்று ராஜேஸ்வரி ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
“ கணவர் பெயர் என்ற இடத்தில் நீங்க எதுவும் பூர்த்தி பண்ணாம விட்டுட்டீங்க “ என்றாள் அவளிடம் படிவத்தை நீட்டியபடி.
“ எனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை “
“ ஓ மன்னிக்கவும் “
“ பரவாயில்லை கண்டிப்பா பூர்த்தி செய்யணும்னா விஜய் இல்லாட்டி அஜித் இதுல ஒரு பெயரை பூர்த்தி பண்ணி தரேன் “ என்றாள் சிரித்தபடி.
அந்தப்பெண்ணும் சிரித்துவிட்டு அவளை காத்திருக்க சொன்னாள்.
‘ இவள் போன்ற பெண்களுக்கு என்னைப்போன்ற பெண்களைத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை ‘ என்று ராஜேஸ்வரி நினைத்துக் கொண்டாள்.
பூர்வாங்கப்பணிகள் முடிந்ததும் அந்த முகவர் தன் கையோடு கொண்டு வந்திருந்த காசோலையை கணக்கில் மாற்றி கையில் சுளையாக இருபத்தைந்தாயிரம் ரூபாயை கொடுத்தான்.
“ தாங்க்ஸ்” என்றாள் விஜயலக்ஷ்மியிடம்.
“எதுக்கு சும்மா நன்றியெல்லாம் ? ஒன்ன மாதிரி கொஞ்சம்கூட சுயநலமில்லாம வீடு குடும்பம்னு கதியா கிடக்கிற ஒருத்தி எனக்கு சிநேகிதியாக கிடைச்கதுக்கு நாந்தான் கடவுளுக்கு நன்றி சொல்லணும்”
“ ரொம்ப புகழ்ந்து சிலுவையில் அறைஞ்சுடாதீங்கப்பா “ என்று விஜயலட்சுமி சொன்னதை புன்னகையில் மறுத்தாலும் அன்று முழுவதும் அவள் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தாள். தன்னைவிடவும் தன்னைப்பற்றி கவலைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டுவருவது போலிருந்தது. மற்றவர்களின் இரக்கப்பார்வை காரணமாக தனது உறுதி தளர்ந்து ஒரு நெகிழ்ச்சி ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சினாள்.
மாலையில் வீட்டுக்குள் நுழைந்ததும் ரமா ஒரு சிறியகிண்ணத்தில் பாதாம் ஹல்வா கொண்டுவந்து நீட்டினாள்.
“ என்னது ரமா ஸ்வீட் ? என்ன விசேஷம்? “
“ பாதாம் ஹல்வா . சாபிட்டிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு. “
“ நீ பண்ணினா கேக்கணுமா? எதுக்கு ஸ்வீட் ? “
“ சத்யசீலனோட அம்மாவும் அப்பாவும் வந்திருந்தாங்க “
“ நான் இல்லாதப்போ வரவேணாம்னு சொல்லி திருப்பி அனுப்பிச்சிருக்க வேண்டியதுதானே ? ‘ என்றாள் உடனடியாக.
“ வாசல் வரைக்கும் வந்தவங்களை வராதீங்கன்னு சொல்ல எனக்கு உன்னை மாதிரி மனசு இரும்பில் செய்யலை. நாந்தான் வரச் சொன்னேன்.” என்றார் சொர்ணம்மாள்.
“ என் சம்பந்தப்பட்ட விஷயம் இது. என் சம்பந்தப்பட்ட விஷயத்தை நான் இல்லாதப்போ எப்படி மூணாம் மனுஷங்க இங்க வந்து பேசலாம் ? “
“ சம்பாதிக்கிற திமிருடி உனக்கு “
“ ஒத்த பைசா நான் எனக்காக சேர்த்து வச்சுக்கல “
“ இப்படி சொல்லி சொல்லி கமிக்கிறதா இருந்தா உன் பைசா எங்களுக்கு வேணாம் “
“ அப்ப வீட்டை விட்டு வெளிய எறங்குங்க. பைசா இல்லேனா நாய் கூட சீண்டாது. “
“ ஏன் ராஜிக்கா இவ்வளவு கடுமையா பேசறீங்க ? “ என்று ரமா குறுக்கிட்டாள்.
“ இல்லை ரமா ! எனக்கு இப்படி பேசணும்னு ஆசை கிடையாது. ஆனா நடைமுறை என்னன்னு யோசி. நான் கலியாணம் பண்ணிக்கிட்டு போயிட்டா மொத ரெண்டு வருஷம் இந்த வீடு ரொம்ப திண்டாடும் ரமா. அதுக்கப்புறம் ஒங்க ரெண்டு பேரோட கலியாணம். எனக்கு வந்த வரன் மாதிரியே எதுவும் வேண்டாம்னு வருவாங்களா? ஆயிரம் ஆம்பிளைங்களில் ஒருத்தனுக்கு வேணுமானா நல்ல மனசு இருக்கலாம் . மீதி 999 மாப்பிளைங்களுக்கும் சீர் வேணும் நகை வேணும் பணம் வேணும். ஒரு கலியாணத்துக்கு எவ்வளவு செலவாகும்னு உங்க அம்மாவை விட்டு ஒரு பட்ஜெட் போடச் சொல்லு. ஒரு பேச்சுக்கு சொல்றேன். நாளைக்கு நான் கலியாணம் பண்ணிக்கிட்டு போயிட்டேன். அவங்க வீட்டில் ஒரு தவிர்க்க முடியாத செலவு வருது. இங்க உன் கலியாணம் வருது. அப்ப நான் இந்த வீட்டுக்கு செலவு பண்ணுவேனா? அந்த வீட்டுக்கு செலவு பண்ணுவேனா?”
“ நீ பேசின எல்லா விஷயத்தையும் அவங்களும் பேசியிருப்பாங்க போல. நம்ம சித்ரா கலியாணம் முடியிற வரைக்கும் உன் சம்பளப் பணம் அவங்களுக்கு வேணாமாம்.”
“ சரி அப்படியே ஆனாலும் அம்மாவோட நிலை ? ‘
“ அவுங்க வீட்டு மாடியில ரெண்டு ரூம் கட்டப்போறாங்களாம். அம்மா அங்கயே ஆயுசு பூரா இருக்கலாமாம். “
“ ரொம்ப நல்ல மனுஷங்களா தெரியறாங்கக்கா. வேணாம்னு சொல்லாதயேன் ப்ளீஸ் “ என்றாள் சித்ரா.
ராஜேஸ்வரி பதில் எதுவும் சொல்லாமல் பாலி ரூமிற்குள் சேலையை மாற்றுவதற்குப் போனாள்.
வெளியில் வந்ததும் அம்மா அவளிடம் ஒரு தபால் உறையை நீட்டினார். “ மத்யானம் உன் பேருக்கு தபால் வந்துச்சு “ என்றார். அனுப்புனரின் முகவரி இல்லாமல் உரையின் மேல் முத்து முத்தான கையெழுத்தில் செல்வி.இராசேசுவரி என்று எழுதியிருந்ததைப் படித்துவிட்டு ராஜேஸ்வரி வாய்விட்டு சிரித்தாள்.
உரையைப் பிரித்து கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
அன்புள்ள செல்வி ராஜேஸ்வரிக்கு,
ஓரளு தற்காப்பு உள்ளவர்களுக்கு இதுபோன்ற இடைவிடாத நச்சரிப்பு ஒருவித சலிப்பையும்,வெறுப்பையும் , சந்தேகத்தையும் ஏற்படுத்தும். உங்கள் பார்வையில் நான் முன்னறிவிப்பின்றி உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள்முன் நின்றதும்,மனித எத்தனத்திற்கு அப்பால் ரங்கம்மா டீச்சர் என்னை உங்களுக்குப் பரிந்துரைத்ததும், என்வீட்டிற்கு நீங்கள் வந்திருந்தபொழுது ஒருவர் மாற்றி ஒருவர் என்னைப்பற்றி புகழ்ந்து கூறியதும் எல்லாமே உங்களுக்கு ஒருவித நீண்ட சலிப்பைத் தந்திருக்கும். ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். பெண்கள் குறித்த விசாலமான பார்வை எங்கள் வீட்டில் அனைவருக்கும் உள்ளது என்பதில் நீங்கள் சிறிதும் ஐயப்படவேண்டாம். சகல் வசதிகளும்,சகல சுதந்திந்திரங்களும் ஆண்களுக்குமட்டுமே எளிதாக்கப்பட்ட ஒரு ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களின் தனிச்சிந்தனை குறித்த அறிவும் தெளிவும் எங்களுக்கும் உள்ளது. அதனால்தான் என்னால் ஒரு எழுத்தாளனாக வர முடிந்ததோ? ( ஏற்கனவே சொன்ன விஷயம்தான் இல்ல? பரவாயில்லை. ) எனவே நீங்கள் எடுக்கும் எந்த முடிவிற்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம்.
இப்படிக்கு,
சத்தியசீலன்.
பி.கு. உறை மேலிருக்கும் முகவரி அழகாக இருப்பதற்கு என் தாயாரின் கையெழுத்துதான் காரணம். என்ன சொல்ல வருகிறான் ? இதுபோன்ற முடிவுகளை தான் தனியாக எடுப்பதில்லை என்பதை குறிப்பால் உணர்த்துகிறானா?
ராஜேஸ்வரி கடிதத்தை மூடினாள். ஒருநிமிடம் கண்களை மூடிக் கொண்டாள். மீண்டும் கண்களைத் திறந்து கடிதத்தை முழுவதும் நோட்டமிட்டாள். அவனுடைய ஈ மெயில் முகவரி கிடைத்தது.
அம்மாவின் கையில் கடிதத்தைக் கொடுத்தாள்.
“ நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடு பண்ணச் சொல்லும்மா. சித்ரா வேலை விஷயமா சென்னைவரைக்கும் போகணும். அடுத்தவாரம் வச்சுக்க சொல்லு. “ என்றாள்.
சொர்ணம்மாள் முகம் மலர்ந்தது.
ராஜேஸ்வரி ஒரு தீர்மானத்துடன் கம்ப்யூடர் முன்பு அமர்ந்தாள்.

Series Navigation
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *