சாவடி – காட்சிகள் 7-9

This entry is part 5 of 23 in the series 30 நவம்பர் 2014

Old Chennai - 1
காட்சி 7

காலம் காலை களம் உள்ளே

இடம் பிராட்வே போலீஸ் ஸ்டேஷன்

ட்யூட்டியில் இருக்கும் ஒரு போலீஸ்காரர் (போலீஸ் 1) உரக்க கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தபடி இருக்கிறார். கூடவே இன்னொரு கான்ஸ்டபிள் – போலீஸ் 2)

போலீஸ் 2: (போலீஸ் 1-இடம்) வண்ணாரப்பேட்டையிலே விழுந்து இருபது பேர் அவுட்டாம்.. கை கால் போய் நூத்தம்பது பேர்..பேப்பர்லே போட வேணாம்னுட்டாராம் கலெக்டர் தொரை

போலீஸ் 1: காக்க காக்க பயமின்றி காக்க.. (போலீஸ் 2-வைப் பார்த்து) ஏம்பா திருக்கழுக்குன்றத்துலே வீடு கிடைக்குமா? ஒண்டுக் குடுத்தனம்னாலும் சரிதான்..

நாயுடு: (உள்ளே நுழைந்தபடி) ட்யூட்டியிலே யாருல்லாம்யா இருக்கீங்க?

போலீஸ்: 1 (கவனிக்காமல் ராகம் இழுக்கிறார்) டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

போலீஸ் 2 நாயுடு பக்கத்தில் வந்து பார்க்கிறார். நாயுடுவுக்கு மிடுக்காக சல்யூட் வைத்து காலைத் தரையில் அறைந்து நிற்கிறார்.

(நாயுடு அவரைக் கைகாட்டி நிறுத்துகிறார்)

நாயுடு: முடிச்சுட்டாரா கேளு

போலீஸ் 1 அசட்டுச் சிரிப்போடு சஷ்டிக் கவசத்தை நீட்ட நாயுடு வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டு பக்கத்து மேஜையில் வைக்கிறார்.

போலீஸ் 2 : ஏட்டையா பேரு ரூஸ்டர்லே காணுமே.. மறந்து போய்க் கிளம்பி வந்தாப்பிலேயா?

நாயுடு: (பொதுவாகப் பார்த்து) கொத்தவால் சாவடியிலே காய் வாங்க வந்தேன்யா… விவகாரத்தை வாங்கிட்டு வர வேண்டிப் போச்சு போ

(பின்னால் இருந்து) குரல்: லேடீஸ் பிங்கர்

வக்கீல் அய்யங்கார் கையில் பிடித்த துணிப்பையோடு நாயுடு பின்னால் நிற்கிறார்.

நாயுடு: ஏமைய்யா வக்கீலூ, மிம்மல்னீ அக்கட நிலபடமனி செப்பேனு கதா (ஏன்’யா வக்கீல் உம்மை அங்கே நிக்கச் சொன்னேனே..)

அய்யங்கார்: அங்கேயே நிக்கச் சொன்னீர் தான்.. யார் இல்லேன்னது? ஆனா பயமா இருந்ததே..

நாயுடு: என்ன பயம்? இதா.. கந்த சஷ்டி கவசமு சதுவண்டி..

அய்யங்கார்: வைஷ்ணவன் பாராயணம் பண்ற சங்கதி இல்லேயே அதெல்லாம்..

நாயுடு :அப்ப வைஷ்ணவ கம்பீரமா கன ஜோரா பயப்படும்.

அய்யங்கார்: போன்னா போயிடுமா ஓய் பயமெல்லாம்? விரல் வந்தாச்சு.. வெண்டைக்காய்க்குள்ளே இருந்தது தலை, கால் எல்லாம் அடுத்தாப்பல் வருமோன்னு பீதி. போதாக்குறைக்கு மேலே ஏதோ ஃபைட்டர் ப்ளேன் மாதிரி டர்ர்ர்ர்னு சத்தம்..

நாயுடு: நாசமாப் போச்சு.. அந்தப் பொம்பளையும்… ஊமையனும்

அய்யங்கார்: அவா பாட்டுக்கு நின்னு ஆத்மார்த்தமா ஏதோ பேசிண்டிருக்கா.

நாயுடு: ஜல்தியா வா.. ஏம்ப்பா கந்த சஷ்டி கவசம்..

போலீஸ் 1: சார்?

நாயுடு: கிளம்பு ..டகுடகு டிகுடிகு டங்கு டங்குகு
(போகலாம் என்று சைகை காட்டுகிறார்)

நாயுடுவும் பின்னால் அய்யங்காரும் வர, இரண்டு அடி முன்னால் ஓட்டமும் நடையுமாக போலீஸ் 1 போகிறார்.

அய்யங்கார்: நீங்க போய்ண்டு இருங்கோ..சாம்பாருக்கு பூஷணிக்கா பத்தை வேண்டியிருக்கு.. வாங்கிண்டு வந்துடறேனே..

காட்சி – 8

காலம் : காலை களம் வெளியே
கொத்தவால் சாவடி

கிராமத்து தம்பதிகள் கடை போட்டிருந்த இடம். கீரைக் கட்டைப் பரப்பிக் கொண்டு ஒரு கிழவி உட்கார்ந்திருக்கிறாள்

நாயுடு (படபடப்பாக, கண்ணில் பட்டவர்களிடம்) எங்கேய்யா அந்தப் பொம்பளை? வெண்டிக்காக்காரி.. ஊமையன் எங்கே போனான்? இப்பத்தானே பாத்தேன்.

கிழவி: (ராகம் இழுப்பது போல்) சிர்க்கீரே மொறக்கீர அரக்கீர

நாயுடு: குண்டு விளுந்து அவனவன் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிக்கினு இருக்கான்.. இந்தக் கந்தர்கோளத்துலே உன்னைப் பாத்து எந்தப் பேமானி ஆயா சிரிக்கிறான் மொறக்கிறான்..

கிழவி: (நிமிர்ந்து பார்த்து) எசமான்.. கீர எடுத்துக்குங்க.. பசலைக்கீர கூட கொண்டாந்திருக்கேன் ..

நாயுடு: உலக விஷயமே தெரியாம நீ பசலைக்கீரை பறிச்சுட்டிருக்கே.. எம்டன்னு கேட்டிருக்கியா?

கிழவி: காது கொஞ்சம் டப்பாசு.. சத்தமா சொல்லுங்க..

நாயுடு: (சத்தமாக) எம்டன் .. எம்டன்..

(காய்கறிப் பையோடு ஒரு கிழவர் வாழைத் தாருக்குப் பின்னால் ஓடிப் போய் நிற்கிறார். பையில் இருந்து கத்தரிக்காய் வெளியே சிதறுகிறது)

கூலி 4 (போகிற போக்கில்): போலீசு அய்யாவே இப்படி சொம்மா பயங்காட்டினா என்னைய மாதிரி அன்னாடங்காச்சி என்னா பண்ணுவான்?

நாயுடு: பொத்திக்கினு போய்க்கினே இருப்பான்.. ஏண்டா சுப்பராயுலு..இங்கே வெண்டிக்கா கடை போட்டிருந்தானே அவனும் பொம்பளையும் எங்கே தொலைஞ்சாங்க?

கிழவி: வண்டிச் சக்கரமா? எல்லாம் தோ அங்கே கயட்டிப் போட்டிருப்பானுங்க..

நாயுடு: நின்னு அடகிந்துக்கன்னா ஈ கோடனி (godani) அடகவொச்சுனுரா

கிழவி வெளங்கலே மக்ராசா இன்னொரு வாட்டி சொல்லுங்க

நாயுடு : ஆமா, உன்னைக் கேக்கறதுக்குப் பதிலா சொவத்தைக் கேட்கலாம்னு அரவத்திலே மாட்லாடினா மட்டும் புரிஞ்சிடுமாக்கும்..

இரண்டு பேர் காய்கறி வாங்க மார்க்கெட்டைச் சுற்றி வருகிறார்கள். (நாயுடு அருகில் வரும்போது)

வாடிக்கையாளர் 1 : எம்டன் ஜெர்மன்காரனா, ஜப்பானா?

வாடிக்கையாளர் 2 : அசல் ஜெர்மன். நம்ம சகோத்ரம் தான். செண்பகராமன் பிள்ளை அந்தக் கப்பல்லே இருந்து ஆர்டர் கொடுத்ததா ஹேஷ்யம்.. தேசபக்தர்னா அவர், திலகர், அரவிந்த் கோஷ்..மத்த எல்லாம் சொள்ளை சொத்தை..

வாடிக்கையாளர் 1: ஆமா, பெரிய திலக்.. ஆறு வருஷம் பர்மாவிலே உக்கார வச்சு ஜெயில் களி போட்டதில்லே அட்டர் சரண்டர்.. யுத்தத்துக்கு ஆள் பிடிக்க பிரசங்கமாம்.. வரானாம்யா உங்க திலக்..

வாடிக்கையாளர் 2: சிங்கம்யா அவன்.. மாண்டலே ஜெயில்லே உடம்பு தான் சரியில்லாம போச்சு.. ஆனாலும் ஆளு கெட்டி .. இந்த வெளுத்த குரங்குப் பசங்களுக்கு சப்போர்ட்டா இருக்கறதா காட்டி.. அப்புறம் பாரு.. நான் அவன் பட்சம் தான்

வாடிக்கையாளர் 1: இங்கே தானே கடை போட்டிருந்தான் எழவெடுப்பான்… கடசியிலே வாங்கிண்டா வெண்டைக்கா நசுங்காம மேலோடு இருக்கும்னு எல்லாம் முடிச்சுட்டு வந்தா ஆள் ஜூட்

நாயுடுவையும் கான்ஸ்டபிளையும் பார்த்த உடனே
வாடிக்கையாளர் 2: திலக் அயோக்கியன்பா.. எம்டனையே திலக் கடங்காரன் தான் வரச் சொன்னதா ஹேஷ்யம்..

நாயுடு: யோவ்.. போலீஸ்காரனப் பார்த்ததும் பிளேட்டைத் திருப்பிப் போடறே பார்த்தியா? உன்னைய மாதிரி ஆளுங்களுக்காக சிரமப்படறதுக்கு அந்த திலகர் பர்மா ஜெயில்லேயே நிம்மதியா இருந்திருக்கலாம்..

கான்ஸ்டபிள்: சார் வெண்டிக்கா

நாயுடு: கவனிச்சேன்யா.. குமரி எப்படிக் கியவியானா, வெண்டிக்கா எல்லாம் எப்படி கீரையாச்சு. திலகர் மேலே தூக்கிக் கடாசலாமா? இல்லே ஈசுவரன் மேலே பழியைப் போட்டுடலாமா?

வாடிக்கையாளர் 1: சார் நான் தான் ஈஸ்வரன்.. எனக்கும் திலக்குக்கும் எனக்கும் வெண்டைக்காக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. வைத்தீஸ்வரன்கோவில் வைத்யநாத ஸ்வாமி சத்யம்.. பூணூலைப் பிடிச்சுண்டு சொல்லட்டுமா?

நாயுடு: யோவ் நான் கேட்டேனா? கேட்டேனான்னு கேக்கறேன்.. கேக்குதாய்யா? கேக்கலேன்னா கேளு.

வாடிக்கையாளர் 2: சத்தியமா புரியலே சார்..

நாயுடு: நுவ்வு கூட சூஸேவு கதைய்யா? (நீயும் தானே பார்த்தே).. வேறே கடை இருந்துச்சில்லே

வாடிக்கையாளர் 2: (கொஞ்சம் யோசித்து) நான் பார்த்தேனா? வேறே கடையா? சார், எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி. கடுக்காய் லேகியம் சாப்பிடறேன்… தினம் விடிகாலை.. பசுமாடு கறக்கக் கறக்க சொம்புலே வாங்கி ஒரு மண்டலம் சாப்பிடணுமாம்.. ஒரு வேளை நேத்திக்கு பார்த்திருப்பேனோ..

நாயுடு : ஒரு வேளை இன்னிக்கு காலையிலே ஞாபக மறதியா காளை மாடு கிட்டே சொம்பை நீட்டியிருப்பீரோ..

நாயுடு அவரை ஓரமாகத் தள்ளி விட்டு தலைச் சுமையோடு நடக்கிற கூலிகளை வழிமறிக்கிறார்.

கூலி 1: எசமான் விலக மனசு வைக்கணும். கருவாடு

நாயுடு: நகரு.. நகரு.. என்ன எளவுக்கு நோட்டீசு வைக்கறே.. அதான் எட்டூருக்கு வாடை தூக்குதே.. நெத்திலியாடா?

கூலி 1: எறக்கறேன் பார்க்கறீங்களா?

அய்யங்கார்: நீ போய்யா.. குமட்டிண்டு வருது

நாயுடு : துண்ற வூட்டுலே பொண்ணு எடுக்க மட்டும் குமட்டாது..

கூலி 2: மூடை வர்ற சமயம் சாமி..

நாயுடு: அந்த ஊமையன் எங்கேடா?

கூலி 2: அவனா? ஒரு கையிலே வெண்டிக்கா மூட்டை.. மறு கையாலே அந்தப் பொம்பளையை இஸ்த்து வளச்சுக்கினான்.. பூட்டான்

நாயுடு : நாசமாப் போச்சு

யோவ் கான்ஸ்டபிள்.. வண்டி கட்டற எடத்துலே போய் விசாரி

கான்ஸ்டபிள்: எதை சார்?

நாயுடு: (தலையில் அடித்துக் கொண்டு) நானே வந்து தொலையறேன்

அய்யங்கார்: போலாமா? சின்னதா ஒரு பூஷணிக்காயே ரெண்டணாவுக்கு பேரம் பேசி வாங்கிட்டேன்.. எப்படி இருக்கு ஓய்?

நாயுடு: எஸ்கேப்

அய்யங்கார்: ஒழிஞ்சுது.. போய் தலைக்கு தண்ணி ஊத்திண்டு தாணாவுக்குப் போய்ச் சேரும்.. நானும் கிளம்பறேன்.. அடுத்த எம்டன் வர்றதுக்குள்ளே எல்லா வாய்தாவையும் வாங்கி வைச்சுடணும்.

நாயுடு : வாய்தா இல்லாட்ட வக்கீல் எல்லாம் ஜெர்மனிக்கு கப்பலேறிடுவீங்களா ஓய்?

அய்யங்கார் : இந்த கச்சேரியெல்லாம் ஞாயித்துக்கிழமை சாயரட்சை ராகுகாலம் கழிஞ்சு சாவகாசமா வச்சுக்கலாம்.. கிளம்பும்..

கூலிகள் : (சேர்ந்து ஒரு வண்டியை இழுத்து வந்தபடி) ஜருகு ஜருகு ஜருகு ஜருகு

(சாவடி ஒலிகள் மேலெழும்பி வர, காட்சி மாற்றம்)

காட்சி 9

காலம் காலை களம் உள்ளே

நாயகி நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறாள். அய்யங்கர் உள்ளே வந்து ஓரமாக நின்று ரசிக்கிறார். அவரைப் பார்த்த வெட்கத்தில் சட்டென்று நாயகி நாட்டியத்தை நிறுத்துகிறார்.

அய்யங்கார்: இந்த பரதத்துக்காகவே உன்னை இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோண்றது நாயகி… என்ன நளினம்.. என்ன அழகு.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு

நாயகி : சும்மா இருங்கோ.. வெக்கமா இருக்கு

அய்யங்கார்: வெக்கப் பட்டுண்டே ஒரு அஷ்டபதி ஆடிடேன். உன் துஷ்டபதி கேக்கறேன்..மாட்டேன்னு சொல்லிடாதே

ஊஞ்சலில் உட்கார்கிறார்.

நாயகி : இப்போ முடியாது. கால் வலி. வேணும்னா அப்புறமா.

அய்யங்கார்: என்ன அப்புறம்? நான் ஆடணுமா?

நாயகி :இல்லே, நீங்க கொத்தவால் சாவடி..

அய்யங்கார்: அங்கே எல்லாம் போய் நான் ஆட முடியாது. அழுகின தக்காளி அடிப்பா

நாயகி : படுத்தாதீங்கோ. . நீங்க அந்தப் பக்கம் கொத்தவால் சாவடிக்குப் போனேளா இந்தப் பக்கம் நம்ம

அய்யங்கார் : நம்ம?

நாயகி: அதான்னா.. நம்ம.. குமாரு..

அய்யங்கார் : யாரு? உன் அண்ணா அதான் அண்ணேயா? என்ன, சாராயம் குடிக்க காசு வேணுமாமா?

நாயகி: : அவர் கள்ளு சாராயத்தை விட நினைச்சாலும் நீங்க சும்மா விட மாட்டேளே.. எப்பப் பாரு.. நொட்டச் சொல்லு.. நொரநாட்டியம்..

அய்யங்கார் : அதுவும் நாட்டியம் தான்

நாயகி : அவனர் சாது. உத்தமமான மனுஷர்

அய்யங்கார் : ஆமா பெரிய மோகன் தாஸ் காந்தி

மனைவி : காந்தி இல்லேதான்.. ஆனா, வாக்தேவி கடாட்சம் இருக்கப்பட்டவர்.. மிருதங்கத்துலே பெரிய இடந்தலை வித்வான்..

அய்யங்கார் : என்ன பிரயோஜனம்? அவனுக்குக் கச்சேரியிலே வாசிக்கறபோது காலப்ரமாணம் இருக்கு. மிச்ச நேரத்துலே சகலமும் தப்புத் தாளமாப் போறது… மிச்சம்..இடந்தலையோ வலந்தலையோ.. தறுதலை…குறுங்குடி பாகவதர், மருதங்குடி வைணீக சிகாமணி, சாலக்குடி சகோதரர்கள்ன்னு பக்க வாத்தியம் வாசிச்சான் ஒரு காலத்துலே. இப்போ வெறுங்குடி தான். என்ன சொல்றான் என் மச்சினன்?

நாயகி: அம்மாவுக்கு ரொம்ப முடியலியாம்.. அண்ணாவுக்கு அம்மாவை வச்சு பராமரிக்க வருமானம் இல்லே ..

அய்யங்கார்: ஹூம்?

நாயகி: ஹூங்காரம் எல்லாம் வேணாம் கேட்டேளா.. அம்மா பக்கவாதத்துக்கு மொடக்கத்தான் கீரை வாங்கி கறிமுது பண்ணக்கூட காசு போறலேயாம்…. என்னை ஒண்ணும் காசு கேக்கலே.. என் மேலே பாய வேண்டாம்.. அகப்பட்டவளுக்கு அஷ்டம்த்துலே .. அதான்.. வெள்ளிக்கு அடுத்தது..

அய்யங்கார் : சனின்னு சொன்னா பிடிச்சுண்டுடுமா என்ன? ஸோ வாட் ஆர் யூ ட்ரையிங் டு ட்ரைவ் ஹோம்?

அய்யங்கார் பார்வையால் அவளைக் கேட்டபடி நிற்கிறார்.

நாயகி : அம்மா இங்கே வந்து இருக்கட்டுமே..

அய்யங்கார்: இருக்கட்டுமே.. பேஷா இருக்கலாம் தான்.. ஆனா சக்கரைச் செட்டி போ போங்கறாரே.. நாளைக்கு வேறே வீடு போனாலும் இதே கதை..

நாயகி : நான் அம்மாவோட போய் இருந்துடட்டா?

அய்யங்கார் : ஏனாம்?

நாயகி: அவ வயத்திலே ஜனிச்சேன்.. ஏக புத்ரி..

அய்யங்கார்: உன்னைக் கட்டிண்டவன் நான்.. ஏக புருஷன்

நாயகி: : எங்க குலத்திலே மத்த பொம்மனாட்டிகளுக்கு ஊர் முழுக்கப் புருஷான்னு சொல்லிக் காட்டறேளா? ரொம்ப நல்ல சர்டிபிகேட் .. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. ஊஹும்.. வேணாம் இதைவிட மோசமா இன்னும் நூறு சர்ட்டிபிகேட் டைப் அடிச்சுண்டு வந்து நீட்டிடுவேள்.. நான் போறேன்.. ஒரேயடியாப் போறேன்..வருஷ திவசம் பண்ண மற்க்க வேணாம்.. எள்ளு வாங்கி வச்சுட்டுப் போறேன்..

அய்யங்கார்: ராமப் பிரபு.. ராமப் பிரபு.. முப்பது வருஷமா இவ இதே டயலாகை பேசிண்டிருக்காளே.. நாயகி இந்த வாழைக்காயை

(பையில் இருந்து வாழைக்காயை எடுத்து அவளிடம் நீட்டுகிறார்.)

அய்யங்கார்: நீளமா திருத்தி வை.. மத்யானத்துக்கு ஜெவஜெவன்னு வாழக்காய் பஜ்ஜி ..

(நாயகி முறைத்து விட்டு உள்ளே போக அய்யங்கார் ஊஞ்சலில் ஆட ஆரம்பிக்கிறார்) அய்யங்கார் பாட்டாக: க்ருஷ்ணனை பஜி மனமே பகவான் க்ருஷ்ணனை பஜ்ஜி மனமே…

Series Navigation‘நாடகங்கள் தொடரும்’சுப்ரபாரதி மணியனின் நீர்த்துளி – உளவியல் பார்வை
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *