வலி மிகுந்த ஓர் இரவு

This entry is part 17 of 23 in the series 15 பெப்ருவரி 2015

******************************************************

எழுபதுகளின் மத்தியில் நடந்த கதை இது. அப்போது பால்பாண்டிக்கு பனிரெண்டு அல்லது பதிமூன்று வயதிருக்கும். அன்றைக்கு அவனைப் பயமெனும் பேய் பிடித்து ஆட்டத் தொடங்கியது. காரணம் குருவு அவனைத் தொட்டு விட்டான்; தொடுதல் என்றால் இலேசுபாசான தொடுதல் இல்லை. அப்படியே தோளோடு தோள் சேர்த்துத் தூக்கித் தழுவி அவனைக் கீழே இறக்கி விட்டான்.

குருவு, பால்பாண்டி மாதிரியான குடியானவர்களைத் தொடக் கூடாத தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன். அந்த சாதியைச் சேர்ந்தவன் வம்புக்காகவோ அல்லது தன்னையும் அறியாமலோ குடியானவனைத் தொட்டு விட்டால், குடியானவனைத் தேடிவந்து தேள் கடித்து விடும் என்பது ஐதீகம் என்று பெரியவர்கள் அவனுக்குச் சொல்லி இருக்கிறார்கள். அதனால் கண்டிப்பாக அன்றைக்கு இரவு தன்னைத் தேள் கடித்து விடும் என்ற நம்பிக்கையில் பால்பாண்டி பயந்து நடுங்கினான்.

குருவு பலமுறை பால்பாண்டியைத் தொட்டு விடுவதாய் மிரட்டி, விரட்டி யிருக்கிறான். ஆனால் ஒருமுறை கூட அவன் பால்பாண்டியைத் தொட்டதில்லை. சும்மா விரட்டி ஓடிவந்து பால்பாண்டிக்குப் பக்கத்தில் போனதும் ”நல்லா ஏமாந்தியாய்யா வவ்…வவ்…?” என்று பழிப்புக் காட்டி விட்டுத் தொடாமலே விலகிப் போய்விடுவான். அது இருவருக்குமான ஒரு விளையாட்டு; அவ்வளவுதான். ஆனால் அன்றைக்கு அந்த விளையாட்டே வினையாகிப் போனது.

குருவு சக்கிலியக் குடியிலிருந்து, குடியானவர்களின் மாடுகளையும் அதன் கன்றுகளையும் மேய்ப்பவன். பால்பாண்டி சாணி பொறுக்கப் போகிற போது சமயங்களில் குருவுவின் மாடுகளுக்குப் பின்னாலும் போவதுண்டு. அன்றைக்கும் அப்படித்தான்; குருவு மாடுகளை மேய்த்து, அவை வயிறு புடைக்க இரை எடுத்ததும், மத்தியான வெயிலுக்கு இதமாகக் கண்மாய்க் கரையில் தண்ணி காட்டி விட்டு, மாடுகளுடன் அவனும் மரத்தடி நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.

பால்பாண்டி ஓடி ஓடி மாடுகள் போடுகிற சாணிகளை அள்ளிப் போட்டு கூடையை நிறைத்துக் கொண்டிருந்தான்.   திடீரென்று அவனுடன் விளையாடிப் பார்க்க ஆசை கொண்ட குருவு “சாமி, நான் உங்களத் தொடப் போறேன்…” என்று பால்பாண்டியை விரட்டத் தொடங்கவும், அவனிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடியவன், கவனமில்லாமல் அப்போதுதான் எதற்கோ யாரோ தோண்டி வைத்திருந்த ஆழமான குழிக்குள் டொபுக் கென்று விழுந்து விட்டான்.

”அய்யய்யோ….! என்னைய்யா இப்படி விழுந்துட்டீங்க…” என்று சிரித்த குருவு, “ஏறி வாங்கய்யா…” என்று தன் கையை நீட்டினான். ஆனால் அவனைத் தொட விரும்பாத பால்பாண்டி, ”போடா மயிரு, எல்லாம் உன்னால தாண்டா…” என்று மறுத்துவிட்டு, அழுதபடி அவனாகவே குழிக்குள்ளிருந்து ஏறிவர முயன்றான். அவன் ரொம்பவும் குள்ளமானவன்; கொஞ்சம் நோஞ்சானும் கூட. குழிக்குள்ளிருந்து தம் கட்டி அவனால் ஏறி வர முடியவில்லை.

குருவு பால்பாண்டியை விட ஐந்தாறு வயது மூத்தவன். மேலும் நல்ல வலுவான உடல்வாகும் உள்ளவன். முதலில் சிரித்தாலும் அப்புறம் அவனும் உடனே குழிக்குள் குதித்து பால்பாண்டி மறுத்து முரண்டு பிடித்தாலும், அவனை அப்படியே அலக்காகத் தூக்கி குழிக்கு மேல் இறக்கி விட்டான். குழிக்கு மேலேறி போனதும் பால்பாண்டி “ஏண்டா மடையா, என்னைத் தொட்டுத் தூக்கி விட்ட…! நீ தொட்டதால என்னைத் தேள் கடிக்குமே…!” என்று பெரிதாய் அழத் தொடங்கி விட்டான்.

“அய்யய்யோ….. அழாதய்யா; அதெல்லாம் சும்மாய்யா… தேளெல்லாம் கடிக்காதுய்யா….தொடாம எப்படிய்யா குழிக்குள்ளருந்து உங்கள மேல கொண்டுட்டு வர்றது…” என்று குருவும் அவனைச் சமாதானப் படுத்த முயன்றான். ஆனால் குருவு சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே அழுது கொண்டே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான் பால்பாண்டி. விஷயம் விபரீதமாகி விடுமோ என்று குருவுக்கும் பயமாக இருந்தது.

                     போகிற வழியிலேயே பால்பாண்டிக்கு அழுகை நின்று விட்டது. குருவு மேல் புகார் சொல்ல அவனுக்கு விருப்பவில்லை. அவனுடைய சித்தப்பாவுக்கு விஷயம் தெரிந்தால் சாட்டைக் கம்பை எடுத்துக் கொண்டு போய் குருவுவை இரத்தம் வர விளாசி விட்டு வந்து விடுவார். குருவுவும் ரொம்ப நல்லவன் தான்; அவன் ஒன்றும் வேணுமென்றெ தன்னைத் தொடவில்லை. எப்படித் தொடாமல் அவனைக் குழிக்குள்ளிருந்து தூக்கி மேலே விட்டிருக்க முடியும்? அவனுடைய நியாயமும் பால்பாண்டிக்குப் புரிந்தது.

பால்பாண்டிக்கு கிராமத்திலிருந்த சாதியக் கட்டுமானங்களும் அதன் செயல்களும் முழுசாய்ப் புரியாத சிறு வயதில் நடந்த சம்பவம் ஒன்று இன்னும் அவன் நினைவில் இருக்கிறது. மரணம் நேர்ந்தால், பிணத்தை சுடுகாட்டில் கொண்டு போய் அடக்கம் செய்து திரும்புவது வரை எல்லா சடங்குகளையும் எடுபிடி வேலைகளையும் வண்ணார், நாவிதர், சக்கிலியர் போன்ற தொள்ளாலிகள் தான் செய்வார்கள். அடக்கம் செய்துவிட்டு திரும்பியதும் கண்மாய்க் கரையில் உட்கார்ந்து தான் மேளம் அடித்தவர்கள், பாடைகட்டியவர்கள், குழி தோண்டியவர்கள், மேலும் எடுபிடி வேலை செய்த தொள்ளாலிகள் என்று எல்லோருக்கும் பெரிய பேரங்களுக்கும் வாக்குவாதங்களுக்கும் கூச்சல்களுக்கும் அப்புறம் பணப்பட்டுவாடா செய்வார்கள்.

பணப்பட்டுவாடா முடிந்ததும், மிச்சமிருக்கும் சில்லறைக் காசுகளை அங்கு இதை வேடிக்கை பார்க்கக் கூடியிருந்து, கைநீட்டும் ‘தொள்ளாலி’களின் பிள்ளைகளுக்குத் தருவது வழக்கம். அப்படி ஒருசமயம் தொள்ளாலிகளின் பிள்ளைகளோடு இந்த சம்பிரதாயம் தெரியாத பால்பாண்டியும் கை நீட்டி விட்டான். பணப்பட்டுவாடா செய்தவரும் முகம் பார்க்காமல் இவனுடைய கையிலும் கொஞ்சம் சில்லறைக் காசுகளை வைத்து விட்டார்.

ஆனால் இதைக் கவனித்து விட்ட வேறொரு குடியானவப் பெரியவர் பால்பாண்டியிடம், அவனுடைய அய்யாவின் பெயரைச் சொல்லி, “நீ அவனுடைய பிள்ளை தானடா?” என்று கேட்டார். இவன் ஆமென்று தலையசைக்கவும் “சாதிகெட்ட மூதி….” என்று கடுமையாய் சத்தம் போட்டு அவனுடைய கையிலிருந்த காசுகளைப் பிடுங்கி, தற்செயலாக அவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த குருவுவின் கைகளில் போட்டு விட்டார். பால்பாண்டிக்கு எதுவும் புரியாமல் கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்கிற வருத்தத்தில் பிரமை பிடித்து நின்று கொண்டிருந்தான்.

ஆனால் கூட்டம் கலைந்ததும் இவனுக்கு அருகில் வந்து “அவங்க கெடக்குறாங்கய்யா, இந்தா உனக்குக் கெடைச்ச காசை நீயே வச்சுக்கிட்டு, ஏதாச்சும் வாங்கித் தின்னுக்கோ….” என்று ரகசியமாக அவனுடைய காதில் சொல்லி, காசை பால்பாண்டியின் கால்ச் சட்டைப் பைக்குள் போட்டு விட்டுப் போய் விட்டான் குருவு. அதுதான் குருவுக்கும் பால்பாண்டிக்கும் நேரிடையாய் நேர்ந்த முதல் பரிச்சயம். அப்புறம் சாணி பொறுக்கப் போனபோது மாடுகளை மேய்ப்பவனாக அவனைச் சந்தித்து இருவரும் நெருங்கி யிருக்கிறார்கள்.

சாணி பொறுக்குவதற்கு இவனை விட பெரிய பையன்கள் இவனுடன் போட்டிக்கு வரும்போது பல நேரங்களில் குருவு அவர்களுடன் சண்டைக்குப் போயிருக்கிறான். அவனே முன்னின்று இவனுடைய சாணிக் கூடையை நிரப்பிக் கொடுத்தும் அனுப்பியிருக்கிறான். அதனால் அவன் பால்பாண்டியைத் தொட்டுவிட்டதை வெளியில் சொல்லாமல் மறைத்து விடலாம் என்று தான் நினைத்தான். ஆனாலும் தேள் கடியிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று தான் அவனுக்குப் புரிய வில்லை. அம்மாவிடம் சொன்னால் தான் ஏதாவது வழி காட்டுவாள்.

வீட்டிற்குப் போனபோது காட்டு வேலைக்குப் போயிருந்த அவனுடைய அம்மா வீடு திரும்பி யிருக்க வில்லை. அம்மி (அம்மாவைப் பெற்ற பாட்டி) தான் வீட்டிலிருந்தாள். கேப்பையை சுளகில் போட்டு புடைத்துக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் ”என்னடா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” என்று விசாரித்தவள், அவன் வெறுங்கை வீசிக் கொண்டு வந்தது அப்போது தான் கவனம் வந்தவளாய், “சாணிக் கூடையை எங்கடா?” என்றாள். “சண்டாளப் பாவி அதையும் தொலச்சுட்டியா?” என்று புலம்பத் தொடங்கினாள்.

பால்பாண்டி எதுவும் பேச வில்லை. பதில் சொல்ல வாய் திறந்தால், எங்கே அழுது விடுவோமோ என்று அவனுக்குப் பயமாக இருந்தது. எதுவும் பேசாமல் வீட்டிற்குள் போய் உட்கார்ந்து கொண்டான். ‘இன்னைக்கு இந்த எடுபட்ட பயலுக்கு என்னாச்சு….!’ என்று தனக்குள் பேசியபடி அவள் கேப்பையைத் தொடர்ந்து புடைக்கத் தொடங்கினாள். கொஞ்ச நேரத்தில் வாசலிலிருந்து “அப்பச்சி….!” என்று கூப்பிடும் குரல் கேட்டது. பால்பாண்டியும் அம்மியும் எழுந்து வாசலுக்குப் போனார்கள். குருவு கூடை நிறைய சாணியுடன் இவனின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான்.

கூடை திரும்பக் கிடைத்ததில் அம்மிக்கு நிம்மதியாக இருந்தது. “பொட்டியாரு சாணி நெறைய இருந்ததால கூடைய சொமக்க முடியாம அங்கயே விட்டுட்டு வந்துட்டானாக்கும்….” என்றபடி, குருவிடம் “சாணிய கொல்லையில போயி கொட்டீட்டு வந்துருடா…” என்றாள்.

அவன் திரும்ப வந்ததும், அவனிடமிருந்து கூடையை வாங்கிக் கொண்டு, “ஒரு வாய் கஞ்சி குடிக்கிறியாடா….” என்றாள் கரிசனத்துடன். அவள் கேட்ட விதத்தில், குருவு பால்பாண்டியைத் தொட்டு விட்டதை அவன் இன்னும் இவளிடம் சொல்லி இருக்க வில்லை என்பதை அறிந்து குருவுக்கு நிம்மதியாக இருந்தது. “இருந்தா ஊத்தாத்தா குடிச்சிட்டுப் போறேன்…” என்றபடி கஞ்சி குடிக்கத் தயாராய் வாசலுக்கு அருகிலேயே குத்துக் காலிட்டு உட்கார்ந்து கொண்டான்.

அம்மி முதலில் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து குருவுவின் கைகளின் மீது மெதுவாய் ஊற்ற, அவன் கைகளைத் தேய்த்துக் கழுவிக் கொண்டான். அப்புறம் நாலைந்து பச்சை வெங்காயத்தை அவனுக்கு முன்னால் போட்டு விட்டு, மண் கலயத்தில் கொண்டு வந்த கம்மங் கூழைத் தண்ணீர் விட்டுக் கரைக்கத் தொடங்கினாள். “என்னடா குருவு, உங்கப்பனுக்கு எப்படி இருக்கு? இந்த வருஷ மாச்சும் களத்து மேட்டுக்கு வருவானா, இல்ல சுடுகாட்டுக்குத் தூக்கிற வேண்டியது தானா?” என்றாள்.

”எங்காத்தா, இன்னும் படுத்த படுக்கையாத்தான் கெடக்கு; பொழைச்சு எந்திரிக்குறது கஷ்டம் தான்னு வைத்தியரய்யா சொல்லீட்டாரு…” என்றபடி கையிரண்டையும் சேர்த்து குவித்து கீழே கிடந்த வெங்காயத்திலிருந்து, ஒன்றை எடுத்து கைக்குள் வைத்துக் கொள்ளவும் அம்மி கரைத்த கஞ்சியை கை குவிப்புக்குள் ஊற்ற, ஒரு துளி கூட சிந்தி விடாமல் குடித்தான் குருவு.

வயிறு நிரம்பும் வரை வாங்கி வாங்கிக் குடித்தவன், கிளம்பிப் போகும் போது பால்பாண்டியிடம் யார்கிட்டயும் தான் அவனைத் தொட்டு விட்டதைச் சொல்லி விட வேண்டாம் என்று கண்களாலேயே இறைஞ்சி விட்டுப் போனான். அவனைப் பார்க்க பால்பாண்டிக்கும் பாவமாகத் தான் இருந்தது.

குருவு எப்போதுமே இப்படித்தான். அன்றைக் கொருநாள் நரிமேடு போகிற வழியில் அவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது பால்பாண்டியும் அவனுடன் சாணி பொறுக்குவதற்காக அலைந்து கொண்டிருந்தான். நல்ல வெயில்; இருவருக்கும் தாகமாக இருந்தது. கொஞ்ச தூரத்தில் தான் நல்ல தண்ணீர்க் கிணறு. தண்ணீர் குடித்து வரலாம் என்று இருவரும் அங்கு போனபோது நல்ல தண்ணீர்க் கிணற்றில் யாருமில்லை. ஆனால் கயிற்றுடன் வாளி இருந்தது. கொஞ்சம் பெரிய கனமான வாளி.

கிணற்றின் சுற்றுச் சுவர் உயரம் கூட இல்லாத பால்பாண்டியால் அந்த வாளியின் மூலம் தண்ணீர் இறைக்க இயலாது. ஊர்க் கட்டுப்பாட்டின்படி குருவுவின் சாதியைச் சேர்ந்தவர்கள் நல்ல தண்ணீர்க் கிணற்றிலிருந்து நேரிடையாக தண்ணீர் சேந்த அனுமதிக்கப் பட்டிருக்க வில்லை. ஆனால் இருவருக்கும் நல்ல தாகம்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் குருவு விடுவிடென்று போய் வாளியை உள்ளே விட்டு தண்ணீர் இறைத்து அவனும் குடித்து, பால்பாண்டிக்கும் கொடுத்தான். யாராவது பார்த்திருந்தாலோ, குருவு இப்படிச் செய்தான் என்று கேள்விப் பட்டாலோ, ஊர்க்காரர்கள் பஞ்சாயத்தைக் கூட்டி அவனுடைய குடும்பத்தையே ஊரிலிருந்து விரட்டி விடுவார்கள். அவன் தண்ணீர் இறைத்து முடிக்கும் வரை பால்பாண்டி தான் பயத்துடன் யாரும் வந்து விடப் போகிறார்களோ என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.

எல்லாம் முடிந்த பின்பு, பால்பாண்டியிடம் குருவு கெஞ்சினான். ”இதை யார் கிட்டயும் சொல்லீ டாதய்யா; உடம்புத் தோல உரிச்சு உப்புக் கண்டம் போட்டுருவாங்க….” அன்றைக்கு நடந்ததை பால்பாண்டி யாரிடமும் சொல்லவில்லை. காரணம் அதன் மூலம் அவனுக்கு எதுவும் பாதிப்பில்லை.

ஆனால் இன்றைக்கு நடந்ததில் அவனுக்கல்லவா நேரிடையான பாதிப்பு; அவனை தேள் கடித்து விட்டால் அந்த வலியும் வேதணையும் அவனுக்குத் தானே! குருவு பேசாமல் கொஞ்ச நேரம் கடந்தாவது வேறு யாரையாவது அழைத்து வந்து அவனைக் குழிக்குள்ளிருந்து தூக்கி வெளியே விடச் சொல்லியிருக்கலாம்; மடப்பயல் அவனுக்கு எல்லாமே அவசரம் தான்!

பால்பாண்டியின் அம்மா காட்டு வேலை முடிந்து, கஞ்சி காய்ச்சுவதற்கு விறகெல்லாம் பொறுக்கிக் கொண்டு நேரங்கழித்துத் தான் வீட்டிற்கு வந்தாள். வந்ததும் மகனின் முக வாட்டத்தைக் கண்டு பிடித்து விட்டாள். “என்னடா, ஒரு மாதிரியா வடியா இருக்குற….! அம்மி எதுவும் சொன்னாளா?” என்று அவனின் தலை முடிகளை அலைந்தபடி கேட்டாள்.

”ஒன் புள்ளைய நான் ஒண்ணும் சொல்லல ஆத்தா…. வந்ததுலருந்து என்கிட்டயும் முகங்கொடுத்தே பேசாம இப்படித் தான் மூஞ்சியத் தூக்கி வச்சுக்கிட்டு இருக்குறான்…. சாணிக் கூடைய கம்மாய்க் கரையிலேயே விட்டுட்டு வந்துட்டான்; ஏண்டான்னு கேட்டதுக்குத் தான் இப்படி ஊமக் கோட்டானாட்டம் முழிச்சுக்கிட்டு நிக்கிறான்…. நல்ல வேளையா நம்ம குருவுப்பய இவன் விட்டுட்டு வந்த கூடைய திருப்பிக் கொண்டு வந்து குடுத்துட்டுப் போனான்….” என்றபடி நீளமாய்ப் பேசினாள் அம்மி.

”நீ வேற சண்டைய ஆரம்பிக்காத…” என்று அம்மியை அதட்டிய அம்மா, “சொல்லுடா என் செல்லம் இல்ல; என்னம்மா, உடம்புக்கு எதுவும் சுகமில்லையா?” என்றாள் பால்பாண்டினின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தபடி. “எனக்கு ஒண்ணுமில்லம்மா…!” என்றபடி, அவள் காட்டிலிருந்து பறித்துக் கொண்டு வந்திருக்கும் பொருட்களை ஆராயத் தொடங்கினான். “இன்னைக்கும் காட்டுக்கீரைக் குழம்பும் அதலைக்காய் வெஞ்சனமும் தானா?” என்று அலுத்துக் கொண்டான்.

”சம்சாரி வீட்டுல வேற என்னய்யா இருக்கும்….” என்றபடி, உள் மடியை அவிழ்த்து மஞ்சளாய் மின்னிய மிதுக்கம் பழங்களை எடுத்துக் கொடுத்தாள். பால்பாண்டி சந்தோஷமாய் வாங்கிக் கொண்டவன் அதிலிருந்து ஐந்தாறு பழங்களை எடுத்து அம்மிக்கும் தின்னக் கொடுத்தான்.

சாப்பிட்டுத் தூங்கப் போகும் போது தான் அம்மாவிடம், “அம்மா, இன்னைக்கு குருவு என்னைத் தொட்டுட்டான்ம்மா…..” என்றான் பால்பாண்டி. அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது சட்டென்று உறைக்க வில்லை. ”தொட்டா என்னடா….” என்று சாதாரணமாய்க் கேட்டாள். அம்மி தான் “அடப்பாவி, இத முதல்லயே சொல்றதுக்கென்ன? அந்தக் கடங்காரன் இங்க வந்துருந்தப்பவே, கட்ட வெளக்கமாத்தால நாலு சாத்து சாத்திருப்பன்ல….” என்று பதறினாள். “அட நீ வேற சும்மா கெட ஆத்தா….. ஏதோ தெரியாமத் தொட்டுருப்பான்; அதைப்போயி பெருசு பண்ணிக்கிட்டு…..” என்று அம்மியை அதட்டினாள்.

”குருவு நம்மளத் தொட்டா பரவாயில்லையாம்மா…. என்னைத் தேளெதுவும் கடிச்சிடாதுல்ல….!” என்றான் பால்பாண்டி கண்களில் பயம் மின்ன. “அதெல்லாம் கடிக்காதுப்பா….” என்றவள் சொல்லவும், அம்மி தான் ஆங்காரமாய்ச் சத்தம் போட்டாள். “வெவரம் புரியாதவளா இருக்கியேடி; மொட்டமச்சு வீடு…. சின்னத் தூத்தல் போட்டாளே, கூரையிலருந்து தேளுங்க படை படையா எறங்கி வந்துரும்; இவன் வேற அந்த சின்னச் சாதிப் பயலத் தொட்டுட்டு வந்துருக்கான்….தேள்க்கடி வலியெல்லாம் புள்ள தாங்குவானா…..” அம்மி சாமியாடினாள்.

”புள்ள ஏற்கெனவே பயந்து போய்க் கெடக்குறான்; இதுல நீ வேற உசுப்பி விட்டு, பெருசாப் பயந்து அவனுக்கு காய்ச்சல் கீச்சல் வந்து தொலைக்கப் போகுது…. இப்ப என்ன தான் செய்யனும்ங்குற?” என்றாள் அம்மா எரிச்சலுடன்.

”பால்மாறாம பயல காளி கோயில் பூசாரிகிட்டக் கூட்டிட்டுப் போயி மந்திரிச்சு தின்னூரு பூசிக் கூட்டிட்டு வா… காளியாத்தா எந்த விஷச் சந்தும் அவன அண்ட விடாமப் பார்த்துக்குவா…..” என்றாள் அம்மி.

அம்மா விஷயத்தைச் சொல்லவும் பூசாரி தாத்தாவுக்கு வெலம் வந்து விட்டது. “எந்தப்பய தொட்டான்னு சொல்லும்மா….! எலும்ப எண்ணீடலாம்; வரவர அவனுங்களுக்கு துளிர் விட்டுப் போயிருச்சு…. பத்து நாளைக்கு முன்னால இப்படித்தான் வெள்ளிக் கெழமை பூசையப்ப, ஒரு எளந்தாரிப் பய கோயிலுக்குள்ள ஏறீட்டான்; எறங்குடா, நீயெல்லாம் கோயிலுக்குள்ள கால் வைக்கக் கூடாதுன்னா, இப்ப என்னன்னு சிலுத்துக்கிட்டு நிக்குறான்…. அவனுக்கு நம்ம பயலுக நாலு பேரு சப்போர்ட்டு வேற…. அதான் இந்தக் கழிசடைகள் எல்லாம் கண்ணு மண்ணுத் தெரியாம ஆடுறானுங்க…. யாருன்னு மட்டும் சொல்லும்மா பொலி போட்றலாம் அவனுங்களை……”

”அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மாமா…. நீங்கக் கோயிலத் தொறந்து பால்பாண்டிக்கு தின்னூரு மட்டும் பூசி விடுங்க போதும்…..” என்றாள். “கற்பூர ஆரத்திக்காச்சும் காசு கொண்டாந்துருக்கியா….!” பூசாரி காரியத்தில் கண்ணாக இருக்கவும், “அதெல்லாம் கொண்டாந்துருக்கேன் மாமா….” என்றபடி சேலை முந்தானையில் முடிந்து வைத்திருந்த எட்டணா நாணயத்தை அவிழ்த்துக் கொடுத்தாள் அம்மா.

கிணிகிணி என்று மணி அடித்து, கற்பூரம் கொளுத்தி அவர்களுக்கு முன் நீட்டவும் அம்மா கற்பூர ஜுவாலையைக் கண்களில் ஒற்றிக் கொண்டு பால்பாண்டிக்கும் அப்படியே செய்தாள். பூசாரி ஏதோ முணுமுணுத்தபடி வேப்பிலை கொத்தால் பால்பாண்டியின் உடலெல்லாம் வருடிவிட்டார். திருநீரெடுத்து அவனது நெற்றியில் பூசியதோடு, வாயைத் திறக்கச் சொல்லி உள்ளேயும் கொஞ்சம் விசிறினார்.

கோயிலைப் பூட்டிய பூசாரி, “வேணுமின்னா, பையன் இன்னைக்கு ஒரு ராத்திரி இங்க கோயில் மடத்துலயே என் கூடவே படுத்துக் கட்டுமே….!” என்றார். அம்மாவுக்கு அதில் சம்மதமில்லை என்றாலும் அவள் பால்பாண்டியின் முகம் பார்த்தாள். “என்னடா, பூசாரி தாத்தா கூட இங்கயே படுத்துக்கிறியா….?” என்று கேட்கவும் அவனும் வீட்டில் அலையும் தேள்கள் பற்றிய பயம் கண்களில் மின்ன உடனே “சரிம்மா….” என்று தலை அசைத்தான்.

அவசரமாய் வீட்டிற்குப் போய் ஒரு பாயும் அதன் மேல் விரித்துக் கொள்ள அவளின் சேலை ஒன்றும் கொண்டு வந்து பால்பாண்டியிடம் கொடுத்து, “பத்தரமாப் பார்த்துக்குங்க மாமா….” என்றபடி பையனை பூசாரியிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பிப் போனாள்.

பால்பாண்டி இதுவரை வீடு தவிர்த்து வெளி இடங்களில் தூங்கியதில்லை. இவன் வயதொத்த பலபேர் காளி கோயில் மடம், பள்ளிக்கூட வராண்டா, நாடகக் கொட்டாய், நர்ஸ் இல்லாததால் பூட்டிக் கிடக்கும் தாய் – சேய் நலவிடுதியின் முன்னாலுள்ள திறந்தவெளி என்று பல இடங்களில் படுத்துத் தூங்குவதைப் பார்த்திருக்கிறான். ஆனால் பால்பாண்டியை அப்படிப் போய்த் தூங்க அவனின் அம்மா அனுமதித்ததில்லை.                              கோயில் மடத்தில் பூசாரிக்கென்று தனியிடம் ஒன்றிருந்தது. வெள்ளிக்கிழமை மற்றும் முக்கியமான பூஜை நாட்களில் டமடமவென்று அடித்து மக்களை அழைப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பெரிய மேளத்தின் கீழ் அவருக்கு படுக்கை தயாராக இருந்தது. ஆனால் அவர் வந்தபாடில்லை. அவரின் படுக்கைக்குப் பக்கத்தில் பால்பாண்டி தன்னுடைய பாயையும் விரித்துப் படுத்துக் கொண்டான். பால்பாண்டி புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வந்த பாடில்லை. அவனுடைய மூளை முழுவதையும் தேள்கள் ஆக்ரமித்துக் கிடந்தன.                                                     பால்பாண்டியின் மொட்டைமச்சு வீட்டில் எப்போதுமே தேள்களின் நடமாட்டம் அதிகம். கூரைத் தெப்பைகளின் இண்டு இடுக்குகளுக்குள் குடியிருந்து, மழைக்காலம் வந்து விட்டால் அந்த ஈரத்திற்கு சரசரவென்று கீழிறங்கி நடமாடத் தொடங்கி விடும். மேலும் அம்மாவும் அம்மியும் படப்பிலிருந்து கொண்டுவரும் பருத்திமார் விறகுக்குள்ளிருந்தும் அவ்வப்போது தேள்கள் வீட்டிற்குள் குடி வருவதுண்டு.

கோடைக் காலமென்றால் வீட்டிற்கு வெளியே காற்றோட்டமாய்ப் படுத்துக் கொள்வார்கள். ஆனால் மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் வீட்டிற்குள் தான் படுத்து உறங்கியாக வேண்டும். என்னதான் சிம்னி விளக்கை விடிய விடிய எரிய விட்டாலும் தேள்களிலிடமிருந்து தப்பிப்பது பெரும் பாடாகத் தான் இருக்கும்.

தேள்களுக்கும் அவனுக்குமான முதல் தொடர்பு அவனுடைய மூன்று அல்லது நான்கு வயதில் நிகழ்ந்தது. பால்பாண்டி அன்றைக்கு நல்ல தூக்கத்திலிருந்த போது, அவன்மீது ஏதோ ஊர்வது போன்ற உணர்வு. முழித்துப் பார்த்தால் கறுஞ்சிவப்பாய் பொன்வண்டின் அளவில் கொடுக்கை நிமிர்த்திக் கொண்டு – அப்போது அதுதான் தேள் என்பதை அவன் அறிதிருக்கவில்லை – அவனது முழங்கையில் நின்று கொண்டிருந்தது. கையை ஒரு உதறு உதற அது எங்கோ போய் விழுந்து விட்டது.

புரண்டு படுத்த போது பார்த்தால் அம்மாவும் அய்யாவும் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. எப்போதும் சண்டை என்றால் இருவரும் அசிங்க அசிங்கமாய் காட்டுக் கத்தல் கத்தி ஊரைக் கூட்டி, அய்யா அம்மாவைப் போட்டு அடிக்க, அம்மா அவனே இவனே என்று திட்டி அழுது கொண்டிருப்பாள்.

ஆனால் அந்த இரவிலோ சத்தம் எதுவுமின்றி, அய்யா அம்மாவின் தலைமுடியைக் கைகளில் பிடித்தபடி, வாயால் அவளின் மார்பைக் கடித்துக் கொண்டிருந்தார். அவளின் லவுக்கை பிரிந்து கிடந்தது. அவள் மேலும் திமிற முடியாமல் அவளின் மேல் படுத்து அமுக்கிக் கொண்டிருந்தார் அய்யா. அம்மா மூச்சுப் பேச்சில்லாமல் கிடப்பதைப் பார்த்து பால்பாண்டிக்கு அழுகை வந்து விட்டது.

”அம்மாவக் கொல்லாதப்பா; விட்டுருப்பா; அம்மா பாவம்ப்பா…..” என்றபடி அவரின் முதுகில் இவன் கடிக்க, “பேசாமப் படுத்துத் தூங்குடா சனியனே….!” என்று அய்யா இவனையும் அறைந்தார். ”புள்ள தான் முழிச்சிருச்சுல்ல, இன்னும் என்ன எறங்குங்க….” என்றபடி அய்யாவை அம்மா கீழே தள்ளி விட்டு, இலேசாய் புன்முறுவல் செய்தபடி லவுக்கையையும் சேலையையும் ஒழுங்காக அணிந்து கொண்டிருந்தவள் திடீரென்று சத்தம் போட்டாள்.

“அங்க மூலையில பாருங்க தேளுங்க….” அய்யா இலாட ஆணிகள் பொருத்தி தைத்துக் கொண்ட செருப்பை எடுத்து தேளை நச்சென்று அடிக்க அது நசுங்கி செத்துப் போனது. அப்புறம் தான் தெரிந்தது பால்பாண்டிக்கு தன்மேல் ஊர்ந்து கொண்டிருந்தது தேள் என்று.

அடுத்தநாள் பகலில், இராத்திரி அம்மாவும் அய்யாவும் சண்டை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து தான் விலக்கி விட்டதை பெரிய மனுஷ தோரணையில் சித்தப்பாவிடம் பால்பாண்டி சொன்னதைக் கேட்டதும் சித்தப்பாவும் பக்கத்திலிருந்து கேட்டவர்களும் கொல்லென்று சிரித்து விட்டார்கள். அப்புறமும் பார்க்கும் போதெல்லாம், “என்ன பால்பாண்டி, இன்னைக்கு இராத்திரியும் உங்க அய்யாவும் அம்மாவும் சண்டை போட்டாங்களா?” என்று இவனை பெரியவர்கள் ரொம்ப நாளைக்குக் கேலி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இன்னொருமுறை கோலிக்குண்டு வாங்க, காசு திருடும் முயற்சியில் அடுக்குப் பானைகளை இறக்கி வைத்து, அம்மாவின் சுருக்குப் பையிலிருந்து பால்பாண்டி பணம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, பானை வளைவிலிருந்து தேள் ஒன்று எட்டிப் பார்க்க, அப்படியே எல்லாவற்றையும் போட்டுவிட்டு வெளியே ஓட, அடுக்குப் பானைகள் மொத்தமும் தரையில் உருண்டு உடைந்து, தானியங்களும் பயறு வகைகளும், கேவுறு மாவும் சிதறி விட்டன.

தேள் பற்றிய பயத்தில் இவன் வீட்டிற்குள் போகவே இல்லை. சாயங்காலம் வேலை முடிந்து வந்த பால்பாண்டியின் அம்மா, அடி பின்னி விட்டாள். அதற்கப்புறம் பால்பாண்டி திருட முயற்சித்ததே இல்லை. காரணம் அவன் திருந்தியெல்லாம் விடவில்லை. தேள் பற்றிய பயம் தான்.

அம்மாவையும் அம்மியையும் நிறையத் தடவைகள் தேள்கள் கடித்திருக்கின்றன். அம்மா ஓரளவிற்கு பல்லைக் கடித்து வலியை பொறுத்துக் கொள்வாள். ஆனால் அம்மி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரைக் கூட்டி விடுவாள். அவளின் ஓலத்திற்கு ஆற்றமாட்டாமல், வலி தெரியாமல் இருக்கும் என்று தேள் கடித்த ஒரு இராத்திரியில் அம்மிக்கு பிராந்தி கலந்து கொடுத்து விட்டார்கள். அதைக் குடித்து விட்டு அவள் போட்ட ஆட்டம்; புலம்பிய புலம்பல்கள்; சாகப் போகிறோம் என்ற பயத்தில் அவள் உளறிக் கொட்டிய வார்த்தைகள் …. எல்லாம் எப்போது நினைத்துப் பார்த்தாலும் வேடிக்கையாகவும் வேதணையாகவும் இருக்கும் அவனுக்கு!

ஒரு கொழுத்த அறுவடை நேரத்தில் களத்தில் உளுந்தம் பயறு செடிகளை உலர்த்திக் கொண்டிருந்த போதுதான் தேள் கடித்து பால்பாண்டியின் அய்யா செத்துப் போனார். கடித்த தேளை யாரும் கடைசிவரை கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் கடித்தது தேளா, பாம்பா என்று கூட சிலர் சந்தேகத்தைக் கிளப்பினார்கள். எது கடித்ததோ தெரியாது. ஆனால் அய்யா செத்துப் போனது மட்டும் சந்தேகமே இல்லாத நிஜம். பால்பாண்டியை கட்டிக் கொண்டு அவனின் அம்மா கதறிய அழுகையின் சுவடுகள் இன்னும் கூட அவனுக்குள் காயாத ஈரத்துடன் படிந்திருக்கின்றன.

முதல் முறையாக பால்பாண்டியைத் தேள் கடித்த இரவில் அம்மா வீட்டில் இல்லை. அவனைத் தூங்கப் போட்டுவிட்டு பக்கத்து ஊரில் நடந்த அரிச்சந்திர மயான கண்டம் நாடகம் பார்க்கப் போய் விட்டிருந்தாள். ஏதோ சுரீரென்று உறைக்க, முழித்துப் பார்த்த பால்பாண்டிக்கு முன் அவனைக் கடித்த தேள் சாவகாசமாக ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. இவனுடைய அழுகையில் தூக்கம் கலைந்து எழும்பிய அம்மி அம்மாவைத் திட்டித் தீர்த்து விட்டாள். “ஒரு பொம்பள இப்படியா கூத்துப் பார்க்கக் கெடந்து அலைவாள்! இந்த அகால வேளையில, தள்ளாத வயசுல, நான் யாரைப் போய் எழுப்பி இவனுக்கு மருந்து போடுறது?” என்று அவள் புலம்பிக் கொண்டிருக்கும் போதே தேள் மாயமாய் மறைந்து விட்டது.

தேள் கடித்த கடி வாயில் அம்மி இரத்தம் வரச் சுரண்டச் சொன்னாள். அவளும் சுரண்டி விட்டாள். சிறிது நேரத்தில் சுரண்டிய இடத்தில் பொல்லென வியர்த்து, முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் அரும்பின. விர்ரென்று ஒரு வலி உடம்பெங்கும் பரவி நெறிகட்டி கொஞ்ச நேரத்திலேயே வலி பொறுக்க முடியாமல் கதறி விட்டான் பால்பாண்டி. வெளியில் மழை வேறு தூறிக் கொண்டிருந்தது. அம்மி பால்பாண்டியை வாசல் படியில் உட்கார வைத்து விட்டு, கோணிச்சாக்கை தலையில் போர்த்திக் கொண்டு வேளியே போய், கொஞ்ச நேரத்திலேயே சித்தப்பாவுடன் திரும்பி வந்தாள்.

அவர் தேள் கடிக்கு மருந்து கிடைக்கும் என்று நம்பிய வீடுகளுக்கெல்லாம் போய் கதவைத் தட்டி விசாரித்தார். யாரும் தூக்கங்கெட்ட கோபம் கொஞ்சமும் இல்லாமல் பால்பாண்டிக்காக பரிதாபப் பட்டார்கள். “அய்யய்யோ பச்சப் புள்ளயாச்சே! எப்புடி வலி பொறுப்பான? இவங்க ஆத்தா கூத்துப் பார்க்கப் போயிருக் காளாக்கும்! நல்ல கூத்துத் தான்…!” எதையோ உரசி, எதிலோ கலந்து தேள் கடித்த இடத்தில் பூசினார்கள். ஆனாலும் வலி மட்டும் குறையவே இல்லை.

அம்மா வந்ததும் துடி துடித்துப் போனாள். வலி பொறுக்க முடியாமல் அழுத பால்பாண்டியை தோளில் போட்டுக் கொண்டு அவளும் தேம்பிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாய் வலி குறைந்து அவன் உறங்கத் தொடங்கும் போது விடிந்திருந்தது. பொதுவாய் தேள் கடித்து ஒரு பொழுது கடந்ததும் வலியின் வீரியம் குறைந்து விடும் என்பார்கள். அதற்கப்புறம் அம்மா எங்கு கூத்துப் பார்க்கப் போனாலும் அவனையும் இடுக்கிக் கொண்டே தான் போகலானாள்.

ஒரு கார்த்திகைத் திருநாள் தொடங்கி, வீடுகளில் அழகழகாக மெழுகுவர்த்திகளும் கிளியான் சட்டி விளக்குகளும் ஏற்றி வைக்கத் தொடங்கிய சாயங்காலத்தில் , விறகுக் கட்டிலிருந்து அம்மாவைக் கொட்டிய தேள் பெரியது. கொஞ்சம் மோசமான விஷமுள்ள நட்டுவாக்காலி என்றார்கள். கடித்த தேளைக் கொன்று அதை நல்லெண்ணையில் பொரித்துச் சாப்பிட்டால் விஷம் விரைவில் முறிந்து விடும் என்று மருந்து சொன்னார்கள்.

அம்மியும் அதன்படியே சமைத்து அம்மாவிடம் கொண்டு வந்து கொடுத்தது. ஆனால் அம்மா உவ்வே என்று ஓங்கரித்து “நான் செத்தாலும் செத்துப் போவேனே தவிர இதைச் சாப்பிட மாட்டேன்…” என்று மறுத்து விட்டாள். அப்புறம் “நான் பிழைக்க மாட்டேன்; என் பிள்ளையப் பார்த்துக்குங்க….” என்று எல்லோரிடமும் அழுது கொண்டிருந்தாள். ஆனாலும் அம்மா செத்தெல்லாம் போகவில்லை. விடிந்ததும் வலி குறைந்து, மூன்றாம் நாள் பெரிய கார்த்திகை கொண்டாட்டங்களில் மூழ்கினாள்.

பக்கத்து கிராமத்தில் பத்து வயதே ஆன பரமசிவம் தேள் கடித்துத் தான் செத்துப் போனான். கள்ளன் போலீஸ் விளையாட்டில், கள்ளனாக வைக்கோற் படப்பில் ஒளிந்திருந்தவனை அங்கிருந்த தேள் கடித்து விட்டது. அவன் பெரும் பணக்காரரின் ஒரே பையன். செய்தி கேள்விப் பட்டதும் வண்டி கட்டி, அவனை அள்ளிப் போட்டுக் கொண்டு டவுனுக்கு விரைந்தார்கள். ஆனாலும் போகிற வழியிலேயே பையன் செத்துப் போக அழுது கொண்டே திரும்பினார்கள்.

பரமசிவத்தைக் கடித்தது கருந்தேள் என்றும் அதன் விஷம் பாம்பை விடக் கொடியது என்றும் பேசிக் கொண்டார்கள். பையனின் இழப்பை அந்தக் குடும்பத்தால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தேளிருந்த வைக்கோற் படப்பை அப்புறப் படுத்தி விட்டு அங்கு பையனுக்கு பெரிய சமாதி ஒன்று கட்டினார்கள்.

ஒவ்வொரு வருஷமும் அவனின் நினைவு நாளை அன்னதானம், எளியவர்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ உதவி, நாடகம், கூத்து என்று திருவிழா மாதிரிக் கொண்டாடினார்கள். அந்த ஊரிலும், அக்கம் பக்கத்து ஊர்களிலும் தேள் கடித்து யாரும் சாகக் கூடாது என்ற வைராக்கியத்தில், தேள் கடிக்கு என்ன விஷேச மருந்து டவுனில் கிடைக்கிறதோ , அதை வாங்கி வந்து சமாதியில் எந்நேரமும் தயாராக வைத்திருந்தார்கள். தேள் கடிக்கு மட்டுமில்லாமல் பிற விஷ ஜந்துக்களின் விஷ முறிவிற்கும் அந்த சமாதியில் எப்போதும் மருந்து கிடைக்கும்.

அடைமழை பெய்த ஒரு ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்கு மூன்று தினங்களே இருந்த போது கண்மாய்க் கரை அய்யனார் கோயிலில் மழைக்காக ஒதுங்கி இருந்தான் பால்பாண்டி. இலையும் கொப்புமாய் அடர்ந்த கிளைகளும் விரிந்த தூருமாய் நிறைய மரங்கள். மரங்களின் அடர்த்தியின் கீழ் உயரமான கருங்கல் திண்டும் அதன் மீது அரிவாள் மற்றும் மீசையுடன் கருகருவென்ற எண்ணெய்ப் பளபளப்பில் பார்வையாலேயே பயமுறுத்தும் அய்யனார் சாமி. சாமியின் உடலெங்கும் திட்டுத் திட்டாய் பறவை எச்சங்கள்!

மழை வலுத்துப் பெய்தபோது, அங்கு நிறையப் பேர் ஒதுங்கி இருந்தார்கள். மழை குறையக் குறைய கூட்டமும் குறைந்து இவன் மட்டும் தனித்திருப்பதான சூழல். விரிந்த மரத் தூரின் ஒரு பகுதியில் அவன் உட்கார்ந்திருந்தான். அவனும் கிளம்பலாம் என்று எழும்பிய போது இன்னொரு மரத்தின் பின் பக்கத்திலிருந்து பேச்சுக் குரல் கேட்டது. அவர்களை பால்பாண்டியால் பார்க்க முடியாதது போலவே அவர்களும் பல்பாண்டியின் இருப்பை உணர்ந்திருக்க வில்லை.

மழை ஈரக் குளிர்ச்சியுடன் கிசுகிசுப்பாய் கசிந்த குரல்களிலிருந்து அவர்கள் குருவின் அண்ணன் மாரியும், ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவரின் மகள் செண்பகம் என்றும் அவனால் அறிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து அவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே நிறைய நெருக்கம் இருப்பதும் புரிந்தது. அவர்களின் செல்லக் கொஞ்சல்களும் குலாவல்களும் காற்றின் வழி ஓசையாகி அவன் காதுகளை அடைந்து பால்பாண்டிக்கு கிளுகிளுப்பூட்டிக் கொண்டிருந்தது.

”நாம இப்ப சந்தோஷமா இருக்கலாமா?” – இது மாரியின் குரல். ”அய்யே! மூஞ்சியப் பாரு….” என்று அவனின் அழைப்பை புறக்கணித்த செண்பகம், கொஞ்ச நேரத்திலேயே, “எங்க பார்த்தாலும் சொதச் சொதன்னு ஒரே ஈரமா இருக்கு…! இங்க ‘அது’க்கான எடம் எங்கருக்கு?” என்றாள். ”அய்யனார் சாமி இருக்குற மேடையில தாராளமா எடம் இருக்கே…!” என்றான் மாரி.

”அடப்பாவி…. யாராச்சும் பார்த்தா உன்னை அய்யனாருக்கே வெட்டி பலி போட்ருவாங்களே!” என்றாள். “அதை அப்பப் பார்த்துக்கலாம்… அய்யனார் சாமி நம்மளக் காப்பாத்தாமலா போயிடும்…” என்றபடி அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு மேடைக்கு வந்தான். அவளும் சும்மா தயங்குவது போல் பிகு பண்ணிக் கொண்டு அவனுடன் ஆசையாகத் தான் வந்தாள்.

இப்போது அவர்கள் இருவரையும் பால்பாண்டிக்கு தெளிவாகப் பார்க்க முடிந்தது. மரத்திற்குப் பின்னால் முழு உடலையும் மறைத்துக் கொண்டு, தலையை மட்டும் வெளியே நீட்டி அவர்கள் அரங்கேற்றப் போகும் நாடகத்தை வேடிக்கை பார்க்கத் தயாரானான். மேடை மேலிருந்த ஈரத்தை மாரி தன்னுடைய தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துத் துடைத்தான். செண்பகம் கட்டியிருந்த புடவையை அவிழ்த்து கருங்கல் திண்டின் மீது விரித்துப் படுத்துக் கொள்ள, மாரி அவளைத் தாவி அணைத்து அவள் மீது கவிழ்ந்தான்.

”அய்யே, அவசரத்தைப் பாரு…” என்றபடி செண்பகம் தன்னுடைய லவுக்கையின் பித்தான்களை விடுவித்து, அவன் தன்மீது படர வசதி பண்ணிக் கொடுத்தாள். பால்பாண்டிக்கு அவனது உடலும் வெதுவெதுப்பாகி, வித்தியாசமாய், புதிதான ஏதோ ஒரு உணர்வு விறுவிறுவென்று உடலெங்கும் பரவி நடுக்க மெடுப்பது போல் இருந்தது அவனுக்கு.

மாரி செண்பகத்தின் நெற்றியில் தொடங்கி, கண்கள், காதுமடல், கழுத்து என்று முத்தமிட்டு, உதடுகளை உக்கிரமாய்க் கவ்வி, மார்பில் முகம் புதைத்து, பாவாடையை மெதுவாய் உயர்த்திய தருணத்தில் “அய்யோ தேள்” என்று கத்தி, மாரியின் பிடியிலிருந்து திமிறி, தன்னை விடுவித்துக் கொண்டாள் செண்பகம். அய்யனாரின் தொடைகளுக்கு இடையில் ஊர்ந்து கொண்டிருந்தது அந்தத் தேள். மாரி பக்கத்தில் கிடந்த ஒரு கல்லெடுத்து தேளை அடித்துக் கொன்றான்.

மாரி மறுபடியும் எவ்வளவோ சமாதானப் படுத்தி அழைத்தும் செண்பகம் மறுத்து விட்டாள். ”கடவுள் சந்நிதானத்துல தப்புப் பண்ணுனதால தான் அய்யனார் தேள அனுப்பி நம்ம தண்டிக்க நெனச்சுருக்கார்; நல்ல வேளையா தப்பிச்சிட்டம்…. கடிச்சிருந்தா, என்னத்துக்கு ஆகுறது….?” என்று நடுங்கியபடி வீட்டைப் பார்த்து கிளம்பிப் போய் விட்டாள் அவள்.

காளி கோயில் மடத்தில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சிலரின் சன்னமான குறட்டை ஒலியும் கேட்கத் தொடங்கி இருந்தது. தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பால்பாண்டியும் எப்போதென்று தெரியாமல் அப்படியே அசந்து தூங்கிப் போய் விட்டான்.

அவன் நல்ல தூக்கத்திலிருந்த போது, யாரோ அவனைக் கட்டிப் பிடிப்பது போல் இருந்தது. அங்கங்கே முத்தம் கொடுத்து கடிப்பதும் ஏதோ கனவில் நிகழ்வது போலிருந்தது. அப்புறம் அவன் மீது ஏறிப் படுத்து அவனை அமுக்கிக் கொண்டு, அவனின் கால்ச் சட்டையை கீழிறக்கி…. அவனுக்கு நன்றாக முழிப்பு வந்து தன் மேல் கிடந்த உருவத்தை உதறினான். பூசாரித் தாத்தா அவனைப் பார்த்து அசிங்கமாய் இளித்துபடி கீழிறங்கினார். பால்பாண்டி தன் பின்பக்கத்தில் பெரிதாய் வலியை உணர்ந்தான். அது தேள்கடி வலியை விடவும் கடுமையாய் அவன் நினைவுகளில் நீண்ட நாட்களுக்கு வலித்துக் கொண்டிருந்தது.

 

  • முற்றும்
Series Navigationஉங்களின் ஒருநாள்….இலக்கிய வட்ட உரைகள்: 14 நாற்றுகள் தொட்டிச் செடிகள் குரோட்டன்கள்
author

சோ சுப்புராஜ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *