டாக்டர் ஜி. ஜான்சன்
அது ஒரு சிற்றாலயம். காலையிலேயே ஆராதனை முடிந்து விட்டது. அதன்பின் சபையைச் சேர்ந்த சுமார் முப்பது பிள்ளைகள் எங்களுக்காக காத்திருந்தனர். அவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தோம். பிரான்சிஸ் விக்டோரியா ஜோடி பெரிய பிள்ளைகளுக்கு பொறுப்பு வகித்தனர். வெரோனிக்காவும் நானும் சிறு பிள்ளைகளைக் கவனித்துக்கொண்டோம். அவளுக்கு முன்பே அனுபவம் உள்ளதால் அன்று அவள்தான் அனைத்தையும் சொல்லி தந்தாள்.
கர்த்தரின் ஜெபத்துடன் ஓய்வுநாள் வகுப்பைத் தொடங்கினாள் . முதலில் ஒரு பாடல் சொல்லித் தந்தாள்.அவள் பாடுவது கேட்க இனிமையாக இருந்தது. அவள் ஒவ்வொரு வரியாகப் பாடியதும், பிள்ளைகளும் அவ்வாறே பாடினர். அவளைப்போல் என்னால் நிச்சயம் பாட முடியாது. இனி பாடல்களை அவளிடமே விட்டுவிட முடிவு செய்தேன்.
அதன் பின்பு என்னை கதை சொல்லச் சொன்னாள் . நான் வேதாகமத்தில் படித்த உலகின் படைப்பு பற்றியும், முதல் மனிதர்களான ஆதாம், ஏவாள் ஆகிய இருவரும் எவ்வாறு சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்டு, கீழ்ப்படியாமைக்காக கடவுளால் தண்டிக்கப்பட்டனர் என்ற கதையை எளிமைப் படுத்திச் சொன்னேன். அடுத்த வாரம் உலகின் முதல் சகோதர்களான காயீன் ஆபேல் கதையைச் சொல்ல எண்ணியிருந்தேன். அதில் பொறாமை காரணாமாக தம்பியை ( ஆபேல் ) காயீன் கொலை செய்துவிடுவான். கடவுள் அவனிடம் அது பற்றி கேட்டபோது ,” என் தம்பிக்கு நான் காவலாளியோ? ” என்று திருப்பிக் கேட்பான். இது போன்று நான் அன்றாடம் வேதாகமம் வாசிக்கும்போது அதிலுள்ள கதைகளை எளிமைப்படுத்தி சிறு பிள்ளைகள் புரிந்துகொள்ளும் வகையில் கூறலாம் என்றும் முடிவு செய்திருந்தேன்.இவ்வாறு பகுத்தறிவாளனான நான் ஆன்மீகப் பாதையில் கொஞ்சங்கொஞ்சமாக அடியெடுத்து வைத்தேன்.
சுமார் பனிரெண்டு மணிபோல் வகுப்புகளை முடித்துக்கொண்டு விடைபெற்றோம்.மீண்டும் உல்லாசமான சைக்கிள் பயணம்! தாம்பரத்தில் ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டபின் வெரோனிக்காவை அவளுடைய வீட்டு வாசலில் இறக்கி விட்டேன்.அவளுடைய வீடு தாம்பரம் இரயில்வே காலனியில் இருந்தது. என்னை வீட்டுக்குள் வரச் சொன்னாள். நான் அடுத்த முறை வருவதாகக் கூறினேன். ஏனோ தெரியவில்லை அப்போது அவளுடைய பெற்றோரைக் காண பயம் உண்டானது!
தமிழ் வகுப்பில் இன்னொரு விரிவுரையாளர் சிலப்பதிகாரம் பாடம் எடுத்தார். அவருடைய பெயர் புருஷோத்தமன். சிலப்பதிகாரம் இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது என்பதும் அதில் கோவலன், கண்ணகி, மாதவி, பாண்டியன் நெடுஞ்செழியன், கோப்பெருந்தேவி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்கள் என்பதை நாமறிவோம்.
தமிழின் முதற்காப்பியம் சிலப்பதிகாரம். உலகின் வேறெந்த மொழியிலும் காண முடியாத முன்மாதிரிக் காப்பியம் என்று சிலப்பதிகாரத்தின் சிறப்பு கூறுவர். இயல், இசை, நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்றும், முத்தமிழ்க் காப்பியம் என்றும் சிலப்பதிகாரம் போற்றப்படுகிறது.
அதில் சோழர்களின் தலைநகரமான பூம்புகாரும், பாண்டியர்களின் தலைநகரான மதுரையும் அழகுபட வர்ணிக்கப்பட்டிருக்கும். மதுரையின் அழகை அங்கு தவழ்ந்துவரும் தென்றல் மூலம் சுவைபட கூறியுள்ளார் இளங்கோ. ” மதுரைத் தென்றல் ” எனும் அப் பாடல் வரிகளை புருஷோத்தமன் கூறி விளக்கிய விதம் பல வருடங்கள் கழித்தும் மனதில் பதிந்துள்ளது.
” கூடல் காவதம் கூறுமின் நீர்ஒ என-
காழ் அகில் சாந்தம், கமழ் பூங் குங்குமம்,
நாவிக் குழம்பு, நலம் கொள் தேய்வை,
மான்மதச் சாந்தம், மணம் கமழ் தெய்வத்
தே மென் கொழுஞ் சேறு ஆடி; ஆங்கு,
தாது சேர் கழுநீர், சண்பகக் கோதையொடு,
மாதவி, மல்லிகை, மனை வளர் முல்லைப்
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி;
அட்டில் புகையும், அகல் அங்காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்,
மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த
அம் தீம் புகையும், ஆகுதிப் புகையும்,
பல் வேறு பூம் புகை அளைஇ; வெல் போர்
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின்
அளந்து உணர்வு-அறியா ஆர் உயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றி;
புலவர் செந் நாப் பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலாது, ஈங்கு,
மதுரைத் தென்றல் வந்தது; காணீர்!
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர்;
தனி, நீர் கழியினும் தகைக்குநர் இல்ஒ என- ”
கோவலனும் கண்ணகியும் மதுரையை நெருங்கிவந்த சமயத்தில் மீதமுள்ள வழி பற்றி கோவலன், வழிகாட்டிய பாணரிடம் கேட்டபோது அவர் மதுரையின் சிறப்பு பற்றி இவ்வாறு விவரிப்பதாக இவ்வரிகள் அமைந்துள்ளன. இது சங்க காலத்து தமிழ் என்பதால் இதில் வரும் சில சொற்களுக்கு விரிவுரையாளர் விளக்கம் தருவார். அவை வருமாறு.
கூடல் – மதுரை. காழ் – வயிரம். நாவி – புழுகு. தேய்வை – சந்தனம். மான்மதம் – கத்தூரி. தேம் – இனிமை. தொடையல்- மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை. அட்டில் – மடைப்பள்ளி ( சமையலறை ). முட்டா – முட்டுப்பாடு இல்லாத. மோதகம் – அப்பம். கூவியர் – அப்பவாணிகர் . ஆகுதி – வேள்வி. ஆர் உயிர் பிணிக்கும் கலவை – நுகர்ந்தவரின் பிணித்தற்கு அரிய உயிரையும் பிணிக்கும் கலவை மனம். நிவப்பு – உச்சி. தனிநீர் – தனித்த நீர்மை. சங்கப் பாடல்களை இவ்வாறுதான் பொருள் புரிந்து பயிலவேண்டும். இதற்கு உதவ உரை நூல்கள் உள்ளன.அவற்றையும் வாங்கி படித்தால்தான் பாடலின் பொருள் புலப்படும். இனி இந்த பாடலின் பொருள் என்னவென்பதைப் பாப்போம். அதற்கு நான் படித்த டாக்டர் ப. சரவணனின் உரையைத் தந்துள்ளேன்.
” வயிரம் பாய்ந்த அகிலின் சாந்தும், மணம் கமழும் குங்குமப்பூ மற்றும் புழுகுக் குழம்பும்,மணமிக்க சந்தனச் சாந்தும், கத்தூரிச் சாந்தும் ஆகிய இவை கலந்து தெய்வ மணம் கமழும் மெல்லிய கொழுஞ்சேற்றை அளைந்து;
தாது நிறைந்த கழுநீர் மலரையும், சண்பக மலரையும் சேர்த்துத் தொடுத்த மாலையோடு குருக்கத்தி, மல்லிகை, வீட்டிலே வளர்க்கப் பெற்ற முல்லை, ஆகிய இவற்றால் தொடுத்த மாலைகளையுடைய மலர் மஞ்சங்களில் தவழ்ந்து;
அடுக்களையில் தோன்றும் தாளிப்பு மணம் கமழுகின்ற புகை,அகன்ற அங்காடி வீதியில் தடையின்றி ஓயாது வாணிகம் புரியும் அப்பவாணிகர் சுடுகின்ற அப்பங்களின் நறுமணப் புகை, மேல்நிலை மாடத்தில் ஆடவரும் மகளிரும் புகைக்கும் இனிய அகிற்புகை, வேள்விச் சாலையில் ஓமப்புகை ஆகிய பல்வகைப் புகைகளையும் அளாவி;
தான் செல்லும் அனைத்துப் போர்களிலும் வெற்றியைக் காண்பவனும், இந்திரனால் அணிவிக்கப்பட்ட ஆரத்தோடு விளங்கும் மார்பினை உடையவனுமாகிய பாண்டியன் அரண்மனையில் பல்வேறு மணப் பொருட்களைக் கூட்டி அரைக்கும் போது தோன்றும் அளவிடற்கரிய, உள்ளத்தைப் பிணிக்கும் இயல்புடைய ஒப்பற்ற கலவையின் மணத்தை நுகர்ந்து;
சங்கப் புலவர்களுடைய செம்மையான நாவால் புகழப்படும் சிறப்புடைய பொதிகைத் தென்றல் போலன்றி, அதனினும் சிறந்த மதுரைத் தென்றல் இங்கே வந்து தவழ்வதைக் காண்கிறீர்கள் அல்லவா? ( ஆதலால் ) பாண்டியனின் செல்வச் செழிப்புமிக்க மதுரை மாநகர் மிகவும் தொலைவில் உள்ளது அன்று; வெகு அருகிலேயே உள்ளது. நீங்கள் தனியே சென்றாலும் தடுப்பவர் எவரும் வழியில் இல்லை. ” எனக்கூறி அவ்விடத்தை விட்டு அகன்றனர் . ”
மதுரை தொலைவில் இல்லை, அருகில்தான் உள்ளது என்று கூறுவதற்குப் பதிலாக இளங்கோவடிகள் அதை அழகுபடுத்தி அங்கிருந்து வரும் தென்றலின் குளும, யையும், இனிமையையும், அது ஏந்திவரும் பல்வேறு மணங்களையும் கூறியுள்ள விதம் அருமையிலும் அருமை.
இவ்வாறு தமிழ் இலக்கியம் படிப்பது சிரமம் என்றாலும் அதில் புதைந்துள்ள இனிமை என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதை விரும்பிப் படித்தேன். நம்முடைய சங்கப் புலவர்கள் பல்கலைக்கழகம் சென்று படித்து இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் அல்ல. இருப்பினும் அவர்களுடைய கற்பனை வளமும், எடுத்தியம்பிய சொற்களின் அழகும் ஓசைநயமும், ஒப்புயர்வற்ற உவமைகளும் என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தின!
சிலப்பதிகாரத்தை தமிழ்க் காப்பியங்கங்களில் மிகவும் சிறந்தது என்று நான் கூறுவேன் இதை எழுதியவர் ஒரு தமிழ் இளவரசர்.அவர் ஒரு பகுத்தறிவாளர்.அதனால்தான் குறிசொன்ன ஒருவனின் கூற்றை பொய்ப்பிக்கும் வண்ணம் அரச வாழ்வைத் துறந்து துறவியானார்! அவர் பகுத்தறிவாளர் என்பதால்தான் அவர் எழுதியுள்ள காப்பியத்தில் மாயா ஜால வித்தைகளோ, நம்ப முடியாத சம்பவங்களோ, வினோதமான கதாபாத்திரங்களோ, பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளோ இல்லாமல் சிலப்பதிகாரத்தை படைத்துள்ளார். அவருடைய பாத்திரப் படைப்புகள் அனைத்துமே சராசரி மனிதர்களே. குரங்குகளையும், பறவைகளையும், மீன் வகைகளையும் அவர் கதாபாத்திரங்களாகப் படைத்தது அவற்றை பேசவைக்கவில்லை. அதுபோன்றே கதையின் கதாநாயகன் கோவலனையும் வீராதி வீரனாகவோ, சூராதி சூரனாகவோ படைக்கவில்லை. அவனை கலைகள் மீது ஆர்வமிக்க செல்வம் நிறைந்த பூம்புகார் வணிகனாகவே படைத்துள்ளார். அதுபோன்றுதான் கண்ணகியும் மாதவியும்.இருவருமே சராசரி பெண்கள். கண்ணகி தன்னுடைய முலையைத் திருகி வீசியதால் மதுரை எரிந்தது என்பது வேண்டுமானால் இடைச் செருகலாக இருக்கலாம் என்பது என் நம்பிக்கை. மிகவும் எதார்த்தமான வகையில், இத்தகைய சிறப்புகள் நிறைந்துள்ள சிலப்பதிகாரம் தமிழ் மக்களிடையே இன்னும் பிரபலமாகாததற்கு அதை சமண மதத்துடன் தொடர்பு படுத்த முயல்வது ஒரு காரணாமாகவும் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குண்டு.
நிச்சயமாக, எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காவிடில் இங்கேயே தமிழ் இலக்கியம் பயில்வேன்!
கல்லூரி வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழ் இலக்கியம் பிடித்திருந்தது. அதோடு வெரோனிக்காவின் நட்பும் அதிகம் பிடித்திருந்தது!
( தொடுவானம் தொடரும் )
- கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.
- தொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.
- அம்பு பட்ட மான்
- கலவரக் கறைகள்
- பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
- வேழம்
- நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்
- சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்
- துணிந்து தோற்கலாம் வா
- எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா
- ‘அந்த இரு கண்கள்’
- ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20
- சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு
- கண்ணாடியில் தெரிவது யார் முகம்?
- ஜல்லிக்கட்டின் சோக வரலாறு
- பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று
- ஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- காலச்சுவடு வெளியீடுகள்
- இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி
- நூலறுந்த சுதந்திரம்
- சைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது
- பீகே – திரைப்பட விமர்சனம்
- Muylla Nasrudin Episodes by jothirlatha Girija
- மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு
- பாண்டித்துரை கவிதைகள்
- தொடு நல் வாடை
- “2015” வெறும் நம்பர் அல்ல.
- ரவா தோசா கதா
- தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !
- இளஞ்சிவப்பின் விளைவுகள்
- கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.
- மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_
- சாவடி காட்சி 22 -23-24-25