தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2

This entry is part 22 of 23 in the series 7 டிசம்பர் 2014

 

சென்னையில் மழை! மேம்பாலத்தின் வழியே வழிந்து தரை எங்கும் பொட்டு பொட்டுகளாக தெரிந்து கொண்டிருந்த மழைத் துளிகள் கண்களுக்கு ரம்மியக் காட்சியை ஏற்படுத்தினாலும், மனதிற்குள் ஒரு திகில் உணர்வு. சென்னையிலிருந்து எடுத்து வரப் புறப்பாடு செய்தது புத்தகமும் கம்பியூட்டரும் பெற்றுக் கொள்ள. இரண்டிற்கும் மழை என்றால் அலர்ஜி அல்லவா ?

கார் ஜன்னலின் வழியே காட்சியாக்கப்பட்டது மாற்றுத்திறனாளி ஒருவரின் மூன்றுச் சக்கர மோட்டார் வாகன பயணம். அது போன்றதொரு வாகனத்தை நானும் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மீண்டும் நினைத்துப் பத்திரப்படுத்தினேன்.

சுதாவும் அவளின் குழந்தையையும் குன்றத்தூர் போகும் வழியில் இறங்கிக் கொள்ளும்படி டிரைவர் பணிக்க, தெரியாத இடத்தில் நான் எப்படி இறங்குவது என்று தடுமாறியது எனக்குள் ஒரு நேயத்தை அவள் மீது உருவாக்கியது.

குன்றத்தூர் அருகில் கோவூர் மாதா ஹாஸ்பிடலைக் கண்டுபிடித்து அவளை அங்கே இறக்கிவிட்டு வந்திருந்தோம். அவளை இறக்கி விட்டபின்னும் அவள் நினைக்ச் சுமந்தபடியே பயணித்த மனம், நல்லதே நடக்கும் என்ற ஞானிகளின் நிகழ்காலத்தில் நிலைக்கும் தத்துவத்தை நினைவில் நிறுத்தி அவள் நினைவைப் புறந்தள்ள எத்தனித்தது.

தனித்து விடுகிறோம் என்ற எண்ணம் வந்தவுடனேயே, நண்பர் தமிழ்ராஜா நினைவிற்கு வந்தார். ஏதோ ஒரு நாள் பேச்சில் குன்றத்தூர் முருகனைக் குறித்து பேசியதும், அவர் இருப்பிடத்திலிருந்து குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு நடந்து வந்திருப்பதாகச் சொன்ன நினைவு. சுதாவிற்கு உதவும் படி அவரிடம் கேட்கலாம் என்று அவர் எண்ணிற்கு போன் செய்தேன். அன்று அவர் தொலைபேசியை எடுக்க வில்லை.  வேறு யாரையும் சென்னையில் உதவிக் கேட்கும் நெருக்கத்தில் தெரியாததால் கனத்த இதயத்தோடே தொடர்ந்தது என் பயணம்.

திரு.வையவன் அவர்களுக்கு அடையாறை நெருங்கிவிட்டோம் என்று அலைப்பேசியில் தெரிவிக்க, அவர் தான் வசிக்கும், லேண்ட் மார்க்காய் பிரக்ருதி ஜூவல்லரி காந்தி நகர் 4th மெயின்ரோடு ரம்யா பிளாட்டை அடையாளப் படுத்தினார்.

ரம்யா பிளாட்சின் வாயிலிலேயே நின்று எங்களை வரவேற்றார் வையவன்.

கார் பிளாட்டின் வளாகத்தில் நுழைய கார் நிறுத்தவென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் காவலாளியின் அறிவுறுத்தலின்படித் திருப்பி நிறுத்தினார் தனுசு.

நீங்க வாஷ்ரூம் போறீங்களா என்று நாசுக்காய் கீழேயே ஒரு கழிப்பறையை காண்பித்தார் வையவன் அவர்கள். அந்த கழிப்பறை இந்திய மாதிரி கழிப்பறை. நான் அதைப் பயன்படுத்த முடியாது, வெஸ்டர்ன் டாய்லெட் தான் பயன்படுத்த முடியும் என்றதும், அப்படி என்றால் பிளாட் -3 இல் இருக்கிறது எது வசதியோ அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

திரு.வையவன் அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்த போது அங்கே பாம்பே ஸ்டைல் கழிப்பறை என்பதால் என்னால் அதுப்போன்ற கழிப்பறையைத்தான் பயன்படுத்த முடியும் என்று தவறுதலாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று உணர்ந்தேன்.

சிறு சிறு விடயத்திலும் அவரின் அக்கறையான கண்ணோட்டம் அவர் மேல் எனக்கிருந்த மரியாதையை அதிகப்படுத்திய வண்ணம் இருந்தது.

கீழே இருந்தபடி காவலாளியிடம் புத்தகங்களைக் காரில் ஏற்றும்படி உத்தரவிட்டார். உடன் தனுசு உதவ இருவரும் புத்தகம், கம்யுட்டர் ஆகியவற்றை காரில் ஏற்றினார்கள். பிறகு என்னை அழைத்துக் கொண்டு லிப்டில் மேலே சென்றார் வையவன். அந்த கட்டிட வடிவமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

எதிர்காலத்தில் ஹார்ட்பீட்டிரஸ்டின் கட்டிடங்கள் லிப்ட்டுடன் வடிவமைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். நான் படித்த ஒர்த் டிரஸ்ட்டின் கட்டிடங்களை இந்த கட்டிடத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த போதே மேல் அவர் பிளாட்டின் எதிரிலேயே நின்றது லிப்ட். லிப்டின் பக்கத்திலேயே படிகளும் வடிவமைக்கப் பட்டிருந்தன. ஒர்த் டிரஸ்டில் படிகளற்ற வட்ட சாய்தளம் அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றும் உண்டு.

கூடத்தில் திரு.வையவன் அவர்களின் மருமகளும் மற்றொரு பெண்மணியும் அமர்ந்திருந்தார்கள். வந்துட்டாங்க என்றார் வையவன். இந்த அறிவிப்பில் முன்கூட்டியே என்னைப் பற்றிய அறிமுகம் நிகழ்ந்திருப்பதை தெரிவித்தது. அமருங்கள் என்ற சிறு புன்னகையோடு விடைபெற்றார் மருமகள். உடன் இருந்த பெண்மணி ஆங்கிலத்தில் பேச விழைய, உதவிக்கு வந்து அவருக்கான பதிலை ஆங்கிலத்தில் வையவன் கூறியது. சமயத்தில் உதவியது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது.

ஆங்கிலத்தின் அத்தியாவசியத்தை எனக்கு உணர்த்தியதும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் என்னுள் ஏற்படுத்தியது.

திரு. வையவன் அவர்களின் மகன் மற்றும் பேத்திகள் அறிமுகத்தோடு, சிறு தட்டில் பப்பாளி பழம், ஒரு கப் தேநீர் கொண்டு வந்த, திரு.வையவன் அவர்களின் மனைவியின் உபசரணையில் மனம் கனிந்தது.

கூடத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிறப் பிள்ளையார் என்னை கண்சிமிட்டி வரவேற்றார். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு திருமதி. ஜானகி அவர்களைச் சந்திக்க (பக்கத்து பிளாட்டில் வசிப்பவர்) அழைத்துச் சென்றார்.

சிறு அறிமுகத்திற்குப் பிறகு என்னை அவர்களோடு விட்டுவிட்டு வையவன் டிரைவருக்கு டீ வாங்கித் தந்துவிட்டு வருவதாகக் கூறிப் போனார். என்னைத் தனித்துவிடாது என் தனிமை பயத்தை அறிந்து செயல் புரிந்த அவரின் மேன்மைக் குணத்தை மெச்சத் தோன்றியது.

புகழ் பெற்ற மருத்துவரான டாக்டர் பி. கிருஷ்ணன் அவர்களின் மனைவியார் ஜானகி கிருஷ்ணன். டில்லியில் உள்ள ரஷ்ய மொழிப் பயிற்சி இன்ஸ்டிடுட்டில் முறையாகப் பயிற்சி பெற்று 1960 முதல் சென்னை ரஷ்யத் தூதரகத்தில் ரஷ்ய மொழிப் பயிற்சி அளித்துவரும் அவர் கிட்டத்தட்ட உலகம் முழுவதையும் சுற்றியவர். அப்போதைய இஸ்கஸ் சோவியத் கலாசார நட்புறவுக் கழகத்தின் தமிழ் நாட்டு துணைத் தலைவராகப் பணி யாற்றியவர்.  அறிஞர் அண்ணா , கலைஞர், எம்ஜியார், ராஜாஜி போன்ற தலைவர்களோடு பரிச்சயமுள்ள ஜானகி கிருஷ்ணன் தற்போது இஸ்கப் மையத்தின் தமிழ்நாட்டுத் துணைத் தலைவர்.

உலகெங்கிலும் சமாதானமும் சாந்தியும் பரவத் தொண்டு புரிந்து வரும் அந்நிறுவனம் அவரை அண்மையில் பாராட்டிக் கௌரவித்துள்ளது என்பதை திருமதி.ஜானகி அவர்களின் உரையாடலில் அறிந்தேன். அவர் ஏழை, எளியவருக்கு உதவும் பணிகளில் பல்லாண்டுகள் ஈடுபட்டு வருபவர்.

 

அவரின் அன்பின் நிமித்தம் வழங்கப்பட்ட தேநீரை பருகிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் வந்து சேர்ந்தார் வையவன்.

 

திருமதி.ஜானகி அம்மாவிடமிருந்து பிரியா விடைபெற, நெற்றித் திலகமிட்டு பவளமணி அணிவித்து என்னை அன்புடன் அவர் வழி யனுப்பியது நேசச்சுடரை எங்களுக்குள் ஏற்றி அவர்பால் எனக்கேற்பட்ட நெருக்க உணர்வை அதிகரிக்கச் செய்தது.

 

மீண்டும் வையவன் அவர்களின் இல்லத்தில் பிரவேசித்து இல்ல உறுப்பினர்களிடம் விடைபெற்றுக் கீழே வரும்போது மிக சாதாரணராக உடன் வந்த வையவனையும், எங்கள் வீட்டுக்கு அவர் வந்த போது, மெத்தை இல்லா இரும்பு கட்டிலில் எளிமையாய் உறங்கி, பற்பசை இன்றிக் கடைசி துளியைப் பெற்று பல் துலக்கி, டீ குடிக்க நேரமின்றி அவசரமாய்ப் பஸ் ஏறிச் சென்று, சூழலுக்கு ஏற்றார் போல் எளிமை பாவித்த வையவனையும் ஒப்பிடச் செய்தது.

 

இந்தச் சென்னைப் பயணம் மறக்க முடியாத ஓர் அனுபவம் எனக்கு.

 

++++++++++++++++++++++++++

Series Navigationவீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *