தொடுவானம் 44. மலைக்கோட்டை To புதுக்கோட்டை

This entry is part 10 of 23 in the series 30 நவம்பர் 2014
 
          அன்று இரவு நான் திண்ணையில் கோரைப் பாயில் படுத்து உறங்கினேன். வாசலில் நின்ற வெப்ப மரத்து இலைகளின்  சலசலப்பில் இதமான குளிர்ந்த காற்று வீசியது. நன்றாக தூங்கி எழுந்தேன்.
          காலையிலே பால்பிள்ளை கையில் இரண்டு தூண்டிகளுடன் வாசலில் நின்றுகொண்டிருந்தான்.
          ” அண்ணே. வயல்வெளிக்குப் போய்விட்டு அப்படியே ராஜன் வாய்க்காலில் கொஞ்சம் மீன் பிடித்து வருவோமா? ” என்று கேட்டான். காலைக் கடனை முடிக்க வயல் வெளிக்குதான் செல்லவேண்டும். ராஜன் வாய்க்காலில்தான் குளிக்க வேண்டும். எனக்கு தூண்டில் போடுவது என்றால் உயிர் என்பதை அவன் நன்கு நினைவில் வைத்திருந்தான். எனக்கும் அந்த ஆசை அப்படியே இருந்தது.
          “சரி போவோம்.” சம்மதம் தெரிவித்தேன். அவன் தோட்டத்தில் மண் புழுக்கள் தோண்டி எடுத்தான். இருவரும் புறப்பட்டோம்.
          சில கெண்டைகளும், கேளுத்திகளும், குவைகளும் கிடைத்தன. கோரையில் அவற்றைக் கோர்த்து பத்திரப்படுத்திவிட்டு ஆற்றில் இறங்கி குளித்தோம். அன்று மதியம் வீட்டில் நாங்கள் கொண்டு சென்ற மீன்களின் சுவையான குழம்புதான்.பத்து வருடங்களுக்குப் பின் அப்படி ஆற்றில் தூண்டில் போட்டது மகிழ்ச்சியாக இருந்தது
         கிராமத்துக்கு வந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.அனேகமாக அனைவரையும் பார்த்தாகிவிட்டது. தங்கைகளும் எனக்கு பழக்கமாகிவிட்டனர்  அவர்கள் இருவரும் என்னை ” அண்ணன் அண்ணன் ” என்று அழைப்பது கேட்பதற்கு இனிமையாக இருந்தது.                              அண்ணனும் நானும் திருச்சிக்கு புறப்பட்டோம். அங்குதான் அண்ணியின் வீடு உள்ளது. அண்ணிக்கு பெண் குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தது.  குழந்தையின் பெயர் சில்வியா. அண்ணி திருச்சியில் ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்தார்.
          சண்முகம் கூண்டு வண்டியைத் தயார் செய்தார்.பெரிய சூட்கேசை வீட்டில் வைத்துவிட்டு மூன்று நாட்களுக்குத் தேவையான  ஆடைகளை மட்டும் ஒரு தோள் பையில்  எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். சிதம்பரம் வரை மாட்டு வண்டியில் சென்று சிதம்பரத்திலிருந்து திருச்சிக்கு தமிழ் நாடு துரித பேருந்து மூலம் செல்ல திட்டமிட்டிருந்தோம்.
          கிராமத்து மண் சாலை வழியாக புறப்பட்டு பதினைந்து நிமிடங்களில் தார் ரோடு வந்துவிட்டோம்.இரு பக்கமும் வாய்க்கால்களில் நீர் நிரம்பி ஓடியது. ஆங்காங்கே மதகுகளில் கிராமவாசிகள் துணிகள் துவைப்பதும் குளிப்பதுமாக இருந்தனர். சுற்று முற்றும் பசுமை படர்ந்திருந்த வயல்களில் நாரைகளும் கொக்குகளும், மீன்கள், நத்தைகள், நண்டுகள ஆகியவற்றை கொத்தித் தின்றுகொண்டிருந்தன.
          காலை வேளையாதலால் காளைகள் இரண்டும் வேகமாக சிதம்பரம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தன. பாதி தூரம் வதததுமே சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்குகோபுரங்களும் அழகுடன் தெரிந்தன. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அக் கோபுரங்கள் இன்னும் அதே பொலிவுடன் வானளாவ உயர்ந்து நிற்பது வியப்பையே உண்டுபண்ணியது.
         ஒருவாறாக பேருந்து நிலையம் வந்துவிட்டோம்.
          வண்டியை விட்டு இறங்கியதும் நாலைந்து பிச்சைக்காரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்.
          ” ஐயா… பசிக்குது … “
          ” ஏதாவது கொடுங்க ஐயா… “
         ” நீங்க நல்லா இருப்பீங்க…. பிச்சை ஐயா…”
       இதுபோன்ற பரிதாபக்  குரல்கள்.நான் வெளியூர்வாசி என்பதை நான் உடுத்தியிருந்த ஆடைகள் காட்டித் தந்துவிட்டன போலும். அண்ணனிடம் அவர்கள் பிச்சை கேட்கவில்லை.
         நான் மணிபர்சை எடுத்து ஆளுக்கு ஒரு ரூபாய் தந்ததைப் பார்த்தவர்கள் வியந்தனர். பிச்சைக்காரகளுக்கு சில்லறை காசுகள் தந்தாலே போதுமானதாம். ஒரு ரூபாய் அதிகமாம். அவர்கள் போய் பசியாறட்டும் என்றுதான் ஆளுக்கு ஒரு ரூபாய் தந்தேன்.
          குறித்த நேரத்தல் துரிதப் பேருந்து வந்து நின்றது. அது சீர்காழி, மாயவரம், கும்பகோண,தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும்.பிரயாணம் சொகுசாக இருந்தது.அந்தந்த ஊர்களுக்கு குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தது.
          திருச்சி டவுனில் அண்ணியின் வீடு இருந்தது. சிறிய வீடுதான்.பள்ளி நிர்வாகம் தந்துள்ள வீடு. அறைகள் இரண்டுதான். வசதிகள் மிகவும் குறைவு. முறையான கழிவறை இல்லை.
          அண்ணியை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். நல்ல உயரம். நீண்ட கூந்தல். வடிவான முகம்.கலகலவென்று என்னிடம் பெசினார். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னைப் பற்றி நிறைய விசாரித்தார். சிங்கப்பூரைப் பற்றி நிறைய கேட்டார். எனக்கு லதா ஞாபகம் வந்து விட்டது. சில நாட்களாக புது உறவுகளைப் பார்த்த பூரிப்பில் லயிதுப்போயிருந்த நான் லதா நினைவு இல்லாமல் இருந்தேன். ஆனால் அண்ணி திரும்ப திரும்ப சிங்கப்பூர் பற்றியே பேசியதால் லதாவின் நினைவு வந்து கவலையை உண்டு பண்ணியது.
          நாடு ஹாலில் குழந்தை சில்வியா தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தாள். நல்ல நிறம். அண்ணனின் முகம்தான்.
          அண்ணியின் தம்பி தாஸ். என் வயதுதான். செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி,ஏ. பயின்று வந்தார். எனக்கு நல்ல துணையானார். அண்ணியின் தந்தை ஜோசப் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி. தாயார் ராஜம்மாள் தமிழ் ஆசிரியை .ஜூலி என்ற ஒரு தம்பி பள்ளி மாணவன்.
          அன்று இரவு தாஸ் என்னை படம் பார்க்க கூட்டிச் சென்றார். திருச்சியில் பல திரையரங்குகள் இருந்தன. சிங்கப்பூரில் நான் திரைப்படங்கள் பார்த்தது குறைவு. அப்பா என்னை படம் பார்க்க அனுப்ப மாட்டார். தனியாகச் சென்றும் பார்த்ததில்லை. இங்கோ தினமும் பார்க்கலாம் போலிருந்தது.
          அன்று இரவு ஹாலில்தான் படுத்து உறங்கினோம். காலையில் ஆளுக்கு ஒரு செம்புடன் கழிப்பிடம் சென்றோம். அது சற்று தொலைவில் இருந்த பொது திறந்த வெளி கழிப்பிடம். நிறைய பேர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். எனக்கு அது அருவருப்பாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. நகர வாழ்க்கையின் அவலங்களில்  இதுவும் ஒன்றாகும்.அந்த இடத்தைச் சுத்தம் செய்ய எராளமான பன்றிகள் வேறு மேய்ந்து கொண்டிருந்தன.காலைக் கடனை முடிக்க கிராமத்தில் வயல்வெளிக்குச் சென்றது எவ்வளவோ சுகாதாரமானதாகத் தோன்றியது!
          வீடு திரும்பியதும் தாஸ் என்னை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு குளிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.அங்கு செல்லவே பதினைந்து நிமிடம் ஆனது. அது காவிரி நதி. அதன் அகலத்தைப் பார்த்து நான் பிரமித்துப்போனேன்.அப்போது நீர் நிறைந்திருந்தது.சீராக அது நகர்ந்துகொண்டிருந்தது. அதன் கரையோரத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.( படம் இணைத்துள்ளேன் ).நான் என்னுடைய கொடாக் கேமரா கொண்டு  சென்றிருந்தேன்.கரையில் மரம்,செடி கொடிகள் பசுமையாக காட்சி தந்தன.கொக்குகளும் மீன் கொத்திகளும் காணப்பட்டன.ஆற்றின் கரையோரத்திலேயே குளித்து முடித்தோம்.
         வீடு திரும்பியதும் சூடான இட்டிலி சாம்பார் பசியாறினோம்.
          மீண்டும் சைக்கிளில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் சென்றோம். அந்த மலை டவுனின் மையத்தில் உயர்ந்து நின்றது.மலையடிவாரத்தில் வரிசை வரிசையாக கடைகள் இருந்தன.கோவிலின் நுழைவாயிலில் காவியுடை தரித்த பிச்சைக்காரகள் ஏராளமானவர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்களில் பலர் தொழுநோயாளிகள்.வழக்கமான பிச்சை கேட்கும் பல்லவிதான்.நான் ஆளுக்கு ஒரு ரூபாய் தந்தேன்.காலையிலேயே அவர்களுக்கு கொண்டாட்டம்தான்.
         எராளமான படிக்கட்டுகளில் கால் கடுக்க ஏறி உச்சிப்பிள்ளையார் கோவில் அடைந்தோம். ஆனால் அஙகே சிறிய கோவில்தான் இருந்தது ஏமாற்றத்தையே தந்தது! ஆனால் அந்த உயரத்திலிருந்து காவிரி நதி தூரத்தில் வளைந்து செல்வதைக் கண்டு இரசித்தேன்.திருச்சி நகரம் முழுதும் தெரிந்தது.செயின்ட் ஜோசப் தேவாலயக் கோபுரத்தின் அழகைப் பார்த்து மகிழ்ந்தேன்.
          அன்று மாலை புதுக்கோட்டை சென்று வர முடிவு செய்தோம்.
          நான் எப்போதும் பணப் பையைக் கையில் கொண்டு வருவதைக் கண்ட தாஸ் அது ஆபத்து என்று கூறி அதை அண்ணியிடம் தந்துவிட்டு வரச் சொன்னார்.பிக்பாக்கட்டுகள் அதிகம் என்று எச்சரித்தார்.
          எங்கள் செலவுக்கும் பிச்சைக்காரர்களுக்குத் தேவையான பணத்தையும் எடுத்துக்கொண்டு மதியம் புதுக்கோட்டை புறப்பட்டோம்.தொடர் வண்டி பிரயாணம் அது. புதுக்கோட்டை வந்தடைய ஒரு மணி நேரமானது.திருச்சியில் நிறைய பிச்சைக்காரகளுக்கு உதவினேன். புதுக்கோட்டை தொடர்வண்டி நிலையத்தின் வெளியே பிச்சைக்காரர்களுக்கு பஞ்சமில்லை!
          புதுக்கோட்டை அரண்மனை, மன்னர் கல்லூரி, அருங்காட்சியகம் ஆகிய இடங்களைப் பார்த்துவிட்டு மாலை சிற்றுண்டியும் அருந்திவிட்டு  தொடர்வண்டி நிலையம் திரும்பினோம்.
          இரண்டு பயணச் சீட்டுக்குக்குச் சொல்லிவிட்டு அதற்கான கட்டணத் தொகையை எண்ணிப்பார்த்தேன்.போதுமான பணம் இல்லை.தாஸ் வைத்திருந்த பணத்தையும் தந்தார்.அப்போதும் ஒரு ரூபாய் குறைந்தது! கொண்டு வந்த பணத்தையெல்லாம் பிச்சைக்காரர்களுக்கு தானம் செய்துவிட்டேன். இப்போது யாரிடம் ஒரு ரூபாய் கேட்பது? அந்த பிச்சைக்காரர்களிடம் கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்பதா?
         நாங்கள் தடுமாறுவதைக் கண்ட அவர்களும், ” ஏதாவது உதவி வேண்டுமா? ” என்று என்னைப் பார்த்து கேட்பதுபோன்று பார்த்தனர்.இப்போது யார் பிச்சைக்காரர் என்பது தெரியாமல் போனது!
          வேறு வழி தெரியவில்லை.
          நேராக ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் நுழைந்தேன். தாஸும் என்னைப் பின்தொடர்ந்து வந்து நின்றார்.
          ” வணக்கம் சார் . ” இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்துக் கூறினேன்.
          ” வணக்கம். நீங்கள் யார்? ஏதாவது உதவி தேவையா? ” என்று கேட்டார்.
          ” சார். நாங்கள் திருச்சி செல்ல டிக்கட் வாங்க ஒரு ரூபாய் குறைகிறது. கடனாக நீங்கள் தந்து  உதவினால் நான் தவறாமல் திருப்பி அனுப்பிவிடுகிறேன். ” என்றேன்.
          அவர் எங்களை ஏற இறங்கப் பார்த்தார். பின்பு சிரித்தார்.
          ” நோ ப்ராப்ளம். ”  என்று கூறியவாறு தன்னுடைய மணிபர்சை எடுத்து ஐந்து ரூபாய் நோட்டை வெளியே எடுத்தார்.
          ” இதை   வைத்துக் கொள்ளுங்கள். திருப்பி அனுப்ப வெண்டாம். ” சிரித்துக்கொண்டே நீட்டினார்.
          ” சார்.நான் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளேன். கொண்டு வந்த பணத்தை இங்குள்ள பிச்சைக்காரர்களுக்கு தந்துவிட்டு இப்போது நான் பிச்சை எடுக்க வேண்டி  வந்துவிட்டது.” என்று விளக்கினேன்.
          அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.
          ” சர். உங்கள் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா? ” அவரிடம் கேட்டேன்.
          ” கமால் ” என்றார்.
          அப்போது தொடர்வண்டி பெரும் இரைச்சலுடன் பிளாட்பாரத்தில் வந்து நின்றது.
          எங்களுடன் அவரும் வெளியே வந்தார். மகிழ்வுடன் எங்களை வழியனுப்பி வைத்தார்.
          வீடு திரும்பியதும் முதல் வேலையாக அவருக்கு நன்றிக் கடிதம் எழுதி அதில் ஐந்து ரூபாய் வைத்து தபாலில் சேர்த்தேன்.மறு வரமே அவரிடமிருந்து பதில் வந்தது. அதன் பிறகு பல வருடங்கள் எங்களுடைய நட்பு நீடித்தது!
          ( முடிந்தது )
Series Navigationஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-15ஆத்ம கீதங்கள் – 7 எங்கள் கூக்குரல் கேட்குமா ? [கவிதை -5]
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

6 Comments

 1. Avatar
  Guru Ragavendran says:

  உங்கள் நினைவுகளை அழகாக தொகுத்து எழுதியுள்ளீர்கள். பழைய சம்பவங்களை சமீபத்தில் நடந்தது போல் எழுதுவது/படிப்பது ஆச்சர்யமாக உள்ளது.(கொஞ்சம் பழைய சினிமா பார்த்தமாதிரி இருந்தது) உங்கள் இந்த கட்டுரை, சுஜாதாவின் ஸ்ரீரஙகத்து தேவதைகள், மற்றும் வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவுகளின் தடத்தில் ஆகியவை வியப்பாகத்தான் இருக்கிறது. முயற்சிசெய்தால் நிறைய தூரம் விவரமாக பின்னால் போகமுடியவில்ல.நன்கு எழுதுபவர்களுக்கு இந்த ஆற்றல் இருக்கும் போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.

 2. Avatar
  ஷாலி says:

  //சில கெண்டைகளும், கேளுத்திகளும், குவைகளும் கிடைத்தன. கோரையில் அவற்றைக் கோர்த்து பத்திரப்படுத்திவிட்டு ஆற்றில் இறங்கி குளித்தோம். ..//

  டாக்டர் ஸார்! இந்த மீனின் பெயர்கள் சரிதானா? அல்லது தட்டச்சு பிழையா? எங்கள் இராமநாதபுரம் ஊர் பக்கம் இவைகளை கெண்டை மீன்,கெளுத்தீ மீன், குரவை மீன் என்று தான் கூறுவோம். மற்றபடி பெயர் எப்படியிருந்தால் என்ன… //அன்று மதியம் வீட்டில் நாங்கள் கொண்டு சென்ற மீன்களின் சுவையான குழம்புதான்.//
  மீன் குழம்பு ருசியாக இருந்தது மகிழ்ச்சிதான்.

  // ” சார்.நான் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளேன். கொண்டு வந்த பணத்தை இங்குள்ள பிச்சைக்காரர்களுக்கு தந்துவிட்டு இப்போது நான் பிச்சை எடுக்க வேண்டி வந்துவிட்டது.” என்று விளக்கினேன்..//

  பிச்சை கொடுத்தே பிச்சைக்காரனாக மாறி நல்லதொரு பாடம் கற்றுக்கொண்டீர்கள். இதைத்தான் “கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே!” என்று கூறுகிறார்கள் போலும்.

  மொத்தத்தில் கட்டுரையில் இளமையான எழுத்தும்,வளமையான கருத்தும் உள்ளது. வாழ்த்துக்கள் டாக்டர் ஸார்!

 3. Avatar
  Dr.G.Johnson says:

  நண்பர் ஷாலி அவர்களே , மீன்களின் பெயர்கள் தட்டச்சில் தவறாகத்தான் விழுந்துள்ளது.நீங்கள் கூறியுள்ள பெயர்கள்தான் சரியானவை. பிச்சை இட்டு பிச்சைக்காரனாக மாறியதற்கு ” கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சைப் புகினும் கற்கை நன்றே ” என்று நம் முன்னோர்கள் சொன்னதை மேற்கோள் காட்டியுள்ள விதமும் அருமை சகலகலாவல்லவரே !நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 4. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள திரூ. குரு ராகவேந்திரன் அவர்களே , வணக்கம். தொடுவானம் படித்து வருவதற்காக நன்றி. அது எப்படியோ தெரியவில்லை, பழைய நினைவுகள் எனக்கு இன்னும் பசுமையாகவே உள்ளன. அதனால் அவற்றை தொகுத்து இவ்வாறு எழுத முடிகிறது. இதை எழுத வேண்டும் என்ற ஆவல் பல வருடங்கள் இருந்தது. நல்ல வேளையாக திண்ணையில் இப்போது தடம் கிடைத்தது. திண்ணைக்கும் பாராட்டியுள்ள தங்களுக்கும் நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 5. Avatar
  Dr.G.Johnson says:

  Dear Mr. V. Narayanan, The beggars were more at Thichy. They were at the station at Puddukottai during the arrival of the train. Of course Pudukottai station was not as busy as Trichy Junction….Dr.G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *