By – IIM Ganapathi Raman
1. //திருக்குறளிலிருந்து சிலப்பதிகாரம் கம்பராமாயணம் வரை அத்துணை தமிழ் இலக்கியங்களையும் இழித்துப்பழித்தமைக்கு உங்கள் யாரிடமிருந்தும் பதில் இல்லை என்பதால் வாதத்தை திசை திருப்பப் பார்க்கிறீர்கள்.//
2. //ஈழத் தமிழ்ப்புலவரை தமிழ் விரோதியான ராமசாமி நாயக்கர் இழிவு செய்ததற்கு உங்களிடமிருந்தெல்லாம் ஏன் பதில் வரும்.//
இவை கிருஸ்ணகுமார் என்பவர் வைத்த இரு விமர்சனங்கள் திரு வெ.சாமிநாதனின் கட்டுரையின் பின்னூட்டப்பகுதியில்.
முதல் பாகத்தில் இலக்கியங்களை இழித்துரைத்தலைப்பற்றிப் பார்ப்போம். இரண்டாம் பாகத்தில் ஈழத்தமிழ்ப்புலவருக்கும் ஈவேராவுக்கு நடந்த மோதலைப்பற்றிப் பார்ப்போம்.
எம்மொழி இலக்கியத்தையும் அம்மொழி நன்கு தெரிந்து இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள் எவரும் விமர்சனம் செய்யலாம். தமிழ் இலக்கியப்படைப்பொன்றைப் படிக்க விமர்சிக்கத் தமிழ் நன்கு தெரிந்து இருந்தால் மட்டும் போதும். தமிழரும் தமிழரல்லாதாரும் விமர்சிக்கலாம். செகப்பிரியரை விமர்சனம் செய்ய ஆங்கிலேயனாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உலக முழுவதும் உள்ள பலகலைக்கழகப் பேராசிரியர்கள் செகப்பிரியரின் நாடகங்களைப்பற்றிய விமர்சனங்களை எழுதிக் குவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் பலநாடுகளைச் சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் இலக்கியவாதிகளை எவரும் தனிநாயகனாக வைத்து பற்றோ வணக்கமோ செய்வதில்லை. செய்பவர் பொது நகைப்புக்குள்ளாவார். தமிழகத்தில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களோடு சேர்த்து இலக்கியவாதிகளையும் கடவுளர்களாகப் பார்க்கிறார்கள். இது தமிழகத்தின் பண்பாட்டு வீழ்ச்சிகளுள் ஒன்று. இலக்கியப்படைப்புக்கள் ‘உடைமை-வெறி’யை உருவாக்கினால் அது இலக்கியமாகாது. எந்த மொழி இலக்கியமும் உலக்கத்தவர் அனைவருக்குமே உரியது.
திருக்குறள்:
1330 குறட்பாக்களைக் கொண்டது. அனைத்தையும் வள்ளுவர்தான் எழுதினாரரா? வள்ளுவர் என்பவர் யார்? எம்மதத்தைப்பற்றிச் சொல்கிறார்? இவர் முனிவரா? குடும்பத்தவரா? திருக்குறள் சங்கநூலா? இல்லை சங்கம் மறுவிய காலத்து நூலா? இவை போன்ற இலக்கிய வரலாற்று நுணுக்கச் சர்ச்சைகள் போக, குறள் காட்டும் வாழ்க்கை வழிமுறைகளிலும் சர்ச்சைகள் பலபல. அவர் சாதிகளைப்பற்றி என்ன சொல்கிறார்? பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற சொல்லிவிட்டு பார்ப்பான் குலவொழுக்கம் கெடும் என்று குலக்குணத்தைப் பற்றியும்:
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும்
பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்:
அவர்கள் குலவொழுக்கத்தை நழுவ விட்டால் அவர்களுக்குக் கேடு, ஒரு சாதியினரைப்பற்றி ஏன் கவலைப்படுகிறார்? மன்னர்கள் எப்படி இருக்கவேண்டும்? மன்னர்களை எப்படி மக்கள் போற்றவேண்டும் என்று சொன்னவருக்கு மக்களுக்கு என்ன உரிமைகள்? அவை கொடுக்கப்பட்டனவா? இல்லை மறுக்கப்பட்டனவா? வாழ்க்கையில் தீண்டத்தகாதவர் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையென்ன? பெண்டிரின் நிலையென்ன? வரைவின் மகளிரைப்பற்றிப் பேசியவர், அவ்வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட பெண்களைப்பற்றி ஏதாவது வருத்தப்பட்டோ கோபப்பட்டோ பேசினாரா? கணவனைக் கடவுளாகத் தொழும் மனைவி ‘’பெய்வாய்!” என்றவுடன் வானம் பெய்யும் என்பது சரியா? பிறன்மனை நோக்காது பேராண்மை என்று ஆணுக்கு இலக்கணம் சொன்னயிவர் பரத்தையர் கலாச்சாரம் நிறைந்த தமிழகத்தைப்பற்றி ஏதாவது குறைபட திட்டினரா? பரத்தையரைத்தழவுவது //இருட்டறையில் பிணந்தழீயற்று// என்று ஆணை எச்சரித்த இவர், ஏன் பெண்களில் ஒரு சாரார் தேவதாசிகள்? ஏன் அவர்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டாரென்று எங்கேனும் கணித்தாரா? விசனப்பட்டாரா? ‘கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இருகட்சிக்குமது பொதுவில் வைப்போம்/ என ஆணும் பெண்ணும் சமம் என்ற இக்காலத்தில் ஆணுக்குப்பெண் அடிமையே என்ற கருத்தை எப்படி ஏற்க முடியும்? பெண்ணடிமைத்தனத்தை பேணும் வள்ளுவர் ஒரு ஆணாதிக்கவாதிகளில் பிரதிநிதிதானே? இவை குறளை ஓரளவே தெரிந்த என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகளுள் சில. ஆழ்ந்து படித்து குறளோவியம் எழுதிய கருநாநிதிக்கும் அண்ணாத்துரைக்கும் ஈவேராவுக்கும் எத்தனை எத்தனை கேள்விகள் எழுந்திருக்கும? இது எப்படி எல்லாரும் ஏற்கவேண்டிய நூலாகும் என்று கேட்டால், அது இலக்கியம் சமூகத்தை தவறான வழியில் பாதிக்கிறது என்ற கருத்தேவொழிய இழித்துரையா? இழித்துரையே என்பவர் சமூகத்தையும் பெண்டிர்நலத்தையும் அல்லவா அழிக்கப்பார்க்கிறார்?
சிலப்பதிகாரம்:
இதை ஈவெரா கடுமையாகச் சாடினார். சமண முனிவர் சமணக்கருத்துக்களை பரப்புரை செய்ய எழுந்த கற்பனை நூலில் வைதீக மதததைப்போற்றும் பலபல கருத்துகளும் எப்படி நுழைகின்றன? மதுரைப்பாண்டியனின் மேலுள்ள வஞ்சினத்தால் மதுரை எரிக! என்று சூழுரைக்கும் கண்ணகி, பிராமணரகளை மட்டும் எரிக்காதே என்று அக்னிதேவனுக்கு உத்திரவிடல் சரியா? அவர்களும் மதுரைமக்களுள் ஒருபிரிவுதானே? மன்னன் குற்றத்துக்காக அப்பாவி மக்களையும் அழிக்கச் செய்யுமாறு இளங்கோ சொல்வது என்ன நீதி? அதிலும் பிராமணர்களை மற்ற மக்களுள் மேலான புனிதர்களாகக் காட்ட இளங்கோ முனைந்த காரணத்தால் ஏன் ஈவேரா போன்றவர்கள் அந்நூலை ஏற்கவேண்டும்? பரத்தையரிடன் செல்வது ஆண்மை என்றல்லவா கோவலன் வாழ்க்கையைக் காட்டுகிறார்? அதைத்தவறென்று கண்ணகி சொல்வதாகக் கூட அமையவில்லையே? பெண்ணைப் போற்றுகிறேன் பேர்வழி என்று பெண்ணடிமைத்தனத்தையல்லவா போற்றுகிறார்? முதலில் கதையின் அடிப்படையே (தீம்) தவறான வழியைக் காட்டுகிறது. ஒருவன் (கோவலன்) நாட்டியம் பார்க்கப்போனானாம். தேவதாசிக்குலப்பெண்கள் நாட்டியமாட ஒரு விழாவாம். செல்வர்கள் கண்டுகளிக்கவாம். நாட்டிய முடிவில் நாட்டியமாடியவள் தன்னை ஏலம் விடுவாளாம் அதாவது ஒரு மாலையை எரிந்து, அது எச்செல்வனின் மேல் விழுகிறதோ. அவனோடு இவள் வாழவேண்டுமாம். அவன் மணமானவனா? இல்லை மணமாகதவானா என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால், இது ஆண் உலகம். அதில் பெண் ஒரு போதைப்பொருள் மட்டுமே.
கோவலனை நாட்டியமாடிய தேவதாசிகுலப்பெண் மாதவி நாட்டிய முடிவில் அழைத்தாளாம். பின் என்ன? மனைவியை மறந்து அவளிடமே வாழ்ந்து பணத்தையெல்லாம் அழித்தானாம். அதோடு விட்டானா? அப்பெண் தேவதாசிக்குலத்தில் பிறந்தாலும் (நினைவில் கொள்க: தேவதாசிக்குலப்பெண்கள் “கண்ணியமில்லாதவர்கள்” ! ), மாதவி ஒருத்தனையே மணாளனாக வரித்தவள் என்பது ஒரு விதிவிலக்கு. இவனைக் கணவனாக வரித்தபின், இவனன்றி எவனையும் நினைக்காத பெண்ணாக இவனே கதியென்று வாழ்ந்தபின், ஒருமாலையில் காவிரிக்கரையில் இருந்தபோது அவள் காவிரி ஆற்றை வைத்துப்பாடிய பாட்டில் (கானல் வரிப்பாட்டு) ஒரு சில வரிகள் ஆடவர் பற்றி இருக்க, இவளுக்கு ஒரு கள்ளக்காதலனுண்டோ? என நினைத்து இவளை ‘’அம்போ’’ என்று விட்டுவிட்டு (அதுவும் மாசமா இருந்தவளை) போய்விட்டானாம். அவன் பெண்டாட்டி வாங்க! வாங்க!! என்று ஒன்றுமே சொல்லாமல் வரவேற்றாளாம். கேட்டாளா கண்ணகி //இப்படி மாசமா இருக்கின்றவளை, நீங்களே கதியென்று தன் உறவைப்பிரிந்துவந்தவளை, யாதொரு வாழவழியில்லதவளை விட்டது சரியா ? கண்ணகி இன்றைய பெண்களுக்கு எப்படி முன் மாதிரி ஆக முடியும்? காவிரிபூம்பட்டிணத்தில் பரத்தையர் கலாச்சாரம், தேவதாசிக்குலம், அக்குலப்பெண்கள் பணக்காரர்களுக்கு வைப்புக்களாக்கக் கட்டாயப்படுத்துதல் கொடிகட்டிப் பறக்கிறது. (இதை சிலப்பதிகாரத்தின் தொடர்கதையான மணிமேகலையும் காட்டுகிறது). இலக்கியம் என்றளவில் இது மாபெரும் நூல்! கருத்துக்கள்? சமூகநலனில் அக்கறைப்பட்டோருக்கும் மனவேதனைகளைத்தரும் நூலிது.
கம்பராமாயணம்:
இருவகையாகப் பார்க்கப்படவேண்டிய நூல். ஒன்று வெறும் இலக்கியமாக. மற்றொன்று: இந்துக்கள் நூலாக. வெறும் இலக்கியமாகப்பார்க்கும் போது அதன் இலக்கிய நுணுக்கங்களும் நடையழகும் விமர்சிக்கப்படும். பின்னர் அது பரப்பும் சமூகக்கருத்துகள் எடுக்கப்படும். இந்து நூலாகப்பார்ப்பின் அதன் விமர்சனம் வேறு. இலக்கியமாகப் பார்க்கும்போது செய்யப்படும் விமர்சனத்தையே இழித்துரைத்தல் என்கிறார் கிருஸ்ணகுமார். அண்ணாத்துரையின் கம்பரசத்தின் உள்ளோக்கம் வேறாக இருந்தாலும், அதை அவர் சரியான எடுத்துக்காட்டுகளோடுதான் முன் வைக்கிறார். அவ்வெடுத்துக்காட்டுகளுக்கு விளக்கம் சொல்லியே மறுப்புரை செய்ய வேண்டும். பலவிடங்களில் கமபர் சீதையை தவறான சொற்களில் சொல்லக்கூடாதபடி விவரிக்கிறார் என்கிறார். அண்ணாத்துரையும் ரா. பி.. சேதுப்பிள்ளையும் சென்னைப்ப்பல்கலைக்கழக மேடையில் செய்த உரைப் போர் ‘தீ பரவட்டும்’ என்ற நூலாக கிடைக்கிறது. அவ்வுரையில் அண்ணத்துரை வைக்கும் வாதங்களை படித்துப்பார்த்து முடிவெடுங்கள். மேலும் எந்த இராமாயணத்திலும் சொல்லாக்கருத்துக்களையும் கம்பர் உருவாக்கி எழுதுகிறார். கம்பராயாமணத்தை, விவிலியம் எப்படி கிருத்துவருக்கோ, குரான் எப்படி இசுலாமியருக்கோ, அப்படி ஒரு விமர்சனத்துக்கப்பாற்பட்ட நூலாக இந்துக்கள் பார்க்கவில்லை. கிருஸ்ணகுமார் போன்ற தீவிர இந்துவாவினர் மட்டுமே அதைப்புனித நூலாக எடுப்பர். இந்துக்களுக்குப் புனித நூல் என்று ஒன்று இல்லை என்றும் அடித்துச் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள் இவர்கள் ! கற்பார் இராமனையன்றி வேறொன்றைக் கற்பரோ? என்று ஆழ்வார் கேட்டது கம்பராயாணத்தை வைத்தன்று. ஆழ்வார் காலத்தில் கம்பராமயாணமேயில்லை. நம்மாழ்வார் காட்டிச்சொன்னது வால்மீகி இராமாயணமே. அதில் சொல்லாக்கருத்துகளையும் சேர்த்தும் இராமனின் சத்திரிய குணங்களை மாற்றி, ஒரு பார்ப்பனராக மாற்றியும் படைத்தார் என்பது கம்பரின் மேல் வைக்கப்படும் விமர்சனம். அதன் கருத்துக்களைத்தான் விமர்சிக்கிறார்கள். அப்படியே அண்ணாத்துரையோ கருநாநிதியோ இலக்கியமாக விமர்சித்தாலும் தவறேயில்லை. அவர்களுக்கு இலக்கியம் நன்கு பரிச்சயம். அதன்படி விமர்சிக்கிறார்கள் என்று விட்டுவிட வேண்டியதுதான்.
மாற்றுக் கருத்துக்களை தமிழ் இலக்கிய நூல்களின் மேல் வைத்தலை இழித்துரைத்தல் என்று பழிப்பதும், அந்நூல் பல தவறான கருத்துகள் வைக்கப்பட்டு மக்களை மதிமயங்கச் செய்கிறது என்று இன்னொருவர் சொல்வதைத் தடுக்க முயல்வதும் மதத்தீவிரவாதத்தை இலக்கியத்தில் நுழைக்கப்பார்க்கும் அடிமுட்டாள்தனம். தமிழ் இலக்கியம் தனிநபர்ச்சொத்தோ, ஒரு கலாச்சாரக்கும்பலில் சொத்தோ கிடையவே கிடையாது. தமிழ் இலக்கிய நூல்கள் பொதுச் சொத்துக்கள். பழந்தமிழ் இலக்கியம் உலக இலக்கியங்களுள் ஒன்று. சங்கநூல்களும், பதினெண்கீழ்க்கணக்கு, மேல்கணக்கு நூல்களும், ஐம்பெருங்காப்பியங்களும், பிறகால, தற்கால இலக்கியப்படைப்புக்களும் தமிழர்களுக்கு மட்டுமே உரிமையென்பதும் ஒரு கருநாடகாக்காரன், தெலுங்கர், மராட்டியர், அல்லது ஒரு ஆங்கிலேயர் அதைப்பற்றி விமர்சனம் வைக்கக்கூடாதென்பது தீவிரவாத்தில் உதிக்கும் மடைமை. கற்றோர் செய்யார். தனிநபர்கள் படித்து இன்புற விமர்சிக்கத்தான் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. விமர்சகர் எவராயிருந்தால் மற்றவருக்கென்ன? அவர் விமர்சனம் எத்தகையதாக இருந்தால் இவருக்கென்ன? செம்மறியாடுகளாக மக்கள் இருக்கவேண்டுமென்ற ஆசையை மதத்தோடு விட்டுவிடுவதே நன்று. இலக்கியம் சிந்தனையைத் தூண்ட.
புனித நூல்களான, கீதை, விவிலியம், குரான் இவற்றின் மீதே விமர்சனங்கள் வைக்கப்படும்போது வெறும் இலக்கிய நூல்களை விமர்சிப்பதைத் தடுப்பது அசிங்கம். இலக்கிய விமர்சனம் பாராட்டுரையாகத்தான் இருக்கவேண்டுமென்பது இலக்கியத்தை நசுக்குவதாகும். விமர்சனத்தில் குறைகளைச்சுட்டிக் காட்டுவோரை பழித்தல், சினிமா நடிகனின் இரசிகனின் செயலை ஒத்ததாகும். ஏமரா மன்னன் கெடுப்பானிலானும் கெடும் என்பதைப்போல இலக்கிய விமர்சனம் இல்லாமல் இலக்கியம் குடத்திலிடப்பட்ட விளக்கே. சங்க நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், இவை காட்டும் பழந்தமிழர் சமுதாயம் பலவகைகளில் அவற்றில் விரும்ப வேண்டியவையும் வெறுத்தொதுக்கவேண்டிவையுமுள. இரண்டுமே எடுத்துக்காட்டப்பட வேண்டும். பழந்தமிழ் நூலகளின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டால் தமிழையை பழிப்பதாகும் என்பது, தாலிபானியக்கலாச்சாரத்தை தமிழ்நாட்டின்மீது புகுத்துவதாகும். கண்டனத்துக்குரியது.
திருவள்ளுவர், இளங்கோ, கம்பர் அப்படிச் சொல்லவில்லை; இப்படிச்சொல்லவில்லை என்ற வாதம் வேண்டாம். இலக்கிய விமர்சனம் என்பது தனிநபர் உரிமை; அதை இலக்கிய தீவிரவாதத்தனத்தை வைத்து ஒடுக்கமுயற்சிக்க வேண்டாம் என்பது மட்டுமே இக்கட்டுரையின் சாரம்.
Part 1 ends.
இலக்கிய விமர்சகர்களும் இலக்கிய தாலிபான்களும்- பாகம் 2
//ஈழத் தமிழ்ப்புலவரை தமிழ் விரோதியான ராமசாமி நாயக்கர் இழிவு செய்ததற்கு உங்களிடமிருந்தெல்லாம் ஏன் பதில் வரும்.//
பதில். முதலில் அந்த நிகழ்ச்சியை வியாசன் என்பவர் பதிவிலிருந்து தெரியலாம். viyaasan@blogspot.in அது வருமாறு: அப்புலவரின் பெயர் கதிரைவேல் பிள்ளை, யாழ்ப்பாணத்துப்புலவர்.
////..ஒருமுறை தமிழகம் வந்திருந்தபோது .பெரியாரைப் பார்க்க விரும்பினார். அவ்வாறே வந்து சந்தித்தார். அவரை வரவேற்ற பெரியார் யாழ்ப்பாண தமிழறிஞருக்கு பால் கொடுத்து உபசரித்திருக்கிறார். உபசரித்து முடித்த கையோடு எதிலும் ஒளிவு மறைவு வைக்காத பெரியார் அப்போது தமிழ் பற்றியும் தமிழ் புலவர்கள் பற்றியும் தனது கருத்தை கதிரைவேலனாரிடம் கூறியிருக்கிறார். //‘என்னைப் பொறுத்தவரை புலவன் என்றால் பகுத்தறிவில்லாத புளுகன் என்றுதான் அர்த்தம். தமிழ் இலக்கியங்களை உருப்போட்டு ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்களைச் சொல்லி மக்களைய மயக்கி காசு பார்க்கும் தொழில்தானய்யா புலவர் தொழில். இது ஒரு தொழிலா? மனித சமுதாயத்துக்கு புலவர்களால் பத்து பைசா பிரயோசனம் உண்டா..? அதனால்தான் சொல்கிறேன்… நீங்களும் பகுத்தறிவே இல்லாத ஒரு புளுகன்தான்..// என்று கதிரைவேலனாரை கண் எதிரிலேயே வைத்துக் கொண்டு அவரை காய்ச்சி எடுத்துவிட்டார் பெரியார்.
பெரும் தமிழ் அகாரதியையே தொகுத்த கதிரைவேலனார் பெரியாரின் கருத்துக்களைக் கேட்டு அதிர்ந்துவிட்டார். தமிழின் நுட்பத்தையும், தமிழ் அறிஞர்களின் ஆற்றலையும் தொல்காப்பியத்திலிருந்து எடுத்து வைத்து வாதங்களை அடுக்கி பெரியாருக்கு அங்கேயே பதிலடி கொடுத்த கதிரவேலனார்… கடைசியில் ஒருகாரியம் செய்தார். அதாவது… ‘தமிழையும், தமிழர்களையும், தமிழ் அறிஞர்களையும் இகழ்ந்த உம் கையால் நான் குடித்த பால் கூட எனக்கு விஷமாகத்தான் போகும்’ என்று சொல்லி… தன் விரலை வாய்க்குள் விட்டு நன்றாகக் குடைந்து குமட்டி பெரியார் கொடுத்த பாலை அங்கேயே வாந்தியாக எடுத்துத் துப்பிவிட்டு வெளியேறினார் கதிரைவேலனார். ////
வியாசனின் பதிவிலேயே ஒருவரின் பதில் கிடைக்கின்றது. அதைவிட பெரிதாகச்சொல்ல ஏதுமில்லையென்பதால், அப்படியே போடலாம். பதில் வருமாறு::
//தமிழ்ப்புலவர்களைப் பற்றிய பெரியாரின் எண்ணம் சரியானதே. அவரின் எண்ணம் ஆதிகாலத்திலிருந்த புலவர்களிலிருந்து அவர் காலத்துக்கு சற்று முன்பு வரை கேட்டுத் தெரிந்தவற்றினடிப்படையிலமைந்த எண்ணம். அவர் காலத்திலிருந்துதான் புலவர்களுக்கு சமூக சிந்தனை அமைந்தது. பொதுவுடைமைக்கவிஞர்கள், மூடநம்பிக்கைகளைச்சாடும் கவிஞர்கள் உருவானார்கள். யாழ்ப்பாணத்து புலவர் கதிர்வேலனாருக்குப் பதிலாக, பாரதிதாசனோ, புலவர் குழந்தையோ சென்றிருந்தால் பெரியாரின் சொல்லாட்சி வேறுவிதமாகத்தான் அமைந்திருக்கும். ஏன் அக்காலப்புலவர்களை பெரியாருக்குப் பிடிக்கவில்லை? அவர்கள் சுய சிந்தனையில்லாதவர்கள். அதாவது எது அவர்களுக்கு கொடுக்கப்பட்டதோ – சமூகத்தைப் பாதிக்குப்பவைகளைச்சொல்கிறேன்- அவற்றை மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டார்கள். பாமர மக்களைப்பற்றி அவர்கள் கவலைப்படவேயில்லை. அரசனையும் செல்வர்களையும் புகழ்ந்தார்கள். குறுநிலமன்னர்கள் அவர்களுக்குப் புரவலர்களாயினர். அரசனுக்கு உற்ற தோழர்களாக விளங்கினார்கள். பிசிராந்தையார், அவ்வையார், கபிலர் போன்று. ஏழைப்புலவரகளாயிருப்பினும் பணத்தை யாசித்து அலைந்தார்களே தவிர வேறெந்த நோக்கும் அவர்களுக்கில்லை. பொதுவாக எது ஏற்கப்படுமோ, அதையே அவர்கள் பிடித்தெழுதினார்கள். எனவே ஆத்திகம். பார்ப்பனீயத்துக்கு வெண்சாமரம். எவருமே நாத்திகம் பாடவில்லை. காவியம் என்றெழுதி ஒரு குறிப்பிட்ட மதக்கொள்கைகளை பரப்பினர். சிலப்பதிகாரம். சீவக சிந்தாமணி, மணிமேகலை. சமூகப்பழக்கங்களைச் சாடினாலும் பார்ப்பன எதிர்ப்பைக் கொண்டாலும் அவற்றையும் ஆத்திகத்தின் காலடியிலே வைத்தனர். சித்தர்கள் – பார்ப்பன எதிர்ப்பு கொண்ட சிவவாக்கியர், ஒரு சில புலவர்கள் மட்டுமே விதிவிலக்காக வாழ்ந்தனர். மற்றெல்லாரும் மதவாதிகள், பார்ப்பன ஆராதனை. அதிகாரத்தில் காலடியில் வீழ்ந்துகிடந்தவர்களே. உங்கள் யாழ்ப்பான புலவர் அவ்வழி வந்தவர். இவரின் கொள்கை – இவரின் முன்னோர் கொடுத்த சைவ சிந்த்தாந்தம். அதை என்றாவது இவர் அலசி ஆராய்ந்து ஏற்றாரா என்பது கிடையாதெனலாம். இவர் அகராதியைத் தொகுத்தார். அதை தமிழ் ஆர்வம் கொண்ட எவரும் செய்யலாம். கிருத்துவரான வீரமாமுனிவர் சதுரககராதி இவர் செய்யாப் புரட்சியைச் செய்தது.
…தமிழ் மொழி, தமிழன் நன்றாக இருந்தால் மட்டுமே வளரும். தமிழ் இலக்கியமும் அவ்வாறே. பெரியார் காலம் தமிழன் பாழ்பட்டுக்கிடந்தான். அக்காலத்தில் வரவேண்டிய புலவர்கள் உங்கள் யாழ்ப்பாணத்துப்புலவரைப்போல இருக்கக்கூடாதென்ற பெரியாரின் கொள்கை ஏற்கப்பாலது.
…கடவுளை மற, மனிதனை நினை என்ற மனிதருக்கும் நெற்றிப்பட்டை, உருத்ராட்ச கொட்டையோடு தமிழகராதி தொகுத்தோன் என்று சொல்லிக்கொண்டு செல்லும் ஒரு புலவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடே. புலவர்தான் அங்கு சென்றார். சென்று தன்னை முட்டாளாக்கிக்கொண்டார். // பெரியார் எதற்காக வாழ்கிறாரோ அதற்காக தான் வாழவில்லை. அவர் மக்களுக்காக வாழ்கிறார்; தான் இலக்கியவாதிகளுக்கும் மொழி ஆர்வலர்களுக்குமே// என்று புரியாத புலவர் அவர். அப்புரியாமை அவரை வாயாடிப் புலவராக்கிவிட்டது. தன்குற்றத்தை ஒப்புக்கொள்ளவியலாதவன், அல்லது விரும்பாதவன் வாயாடி அதை மறைக்க முயல்வான். பாலை உமிழ்ந்தது அதற்குத்தான்.
…என்ன குற்றம் அல்லது குறை? மக்களுக்கு வேண்டியது முதலில் தமிழகராதியன்று. பின்னென்ன? அல்லது எவை? இலங்கைத்தமிழருக்கு வேண்டியது தமிழகராதியா? தன்மானமா? தன்மானத்தை இழந்தனால் இன்று நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். சைவசித்தாந்தமும், ஆன்மிகமும், தமிழகராதியும் எப்போது வேண்டும்? முதலில் இருக்க வீடு வேண்டும்! பிழைக்க வழிவேண்டும்!! இருக்கும் வீடும் பிழைக்கும் வழியும் நிம்மதியாக தொடரவேண்டும்!! இவை மூன்றும் இலங்கைத்தமிழருக்கு இலலை என்பதை அவர்களின் சமீபத்திய வரலாறு உலகோருக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இச்சூழ்நிலையில் இலங்கைத்தமிழருக்கு தமிழருக்குத் தேவை தமிழகராதி தொகுத்து நெற்றிப் பட்டையும் உருத்திராட்சக்கொட்டையும் அணிந்து தன்னைத் தமிழ்ப்புலவன் என பறைச்சாற்றிக்கொள்பவனா? கிடையாது. இலக்கியமும் மொழியும் இறுதியில் தானே வரும்? அவை வருவதற்கு காரணிகளை புலவர்களால் செய்யவியலாது. மற்றவர்களாலதான் முடியும். கோயிலைக் கொத்தனர்தான் கட்ட முடியும். பூஜாரி கட்ட முடியாது. கொத்தானர் கட்டியவுடந்தான் பூஜாரிக்கு அங்கு வேலை. இதுவே சமூக வாழ்க்கையின் சூட்சுமம். நாம் கடவுளை முதலில் வைத்துவிட்டு மனிதனைக்கடைசியில் வைத்தால் அக்கடவுளே நம் தலையில் கொட்டி மூடப்பயலே, முதலில் உன் குழந்தைக்குப் பாலுக்கு வழியைப்பார். எனக்குப் பாலாபிசேகத்தை நான் பார்த்துக்கொள்வேன் என்பார். மக்கள் சேவையே மகேசன் சேவை. …//
இப்பதிலைவிட சிறப்பான பதில் இல்லை.
******
- குருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்
- நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்
- அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை
- வாழ்க்கை ஒரு வானவில் 27
- ஜி.ஜே. தமிழ்ச்செல்வியின் நூல் வெளியீடு
- தொடுவானம் 40. ஆழ்கடலில் ஆனந்தம்
- மீதம் எச்சம்தான்…
- இலக்கிய விமர்சகர்களும் இலக்கிய தாலிபான்களும் – பாகம் 1
- கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா
- சுப்ரபாரதி மணியனின் வேட்டை – ஒரு பார்வை
- வாசம்
- அருளிச் செயல்களில் அனுமனும் இலங்கையும்
- வேகத்தடை
- ஆத்ம கீதங்கள் -3 குழந்தைகளின் கூக்குரல் .. ! [கவிதை -1]
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -11
- மொய்
- தொல்காப்பியத்தில் பாடாண்திணை
- வெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா
- பிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி