ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12

This entry is part 1 of 14 in the series 9 நவம்பர் 2014

 

 

இடம்: ரங்கையர் வீடு

 

காலம்: மத்தியானம் மணி பனிரெண்டரை

 

உறுப்பினர்: ஜமுனா, மோகன்

 

(சூழ்நிலை: ஜமுனா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அந்நேரத்துக்கு மோகன் அங்கே வருகிறான்)

 

 

மோகன்: ஜம்னா… ஜம்னா

 

ஜமுனா: யாரது?

 

மோகன்: நான்தான் ! இந்த மழைல ஐஸ்கிரீமா..?. இதென்ன பச்சைக் குழந்தை மாதிரி.

 

ஜமுனா: வழக்கமா வர்ற ஐஸ்கிரீம் வண்டிக்காரன் வந்தான். இன்னிக்கு ஊர்வலமாச்சே. நெறய ஐஸ்கிரீம் விக்கும்னு போட்டுண்டு வந்தானாம். மழை பேஞ்சு மொத்த சரக்கும் நின்னு போச்சுன்னு பொலம்பினான். ஐயோ பாவம்னு நான் ஒண்ணு வாங்கிண்டேன்.

 

மோகன்: மொத்தமா வாங்கியிருந்தா, அவனுக்கு ஒரு திருப்தி இருந்துருக்கும். ஒரு ஐஸ்கிரீம் வாங்கி என்ன புண்ணியம்?

 

ஜமுனா: மொத்தமா வாங்கி நான் என்ன பண்றது? வீடு வீடா போய், ஐஸ்கிரீம் விநியோகம் பண்ணட்டுமா?

 

மோகன்: அப்படியாவது எனக்கு ஒரு ஐஸ்கிரீம் கெடைச்சிருக்கும்.

 

ஜமுனா: ஐ… ஆசையைப் பாரு.

 

மோகன்: இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போயிடலே. இன்னும் பாதி ஐஸ்கிரீம் மிச்சமிருக்கே!  எனக்கொரு கடி கொடு !

 

ஜமுனா: நோவே ! அசடு வழிய வேண்டாம்!

 

மோகன்: வேறென்ன பண்ணட்டும்?

 

ஜமுனா: வந்த வழியைப் பார்த்துட்டுப்போங்கோ!

 

மோகன்: நெஜம்மா போயிடுவேன்.

 

ஜமுனா: ஓ.எஸ்… (மோகன் போகத் திரும்புகிறான்) ஒரு நிமிஷம்… இதைக் கேட்டுட்டுப் போங்கோ.

 

மோகன்: (திரும்பி) போகச் சொல்லிட்டப்பறம் அப்புறம் கேக்க என்ன இருக்கு?

 

ஜமுனா: இருக்கு!

 

மோகன்: சொல்லு!

 

ஜமுனா: இனிமே நீங்க இங்கே வரப்படாது.

 

மோகன்: ஸீரியஸா சொல்றியா?

 

ஜமுனா: ஆமா! நான் சொல்லலே. அப்பா கிட்டே பேசினேன். அவர் நம்ம விஷயத்துக்குப் பிடிவாதமா மறுப்பு சொல்லிட்டார்.

 

மோகன்: (பதறிப் போய்) அப்பாட்டே சொல்லிட்டியா?

 

ஜமுனா: ஆமாம். சொல்லிட்டேன்.

 

மோகன்: ஏன் சொன்னே? என்ன ஜமுனா இது?

 

ஜமுனா: என்ன ஜமுனான்னா… அவர் ஒரு போட்டோவைக் காட்டி வரனை நிச்சயம் பண்ணலாமான்னு கேக்கறப்போ என்ன சொல்லட்டும்?

 

மோகன்: அப்பா நீ சொன்னதுக்கு, என்ன பதில் சொன்னார்?

 

ஜமுனா: அதை என் வாயால வேற சொல்லணுமாக்கும்?

 

மோகன்: சொல்ல மாட்டியா?

 

ஜமுனா: புதுசா கண்டுபிடிச்சு என்ன சொல்லப் போறார்?  ஒங்களை அவருக்குப் பிடிக்கலே.

 

மோகன்: ஏன்?

 

ஜமுனா: நீங்க உண்மையா இல்லேன்னா, நேர் வழியிலே போகலேன்னா, அவருக்கு மட்டுமில்லே; யாருக்குத்தான் பிடிக்கப் போறது?

 

மோகன்: ஒனக்கு?

 

ஜமுனா: நீங்க பொய்யா நடந்துண்டேள், தப்பு வழியிலே போய்ட்டேள்ணு என்னண்டே ஒப்புத்துண்டேள். நீங்க எந்த மெடிகல் கம்பெனியிலயும் வேலை செய்யலே. டூப் அடிக்கறேள்ணு என்னண்டே வெளிப்படையா சொல்லிட்டேள். அந்த நேர்மை நேக்குப் பிடிச்சது.

 

மோகன்: அவ்வளவுதானா?

 

ஜமுனா: பாதை விட்டுப் பாதை, பாதை விட்டுப் பாதைண்ணு ஒரு பாதைத் தேடிண்டு நீங்க அலையறது என்னைத் தொட்டுட்டது.

 

மோகன்: அப்போ இது வெறும் அனுதாபம் தானா?

 

ஜமுனா: அப்படியோ, எப்படியோ தானே ஒண்ணு ஆரம்பிக்கும்!

 

மோகன்: நீ அப்பாட்டே இதையெல்லாம் சொல்லலியா?

 

ஜமுனா: அவர் சொல்ல விடல்லே.

 

மோகன்: என்னதான் சொன்னார்?

 

ஜமுனா: திருப்பித் திருப்பிக் கேக்காதீங்கோ! நிர்த்தாட்சண்யமா, இதெல்லாம் நடக்கற கதை இல்லேன்னுட்டார்.

 

மோகன்: அப்புறம்?

 

ஜமுனா: அப்பா முடிவை எந்தக் காரணத்தினாலும் மாத்த முடியாது.

 

மோகன்: ஸோ?

 

ஜமுனா: நீங்கதான் முடிவு செய்யணும்.

 

மோகன்: நானா?

 

ஜமுனா: பின்னே?

 

மோகன்: (சிறிது யோசித்து) நான் என்ன செஞ்சாலும் நீ ஏத்துப்பியா?

 

ஜமுனா: நிச்சயமா

 

மோகன்: என் மேலே நோக்கு நம்பிக்கை உண்டா ஜமுனா?

 

ஜமுனா: உண்டு!

 

மோகன்: அப்போ என்னோட பொறப்பட்டு வந்துடு.

 

ஜமுனா: [சட்டென] எப்போ பொறப்படணும்?

 

மோகன்: [நடுங்கிக் கொண்டு] என்ன ஜம்னா இது? இவ்வளவு சட்டுணு இப்படிக் கேட்பேன்னு நானே எதிர் பார்க்கலியே!

 

ஜமுனா: அதான் ஜம்னா… என் கேள்விக்கு பதில் சொல்லுங்கோ.

 

மோகன்: நீயும் யோசி. நானும் யோசிக்கிறேன்.

 

ஜமுனா: இதுல மறுபடியும் என்ன யோசிக்க இருக்கு?  ஏன் இப்போ தயங்றேள் ?

 

மோகன்: அப்புறம் பின்னால நெனச்சு வருத்தப்பட வேண்டாம் பாரு!

 

ஜமுனா: யாரு, நீங்களா, நானா?

 

மோகன்: நீ!

 

ஜமுனா: சந்தோஷம்!

 

மோகன்: எதுக்கு?

 

ஜமுனா: இப்படிக்கூட ஒரு நெனப்பு இருக்கே ஒங்களுக்கு, அதுக்காக!

 

மோகன்: நீ பின்னால வருத்தப்படப்படாது ஜம்னா.

 

ஜமுனா: ஒங்க அக்கறைக்காக சந்தோஷப்பட்டுட்டேன். நாம எப்ப பொறப்படணும்? அதச் சொல்லுங்கோ.

 

மோகன்: [யோசித்து] நாளைக்குச் சொல்றேன்! சரி வர்றேன்.

 

ஜமுனா: ஒங்க முடிவை எதிர்பார்க்கிறேன். போய்ட்டு வாங்கோ.

 

Series Navigationகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015வாழ்க்கை ஒரு வானவில் – 28எல்லா நதியிலும் பூக்கள்தூய்மையான பாரதம்ஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. ! [கவிதை -2]” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *