ரவா தோசா கதா

This entry is part 28 of 33 in the series 4 ஜனவரி 2015

– சிறகு இரவிச்சந்திரன்
0
ஒரு பக்கம் சட்னி! இன்னொரு பக்கம் சாம்பார்! நடுவுல ஏழெட்டு தோசை! ஆசாமி தொப்பை தள்ளுது!
தோசைப்பிரியர்கள் எத்தனை வகை?
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில், கல்யாணத்துக்கு நிற்கும் ஒரு பெண் அருமையாக ரவா தோசை வார்ப்பாள். ஒரு பர்னரில் சின்ன தவ்வாவில் போட்டு எடுக்கப்பட்ட தோசையில் வெறுத்துப் போன தகப்பனார், தேடி கந்தசாமி கோயில் கடையில் செவ்வக தகட்டை வாங்கி வந்தார். பரிட்சார்த்தமான தேதியில் நான் போய் மாட்டிக் கொண்டேன். சோதனை எலி!
‘ சூப்பரா ஓட்டல் ரவா மாதிரியே இருக்கும்’ என்கிற சிபாரிசு வேறு!
பெரிய பர்னரும் சின்ன பர்னரும் சூடேற்ற ஒரு பக்கம் முருகலாகவும் இன்னொரு பக்கம் தீசலாகவும் வந்த தோசைக்கு ஆப்பிரிக்க கறுப்பில் ஒரு சைட் டிஷ் சாம்பார். பனை ஓலையில் கட்டி சைக்கிளில் ‘ புளேய்’ என்று கூவி விற்கப்படும் சமாச்சாரம் சாம்பாரில் திப்பலாக..
அன்றிலிருந்து ரவா தோசையை காசி ரேஞ்சுக்கு விட்டு விட்டேன்! பூனைக்கு பால் வச்ச கதையா எனக்கு ‘தகடு தகடு’ ரவா தோசை!
பாண்டி பஜாரின் சாந்தா பவன் ரவா தோசைக்கு ஈடு இணை உண்டோ! முறு முறுவென்று வாழை இலை ஏடுகளில் பரிமாறப்படும். அதற்கு சின்ன வெங்காய சாம்பார் பக்கெட்டில்! ஊறியும் ஊறாமலும் அசோக வனத்து சீதையைப் போல ( நனைதலும் காய்தலுமாய் – கம்பன் ) அந்த ரவா தோசை விள்ளலை உள்ளே தள்ளும் சுகம் விவரிக்க முடியாதது.
மாம்பலம் இந்தியன் காஃபி ஹவுஸ் ரவா தோசை கொஞ்சம் சீதாப்பழம். மடித்த மேல் புறம் முறுகலாகவும், உள்ளே கொள கொள வென்றும்.. பரட்டைக்கு சடை பின்னியது போல், மசாலா ரவா என்று ஒரு நாள் நான் கேட்டு, சேட்டன் மாஸ்டர் ரவாவின் ஷோரூமையும் நாசம் பண்ணியது தனிக் கதை.
வடக்கு உஸ்மான் ரோடு, ஓட்டல் கங்காவில் தரப்படும் ர.தோ. ஜஸ்ட் பாஸ்.. அதுவும் அந்த தக்காளி சட்னி உபயத்தில். இப்பவும் இருக்கிறது கங்கா காலமாற்றத்தால் அழுக்காகி, உமா பாரதியின் வரவை எதிர்பார்த்து!
0

Series Navigation“2015” வெறும் நம்பர் அல்ல.தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *