தொடுவானம் 38. பிறந்த மண்ணைப் பிரியும் சோகம்.

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

டாக்டர் ஜி. ஜான்சன்

நான் அப்பா பற்றி அதிகம் ஏங்கியபோது எப்படி அவருக்கும் எங்கள் நினைவு வந்தது என்பது தெரியில்லை. ஒரு வேளை மலாயா திரும்பிய பெரியப்பா அப்பாவிடம் சொல்லியிருக்கலாம்.எது எப்படியோ அப்பா எங்களை சிங்கப்பூருக்கு அழைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார்.
அன்றிலிருந்து மண்ணாங்கட்டி உட்பட மற்ற பையன்கள் எல்லாரும் என்னிடம் கவலையுடன் பேசினர். இனிமேல் என்னை பார்க்க முடியாமல் போய் விடும் என்றனர்.நான் அங்கு அப்பாவுடன் தங்கி விடுவேன் என்றனர்.இவர்களில் பால்பிள்ளையும் மண்ணாங்கட்டியும்தான் அதிகம் கவலை கொண்டனர்.பால்பிள்ளை எனக்கு பக்கத்து வீடு. மண்ணாங்கட்டி எதிர் வீடு. அவன்கூட அப்பா இல்லாமல்தான் இருந்தான். அவர் எங்கோ காணாமல் போய்விட்டார்.
ஊரையும், வீட்டையும், தாத்தா பாட்டியையும், பள்ளியையும் நண்பர்களையும் விட்டு விட்டுப் போக எனக்கும் கவலையாகத்தான் இருந்தது . அனால் அப்பாவைப் பார்க்கப் போவது அந்தக் கவலையைக் குறைத்து விட்ட்து.
தாத்தாவுக்கு தெரிந்ததும் அவர் முகமும் வாடிவிட்டது. அவருக்கு நான்தான் உடன் இருந்த செல்ல பேரன். நானும் போய்விட்டால் அவருக்கு காலையில் தேநீர்க் கடைக்குச் செல்ல துணை இல்லாமல் போய்விடும். எனக்கும் அவரைப் பிரியப்போவது கவலை தந்தது. பாட்டி எது பற்றியும் கவலை கொள்ளவில்லை. கிராமத்தில் சமைக்கவும், வீட்டு வேலைகள் செய்யவும் எளிதில் பெண்கள் கிடைப்பார்கள். அம்மா முகத்தில் மகிழ்ச்சி இல்லை. அவர் பிறந்து வளர்ந்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த சொந்த ஊரை விட்டுவிட்டு வெளி நாடு செல்ல பிடிக்கவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவருக்கு அண்ணனின் கவலை வந்துவிட்டது தெரிந்தது. ” என் பிள்ளையை விட்டுட்டு நான் எப்படி போவேன். ” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக்கொள்வார். அண்ணன் தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கி பள்ளி சென்றார். அவருக்கு அப்போது பதினான்கு வயது. பள்ளி விடுமுறைகளில்தான் ஊருக்கு வருவார். அவர் திரும்பும் போதெல்லாம் சீடை, கெட்டி உருண்டை, அதிரசம், முறுக்கு போன்றவற்றை தவறாமல்
செய்து கொடுத்து அனுப்புவார். சிங்கப்பூர் சென்று விட்டால் அவரைப் பார்க்க முடியாமல் போய்விடும். நான் அண்ணனை விட்டுப் போவது பற்றி எண்ணிப் பார்க்கவில்லை. நான் அவருடன் ஒன்றாக வீட்டில் வளரவில்லை. குழந்தைப் பருவத்திலேயே என்னை அவரிடமிருந்து பிரித்துவிட்டனர்!
செல்லக்கண்ணு மாமா ( அம்மாவின் அண்ணன் ) பிரயாண ஏற்பாடுகளில் தீவிரம் காட்டினர். அவருக்கு அம்மா அப்பாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம்.
கட்டுச் சோறுடன் நாங்கள் சிதம்பரம் புறப்பட்டோம். இரண்டு பேருந்துகள் நிற்காமல் சென்றுவிட்டன. நடந்தே போகலாம் என்று மாமா கூறி என்னை அவருடைய தோளில் ஏற்றிக்கொண்டார். பேருந்து வரும்போதெல்லாம் கை காட்டுவோம். ஓட்டுனர் கை அசைத்துவிட்டு நிற்காமல் சென்றுவிடுவார். பூலாமேடு, நாஞ்சலூர் வழியாக ஒருவாறு சிதம்பரம் வந்து சேர நண்பகல் ஆகிவிட்டது. மதிய உணவை உண்ண நடராஜர் கோவிலுக்குள் சென்றோம். அது பெரிய அரண்மனை போன்று எனக்குத் தோன்றியது. பெரிய பெரிய பாறாங்கல்லை வைத்து கட்டியிருந்தனர் செருப்புகளை கையில் எடுத்துக்கொண்டு கோவில் வளாகத்தினுள் நுழைந்தோம். உள்ளே செருப்பு அணிந்து செல்லக்கூடாது. தெப்பக்குளத்தின் அருகில் அமர்ந்து கட்டுச்சோறை உண்டோம். அந்த இடம் ஜிலு ஜிலு வென்றிருந்தது.சூடம் சாம்பிராணி மணம் வீசியது.தெப்பக்குளத்தில் பச்சையாக பாசி படர்ந்திருந்தது.மீன்கள் இருப்பதுபோல் தெரியவில்லை.அப்போது அங்கு வந்த ஒரு புரோகிதர் செருப்பைப் பார்த்துவிட்டார். மாமாவை திட்டினார். மாமாவும் எதோ சொல்லி சமாளித்தார்.
அதன்பின் வெளியேறிய நாங்கள் கோவிலுக்கு வெளியே கடைதெருவில் இருந்த புகைப்பட நிலையம் சென்று அம்மாவும் நானும் படம் பிடித்துக்கொண்டோம். என்னை ஆடாமல் அசையாமல் நேராக பார்க்கச் சொன்னார். நானும் அப்படியே சிலைபோல் உட்கார்ந்திருந்தேன்.அவர் கருவியை மூடியிருந்த ஒரு கறுப்புத் துணிக்குள் புகுந்துகொண்டு படம் பிடித்தார்.
அதன்பின் வேறொரு இடத்துக்கு ( தாலுக்கா அலுவலகம் என்று நினைக்கிறேன் ) சென்று பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பம் செய்தோம். அங்கேயே இருந்த ஒருசிலர் அந்த விண்ணப்ப பத்திரங்களைப் பூர்த்தி செய்து தந்துவிட்டு மாமாவிடம் பணம் வாங்கிக்கொண்டனர். புகைப்படங்கள் கிடைத்தபின்பு அவற்றுடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
கடைத்தெருவில் மாம்பழங்களும் பூவும் அம்மா வாங்கிக்கொண்டார். எனக்கு நன்னாரி சர்பத் வாங்கித் தந்தார். அது மிகவும் இனிப்பாகவும் சுவையாகும் இருந்தது. வெயிலுக்கு அது குடிப்பது இதமாகவும் தெம்பாகவும் இருந்தது.
நேராக பேருந்து நிலையம் சென்றோம். அங்கு நிறைய பேருந்துகள் வருவதும் போவதுமாக இருந்தன. நாங்கள் காட்டுமன்னார்கோவில் போகும் பேருந்தில் ஏறிக்கொண்டோம். முக்கால் மணி நேரத்தில் தவர்த்தாம்பட்டு வந்துவிட்டோம். அங்கிருந்து நடந்து வீடு திரும்பினோம்.
பள்ளியில் பிள்ளைகள் எல்லாரும் நான் சிங்கப்பூர் போவதைப் பற்றிதான் பேசுவார்கள். அப்போது கப்பலில் போவது பற்றி பேச்சு வந்தது. நாங்கள் யாரும் அதுவரை கப்பல் பார்த்ததில்லை. கடலூர் சென்றால்தான் கடலில் கப்பல் பார்க்கலாம்.
” கப்பல் எவ்வளவு பெரிசாக இருக்கும் ? ” இந்த கேள்வியை அரசன் கேட்டான்.
” நம்ப வீடு பெரிசு இருக்குமா? இது பால்பிள்ளையின் பதில்.
” அவ்வளவு பெரிய கப்பல் எப்படிடா கடலில் மிதக்கும்? மூழ்கிடாதா? ” இது வேறொருவனின் கேள்வி.
” ஐயோ! மூழ்கிடுமா? டேய்! நீ கப்பலில் போறியே! பயமாயில்லே ? ” இது இன்னொருவன்.
” மூழ்கிட்டா உன்னை மீன்கள் தின்னுடும்டா! ” இது இன்னொருவனின் எச்சரிக்கை!
இந்த உரையாடலையெல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த மண்ணாங்கட்டி இறுதியாக தன்னுடைய கருத்தைக் கூறி சந்தேகத்தை தீர்த்து வைத்தான்.
“டேய்! எண்டா கப்பல் பத்தி எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசிக்கிட்டு இருக்கீங்க? அது எப்படி கடலில மெதக்குது தெரியுமாடா உங்களுக்கு? ” என்றான் மண்ணாங்கட்டி.
” ஒனக்குதான் எல்லாம் தெரியுமே! நீதான் சொல்லேண்டா பார்ப்போம்? ” ஒருவன் சவால் விட்டான்.
” கப்பல் அடியில் பெரிய பெரிய தக்கை கட்டி இருப்பாங்கடா. அதான் அது மெதக்குது.” அது கேட்டு நாங்கள் அனைவரும் அசந்துவிட்டோம்! நான் அதை அம்மாவிடம் சொல்லவில்லை. அவரும் கண்ணம்மாவிடம் ஏதும் கூறவில்லை. அனால் வேறு எதோ காரணத்திற்காக அவனை நன்றாக அவர் அடித்துவிட்டார். அவன் கோபத்தில் வீட்டை விட்டு ஓடிவிட்டான். அதன்பிறகு அவன் திரும்பவில்லை. அவன் எங்கோ காணாமல் போய்விட்டான்.( அவனுடைய அப்பாவும் காணாமல் போய்விட்டவர்தான் ) கப்பல் ஏறும்வரை அவனை நான் மீண்டும் பார்க்க முடியவில்லை. )
இன்னும் சில வாரங்களில் கடப்பிதழ் ( பாஸ்போர்ட ) கிடைத்துவிடும். கப்பல் பிரயாணச் சீட்டுக்கான ( டிக்கட் ) பணத்தையும் அப்பா மாமாவுக்கு அனுப்பிவிட்டார்.அதை சிதம்பரத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
அப்பா ஆட்டு வற்றல் கேட்டிருந்தார். தாத்தா ஒரு வெள்ளாட்டு கிடா பிடித்து அறுக்கச் சொன்னார். வீட்டு தோட்டத்தில்தான் அது நடந்தது. நான் அதைப் பார்க்காமல் ஓடி ஒளிந்துகொண்டேன். அப்போதும் அதன் கதறல் காதில் ஒலித்தது! ( கொஞ்ச நாட்கள் இரவில் அந்த ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. நான்கூட அந்த கிடாவுக்கு புல் தந்துள்ளேன்.)
அதை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு தொலை உரித்து கறியை வெட்டி ஒரு பெரிய அண்டாவில் போட்டனர். அதில் மஞ்சள் பொடி, உப்பு போட்டு நன்றாகக் கிண்டினார்கள் . பின்பு ஒவ்வொரு துண்டாக எடுத்து கோணி ஊசியால் குத்தி நீண்டசணல் கயிற்றில் கோர்த்தார்கள். நீண்ட சரம் போன்ற அந்த இறைச்சித் துண்டுகளை தினமும் வெயிலில் காய வைத்தார்கள்.சில நாட்கள் நன்றாக காய்ந்தபின்பு அவற்றை தனித்தனியாக எடுத்து பெரிய பிஸ்கட் டின்களில் போட்டு மூடினர். அதுபோன்று இரண்டு டின்கள் தயார் ஆயின.
ஒருவாறு பிரயாண நேரம் நெருங்கிவிட்டது. நாங்கள் இரயில் மூலம் தாம்பரம் சென்று அத்தை வீட்டில் ஒரு வாரம் இருந்துவிட்டு மெட்ராஸ் துறைமுகத்தில் கப்பல் ஏறவேண்டும்.
ஊரிலிருந்து விடைபெறும் நாள்.
காலையிலேயே அம்மா பிறந்த பெரிய தெரு சென்று மாமா வீடு மற்றும் அம்மாவுடன் பிறந்த தங்கைகள் வீடு. இதர உறவினர்களின் வீடுகளில் சொல்லி விட்டு வந்தோம். அனேகமாக எல்லா வீடுகளிலும் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுதுதான் விடை தந்தனர்.என்னை பலர் தூக்கி முத்தமிட்டு வழியனுப்பினர். சிலர் கையில் பணம் தந்தனர்.
அன்று நள்ளிரவில்தான் நாங்கள் சிதம்பரத்தில் இரயில் ஏறவேண்டும். அதனால் நாங்கள் இரண்டு கூண்டு வண்டிகளில் இரவு ஒன்பது மணிக்கு செல்ல திட்டம் இட்டிருந்தோம்.
மாலையில் இருட்டிய பிறகு நான் சட்டை சிலுவார் அணிந்துகொண்டேன். அம்மா என்னை அழைத்துக்கொண்டு எங்கள் தெருவில் ஒவ்வொரு வீடாகச் சென்று விடை பெற்றார். அங்கும் சிலர் அழுது விடை தந்தனர். என் கையில் பணம் தந்தனர். நான் அவற்றை வாங்கி சிலுவார் பையில் பத்திரப்படுத்தினேன். வீடு திரும்பியதும் பணத்தை வெளியில் எடுக்க பாக்கெட்டுக்குள் கையை விட்டேன். அதனுள் ஒரு பெரிய ஓட்டைதான் இருந்தது. பணம் ஒன்றும் இல்லை!
அதற்குள் சாமான்களை ஒரு வண்டியில் ஏற்றிவிட்டனர். பிரிய மனமின்றி தாத்தா விடை தந்தார். மிகவும் சோகமான காட்சி அது.
வாசலில் ஊர் மக்கள் கூடி நின்றனர். ஆலயத்தின் உபதேசியார் ஜெபம் செய்து ஆசீர்வாதம் செய்தார்.
வண்டியில் அம்மா, நான், மாமா ஏறிக்கொண்டோம். மதியழகன் காளைகளைத் தட்டிவிட்டார். வண்டி புறப்பட்டுவிட்டது!

( தொடுவானம் தொடரும் )

Series Navigation
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *