–மனஹரன், மலேசியா
‘காரை கொஞ்சம் மெதுவாக்குங்க, அந்த இடம் வந்துட்டும்போல அதோ அந்த வளவுலதான் பள்ளிக்கூடம் இருக்கும்”
புஷ்பா டீச்சர்தான் சொல்லிக் கொண்டு வந்தார்.
புஷ்பாவின் கணவர் வேலு காரின் வேகம் கொஞ்சம் குறைத்தார். பின்னால் உட்கார்ந்திருந்த புஷ்பாவின் அம்மாவும் கொஞ்சம் எட்டிப் பார்த்தார்.
“ஆமாம் இந்த இடம்தான்” அவரும் தன்னுடன் உட்கார்ந்திருந்த பேரப்பிள்ளைகளிடம் கூறினார்.
பள்ளியின் பெயர் பலகை கண்ணில் பட்டது.
“ஆமாம் இந்தப்பள்ளிதான்”
கார் பள்ளியின் முன் நின்றது. அது பள்ளி விடுமுறை நாள். பள்ளி மூடப்பட்டிருநத்து.
“அதோ பாருங்க அந்த மரம் இருக்கில்ல அத நானும் அஷ்ராப்பும் சேர்ந்து நட்ட மரம். எவ்வளவு பெரிசா வளர்ந்திருக்கு”
பள்ளி ரொம்ப மாறி இருந்தது. பழைய கட்டடத்திற்குப் பக்கத்தில் புதிய இரு மாடி கட்டடங்கள் எழுப்பப் பட்டிருந்தன. பழைய கணினிக்கூடம் அப்படியே இருந்தது.
பள்ளியின் பாதுகாவலர் வெளியே வந்தார்.
புஷ்பாவுக்கு நன்கு பழக்கமான கிளந்தான் பாசையில் விளக்கம் சொன்னார்.
புஷ்பா நட்ட மரத்தைக் காட்டினார். அப்போதைய தலைமையாசிரியர் விபரத்தை அறிந்தார்.
அவருடன் பணி புரிந்த சில ஆசிரியர்களின் பெயரைக் கூறிக் கேட்டுப் பார்த்தார்.
பிறகு புஷ்பா வசித்து வந்த வீட்டையும் அண்டை வீட்டுக்காரர் பத்திமா பற்றியும் கேட்டார்.
பத்திமா பெயர் சொன்னதும்
“யார் அந்த பலகாரங்கள் சுட்டு விப்பாரே அவரா” என பள்ளி காவலர் கேட்டதும்
“இன்னமும் அவர்கள் பலகாரங்கள் செய்கிறார்களா” என துணைக் கேள்வியோடு மீண்டும் காவலரைக் கேட்டார்.
“இன்னமும் அதே வீடுதான்” என்ற பதிலில் கிடைத்த சந்தோசம் புஷ்பாவின் முகத்தில் தெரிந்தது.
ஒரு இருபத்து ஐந்து வருடங்களுக்கு இருக்கும். கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பயிற்சி முடித்து இருந்தார் புஷ்பா. இந்த கம்போங் சுங்கை தீமாவில் இருக்கும் மலாய்ப்பள்ளிக்குதான் ஆங்கில ஆசிரியராக பொறுப்பேற்க வந்தார். உடன் புஷ்பாவின் அம்மாவும் வந்திருந்தார். இருவரும் சுங்கை சீப்புட்டிலிருந்து ஒரு டாக்சியில் வந்தனர்.
மதியம் மூன்று மணிபோல் பள்ளியில் வளாகத்தில் புஷ்பாவும் அவளின் அம்மாவும் சென்றபோது அப்பள்ளியின் தலைமையாசிரியர் இஞ்சே டாவூட் அவர்களை வரவேற்றார்.
புஷ்பா அங்கு வருவதற்கான கடிதம் முன்கூட்டியே அப்பள்ளிக்கு வந்திருப்பதாகக் கூறினார். டிசம்பர் மாத பள்ளி விடுமுறை காலம். கொஞ்ச பேசிக்கொண்டு இருந்த தலைமையசிரியர் ஆசிரியர் புஷ்பா தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறினார்.
ஜனவரியில் பள்ளித் திறப்பதற்கு இரு வாரங்கள் முன்பே வந்துவிடுவதாகக் கூறிப்புறப்பட்ட புஷ்பாவையும் அவர் அம்மாவையும் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு ஒட்டுக் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
தேநீர் கடையில் பலகாரங்கள் விற்றுக் கொண்டிருந்த பத்திமாவிடம் புஷ்பாவைப்பற்றிக் கூறினார். சலாம் சொன்ன பத்திமா அவளின் பக்கத்திலிருந்த அஷ்ராப்பிடம் புஷ்பாவைக்காட்டி “இவர்தான் உங்கள் புதிய இங்கிலிஸ் ஆசிரியர்” என்றார்.
புஷ்பாவிடம் வந்த அஷ்ராப் மாலை வணக்கம் சொன்னதோடு புஷ்பா மற்றும் அவரின் அம்மா கரங்களைப்பற்றி சலாம் சொன்னான்.
அதோடு மட்டுமல்லாமல் பத்திமா வீட்டின் பக்கத்து வீட்டில்தான் புஷ்பாவிற்கான வீடு இருப்பதாகக் கூறினார்.
மீண்டும் எல்லாருக்கும் நன்றிக்கூறி இரு வாரங்களுக்கு முன்பாக வந்திடுவதாக கூறி புறப்பட்டார் புஷ்பா.
பள்ளி தொடங்கும் இரு வாரத்திற்கு முன் மீண்டும் அதே டாக்சியில் புஷ்பாவும் அவள் அம்மாவும் அந்த கம்போங் சுங்கை தீமாவுக்கு வந்தனர்.
இவர்களின் வருகைக்காக காத்திருந்த தலைமையாசிரியர் புஷ்பாவையும் அவள் அம்மாவையும் அழைத்துக் கொண்டு புஷ்பா குடி இருக்கப்போகும் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பக்கத்து வீட்டிலிலிருந்து பத்திமா வெளியே வந்தார். புஷ்பா குடி இருக்கப்போகும் வீட்டின் சாவி பத்திமாவிடம்தான் இருந்தது.
புஷ்பாவைப் பார்த்தவுடம் அஷ்ராபை அழைத்து வீட்டுச் சாவியை எடுத்து வரச் சொன்னார். சன்னலில் எட்டிப்பார்த்த அஷ்ராப் சாவியோடு வந்து புஷ்பாவிற்கு சலாம் வைத்தான்.
“இரண்டு நாளுக்கு முன்னே நானும் அஷ்ராப்பும் வீட்டைக் கழுவி விட்டோம். தூசியெல்லாம் கூட்டி எடுத்தாச்சி நீங்க உடனே குடி ஏறலாம்” என்றார் பாத்திமா.
அஷ்ராப் வீட்டைத் திறந்துவிட்டான். புஷ்பாவும் அம்மாவும் டாக்சியில் உள்ள பொருட்களை எடுத்தனர்.
அஷ்ராப்பும் பத்திமாகூட டாக்சியில் உள்ள பொருட்களை எடுக்க உதவினர்.
“இந்த வீட்டில் ரெண்டு கட்டில் ஒரு மேசை நாற்காலி இருக்கு, நீங்க பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.
புஷ்பாவிற்கு வீடு பிடித்து இருந்தது.
சமையல் செய்வதற்குக் கொஞ்சம் பானைகள், தலையணைகள், சின்னதாய் ஒரு தொலைக்காட்சி பெட்டி, அப்புறம் கையடக்க அளவில் ஒரு வானொலி இன்னும் சில பொருட்கள் எல்லாவற்றையும் டாக்சியில் போட்டுக் கொண்டு வந்திருந்தனர்.
டாக்சிக்காரர் புறப்பட்டுவிட்டார்
இதையெல்லாம் செய்து முடிப்பதற்கே மணியாகிவிட்டது. இடையில் பத்திமா எவ்வளவு சொல்லியும் எங்களை வற்புருத்தி தே ஒ கலக்கி கொண்டுவந்தார். புஷ்பாவின் அம்மாவிற்கு இதுதான் முதல் முறை தே ஒ குடிப்பது. புஷ்பாவைப் பார்த்தார். பிறகு கொண்டுவந்த பொருள்களில் மாவைத்தேடி அந்த தே ஓவில் கலந்து குடித்தார்.
“ராத்திரிக்கு நீங்க சமைக்க வேண்டாம். நான் சமைத்தது இருக்கு எல்லாரும் ஒன்னா சப்பிட்டுக்கலாம். இன்னிக்கு நீங்க வரிவீங்கன்னு தெரியும் அதான் மீன் கறி வச்சிருக்கேன்”
புஷ்பா ஒன்றுமே சொல்லவில்லை.
இப்படிதான் புஷ்பாவிற்கும் பத்திமா குடும்பத்திற்கும் நெருக்கம் தொடர்ந்தது.
பத்திமாவிற்கு மூன்று ஆண்பிள்ளைகள். இரு பெண்பிள்ளைகள். மூவர் தொடக்கப் பள்ளியிலும் இருவர் ஆசிரத்தில் தங்கியும் படிக்கிறார்கள். பள்ளி விடுமுறை என்பதினால் மற்றவர்கள் எல்லாரும் தாத்தா வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள்.
இடையில் இருமுறை பள்ளித்தலைமையாசிரியர் வந்து சென்றார்.
பள்ளி விடுமுறை முடிந்ததும் அஷ்ராப்தான் புஷ்பாவைப் பள்ளிக்கு அவன் தங்கைகளோடு அழைத்துச் சென்றான்.
புஷ்பா அஷ்ராப் வகுப்பிலும் ஆங்கில பாடம் போதித்தாள். அஷ்ராப் எல்லாரிடமும் புஷ்பா தம் அண்டை வீட்டுக்காரர் என சொல்லி வைத்திருக்கிறான்.
எல்லா மாணவர்களும் அதனை உறுதிபடுத்திக்கொண்டனர்.
அஷ்ராபிற்கு பள்ளி முடிந்ததாலும் அவன் தங்கைகளை அனுப்பிவிட்டு புஷ்பாவிற்காகக் காத்திருப்பான்.
சில வேளை புஷ்பாவிற்கு ஆசிரியர் அறையில் கூட்டம் இருக்கும். அப்போதும் அஷ்ராப் பள்ளி நூல் நிலையத்தில் இருந்து கொண்டே கூட்டம் முடியும் வரை காத்திருப்பான்.
பல வேளை தனக்காக காத்திருக்க வேண்டாம் என புஷ்பா சொல்லிவிட்டாள். ஆனால் அஷ்ராப் கேட்பதாக இல்லை.
பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றதும் சாப்பிடுவான். பிறகு புத்தகங்களை எடுத்துக் கொண்டு புஷ்பா வீட்டிற்கு வந்து விடுவான். பள்ளி பாடங்கள் செய்வான். தெரியாதவற்றை புஷ்பாவிடம் கேட்பான். சில வேளை அஷ்ராப்பின் தங்கைகளும் உடன் வருவார்கள்.
புஷ்பாவின் அம்மா மல்லிகா எல்லாருக்கும் சேர்த்து மாலையில் தேநீர் கலக்குவார்கள்.
பெரும்பாலும் அஷ்ராபின் தங்கைகள் பாடம் முடிந்தவுடன் மல்லிகாவுடன் சேர்ந்து தொலைக்காட்சி பார்ப்பார்கள். தமிழ்ப் படங்கள்தான்.கண்கொட்டாமல் பார்ப்பார்கள். மல்லிகாவை எல்லாரும் அண்டி என்பார்கள். அஸ்ராப்பின் அம்மா பாத்திமாக்கூட அப்படிதான் ஆரம்பத்தில் அழைத்தாள். பிறகு மல்லிகா பலமுறை கேட்டுக்கொண்டதற்குப்பின் மல்லிகா என பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தாள்.
ஒரு நாள் பள்ளி தலைமையாசிரியர் புஷ்பாவை அழைத்தார். அஷ்ராப்பிடம் ஏற்பட்ட மாற்றத்தை அவர் பாராட்டி அதற்குக் காரணம் புஷ்பா என்றார். புஷ்பா போதிக்கும் ஆங்கில பாடத்தில் அஷ்ராப்தான் எப்போதும் அதிக புள்ளிகள் எடுப்பான்.
ஒரு வருடத்தில் அஸ்ராப்பிடம் மிகப்பெரிய மாற்றம் தென்பட்டது. அதிகம் புத்தகத்தோடு இருந்தான்.
அவ்வருட ஆசிரியர் தினத்தன்று ஒரு ஆசிரியரும் மாணவரும் இணைந்து ஒரு மரம் நட வேண்டும் என தலைமையாசிரியர் கூறினார். மாணவர்கள் அந்த மரத்தைக் கண்ணூம் கருத்துமாக பாதுகாக்க வேண்டும் என்றார்.
புஷ்பாவும் அஷ்ராப்பும் சேர்ந்து ஒரு மரம் நட்டனர். அஷ்ராப் அந்த மரத்தை
நன்கு பார்த்துக் கொண்டான். மாலைவேலையில் இவன் மட்டும் சென்று அம்மரத்திற்கு நீர் ஊற்றி வருவான்.
மற்ற மரங்களைக் காட்டிலும் புஷ்பாவும் அஷ்ராப்பும் நட்ட மரம் நன்றாக வளர்ந்து வந்தது.
ஒரு நாள் அஷ்ராப் வீட்டில் மாட்டிறைச்சி சமைத்தார்கள். அஷ்ராப் தம் அம்மாவிடம் ஆசிரியர் புஷ்பாவிற்கு கொஞ்சம் கறி கொடுக்குமாறு கேட்டான். அப்போது பத்திமா “ செகு புஷ்பா இந்து; அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடமாட்டார்கள்” என்று கூறினார்.
மறுநாள் அஷ்ராப் புஷ்பாவிடம் “ஏன் நீங்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை” என்றான்
“நாங்கள் இந்துக்கள் மாட்டை தெய்வமாக வணங்குகின்றோம்’ அதனால் நாங்கள் சாப்பிடுவதில்லை” என்றாள் புஷ்பா.
இந்த பதில் அஷ்ராப்பிற்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.
புஷ்பா தமிழ் பாடல்களை மலாய்மொழியில் எழுதி வைத்துக்கொண்டு இருப்பாள். சில வேளை மெல்ல முனுமுனுப்பாள்.
அஷ்ராப் கூட பல வேளை அதனை கேட்டு இருக்கிறான்.
அவ்வருட ஆசிரியர் தினத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. அஷ்ராப் புஷ்பாவிடம் தனக்கு ஒரு பாடல் கற்றுத்தருமாறு கேட்டான். புஷ்பாவின் பாட்டு புத்தகத்தில் உள்ள பாடல்களின் விளக்கத்தினைக் கேட்டுக் கொண்டு பாடல் புத்தகத்தில் பக்கங்களை திருப்பினான்
“இந்தப் பாட்டை நான் ஆசிரியர் தினத்துக்கு பாடபோறன்” என்று மலாய் மொழியில் எழுதப்பட்டிருந்த தமிழ்ப்பாடலைப் பாட ஆரம்பித்தான்.
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும் எனும் பாடல்தான் அது.
புஷ்பாதான் அஷ்ராப்பிற்கு சரியான ராகத்தைச் சொல்லிக் கொடுத்தாள். ஆசிரியர் தினத்தன்று அஷ்ராப் அந்தப் பாடலை பாடும் முன் இந்தப் பாடலை புஷ்பா ஆசிரியருக்காக பாடுகிறேன் என அறிவித்து பாடினான். நன்றாக இழுத்து பாடினான். அந்த மண்டபத்தில் தமிழ் தெரிந்த ஒரே ஒருவர் புஷ்பாதான். மற்றவர் யாருக்கும் அந்தப் பாடல் விளங்காவிட்டாலும் எல்லாரும் பலத்த கரவொலி எழுப்பி சந்தோசப்பட்டனர்.
அவ்வருடம் நோன்பு பெருநாள் வந்தது.
அஷ்ராப் பத்திமாவிடம் “அம்மா எனக்கு மாட்டிறைச்சி வேண்டாம். கோழி மட்டும் போடுங்கள்” என்றான்.
அஷ்ராப்புடன் உடன் இருந்த சகோதரர்கள் ஏன் என கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். அஷ்ராப் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவில்லை.
புஷ்பாவுடன் பலமுறை தொலைக்காட்சியில் தமிழ் படங்கள் பார்த்திருக்கிறான் அஷ்ராப். தமிழர்களின் பல சம்பரதாயங்களுக்கான விளக்கம் கேட்பான்.
“ஒருமுறை ஏன் சிறுவர்கள் எல்லாம் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்குகிறார்கள்” என்றான்.
புஷ்பா “ அது சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதாகும். நீங்கள்கூட பெரியவர்களின் கையைப்பிடித்து சலாம் செய்து முத்தமிடுகிறீர்களே அதை போன்றது” என்றாள்
இதுபோன்றுதான் பல கேள்விகள்.
முதலில் புஷ்பாவிடம் மலாய்மொழியில் பேசியவன் பிறகு ஆங்கிலமொழியில் உரையாடுவான். பிழையாக இருந்தாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவான். புஷ்பாவும் அதனை ஊக்குவித்தாள்.
ஒரு நான்கு ஆண்டுகளுக்குப் பின் புஷ்பா கேட்டபடி அவளுக்கு சுங்கை சிப்புட்டிற்கு மாற்றம் கிடைத்தது.
அஷ்ராப்பின் அம்மா பத்திமாதான் அஷ்ராப்பிற்கு சொன்னார். அப்போது அஷ்ராப் ஆறாம் ஆண்டு படித்தான். அஷ்ராப்பின் கண்களில் கண்ணீர் வந்தது.
ஓடிப்போய் புஷ்பாவிடம் கேட்டான். புஷ்பாவால் பதில் சொல்ல முடியவில்லை. புஷ்பாவின் அம்மா மல்லிகாதான் பதில் சொன்னார்.
பத்திமா வீட்டிற்கு சென்ற புஷ்பா “அஷ்ராப் நல்ல கெட்டிக்காரன். நன்றாக படிக்கக்கூடியவன். பிற்காலத்தில் நல்ல ஒரு நிலைக்கு நிச்சயம் வருவான்” என்றாள்’ அஷ்ராப்பை அழைத்து “ நல்லா படிக்கனும் மாதம் தவறாமல் எனக்கு கடிதம் எழுது; உனக்கு என்ன உதவி வேண்டுமோ எனக்கு எழுது” எனக் கூறினாள்.
பத்திமா “ஆமாம் எவ்வளவு நாளுக்கு இங்க இருப்பீங்க; அங்கு போன பிறகு எங்களையெல்லாம் மறந்திடக்கூடாது. விடுமுறை நாள்ல வந்துட்டுபோங்க” என்றார்.
புஷ்பா மாறி வந்துவிட்ட பிறகு; அஷ்ராப்பிற்கு கடிதம் எழுதினாள். சில வேளை புத்தகங்கள் வாங்கி அனுப்பி வைப்பாள்.
புஷ்பாவின் திருமண அழைப்பிதழைக்கூட அனுப்பி வைத்தாள்
“இந்த வீடுதான்ன்னு நெனைக்கிறேன். நிப்பாட்டுங்க தம்பி” என்ற அம்மாவின் குரல் கேட்டதும் பழைய நினைவிலிருந்து மீண்டாள் புஷ்பா.
“ஆமாம் இதே வீடுதான்”
வேலு காரை நிறுத்தினார். காரிலிருந்து புஷ்பாதான் முதலில் இறங்கினாள். காரின் ஓசை கேட்டு கதவை திறந்து எட்டிப்பார்த்தார் பத்திமா.
பத்திமா புஷ்பாவை அடையாளம் கண்டு கொண்டார்.
“ஹே செகு புஷ்பா” புஷ்பாவை கட்டி அணைத்துக் கொண்டார். காரிலிருந்து எல்லாரும் இறங்கினர்.
மல்லிகாவைப் பார்த்ததும் இன்னும் அவருக்குச் சந்தோசம்.
புஷ்பாவின் கணவர், பிள்ளைகள் எல்லரையும் வரவேற்றார்.
எல்லாரும் வீட்டிற்கு சென்றார்கள். புஷ்பா அஷ்ராப்பைத்தேடினாள்.
வீட்டின் சுவரில் அஷ்ராப் பட்டதாரியான படம் மாட்டப்பட்டிருந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்த புஷ்பாவை பத்திமாதான் “அது அஷ்ராப்தான் அதோ பாரு அவனுடைய திருமணப்படம்” என்றார்.
உடனே அவருடைய கைபேசியை எடுத்து “அஷ்ராப் செகு புஷ்பா வந்திருக்காங்க… நீ உடனே புறப்பட்டு வா” என்றார்
“ நீங்கள் எல்லாரும் இன்னிக்கு இங்குதான் தங்கிட்டு போகனும், நீங்க தங்கின வீடு இன்னும் அப்படியே இருக்கு” என்றார்.
பிறகு இன்னும் சிலருக்கு போன் செய்து விபரத்தைக்கூறி வரும்படி கூறினார்.
“ அஷ்ராப் டவுன்லதான் குடி இருக்கிறான். சொந்தமா வியாபாரம் பண்றான். நல்ல இருக்கிறான். ஒவ்வொரு வாரமும் வந்திருவான். நீங்க தங்கின இந்த வீட்டிலாதான் அவன் குடும்பம் தங்கும்” என்றார்
புஷ்பாவின் கணவருக்கு கைலியும் துண்டும் கொடுத்து குளிக்க சொன்னார்.
பழைய கதைகள் பேசினர். திடிரென்று புஷ்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு “செகு புஷ்பா நீங்க மட்டும் இல்லன்ன இன்னிக்கு அஸ்ராப் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டான்” என்று சொல்லும் பத்திமாவின் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது
ஒரு அரை மணி நேரத்தில் வாசலில் ஒரு கார் வந்து நிற்பது தெரிந்தது.
பத்திமா எட்டிப்பார்த்தார்.
புஷ்பாவும் எட்டிப்பார்த்தார்.
அஷ்ராப்தான் அது. அங்கிருந்தே புன்னகை செய்தான். அதே அவனுடைய பழைய புன்னகை.
புஷ்பாவிடம் சலாம் செய்தான். புஷ்பாவின் கணவரை அணைத்துக் கொண்டான்.
“இவள் ஜமிலா என் மனைவி” என அவன் மனைவியை அறிமுகம் செய்தான்.
அவள் ஒரு முஸ்லிம் தமிழ்ப்பெண். புடவை கட்டி இருந்தாள். அவள் பின்னால் சின்னாதாய் ஒரு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை பாவாடைக்கட்டிக் கொண்டு நின்றுருந்தாள்.
அஷ்ராப்பின் மனைவி நல்ல ஆங்கிலத்தில் பேசினாள். பல விசயங்கள் சொன்னாள்.
அஷ்ராப் அந்தப் பாடலைப் பாடிதான் பல்கலைக்கழகத்தில் தம்மை கவர்ந்தார் என்றாள்
தாம் சேலை கட்டுவதே அஷ்ராப்பிற்கு பிடிக்கும்; பிள்ளைக்கும் பெரும்பாலும் பாவாடை தாவணி இல்லையென்றால் பஞ்சாபி உடை என்றாள்
அஷ்ராப் மாட்டிறைச்சி உண்பதில்லை என்றாள்.
மனைவி ஜமிலா சொல்வதை பார்த்துக்கொண்டே இருந்தான் அஷ்ராப்.
கொஞ்ச நேரத்தில் அஷ்ராப்பின் சகோதரிகள் வந்து சேர்ந்தனர்.
பத்திமாவின் வீடே கலகலப்பாய் இருந்தது.
அஷ்ராப்பின் மகளை எல்லாரும் வாத்தி வாத்தி என்று அழைத்தார்கள்.
இரவு நெடுநேரம் எல்லாரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
மறுநாள் காலை உணவிற்கு பின் புஷ்பாவும் அவர் குடும்பத்தினரும் புறப்பட தயாராயினர்.
அஷ்ராப் மகளின் கையில் ஒரு புடவை பெட்டியைக் கொடுத்து புஷ்பாவிடம் கொடுக்கச் சொன்னான்.
“டீச்சர் நீங்கள் இருவரும் எம் மகளை ஆசீர்வதிக்க வேண்டும்” எனக்கூறி அஷ்ராப்பின் மகள் வாத்தியை புஷ்பா வேலு காலில் விழுந்து வணங்கச் சொன்னான்.
புஷ்பாவிற்கு கண்ணில் நீர் வந்துவிட்டது. காலில் விழுந்த வாத்தியை தூக்கி முத்தமிட்டாள். கையில் ஐம்பது வெள்ளிக்கொடுத்தாள்.
“டீச்சர் வாத்தியோட முழு பெயரைக் கேளுங்க” என ஜாமிலா சொன்னாள்.
“வாத்தி உன் முழு பெயர் என்ன”
“புஷ்பாவாத்தி”
- அறுபது ஆண்டு நாயகன்
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12
- ஆதலினால் காதல் செய்வீர்
- எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது
- தொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா
- பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.
- கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015
- வாழ்க்கை ஒரு வானவில் – 28
- எல்லா நதியிலும் பூக்கள்
- தூய்மையான பாரதம்
- ஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. ! [கவிதை -2]
- ” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்
- சைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது
- திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்