தொடுவானம் 48 . புதிய பயணம்

This entry is part 13 of 22 in the series 28 டிசம்பர் 2014
டாக்டர் ஜி. ஜான்சன்

மறுநாள் மாலையும் பிரான்சிஸ் என்னைத் தேடி வந்தார். நான் என்னுடைய திராவிடக் கொள்கைகள் பற்றி அவரிடம் விவரித்தேன். அதற்கு அவர் கூறிய பதில் எனக்குப் பிடித்திருந்தது.

மதங்கள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவற்றைப் பற்றி படித்து தெரிந்து வைத்திருப்பதில் தவறு இல்லை என்றார்.அதோடு அவ்வாறு தெரிந்து வைத்திருப்பது நம்முடைய அறிவு வளர்ச்சிக்கு நல்லது என்றார். ஒரு கிறிஸ்துவனாக இருந்துகொண்டு பரிசுத்த வேதாகமத்தை ( பைபிள் ) படித்துக்கூட பார்க்காமல் இருப்பது எப்படி என்று கேட்டார். ஒரு முறை அதைப் படித்துப் பார்க்கச் சொன்னார். என்னிடம் அது இல்லை என்றேன். அவருடையதைத் தருவதாகச் சொன்னார். இல்லையேல் சென்னையில் சி.எல்.எஸ். புத்தகக் கடையில் கிடைக்கும் என்றார். நான் சரி என்றேன்.

இன்று மனிதர்கள் அதிகமாகப் பிரிந்து வாழ்வது இந்த மதங்களால்தான் என்பதை நான் அறிந்தவன். எனக்கு கிறிஸ்துவ மதத்தைப் பற்றி எப்படி அதிகம் தெரியாதோ அதுபோன்றுதான் இந்து மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் பற்றி எதுவும் தெரியாது. அனால் தமிழர்களில் அநேகர் இதுபோன்று வெவ்வேறு மதங்களில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் நாம் ஒருவகையில் பிரிந்து வாழ நேரிடுகிறது.அது  போதாதென்று தமிழர்கள் வெவ்வேறு சாதிகளாகவும் பிரிந்து வாழ்கின்றனர். தந்தை பெரியார் கடவுள் இல்லை என்றும், சாதிகள் இல்லையென்றும் போதித்தாலும் மதங்களில் ஊறிப்போயுள்ள தமிழ் மக்களில் எத்தனைப் பேர்கள் அதிலிருந்து விடுபட்டு பெரியாரைப் பின்பற்றுவார்கள் என்பது கேள்விக்குறியே. ” சாதி இரண்டொழிய வேறில்லை ” என்று ஒளவையும். ” சாதிகள் இல்லையடி பாப்பா ” என்று பாடிய பாரதியும் பிறந்த தமிழகத்தில் இன்னும் சாதிகள் வளர்ந்து வருவது கேலிக்கூத்தே! இதனால் மதத்தாலும் சாதியாலும் தமிழ் மக்கள் பிரிந்து வாழ்வதை மாற்றியமைப்பது சிரமமான காரியம்தான். இதனால்தான் ” ஒன்றே குலம் ஒருவனே தேவன். ” என்ற மூதுரையை அண்ணா வலியுறுத்தினாரோ என்றும் எண்ணத்தோன்றியது.

நாத்திகக் கொள்கைகளில் தீவிரம் காட்டிய நான் அதிலிருந்து கொஞ்சம் விலகி மதங்கள் என்னதான் சொல்கின்றன என்பதையும் பார்ப்போமே என்று முடிவெடுத்தேன். கிறிஸ்துவ  மாணவர் இயக்கத்தில் சேருமாறு வேண்டுகோள் விடுக்கும் பிரான்சிஸ்சிடம் உடன் சம்மதம் தெரிவிக்கவில்லை. நான் பரிசுத்த வேதாகமத்தைப் படித்துதான் பார்ப்போமே என்று அன்று முடிவெடுத்தேன். அதன்பின்பு வேண்டுமானால் கம்பராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம், பகவத்கீதை,திருக்குர்ஆன் போன்ற மற்ற மதங்களின் புனித நூல்களையும் படித்துப் பார்க்கவேண்டும் என்று ஆவல் கொண்டேன்.

அந்த வாரத்தில் சனிக்கிழமை மாலையில் சென்னை சி.எல்.எஸ். புத்தகக் கடைக்குச் சென்று ஒரு தமிழ் வேதாகமத்தை வாங்கிக்கொண்டு மெரினா கடற்கரை சென்றேன். வழக்கம்போல் மணல் பரப்பில் உட்கார்ந்துகொண்டு கடல் அலைகளின் ஓசையையும், தூரத்தில் கடலும் வானும் தொடும் அழகையும் கண்டு இரசித்தேன். அந்த பரந்த வான்வெளியையும் நீல நிற சமுத்திரத்தையும் படைத்தது இயற்கையா அல்லது கடவுளா என்று தெரியாமல் தடுமாறினேன். அங்கு சில சிறுவர்கள் சுவையான சுண்டல் விற்றார்கள்.அதையும் வாங்கிக்கொண்டேன்.ஆகா! வாழ்க்கைதான் எத்தனை இனிமையானது! அதிலும் இந்த இளமைப் பருவம் இனிமையிலும் இனிமை! எனக்கு எல்லாம் இருந்தது. லதா மட்டும் அருகில் இல்லை என்ற குறைதான்! ஆனால் பரவாயில்லை. அவள் இந்த கடலுக்கு அப்பால்தானே உள்ளாள்? வேறு எங்கே போய்விடப் போகிறாள்? மனதில் தோன்றும் அந்த நினைவுக்கு அவ்வாறு சமாதானம் சொல்லிக்கொண்டு மெரினா புஹாரிக்கு சென்றேன். இப்போதெல்லாம் அங்கு பணிபுரியும் சிப்பந்திகளுக்கு என்னை நன்றாகவே தெரிந்துவிட்டது. சூடாகவும் சுவையாகவும் கோழி பிரியாணி கொண்டு வருவார்கள்.

அன்று இரவே புனித வேதாகமத்தைத் திறந்து முதல் அதிகாரத்தைப் படித்தேன்:

1.  ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய்  இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவா டிக்கொண்டிருந்தார்.

3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது ,என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

4. வெளிச்சம் நல்லது  என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வேறுவேறாகப் பிரித்தார்.

5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார் , இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.

7. தேவன் அகாயவிரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

9. பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும்,வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

மிகவும்  எளிமையான நடையில் எண்களிடப்பட்ட வசனங்களாக எழுதப்பட்டிருந்தது.துவக்க காலங்களில் மேல்நாட்டு மிஷனரிகளால் மொழிபெயர்க்கப் பட்டிருந்ததால் பல வடமொழி சொற்கள் அதிகம் இருந்தன. முதல் அதிகாரத்தில் உலகம் உருவான விதம் கூறப்பட்டிருந்ததால் அதை ஆர்வத்துடன் படித்து முடித்தேன். இனிமேல் இரவில் தினந்தோறும் ஒரு அதிகாரம் படித்துவிட முடிவு செய்தேன். காலையில் நான் ஒரு குறள் மனப்பாடம் செய்யும் வழக்கத்தில்  இருந்தேன்.

ஒரு வாரமும் கழிந்தது.பிரான்சிஸ் மீண்டும் என் அறைக்கு வந்தார். நான் சரி என்று சொன்னதும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கிறிஸ்துவ மாணவர் இயக்கத்தின் முதல் கூட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். சுமார் இருபது பேர்கள் வந்திருந்தனர். அவர்களில்  பட்டம் பயிலும் மாணவிகளும் இருந்தனர். ஒரு விரிவுரையாளர்தான் அதன் அமைப்பாளர். நாங்கள் அறிமுகம் செய்துகொண்டோம்.

அதன்பின்பு நான்கு நான்கு பேர்களாக மொத்தம் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். என்னுடைய குழுவின் தலைவர் பிரான்சிஸ். விக்டோரியா, வெரோனிக்கா  எனும் இரண்டு மாணவிகள் இருந்தனர். இவர்களில் விக்டோரியா பி.ஏ.பயிலும் மாணவி. வெரோனிக்கா பி.எஸ்.சி.தாவரவியல் பயிலும் மாணவி.இவர்களில் விக்டோரியா சாதாரண சராசரிப் பெண்தான். குறைவான நிறமுடையவள். ஆனால் வெரோனிக்கா  நல்ல மாநிறம். சேலையும் கூந்தல் நிறைய மல்லிகைச் சரமும்  அணிந்திருந்த அவளின் சாயல் எனக்கு மயிலை நினைவூட்டியது. குனிந்த தலை நிமிராமல் அவள் நடந்து செல்லும் அழகு அன்னத்தையே ஒத்திருந்தது.குரலில்கூட தனி இனிமைதான்!

வெரோனிக்கா  எனக்கு ஒரு வருடம் சீனியர்! இருந்தால் என்ன? அவளை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது!

          அவள் மீது இப்படி ஒரு ஈர்ப்பு உண்டானபோது லதாவின் நினைவு வராமல் இல்லை. வந்தது. ஆனால் வந்து என்ன பயன்?
           அவளைப் பிரிந்து வந்து அநேகமாக மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.அவளிடமிருந்து மூன்று கடிதங்கள்தான் வந்தன.நானும் அவளுக்கு நேரடியாக எப்படி எழுதுவது என்று தெரியாமல் அவளுடைய அக்காளுக்க்தான் எழுதினேன். அதை லதாவிடம் காட்டுமாறு கேட்டுக்கொண்டேன். இதைத் தவறாக புரிந்துகொண்ட லதா கடிதம் எழுதுவதைக் குறைத்துக்கொண்டாள். ஆனால் அவளுடைய அக்காளோ தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தாள்.லதா என்னுடைய கடிதங்களைப் படித்துத் தெரிந்துகொள்வாள் என்றுதான் நானும் பதில் எழுதிக்கொண்டிருந்தேன்!
          ( அப்போதெல்லாம் இன்றுபோல் கை தொலைபேசியோ, மின்னஞ்சல் அனுப்பும் வசதியோ கிடையாது.காதலர்கள் கடிதத்தைத்தான் நம்பினர். அதிலும் சிங்கப்பூரிலிருந்து கடிதம் வந்து சேர ஒரு வாரத்துக்கு மேலாகும்.)
          அப்போது கல்லூரியில் சிங்கப்பூர், மலாயா மாணவர்களை உள்ளூர் மாணவர்கள் வேறு விதமாகப் பார்த்தனர். எங்களுடைய நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மாறுபட்டிருந்தன.வெளிநாட்டுப் பொருள்களை நாங்கள் பயன்படுத்தியதோடு, கைநிறைய பணம் வைத்திருப்போம்.
          தமிழ் நாட்டுப் பெண்களுக்கும் எங்களை மிகவும் பிடிக்கும். வெரோனிக்கா எனக்கு சீனியர் என்ற போதிலும் என்னிடம் தனிப்பட்ட அன்பு காட்டுவது தெரிந்தது. நாங்கள் முதல் நாள் ஓய்வு நாள் பள்ளிக்கு சென்றபோதே அதை உணர்ந்துகொண்டேன்.
          அன்று ஞாயிறு காலை. கல்லூரியின் வெளியே தேநீர்க் கடையின் அருகில் வாடகை சைக்கிள் கடை உள்ளது.அங்குதான் நாங்கள் நால்வரும் சந்தித்தோம்.
          இரண்டு சைக்கிள்களை வடைகைக்கு எடுத்தோம்.பிரான்சிஸ் விக்டோரியாவை ஏற்றிக்கொண்டார்.
          வெரோனிக்காவை நான் ஏற்றிக்கொண்டேன். அந்த அழகு தேவதையை அவ்வாறு ஏற்றிச் சென்றது புதிய உற்சாகத்தை உண்டுபண்ணியது.சூடேறிய இள இரத்தத்துடன் வேகமாக கிராமம் நோக்கி மிதித்துச் சென்றேன்!
          சைக்கிளின் பின் பக்கத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த வெரோனிக்கா கொஞ்ச நேரத்தில் என் தோள்கள் மீது கை வைத்து இறுக பற்றிக்கொண்டு உரிமையோடு பயணம் செய்தாள்!
          இந்த இனிமையான புதுப் பயணம் கிராமத்தோடு செல்லுமா அல்லது வேறு எங்காவது கொண்டு போகுமா!

          ( தொடுவானம தொடரும் )
Series Navigationபாலச்சந்தர் ஒரு சகாப்தம் – Adayar Kalai Ilakkiya Sangamஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    ஷாலி says:

    // வெரோனிக்கா நல்ல மாநிறம். சேலையும் கூந்தல் நிறைய மல்லிகைச் சரமும் அணிந்திருந்த அவளின் சாயல் எனக்கு மயிலை நினைவூட்டியது. குனிந்த தலை நிமிராமல் அவள் நடந்து செல்லும் அழகு அன்னத்தையே ஒத்திருந்தது.குரலில்கூட தனி இனிமைதான்!

    // இந்த இனிமையான புதுப் பயணம் கிராமத்தோடு செல்லுமா அல்லது வேறு எங்காவது கொண்டு போகுமா!//

    டாக்டர் ஸார்! கொக்கியை போட்டுவிட்டீர்களே! கல்லூரி முதல் வருடத்திலேயே புள்ளினங்கள் புகழ் பாட ஆரம்பித்து விட்டீர்கள். இன்னும் ஐந்து வருடம் இருக்கு.ம்..ம்..லதா,வெரோனிகா- அன்னம், மயிலோட ஆட்டம் நிக்குமா? இன்னும் புதுப் புதுப்புது பறவைகள் வந்து கூடு கட்டுமா? மலரும் நினைவுகள் அட்டகாசமாக போகிறது..வாழ்த்துக்கள்!

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ///அவள் மீது இப்படி ஒரு ஈர்ப்பு உண்டான போது லதாவின் நினைவு வராமல் இல்லை. வந்தது. ஆனால் வந்து என்ன பயன்?
    அவளைப் பிரிந்து வந்து அநேகமாக மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ///

    துஷ்யந்தன் – சகுந்தலா காதல் கதைதான் ! சரித்திரம் மீள்கிறது !!!

    சி. ஜெயபாரதன்

  3. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஷாலி அவர்களே, புத்தாண்டு வணக்கங்கள். தொடுவானம் புதிய பயணம் போகிறது. வெரோனிக்கா உண்மையில் மயிலையும் குயிலையும் அன்னத்தையும் நினைவூட்டியவள்தான். எனக்கும் அப்போது அவற்றையெல்லாம் இரசிக்கும் வயதுதான்.இப்போது நினைத்தாலும் அந்த நினைவு இனிக்கிறது.ஆனால் இருந்தும் என்ன பயன்? அந்த மயிலும் குயிலும் அன்னமும் பறந்து போய்விட்டதே! அதன்பிறகு பறவைகள் கூடு கட்டதான் செய்தன. ஆனால் பறவைகள அனைத்தும் சுதந்திரமாகப் பறக்கும் இயல்புடையதால் …..? கடைசியில் கூண்டுப் பறவைதான் உடன் வாழ்கிறது. இது போன்ற கலகலப்பான பறவைகளின் கதைகள் நிறைய இருந்தாலும், அவற்றையெல்லாம் பட்டும் படாமலும்தான் எழுதவேண்டியுள்ளது. சகலகலாவல்லவரான தாங்கள் அவற்றில் மறைந்துள்ள உண்மைகளை புரிந்துகொள்வீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன? பாராட்டுக்கு நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *