ஆனந்தபவன். நாடகம் காட்சி-10

This entry is part 9 of 16 in the series 26 அக்டோபர் 2014

 

 

 

இடம்: ஜமுனா வீட்டுக் கிணற்றடி

 

நேரம்: முற்பகம் பதினொரு மணி

 

உறுப்பினர்: ஜமுனா, ராஜாமணி

 

(சூழ்நிலை: ஜமுனா கிணற்றில் தண்ணீர் இழுத்து கொண்டிருக்கிறாள். கிறீச் கிறீச்சென்று ராட்டின ஒலி கேட்கிறது. வாளி இறங்கி தண்ணீரில் தொம்மென்ற ஓசை வருகிறது. ஜமுனா கயிற்றை இழுக்கிறாள். அப்போது தெரு நடையில் செருப்பு சத்தம் கேட்கிறது)

 

ஜமுனா: (கயிற்றை இழுத்துக் கொண்டே) யாரது?

 

ராஜாமணி: (உள்ளே வருகிறான்) நான்தான் ஜமுனா!

 

ஜமுனா: (வாளியை இழுத்துக் கீழே வைக்கிறாள்) என்ன இந்தப் பக்கம் ரொம்ப தூரம்?

 

ராஜாமணி: ரங்கையர் இருக்காரா?

 

ஜமுனா: அப்பா ஹோட்டல்லே இருப்பார்.

 

ராஜாமணி: வந்து… நான் ஹோட்டலுக்குப் போனப்ப காணோம்!

 

ஜமுனா: காலையிலே வந்து குளிச்சுட்டுப் போய்ட்டாரே! ஏன், ஏதாவது சமாசாரம் சொல்லணுமா?

 

ராஜாமணி: இங்கே ஆனந்தலட்சுமின்னு ஒர்த்தர் வந்தாங்களே அவா இருக்காளா?

 

ஜமுனா: இல்லே காலையில வெஸ்ட் கோஸ்ட்ல போய்ட்டாங்க!

 

ராஜாமணி: நான் அவாளைப் பார்க்கலாம்னு வந்தேன். எங்கே போய்ட்டா?

 

ஜமுனா: காசிக்கு.

 

ராஜாமணி: எப்போ வருவா?

 

ஜமுனா: எப்பவும் வரமாட்டா!

 

ராஜாமணி :  ஏன்-?

 

ஜமுனா: தெரியாது!

 

ராஜாமணி: அவா யாரு?

 

ஜமுனா:  அதுவும் தெரியாது!

 

ராஜாமணி: நெஜம்மா?

 

ஜமுனா: நெஜம்மா (முறைத்துப் பார்க்கிறாள்) நான் ஒன்கிட்டே எதுக்குப் பொய் சொல்லணும்?

 

ராஜாமணி: சாரி! நிச்சயமாவாண்ணு கேட்க வந்தேன்.

 

ஜமுனா: அப்புறம்?

 

ராஜாமணி: நீ ஏன் நேத்திக்கி கோவிலுக்கு வரல்லே?

 

ஜமுனா: நான் நவக்கிரகம் சுத்தப் போனா அங்கே என்னைச் சுத்தறவா அதிகமாயிட்டா! நான் உபகிரகம் ஆக இஷ்டப்படல்லே;  ஸோ நின்னுட்டேன்.

 

ராஜாமணி: ஸாரி ஜம்னா… என் நோக்கம் அது இல்லே!

 

ஜமுனா: ஒன் நோக்கம் என்னவோ! நேக்கென்ன வந்தது? நான் ஒன்னை மட்டும் சொல்லலியே!

 

ராஜாமணி: நீ ரொம்ப கோச்சுக்கறே போலருக்கு. நீயும் நானும் ஒண்ணும் புதுசா பார்த்துக்கலே. பன்னெண்டு வருஷமாப் பார்த்துண்டுதான் இருந்தோம்… நடுவிலே பெரிய கேப்… (குரலைத் தாழ்த்தி நினைவுகள் தோய்ந்த தொனியில்) எதையோ சின்னப் பெண்ணா இருக்கறச்சே நீ பார்த்துப் பயப்டுட்டே… ரயில்வே ஸ்டேஷன்லே மணி ஐயர் மந்திரிப்பார். அவர்கிட்டே போனேன். வழிலே காங்கிரஸ் மைதானத்திலே, கல் பெஞ்சிலே ஒக்கார்ந்து குச்சி ஐஸ் வாங்கிச் சாப்பிடறச்ச ஒண்ணு சொன்னே!

 

ஜமுனா: சின்ன வயசுல அசட்டுத்தனமா எதுவாவது பினாத்தியிருப்பேன்.

 

ராஜாமணி: நீ கான்வென்ட் போனதும் மாறிட்டே.

 

ஜமுனா: நீயும் ஹைஸ்கூல் போனதும் மாறிடலியா? மாறிண்டேதான் இருப்போம்.

 

ராஜாமணி: நடுவிலே விழுந்த இந்த இடைவெளில நீ ரொம்பப் பிரமாதமா வளர்ந்துட்டே…

 

ஜமுனா: ராஜு… இதென்னது அசட்டு பிசட்டுண்ணு…

 

ராஜாமணி: நீ அற்புதமா இருக்கேண்ணு சொல்ல வந்தேன்.

 

ஜமுனா: சந்தோஷம்!

 

ராஜாமணி: இப்போ ராகவன் எங்கே இருக்கான்?

 

ஜமுனா: ஷெவ்ரான் டாங்கர்ஸ்… ஆயில் ஷிப் ஃபாகோ ஃபாகோன்னு அமெரிக்காவிலே ஒரு தீவாம். அங்கேருந்து பெட்ரோல் எடுத்துண்டு ஊர் ஊராச் சுத்தற கப்பல்.

 

ராஜாமணி: லீவ்ல வருவானோ?

 

ஜமுனா: நாலஞ்சு மாசம் ஆகும்.  சரி நீ எங்கே போப் போறே?

 

ராஜாமணி: ஐ.எஃப்.எஸ். டெஸ்ட் எழுதக் கிளாஸ்ல சேரப் போறேன்.

 

ஜமுனா: டெஸ்ட் எழுதினா என்ன ஆவே?

 

ராஜாமணி: ஏ.சி.எஃப்.

 

ஜமுனா: அப்படின்னா?

 

ராஜாமணி: அஸிஸ்டெண்ட் கன்ஸர்வேட்டர்  ட்ரெய்னிங், டேராடூன்ல!

 

ஜமுனா: ஆனந்த பவனை யார் பார்த்துப்பா?

 

ராஜாமணி: அப்பா இருக்காரே… ரங்கையர் இருக்கார்… சுப்பண்ணா!

 

ஜமுனா: தொழிலும் ஊரும் கிட்டக்க இருக்கச்சே யாருக்கோ ஜவாப் சொல்லி கை கட்டிண்டு என்ன உத்தியோகம் வேண்டியிருக்கு?

 

ராஜாமணி: காப்பி கிளப் ஒரு உத்தியோகமா… இல்லே ஒரு தொழிலா… பி.எஸ்ஸி. முடிச்சுட்டு இந்தக் குட்டையையே வளைய வளைய வந்துண்டு காலந்தள்ள… என்ன பிடிப்பு இருக்கு?

 

ஜமுனா: சொந்த பந்தம் ஒரு பிடிப்பில்லியா?

 

ராஜாமணி: சொந்தம் உண்டு. பந்தம் இல்லியே.

 

ஜமுனா: என்ன பந்தம் வேணுங்கறே!

 

ராஜாமணி: நீ!

 

ஜமுனா: சட்… வெவஸ்தையோடு பேசு ராஜு!

 

ராஜாமணி: என்ன ஜம்னா…?

 

ஜமுனா: பின்னே?

 

ராஜாமணி: நீயும் நானும் பால்ய சினேகம்!

 

ஜமுனா: (கம்பீரமாக) அது மட்டும்தான்!

 

ராஜாமணி: ஜம்னா!

 

ஜமுனா: ராஜு… நீ பெரியண்ணா பிள்ளை. நான் ரங்கையர் மகள், நீ முதலாளி மகன்.  நான் சர்வரோட பொண்ணு.

 

ராஜாமணி: இதெல்லாம் என்ன பேச்சு ஜம்னா?

 

ஜமுனா: அவா ரெண்டு பேரும் உத்தமமான பந்துக்கள் மாதிரிதான்! ஆனா வித்யாசம் மறஞ்சுடாது.

 

ராஜாமணி: நீதான் பார்க்கறே.

 

ஜமுனா: நீ மாத்வ ராவ், நான் ஸ்மார்த்த ஐயராத்துப் பொண்ணு! ஜாதி இல்லேண்ணு வாய்ல சொல்லிடலாம், ஆனா நெஜம்?

 

ராஜாமணி: ஜம்னா… இதான் நீ பார்க்கற வித்தியாசமா? இதான் ஒன் மனசுக்கும் என் மனசுக்கும் மத்தியிலே இருக்கிற பிளவா?

 

ஜமுனா: வேற கூட இருக்கலாம்.

 

ராஜாமணி: நீ என்ன சொல்றே?

 

ஜமுனா: வேற காரணம் எதுவும் இருக்கப்படாதா என்ன?

 

ராஜாமணி: சொல்லேன் பார்ப்போம்.

 

ஜமுனா: சொல்ல முடிஞ்சதைச் சொல்லிட்டேன். நீ கௌம்பு ராஜு. போஸ்ட்மேன் வர்ற நேரம். தெருக்கதவு தொறந்திருக்கு. இந்த நேரத்திலே நீ இங்க வந்து நின்னுண்டு தனியா என்னோட பேசிண்டிருக்கறதைப் பார்த்தா நாலு பேருக்கு குறுகுறுண்ணு வரும்.

 

ராஜாமணி: ஸாரி ஜமுனா… நான் வர்றேன்.

 

(திரை)

 

Series Navigationஎழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மறைந்தார்குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *