என்னை அறிந்தால் – திரைப்பட விமர்சனம்

This entry is part 8 of 23 in the series 15 பெப்ருவரி 2015

yennaiபடத்தின் துவக்க காட்சியே, தூள்!

இன்டிகோ விமானத்தில் ஒரு வட இந்திய பெண்ணிடம் சில்மிஷம் செய்து மாட்டிய வயதான தொழிலதிபர் பற்றி நீங்கள் யூட்யூபில் தேடினால் கிடைக்கலாம். படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த குடும்பங்களிலெல்லாம் ஏகப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் எல்லாம் எங்கே? சரிக்கும் தவறுக்கும் இடையே நூல் இடைவெளி தான் என்கிறார் கவுதம். சரிக்கும் தவறுக்கும் இடையே வசீகரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் போல.

தேன்மொழியை பெண் பார்க்க வரும் காட்சி தீவிரமாக யோசிக்க வைக்கிறது. பெண்ணை பாடச்சொல்வது போல, மணமகனை ஏதும் கேட்கவில்லை. அப்படியானால் மணமகனுக்கு தரம் என்ற ஒன்று திருமணத்தில் தேவையில்லையா? பெண்ணுக்கு மட்டும் தான் இருக்க வேண்டுமா?

பெண் பார்க்கும் படலத்தில் வேறு எதைத்தான் பார்க்கவேண்டும் என்பதற்கு எந்த காட்சியும் இல்லை. அப்படியானால் என்ன சொல்ல வருகிறார்கள்? எதையும் பார்க்காதே என்றா? வேறு எதைத்தான் பார்க்கலாம்? கல்வியையா? ஐடி கம்பெனி தரும் பொறுப்புக்களையா? ஐந்தேமுக்கால் அடி உயரத்தையா? இது அத்தனையும் பார்த்து ஒரு மருமகளை கொண்டுவந்தால், அந்த பெண், ஒரே வாரத்தில் ஓரினச்சேர்க்கை பின்னணி எல்லாம் வைத்துக்கொண்டு, நள்ளிரவில் புருஷனுக்கு தெரியாமல் கண்டவனுக்கும் வாட்ஸாப்பில் மெஸேஜ் அனுப்பி கையும் களவுமாக பிடிபட்டு, விவாகரத்தில் போய் நிற்கிறதே.

இது போன்று எதையும் கேட்காமல் எதையும் பார்க்காமல், திருமணங்கள் செய்து, மோசமான துணை அமைந்துவிடுவதால் தான் மறுவாழ்வு என்பதே இப்போதெல்லாம் வாழ்வாக இருக்கிறது. பதின்ம வயதிலேயே காதல்கள் துவங்கிவிடுகிறது. ஆணோ, பெண்ணோ திருமண வயதை எட்டுகையில், பெரும்பாலும் ஏற்கனவே சில காதல்களை கடந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆகையால் ‘மணமானவர், மணமாகாதவர்’ என்கிற பாகுபாட்டிற்கே இப்போது அர்த்தமில்லை. ஏனெனில், மணமானவராக இருந்தாலும், மணமாகாதவராக இருந்தாலும், இருவருக்குமே கடந்த காலங்களில் காதல்களும் , உறவுகளும் இருக்கின்றன தாம். திருமணம் என்பது, ஊர் கூட்டி சொல்வது மட்டுமே என்றாகிவிட்டது..

ஆக, ‘எனக்கு மணமாகவில்லை.. எனக்கு மணமாகாதவர் தான் வேண்டும்’ என்கிற எதிர்பார்ப்புகளெல்லாம் இன்றைய தேதியில் நல்ல வரன்களை இழப்பதன் அறிகுறியே. ஏனெனில் விவாகரத்து என்ற ஒன்று நேர்வதே, இருவரில் யாரோ ஒருவர் நல்லவர் என்பதால் தான். நல்லவராக இருக்கப்போய்த்தான், ‘ஒத்துவராத’ ஒன்றை, விட்டு பிரிய முற்படுகிறார். இருவருமே கெட்டவர் என்றால், இரண்டு பக்கமும் சமமாகிவிடும். இருவரும் நல்லவர் என்றால், விவாகரத்து என்கிற பேச்சுக்க்கே இடமில்லை. புரிகிறதா?

ஆதலால், சத்யா, ஹேமானிகா காதல் , இந்த வகையில் அர்த்தமுள்ளதாகிறது. இந்த காதல் பிடித்திருக்கிறது.

இதுபோன்ற காதல்கள் பல்கிப் பெருக வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஏனெனில், தோல்வி அடையாத திருமணங்களை அருகாமையில் சென்று பார்த்தால், புரியும். அந்த தம்பதிகளில் முக்காலே மூணுவீசம் சூழ் நிலைக்கைதிகளாகவே இருப்பார்கள். பிரிய காரணங்கள் இல்லை என்பது போல், ஒருமித்து, காதல் செய்யவும் காரணங்கள் இருக்காது. ‘இப்படித்தான் எல்லோரும் வாழ்கிறார்கள். நாமும் வாழ்கிறோம்’ என்கிற ரீதியிலேயே அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பது விளங்கும். வெளித்தோற்றத்துக்கு, தாங்கள் சந்தோஷமாக வாழ்வதாக அவர்கள் காட்டிக்கொள்ளலாம். அது நடிப்பு என்பது அருகாமையில் சென்று பார்ப்பவர்களுக்கு நன்கு விளங்கும். இவர்களுக்கு ‘வாழ்க்கை என்பதன் அர்த்தமும்’ தெரிந்திருக்காது. மிகவும் அல்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டுக்கொள்வார்கள். பேச விட்டுப்பார்த்தால், எவ்வித புரிதலும் இல்லாமல், எவ்வித ஒன்றுதலும் இல்லாமல், மேலோட்டமாகவே வாழ்க்கையை வாழ்வது நன்கு விளங்கும். மிக மிக முக்கியமாக, இவர்களுக்கு திருமணத்தில் அமையும் துணையின் மீது எவ்வித முக்கியத்துவமும் இருப்பதில்லை. மாறாக, பள்ளிக்கூட மாணவன், ஆசிரியரை அணுகுவது போலவே துணையை அணுகுகிறார்கள். ஆசிரியர் முன்னால் பவ்யமான மாணாக்கன் போல, துணையின் முன்னால், அடக்கமான ஒழுக்கமான துணையாக காட்டிக்கொள்வதற்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கிறார்கள். ஆசிரியர் அந்தப்பக்கம் போய்விட்டால், கெட்ட வார்த்தையில் ஆசிரியரை திட்டுவது போல, நிஜ முகத்தை துணையின் முதுகின் பின்னால் தான் காட்டுகிறார்கள். தன் விஷயங்களை துணையிடமிருந்து எப்படியெல்லாம் மறைக்கலாம் என்று யோசிப்பதிலேயே பெரும்பான்மை நேரத்தை செலவிடுபவர்களாக இருக்கிறார்கள். யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற கேள்வியிலேயே வாழ்க்கை முழுவதையும் ஓட்டுகிறார்கள். அல்லது யார் அடக்குவது, யார் அடங்குவது என்ற கேள்வியே இவர்களது வாழ்க்கையை வழி நடத்துகிறது.

ஆனால், விவாகரத்து போன்ற கசப்பான அனுபவங்கள் தாண்டிய காதல்களில் அப்படி இல்லை. நாம் மலை போல நம்பும் நிறம், கல்வித்தகுதி, ஸ்டேடஸ், வருமானம், வாழ்க்கைத்தரம், பொருண்மை உலகின் செளகர்யங்கள் என்பன போன்ற எல்லா போலித்தனங்களையும் கடந்த காலத்தின் கசப்பான நிகழ்வுகள், அடித்து நொறுக்கி ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்றன. அதன் பிறகு வரும் காதலில், இரு மனங்கள் மட்டுமே பங்குபெறுகின்றன. வாழ்க்கை என்பதன் முழு அர்த்தமும், இந்தக் காதல்களில் தான் முழுமையாக உணரப்படுகிறது. எது தேவை, எது தேவையில்லை என்கிற தெளிவு இந்த காலகட்டத்தில் தான் கிடைக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து ரசித்து வாழும் முதிர்ச்சியை இந்த கசப்பான அனுபவங்களே தருகின்றன. வாழ்க்கையை அதிகமாக அனுபவித்து வாழ்தல், நேர்த்தியாக வாழ்தல், போலித்தனங்கள் இன்றி வாழ்தல், உண்மையாக வாழ்தல் என்பன போன்ற எல்லா தன்மைகள் கசப்பான அணுபவங்கள் ஏதும் இல்லாமல், வாழ்க்கையை வாழ்பவர்களைவிட, கசப்பான அனுபவங்களுக்கு பிறகான வாழ்க்கையை வாழ்பவர்களிடமே மேலதிகமாக இருக்கிறது. அதுவே அவர்களை வெற்றியாளர்களாக மாற்றுகிறது என்றே நான் நினைக்கிறேன்.

இக்காலகட்டத்திற்கு பொறுத்தமானது சத்யா ஹேமானிகா காதலே என்று நான் நம்புகிறேன். இதை சொல்லும் வகையில், கவுதமின் ‘என்னை அறிந்தால்’ படத்தை, சத்யா – ஹேமானிகா காதல் பகுதிக்காக‌ வெகுவாக ரசிக்கிறேன்.

மருத்துவமனைகளில் உடல் பாகங்களுக்கென டோனார்கள் இருப்பார்கள். அவர்களுக்கென ப்ரோக்கர்கள் இருப்பார்கள் அவர்களின் பின்னே இயங்கும் நிழல் உலகம் குறித்து படம்.
ஆஷிஷ் வித்யார்த்தியின் குரலே நன்றாகத்தான் இருக்கும். அதற்கு டப்பிங் கொடுத்திருக்கிறார்கள். சத்யா வில்லனை அவனது அறையில் சாப்பிடும்போது சந்திப்பது, செல்வராகவனின் புதுப்பேட்டையை நினைவூட்டுகிறது.

பொதுவாக, பணத்தை மையப்படுத்தும் பல சமூக சிக்கல்களுக்கும், அவலங்களுக்கும் முதலாளித்துவமே முதுகெலும்பாக இருக்கும். இந்தக் கதையை வித்தியாசப்படுத்தி டிமாண்ட் – சப்ளை, தேவைக்கேற்பவே இத்தொழில் நடக்கிறது என்று சொல்ல முடியாது. பணமில்லாதவர்கள் வைத்தியச்செலவுகள் செய்யத்திணறி மாண்டு போகிறார்கள். பணம் இருப்பவர்கள் தான் இதை செய்கிறார்கள். அவர்களின் ஏவளுக்குத்தான் விக்டர் , கோல்டன் ராஜ் போன்றவர்களும், டாக்டருக்கு படித்தவர்களும்.

சட்டத்துக்கு புற‌ம்பாக மருத்துவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று தனியாக ஒரு டாகுமென்டரியே போடலாம் போலிருக்கிறது. தேவேந்திரன் – சௌம்யா தம்பதியர் கேஸில் குற்றம் சாட்டப்படும் அந்த பழனி மருத்துவமனை பற்றி வாசகர்களுக்கே இப்போது விழிப்புணர்வு இருக்கும். நான் வேலை பார்த்த கம்பெனியில் என்னுடைய டீமில் ஒரு பையன் இருந்தான். வயது 23 தான். ஆனால் தலை வழுக்கை. முப்பதாயிரத்திற்கு மருத்துவம் பார்த்து கொஞ்சமாய் முடி முளைத்தது. ரீ இம்பர்ஸ் செய்ய பில் குடுடா என்றேன். பில் எல்லாம் இல்லை என்றான்.

என்னுடைய அறையில் தங்கியிருந்த நண்பனுக்கு இரவானால், வயிற்றுவலியும், வாந்தியும் வந்து படாதபாடு பட்டான். நிறைய சிக்கன் சாப்பிடுவான். அப்போல்லோ போயிருக்கிறான். அவன் சந்தித்த டாக்டர், (பெயர் வேண்டாம்), டாக்டர் விகடனில் கட்டுரையெல்லாம் எழுதியிருக்கிறார். இவன் போனதும் ஸ்கான் எடுக்க சொல்லியிருக்கிறார். எடுத்ததில், பித்தப்பையில் கல் இருப்பது தெரிந்தது. டாக்டர் ரொம்ப ரொம்ப அக்கறையாக உணவை உடல் ஜீரணிக்கும் முறையை முழுமையாக எடுத்துரைத்துவிட்டு, ‘பித்தப்பை எதற்கும் உதவாது. மனிதனுக்கு அதிகப்படியாக இருக்கிறது. எல்லோருக்கும் கல் இருக்கும். ஆனால் உடல் உபாதைகளாக தரும்போது தொந்திரவெனில் எடுத்துவிடலாம். பித்தப்பை கல் எல்லாம் கரையாது. அப்ரேஷன் செய்தால் ஐம்பதாயிரத்துக்குள் முடித்துவிடலாம்’ என்றிருக்கிறார்.

இப்படி பலர் இருக்கிறார்கள். மிகச்சுலபமாக பித்தப்பையை தாரை வார்த்துவிடுகிறார்கள். ஏனெனில், எப்படியும் பையிலிருந்து செலவாகப் போவதில்லை. மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. கொஞ்சம் இன்ஷூரன்ஸுக்கும் செலவு வைப்போம் என்று தான். ஆனால், இதற்கெல்லாமும் ஆபரேஷனுக்கு போக வேண்டியதில்லை. இரவில் சிக்கன் சாப்பிடுகையில், எலுமிச்சை சாறு பருக வேண்டும். சிக்கனும் குறைவாக. வாரத்துக்கு ஒரு நாள் இரு வேளை வயிற்றை காய போட வேண்டும். தினமும் மோர் பருக வேண்டும். அவ்வளவுதான். நாம் கொஞ்சம் விழிப்பாக இல்லையென்றால், நோயாளி ஆக்கி விடுகிறார்கள் இன்றைய டாக்டர்கள்.

‘சமைக்கத் தெரியுமான்னு கேக்குறான்.. what the hell was that?’ இது தேன்மொழி பேசும் டயலாக். இப்படி பேசுபவர்களுக்காகத்தான் எல்லா அப்பர் பெயரிலும் தெருவுக்கு நாலு ரெஸ்டாரென்ட் திறந்து முந்தா நாள் செய்த பிரியாணியை ஃப்ரிஜ்ஜில் வைத்து சூடு பண்ணி தந்து, வயிற்றை கெடுத்து, நள்ளிரவில் வயிறு வலித்து, பித்தப்பையை எடுத்து, இந்த சுழற்சியை புரிந்துகொள்ளாமல், மீண்டும் சமைக்கத்தெரியுமான்னு கேள்வி கேக்குறான் என்று குறை சொல்லி…

உடனே நவீனத்துக்கு பிறகான பெண்மணி ஒருவர் எழுந்து, ‘ஏன் பொம்பளை மட்டும் தான் சமைக்கணுமா? ஆம்பளைங்க சமைக்ககூடாதா?’ என்று கேட்பார். இதைத்தான் சத்யா ஹேமானிகா காதல் குறித்து சொல்கையில் சொல்லியிருந்தேன். எது தேவை எது தேவையில்லை என்கிற தெளிவு, எதையேனும் இழந்த பிறகுதான் வருகிறது.

‘என்னை அறிந்தால்’ ட்ராமா த்ரில்லர் வகை. ட்ராமா பகுதியில் நல்ல பல அழகியல்கள் இருக்கும் படம்.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationஆம் ஆத்மி கெஜ்ரிவால்ஆத்ம கீதங்கள் –16 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! என் ஆன்மாவின் முறிவு
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *