வாசம்

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

இந்த நெய்வேலி ரமணி கிருஷ்ணனை புரசைவாக்கம் சாலை குமுதம் பத்திரிகை அலுவல வாயிலில் வைத்து பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை. அவனை நான் கடைசியாய்ப்பார்த்தது அவன் சென்னைக்கு மாற்றலாகிச்சென்ற அந்த சமயம்தான்.நானும் அவனும் திருமுதுகுன்றத்தில் அந்தக்காலத்தில் ( மொபைல் வராக்காலம்) தொலைபேசி இயக்குனர்களாக ‘நம்பர் ப்ளீஸ்’ சொல்லி கருப்பு மொத்தை டெலிபோனில் டிங்க் டிங்க் மணி அடிக்க, கைப்பிடி ஒன்று சுழற்றி சுழற்றி வேலை பார்த்தவர்கள். ஆப்ரேடரை இயக்குனர் என்று யார் முதன் முதலில் மொழி பெயர்த்துச்சொன்னார்களோ அவர்கள் விலாசம்தான் எனக்குக்கிடைக்கவில்லை. இங்கு டைரக்டரும் இயக்குனர், ஆப்ரேடரும் இயக்குனர் என்ன ஒரு நியாயமோ.
இந்தக்காலம் ஏனோ இறக்கைக்கட்டிக்கொண்டு பறக்கிறது. இருப்பதுபோல் தோன்றி இல்லாது போவதுகளில் பிரதானமானது காலம்தான். பாருங்களேன் இன்றைக்குக்கிட்டதட்ட ஒரு நாற்பதாண்டுகள் ஓடிவிட்டன, தலைமுடி எனக்கு நரைத்துப்போனது. முடி இருப்பதே கூட என் பாக்கியம்தான். என் முகம் நான் கிழம் என்று தன்னைக்காட்டிக்கொள்ளத்தொடங்கிற்று.
நகரப் பேருந்தில் ‘ஏ பெரியவரே’ என்று என்னைக் கண்டக்டர் அழைத்தபோதுதான் விஷயம் சுள்ளென்று உரைத்தது.அதுவரைக்கும் அப்படி ஒன்றும் நாம் கிழமாகிவிடவில்லை. நம்மை மீறி ஒன்றும் ஆகிவிடாது. அலுவலத்தில் கூட பெண்கள் நம்மிடம்தான் இப்போதும் குழையக்குழைய பேசுகிறார்கள்தானே என்று ஒருமிதப்பில் இருந்தேன். அப்புறம்தான் ஒரு மகானுபாவன் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அந்த விஷயம் அவிழ்த்துச் சொன்னான். உங்களுக்கும் தெரிய வேண்டியதுதான். பெண்கள் குழைந்து குழைந்து நம்மிடம் பேசினால் நம்மால் அவர்களுக்கு இனி கிஞ்சித்தும் ஆபத்து இல்லை என்பது உறுதியாகி விட்டது ஆகத்தான் என்று.
நானும் பணி ஓய்வுக்கு ரெடியாகி விட்டேன்.அவனுக்கு இன்னும் ஒரு ஆண்டோ இன்னும் கொஞ்சம் கூடவோ பணி பாக்கி இருக்கலாம்.
‘ நீர் என்னய்யா இங்க’ வெற்றிலைபாக்கு ரமணிதான் ஆச்சர்யத்தோடு கேட்டான். அந்த நெய்வேலிக்காரனுக்கு குரல் வெங்கலம் மாதிரி. அது துளிக்கூட மாறாமல் இன்னும் அப்படியே இருந்தது. ஆள்தான் கொஞ்சம் வயசான தோற்றத்தில் காணப்பட்டான்.
‘ நானும் புரசைவாக்கம் வந்து நான்கு ஆண்டுகள் ஆயிற்றே’
நான் அவனுக்குப்பதில் சொன்னேன். இந்த நெய்வேலி ரமணிகிருஷ்ணனை, ரமணி என்றுதான் அலுவலுகத்தில் அழைப்பார்கள். ரமணி என்றால் பெண் பெயர் கூடத்தான். ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய் எத்தனையோ பெயர்கள் உண்டுதானே. அப்படி ஒரு பெண் ரமனி என்ற அதே பெயரில் என் ஆபிசுக்கு வேலைக்கு வந்த பிறகுதான் இந்த வெறும் ரமணி வெற்றிலைபாக்கு ரமணி என மாறிக்கொண்டது.
பரஸ்பரம் குடும்ப யோகக்ஷேமங்கள் விசாரித்து முடித்தோம்.அவன் கே கே நகர் பக்கம் நூறு அடி ரோடுக்கு அருகே ஒரு வீடு வாங்கிக்கொண்டு இருப்பதாகச்சொன்னான்.நானும் மேற்குதாம்பரம் தாண்டி முடிச்சூருக்குப்பக்கமாய் வேலிகாத்தான் சூழ்ந்திருக்க ஒரு மனை அரை கிரவுண்ட்டுக்கு வாங்கி இருக்கும் விஷயம் அவனுக்கு த் தெரிந்து இருக்கட்டுமே என்று சொல்லிவைத்தேன்.
‘கொஞ்சம் சுண்ணாம்பு வேணுமே வெற்றிலை போட்டுக்கணும் அதுக்குத்தான் வெளியில வந்தேன். சுண்ணாம்பு எங்க கிடைக்கும்னு தெரியல ,ஒவ்வொரு பொட்டிக்கடையா கேட்டுண்டு வர்ரேன்’
‘ அப்படிச்சொல்லு இந்த சுண்ணாம்புதான் ஒன்னை இந்த சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணித்து’
‘ஆமாம் நான் ஆபிச விட்டா வீடு வீட்டை விட்டா ஆபிசு. அதோடு சரி, எனக்கும் நடக்கறது சிரமம். ஒனக்கு த்தெரியாத சமாச்சாரமா என் கால் படுத்துற விஷயம் உனக்குத்தெரியுமே. இதுவோ ரொம்ப ரொம்ப பிசியான ஊர் இங்க வயசானவாளுக்கும் ஒடம்பு முடியாதவளுக்கும் ஜோலியே இல்லே.’
அவன் கால்களைப்பார்த்தேன்.போலியோவில் பாதிக்கப்பட்ட அந்த ஒரு கால் இன்னும் மோசமாகி இருந்தது.இன்றைக்குத்தான் போலியோ நோய் அறிவியலால் கட்டுக்குள் வந்திருக்கிறது. ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்குப்போலியோ தாக்கிவிடும் ஒரு இருண்டகாலம் ஒன்று நம்மோடு இருக்கத்தான் இருந்தது.
அவனே ஆரம்பித்தான்.’ ஒரு நல்ல சமாச்சாரம் சொல்லணும் எம் பொண்ணுக்குக்கலியாணம் இப்பத்தான் ஆச்சு. ஒரு வாரம் ஆறது. அவ கல்யாணத்துக்கு ஒரு மாசம் ஆபிசுக்கு லீவு போட்டு இருந்தேன். இண்ணைக்குத்தான் வந்தேன். அவசரத்துல சுண்ணாம்பு டப்பி ய எடுத்துண்டு வரல. ஒனக்கு இந்த புடுங்கல் எல்லாம் இல்லே. அந்த கால கும்பகோணம் டவுனோட , ஜலம் கரயத்தொட்டு தத்தளிச்சுண்டு போன காவேரியோட பந்தம் வச்சிண்ட ஜன்மங்கள்தான் வெத்தல பொட்டலத்த மடியில கட்டிண்டு அலையறது விட வே முடியாது. அந்தப்படிக்குத்தான் நான். என் வாயும் பல்லும் பாத்தாலே தெரியும். காவிபுடிச்சுண்டு நிக்கும்’ சிரித்தான் அவன்.
இன்று வரை எனக்கு இந்த வெற்றிலை பாக்கு புகையிலை சுண்ணாம்பு இத்யாதிகள் எல்லாம் என்ன ருசி என்று அத்துப்படி ஆகவில்லை. பெரிய மனிதர் வீட்டு விசேஷத்துக்குப்போனால் அங்கே கொடுக்கின்ற கிராம்பு மூக்குத்தியாய் ச்சொறுகிக்கொண்ட குண்டு பீடா இத்யாதிகள் கூட வாயில் போட்டுக்கொண்டால் உடன் துப்பிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன். கடலூரில் குடியிருந்து மீன் தின்னாதவனும், கும்பகோணத்தில் குப்பைகொட்டி வெற்றிலை போடாதவனும் , குண்டு மல்லி தலையில் வச்சிக்காத மதுரைப்பொண்ணும் ஜன்மாந்திர பாவிகள்தான் என்று சொற்கேள்வி.
‘ ஒன்னண்ட என் பொண்ணு கல்யாணம் பற்றி சொல்லிடணும். ஒரு ஜூனியர் சிங்கர் தேர்வுப்போட்டிக்குப்போன இடத்துல கடைசி ரவுண்டுல வெளியில வந்தா எம்பொண்ணு. அங்க அதுலயும் பாசாகிப்போன ஒரு மாப்பிள்ளை எங்களுக்குக்கெடச்சார். தங்க நிறம் கண்ணுக்கு மட்டுமில்ல குணத்திலயும்தான். மாச சம்பளம் இத்தன லட்சமாம். அங்க ஆடியன்சா வந்திருந்தா அவா அம்மா அப்பாவும் நானும் என் பொண்டாட்டியும் கல்யாணம் பேசினோம் . முடிச்சோம்.பொண்ணு மாப்பிள்ளை அங்கயே பாத்து ஒத்தருக்கு ஒத்தர் புடிச்சு எல்லாம் ஆச்சு. கல்யாண மண்டபத்தையும் நிச்சயம் பண்ணிட்டுத்தான் ஆத்துக்குப்போனோம். ஒரு மாசத்துல எல்லா ஏற்பாடும் ஆச்சு. ஏ வி எம் மண்டபம், மாம்பலத்துக்காரா நல்லஜாதி நாதஸ்வரம் மணமா குரோம்பேட்ட தெலுங்கா கேட்டரிங்க் எதன்னு சொல்வேன்.பட்சணம் எத்தனை தினுசு பந்தலோட மண்டப அலங்காரம் என்ன , மாலைகள் என்ன, ரகம் ரகமாய் வாணவேடிக்கை ரிசப்ஷன்ல சீரங்கத்து சிவா புல்லாங்குழல் அதுலயும் ஃபுயூஷன் கச்சேரி. என்னன்னு சொல்றது எதை விடறது அப்பப்பா ரொம்பப்பிரமாதம் ரொம்பபிரமாதம்’ சொல்லி முடித்தான்.
அவன் சொல்வதில் ஒன்றும் பொய் இருக்காது. என் மனதிற்குள் வருத்தமாகவும் இருந்தது.
‘ ஏம்பா எனக்கு பத்திரிக்கையே அனுப்பல’
‘உனக்கு பத்திரிகை அனுப்ப விசாரிச்சேன். நீ திருமுதுகுன்றத்துல இல்லேன்னு சொன்னா. ஆனா நீ எங்க இருக்கேன்னு தெரியல.
தெரிஞ்சி இருந்தா விட்டு இருப்பனா’ பச்சைப்பொய் சொன்னான். அவன் பற்கள் காட்டிக்கொடுத்தன.
‘நான் சென்னைக்கு மாற்றலாகிப்போனது சொன்னாளா இல்லையா’
‘சொன்னாளே அது நான் இல்லேங்கலமா’
‘ பின்னே நான் இருக்கறது தெரியலன்னு சொல்ற’
‘தெரியாதுதானே’
‘ கஸ்டமர் சென்டர்ல உனக்கு உத்யோகம். இதே டிபார்ட்மென்ல ஒரு ஆபிசுல சென்னையில நான் இருக்கேன். அது உனக்கு கண்டுபுடிக்க முடியல. இந்த கெல்லிஸ் ஆபிசுக்கு அடுத்த தெரு மில்லர்ஸ் ரோடு, நடுப்பற இருக்கறது தம்புசாமி ரோடு மட்டும்தான் அதுவும் இத்தனூண்டு ரோடு. மில்லர்ஸ் ரோடுல அட்மின் ஆபிசு அது உங்களுக்கும் சேத்துதான் ,அங்கதான நான் இருக்கேன். தெரியலன்னு சொல்றே இது என்ன நியாயத்துல சேத்தி’
கேட்டுவிட்டேன்.
‘மொதல்ல சுண்ணாம்பு வாங்கினூடுவம் அப்புறம் பேசலாம் சொன்னாக்கேளு’ என்றான் வெற்றிலைபாக்கு ரமணி.
ஒரு பொட்டிக்கடையில் விசாரித்து அவர் வழிகாட்டியபடி எல்லாம் போய் பின் திரும்பி அந்த மளிகைக்கடையைக்கண்டு பிடித்தோம்.அங்கு சுண்ணாம்பு கிடைத்தது. அவன் முகம் பிரகாசமாகியிருந்தது.
‘ இங்க ஏன் சுண்ணாம்பு ஒரு கடையிலயும் கிடைக்கல’
அவன் கேட்டான். மளிகைக்கடைக்காரன் நீட்டமாய் பதில் சொன்னான். ‘நான் கொடவாசல் காரன், கும்பகோணத்து ஆசாமி ,வெற்றிலை போடுறவன். அதான் என் கடையிலயும் சுண்ணாம்பு வாங்கி வச்சி இருக்கேன். மற்ற மனுஷாளுக்கு அதுங்க அருமை எப்பிடி தெரியும். நாம எதுர்பாக்கலாமா சொல்லுங்க’ விளக்க உரையே தந்தருளினார் கடைக்காரர். அவர் கும்பகோணம் ஜனனமாயிற்றே.
என் நண்பனின் முகம் கூடுதலாய்ப்பிரகாசித்தது.
‘இப்பச்சொல்லு உன் பொண்ணுக்கல்யாணத்துக்கு எனக்கு நீ பத்திரிகை அனுப்பல அதுக்கு ஒரு சாரியானு சொல்லி ப்பேசவேண்டாமா நீ பாட்டுக்கு உன் பொண்ணு கல்யாணம் நடந்த ஜபர்தஸ்து மட்டும் சொல்லிண்டே போறயே’ நான் கேட்டுவிட்டேன். நான் கொஞ்சம் அதிகமாகப்பேசிவிட்டதாய் நினைத்தேன். பேசியும்விட்டு பின் நினைத்துக்கொள்வது பழக்கமாகி இருந்தது.
‘ தோ பாரு நாளைக்கு உன் பையன் கல்யாணத்துக்கு எனக்கு நீ பத்திரிக்கை அனுப்ப வேண்டாம் நானும் வல்லைப்பா என்ன சொல்றே’
எனக்கு த்தலையில் அடித்த மாதிரி இருந்தது. இப்படிக்கூடவா ஒரு நண்பன் என்னிடம் பேசிவிடுவான் மனம் ரணமானது. புதியதாக வாங்கிய சுண்ணாம்பு டப்பியை அவன் பத்திரப்படுத்திக்கொண்டான்.
‘ நான் மெட்ராஸ் வந்து கிட்டத்தட்ட நாற்பது வருஷம் ஆச்சு உன் ஞாபகத்துக்குச்சொன்னேன்’ அவன் தன் அலுவலகம் நோக்கி வேக வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.
‘வெட்டி வேருல வாசம் போய் ஒரு நா அது மண்ணுகணக்கா ஆயிடற மாதிரி இந்த மெட் ராசுக்கு வந்து வாசம் பண்ற எல்லா மனுஷாளும் வருஷம் ஆக ஆக இப்பிடித்தான் மாறிடுவாளோ’ மனம் கனக்க என் அலுவலகம் நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.
——————————————————————————————

Series Navigation
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *