கொலைகாரன் ஏதேனும் ஒரு க்ளூவையாவது விட்டுவைப்பான் என்று துப்பறியும் அகராதிகள் சொல்வதுதான்.
கொலையானவனுக்கு மட்டுமே கொலை செய்தவனைத் தெரியும் என்கிற நிலையில் வேறெதுவும் க்ளூவே கிடைக்கவில்லை எனும்போது, கொலையை யாரும் பார்க்கவேயில்லை எனும்போது, கொலையை துப்பறியும் நிபுணரும் சுஜாதா, ராஜேஷ்குமார், சாம்பு, டி.சி.பி. ராகவன் அளவிற்கு இல்லாமல் போகும்போது, கதையை எப்படித்தான் நகர்த்துவது? கொலையானவரே எழுந்து வந்து ‘இன்னார் தான் கொலையாளி’ என்று சொன்னால்தான் உண்டு. செத்தவன் எப்படி எழுந்து வந்து சொல்ல முடியும்? பேயாக வந்து சொல்லலாம். ஆனால், கதை அமானுஷ்யம் என்ற கேடகரிக்கு போய்விடும்.
கொலையானவனே மீண்டும் பிறந்து , அவனின் முன் ஜென்ம நினைவுகள் துப்பறிய உதவுவதாக கதை அமைக்கலாம். சயின்ஸ் ஃபிக்ஷன், டிலூஷன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம்.
பர்மாவில் கொலையை பர்மா தமிழர்கள் அத்தனை பேரும் பார்க்கிறார்கள். காளி கொலையை கல்யாணியின் அப்பா பார்க்கிறார். மென்டல் ஆகிறார்.( ஒருவேளை கொலையே மொக்கையாக நடந்துவிட்டதே என்று மென்டல் ஆகியிருப்பாரோ?). ஆக முன் ஜென்ம நினைவுகளைக் கொணர்ந்து கதை பண்ண வேண்டிய தேவையே இல்லை எனும்போதும் அதை வைத்தே கதை பண்ணியிருக்கிறார்கள்.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.
சரி – தவறு, நியாயம் – அநியாயம், தர்மம் – அதர்மம் போன்ற இருமைகளில் பாதகங்களான தவறு, அநியாயம், அதர்மம் போன்றவைகளை மட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட கற்பிதங்கள் தான் சுவர்க்கம் – நரகம் போன்றவை. தவறு, அநியாயம், அதர்மம் போன்றவைகளை செய்பவனுக்கு கெட்டதே நடக்கும் என்பதை மனித மனங்களில் தினிப்பதன் மூலமாக ஒரு பயத்தை உண்டாக்கினால், அந்த பயத்திலாவது மனிதன் தவறு, அநியாயம், அதர்மம் போன்றவைகளை செய்ய அஞ்சுவான் என்கிற சமூக நோக்கமே காரணம்.
ஆனால், இன்றிருக்கும் உலகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் அல்லவா? நல்லவனுக்கு தொடர்ந்து இடர்கள் வருகிறது. கெட்டவன் இன்னும் இன்னும் சுகமாக இருக்கிறான்.
ஒரு கொலையை செய்பவன் பாவி. அவன் நரகத்திற்கு சென்றான் என்று முடிந்தால் தான் மனித மனங்கள் அமைதி பெறும். ஆனால், உண்மை அது அல்ல. உண்மை என்னவெனில்…………………………………………….. சரி விடுங்கள். உண்மை எக்கேடு கெட்டால் என்ன. ஒரு சினிமா விமர்சனத்துக்கு ‘உண்மை’ ரொம்ப ஓவர்.
காளி, கல்யாணியைக் கொல்லும் கார்த்திக் தப்பிவிடுவதாக போய்விடுகிறது அல்லவா? பழி, பாவம் என்கிற கற்பிதங்கள் மனிதர்களுக்கு தேவை அல்லவா? செய்த பாவத்துக்கு தண்டனை நிச்சயம் என்பது நிஜத்தில் இல்லையென்பதால், படத்திலாவது காட்ட வேண்டியிருக்கிறது. அதுதான் முன் ஜென்ம நினைவுகள், தவறு செய்தவனை காட்டிக்கொடுப்பதாக திரைப்படம் நீள்கிறது.
பர்மாவில் கப்பலில் தப்பிக்க முயலும் காட்சியில், தனுஷை ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணே தனுஷை காட்டிக்கொடுக்கிறார். இது ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதாகவே நான் நினைக்கிறேன்.
நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று நம்பி நம்பி, நல்லதே செய்தால் கெட்டது நடக்கும். ‘கடவுள் நல்லவங்களை சோதிப்பார், ஆனா கைவிடமாட்டார்’ என்றெண்ணி தொடர்ந்து நல்லதே செய்தால், மீண்டும் கெட்டதே நடந்து உச்சகட்டமாக நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிடும். இப்படிப்பட்ட சூழ் நிலையில், நல்லது, நியாயம், தர்மம், சரி, புண்ணியம் சுவர்க்கம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இழந்த மனம் இறுதியில் விரக்தியுற்றுவிடுகிறது. அத்தனை வருடமும் தொடர்ந்து நல்லவற்றின் மீது நம்பிக்கை வைத்து இயங்கிய மனம், விரக்தியுற்ற இறுதிக்கட்டத்தில் நல்லது என்பதின் மீது நம்பிக்கை இழந்து போய்விடுகையில், வெறுப்புற்று தீயது என்று சொல்லப்படுவதின் மீது கட்டற்று பாய்கிறது.
அந்த பெண் அழகாக இருக்கிறார். தனுஷை காதலிக்கிறார். எந்த ஆணும் விரும்பும் வண்ணம், பெண்ணுக்குள்ளான ஆணை வெளிப்படுத்துவதை வசனங்கள் நிரூபிக்கின்றன. ஆனாலும் தனுஷுக்கு அவர் மேல் காதல் வரவில்லை. அந்த பெண்ணின் தரப்பில், மேற்சொன்ன நியாயங்கள் இருந்திருக்கலாமே? நல்லது என்பது மீது நம்பிக்கை இழந்து, தீயதை சுவீகரித்த பெண்ணாக அந்த காட்சியில் அவளைக் காண நேரும் எல்லோருமே அவளை தீயவள், வில்லி என்றெல்லாம் விமர்சிக்கலாம்.
ஆனால், ஒரு மனிதன் அத்தனை வருட காலம் நல்லதின் மீது நம்பிக்கை வைத்ததற்கு என்ன பொருள்? இந்தப் பெண் தனுஷை காட்டிக்கொடுக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். என்னாகியிருக்கும். அடுத்த கட்டமாக அவளின் ‘ நல்ல தன்மை’க்கு மேலும் பல சோதனைகள் வந்திருக்கும். அந்த சோதனைகளில் பிரிதாரோ ஒருவரின் தவறுக்கு அவள் பலிகடா ஆனதில் அவள் வில்லியாகிவிடலாம். அவள் வில்லியாகும் அந்த ஷணத்தில், அவள் தனுஷை காட்டிக்கொடுக்காமல் செய்த நல்லது ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆக, இது எதைச் சொல்கிறது என்றால், நல்லது என்பதன்ஆயுள், அந்த நல்லது நடக்கும் ஷணம் மட்டுமே என்பதைத்தான்
நல்லது செய்பவருக்கு சமூகத்தில் ஒரு அடையாளம் வேண்டும். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல் ஒரு துப்புறவு தொழிலாளியை கட்டிப்பிடித்து பாராட்டுவார். நல்லது செய்பவர்களுக்கு ஒரு சமூகம் அதையாவது செய்ய வேண்டும். ஆதலால், நாளை உங்களைச் சுற்றி யாரேனும் ஏதேனும் நல்லது செய்தால் உடனே ஓடிச்சென்று பாராட்டிவிடுங்கள். ஏனெனில், அந்த நல்லதின் ஆயுள் அந்த ஷணம் மட்டுமே என்பது மட்டுமல்ல. அந்த நல்லது நடக்கும் அந்த ஷணத்தில் சுற்றி இருக்க வாய்ப்பு கிடைத்த மிகச் சிலருள் நீங்களும் ஒருவர் என்பதால் உங்களுக்கு கூடுதல் பொறுப்பும் இருக்கிறது என்பதுவும் தான். அது ‘ நல்லது, சரி, நியாயம், தர்மம்’ போன்றவைகள் இந்த பூவுலகில் நீடித்து இருக்கவும், பல்கிப் பெறுகவும் வழி செய்யும் என்று நான் நம்புகிறேன்.
“ஐந்நூறு கோடி ரூபாய் சொத்து இருக்குன்னா, ஏண்டா அம்பதாயிரத்துக்கு வேலைக்கு அனுப்புறீங்க?”
எழுத்தாளர்கள் சுபாவின் வசனமாகத்தான் இருக்க வேண்டும். I am glad that atleast these writers touched a corner of the right nerve.
இன்று பல ஐடி கம்பெனிகளில், பெரும் பணக்காரர்களின் வாரிசுகள் வேலைக்கு சேர்கிறார்கள். (சாதித்துவிட்டார்களாம்!) ஃப்ரஷராக முதல் நாளே ஸ்விஃப்ட் காரில் வருகிறார்கள். (வேலை வாங்கியதற்காய் அப்பாவின் பரிசாம்).
1. நடுத்தர குடும்பத்தில் படித்து பொறியியல் படிப்பை வங்கிக் கடனில் படித்த பலர் பொருளாதார தேவைகளுக்காய் வேலை தேடி திரிகிறார்கள். கம்பெனியில் காலியிடங்கள் இல்லை. (உடனே நவீனத்துக்கு பிறகான ஒருவர் எழுந்து, ‘ஏன் பணக்கார வீட்டுப்பையன் மாச சம்பளத்துல தன்னோட வாழ்க்கையை துவங்குற எளிமையானவனா இருக்கக் கூடாதா?’ என்பார்) நடுத்தர குடும்பத்து பிள்ளைகள் எட்டிப்பிடிக்கும் அதே ஏணியை, பணக்கார வீட்டுப்பையனும் எட்டிப்பிடித்தால் இரண்டும் எதைக் காட்டுகிறது?)
2. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பா, அம்மா, மூத்த பெண், இளைய பெண் என எல்லாரும் ஆளுக்கொரு வேலையில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் மாதம் ஒன்றுக்கு 3 லட்சம் சம்பாதிக்கிற பணத்தில் தான், நகரின் பெரிய கேளிக்கை மையங்களின் மெம்பர்ஷிப்புக்கே ஐந்து லட்சம் கட்டுகிறார்கள். ஆனால், டிகிரி படித்துவிட்டு வேலை கிடைக்காமல் தங்கை, அக்காள்களின் திருமணத்திற்காய் வேலைக்கு முயலும் நடுத்தர குடும்பத்து ஆண்களும் ,பெண்களும் ஏராளமாய் இருக்கிறார்கள், இந்தியாவில்.
இவர்களானால் ஐம்பதாயிரத்துக்கு மொபைல் வாங்குகிறார்கள். “லிவிங் டுகெதராக இருந்தால் என்ன? எனக்கு வீட்டிலிருக்கவே பிடிக்காது. சுற்றுலா போய்க்கொண்டே இருந்தால் என்ன?” என்று கேள்வி கேட்கிறார்கள். பொருளாதார சுதந்திரம் தேவைக்கதிமாக இருந்தால், அடுத்தவருக்கு வழிவிட்டு விலகி நிற்கலாமே? தேவைப்படும் யாருக்கேனும் அந்த வேலை கிடைக்கலாம். அந்த பொருளாதார சுதந்திரத்தைக் கொண்டு ‘உருப்படியாக உண்மையிலேயே ஏதேனும் சாதனைகள்’ செய்யலாமே? அதை விட்டுவிட்டு, நடுத்தர வர்க்கத்து பையன்களின் சாதனையை செய்துவிட்டு, காலரை உயர்த்திக்கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?
எப்படியும் ஐந்நூறு கோடி சொத்து இருக்கிறது. மண்டை நிறைய மூளை இருக்கிறது. அம்பதாயிரத்துக்கு மொபைல் வாங்கும் ரசனை இருக்கிறது. இந்த பின்புலன்களை வைத்துக்கொண்டு வீட்டு வாடகை கொடுக்க இயலாதவன் ஏன் இலக்கியம் வளர்க்க வேண்டும்? அந்த வேலையை பணக்காரன் செய்யட்டுமே. அதற்கு தேவையான ஆராய்ச்சிகளில், ஊர் சுற்றிக்கொண்டே இருக்க விரும்பும் பணக்கார வர்க்கம் ஈடுபடலாமே? ஊர் சுற்றினா மாதிரியும் ஆயிற்று. மூளைக்கு வேலை கொடுத்த மாதிரியும் ஆயிற்று.
அதைச் செய்ய மாட்டார்கள். உண்மை தங்களுக்கு மட்டுமே தெரியவேண்டும். அதை வைத்து தொடர்ந்து பணக்காரனாகவே, அடுத்தவனை ஏய்த்து வேலை வாங்கி வாழவேண்டும். இந்த லட்சணத்தில் ப்ரொஃபைலில் ‘ஹார்டு வொர்கிங்’ என்று வேறு போட்டுக்கொள்வார்கள்.
உண்மையை கண்டுபிடிக்க வேண்டிய மூளையை பணக்கார வீட்டுப்பையன் ஐடி நிறுவனத்தில் வீணடிப்பானேன். அதற்குத்தான் நடுத்தர குடும்பத்து பையன்களுக்கு தேவைகள் இருக்கிறதே. உண்மையை கண்டுபிடிக்க வேண்டிய வேலையை பணக்கார வீட்டுப்பையன் செய்யட்டுமே. இருக்கும் கொள்ளை பணத்தில் தாராளமாக உண்மைகளை கண்டுபிடிக்கலாமே.
நம்மூர்க்காரர்களுக்கு சிந்தனை வேறு மாதிரி தான் செல்லும். ஐந்நூறு கோடி சொத்துள்ள பெண் ஐடி நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு சேரிப்பையன் மீது மெர்சலாவார். அந்த சேரிப்பையன் தங்கை அக்காள் எதிர்காலத்தை காற்றில் விட்டுவிட்டு, காதலுக்காக அடியாள்களுடன் அடிவாங்கி சாவார். கடைசியில் செத்துப்போன ஹீரோவின் வயசான அப்பா, மகள்களின் வாழ்க்கைக்காக கடின உழைப்பை மேற்கொள்வதை காட்டுவதற்குள் அவசரமாக திரையை இறக்கி படத்தை முடித்து தி என்ட் என்று போட்டுவிடுவார்கள். தியேட்டர் மொத்தமும் புழிய புழிய அழுது ‘தமிழ் கலாச்சாரத்தை’ காப்பாற்றிவிட்டு வீட்டுக்கு போவார்கள்.
இதையெல்லாம் பார்த்தால், தமிழ் கலாச்சாரத்தின் மீதே வெறுப்பு வருகிறது.
கார்த்திக் ரீஎன்ட்ரீ. தனது வழமையில் நடித்திருக்கிறார்.
ஐடி கம்பெனியில் வேலை செய்பவர்கள் மேல் ஏற்கனவே பற்பல விதங்களில் சேற்றை வாரி இரைத்தாகிவிட்டது. இப்போது புதிதாக வீடியோ கேம், அதைச் செய்ய, மாத்திரைகள் என்று மேலும் மேலும் சேறு. “ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணா?! வேண்டாம். ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பையனுக்கு பெண் தர மாட்டேன்” என்றெல்லாம் குரல்கள் பரவலாக கேட்கின்றன. யார் இதை சாத்தியப்பட வைக்க நினைத்தார்களோ, அவர்கள் காலத்தின் போக்கில் வென்றுவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
ஐடி கம்பெனி வேலையை பொருளாதார தேவைகளுக்கென மட்டும் என்று நிறுத்திக்கொண்டு, அதை வைத்து சமூகத்துக்கு நல்லது செய்யும் ஏகப்பட்ட பேர்கள் இதே ஐடி கம்பெனிகளுக்குள்ளும் இருக்கிறார்கள் தாம். உண்மை என்பது……………………………………………… சரி விடுங்கள். யார் யாரோ சொல்லியே கேட்கவில்லை. நான் சொல்லியா கேட்டுவிடப்போகிறீர்கள்…
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
- பண்பாட்டு நோக்கில் பாதாதி கேசம், கேசாதி பாதம் ஆகிய சிற்றிலக்கியங்களின் வளர்ச்சி
- பராமரிப்பின்றி காணப்படும் மன்னர் கால தேர்கள்-அழியும் தமிழனின் சிற்பக்கலை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் முதன்முறை மூன்று சூரியன்கள் தோன்றும் அற்புதக் காட்சிப் படமெடுப்பு
- அனேகன் – திரைப்பட விமர்சனம்
- உதிராதபூக்கள் – அத்தியாயம் 2
- காதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வா
- ஆம் ஆத்மி கெஜ்ரிவால்
- என்னை அறிந்தால் – திரைப்பட விமர்சனம்
- ஆத்ம கீதங்கள் –16 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! என் ஆன்மாவின் முறிவு
- Caught in the crossfire – Publication
- நேரம்
- தொடுவானம் 55. உறவும் பிரிவும்
- மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தை -ஆத்மதாகம்- இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்
- வைரமணிக் கதைகள் – 3 அப்போது கூட இந்தக் கதவு மூடியிருக்கலாம்…
- மிதிலாவிலாஸ்-2
- உங்களின் ஒருநாள்….
- வலி மிகுந்த ஓர் இரவு
- இலக்கிய வட்ட உரைகள்: 14 நாற்றுகள் தொட்டிச் செடிகள் குரோட்டன்கள்
- மரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்
- சமூக வரைபடம்
- “ கவிதைத் திருவிழா “-
- ஓர் எழுத்தாளனின் வாசலில்… “யதார்த்தமாய்….பதார்த்தமாய்…”
- இலக்கியப்பார்வையில் திருநங்கைள்