உதிராதபூக்கள் – அத்தியாயம் 2

author
0 minutes, 26 seconds Read
This entry is part 5 of 23 in the series 15 பெப்ருவரி 2015

இலக்கியா தேன்மொழி

முரளியும் , சிந்துஜாவும் கிழக்கு கடற்கரைச்சாலையில் அந்த கடற்கரையோர ரிசார்டில் சந்தித்தபோது, மணி மதியம் 12 ஆகிவிட்டிருந்தது.

‘இப்போ என்ன ப்ளான்?’ என்றாள் சிந்து.

‘வந்தாச்சு.. மணி 12. பசிக்கிது சிந்து.. சாப்டுடலாம்’ என்றான் முரளி.

இருவரும் கடலை பார்த்த திக்கில், அமர்ந்தார்கள். கடலின் அலைகள் அவர்களை விழுங்குவது போல் பொங்கி வருவதும், பின்வாங்குவதுமாக இருந்தது. உச்சத்து சூரியனின் உக்கிரத்தில் கடல் அலைகள், வெள்ளி பாத்திரங்கள் போல் மின்னின.

இருவரும் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தார்கள்.

‘நேத்து ஃபேஸ்புக்ல போட்டிருந்தியே உன் ஃபோட்டோ…அது செம சூப்பர் சிந்து.. செம்ம அழகா இருந்த நீ’ என்றான் முரளி.

‘நானா! ஃபோட்டோவா! இல்லையே..  நீ வேற யாரோடதோ பாத்துட்டு சொல்றன்னு நினைக்கிறேன் முரளி’

‘ச்சே.. நீயே தான்.. என்ன சிந்து..டெய்லி உன்னை சைட் அடிக்கிறேன்..எனக்கு தெரியாதா?’

‘டேய்.. ஃபோட்டோ போடலைடா.. ஒரு ரோஜாப்பூ தான் போட்……..’ என்று இழுத்த சிந்து கொஞ்சமாய் கண்களை சுருக்கிவிட்டு,

‘டாய்… கேடிப்பயலே’ என்று முரளியை அடிக்கப் பாய்ந்தாள்.

முரளி சிரித்தான்.

‘என் ரூம்க்கு போறவழியில ஒரு வீட்டுல பூத்திருந்தது அந்த ரோஜா.. நல்லா இருந்திச்சுன்னு ஃபோட்டோ எடுத்து போட்டேன்’

‘நீ செல்லும் வழியில் பூக்கும் பூக்கள் கூட உன் சாயலில்’

‘அடடா!! கவிதை கவிதை..’

‘அட விடும்மா, அது க்ளிஷே ஆகிப்போச்சு’ என்று முரளி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, சர்வர் சிக்கன் பிரியாணியும், வஞ்சிரமீனும் கொண்டு வந்து வைத்து பரிமாறினார்.

‘முரளி, இதை எங்க சுட்ட?’

‘இதுன்னு இல்லை. எல்லா சிக்கனையும் அடுப்புலதான் சுடுவாங்க‌.. ‘

‘ஹைய ஜோக்கு!..  கவிதை மாதிரி ஏதோ சொன்னியே அதை எங்க சுட்டன்னு கேட்டேன்’

‘ஓ…அதுவா, ஒரு ப்ளாக்ல’

‘அதானே பாத்தேன்’

‘ஏன்?’

‘சொந்தமாத்தான் எழுதிட்டியோன்னு’

‘அட!.. சொந்தமா எழுதினாதானா? ‘

‘ஆமா! கவிதைன்னா சும்மாவா? எல்லாருக்கும் எழுத வந்துடுதா என்ன? அதெல்லாம் தனி ஸ்கில்.. அவ்ளோ லேசுல எல்லாருக்கும்லாம் வந்துடாது முரளி’

‘அட சும்மாயிரு.. சிந்து.. கவிதையே பொய்தான்…’

‘ஓஹோ.. அப்போ நீ சொன்னது பொய்யா?’

‘இல்லையா பின்ன? நீ செல்லும் வழியில் மட்டுமல்ல… பூமியில் பூக்கும் அத்தனை பூக்களிலும் கூட உன் சாயல்தான்’

‘கொல்றியே.. என்னை இங்கயே கவுத்துடுவ போல?’

சிந்துஜா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, கினிகினியென்று செல்போன் மணி அடிக்க, முரளி எடுத்து ஹலோ என்றான். அந்தப் புறத்தில் பெண்ணின் குரல் கேட்டதும் சிந்துவுக்கு சுருக்கென்றது.

தொடர்ந்து முரளி பேசிக்கொண்டே இருக்கையை விட்டு எழுந்து தள்ளிச்சென்றான். சிந்து சிக்கனை ருசித்துக்கொண்டே முரளியை அவதானிக்கத்துவங்கினாள்.

சிக்கனும், மீனும் ஸ்வாஹா ஆகும் வரை முரளி கடற்கரை மணலில் ஒரே இடத்தில் நின்றுகொண்டு, கடலை பார்த்தபடி பேசிக்கொண்டே இருந்துவிட்டு திரும்பி வந்து உட்கார்ந்தான்.

‘சாரி’ என்றான்.

‘எடுத்து குடுத்தா போட்டுக்குவேன்’ என்றாள் சிந்து உதட்டுச்சுழிப்புடன்.

‘ஹேய்… ‘ என்றுவிட்டு பிரியாணியில் கைவைக்க முரளியின் மொபைலில் ஒரு  குறுஞ்செய்தி வந்து விழுந்தது. முரளி ஒரு கையால் சாப்பிட்டுகொண்டே இடது கையால் மொபைலை துழாவினான். சிந்து முரளியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘அப்புறம் சொல்லு சிந்து… எப்போ உனக்கு ப்ராஜெக்ட்ல ரிலீஸ் சொல்லியிருக்காங்க’

‘எங்கடா சொல்றான் அந்த மேனேஜரு.. நல்லா வழியிறான்.. வேற ஒண்ணும் பண்ண மாட்டேங்குறான். நானும் எத்தனை தடவை தான் கேக்குறது… போன தடவை ஒன் டு ஒன்ல சொல்லிட்டேன்.. கத்துக்க வேண்டியதெல்லாம் கத்துக்கிட்டாச்சு.. இனிமே கத்துக்க ஒண்ணும் இல்லை.. ஸ்ப்ரிங் கத்துக்குறது எனக்கு க்ரோத்.. ஒரு மாசம் தான்..அதுக்குமேல என்கிட்ட ப்ராடக்ட்டிவிட்டு எதிர்பார்க்காதீங்கன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டேன்.. ஒரே மாசம் தான் நீ வேணா பாரேன்’

மொபைலை நோண்டியபடியே, இருந்த முரளி சொன்ன ‘ம்ம்… ம்ம்’ அபஸ்வரமாக வந்து விழுந்ததை குறித்துக்கொண்டபடியே துப்பட்டாவின் முனையில் முடிச்சு போட்டு அவிழ்த்துக்கொண்டிருந்தாள் சிந்து.

முரளி,

‘ஹ்ம்ம்… விடு.. இந்த கம்பெனியே இப்படித்தான்.. எப்படியோ ப்ராஜெக்ட்ல உனக்கு ப்ரமோஷன் தந்தா சரிதான்’  என்றபோது, சட்டென சிந்துவின் துப்பட்டா முடிச்சு, சரியாக மூன்று நொடிகளுக்கு நின்று பின் தொடர்ந்தது.

‘ஆமாமா, ப்ராஜெக்டல கிடைச்சாலே போதும்தான்’ என்றாள் சிந்து, இமைக்காமல் முரளியைப் பார்த்தபடியே.

மொபைலில் இருந்து தலையை தூக்கி முரளி இப்போது சிந்துவைப் பார்த்து சினேகமாய் சிரிக்க, பதிலுக்கு சிந்து சிரித்ததில் இருந்த வெறுமை சட்டென உறுத்தியது முரளிக்கு.

தட்டுகள் காலியாகிவிட, எழுந்து கைகழுவிவிட்டு, பில் செட்டில் செய்து விட்டு, கடற்கரை மணலை நோக்கி முரளி நடக்க எத்தனிக்க, சிந்து ,

‘முரளி, நான் கெளம்பறேன்’ என்றாள்.

‘கெளம்புறியா.. என்ன சிந்து இப்போதானே சாப்டோம்.. கொஞ்ச நேரம் பேசலாமே’ என்றான் முரளி.

‘பேசின வரை போதும் முரளி. எனக்கு போகணும்’ என்றாள் சிந்து கராறாக.

‘என்ன சிந்து இப்படி பேசுற.. என்னாச்சு.. பேசணும்னு தானே வந்தோம்?’

‘ஆமாமா, ஆனா நான் என்ன பேசுறேன்னு கூட நீ கவனிக்கலையே’ என்று சிந்து வெடுக்கென்று சொன்ன‌போது முரளி சற்று திடுக்கிட்டுத்தான் போனான்.

‘எ… என்ன சொல்ற சிந்து.. எப்போ?’ நாக்கு குழறியது முரளிக்கு.

‘ஓஹோ ..எப்போன்னு கூட தெரியலை.. தப்பு என்னோடதுதான் முரளி.. நான் என்ன பேசுறேன்னு கூட நீ கவனிக்கலை.. ஒரு நாளைக்கு பத்து பேர் என் பின்னாடி சுத்துறானுங்க.. ஆனா எனக்கு உன் உழைப்பு புடிச்சிருந்தது..  நீ பேசுற அடாமிக் பிஸிக்ஸ் பிடிச்சிருந்தது.. அதை புரிஞ்சிக்க நீ எவ்ளோ  படிச்சிருக்கணும்? எத்தனை புக்ஸ ரெஃபர் பண்ணியிருக்கனும்..  இன்னிக்கு கிடைக்கிற நேரத்தை என் பின்னாடி சுத்துற பசங்க, இதே மாதிரி வேற பொண்ணு பின்னாடியும் சுத்தியிருக்கலாம்ன்னு யோசிக்காத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. கிட்ட போனா, உன்னையே தான் நினைச்சுட்டு இருந்தேன்னு சொல்வானுங்க. நம்பித்தொலைக்கணும். வேற வழியில்லை.. உன்னை மாதிரி பசங்க பேசுற அடாமிக் பிஸிக்ஸே, உனக்கு கிடைக்கிற நேரத்துல நீ என்ன பண்றன்னு சொல்லுது. கண்ணு முன்னாடி நேரத்தை உபயோகமா அறிவுப்பூர்வமா செலவு பண்ணினதுக்கு கணக்கு காமிச்சிட்டு கூப்ட பாத்தியா, அது புடிச்சிருந்தது. அதுனால நீ கூப்பிட்டதும் விருப்பப்பட்டு வந்தேன்.. ஆனா, உன்னை நம்பி வந்தவ நான் என்ன பேசுறேன்னு கூட நீ கவனிக்கலை. யாரோடவோ பேசிட்டிருந்துட்டு வர.. ஏன் முரளி? அதிகமா படிச்சிட்ட திமிறா? என்னை மாதிரி நிறைய பொண்ணுங்க பின்னாடி வர திமிறா? இல்லை, நீ கேட்டதும் ஓகே சொல்லி வந்துட்டேனேன்னு சீப்பா நினைக்கிறியா? உன் உழைப்பை மதிச்சு வரவங்களை புரிஞ்சிக்கோ முரளி. அதை உதாசீனப்படுத்துறது நல்லா இல்லை’ படபடவென்று பேசினாள் சிந்து.

‘ஓ காட்.. சிந்து.. அம் சாரி.. உண்மையாவே சாரி… நா…’

‘ஒண்ணும் வேணாம் முரளி..  உன்னை மாதிரி பசங்கலாம் இப்படி பண்ணுறதுனாலதானோ என்னமோ பொண்ணுங்க பின்னால சுத்துற பசங்களா பாத்து செட்டில் ஆயிடறாங்க.. பரவாயில்லை முரளி.. உலகத்துல நீ மட்டும் தான் படிச்சிருக்கேன்னு இல்லை.. எத்தனையோ ஆம்பளைங்க இருக்காங்க‌.. எனிவே முரளி, நான் கிளம்பறேன்.. நாளைக்கு ஆபீஸ்ல பாக்கலாம்’ என்றுவிட்டு முரளியின் பதிலுக்கு காத்திராமல் நடந்தாள் சிந்து.

பொங்கி வந்து பின் தங்கும் அலைகளுக்கு நடுவே, முரளி தனியனாய் நின்று சிந்துவையே பாத்துக்கொண்டிருந்தான்.

– இலக்கியா தேன்மொழி
ilakya.thenmozhi@gmail.com

Series Navigationஅனேகன் – திரைப்பட விமர்சனம்காதலர் நாள்தன்னை வாழ்த்துவோம் வா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *