மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்

This entry is part 18 of 23 in the series 21 டிசம்பர் 2014

நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும் மிகவும் நெருக்கமானவை. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாகவே இருதயமும் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகளில் 80 சதவிகிதத்தினர் மாரடைப்பால் இறந்துபோகின்றனர் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அமெரிக்க நீரிழிவுக் கழகம், ” நீரிழிவு உள்ளது மாரடைப்பு உண்டான ஒருவர் அடுத்த மாரடைப்புக்குக் காத்திருப்பதற்கு சமமானது ” என்று எச்சரிக்கிறது.ஆகவே நீரிழிவு நோயாளிகள் இருதயங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது இன்றியமையாததாக உள்ளது.

மாரடைப்பு வராமல் இருப்பதற்கு நீரிழிவு நோயாளிகள் இரண்டு முக்கிய பிரச்னைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

* தமனித் தடிப்பு ( Atherosclerosis ) – இருதயம் தொடர்பான பிரச்னையை ” கார்டியோவாஸ்குலர் ” ( Cardiovascular ) என்ற பொதுவான பிரிவின்கீழ் சேர்ப்பதுண்டு.காரணம் இரத்தக்குழாய்கள் இல்லாமல் இருதயம் செயல்பட முடியாது. இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பினைந்தவை. கார்டியோ என்பது இருதயம். வாஸ்குலர் என்பது இரத்தக் குழாய்கள்.
ஆரோக்கியமான இருதயம் இரத்தத்தை தமனிகள் வழியாக உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக தங்கு தடையின்றி கொண்டு செல்கிறது.இந்த தமனிகள் வழவழப்பாகவும் விரியும் தன்மைகொண்டதாயும் இருக்கும். இவை ,தடித்து, கடினமாகி, விரியும் தன்மை இழந்து, அடைப்பு உண்டாகிவிட்டால் அதையே தமனித் தடிப்பு என்கிறோம்.
நீரிழிவு நோயில் தமனித் தடிப்பு பல வழிகளில் ஏற்படலாம்.உயர் இரத்த அழுத்தம் இரத்தம் ஓடும் வேகத்தைக் குறைத்து இரத்த உறைக் கட்டிகள் ( Blood Clots ) .உண்டாக்கலாம். உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் கொழுப்பும் இதர கொழுப்புகளும் அதிகம் இருப்பதால் அவை இரத்தக்குழாய்களை அடைத்துக்கொண்டு சீரான இரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். எந்தப் பகுதியில் இது போன்ற அடைப்பு உண்டாகிறது என்பதைப் பொருத்து அதனால் வேறு சில பிரச்னைகள் எழலாம். அவை வருமாறு :
இருதயத்துக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்பு உண்டானால்.இருதயத்தின் துடிப்பு பாதிப்புக்கு உள்ளாகி வலி உண்டாகும்.முற்றிலும் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு உண்டாகும்.அதனால் உயிருக்கு ஆபத்து உண்டாகும்.
மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்பு உண்டானால் மூளைக்குத் தேவையான இரத்த ஓட்டம் தடைப்பட்டு, வாய் குளறல், பலவீனம், மதமதப்பு உண்டாகி, முற்றிலும் அடைப்பு உண்டானபின் பக்கவாதம் ஏற்படும். இதனால் நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்க நேரிடும்.
கால்களுக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்பு உண்டானால், அவற்றுக்கு தேவையான இரத்த ஓட்டம் குறைவு படுவதால்,, நடக்கும்போது வலி உண்டாகி, நரம்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆறாத புண் உண்டாகி அப்பகுதி கருப்பு நிறமாகிவிடும் ( Diabetic Gangrene ).அதனால் கால்களையே இழக்க நேரிடலாம்.

* உயர் இரத்த அழுத்தம் – இரத்தக்கொதிப்பு எனும் உயர் இரத்த அழுத்தம் நமக்குத் தெரியாமலேயே எவ்வித அறிகுறியுமின்றி தோன்றலாம்.இது நீரிழிவு நோயுடன் சேர்ந்து வரும் தன்மை கொண்டது. ஆரோக்கியமானவர்களைவிட நீரிழிவு நோயாளிகள் இரண்டு மடங்கு அதிகமாக உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.நீரிழிவு நோயாளிகளில் 60 சதவிகிதத்தினருக்கு உயர் இரத்த அழுத்தமும் உண்டாகிறது.இதனால் உண்டாகும் கேடுகள் அதிகம் என்பதால் நீரிழிவு நோயாளிகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.இரத்த ஓட்டத்திற்கு ஓரளவு அழுத்தம் தேவையே. ஆனால் அந்த அழுத்தம் அதிகமானால் அதுவே இருதயத்தைப் பலவீனப்படுத்துவதோடு, தமனிகளின் சுவர்களையும் கெடுத்து தமனித் தடிப்பை உண்டுபண்ணிவிடும். இதுபோன்று மூளையில் உண்டானால் அங்கு தமனி தடிப்பால் பலூன் போன்று வீங்கி ( Aneurysm ) அது வெடித்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்கிவிடும்.

இருதயத்தையும் இரத்தக்குழாய்களையும் பாதுகாக்கும் வழிமுறைகள்

இனிப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நாம் எடுக்கும் முயற்சிகள் இருதயத்தையும் பாதுகாக்கும் தன்மை கொண்டவை. ஆகவே நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இருதயத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் இனிப்பின் அளவை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
இது தவிர கீழ்க்கண்டவற்றையும் மனதில் கொண்டு செயல்பட்டால் இருதயத்தையும் இரத்தக்குழாய்களையும் மேலும் பாதுகாத்துக்கொள்ளலாம். அவை வருமாறு :

* உணவும் உடற்பயிற்சியும்.- மாவுச் சத்தையும் நார்ச் சத்தையும் அளவோடு கூட்டிக்கொண்டு, கொழுப்புகளைக் குறைத்துக்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு, உடல் பருமனும் குறையும். உடற்பயிற்சி செய்வது இருதயத்திற்கு பலத்தையும், சீரான இரத்த ஓட்டத்தையும் தருவதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

* உணவில் உப்பின் அளவு – உப்பின் அளவுக்கும் உயர் இரத்த அளவுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. ஒரு சிறு கரண்டி அளவுக்கும் குறைவாக உப்பு உணவில் சேர்த்துக்கொண்டால், பக்கவாதம் உண்டாகும் அபாயம் 42 சதவிகிதமும், மாரடைப்பு உண்டாகும் அபாயம் 20 சதவிகிதமும் குறைகிறது.பதனிடப்பட்ட உணவுவகைகளைக் குறைத்துக்கொண்டு புதிய காய்கறிகள்,கீரைகள், பழங்கள் சாபிடுவது மிகவும் நல்லது.

* புகைப்பதை நிறுத்துவது – புகைப்பது மாரடைப்பை இரண்டு மடங்கு உயர்த்துகிறது. புகைத்தல் இரத்தக் குழைகளை தடிக்கச் செய்து,இரத்த ஓட்டத்தை தடை செய்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இருதயத்தையும் பாதிக்கிறது.

* ஆஸ்பிரின் மாத்திரை உட்கொள்ளுதல் – இது அழற்சிக்கு எதிரான வலி நிவாரணி என்றாலும், இதை தினமும் உட்கொண்டால் மாரடைப்பு உண்டாவதை 60 சதவிகிதம் குறைக்கிறது.இரத்த அழுத்தத்தையும் குறைக்கவல்லது. இது இரத்தம் உறைந்து கட்டிகள் உண்டாவதை தடை செய்கிறது. இதை எடுக்குமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது, காரணம் வயிற்றுப் புண் உள்ளவர்களும், கல்லீரல் நோய் உள்ளவர்களும் இதை உட்கொண்டால் இரத்தக் கசிவு உண்டாகும். இவை உள்ளவர்கள் மூடியுள்ள மாத்திரைகள் ( Coated Tablets ) உட்கொள்ளவேண்டும்.

* உயர் இரத்த அழுத்தத்திற்கு ACE தடுப்பு மருந்துகள் – இந்த மருந்துகள் இரத்தக் குழாய்கள் சுருக்கமுறுவதைத் தடுக்கும் தன்மையுடையன.இருதய பாதுகாப்புக்கு மிகவும் உகந்த மருந்துகள் இவை. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லாவிட்டாலும் இந்த மருந்து வகைகள் இருதய பாதிப்பு உண்டாவதைக் குறைக்கிறது.

* கொழுப்புக்கு ஸ்டாட்டின் மருந்துகள் – நீரிழிவு நோயாளிகளுக்கு பெருமளவில் அதிகமான கொலஸ்ட்ரால் கொழுப்பு இருப்பது இயல்பு. இதைக் குறைக்க ஸ்டாட்டின் மருந்துகள் ( Statins ) உட்கொள்ளவேண்டும். மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த மருந்தை உட்கொள்ளலாம்.

* தேநீர் பருகுதல் – தேநீர் பருகுவது இருதயத்துக்கு பாதுகாப்பு தருகிறது என்பது தெரிய வந்துள்ளது.கருப்பு அல்லது பச்சை தேநீரில் பிளவினாய்ட் ( Flavinoid ), எண்டிஆக் சிடன்ட்ஸ் என்பவை அதிகம் உள்ளதால் அவை தமனிகளில் கொலஸ்ட்ரால் அடைப்பை உண்டுபண்ணுவதைத் தடுக்கிறது.

* மீன்கள் உண்ணுதல் – மீன்கள் உண்பதும் இருதயத்துக்கு பாதுகாப்பு தருகின்றன.இவற்றில் ஒமேகா -3 கொழுப்பு எண்ணெய் உள்ளதால் அது இரத்தம் கட்டியாவதைத் தடுப்பதோடு, .ட்ரைகிளிசரைட் ( Triglyceride ) எனும் கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. அதோடு இரத்தம் உறைந்து கட்டிகள் ஆவதையும், தமனி அழற்சியையும் தடுக்கிறது. குளிர்ந்த நீரில் வாழும் மீன் வகைகளான சேல்மன் ( Salmon ), ட்ற்றவுட் ( Trout ), மேக்கரல் ( Mackerel ) ட்டுனா ( Tuna ) போன்ற மேல்நாட்டு மீன் வகைகளில் அதிகமான ஒமேகா- 3 கொழுப்பு உள்ளது.

* எண்டிஆக்சிடன்ட்ஸ் ( Antioxidants ) – இவை வைட்டமின் சி., ஈ .,நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் நிறைய உள்ளன. இவை கொலஸ்ட்ரால் கொழுப்பு இரத்தக்குழாய்களின் சுவர்களில் படிவத்தை தடுக்கின்றன.வைட்டமின் சி, ஆரஞ்சு,திராட்சை, ஆப்பிள், தக்காளி போன்ற பழவகைகளில் அதிகம் உள்ளது. வைட்டமின் ஈ, நிலக்கடலை, சூரியகாந்தி பூவின் விதை. தாவர எண்ணெய், கோதுமை முளை போன்றவற்றில் அதிகம் உள்ளது.

* போலிக் அமில வைட்டமின் ( Folic Acid ) – இது வைட்டமின் பி வகைகளில் ஒன்றாகும். இருதய வியாதியை உண்டுபண்ணக்கூடிய ஹீமோசிஸ்டீன் ( Homocysteine ) என்பதைக் குறைத்து இருதயத்திற்கு பாதுகாப்பைத் தரவல்லது

ஆதலால் நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இருதயத்தையும் இரத்தக்குழாய்களையும் இதுபோன்ற முன்னெச்சரிக்கையுடன் பாதுகாத்துக் கொண்டால் மாரடைப்பு வருவதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

( முடிந்தது )

Series Navigationபெஷாவர்வரிசை
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *