மருத்துவ படிப்பு – ஒரு சமூக அந்தஸ்துக்‍காக மட்டுமே

This entry is part 4 of 23 in the series 14 டிசம்பர் 2014

 

 

பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மாவட்ட அளவில் என அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ-மாணவிகளை தொலைக்‍காட்சிகளில் பார்க்‍கும் பொழுது என்னவோ கருப்பாகவும், மாநிறமாகவும்தான் காணப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளால் தங்கள் மருத்துவமனை வளாகத்துக்‍குள்ளேயே நடத்தப்படும் மருத்துவக்‍ கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளைப் பார்த்தால் ஏதோ ஆங்கிலோ இந்தியர்களைப் போல செக்‍கச் செவேள் என ஜொலிக்‍கிறார்கள்.

அவர்களை புதிதாக பார்க்‍கும் யாரும், “இவர்கள் இந்தப்பகுதி மக்‍கள் இல்லை போல” என்று கேட்கும் அளவுக்‍கு தனித்துக்‍ காணப்படுகிறார்கள். வெயில் படாத அந்த வெள்ளைத் தோல் வேந்தர்களைப் பற்றி சற்று ஆராய்ந்தால்  அவர்கள் சவுக்‍கார் பேட்டையோ, ராயப்பேட்டையோ, சைதாப்பேட்டையோ என ஏதோ ஒரு பேட்டையாகத்தான் இருப்பார்கள்.

இவர்களையெல்லாம் ப்ளஸ் 2 ரிசல்ட்டின் போது தினத்தந்தியிலோ, தினமலரிலோ பார்த்ததாகத் தோன்றாது. பின் எப்படி சொல்லி வைத்தாற்போல் வெள்ளைக்‍காரர்களைப்போல் தோற்றமளிக்‍கும் இவர்கள் மருத்துவப்படிப்பில் பயில்கிறார்கள். இவர்கள் அனைவரும் உண்மையாக தகுதியின்அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்‍கப்பட்டவர்களா? அல்லது ஏற்கெனவே தேர்ந்தெடுக்‍கப்பட்டு விட்டு, ‘பலியாடுகளைப்போல் 80 சதவீதம் காணப்படும் தமிழர்களை’ உயிரியல் ஆய்வக தவளையைப் போல் உபயோகப்படுத்தி மருத்துவம் கற்றுக்‍ கொள்விக்‍கப்படுகிறார்களா?

இவர்கள் நிறத்தைக்‍ கொண்டு அல்லது சமூக அந்தஸ்தைக்‍ கொண்டு அல்லது பணத்தைக்‍ கொண்டு தங்களுக்‍குள் ஒரு சமூகத்தினரை தனி பிரிவாக பிரித்துச் சென்று தங்களைத் தாங்களே கூட்டு முயற்சியில் உய்வித்துக்‍ கொள்கிறார்களா?

“எவன் இருக்‍கிறான் என்னைக்‍ கேட்க” என்கிற திராணியோடும், “இதில் என்ன தவறு இருக்‍கிறது, வாழத்தெரிந்தவன் வாழ்ந்து கொள்கிறான்” என்கிற தத்துவங்கள் துணை கொண்டும் வெளிப்படையாகவும். சர்வாதிகாரத்தனத்தோடும் தங்களை ஒரு இனமாக பிரித்துக்‍ கொண்டு மற்ற திறமையாளர்களை அநியாயமாக அடக்‍கி தோற்கச்செய்து, தங்களை ஒரு உயர் இனமாக வாழ்வித்துக்‍ கொள்ளும் இவர்களுக்‍கே இவ்வளவு துணிவிருக்‍கும் போது, அதைப்பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு மட்டும் ஏன் தயங்க வேண்டும்?…

இந்த மருத்துவ மாணவ – மாணவிகள் 3ம், 4ம் ஆண்டு பயிலும் போதே, இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முதலாளிகள் தங்கள் மருத்துவமனைகளில் லைவ் பிராக்‍டிஸ் கொடுக்‍க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை நோயாளிகள் என்பவர்கள் ஓர் உயிரியல் ஆய்வக தவளையைப் போன்றவர்கள்தான். பிரித்து பார்த்து கற்றுக்‍ கொள்ளுங்கள், எவன் கேட்கிறான் பார்த்து விடுகிறேன் என்கிற அடாவடித்தனம், இம்மருத்துவமனை முதலாளிகள் நடந்து கொள்ளும் விதத்தில் வெளிப்படையாகவே தெரியும்.

இந்த ட்யூட்டி டாக்‍டர்ஸ் எனப்படும் மாணவ-மாணவிகள் வேலை பார்க்‍கும் 8 மணி நேரத்தில் 4 மணி நேரம் செல்ஃபோனைத்தான் பார்த்துக்‍கொண்டிருக்‍கிறார்கள். அவ்வப்பொழுது தங்களுக்‍குள்ளாக சிரித்துக்‍ கொள்கிறார்கள். நடந்து செல்லும்பொழுது எதிர்த்தாற்போல் வருபவர்கள் மீது முட்டிக்‍கொள்ளாமல் செல்ஃபோனை பார்த்தபடி செல்ல நன்கு கற்றுக்‍ கொண்டிருக்‍கிறார்கள். நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வயிறு கலங்கி போய் உட்கார்ந்திருக்‍கும் உறவினர்களுக்‍கு இதையெல்லாம் சகித்துக்‍ கொள்ள முடியாவிட்டால் இது போன்ற மருத்துவமனைப் பக்‍கமே வரக்‍கூடாது. அவர்கள் நோயாளிகளுக்‍காக சில மணித்துளிகளை ஒதுக்‍குகிறார்கள் என்பது திரை மறைவில் நடைபெறும் அதிசயம்….

ஒருவர் தன்னை அழகாக அலங்கரித்துக்‍ கொள்வது என்பது தனிமனித சுதந்திரம். அதில் தலையிட எவருக்‍கும் உரிமை கிடையாது. ஆனால் சில விஷயங்களை சொல்லாமல் விட்டுவிடுவது என்பது அடங்கி ஒடுங்கியே பழக்‍கப்பட்ட மனதின் வெளிப்பாடாக ஆகிவிடக்‍ கூடாது.

(இங்கே இங்கு என்பது ஒரு இடம்)

முடியை ஸட்ரெய்ட்னிங் செய்து கொள்ளாத ஒரு மருத்துவ மாணவியை காண்பது இங்கு அரிது. நகப் பராமரிப்பிலும், உடை பராமரிப்பிலும் மிகுந்த கவனமுடன் காணப்படுகிறார்கள். முகத்தில் தினசரி ப்ளீச்சிங் செய்து கொள்வதிலும், பல்வேறு க்‍ரீம்களை முகத்தில் தடவிக்‍ கொள்வதிலும் அதிக அக்‍கறை செலுத்துகிறார்கள். அவர்கள் 7 அடிக்‍கு அந்தப் பக்‍கமிருந்து வருகையிலேயே ஒரு வித வாசனை குப்பென்று தூக்‍குகிறது. அது என்னவிதமான வாசனை திரவியமோ… (மருத்துவமனையை  சுத்தமாக வைத்துக்‍ கொள்ள எவ்வளவோ கட்டுப்பாடுகள் இருந்தாலும், இதுபோன்ற விரும்பத்தகாத சுவாசக்‍கோளாறுகளை ஏற்படுத்தக்‍ கூடிய வாசனைத் திரவியங்களை இன்டன்சிவ் கேர் யூனிட் வரை மருத்துவமனை நிர்வாகம் அனுமதிப்பது என்பது எவ்வகையில் சரியோ?)

ஒரு காலத்தில் உடற்பயிற்சி செய்வதற்காக வெளிநாட்டு ​பெண்கள் உபயோகித்த இருக்‍கமான ஆடையையே இவர்கள் இங்கு சாதாரணமாக அணிகிறார்கள். காலையில் போட்டுக்‍ கொண்ட ரோஸ் பவுடர் கலைந்து போகாமல் இருக்‍க மிகுந்த சிரமப்படுகிறார்கள். இவர்களுக்‍கு செல்ஃபோன்கள் ஒரு முக்‍கியமான விஷயம். அது இல்லையென்றால் அவர்களுக்‍கு ஒருநாள் என்பது 48 மணி நேரமாக மாறி விடும். காலையா? மாலையா? என்பது கூட தெரியாமல் சாட்டிங் செய்கிறார்கள். அப்படி அவர்கள் செல்ஃபோன்களில் கவனமாக இருக்‍கும்பொழுது நோயாளியின் நிலைமை குறித்து ஏதேனும் கேட்பதற்கு கூட தயக்‍கமாகவும், பயமாகவும் இருக்‍கும். எங்கே எரிந்து விழுந்துவிடுவார்களோ என்கிற பயம் தொண்டையை அடைக்‍க மனதுக்‍குள்ளேயே பொறுமிக்‍ கொண்டிருக்‍கும் அனுபவத்தை ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஏதெனும் ஒரு தருணத்தில் அனுபவித்திருப்பார்கள்.

இப்படியெல்லாம் தனிமனித துவேஷத்துடன் விமர்ச்சிக்‍க சற்றும் உரிமையில்லை என்றாலும், சொல்வதற்கு சில அடிமனக்‍ கலக்‍கங்கள் இருக்‍கின்றன.

 

இவ்வளவு ஹை-ஜீனிக்‍காக காணப்படும்இந்த மருத்தவ மாணவ-மாணவிகள் (தமிழக) உடல்நலன் பாதிக்‍கப்பட்ட நோயாளிகளை 5 அடி தள்ளி நின்றே மருத்துவம் (போன்று) பார்க்‍கிறார்கள். எமர்ஜென்சியாக வரும் நோயாளிகளைக்‍ கூட தொட்டுப் பார்க்‍காமல் மருத்துவம் செய்யும் அதிசயம் உலகில் வேறு எங்கு சென்றாலும் காணக்‍கிடைக்‍காத அதிசயம். தலைவலியா பச்சைக்‍கலர் மாத்திரையை ​எடுத்துக்‍ கொடு என்பது போன்ற, மனனம் செய்யப்பட்ட கல்வியறிவுடன் கூடிய செயல்பாடு கொண்ட இவர்களிடம் மருத்துவம் செய்து கொள்வது என்பது மறைமுகமாக கட்டாயப்படுத்தப்பட்டுகின்ற விஷயமாக இருக்‍கிறது. அதற்கான கூலியை அந்த மருத்துவ மாணவ-மாணவிகளிடமிருந்து முதலாளிகள் கறந்துவிடுகிறார்கள் என்பது வேறு விஷயம். இவர்கள் காசு கொடுத்து படிக்‍கிறார்கள், இந்த மருத்துவமனைகளின் முதலாளிகள் நோயாளிகளிடம் காசு வாங்கிக்‍ கொண்டு இவர்களுக்‍கு கற்பிக்‍கிறார்கள். ஆக ஒரே கல்லில் 2 மாங்காய் இந்த முதலாளிகளுக்‍கு. படிப்பதற்கும் பணம், அவர்கள் படிப்பதற்கு துணை புரிகிற நோயாளிகளிடமிருந்தும் பணம். ஆக மறைமுகமாக கருணையற்ற ஒரு சில வியாபாரிகளிடம் மண்டியிட்டுதான் எனக்‍கான மருத்துவத்தை இங்கு நான் செய்தகொள்ள வேண்டும்.

இந்த மாணவ-மாணவிகளைப் பொறுத்தவரை மருத்துவம் என்பது சமூகத்தல் அந்தஸ்து மிக்‍க ஒரு பதவி. அதை நேர்மையாகவோ அல்லது நேர்மையற்ற விதத்திலோ தட்டிப்பறித்துக்‍கொள்வது அவரவருடைய திறமை.

தமிழகத்தில் என்னதான் நடக்‍கிறது என்று சற்று அனுபவப்பட்டோமேயானால் தலை சுற்றும்… கிரிக்‍கெட் போன்ற லாபம் கொழிக்‍கும் விளையாட்டுகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே தொடர்ந்து (கிட்டத்தட்ட 19 வருடங்களாக ) இடம் பிடிக்‍கிறார்கள். இதைப்பற்றி படம் எடுக்‍கிறார்கள். ஆகா, ஓஹோ என்று பாராட்டுகிறார்கள். நேஷனல் அவார்டு கொடுக்‍க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தேர்ந்தெடுக்‍கப்படுவதே நடைபெற்றுக்‍ கொண்டிருக்‍கும். இது என்னவிதமான சமுதாய விழிப்புணர்வு அல்லது போராட்டம் என்றே புரியவில்லை.

திறமையானவனின் வாய்ப்பை பறித்துக்‍ கொள்வதும், திருட்டு சர்டிபிக்‍கெட் தயார் செய்து அரசு வேலை வாங்குவதற்கும் என்ன வித்தியாசம் இருக்‍கிறது.

திறமையானவனின் வாய்ப்பை பறித்துக்‍ கொள்வதும், பக்‍கத்தில் இருப்பவனின் பாக்‍கெட்டிலிருந்து 500 ரூபாயை பறித்துக்‍ கொண்டு ஓடுபவனுக்‍கும் பெரிய வித்தியாசமில்லை.

இந்த சமூக அந்தஸ்து பித்துபிடித்த மருத்துவ மாணவ-மாணவிகள் எப்படி மருத்துவபடிப்புக்‍கு தேர்ந்தெடுக்‍கப்படுகிறார்கள். இவர்கள் எலலாம் உண்மையில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுதான் மருத்துவப்படிப்புக்குள் தேர்ந்தெடுக்‍கப்படுகிறார்களா? இவர்களுக்‍கு உண்மையிலேயே மருத்துவ சேவையில் ஆர்வமுண்டா? இவர்களிடமிருந்து சேவை மனப்பான்மையை எதிர்பார்ப்பது எந்த அளவுக்‍கு நியாயமான விஷயம்.

நோயாளிகளை ஆய்வகத் தவளைகள் போலவும், நோயாளிகளின் உறவினர்களை எபோலா தாக்‍கப்பட்டவர்களைப் போலவும் நடத்தும் இவர்களைப் போன்ற மருத்துவ மாணவ-மாணவிகள் நாளை பணம் சம்பாதிக்‍கும் ஊடகமாக (மட்டுமே) மருத்துவமனையை பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். இவர்களைப் போன்ற ஒரு உயர்தர பிரிவினரை உருவாக்‍கி வெளிக்‍கொணரும் மருத்துவக்‍ கல்லூரிகளின் நோக்‍கம் தான் என்ன?

வலிமையுள்ள உயிரினம் வாழும் என்கிற தத்துவம், வன்முறையைக்‍ கையாளும் உயிரினங்களுக்‍கு மட்டும் சொல்லப்படவில்லையா?வஞ்சகத்தோடு பணம் கொடுத்து வாய்ப்புகளை விலைக்‍கு வாங்கும் உயிரினங்களுக்‍கும் சேர்த்துதான் சொல்லப்பட்டதா?

ஏன் துப்பாக்‍கி தூக்‍குகிறவனுக்‍கு மட்டும் தீவிரவாதி என்கிற அடைமொழி?ஏன் வாய்ப்புகளை பறித்து பணத்துக்‍காகவும், கவுரவத்துக்‍காகவும் மருத்துவத்தொழில் பார்க்‍க நினைக்‍கும் இவர்களுக்‍கும் அப்பெயர் கொடுக்‍கபடக்‍கூடாது? இறப்பு விகிதத்தை நேர்மையுடன் பரிசோதித்துப் பார்த்தால் யார் அதிக கொலைகள் செய்தவர்கள் என்பது தெரியாமலா போய் விடும்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்கிற படத்தை ஒரு நகைச்சுவைப் படமாகத்தான் பார்க்‍க நேர்ந்தது. ஆனால் சத்தமில்லாமல் பல வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.கள்  சமூகத்திற்குள் ஊடுருவிக்‍ கொண்டிருப்பது அவ்வளவு நகைச்சுவையான விஷயம் இல்லை. நாம் நகைச்சுவை என்று நினைத்துக்‍கொண்டிருக்‍கிற ஒருவிஷயத்தை சிரிக்‍காமல் சிலர் செய்து கொண்டுதான் இருக்‍கிறார்கள்.

 

surya lakshminarayanan ljsurya@gmail.com

Series Navigationஅளித்தனம் அபயம்காத்திருக்கும் நிழல்கள்
author

சூர்யா

Similar Posts

9 Comments

  1. Avatar
    ஷாலி says:

    தமிழகத்தில் 18 அரசு மருத்துவ கல்லூரிகளும், 22 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. ஒரு கல்லூரிக்கு சராசரியாக 100 சீட் அனுமதி உள்ளது. இந்த மருத்துவ கல்வி படிப்புக்கு அரசு கல்லூரிகளில் டியூசன் பீஸ் ஆண்டுக்கு ரூ.12,290 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு டியூசன் பீஸ் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல, அரசு பல் மருத்துவ கல்லூரி டியூசன் கட்டணம் 10,290 ரூபாய் என்றும், சுயநிதி பல் கல்லூரிகளுக்கு ஆண்டு டியூசன் கட்டணம் ரூ.1 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், எந்தவொரு சுயநிதி மருத்துவ கல்லூரியிலும் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். அதிலும் இந்த கட்டணத்தை மட்டுமே வாங்காதது மட்டுல்ல சட்டத்துக்கு புறம்பாக நன்கொடையும் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில், அதிலும் சென்னையை சுற்றியுள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் ஒரு சீட்டுக்கு 80 லட்சம் ரூபாயை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பாண்டிச்சேரியில் 70 லட்சம் ரூபாய் நன்கொடை; MD அனஸ்தீஷியா,ரேடியாலாஜி சீட்டுகளுக்கு ரூபாய் 2.5 கோடி கொட்டிக்கொடுத்தால்தான் சீட்டு கிடைக்கும்.

    இப்படி கோடிக்கணக்கில் கொடுத்து வரும் கோடிஸ்வர மருத்துவ மாணவ மாணவிகள் தங்கள் அந்தஸ்தை அற்ப எழைகளுக்காக மாற்றிக்கொள்ள முடியுமா? ஆகவே மருத்துவ படிப்பு இங்கு ஒரு சமூக அந்தஸ்துக்காக மட்டுமே என்பதை கட்டுரையாசிரியருடன் நாமும் புரிந்து கொள்வோம்.மருத்துவ சேவையாவது மண்ணாங்கட்டியாவது….அதெல்லாம் ஒரு காலத்தில்.இப்போது நடப்பது “பிணப் பெட்டி ஏறும் வரை பணப் பொட்டி தேடும்” கலிகாலம்.

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    பொறியியலையும் அந்தஸ்துக்காகத்தான் படிக்கிறார்கள். கம்ப்யூட்டர் ஸ்யன்சைத்தவிர. இங்கே மருத்துவத்தைவிடகொடை, நன்கொடை, ட்யூஷன் ஃயூஸ் எல்லாம் கம்மிதான். சீட்டுக்கள் அதிகமென்பதால், more goods chased by a few buyers. Buyers’market it is!

    சமூஹ சேவை என்று பார்த்தால் எத்தொழிலும் இன்றில்லை. எல்லாமே பணத்துக்குத்தான். சரி நாமதான் சாதாரண ஆளுங்க. பணத்துக்கும் வயிறு வளர்க்கவும் அல்லாடி அலைகிறோம். அனைத்துத்தொழிலையுமே அதற்குத்தான் பயனப்டுத்துகிறோம்.

    இறைவனை வழிபடும் செயல் எப்படி நடக்கிறது? புரோஹிதர்கள் கரக்கிறார்கள்; அர்ச்சர்கர்கள் ஆள் பார்த்து தட்டையேந்துகிறார்கள். கார்ப்ரோட் சாமியார்கள் கோடிகளில் புரள்கிறார்கள். கொஞ்சம் குறைந்த சாமியார்கள் நடிகைகளுக்கு வலைவிரிக்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் கோயிலுக்குப் போய்விட்டு திரும்பும்போது ஏண்டா போனோம் என்றாகிவிடுகிறது. காதல் கோட்டை படத்தில், கதாநாயகி, கோயிலுக்குப்போகலாம். நிம்மதி கிடைக்கும் என்கிறாள். அவள் தோழி இருக்கும் நிம்மதியும் போய்விடும் என்கிறாள். உண்மையில் (படத்தில்) அதுதான் நடக்கிறது.

    இன்டலக்சுவலா பார்த்தால், சமூஹத்தில் ஒவ்வொன்றும் இன்னொன்றைத் தாக்கும் வண்ணம் பின்னிப்பிணைக்கப்படுகின்றபடியால், ஒட்டு மொத்த சமூஹமும் சீரழிவதை எவராலும் தடுக்க முடியவில்லை. நல்லவன் கோமாளி; கெட்டவன் அறிவாளி என்னும் போது, எவன் நல்லவனாக இருக்க விழைவான்? ஆடையில்லா ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்!!

    Our much revered management guru Valluvar says:

    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்.

  3. Avatar
    Dr.G.Johnson says:

    சூர்யா எழுதியுள்ள இந்தக் கட்டுரையைப் படித்தபோது மிகுந்த கவலை உண்டானது. சமுதாய மக்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் சேவை என்ற புனிதமான மருத்துவத் தொழிலை இப்படி வியாபாரமாகிவிட்டார்களே என வருந்தவேண்டியுள்ளது. சொல்ல வேண்டியதேல்லாவற்றையும் சூர்யா .சொல்லிவிட்டார் . அதற்கு நமது சகலகலாவல்ல ஷாலியும், நண்பர் IIT கணபதி ராமனும் கருத்துகள் கூறிவிட்டனர். புதிதாக நான் என்ன சொல்லப்போகிறேன்?
    ஆனால் ஒன்று மட்டும் உண்மை . நான் 1965 களில் மருத்துவம் படித்தபோது இந்த நிலை இல்லை. அதற்கான காரணம் இப்போது எனக்குப் புரிகிறது. நான் படித்த காலத்தில் தமிழ் நாட்டில் சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், பாண்டி ஜிப்மர், வேலூர் சி.எம்.சி ஆகிய ஆறு மருத்துவக் கல்லூரிகள்தான் இருந்தன. பின்பு தஞ்சையில் ஒரு மருத்துவக் கல்லூரி உருவானது. இந்த அனைத்துக் கல்லூரி மாணவர்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கின. தேர்வுகள் அனைவருக்கும் பொதுவானது. எழுத்து தேர்வுகள் அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும். ஆனால் முக்கியமான செயல்முரைத்தேர்வுகள் ( Practicals ) அனைவருக்கும் சென்னையில்தான் நடைபெறும்.ஆதலால் குறைவான மாணவர்கள் இருந்தோம். கடமையுணர்வுடன் மருத்துவம் பயின்றோம். தன்னலமற்ற சமுதாய சிந்தைமிக்க புகழ்பெற்ற மருத்துவர்களிடம் பயின்றோம். கடினமான தேர்வுகள் என்பதால் இரவு பகலாகப் படித்தோம். முறையாக தேர்ச்சி பெற்றோம்,அதனால் இன்னும் சமுதாய சிந்தையுடன் மருத்துவத் தொழிலை புனிதமாகவே போற்றுகிறோம்!
    ஆனால் இன்றைய பரிதாப நிலை கண்டு வெட்கி தலை குனிகிறோம். இது போன்ற பித்தலாட்டக்காரர்கள் மருத்துவம் பயில்வதால் அவர்களைத் தவிர யாருக்கு என்ன லாபம்? இவர்கள் பணத்தால் எதையும் சாதிக்கவல்ல வணிகர்கள். இவர்கள் எங்கே மருத்துவம் பயின்று முறையாகத் தேர்ச்சி பெறப் போகின்றனர்? பணம் தந்து மருத்துவப் பட்டம் வாங்கும் ஏமாற்றுக்காரர்கள். இவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் இதுபோன்று பெருகுவதற்கு யார் காரணம்? இதை ஊக்குவிக்கும் அரசாங்கம்தானே? அவர்களை நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இதுபோன்று எழுதி மக்களிடையே விழிப்புணர்வை உண்டுபண்ணுவதை விட வேறு வழி எனக்குத் தெரியவில்லை. ..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  4. Avatar
    Shankar says:

    சவுகார்பேட்டை- சயிதாப்பேட்டைக்குப் பதிலாக, அரசன்பட்டி- ஆண்டிப்பட்டி முதலிய இடங்களைச் சேர்ந்த சிவப்பு நிறம் இல்லாத மருத்துவர்கள் வேலை செய்யும் அரசு மருத்துவ மனைகள் பல இருந்திட, பண முதலைகள் நடத்தும் கார்ப்பரேட் ஹாஸ்பிடல் பக்கம் கட்டுரையாளரை யார் போகச் சொன்னது? மருத்துவப் படிப்பு மற்றும் மருத்துவத் தொழில் வணிகமயம் ஆகி விட்டது உண்மை தான். . அதற்காக மருத்துவரின் நிறம் மற்றும் ஜாதி பார்ப்பது கட்டுரை ஆசிரியரின் முதிர்ச்சியின்மையைப் பறை சாற்றுகிறது.

  5. Avatar
    ஷாலி says:

    // கடமையுணர்வுடன் மருத்துவம் பயின்றோம். தன்னலமற்ற சமுதாய சிந்தைமிக்க புகழ்பெற்ற மருத்துவர்களிடம் பயின்றோம். கடினமான தேர்வுகள் என்பதால் இரவு பகலாகப் படித்தோம். முறையாக தேர்ச்சி பெற்றோம்,அதனால் இன்னும் சமுதாய சிந்தையுடன் மருத்துவத் தொழிலை புனிதமாகவே போற்றுகிறோம்!//

    டாக்டர்.ஜான்சன் ஸார்! நீங்களெல்லாம் பெருந்தலைவர்.காமராஜ்.கக்கன்.அண்ணா காலத்தில் படித்தவர்கள்.ஆகவே தன்னலமற்ற சமூக பிரங்க்ஞை தங்களின் ரத்தத்தில் இன்றும் உயிர்ப்புடன் ஓடுகிறது.இன்று லஞ்ச ஊழலில் ஊறி மரத்துப்போன சமூதாயத்திலிருந்து வெளி வரும் மருத்துவ மாணவர்களுக்கு நோயாளிகள் ஒரு அட்சய பாத்திரமே! அள்ளட்டும் பணத்தை! கொல்லட்டும் நற் குணத்தை!!

  6. Avatar
    IIM Ganapathi Raman says:

    //சிவப்பு நிறம் இல்லாத மருத்துவர்கள் வேலை செய்யும் அரசு மருத்துவ மனைகள் பல இருந்திட, //

    சிவப்பா கருப்பா என்று பார்த்து பணம் செல்வதில்லை. அரசு மருத்துவமனையில் ஒரு மூதாட்டியைச் நடக்கமுடியவில்லை என்று சேர்த்தால், அரசு மருத்துவர் அருகில் வந்து சொல்கிறார். //இங்கு நாந்தான் சார்ஜ். எதிர்த்தாப்பல என் மருத்துவமனை இருக்கிறது. அங்கு கொண்டு சேர்த்து விடுங்கள்; அருமையான கவனிப்புக்கு உத்தரவாதம்.// மூதாட்டியின் மகனிடம் பணம் உண்டு என்று தெரிந்தபின் கேட்கிறார்.

    இப்படி அரசு மருத்துவர்கள் நடத்தும் தனி மருத்துவமனைக்கு ஆள் பிடிக்க அரசு மருத்துவமனைகள் உதவுகின்றன.

    But the poor have nowhere to go but to govt hospitals. Something is better than nothing for them. It is like government schools, the neighbourhood rikshawala’s daughter has to study there because the nearby Good Shepherd serves the marwadi children only.

  7. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள நண்பர் ஷாலி அவர்களே, நீங்கள் கூறுவது உண்மையே. நான் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு ஒரு பைசா கூட நன்கொடையாகவோ லஞ்சமாகவோ யாருக்கும் தரவில்லை. முழுக்க முழுக்க ஒருசில தகுதிகள் அடிப்படையில்தான் இடம் கிடைத்தது.
    இன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இவ்வளவு பணமா என்பது வியப்பாக உள்ளது. இவ்வளவு பணம் செலுத்தி ” மருத்துவராக ” வெளிவந்தபின் அவர்கள் இழந்த பணத்தை மீட்டு எடுக்க முழுக்க முழுக்க வியாபார நோக்கில் செயல்பட வேண்டியுள்ளது. இந்த அவலத்தைத் தடுக்க இத்தகைய தனியார் மருத்துவக் கல்லூரிகள் கண்காணிக்கப்படவேண்டும். தகுதி அடிப்படையில் சிறந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும்.இது சாத்தியமா? இதை யார் செயல் படுத்துவது? அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  8. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    கருணா, அண்ணா, அம்மா திராவிடக் கட்சிகள் மாறி, மாறிக் கடந்த 45 ஆண்டுகளாகத் தமிழகத்தைத் தொடர்ந்து, அரசாண்டு வருகின்றன !!! குறிப்பாக மருத்துவப் பொறியியல் துறைப் பயிற்சிக் கலாசாலைகள் மேல்நாடுகள் போல் கல்வி நெறியுடன் கற்பிக்காது வணிக சாலைகளாய் மாறிப் பணம் பறித்துக் கொள்ளை அடிப்பதில் பங்கேற்று பலர் பெரும் செல்வந்தராய் ஆகியுள்ளார். கடந்த கால / நிகழ்காலத் தமிழக ஆட்சி முதல் மந்திரிகளும், கல்வி மந்திரிகளும் கைது செய்யப் பட்டு விசாரிக்கப் பட்டு, ஜெயலலிதா போல் நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட வேண்டும்.

    தமிழகப் பல்கலைக் கழகங்களின் பயிற்சி முறைகள் சீராக்கப் பட்டு, மாணவரிடம் நியாயமான கல்விப் பணம் பெற்று, தகுதியுள்ள மாணவருக்கு இடமளித்துத் திறமையுள்ள தொழிற்துறை, மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும் என்பது என் ஆலோசனை.
    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *