தினம் என் பயணங்கள் : 37 கடலும் நானும் -1

This entry is part 17 of 23 in the series 30 நவம்பர் 2014

 

 

ஒரு சின்ன சிலிர்ப்பு, அந்த எண்ணம் வந்து இதயத்தில் உதித்த போது. நான் கடலைப் பார்க்கப் போகிறேன்! எப்படியும் அந்த கடலையும் அதன் ஆர்ப்பரிப்பையும், உப்புச் சுவையின் பிசு பிசுப்பையும் அனுபவிக்கும் ஆவல்.

அதற்கு ஒரு வாய்ப்பும் வந்தது. நண்பர் வையவன் அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து சென்னை வாங்க தமழ்ச்செல்வி, தாரிணி பதிப்பகம்  வெளியிட்ட லட்ச ரூபாய் பெறுமானமுள்ள புத்தகங்களை கொண்டு போங்கள் அப்படியே உங்க டிரஸ்ட்க்காக ஒரு கம்யுட்டரும் தருகிறேன், கொண்டு போங்க என்றார்

எப்படிப் பஸ்ஸில் போவது, எப்படித் தனியாகப் போவது சென்னை வரை ? இந்த சிந்தனையினூடே நான் உள்ள போது, உரையாடலில் இடைப்புகுந்தாள் சுதா! மேடம் நீங்க சென்னை போறதா இருந்தா நானும் வரேன் என் குழந்தையை டாக்டர்கிட்ட காட்டணும். பஸ்ஸில் நான் பயணம் செய்ய இயலாது. டாக்சியில் தான் போக வேண்டும்.  செலவு அதிகமாகுமே ! அதை வையவன் ஏற்றுக் கொண்டார்.

மிகுந்த யோசனைக்குப் பின் சரி என ஒப்புதல் அளித்தாயிற்று.

என்றைக்குச் சென்னை செல்வது என்ற ஆராய்ச்சியின் முடிவாக 2.11.2014 அன்று சென்னை செல்வது என்று முடிவெடுத்தேன். தனித்து செல்லுதலான என் முதல் பயணம் என்பது பெயரளவில் எனினும். சுதா என்னுடன் வருவதை எனக்கான ஒரு பாதுகாப்பாகவே எடுத்துக்கொண்டேன்.

1.11.2014 அன்று இரவு முழுவதும் எப்போது விடியும் என்ற எதிர்பார்ப்பு. இதில் திரு. வையவன் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்தப் போகும் பிரமுகர்களின் பட்டியலைக் கூறியபோது பிரமிப்பு அடைந்தேன்.

இதற்கிடையில் திரு. ஜெயபாரதன் அவர்களின் நண்பர் வழக்கறிஞர் திரு. கே. இரவி அவர்களின் உதவியாக திரு.வையவன் அவர்களின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்திருந்த இரு மடிக்கணிணிகள்.

இப்படியான ஏகப்பட்ட ஆச்சர்யங்களோடு 2.11.2014 அன்று விடிந்தது. அதற்கு முந்திய ஒரு வாரமாக சௌந்தரராஜனிடம் எனக்கு கார் வேண்டும் என்று நச்சரிக்க, “அக்கா என்னால் வரமுடியாது வேற டிரைவர் அனுப்பறேன்கா,” என்று வேறு டிரைவரையும் அனுப்பி வைத்திருந்தான்.

“சௌந்தர் இன்னும் கார் வரலேடா.”

“வெளிய போய் பாருக்கா கார் வெளியில வெயிட் பண்ணுது,” என்று  சொல்லிவிட

ஆர்வக் கோளாறில் சகாயமாத மெட்ரிக்குலெஷன் பள்ளி முன் நின்ற காரைப் போய் நோட்டம் விட்டு வந்தாள் அம்மா.

இதற்கிடையில் சுதாவிற்கு ஒரு அழைப்பு விடுத்தேன்! அவளைத் பயணத்திற்கு தயாராகும்படி பணித்து விட்டு மீண்டும் சௌந்தரை அழைத்து, “என்ன கார்டா” என்றேன்.

“இண்டிகா க்கா,” என்று பதில் சொன்னான் சௌந்தர். நிச்சயம் துருப்பேறியிருக்கும்.

மெல்ல விடியத் துவங்கியிருந்தது வானம். சில்லித்த புறச் சூழல். சர சர சரக் கென்று வாசற் பெருக்கும் ஒலி. இங்கு யாரும் சாணம் தெளிப்பதில்லை. சிமெண்ட் தரையில் சட் சட் சட் டென்று விழும் நீரின் தெறிப் பொலிகள்.

இண்டிகா கார் மெதுவாக ஊர்ந்து வந்து வாசலருகே நின்றது.

என் பேர் தனுசு, என்ற கார் டிரைவர் அம்மாவிடம் பரஸ்பரம் அறிமுகத்தை ஆரம்பித்து விட, ஏற்கனவே என் சகோதரர்களுக்கு அறிமுகமானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்தி நிச்சயித்தார்.

அவர்களின் சம்பாஷணையில் கலவாமல் மெதுவாக காருக்குள் வாசமானேன்.

“தனுஷ் கொஞ்சம் வாங்களேன் நேரமாச்சு முன்னூர்மங்கலம் போய் சுதாவை அழைச்சுட்டுப் போகனும்.”

நான் தனுஷ் இல்ல மேடம் தனுசு, தனுஷ் ரொம்ப பெரிய ஆள் மேடம் நான் அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்றார் தனுசு.

அட பெரிய மனுஷன் இல்லை என்று ஒப்புக் கொள்ளவே ஒரு பெரிய மனது வேண்டும். பெரிய மனுஷன்டா என்ற மனதின் முரணை எண்ணி வியந்து கொண்டேன்.

கார் மெதுவாக வேகம் எடுத்து பிரதான சாலையில் கலக்கும் தருவாயில் நிறுத்தப்பட்டது. வெளியிலிருந்து உட்புறமாய் நோட்டமிட்ட விட்டவனுக்கு என் தம்பியை ஒத்த வயதிருக்கும். ஒரு பத்து ரூபாயை டிரைவரிடம் கொடுத்து “பூ வாங்கிப் போடு,” என்றவனின் பார்வை என் முகத்தில் நிலைத்தது.

இந்த மூஞ்சி சென்னைக்குப் போய் என்ன செய்யப் போகுது என்பதான பார்வை. நான் முகத்தை திருப்பி வெளியில் வேடிக்கை பார்த்தேன். மனதிற்குள்ளாக டிரைவரை திட்டிக்கொண்டேன் இந்த இடத்தில் தான் நிறுத்த வேண்டுமா ? இலவச மூத்திரக் கண்காட்சிகள் நடக்குமிடம்.

கண்களை இறுக மூடித் திறந்தேன்.

கார் வேகமெடுத்துச் சாலையில் கலந்தது. அவர்தான் கார் ஓனர் மேடம் என்றார் தனுசு

நான் ஆக்டிவ் டிரைவர் !

ஆக்டிவ் டிரைவர்ன்னா?

இந்த மாதிரி சவாரி ஓட்டுறதுக்கு மட்டும் நான் போவேன் மேடம், மெயின் பிசினஸ் ஆட்டோ ஓட்டுறது, எனக்கு ஒரு தம்பி நானும் என் தம்பியும் ஒத்துமையாதான் இருக்கோம் மேடம், ஆனா இந்த வீட்டுக்கு வந்த மருமக இருக்காங்களே! வந்த ரெண்டாவது நாளே தனிக்குடித்தனம்ன்னு சொல்றாங்க, எங்கப்பாவுக்கு 60க்கு மேல வயசு, ஒரு அன்பா பாசமா பேசிக்கிட்டு ஒத்துமையா ஒரு வீட்ல இருக்கனும்ன்னு தோணவே இல்லையே! என் ஒய்ஃப்பும், தம்பி ஒய்ஃப்பும் அப்படித்தான் இருக்காங்க,

ஏதோ வள வளவென்று பேசுவதாகத் தோன்றினாலும், சமூகத்தின் ஒரு சந்தர்ப்ப நிகழ்வை கூறிக்கொண்டு வருகிறார் என்பது எனக்குத் தெளிவாக புரிந்தது.

என் தம்பி கஷ்டத்தை நான் கொஞ்சமாவது சாப்பிட்டிருப்பேன், அவனும் என் கஷ்டத்தைக் கொஞ்சம் சாப்பிட்டிருப்பான். அவன் சம்பாதிச்சு கொடுத்தப்ப வாங்கி வச்சுக்கிட்டாங்க இப்ப தனிக்குடித்தனம் அனுப்புன்னு சொல்றாங்க மேடம். எங்கப்பா எங்கள கஷ்டப்பட்டு வளத்தாரு; அவர் சக்திக்கு எங்களுக்கு செஞ்சாரு, நாங்க வளந்த பிறகு எங்கம்மாவுக்கு எங்க சொந்த உழைப்புல 20 பவுனு நகை போட்டோம். ஆளுக்கு 10 பவுனு நகை போதாதா மேடம் எதாவது விசேஷத்துக்கு போட்டுட்டு போக, அப்படி என்ன பெரிய ஆசை.

ம் என்றேன் சிலர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பது மிகவும் கடினம். அதிலும் தன் குடும்ப கதையை பேசிக்கொண்டு வருபவர் தன் உறவுகளை எந்த நிலையில் பார்க்கிறார் என்பதை சக பயணி ஒருத்தியிடம் கூறிக்க் கொண்டு வருவது அபத்தமாய் தோன்றியது. அதையும் விட அவர் பேசியதை நான் இப்படி எழுதிக் கொண்டிருப்பது?

நான் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு போனேன் மேடம். அங்க என் ப்ரண்டோட மனைவி அவங்க மாமனார்கிட்ட அதாவது என் பிரண்டோட அப்பா அவர்கிட்ட சொல்றாங்க, இன்னா பிரியாணி வச்சுகிறியா வெள்ள சோறு வச்சிக்கிறியான்னு; இத்தனைக்கும் டீச்சர் அவங்க பி எட் படிச்சுட்டு பிரைவேட் ஸ்கூல்ல ஒர்க் பண்றாங்க மேடம். எத்தனை அன்பா உபசரிக்கலாம். இன்னும் கொஞ்சம் சாதம் வச்சுக்கங்க மாமான்னு அன்பா பேசுற தொனியில தான் மேடம் குடும்பத்தோட சந்தோஷம் இருக்கு.

இந்த குடும்ப உபசரிப்புகளுக்கு அப்பாற்பட்டவள். இன்னும் கொஞ்சம் என்ற வார்த்தை என் செவியிலும் தீண்டியதில்லை. எந்த விசேடங்களுக்கு சென்றாலும் தேவைக்கு மிகுதியாகவே தட்டு நிறைய என் முன் இருக்கும். நான் சாப்பிடுகிறேனோ இல்லையோ, என்னைச் சுற்றியிருக்கும் இளையோர் அனைவருக்கும் ஒருவாய் ஊட்டிவிட்டு சாப்பிட்ட திருப்தியை அடைந்து விடுவேன்.

வயோதிகம் என்பது மழலையின் மறுப்பிறப்பு. வயோதிகத்தின் மறு பிரதிதான் ஊனமுற்றோரின் நிலை.

எனக்கு முன்னூர்மங்கலம் தெரியாது தனுசு அங்க ஒரு அம்பேத்கார் சிலை இருக்குமாம் அங்க நிறுத்திடுங்க

சரிங்க மேடம் நிறுத்தறேன், மேடம் பின் சீட்ல பேப்பர் இருக்கான்னு பாருங்க, படிக்கறதுக்காக வாங்கினேன்.

இல்லைங்க தனுசு

மேடம் பாட்டுக் கேப்பிங்களா?

இல்லைங்க பயணத்துல பாட்டு கேட்குற வழக்கம் எனக்கில்ல உங்களுக்கு வேண்டும் என்றால் போட்டுக்கங்க

நான் கேட்பேன் மேடம், பயணக் களைப்பு தெரியாம இருக்கும்.

என்ன படிச்சிருக்கீங்க தனுசு ?

டென்த் ஸ்டேண்டர்ட் மேடம் என்று தொடர்ந்து அவர் பேசிய அத்தனை பேச்சுகளிலும் ஒரு பொது அறிவு களஞ்சியம் கேசட் கேட்ட உணர்வை எனக்குள் உருவாக்கியது.

ஒரு வித்தியாசமான மனிதரா அல்லது வித்தியாசமாக தன்னைக் காண்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறாரா என்று தெரியவில்லை.

ஒரு வழியாய் முன்னூர்மங்கலம் வந்தது. கார் நிறுத்தப்பட்டது. நான் கைப்பேசியை எடுத்து சுதாவிற்கு அழைப்பு விடுத்தேன்.

அதோ அவங்களா மேடம் வந்துட்டு இருக்காங்க என்றார் தனுசு

முதலில் சுதாவின் மகள் காரின் கதவை திறந்துக்கொண்டு உள் நுழைந்தாள்.  கண்களில் மட்டுமே மழலையின் ஆரோக்கியம் தெரிந்தது. மப்ளரால் சுற்றப்பட்ட தலை. இருமிய போது கொல் என்றொரு ஒலி. சளி நான் இருக்கிறேன் உயிரோடு என்றது.

அதன் பின் சுதா காரில் ஏறினாள். தூங்கிட்டு இருந்தா மேடம் அதான் தலை கூட வாரல என்றாள்.

அதுவுமில்லாம நல்ல டிரஸ் போட்டா வசதியானவங்கன்னு நல்லா பாக்காம விட்டுட்டாங்கன்னா என்றாள் சுதா. நல்ல டிரஸ் போட்டா சரியா கவனிப்பாரா ? இல்லையா ?

மருத்துவத்திலும் சலுகை எதிர்பார்க்கும் குணம் எங்கு உட்புகுத்தப்பட்டது என்று சிந்திக்கத் துவங்கியது என் மனம்.

உட் புரையோடிய இந்த சமுதாயத்தை ஆரோக்கியமாக்கப்போவது யார்? தோல்வியும் நிலைபாடில்லாத எண்ணங்களையும் யார் சீர்திருத்தப் போகிறார்கள்?

நான் மறுப்பேச்செதையும் பேசவில்லை. இயலாமை சில தந்திரங்களை கையால்கிறது அவ்வளவே!

ஒரு தாயாய் வருவாய் இல்லாத நிலையில் தன் மகளின் மருத்துவத்திற்காக உதவிக் கேட்டு என்னோடு பயணித்த சுதாவின் நிலைமை என்னை வேதனை அடையச் செய்தது.

சுதாவின் கணவர் நல்ல திடகாத்திரமான மனிதர். அவரை நான் அலுவலகத்தில் சந்தித்தபோது சுதாவை வாங்க போங்க என்று மரியாதையாக அழைத்தார். ஆனால் சுதா பேச்சுவாக்கில் சொன்ன செய்தி அத்தனையும் அவரின் நடக்கைக்கு நேர் மாறாக இருந்தது.

அவள் அலுவலகத்திற்கு கொண்டு வரும் உணவு முதற்கொண்டு, அவளின் ஆடை அலங்காரங்கள் அத்தனையும் அவளின் வறுமைப் பற்றியே என்னிடம் பேசியது.

பிய்ந்து போன செருப்பைக் குறித்துப் பேசியதும். அதை தைக்கக் கொடுத்து வாங்கி வருவதற்காக அவள் செய்த செலவுகளைக் குறித்துப் பேசியதும் அவளின் பணத்தேவையை எனக்கு பறைச்சாற்றியது.

பணம் கொடுப்பதா, பணம் சம்பாதிக்க கற்றுக் கொடுப்பதா? இவளுக்கு எது தேவை?

நான் காணும் உலகத்தின் பெருவாரியான ஆண்களைக் குடிப்பழக்கம் பெண்தன்மை அடையச் செய்திருக்கிறது. அப்படி சொல்வதும் நியாயமில்லைதான். பெண் வீட்டில் இருந்தாலும் குடும்பத்தின் நிர்வாகத்தை ஏற்கிறாள். வீட்டில் இருக்கும் ஆண் குடித்து விட்டு தன் வயிற்றை நிரப்பிக் கொண்டு சுயநலமாய்ச் சுகபோகங்களில் ஈடுபடுகிறான்.

(இதற்கு விதிவிலக்கான ஆண்கள் என்னிடம் சண்டைக்கு வரவேண்டாம் அப்படிப்பட்டவர்களைப் பற்றியதான தில்லை இந்த அனுபவக் கட்டுரை)

சேவல் கூட தன் பெட்டைக்கு பாதுகாப்பான இருப்பிடத்தைத் தேடுகிறது. இந்த ஆண்களின் மந்த போக்கு பெண்களின் இயல்பை மாற்றுகிறது. அல்லவெனில் ஆண் குழந்தைகளை வளர்க்கப் பெண்களுக்கு போதுமான ஞானமில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா? அதுவும் இல்லாமல் சுதா அவளின் குடும்பச் சூழலை மிகைப்படுத்துகிறாளா? அடுக்கிக்கொண்டே போன சிந்தனைகளை இழுத்துப்பிடித்து சாலையில் திருப்பினேன்.

சுதா, “மேடம் நைட்டெல்லாம் தூக்கமில்ல நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்,” என்றாள்.

ஒன்பது மணி ஆனபோது குழந்தைக்கு மட்டும் ஒரு இடத்தில் காரை நிறுத்தி இட்லி வாங்கிக் கொடுத்தோம்.

அதன் பிறகு ஆற்காட்டில் நிறுத்தி நாங்கள் மூவரும் தேநீர் குடித்தோம்.

தொடர் பயணத்தில் வேறெங்கும் பேச்சே இல்லை.

அதன் பிறகு ஒரு ரெஸ்ட்டாரண்டில் நிறுத்தி சுதாவிற்கும் அவள் மகளிற்கும் பூரியும், எனக்கு ஒரு பொங்கலும் காரிலேயே வாங்கிக் கொண்டு வந்து தந்தார் டிரைவர்.

அவரும் காலை உணவை முடித்துக் கொள்ள மீண்டும் சென்னையை நோக்கியதான பயணம் மௌனம் அனுஷ்டித்தபடியே சென்றது.

 

(தொடரும்)

Series Navigationயாமினி கிருஷ்ணமூர்த்தி (2)நெசவாளன் எப்போதும் அம்மணத்தோடா..
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *