அருளிச் செயல்களில் அனுமனும் இலங்கையும்

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

 

தயரதன் மதலையாய் மண்ணுலகில் வந்து தோன்றிய இராமன் தந்தையின் ஆணை என்று தாய் சொன்ன வார்த்தை கேட்டு தரணி தன்னைத் தீவினை என்று நீக்கி வனம் புகுந்தான். அங்கே மாயமானைப் போகச் செய்து இலங்கை வேந்தன் இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். மாயமானை வதம் செய்து விட்டு வந்த இராமன் இலக்குவனுடன் சேர்ந்து பிராட்டியைத் தேடும் போது வழியில் ஜடாயுவின் மூலம் நடந்தவை அறிந்தான்

அனுமனின் வழியாய் சுக்ரீவனின் நட்பைப் பெற்று வாலியை வதம் செய்து சுக்ரீவனை கிஷ்கிந்தைக்கு அரசனாக்கி சீதையைத் தேட வானரப் படையை சுக்ரீவன் மூலம் கூட்டினான்.

இப்படிப் படையைக் கூட்டிச் சீதாபிராட்டியைத் தேட அனுப்பியதை பெரியாழ்வார் அருளிச் செய்துள்ளார். ஆஞ்சநேயன் அசோகவனத்தில் சென்று பிராட்டியைக் கண்டு இராமபிரான் சொன்ன அடையாளங்களைச் சொல்லி மோதிரத்தைத் தரும்போது இச்செய்தியைக் கூறியதாகப் பெரியாழ்வார் பாடுகிறார்.

”மைத்தகுமா மலர்க்குழாய்! வைதேவீ! விண்ணப்பம்

ஒத்தபுகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட

அத்தகு சீரயோத்தியர்கோன் அடையாளம் இவைமொழிந்தான்

இத்தகையால் அடையாளம் ஈதவன் கைம்மோதிரமே” [பெரி-3-10-8]

வைதேகீ! அடியேனின் விண்ணப்பம்; வானர ராஜன் சுக்ரீவன் இராமபிரானோடு கூடி இருந்து வானரப்படைகளை அனுப்பி உங்களைத் தேடும் படிச் சொன்னார். அப்போது இராமர் சொன்ன அடையாளங்கள் இவை; இது அப்பெருமானின் மோதிரமாகும்”

இவ்வாறு அனுமன், இராமபிரான் சொன்ன அடையாளங்களை எல்லாம் சொல்லிவிட்டு முடிக்கையில் சீதா[பிராட்டியைத் தேட அனுப்பிய செய்தியைச் சொல்வதாக பெரியாழ்வார் அருளிச் செய்கிறார்.

ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள திவ்யப் பிரபந்தத்தில் அனுமன் இலங்கைக்குத் தூது சென்றது இரண்டு பாசுரங்களில் காணப்படுகிறது. இரண்டுமே திருமங்கை மன்ன்ன் அருளிச் செய்தது ஆகும்.

பெரிய திருமொழி இரண்டாம் பத்தில் திருமங்கை ஆழ்வார் திருஎவ்வளூர் திவ்யதேசத்தைப் பாட வருகிறார். அங்கு கிடக்கும் வீரராகவப் பெருமாளைப் பாடும்போது,

”இவர்தான் இராமனாக அவதாரம் செய்தபோது அனுமன் வழியாகத் தூதுச் செய்தியைச் சொல்லி அனுப்பி இராவணனது இலங்கையை அம்பால் அழித்தவர்” என்று பாடுகிறார்.

”முன், ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்

மன்னூர் தன்னை வாளியினால் மாள் முனிந்து அவனே” [மங்-2-2-3]

என்பது அவரின் அருளிச்செயலாகும்.

அவரின் பத்தாம் பத்தின் இரண்டாம் திருமொழிப் பாசுரங்கள் எல்லாமே ‘தடம் பொங்கத்தம் பொங்கோ’ என முடிகின்றன. இதை ஒரு சங்கேத ஒலிக் குறிப்பு என்பர். இலங்கையில் போர் நடந்து முடிகிறது இராவணன் மாண்டு போனான். மீண்டுள்ள அரக்கர்கள் தங்கள் உயிருக்காக இராமனிடம் மன்றாடுகிறார்கள். அப்போது இராமனின் வெற்றிச் சிறப்பைப் பாடுவதாக இத்திருமொழி அமைந்துள்ளது.

தடம் பொங்கத்தம் பொங்கோ என்பது தோற்றவர்கள் பறையடித்து ஆடும் கூத்தாகும். தடம் என்பது இராமனின் பெருமையைக் குறிக்கும். பொங்க என்பது அப்பெருமை மேல் ஓங்க என்பதையும் பொங்கோ என்பது தங்களுக்கும் அப்பெருமை மேலோங்க வேண்டும் என்பதாகும்.

இது அத்திருமொழியின் ஆறாம் பாசுரம்;

”ஓதமா கடலைக் கடந்தேறி

உயிர்கொள் மாக்கடிகாவை யிறுத்து

காதல் மக்களும் சுற்றமும் கொன்று

கடியிலங்கை மலங்க எரித்து

தூதுவந்த குரங்குக்கே உங்கள்

தோன்றல் தேவியை விட்டுக்கொடாதே

ஆதர் நின்று படுகின்றது அந்தோ

அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ”

அரக்கர்கள் இப்பாசுரத்தில் ஆஞ்சநேயனின் செயல்களை எல்லாம் நினைவு கூறுகிறார்கள்.

”அனுமான் பெரிய கடலைத் தாண்டி வந்தார்; இராவணனின் பெரிய அசோகவனத்தை முறித்தார்; அப்போது போருக்கு வந்த அட்சய குமாரன் போன்றோரை வதம் செய்தார். கடும் காவலை உடைய இலங்கையைத் தீ மூட்டி எரித்தார். அப்படி எல்லாம் செய்து பிராட்டியிடம் தூது வந்த ஆஞ்சநேயரிடமே பெருமாளுடைய தேவியான சீதையைக் கொடுத்தனுப்பாமல்   அறிவற்றவர்களன நாங்கள் இப்படித் துவண்டு துன்பப் பட வேண்டி உள்ளதே’

என்ற இவர்கள் ஓலத்தில் அனுமன் தூது வந்த செய்தியைக் காண்கிறோம்.

இந்தப் பாசுரத்திலேயே அனுமன் இலங்கையை எரியூட்டியதைக் காட்டும் மங்கை மன்னன் நான்காம் திருமொழியில் திருநறையூர் திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்யும் போதும் இச்செய்தியைப் பாடுகிறார்.

”தொன்னீரிலங்கை மலங்க விலங்கெரியூட்டினான்

நன்னீர் நறையூர் நாம் தொழுதும் எழ நெஞ்சமே” [மங்—[6-4-6]

நாச்சியார் கோயில் என வழங்கப்படும் திருநறையூரை நன்னீர் நறையூர் என்கிறார் ஆழ்வார். அதாவது நல்ல தீர்த்தங்களை உடையதாம் அத் திவ்யதேசம். அங்கு எழுந்தருளி இருக்கும் பெருமாள் யார் தெரியுமா?

அவர்தாம் தொன்மையான இலங்கையில் உள்ளோர் வருந்தும்படி அனுமனைக் கொண்டு தீ மூட்டி விட்ட பெருமானாவர் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.

தில்லைத் திருச் சித்திர கூடத்தைப் பாடும் குலசேகர ஆழ்வார் இசெய்தியைப் பாடுகிறார்.

வாலியைக் கொன்றிலங்கை நகரரக்கர் கோமான்

சினமடங்க மாருதியால் கடுவித்தானைத்

தில்லைநகர்த்திருச்சித்ர கூடந்தன்னுள்

இனிதமர்ந்த இராமன் தன்னை

ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே     [குல 10-6]

தில்லைச் திருச்சித்திர கூடத்தில் எழுந்தருளியிருக்கும் இராமபிரானைத் துதிக்கும் அடியார்களின் இணையடிகளையே நான் துதிக்கும் தன்மையன் ஆனேன் எனும் திருமங்கை மன்னன் வாலியை வதம் செய்து இலங்கை மாநகரை அதன் தலைவன் இராவணனுடைய செருக்கு ஒழியும்படி அனுமனைக் கொண்டு எரிக்கச் செய்தவன்தான் இங்கே எழுந்தருளி உள்ளான் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார்.

இவ்வாறு ஆழ்வார்கள் தங்கள் அருளிச் செயல்களில் அனுமன் தூதைப் பற்றியும் இலங்கை எரியூட்டப் பட்டதையும் அனுபவித்துப் பாடி நமக்குத் தந்துள்ளனர்.

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *